சனி, 31 ஆகஸ்ட், 2019

திராவிடர் கழகம் எனும் மாற்றம் வெறும் பெயர் மாற்றம் அல்ல!



செ.இளவேனில்


தமிழகத்தில் ஜாதி, மத பேதங்களைத் தாண்டி தொடங்கப்படுகிற எந்தவொரு மாநிலக் கட்சியும் திராவிடம், கழகம் ஆகிய வார்த்தைகளைத் தன் பெயரோடு சேர்த்துக்கொள்ள வேண்டியது இன்றைக்கு எழுதப்படாத விதியாக இருக்கிறது. இவ்விரு வார்த்தைகளும் 75 ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாளில்தான் தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்துக்கு மாற்றாக முன்வைக்கப்பட்டன. அந்தத் தீர்மானத்தை முன்மொழிந்தவர் அண்ணா என்பதால் அத்தீர்மானத்துக்கு ‘அண்ணாதுரை தீர்மானம்’ என்ற பெயரும் உண்டு.

அரசு அதிகாரங்களிலும் சமூகத்திலும் தங்கள் செல்வாக்கைக் கோலோச்சிவந்த பிராமணர் களுக்கு இணையாக பிராமணரல்லாதோரும் உரிய பிரதிநிதித்துவமும் அதிகாரப் பங்கும் பெறுவதைக் கனவாகக் கொண்டு இயங்கியது நீதிக் கட்சி. 1920-இல்  சென்னை மாகாணத்தில் ஆட்சியைப்  பிடித்து 1937-இல் ஆட்சியை இழந்த அக்கட்சியின் பாதை ஆட்சியதிகாரத்தை இழந்த பின் இருண்டு போனது. இது ஒருபுறம். இன்னொருபுறம் 1925-இல் தமிழ்ச் சமூகத்தின் சீர்திருத்த இயக்கமாக பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கம் ஆட்சியதிகாரத்தில் நம்பிக்கை கொண் டிராமல் சமூகச் சீர்திருத்தத்தில் கவனம் குவித்தது. எப்படியும் பிராமணரல்லாதோர் சம உரிமை பெறுவதை இலக்காகக் கொண்டு வெவ்வேறு பாதைகளில் பயணித்துவந்த இந்த இரு அமைப் புகளும் ஒன்றிணைய வேண்டிய தேவையை நீதிக் கட்சி பலவீனமடைந்த சூழல் உருவாக்கியது. பெரியாரின் தலைமையின் கீழ் இவை இரண்டும் ஒன்றிணைந்து புது உருவம் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவானபோதுதான் ‘திராவிடர் கழகம்’ உருவானது.

வரலாற்றில், ‘நீதிக் கட்சி + சுயமரியாதை இயக்கம் = திராவிடர் கழகம்’ என்று எளிமையாக அது சுருக்கப்பட்டாலும் இந்த மாற்றமானது வெறும் பெயர் மாற்றம் மட்டுமே அல்ல. பெரியாரும் அண்ணாவும் இணைந்து புதிதாக உருவாகிவந்த உலக மாற்றங்களுக்கும் உள்ளூர் களத்துக்கும் ஏற்ப உள்ளும் புறமுமாக இரு போர்களுக்குப் புதிய இயக்கத்தைத் தயார் படுத்தினர். 1. பிராமணியத்துக்கு எதிரான இயக்கம் என்ற பெயரில் தொடங்கி காலப்போக்கில் பிராமணரல்லாதோரின் அதிகார வேட்கைக்கான களமாக எஞ்சிவிட்டிருந்த நீதிக் கட்சிக்கு உள்ளே இருந்த கரும்புள்ளிகளைத் துடைத்தெறிவது. துடைத்தெறிந்து சாமானியர்களின் அமைப்பாக அதை உருமாற்றுவது. 2.உலகப் போர்ச் சூழலில் மாறிக்கொண்டிருந்த புதிய அரசியல் பருவ நிலையில் தமிழர்களின் தனி நாடு, சம உரிமை, சம அதிகாரக் கனவுகளுக்கான இயக்கமாகப் புதிய அமைப்பைக் கட்டியெழுப்புவது!

இந்த மாநாட்டில், ‘பிரிட்டிஷாரால் அளிக்கப் பட்ட சர், திவான்பகதூர் போன்ற பட்டங்களை இயக்கத்தினர் விட்டொழிக்க வேண்டும்’ என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இங்கே சுட்டிக்காட்டலாம். சேலம் மாநாட்டுக்கு அடுத்த ஆண்டில் திருச்சியில் நடத்தப்பட்ட அடுத்த மாநாட்டில்தான் திராவிட நாடு தீர்மானம் நிறை வேற்றப்பட்டு முழு வீச்சில் அதற்கான திட்டங் களும் பயணங்களும் முன்னெடுக்கப்படலாயின என்பதும் இங்கே குறிப்பிடப்பட வேண்டியதாகும்.

மாணவர்கள் முன்னெடுத்த பெயர்

திராவிடர் கழகம் தொடக்கம் முதலே இளை ஞர்கள் கை ஓங்கிய இயக்கம் என்பதை அதனு டைய பெயர் மாற்றத் தீர்மானமும் உணர்த்துகிறது. 1944-இல் ஆகஸ்ட் மாதத்தில் சேலத்தில் திராவிடர் கழக பெயர் மாற்றத் தீர்மானம் நிறைவேற்றப் படுவதற்கு முன்பே பிப்ரவரி மாதத்தில் கும்ப கோணத்தில் திராவிட மாணவர் முதல் மாநாடு நடத்தப்பட்டது. திராவிடர் மாணவர் கழகத் தலைவர்களான தவமணிராசனும் கருணானந்தமும்   அம்மா நாட்டினை முன்னின்று நடத்தினார்கள். பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் அவர்களுக்கு ஆதரவாக நின்றார்கள். 1943-ஆம் ஆண்டிலேயே கும்ப கோணத் தில் திராவிடர் மாணவர் கழகத்தைத் தொடங் கியவர் தவமணிராசன். அம்மாநாட்டில் கலந்து கொண்ட நன்னன், ஏ.பி.ஜனார்த்தனம், க.அன்ப ழகன், மதியழகன், இரா.நெடுஞ்செழியன், இரா.செழியன் ஆகியோர் பின்னாட்களில் தமிழக அறிவுலகிலும் அரசியல் வெளியிலும் பெரும் ஆளுமைகளாக உருவெடுத்தார்கள். அம்மாநாட் டில் பெரியார் கலந்துகொள்ளவில்லை. வாழ்த்துச் செய்தியை மட்டுமே அனுப்பியிருந்தார். அந்தச் செய்தியை மாநாட்டில் வாசித்தவர் அப்போது பச்சையப்பன் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்த க.அன்பழகன்.

இதைத் தொடர்ந்து, ஏப்ரல் மாதம் கும்பகோணம் அரசினர் கல்லூரியில் நடந்த விழாவில் கலந்து கொண்டு பேசினார் பெரியார். மாணவர்களிடம் ஏற்பட்டிருந்த அரசியல் எழுச்சியைக் கவனித்த பெரியார், மிகுந்த உற்சாகத்தோடு ஈரோடு திரும் பினார். உடனே, தனது தனிச்செயலரை, கல்லூரி களுக்கு அனுப்பிவைத்தார். ஒவ்வொரு கல்லூரியி லும் இயக்கத்தின் மீது ஈடுபாடு கொண்ட மாணவர் களைக் கண்டறிந்து வரச் சொன்னார். அவர்களை யெல்லாம் ஈரோட்டுக்கு அழைத்தார். ஏப்ரல் 17ல் ஈரோட்டில் திராவிட இளைஞர் மாநாடு நடந்தது.

திராவிட இளைஞர் மாநாடு

இளைஞர்களின் மாநாட்டுக்கு அண்ணா தலைமை வகித்தார். அம்மாநாட்டில் பயிற்சி பெற்ற மாணவர்கள் மாவட்டந்தோறும் பிரச்சாரங்களைத் தொடர்ந்தனர். இளைஞர்களும் மாணவர்களும் அரசியல் எழுச்சி பெற்றிருந்த சூழலில்தான் சேலத்தில் நீதிக் கட்சியின் 16-ஆவது மாகாண மாநாடு நடைபெற்றது. ஏற்கெனவே, சென்னையில் அண்ணா தலைமையில் கூடிய ஒரு மாநாட்டில் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்பதை திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. பெரியாரின் விருப்பத் தின்படி, அந்தப் பெயர் மாற்றத்தை அண்ணா சேலத்தில் நிறைவேற்றினார்.

சேலம் மாநாட்டுக்குப் பிறகு திராவிடர் கழகத் துக்கான உறுப்பினர் சேர்க்கை தொடங்கியது. 1945ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திராவிடர் கழகத்தின் உறுப்பினர் எண்ணிக்கை  24,302 ஆக இருந்தது. அடுத்த ஆறேழு மாதங்களில் 33,867 ஆகக் கூடியது என்று பெரியாரின் வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்டிருக்கிறார் கருணானந்தம். இது பெயர் மாற்றத்துக்குப் பிந்தைய பண்பு மாற் றத்துக்கு தமிழக மக்களிடம் இருந்த வரவேற்பைப் புரிந்துகொள்ள உதவும். திராவிடர் கழகத்தின் சார்பில் மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய மாநாடுகளில் எல்லாம் பாரதிதாசனும் ஆர்வமாக பங்கெடுத்துக்கொண்டார். கலை இலக்கிய வெளி யில் திராவிடர் கழகம் தனித் தமிழ் இயக்கத்தையும் தமிழிசை இயக்கத்தையும் முன்னெடுத்தது.

ஆக, சேலம் தீர்மானம் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனை என்றால் அது மிகையில்லை. தமிழ்நாட்டின் சமூக தளத்திலும் அரசியல் தளத்திலும் பல தலைகீழ் மாற்றங்களுக்கு வித்திட்ட ஒன்று அது. தமிழ்ச் சமூகத்தின் மாற்றங்களுக்கு இளைஞர்கள் எப்படி முன்சக்தியாக இருந்தார்கள் என்பதுதான் இந்த வரலாற்றின் மிக முக்கியமான கண்ணியும் இங்கு நினைவுகூரத் தக்கதும் ஆகும்.

நன்றி: "இந்து தமிழ் திசை" 27.8.2019

 
- விடுதலை நாளேடு, 27.8.19
 

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

பெரியார் மறைவுக்குப்பின்னரும் அதிகமான இளைஞர்கள் அவர் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுள்ளனர்

திராவிடர் கழகம் தோன்றி  75 ஆண்டுகளுக்குப் பின்னரும்   திராவிட மண்ணாக நீடித்திருக்கிறது


தி இந்து ஆங்கில ஏடு  (26.8.2019)  படப்பிடிப்பு




பெரியார் கொள்கைகளை திராவிடர் கழகம் 75 ஆண்டுகளாக முன்னெடுத்துவருவதால் திராவிட மண்ணாக தொடர்கிறது

1944ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 27இல் பெரியார் ஈ.வெ.இராமசாமி அவர்களால் திராவிடர் கழகம்  தொடங்கப்பட்டது. தற்பொழுது அதற்கு 75 வயதா கிறது.

சமூக இயக்கமான திராவிடர் கழகத்தில் பெரியார் வழியில் வந்த சி.என். அண்ணாதுரை1949 செப்டம்பரில் சமூக இயக்கத்தில் பிளவை  ஏற் படுத்தியதால் பாதிப்பு ஏற்பட்டது.

1973 பெரியார் மறைந்தபோதிலும் திராவிட மண்ணாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கலி.பூங்குன்றன்

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங் குன்றன்  கூறுகையில்,

கேரளாவில் நாராயணகுரு, மராட்டியத்தில் ஜோதிராவ் புலே, அம்பேத்கர் போன்ற சீர்திருத்த வாதிகள் திராவிடர் கழகத்தைப்போல் ஓர் இயக்கமாக தலைவர்களுக்குப் பிறகு தாக்கத்தை பெற்றிருக்க வில்லை. பெரியார் கொள்கைகளை திராவிடர் கழகம்தான் முன்னெடுத்து செல்கிறது.

பெரியார் கொள்கைப்படி தம் வாழ்நாளில் காண விரும்பியவை பல அரசுகளால் நடைமுறைப் படுத்தும் நிலை ஏற்படுத்தப்பட்டது.

1927 ஆம் ஆண்டில் பெயருக்குப் பின்னால் நாயக்கர் எனும் ஜாதிப்பட்டத்தை துறந்தார். பெய ருக்கு பின்னால் ஜாதிப்பட்டத்தை நீக்கிய  மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்றார்.

வழக்குரைஞர் அருள்மொழி

திராவிடர் கழக பிரச்சாரச் செயலாளர் வழக் குரைஞர் அருள்மொழி கூறுகையில்,

விதவைத்தன்மை கொடுமைகளுக்கு எதிராகப் போராடி, மறுமணம் மற்றும் ஜாதியத்துக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது என்றார்.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு இயக்கம் என்ன செய்தது என்று விமர்சனங்கள் உள்ளதே என்று கேட்டதற்கு,

திராவிடர் கழகம். தாழ்த்தப்பட்டவர்களுக்காக நீண்ட காலமாக பாடுபட்டு வருகிறது திராவிடர் கழகம். தாழ்த்தப்பட்டவர்களுக்கு திராவிடர் கழகம் செய்ததென்ன என்றுவிமர்சிப்பதன் பின்னணியில் உள்நோக்கம் உள்ளது என்றார்.

குறிப்பிடத்தக்க முக்கிய கருத்து


அரசியல் விமர்சகர் பி.இராமஜெயம்


அரசியல் விமர்சகர் பி.இராமஜெயம் வேறு கண்ணோட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் குறித்து கூறுகையில், அனைத்து திராவிட கட்சிகளும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் சந்திக்கின்ற குறிப்பிடத்தக்க புள்ளியாக திராவிடர் கழகம் விளங்குகிறது. திராவிடக் கட்சி களும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் உறுதியாக பெரியார் கொள்கைகளையே பின்பற்றுகின்றன.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தேர்தல் வாக்குகளை அதிகம் பெறாதவராக இருக்கலாம். ஆனால், அரசியல் மேடையில் அவர் இருக்கிறார் என்று சொன்னால், ஏராளமான அரசியல் கட்சி களும், அவற்றின் தலைவர்களும் அந்த மேடையில் இருப்பார்கள் என்றார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு பாஜக மட்டுமே உள்ளது. அப்படி இல்லாமல், திராவிடர் கழகத்துடன் இணைந்து பணியாற்றும் நிலையினை ஏராளமான கட்சிகள் விரும் புகின்றன.

திராவிடர் கழகத்துக்கு மட்டும் பெரியார் அல்லது சில எல்லைகளுக்குள் பெரியார் என் பதைத்தாண்டி,  உலகெங்கும் பன்னாட்டு அறிஞர்களால் குறிப் பிடத்தக்கவராக ஜாதி ஒழிப்பில் பெரியார் திகழ்கிறார். பெரியார் காலத்துக்குப் பின்னரும், அமைப்புகளைக் கடந்து,  பெரியார் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, ஏராளமான இளைஞர்கள்  அதிக ஆர்வத்துடன் உள்ளனர் என்று பி.இராமஜெயம் கூறினார்.

-  விடுதலை நாளேடு, 26.8.19

திராவிடர் கழகம்

நீதிக்கட்சியும், சுயமரியாதை இயக்கமும் இணைந்து பிறந்த பிள்ளை திராவிடர் கழகம்.
- மின்சாரம் கட்டுரையின் ஒரு பகுதி
விடுதலை நாளேடு, 24 .8 .19
பக்கம்- 8

எத்தனை எத்தனை மாநாடுகள்



- மின்சாரம்


தஞ்சை சுயமரியாதை வாலிபர்கள் மகாநாடு - 26.02.1928

லால்குடி முதல் சுயமரியாதை மகாநாடு  -  09.06.1928

திருவாங்கூரில் சுயமரியாதை மகாநாடு - 12.05.1929

செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாகாண மகாநாடு   - 17, 18.02.1929

வடஆற்காடு ஜில்லா சுயமரியாதை முதல் மகாநாடு -  13.01.1929

சேலம் முதல் சுயமரியாதை மகாநாடு -  08.05.1932

ராசிபுரம் 2ஆவது சுயமரியாதை மகாநாடு  -  19.08.1933

ராசிபுரம் சேலம் ஜில்லா ஜமீன்தாரல்லாதார் மகாநாடு - 20.08.1933

சேலம் ஜில்லா ஜஸ்டிஸ் மகாநாடு  - 31.08.1935-         01.09.1935

ராசிபுரம் தாலுகா ஜஸ்டிஸ் மகாநாடு - 28.06.1936

நாமக்கல் ஜஸ்டிஸ் மகாநாடு - 2.08.1936

திருச்செங்கோடு முதல் ஜஸ்டிஸ் மகாநாடு   - 08.11.1936

சேலம் ஜில்லா மூன்றாவது சுயமரியாதை மகாநாடு - 29.08.1937

நாமக்கல் தாலுகா சுயமரியாதை ஜஸ்டிஸ் மகாநாடு -  12.12.1937

சேலம் ஜஸ்டிஸ் மாகாண மாநாடு - 27.08.1944

சேலம் மாவட்டம் ஆத்தூரில் சுயமரியாதை -

திராவிடர் கழக  மாநாடு                                  10, 11.10.1953

எடப்பாடியில் சுதந்திரத் தமிழ்நாடு மாநாடு   - 28.06.1959

திருச்செங்கோட்டில் திராவிடர் கழக மாநாடு  - 16.12.1966

சேலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு - 23, 24.01.1971

சேலத்தில் பிற்படுத்தப்பட்டோர் உரிமைக் காப்பு மாநாடு  - 14, 15.07.1979

சேலம் மாவட்டம் ஆத்தூரில் பெண்கள் விடுதலை

மற்றும் பார்ப்பன ஆதிக்க ஒழிப்பு மாநாடு -  31.10.1981

மேட்டூர் மாநாடு - ஆளுங்கட்சியிலிருந்து

அனைத்துக்கட்சி தமிழர்களும் பங்கேற்ற மேட்டூர் மாநாடு  - 07.03.1982

சேலத்தில் திராவிடர் மாநாடு - 23.01.1988

சேலத்தில் நீதிக்கட்சி பவளவிழா மாநாடு   - 14, 15.02.1992

ஓமலூர் மதவெறி மாய்ப்போம் வட்டார மாநாடு  - 15.03.1993

சேலம் மாவட்டம் மேச்சேரி சாதி ஒழிப்பு மாநாடு  - 04.02.1995

நாமக்கல் மதவாத எதிர்ப்பு மாநாடு - 11.06.1999

சேலம் மதவாத எதிர்ப்பு மாநாடு - 12.06.1999

ஆத்தூர் திராவிடர் கழக மகளிரணி மாநாடு  - 26.06.2000

சேலத்தில் இளைஞரணி மாநாடு   -  06.07.2002

நாமக்கல் வட்டார கழக மாநாடு  - 19.08.2012

ஆத்தூர் சேலம் மண்டல மாநாடு  -  27.01.2013

எத்தனை எத்தனை மாநாடுகள் - இந்த சேலம் மாநகரிலும், சேலம் மாவட்ட ஊர்களிலும்.

ஒவ்வொன்றும் வரலாறு படைத்தவை - இயக்கத்தில் மட்டுமல்ல, இன வரலாற்றிலும் முத்திரைப் பொறித்தவை.

நீதிக்கட்சியும், சுயமரியாதை இயக்கமும் இணைந்து பிறந்த பிள்ளை திராவிடர் கழகம்.

- விடுதலை நாளேடு, 24 .8. 19
மின்சாரம் கட்டுரையின் ஒரு பகுதி

வியாழன், 29 ஆகஸ்ட், 2019

1944 - சேலம் திராவிடர் கழக பெயர் மாற்ற (நீதிக்கட்சி) மாநாட்டில் நடந்தது என்ன?

இன்றைய தலைமுறையினரே அறிந்து கொள்வீர்!


S.I.L.F. (ஜஸ்டிஸ்) மாகாண மாநாடு

(வாசக நேயர்களே,


ஊன்றிப் படித்துப் பயன்பெற வேண்டிய முக்கியப் பகுதி இது.


இதுபற்றி தங்களது கருத்தினை சுருக்கமாக எழுதி அனுப்புமாறு வேண்டுகிறோம்.


திராவிடர் இயக்கம் - 80 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாடு அரசியல் களத்தின் முக்கிய நிகழ்வுகள் - வரலாறு பற்றிய காலக்கண்ணாடியாக - திராவிடத்தின் தேவைக்கான நுண்ணாடியாக இது அமையும் ஒன்று. இதற்கான தேவை - பயன் - நுகர்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் பெரிதும் வரவேற்கப்படுகிறது. - ஆசிரியர்)


 

16ஆவது தென்னிந்திய நல உரிமைச் சங்க மாநாடு சேலத்தில் நடத்த 1940ஆம் வருஷத்திலேயே திருவாருரில் அழைக்கப்பட்டது. அதன்பிறகு 43ஆம் வருஷம் சேலத்தில் நிர்வாக சபை கூட்டம் போட்ட காலத்தில் சேலம் சேர்மன் தோழர் ரத்தினம் பிள்ளையவர்களாலும் குகை பிரபல வியாபாரி கே. ஜெகதீசன் அவர்களாலும், வக்கீல் தோழர் நெட்டோ அவர்களாலும் அழைக்கப் பட்டபடி ஒரு வருஷ காலமாக சேலத்தில் நடத்த முயற்சி எடுத்து வந்த மாநாடு 27.08.1944ஆம் தேதி சேலம் விக்டோரியா மார்க்கட்டில் போடப்பட்டிருந்த மாபெரும் கொட்டகையில் ஆடம்பரத் தோடும் ஆரவாரத்தோடும் உற்சாகத்தோடும் உருப்படியான வேலைத்திட்டங் களோடும் வெற்றிகரமாக நடந்த விபரம்:

பெரியார் வருகை


மாநாட்டுக்கு முதல் நாளாகிய 26ஆம் தேதியே தோழர்கள் சவுந்தரபாண்டியன், அண்ணாதுரை, வி.வி.ராமசாமி, கெ.ஏ.பி. விசுவநாதம் ஆகியவர்களும் பல இடங்களிலிருந்து சுமார் ஆயிரம் பிரதிநிதிகளும் வந்துவிட்டனர். அடுத்த நாள் காலையில் மாநாட்டுத் தலைவர் பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களும் மற்றும் சுமார் 3000 பிரதிநிதிகளும் தமிழ் நாட்டிலுள்ள எல்லா ஜில்லாக்களிலிருந்தும் வந்து கூடிவிட் டார்கள். பெரியார் ஏறிவந்த ரயில் வந்த உடனே ரயில் மேடையில் கொடியுடன் சுமார் 200 தொண்டர்களும் 400, 500 உள்ளூர் மக்களுமாக பெருத்த ஆரவாரத்தோடு பெரியாரை வரவேற்று அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தோழர் ரோசு அருணாசலம் அவர்கள் மாளிகைக்கு வாழ்த்தொலியோடு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு சென்று சிற்றுண்டி அருந்தியதும் தோழர் பாண்டியன் அவர்களும், தோழர் அண்ணாதுரையவர்களும் தலைவர் இருந்த ஜாகைக்கு வந்து தீர்மானங்களைப்பற்றி பேசி "குடிஅரசு" "திராவிட நாடு2 பத்திரிகைகளில் வெளிவந்த தீர்மானங்களில் பட்டம் பதவி விடுதல் என்ற தீர்மானங்கள் தவிர மற்ற தீர்மானங்கள் எல்லாராலும் ஒப்புக்கொள்ளப் படுகிறதென்றும் தெரிவித்த தோடு பட்டம் பதவி விடுகிற தீர்மானத்திலும் ஒரு சிறு திருத் தத்தோடு அதை அப்படியே ஒப்புக்கொள்வதில் யாருக்கும் எவ்வித ஆட்சேபனையில்லையென்றும் தெரிவதாகவும் தெரிவித்ததோடு இத்திருத்தத்தோடு எல்லாத் தீர்மானங்களும் மாநாட்டில் நிறைவேற்றும் விஷயத்தில் யாவரும் கட்டுப் பாடாக ஒருவருக் கொருவர் ஒத்துழைக்க வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டது.

ஊர்வலப் புறப்பாடு


ஊர்வலத்தில் இரட்டைக் குதிரை பூட்டிய பெரியதொரு கோச்சு வண்டியில் பெரியார், பாண்டியன், வரவேற்புக் கழகத் தலைவர் மூவரும் மாலையிட்டு அமர்த்தப்பட்டனர்.  பிறகு மாநாட்டுத் திறப்பாளரும், கொடியேற்றுபவருமாகிய தோழர்கள் கே.ஏ.பி.விசுவநாதம், பி. பாலசுப்பிரமணியம் ஆகியவர்களும் வண்டியில் உட்கார வைக்கப்பட்டார்கள். அந்த சமயத்தில் பொது ஜனங்கள் பலர் ஆட்சேபனைக் குறிகள் காட்டினார்கள் என்றாலும் பெரியார் கேட்டுக் கொண்டதின் பேரில், ஆட்சேபனை குரல்கள் அடங்கி விட்டன. ஊர்வலத்திற்கு தொடங்கிய இடத்திலேயே சுமார் 20000 மக்கள் போல் கூடிவிட்டார்கள். கோச்சு வண்டிக்கு முன்னால் ஜனங்கள் ஒரு பர்லாங்கு தூரம் வரையிலும் நெருக்கமாக நிறைந்திருக்க, 5 ஜதை பாண்டு செட்டுகளும், 10 ஜதை மேளம், 100 ஜதை தப்பட்டை, 40 கொம்புகளும், தொண்டர்கள் ஏறிய 40 குதிரைகளும், 2 யானைகளும் முன்செல்ல, 10.30 மணிக்கு ஊர்வலம் புறப்பட்டது.

ஊர்வலம் புறப்பட்டு கடைவீதிக்குள் வருவதற்குள் ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஜனங்களின் எண்ணிக்கை ஒன்றுக்கு இரண்டு பங்காய்விட்டது. இதில் முக்கியமாய் குறிப்பிடத்தக்கது பெண்கள் ஆயிரக்கணக்கில் ஊர்வலத்தில் கலந்துகொண்டதும், திருச்சி, பொன்மலை முதலிய ஊர்களி லிருந்து வந்த தொண்டர் படைகள் தங்கள் தங்கள் கொடி சின்னங்களுடன் தனித்தனியாக அணிவகுத்துச சென்றது மாகும். ஊர்வலத்தில் வழி நெடுக மாலையிட்டார்கள். தஞ்சாவூர் திராவிட சுயமரியாதைத் தோழர்களால் பெரியாரே எங்கள் தலைவர் என்றும் சூழ்ச்சி யாவும் வீழ்ச்சியடைக என்றும் பொறிக்கப் பட்ட துண்டுப் பிரசுரங்கள் பதினாயிரக்கணக்கில் வழங்கப்பட்டன. வழி நெடுக பெரியார் வாழ்க, திராவிடர் கழகம் ஓங்குக, பாண்டியன் வாழ்க, துரோகிகளும் சதிகாரர்களும் அயோக்கியர்களும் அழிக என்ற உற்சாகக் குரல்கள் காது செவிடுபடத் செய்தன. ஊர்வலம் சுமார் 11.30 மணிக்கு மாநாட்டுக் கொட்டகையை வந்தடைந்தது. ஊர்வலம் வருவதற்கு முன்னமேயே கொட்டகையில் ஆயிரக்கணக்கான பேர்கள் நிறைந் திருந்தார்கள். தோழர் அண்ணாதுரை அவர்கள் மாநாட்டுக் கொட்டகையில் நுழைந்தபோது பெருத்த ஆரவாரம் செய்தார்கள். பெரியார் அவர்கள் பெரும் கஷ்டத்துடன் பெரும் கரகோஷத்தினிடையே மேடைக்கு அழைத்து வரப்பட்டார்கள்.

கூர்க்க சிப்பாய்கள் நீக்கம்


பிரதிநிதிகள் தியாகராயப் பந்தலுக்குள்  நுழைவதில், கொட்டகை வாயிலில் நேப்பாளத்திய கூர்க்க சிப்பாய்களை வைக்கப்பட்டிருந்ததில், அவர்களோடு சச்சரவு ஏற்பட்டதும் அதன் பயனாய் பெருத்த கலவரம் ஏற்பட்டதுடன் உயிர்க் கொலையும் ஏற்படும்படியான அளவுக்கு ஆத்திரம் ஏற்பட்டு விட்டது! தோழர் அண்ணாதுரை அவர்களின் அதி தீவிர முயற்சியினால் குழப்பம் ஒரு வழியில் அடக்கப்பட்டது. கூர்க்கக் காவலாளிகள் எல்லாம் அப்புறப்படுத்தப்பட்டார்கள். இது கொட்டகைக்குள் பிரதிநிதிகளை தாராளமாகச் செல்ல விடாமல் தடுப்பதற்காக செய்யப்பட்ட தந்திரம் என்று பலருக்கும் தோன்றியதாலேயே பிரதிநிதிகள் வெறி கொண்டுவிட நேர்ந்தது என்றுதான் சொல்லவேண்டும். அதன் பயனாக மாநாட்டைக் கூட்டியவர்களுக்கும் பழி யேற்பட நேர்ந்தது.

கொடியேற்றல் பிரதிநிதிகள் ஆட்சேபனை


மாநாடு கூடினதும் மாநாட்டுக் காரியதரிசி தோழர்  நெட்டோ அவர்கள் தோழர் பாலசுப்ரமணியம் அவர்களை கொடியேற்றி வைக்கும்படி பிரேரேபித்தார். சொன்ன உடனே பிரதிநிதிகள் கூட்டத்தில் இதில் எழுத முடியாத பலவிதமாக கெட்ட வார்த்தைகளும் மறுப்பு ஆட்சேபனைகளும் கிளம்பின. உடனே வரவேற்புக் கழகத் தலைவர் சேர்மன் தோழர் ரத்தினம் பிள்ளை வந்து சமாதானமாக, இந்த மாநாட் டின் பலனாய் நம் கட்சியில் ஒரு சின்ன மனிதனுக்காவது எவ்வித அபிப்பிராயபேதத்திற்கும் சிறிதும் இடமில்லாமல் எல்லோ ரையும் அழைத்திருக்கிறோமேயல்லாது மற்றப்படி வேறு எந்த விதமான எண்ணங்கொண்டும் நாங்கள் தோழர் பாலசுப்பிரமணியம் முதலியார்களை தருவிக்கவில்லை என்றும் அவர்கள் மிக்க ஒழுங்காகப் பேசி நேர்மையாக நடந்து கொள்வார்களென்றும் சொல்லி கொடியேற்றுவதை ஆதரித்தார். பெரியார் அவர்களும் ஆத்திரப்பட்டவர்களுக் கெல்லாம் கையமர்த்தி கேட்டுக்கொள்வதின் மூலம் சமாதா னம் சொல்லி யாதொரு கலவரமும் இல்லாமல் இருக்கும்படி வேண்டிக் கொண்டார்.

பிறகு தோழர் பாலசுப்பிமணிய முதலியார் சிறிது நேரம் ஆங்கிலத்தில் பேசினார். (அது பின்னால் வரும்) பேச்சு முழுவதும் சரணாகதி பேச்சாகவும் தன்னுடைய நடவடிக் கைக்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும், தானும் தன் பின் சந்ததியும் என்றென்றும் பெரியார் தலைமையில் தொண்டாற்றுவோம் என்றும், நான் பெரியாருக்கு ஓய்வு கொடுப்பதற்கு ஆகவே வேறு எந்ததெந்த ஆள் களுடைய பெயர்களை தலைமை ஸ்தானத்திற்கு குறிப்பிட்டேனோ அவர்கள் எல்லாம் குறிப்பாக சர். ஆர்.கே. சண்முகம் செட்டி யார் முதலியவர்கள் எல்லாம் கட்சிக்கு துரோகிகளாய் விட்டார்கள் என்றும், பெரியார் தமிழ்நாட்டின் காரல்மார்கஸ் என்றும் ஏராளமாகப் புகழ்ந்து பேசியதோடு அவரிடத்தில் நான் குறை கண்டதாக சொல்வதெல்லாம் இன்னும் அதிகமாக வேலை செய்யவேண்டும் என்று ஊக்கப்படுத்த வேண்டு மென்ற எண்ணத்தைக் கொண்டேயென்றும் வேறு எந்தவித மான குறை அவரிடத்தில் கண்டதில்லையென்றும் சொன்ன தோடு பெரியாரே என்றென்றும் தலைவராயிருந்து திராவிடஸ் தான் வாங்கிக் கொடுத்து அதில் அவரே முதல் பிரசிடெண்டாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன் என்றும் அதற்காக தாம் எல்லாவிதமான தியாகங்கள் செய்யத் தயாராயிருப்பதாகவும் தெரிவித்தார். மற்றும் தோழர் பாலசுப்பிரமணியம் அவர்கள் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க சங்கதி என்னவென்றால், ஊர்வலத்தில் பெரியாருடன் வண்டியில் உட்காந்திருக்கும்போது தோழர் பாலசுப்பிரமணியத்துக்கு போடுவதற்காகக் கொண்டுவந்த மாலைகள் எல்லாவற்றையும் இரண்டு கையில் வாங்கி எழுந்திருந்து பெரியாருக்கு அணிவித்து பொதுமக்களுக்கு, தான் பெரியாரின் அடிமை என்பதுபோல் காட்டிக் கொண்டதாகும். தோழர் பாலசுப்பிர மணியம் அவர்கள் பேச்சு ஆங்கிலத்தில் முடிந்த உடனே, தோழர் க. அன்பழகனால் அது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.

திறப்பு விழா


பின் மாநாட்டைத் திறந்துவைக்கும்படி தோழர் கே.ஏ.பி. விசுவநாதத்தைக் கேட்டுக் கொண்டார்கள். தோழர் விசுவ நாதம் அவர்கள் பேச எழுந்த போதும் சிறிது எதிர்ப்புக் குறி காணப்பட்டதென்றாலும் அது உடனே பெரியார் செய்கையால் அடக்கப்பட்டது. தோழர் விசுவநாதம் அவர்கள் பேசியதும், சற்றேறக்குறைய தோழர் பாலசுப்பிரமண்யம் பேசியது போலவேயிருந்தாலும் பெரியார் சர்வாதிகாரியாய் இருப்பதைக் கூட தான் ஆதரிப்பதாகவும் பேசி, சாமர்த்தியமான முறையில் சாடைமாடையாக சில கிண்டல் சொல்லையும் சொல்ல ஆசைப்பட்டார். கூட்டத்திலுள்ளவர்களில் சில பிரதிநிதிகள் ஒருமையில் பேசி எச்சரிக்க ஆரம்பித்தவுடன் மறுபடியும் பெரியாருக்குப் புகழ்மாலை சூட்டுவதில் முனைந்து விட்டார்!

அது முடிந்ததும் வரவேற்புக் கழகத் தலைவர் சேர்மன் தோழர் ரத்தினம் பிள்ளையவர்கள் வரவேற்புச் சொற் பொழிவை நிகழ்த்தினார். அது பெரும்பாலும் பெரியாரைப் புகழ்ந்தும் அவரைத் தவிர வேறு தலைவர் திராவிடர்களுக்கு கிடையாதென்றும் ஒற்றுமையை வலியுறுத்தியும் திராவிட நாட்டுப்பிரிவினையை ஆதரித்தும் கட்சிக் கட்டுப்பாடுகளை வலியுறுத்தியும் பேசப்பட்டதாகும். பின்னர் பெரியார் அவர்களைத் தலைமை வகிக்கும்படி பிரரேபித்தார்.

தோழர்கள் நெட்டோ, பாண்டியன், ராமாமிர்தத்தம்மாள், ராவ்சாகிப் துரைசாமி பிள்ளை, கணேசசங்கரன், திருவொற் றியூர் டி. சண்முகம் ஆகியவர்கள் ஆதரித்தார்கள். தோழர் சண்முகம் அவர்கள் பேசும்போது, தோழர்கள் பாலசுப்பிர மணியம், விசுவநாதம் ஆகியவர்கள் பேசியபடி நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் பேசிய பேச்சை ஞாபகத்தில் வைத்துக்கொள்கிறார்களா அல்லது தங்கள் வழக்கம் போல் நடக்கிறார்களா பார்ப்போம் என்றும் வெளி யில் போனதும் பழையபடி கர்ணம் போடக் கூடாதென்றும் எச்சரிக்கை செய்து, யார்தானாகட்டும் இன்றைய நிலையில் பெரியாரைத் தவிர வேறு யார் பெயரை பிரேரேபிக்கத் தயாராயிருக்கிறீர்கள் என்று கேட்டுவிட்டு ஆதரித்தது குறிப்பிடத்தக்கதாகும்.

பின், பெரிய ஆரவாரத்துடனும், வாழ்த்தொலியுடனும், நீண்ட கைத்தட்டலுடனும் பெரியார் நீண்ட சொற்பொழி வாற்றினார்.

- விடுதலை 02.09.1944
- விடுதலை நாளேடு, 23. 8 .19

செயலாற்றிய காலம் - சேலத்தில் அன்று!

1944 சேலம் திராவிடர் கழக பெயர் மாற்ற நீதிக்கட்சி மாநாடு - சில நினைவுகள்; நிகழ்வுகள்!


கி. வீரமணி




சேலத்தில் திராவிடர் கழகத்தின் 75ஆம் ஆண்டு பவள விழா மாநாடு 27.8.2019 அன்று, முன்பு சேலத்தில் அம்மாநாடு நடைபெற்ற அதே நாளில் ஏற்பாடு ஆகி, தோழர்களும், ஆதரவாளர்களும், அன்பர்களும், பகுத்தறி வாளரும், உழைப்புத் தேனீக்களாகி மாநாட் டின் வெற்றிக்கு அயராது உழைத்து வரு கின்றார்கள்.

75 ஆண்டுகளுக்கு முன் நான் 11 வயதுச் சிறுவன். 1943 ஜூலையில்  முதல் முதல் அறிஞர் அண்ணாவின் திராவிட நாடு ஏட்டிற்கு நிதி ரூ.112 கொடுக்க ஏற்பாடுசெய்திருந்தார் எனது ஆசான் ஆ. திராவிடமணி. அக்கூட்டத்தில் என்னை மேசைமீது ஏற்றி நிற்க வைத்துப் பேசும் படிப் பணித்தார். அவர் எழுதிக் கொடுத்ததை மனப்பாடம் செய்து பேசினேன்; கொள்கைகளை முழுமையாக உள்வாங்கிக் கொண்டேன் என்று கூறுவதைவிட - நம் கழக ஏடுகள் 'குடிஅரசு',  'விடுதலை', 'திராவிட நாடு' ஆகியவையை பாடம் போல் படித்து ஏற்கெனவே ஓரளவு புரிந்துகொண்ட மாணவர் குழாமில் நான் தேர்வு செய்யப்பட்டவன்.

அதற்கிடையில் பல பொதுக் கூட்டங்கள் - நாங்களே தொண்டர்கள், ஏற்பாட்டாளர்கள், பேச்சாளர்கள் எல்லாம்;  பேராசிரியர் க.அன்பழகன், நாவலர் இரா. நெடுஞ்செழியன் - அண்ணாமலைப் பல்கலைக் கழக மாண வர்கள், அழைத்தவுடன் வந்து சனி, ஞாயிறு களில் பேசி விட்டுத் திரும்புவர். அவர்களை வரவேற்று, தங்க வைத்து, பாராமரிக்கும்  - உபசரிக்கும் பணி எங்கள் மாணவப் பட்டாளங் களுக்கே; காரணம் ஆசிரியர் ஆ. திராவிடமணி அலுவலகம் சென்று மாலை 4, 5 மணி அளவில் தான்  வருவார். அதன் பின்னர்தான் சில கழகத் தோழர்களுடன் நீதிக்கட்சிக்கான சிவப்பு - வெள்ளை - தராசுக் கொடி, புலி - வில் - கயல் - தமிழ்க் கொடி - இரண்டும் ஏந்தி 10 பேர் களானாலும் முழக்கம் போட்டு ஊரைக் கூட்டி கூட்டம் நடத்துவோம்.

29 ஜூலை 1944 திருப்பாதிரிப்புலியூரில் தென்னாற்காடு மாவட்ட திராவிடர் மாநாடு காலை முத்தய்யா டாக்கீசில், மாலை நிகழ்வு மஞ்சை நகர் மைதானத்தில்! இரயிலில் வந்த அய்யா பெரியாரும், அன்னை மணியம்மை யாரும் தோழர்களால் வரவேற்கப்பட்டு திருப் பாதிரிப்புலியூரில் (கடலூர் NT) ஒரு சத்திரத்தில் தங்க வைக்கப்பட்டார்கள்.

என்னை அய்யாவிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார் டார்ப்பிடோ ஏ.பி. ஜனார்த்தனம்! அய்யா, அம்மாவை முதல் முறை பார்த்தேன்; அவர்கள் கேட்ட கேள்வி களுக்குப்  பதில் கூறி விடை பெற்றேன்.

காலை  மாநாடு - அதில் அய்யா - அண்ணா பேசுமுன் என்னை மேசைமீது தூக்கி நிறுத்தி னார்கள். பயமறியாது பேசினேன்; அடுத்துப் பேசினார் அண்ணா.  அதில் தான்  என்னைக் குறித்து "திராவிட இயக்கத்தின் திருஞான சம்பந்தர்" என்று  உவமை கூறினார். "இவர் அருந்தியது பார்வதியின் பால் அல்ல; பெரியாரின் பகுத்தறிவுப் பால்" என்றும் குறிப் பிட்டார். அடுத்து அய்யா பேசும் போது எதிர்ப்பு  - அய்யா அதனை எதிர் கொண்டவிதம் - என் உள்ளத்தில் ஏற்படுத்திய உணர்வு இன்றும்கூட உறுதியாக நிற்க உதவுகிறது. சிங்கத்தின் கர்ஜனை என்றாலும் விளக்கமாகப் பேசி வாயடைக்க வைத்தார். எதிர்த்துக்  கேட்ட விவரம் தெரியாதவர்கள் பின்னாளில் அவரே மாறினர்; போற்றினர்.

மாலைதான் மழையும்கூட - ரிக்ஷாவில் திரும்பும்போது செருப்பு வீச்சு நிகழ்ச்சி. அவ்விடத்தில்தான் சிலை எழுப்பினர் 1972இல்! வரலாறாகி விட்டது அச்சிலை.

அம்மாநாட்டிற்கு சரியாக ஒரு மாதத்திற்குள் தான் சேலத்தில் நீதிக்கட்சி - திராவிடர் கழக மாநாடு!



ஆசிரியர், திராவிட மணியுடன் கழகத் தோழர்கள்  10 பேர் விருத்தாசலம் வழியே சேலத்திற்கு இரயிலில் சென்றோம். விருத்தா சலம் தாஸ் சைக்கிள் மார்ட்  உரிமையாளரும், கழக முக்கியஸ்தருமான திரு. சி. முனுசாமி - ஜங்ஷனில் எல்லோரும் சேர்ந்து சேலம் பாசஞ்சரில் பயணம். சின்ன சேலத்தில் தோழர் கலைமணி தலைமையில் பல தோழர்கள் - கலைமணி 'குல்' வைத்திருப்பார். 'பாகவதர் கிராப்' என்று அழைப்பர். அவர் நாடக நடிகர், பாடகர், பாட்டும் கூத்தும் பயணத்தை எளிதாக்கின!

சேலம் சென்று காலை உணவு விடுதியில் முடித்தோம்  -  பந்தலில் ஒரே முழக்கம் - சலசலப்பு, "பெரியாரே எங்கள் தலைவர்" என்று 1/32 அளவு நோட்டீசுகள் பறந்தன. தஞ்சை தோழர்கள் ஏராளம் வந்தனர். பந்தலில் கூர்க்காக்கள் - எதிர்த்து கலகம் செய்து அவர்களை விரட்டினர்.  பிறகு பி.ரெத்தினசாமி வந்து அமைதியை நிலைநாட்டினார். நம் கழகத் தோழர்களே டிக்கட் பரிசோதித்து உள்ளே அனுப்பினர்.திருவாரூரில் இருந்த திருவிடம் ஸ்டோர் ஆடை அணிகலன் உரிமையாளர் - கடலூரிலும் கடை உண்டு -  ரெங்கராஜ். அவரை "தண்டவாளம்" என்றே அழைப்பர். சிங்கராயர், முத்துகிருஷ்ணன், வி.எஸ்.பி. யாகூப், ஆறுமுக நாடார் இப்படிப் பலரும் அவருடன்;  ஒருவித பரபரப்பு! ஊர் வலத்தில் அய்யா, கி.பெ.ஆ. விசுவநாதம் - 'சண்டே அப்சர்வர்' பாலசுப்ரமணியம் கொடி யேற்ற உரை - ஆங்கிலத்தில் அவர் பேச, பேராசிரியர் அன்பழகன் மொழி பெயர்ப்பு. பி.பா. என்று அழைக்கப்படும் பால சுப்பிர மணியம் பேசத் துவங்கினார். "My Leader Periyar EV Ramasami" என்று ஆரம்பித்தார்;  ஒரே கைதட்டல்! "எனது தலைவர் பெரியார் இராமசாமி  அவர்களே" என்று மொழி பெயர்த்த அன்பழகனார், "இப்படி நான் கூறவில்லை. இதோ இந்த பி.பா. கூறுகிறார்" என்றார்; கைதட்டல் அடங்க வெகு நேரமாயிற்று!!

காரணம் அவர் தந்தை பெரியாருக்கு எதிரான குழுவிற்கு கன்வீனர் போன்றவர் என்றொரு சந்தேகம்.

எதிர்த்தவர்கள் அத்துணைப் பேரும் ஒரே சரணாகதி படலம்தான். புரிந்தது தொண்டர் களுக்கு.

அண்ணாதுரை தீர்மானம் ஆரவாரத்துடன் நிறைவேறியது. எதிர்ப்பே இல்லை.

இடைவேளைக்கு -  உணவுக்குக் கலைந்தது. மீண்டும் கூடி நிகழ்ச்சிகள் தொடங்க சில மணித் துளிகள் முன்பு என்னை மேசைமீது ஏற்றிப் பேச வைத்தனர். ஒரே கை  தட்டல்,  உற்சாகம் எனக்கு,தொண்டை விக்கல், பக்கத்தில் அறிஞர் அண்ணா, சோடாவை உடைத்துக் கொடுத்துப் 'பேசு' என்றார்!

இது என் வாழ்வில் மறக்க முடியாத நினைவுகளில் ஒன்று. அன்று தொடங்கியது - இன்றும் தொடருகிறது!

அய்யா இல்லை

அண்ணா இல்லை

அன்னையார் இல்லை

கலைஞர் போன்றவர்கள் இல்லை

என்றாலும் அவர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் வேகத்துடனும், விவேகத்துடனும், சலிக்காமல்  இன்றும் பல எதிர்ப்புகளையும் சந்தித்துத் தன் பணியைச் செய்கிறது.

தோழர்கள் விசையாக இருந்து முடுக்கி  விடுகின்றனர், எதிலும்  துணிவோடு!

எஞ்சியவை பவள விழா மாநாட்டில்! சந்திப்போமா?

- விடுதலை நாளேடு, 23. 8. 19

பெரியாரவர்களின் கருத்துக்களுக்கு பார்ப்பனப் பேரறிஞர்களின் ஒப்பம் - 4

முன்ஷி - பிர்லா - ராதாகிருஷ்ணன் - வெங்கட்ராம சாஸ்திரியார் ஆராய்ச்சி நூலில் காணும் உண்மைகள் விடுதலையின் விளக்கம்:-

ஆரியர் இயல்பு


ஆரியர் என்பவர்களுக்குக் குறிப்பிட்ட ஒரு நாடோ, ஊரோ, குறிப்பிட்ட மொழியோ, கொள்கை கோட்பாடுகளோ கிடையாது. அவர்கள் நாடோடியாக இருந்து பல நாட்டின ரின் கொள்கை. கோட்பாடுகள். மொழிகள் ஆகியவற்றிலி ருந்து தங்கள் சுயநலத்திற்கு ஏற்றவற்றைத் தொகுத்துக் கொண்டு தங்களைத் தனிப் பிறப்பினமாகக் கூறிக்கொள் கின்றனர். இந்த திருட்டுச் சொத்தின் வண்டவாளத்தை பிறர் சந்திக்கு இழுக்காதிருப்பதற்காகத் தெய்வீகம், தெய்வத்தின் அருள் மொழிகள், தெய்வீகத்தின் மக்கள் என்றும் பொய்யா கப் பிரசாரம் செய்து தங்களுக்குச் சிறப்புத் தேடிக்கொண் டனர்.

மற்றும், தாங்களே உயர் சாதியார் - மேல் இனத்தார் என் றும், மற்றவர்கள் எல்லாம் தங்களுடைய அடிமைகள், தாசி புத்திரர்கள், தாசர்கள் என்றும் கூறி அதற்கான ஆதாரங் களை சமஸ்கிருத வேதங்கள், சாஸ்திரங்கள், புராணங்கள் எனப்படும் நூல்களில் எழுதி வைத்துக்கொண்டு பிறமக் களை ஏமாற்றி அதிகாரம் செலுத்திச் சமுதாயத்தின் பெய ரால், மதத்தின் பெயரால் ஆதிக்கம் செலுத்தி சுரண்டிப் பிழைத்து வருகின்றனர்.

அறிவுக்கொவ்வாத இந்தக் கோட்பாடுகளையும், சுரண் டல்களையும் ஆக்கிரமிப்புப் பிடியிலிருந்தும், சுரண்டலிலி ருந்தும், அவர்களால் நேர்ந்துள்ள மானக்கேடான நிலைமை யிலிருந்தும் திராவிட மக்கள் மீட்சிபெற்று தன்மான - தன்ன றிவு - தன்னியக்க மக்களாக வாழ்ந்து உயர் நிலைமை பெற வேண்டும் என்பதாக தன்மான இயக்கத் தந்தை பெரியார வர்களும் திராவிடர் கழகத்தினரும் கடந்த முப்பது ஆண்டு களுக்கு மேலாக திராவிட மக்களிடையே பிரச்சாரம் செய்து மக்கள் நல்லறிவு பெற பகுத்தறிவாளர்களாகச் செய்து வருகின்றனர்.

இதைக்கண்டு பார்ப்பனர்கள், பெரியாரவர்கள் செய்து வரும் பிரச்சாரம் வெறும் கற்பனை என்றும், ஆதாரமற்ற தென்றும் எதிர்ப்பிரச்சாரம் செய்து மக்களின் அறிவுக் கண் ணில் மண் தூவ முயற்சித்து வருவதும் அறிந்ததே. அண் மையில் காங்கிரசு ஆட்சி மூலவர்களும்கூட இந்தக் குருட்டுக் கோட்பாடு வேதாந்தப் பிரச்சாரம் செய்வதில் ஈடுபட்டு, தங்களுடைய அரசியல் ஆதிக்கச் செல்வாக்கைப் பயன்படுத்தித் திராவிட மக்களை இழிவுபடுத்தும் ஆரியக் கோட்பாடுகளுக்கும் புராண இதிகாச கட்டுக் கதைகளுக்கும் ஆக்கம் தேட முற்பட்டிருப்பதும் அறிந்ததே.

பெரியார் அவர்களும் மேற்படி கருத்துக்களை, பகுத் தறிவு கொண்டு கணித்தறிந்துதான் கூறி வருகிறார். வேதம், மதம், புராணங்களிலுள்ள மனிதத் தன்மைக்கும், பண்புக்கும், நடைமுறைகளுக்கும், நியாயத்துக்கும், நேர்மைக்கும் தகுதி யற்ற கோட்பாடுகளையும், நடைமுறைகளையும் கண்டு தான் அவைகளின் தகுதியற்ற தன்மையை அம்பலப்படுத்தி வருகிறார். ஆனால், இது இவர் மாத்திரம் கற்பனை செய்து கூறுவதாக பார்ப்பனர்களும், வைதீகர்களும் செய்து வரும் பிரச்சாரம் முற்றும் பொய்; சுயநலப் பித்தலாட்டம் என்பதற்கு உலக வரலாற்று ஏடுகளில் ஏராளமான ஆதாரங்கள் இருக் கின்றன.

மேனாட்டுப் பேரறிஞர்கள் மாத்திரமின்றி, தமிழ்நாட்டு அறிவாளர்களும் பார்ப்பனப் பிரமுகர்களும் வங்காளத்தில் தினேஷ் சந்திரசென் போன்ற சரித்திர சமுதாய ஆராய்ச்சிப் பேரறிஞர்களும் தக்க ஆதாரங்கள் தந்துள்ளனர்; தந்து வருகின்றனர்.

முன்ஷி குழுவினர் நூல்


முன்னர் டில்லி சர்க்கார் உணவு மந்திரியாக இருந்து, இப்போது அய்க்கிய மாகாணக் கவர்னராக இருப்பவரும் வடமொழிப் புலமையாளரும் சரித்திர ஆராய்ச்சியாளரும், பார்ப்பனருமான திரு.கே.எம். முன்ஷியை தலைவராகவும் மற்றும் பெரும் ஆலை முதலாளியான ஜி.டி.பிர்லாவைத் துணைத் தலைவராகவும், ஆந்திர பார்ப்பனரும் உலகப் புகழ் பெற்ற தத்துவ சாஸ்திரியும் இப்போது இந்திய சர்க்கார் துணை ஜனாதிபதியாகவிருப்பவருமான டாக்டர். ராதா கிருஷ்ணன், சென்னை பார்ப்பனர் மகா சபைத் தலைவரும் சென்னை அட்வகேட் ஜெனரலாக முன்னர் வேலை பார்த்தவருமான திருவாளர் டி.ஆர்.வெங்கட்ராம சாஸ்திரி மற்றும் சில வடக்கத்திக் கலைஞர்கள் ஆகியோரை உறுப் பினர்களாகவும் செயலாளராகவும் கொண்ட பாரத இதிகாச சமீதி என்றொரு கழகம் தோற்றுவிக்கப்பட்டு உள்ளது. சமஸ் கிருத வேதம், பிராமண மதம் ஆகியவற்றிற்கு உயிரளிப்பதே இக்கழகத்தின் குறிக்கோள் என்பது அக்கழக அமைப்பே சுட்டிக்காட்டும்.

இக்கழகத்தார் இந்திய மக்களின் கலாச்சாரமும் வரலாறும் என்ற பெயரில் ஓர் ஆராய்ச்சி நூல் ஆங்கில மொழியில் வெளியிட்டுள்ளனர். முதல் தொகுப்பு இப்போது வெளிவந்துள்ளது. வேதகாலம் என்ற தலைப்பில் எழுதப் பட்டுள்ள ஆராய்ச்சிக் கருத்துக்கள், பெரியாரவர்களின் கருத்துக்களை முழு அளவுக்கு ஆதரிப்பதாகவுள்ளன. பார்ப்பனர்களைத் தலைவராகவும், அங்கத்தினர்களாகவும் கொண்ட கழகம் பார்ப்பன ஆராய்ச்சி அறிஞர்களைக் கொண்டு ஆராய்ந்து அவர்களுடைய விருப்பு வெறுப்பு களுக்கு ஏற்ப வடிகட்டியும் திருத்தியும் வெளியிட்டுள்ள நூலில் அதுவும் இந்திய சர்க்காரின் சரித்திர ஆதார ஏடாக மதிப்பும் பெறும் சரித்திர நிகண்டில் (என்சைக்ளோபீடியா) பெரியாரவர்களுடைய கருத்துக்கும் அவர் கூறிவரும் மெய்மைகளுக்கும் சரித்திரப் பூர்வமான ஆதாரங்கள் காணப்படுகின்றன. இந்நூலுக்குத் திரு.கே.எம்.முன்ஷியே முன்னணிச் சிறப்புரையும் தந்திருக்கிறார். சமஸ்கிருத - வேத நூல் காப்பாளர்களும், ஆராய்ச்சியாளர்களுமான பார்ப்பன பேரறிஞர்கள் தொகுத்துள்ள இந்நூலில் பெரியாரவர்கள் கூறும் மெய்மைகளுக்கு ஆதாரமாகத் தரப்பட்டுள்ள சில முக்கிய கருத்துக்களை மாத்திரம் தொகுத்தளிக்கிறோம் பகுத்தறிவுலகத்தின் நேர்மை நியாயத்தை பொதுமக்கள் கண்டு தெளிவடைய வேண்டும்.

மேலும், சுயநலக் கும்பல்களின் பித்தலாட்டப் பிரசாரம், சுயநல வேடம் ஆகியவற்றை அறிந்து மெய்யறிவு பெற்று தன்னிறவு தன் சக்தியை பயன்படுத்தி, திராவிட மக்கள் தங்கள் நல்வாழ்வுக்குத் தாங்களே நல்வழி வகுத்துக்கொள்ள வேண்டும். மதத்தின் பெயரால், தெய்வத்தின், சமுதாயத்தின் பெயரால், விதி பிறவியின் பெயரால், கூறப்படும் உயர்வு - தாழ்வு பொய்க்கூற்றுகளை ஒதுக்கித்தள்ளி, எல்லோரும் சமத்துவமாக வாழவேண்டும் என்ற உயர்நோக்கத்துடன் தான் இக்கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன.

புராணங்கள் கற்பனையே


புராணங்களும் - இதிகாசங்களும் மக்களின் மெய்ச் சரித்திரமல்ல இவைகள் மக்கள் வரலாற்றை அறிவதற்கோ சரித்திர உண்மைகளை அறிவதற்கோ ஆதாரமாகாது. இவைகள் வெறும் இலக்கியத் தொகுப்புக்களே என்று திரு. முன்ஷி இந்நூலின் முன்னுரையில் ஒப்புக்கொண்டிருக்கிறார் (பக்கம் - 8).

எனவே, வேத - இதிகாச புராணங்கள், இந்தியாவில் வசித்த முற்கால மக்கள் வரலாறு என்பது பொய்யாகிறது. இந்நாட்டு மக்களுக்குரியதல்லாத கற்பனைக் கோட்பாடு முட்டுக்கட்டைகளே வேத புராணங்கள் என்ற மெய்யும் உறுதிப்படுகிறது. வைதீக கோட்பாடுகளுக்கு சரித்திர அடிப்படை இல்லை என்றும் திரு.முன்ஷியார் வெட்ட வெளிச்சமாக்குகிறார்.

மற்றும், ஆரியர்கள் அனாதி காலமக்கள் (கடவுள் புத்திரர்) சிறந்த நாகரிகம் படைத்தவர்கள் என்று கூறப்படும் கூற்றை இந்நூலுக்கு முன்னுரை தந்துள்ள பேராசிரியர் ஆர்.சி.மஜும்தார் என்பவரே பொய்ப்படுத்துகிறார்.

அதாவது, ஆரியர்கள் சிந்து வெளியில் குடியேறுவதற்கு முன்பா - பின்பா நாகரிக மக்களாயினர் என்று நிர்ணயிப்பது கடினம் என்று கூறி, மாக்கள் நிலையிலும் நாடோடிகளாக வுமிருந்த ஆரியர் சிந்து வெளியில் குடியேறி அங்கிருந்த பழங்குடி மக்களுடன் கலந்து வாழ்ந்தபின் தான் அறிவு வளர்ந்த மக்களாயினர் என்ற உண்மையை மறைமுகமாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.

உபநிஷத்துக்களும் புராணங்களும்


மற்றும், வேதகாலத்தையும் உபநிஷத்துகள் சூத்திரங்கள் ஆகியவற்றின் காலத்தையும் திட்டமாக நிர்ணயிக்க முடியவில்லை என்கிறார். மற்றும், வேதவித்துகளெனப்படும் உபநிஷத்துக்களுக்கும் பிற்கால புராண இதிகாச கதைக ளுக்கும் தொடர்பு காண இயலவில்லை என்றும், கி.மு. 7ஆவது 8-9ஆவது நூற்றாண்டுகளென சுமாராக அதுவும் யூகத்தால்தான் கணித்து இந்நூலில் குறிப்பிட்டிருப்பதாகவும் ஒப்புக்கொள்கிறார்.

இந்த நூல் தனிப்பட்ட ஒருவர் தொகுப்பு அன்றென்றும் பலர் ஆராய்ந்து தேர்ந்தெடுத்து சேர்த்த தொகுப்பென்றும் இந்த முன்னுரையில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்நூல் நீதிபதிகளின் கூட்டுத் தீர்ப்பு போன்றதேயாகும். அதாவது, மறுக்கமுடியாத ஆதாரங்களைக் கொண்டு தொகுக்கப்பட்டதாகிறது. அதுவும், வேதகாப்பாளர் எனப் படும் பார்ப்பன அறிஞர்களின் தீர்ப்பு நகலாகிறது.

மற்றும், இந்நூலில் எடுத்துக்காட்டப்பட்டுள்ள கருத்துக் களுக்கு ஆதாரமாக, பேராசிரியர் ராதாகிருஷ்ணனும் (ஆந்திர பார்ப்பனர் - பந்துலு) மற்றும் வட இந்திய - மேனாட்டு ஆராய்ச்சியாளரும் எழுதிய நூல்களும், சர்க்கார் வசமுள்ள கல்வெட்டு ஆராய்ச்சி ஏடுகளுமான சுமார் நூற்றைம்பது ஏடுகளின் பெயர்ப் பட்டியலும் இந்த நூலில் தரப்பட்டுள்ளன.

ரிக்வேதம் முதலிய ஆரியமத நூல்கள் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன் ஆக்கப்பட்டவை என்று இந்நூல் கணித்துக் கூறுகிறது.

வேதங்கள்


வேதங்கள் இந்திய நாட்டு அரசியல் வரலாற்றை அறியத் துணையாகவில்லை. மத - கலாசார வரலாறுகளே காணப் படுகின்றன. எனவே, மக்களின் பழைய வரலாறு யூகத்தால் தான் அறியவேண்டியுள்ளது. இந்த யூகக் கருத்துக்களைப் பலர் பலவாறு வெளியிட்டுள்ளனர். அவை பலவகைச் சந்தேகங்களுக்கும் இடமளிக்கின்றன.

பிற்கால சரித்திரக் குறிப்புக்களிலும் புராணங்கள் ஊடு ருவி மெய்வரலாற்றைக் கணித்தறியவியலாது செய்துள்ளன. ஆந்திரர் ஆட்சி முடிவுக்கு முன் 3000 ஆண்டுகளின் நாட்டு வரலாறு, சிலைகள், கல்வெட்டுகள் ஆகியவற்றைக் கொண்டே யூகிக்க வேண்டியுள்ளது. - என்று இந்நூல் கருத் துத் தெரிவிக்கிறது. எனவே, இந்த புராண வரலாறுகளும், வேதக் கூற்றுகளும் பிராமணியக் கருத்துக்களும் சரித்திர ஆதாரமற்றவை என்பதாகிறது.

அதாவது, சாதாரண நாவல்கள், கட்டுக்கதைகள் என்று தான் தீர்மானிக்கச் செய்கிறது. ஆரிய மதக் கூற்றுக்கு ஆதா ரமாக இருந்த சரித்திர ஏடுகள் நாசமாகி விட்டதாகவும் கட லுண்டுவிட்டதாகவும் கூறப்படும் கூற்றுகளும் வெறும் புராணப் புளுகுகளே வாகின்றவென்பது, இந்நூலில் சுமார் 100 பக்கங்களில் தோற்றுவிக்கப்பட்டுள்ள கருத்துக்களால் எண்ணச் செய்கிறது.

என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்காவின் விளக்கம்


வேதம் என்றால் அறிவு ஞானம் என்பதே பொருள். இந்த வேதங்கள் சுருதிகளைக் கொண்டவை. சுருதி என்றால் கேட்கக்கூடியது என்றே பொருள்.

(இசைக் கருவிகள் இப்போது இசை சுருதி - (சுதி) கூட்டப்படுவது அறிந்ததே. பிராமண மதப் பிரமாணங்களை (கொள்கைகளை)க் கொண்டதே இது. இந்த வேதம் நான்கு:

1. ரிக் வேதம்

2. யஜுர்வேதம்

3. சாம வேதம்

4. அதர்வணவேதம்

இவைகளில் பல கடவுள்களின் (தேவர்கள்) பெயர் காணப்படுகின்றன.

பிராமணன் என்றால் தலைமைப் பூசாரி. வேதச் சடங்குகளில் தலைமை வகித்துக் கண்காணிப்பது இவர்கள் பொறுப்பு. இவர்களுக்குத் தனி வேதநூல் கிடையாது. மற்ற முப்பிரிவுப் பூசாரிகளின் வேதங்களை அறிந்து அதற்கான நடைமுறைகளைக் கவனிப்பதே இவர்களுக்கு வேலை. பூசாரிகளில் பிராமணர் நான்காம் பிரிவினர். பிராமணர்களே பிரமாணங்களைத் தோற்றுவித்துக் கொண்டனர்.

இந்தப் பிரமாணங்கள் அரண்யகா உபநிஷத்துக்கள் என்ற பிரிவினதாகும். அரண்யகா என்றால் காட்டுக்கு சம்பந்தமான நிகழ்ச்சி முறைகள் என்று அர்த்தம். அதாவது, வனவாசிகள் (சந்தியாசம், துறவு கொண்டவர்கள்) அறிந்து கொள்ளவேண்டிய அல்லது படிக்கவேண்டிய மத நூல்; மதச் சடங்குகளே இவற்றில் முக்கியமாகக் குறிப்பிடப் பட்டுள்ளன. உபநிஷத்து என்பது தத்துவ நூல். அதாவது, கோட்பாடு விளக்க நூல். இது யூகக் கருத்துக்களையே பெரும்பான்மையாகக் கொண்டது.

- செவ்வாய்க்கிழமை தொடரும்

- விடுதலை நாளேடு, 22. 8 .19