வியாழன், 10 அக்டோபர், 2019

பண்பாடு சமற்கிருத மயமாக்கப்படுதல்- 16

சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் குறித்து டாக்டர் க.த.திருநாவுக்கரசு உரை


பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - அதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில், டாக்டர் க.த.திருநாவுக்கரசு (உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை) உரை வருமாறு.

இந்திய நாட்டில் பல்வேறு வகைப் பண்பாடுகள் உள்ளன. பண்பாடு என்பதனை எளிதில் விளக்க இயலாது. அறிவுத் துறைகள் பலவற்றிலும், எது பண்பாடு? எனும் வினாவிற்கு வெவ்வேறு வகையான விளக்கங்கள் தரப் பட்டுள்ளன. எனினும், எல்லாத் துறைகளுக்கும் பொருந்தக் கூடிய ஒரு பொதுவான விளக்கத்தைத் தருவதற்கு முயல லாம்.

பண்பாடு


இக்காலத்தில் வரலாறு என்பது, ஓர் இனத்தின்-நாட்டின்- நாகரிகத்தினை விளக்குவதாக, பண்பாட்டினைப் படம்பிடித் துக் காட்டுவதாக அமைய வேண்டும் என்று வரலாற்றுப் பேரறிஞர் அர்னால்டு டாயின்பி மொழிந்துள்ளார். இங்கே சுட்டப்பட்டும் இரு சொற்களின் பொருளைப் புரிந்து கொள்ளுவோமானால், நம்முடைய நோக்கத்தை நன்கு வெளிப்படுத்த இயலும்.

உலக வாழ்க்கையில்-புறவாழ்வில் மனிதன் அடைகின்ற வியத்தகு முன்னேற்றங்கள், பெறுகின்ற பேறுகள் போற்றிப் பின்பற்றப்படுகின்ற நாள் வண்ணம், இன்பம் தரும் பகட்டு மிகு வாழ்க்கை வசதிகள் போன்ற யாவும் நாகரிகத்தின் கூறுகள் ஆகும்.

வாழ்க்கையில், மனிதன் முழு நிறைவை அடைவதற்கு முயலும் முயற்சியின் பயனாக அமைவது பண்பாடு. முழு நிறைவான வாழ்க்கை இனிமையும், ஒளியும் உடையதாக அமையும். முழு நிறைவான வாழ்க்கையைப் பெற மனிதர் கள் ஒன்றாகக் கூடி வாழ்வதால் உருவாகும் சமூக அமைப்பு களின் இயல்புகளாக அமைவது பண்பாடு. சமூகங்கள் பல சேர்ந்து ஒரு சமுதாயமாகப் பின்னிப் பிணைந்து இயங்கும்பொழுது, உருவாகும் வாழ்க்கை நெறி, பழக்க வழக்கங்கள், கலையுணர்வு, ஆட்சி அமைப்புகள், சிந்தனை முதிர்ச்சி ஆகிய அனைத்தும் இணைந்து ஒருவகைச் சமுதாய சிந்தனையாக வெளிப்படுவதே பண்பாடு எனலாம்.

இந்த வரையறையைக் கருத்தில் கொண்டு, தமிழ் நாட்டின் அரசியல் அமைப்புகள், வாழ்வியல், சமூக நிலை, சமயவுணர்வு, கலை வளர்ச்சி போன்றவற்றை மதிப்பிடுவதே இந்த ஆய்வரங்கின் நோக்கமாகும்.

சமற்கிருத மயமாக்குதல்


கடந்த இருபது ஆண்டுகளாக, இந்திய அறிவரங்கில், சமற்கிருத மயமாக்குதல் எனும் தொடரைப் பலர் பயன்படுத்துவதை அடிக்கடி நாம் கேள்வியுறுகிறோம். சமற்கிருத மயமாக்குதல் என்பதற்கு என்ன பொருள்? இந்தப் பாரத நாட்டில் எல்லாவற்றையும் சமஸ்கிருத மொழி வழிப்பட்ட பண்பாட்டின் ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டு வருவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு, மானிட இயல் (Anthropology) அறிஞர்கள் சூட்டியுள்ள புதுமைப் பெயரே சமஸ்கிருத மயமாக்குதல் என்பதாகும்.

இந்தியாவில் சமற்கிருத மொழி வழிப்பட்ட நாகரிகமும் பண்பாடுமே சிறந்தவை. மற்ற மொழி வழிப்பட்ட பண்பாடு கள் எல்லாம் காட்டுவாழ் மக்களின் வாழ்க்கை நெறிகள். அவை யாவும் மட்டமானவை; கடுமையும் கொடுமையும் நிறைந்தவை; அவற்றில் உயர்ந்த சிந்தனைக்கும், கவர்ச்சிமிகு கலைகளின் வளர்ச்சிக்கும் இடமே கிடையாது எனும் எண்ணப்போக்கின் அடிப்படையில் எழுந்ததே இக்கருது கோளாகும்.

எனவே, இந்தியப் பண்பாட்டின் தலையூற்றாய் விளங் குவது சமஸ்கிருத மொழிவழிப்பட்ட பண்பாடு. அதனுடைய தாக்கத்தினாலேயே, இந்தியா முழுமையும் நாகரிகமும், பண்பாடும் வளர்ச்சியுறத் தொடங்கியதுஎனும் கருத்தை நிலைநாட்ட முயலுவதே சமற்கிருத மயமாக்குதலின் அடிப் படை நோக்கமாகும்.

கிரேக்கர்கள் பண்டைக்காலத்தில், தாங்கள்தான் உலகி லேயே நாகரிகம் அடைந்தவர்கள்; மற்றவர்கள் எல்லாம் காட்டுமிராண்டிகள் என்று கூறினர். இதைப் போன்றே, சமற்கிருத மொழிப் பண்பாட்டாளர்கள், மற்றவர்களை மிலேச்சர்கள் எனும் சொல்லால் சுட்டினர்.

மிலேச்சர்களையும், காட்டுமிராண்டிகளையும் நாகரிகம் அடையச் செய்ததையே சமற்கிருத மயமாக்குதல் எனும் தொடரால், இக்கால அறிஞர்கள் சுட்டுகின்றனர்.

இதனால், புலனாவது யாது? சமற்கிருத மொழிவழிப்பட்ட பண்பாட்டை உடையவர்களே, உலகிற்கு - சிறப்பாக இந்தி யாவிற்கு நாகரீக ஒளியைக் கொண்டுவந்து புகுத்தியவர்கள்; சமற்கிருத மொழியாளர் இந்தியாவிற்கு வராமல் போய் இருந்தால், இந்தியா இன்னும் காட்டுமிராண்டிகளின் நாடா கவே இருந்திருக்கும் எனும் தன்முனைப்பு வாய்ந்த எண் ணப்போக்கை வெளிப்படுத்துகிறது.

ஆரிய மயம்


சென்ற நூற்றாண்டு முதல் இந்த நூற்றாண்டின் இடைப் பகுதி முடிய, உலக அறிஞர்களின் சிந்தனையில் ஆரிய மயமாக்குதல் (Aryanization) எனும் கருத்து நிலை வீறுடன் விளங்கியது.

உலக வரலாற்றில் சிறந்தவை, உயர்ந்தவை, போற்றத் தக்கவை, முன்னேற்றத்திற்கு வழிகாட்டுபவை எனக் கருதப்பட்ட நாகரிகப் பண்பாட்டுக் கூறுகள் அனைத்துமே ஆரியருக்கு உரியவை என்று நம்பப்பட்டது. இதனால், எல்லாரும் இந்தியப் பண்பாட்டை, ஆரியப் பண்பாடு என வும், இசுலாமியர் வருகைக்கு முற்பட்ட இந்திய அரசுக ளையும், ஆட்சிகளையும் ஆரியரின் ஆட்சி (Aryan Rule) என்றே குறிப்பிட்டனர். இதைத்தான், அறிஞர் அண்ணா அவர்கள் ஆரிய மாயை எனும் பெயரால் அழைத்தார்.

இந்திய வரலாற்றின் தொடக்கக் காலத்தில் ஆரியரும், ஆரியர் அல்லாதவரும் பேரளவிற்குக் கலந்து உறவாடியதன் மூலம், புதியதொரு பண்பாட்டினை உருவாக்கினர் என்ப தில் யாருக்கும் அய்யம் இருக்காது. ஆனால், அந்தக் கலப்பின் விளைவாக உருவான புதிய பண்பாட்டில் உள்ள முனைப்பான தலைமைக் கூறுகள் யாவும், ஆரியருக்கு உரியனவாகும்; அவர்களுடைய மொழியே காட்டுமிராண்டி மொழிகளாக இருந்து வந்த பழங்குடி மக்களின் மொழிகளை அழித்து, அவற்றின் இடத்தைப் பிடித்துக் கொண்டது; அல்லது அவற்றை எழுத்து வடிவம் பெற்று, இலக்கிய வளர்ச்சி அடையுமாறு செய்தது! என்பது பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியாரின் கருத்தாகும்.

இந்நிலையில், ஆரிய மயமாக்குதல் எனும் பெயரினை ஏன் கைவிட்டுவிட்டு, சமற்கிருத மயமாக்குதல் எனும் புதிய திருப்பெயரை அறிமுகப்படுத்தினார்கள்? எனும் எண்ணம் எழுவது இயல்பாகும். இதற்கு இரு காரணங்கள் உள்ளன. ஒன்று, இரண்டாவது உலகப் போரினால் மனித இனம் பட்ட அல்லலாகும். ஆரியர்களே உலகில் ஆளப் பிறந்தவர்கள்? எனும் இட்லரின் (Hitler) இனவெறியே, அப்போர்  உண்டா வதற்கு மூலகாரணம் என்பதை யாவரும் உணர்ந்தனர். இதனால் யுனெஸ்கோ (UNESCO) நிறுவப்பட்டதும், உலகின் பல பகுதிகளில், இனம் என்பது ஒரு பொய்க்கதை (Race is a myth) எனும் பொருள்பற்றி மாநாடுகளும், கருத்தரங்குகளும் நடத்தப்பட்டன. இவற்றின் முடிவாக, உலகில் எங்குமே கலப்பற்ற-தூய்மையான-இனம் ஒன்று கூட இன்று இல்லை என்று அறிஞர்கள் முழங்கினர்.

மற்றொரு காரணம் தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் தோன்றியமையாகும். இந்த இயக்கத்தின் நோக்கையும் போக்கையும் கண்டு, உள்ளார்ந்த தன்னல நோக்கம் கொண்டவர்கள் அஞ்சினர். இதனால் ஆரியராவது-திராவிடராவது? எனும் கருத்தைப் பரப்பத் தொடங்கினர். பிராமணர்கள் ஆரியர் அல்லர்; தமிழர்களே எனும் கருத்தைப் பரப்ப முயன்றனர்.

இதன் விளைவாகவே, மொழிவழிப் பண்பாடு பற்றிய எண்ணப் போக்கினை இந்திய அறிஞர்கள் வளர்த்தனர். இந்த நிலையில், பிறப்பால் பிராமணரும் இந்திய மானிட இயல் அறிஞருமான டாக்டர் எம்.என். சிறீநிவாசன், சமற் கிருத மயமாக்குதல் எனும் தொடரைத் தம்முடைய இந்திய கிராமங்களின் நிலை சிறப்பாக கூர்க்கு கிராமங்கள் எனும் ஆய்வேட்டில் 1956 அளவில் பயன்படுத்தினார். இப்புதுமை யான பெயர், உலக அரங்கில் மிக விரைவாகப் பரவியது. இதனால் சமற்கிருத மயமாக்குதல் எனும் தொடர் பெரு வழக்கிற்கு வந்தது.

பெரிய-சிறிய மரபுகள்


இந்திய மானிட இயல் அறிஞர் படைத்த இப்பெயரை ஏற்றுப் போற்ற, அமெரிக்கர்கள் தயங்கினர். இதனால், புதியதொரு பெயரை அவர்கள் படைத்து வழங்கலாயினர்.

சமஸ்கிருத வழிப்பட்ட எண்ணப் போக்கையும், வாழ்க்கை முறையையும் இணைத்து, பெரிய மரபு (Great Tradition) எனும் பெயரால் சுட்டினர். வடமொழியின் தாக்கத்திற்கு இரையாகாத பிற மொழிகளின் எண்ணப் போக்கையும், பண்பாட்டையும் சிறிய நெறி  (Little Tradition)  எனும் பெயரால் குறிப்பிடலாயினர். பெரிய மரபாக மாற்றுதல் என்பது இவர்கள் சமற்கிருத மயமாக்குதலுக்குக் கொடுத்த பெயராகும்.

இன்று மேற்கு நாட்டு அறிஞர்களுள் பலர், பெரிய நெறி, சிறிய நெறி எனும் தொடர்களையே பயன்படுத்துகின்றனர். ருஷிய, ஆசிய நாடுகளின் அறிஞர்களே சமற்கிருத மயமாக் குதல் எனும் தொடரினைப் பயன்படுத்துகின்றனர். இவ்விரு பெயர்களும், பண்பாட்டைச் சமற்கிருத மயமாக்குதலையே உணர்த்துகின்றன.

ஆனால், நீலகண்ட சாஸ்திரியார் போன்ற வரலாற்று அறிஞர்கள், ஆரிய மயமாக்குதல் எனும் தொடரையே, தொடர்ந்து பயன்படுத்தியுள்ளனர்.

- விடுதலை நாளேடு, 10 .10 .19

வியாழன், 3 அக்டோபர், 2019

இந்து மதத்தில் 25 கோடி மக்களாக இருந்தும் என்ன பயன்? - 14

1.10.2019 அன்றைய தொடர்ச்சி...


புராண விஷம்


இவைகளை எல்லாம் நீங்கள் ஊன்றிச் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? மனதில் பல தலைமுறைகளாகப் படிந்துவிட்ட களிம்பை - புராண விஷயத்தை நீக்கிக் கொள்ளாவிடில் நாம் எவ்வகையிலும் வாழமுடியாது. வேத மத புராணக் கடவுள்கள் பற்றிய ஆபாசக் கருத் துக்களை மனத்திலிருந்து அகற்றினாலன்றி சிறிதும் முன்னேற்றமடைய முடியாது. இவைகளே நமது வாழ்வுக்கு வளப்பமாக முடியாது. நம் பெண்களுக்கும் அறிவு - பகுத்தறிவு ஏற்பட வேண்டும். கடவுள், தேவங் களினால் நமக்கு இதுவரை ஏற்பட்ட நன்மைதான் ஒரு துளியேனும் என்ன? துன்பங்கள், தாழ்வுகள் தவிர வேறென்ன கண்டோம்?

விபசாரம் - மோசடி - கொள்ளை


விபசாரம், மோசடி, கொள்ளை இவைகளைத்தானே வேதங்களும், மதங்களும் கடவுள்களும் போதிக் கின்றன. ஒரு அங்குலமாவது, இவைகளைக் கொண்டு நாம் முன்னேற முடிந்ததா? ஏமாற்று வேஷம் போட்டுப் பிழைக்கலாம். ஏமாற்றுவேஷம் வெளிப்படின் உதை படலாம் என்பது தவிர வேறெந்த வகையிலாவது முன்னேற்றத்துக்காக நாம் கண்ட மார்க்கமென்ன? திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் பகுத்தறிவுவாதி கள் என்று சொல்லிக் கொள்ளுவோரில் பெரும்பாலோர் இன்னும் வேஷதாரிகளாகத்தானே இருந்து வருகிறார் கள்? யாரும் காணாதபோது விபூதி பூசுவது, வெளியே வரும்போது அழித்து விடுவது, உருவக்கோவில்களுக் குச் செல்லுதல், திருவிழா, பண்டிகை கொண்டாடுதல் இவைகளை இன்னும் அனுஷ்டித்து வருகிறார்கள் என்றால் மற்றவர்கள் சங்கதியை நாம் எப்படிக் குறை கூற முடியும்? இதற்கு நிவாரண வழிதான் என்ன?

பாம்பின் வாயில் அகப்பட்ட தவளை தப்பினாலும் தப்பலாம்; வேதம், மதம் கடவுள் ஆகிய இந்தப் பாம்பு களின் பிடிப்பில் விழுந்தால் தப்ப முடிவதில்லையே!

உலக அறிஞர்கள் ஏன் உலக அறிஞர்கள், நிபுணர் கள் என்று படிப்புக் காரணமாக, அறிவுத் திறமை காரணமாகப் பாராட்டப்படும் டாக்டர் ஏ.லட்சுமணசாமி முதலியார், ஏ.ராமசாமி முதலியார், ஆர்.கே.ஷண்முகம் செட்டியார் இவர்களால் இந்தப் பிடிப்புகளில் இருந்து இம்மியும் விலக முடியவில்லையே! திராவிடர் கழக அனுதாபிகள் எனப்படும் இவர்களது போக்குகளும், புத்தியுமே இப்படி என்றால் சாதாரணமாக இருப்பவர் களைப்பற்றி என்ன சொல்லமுடியும்? நம்முன் கற்ற வர்கள் எனப்படுவோர்க்குத் தேர்தல் என்றால், எதை விட்டுக்கொடுத்தேனும் கொள்கை, மனசாட்சி, நேர்மை இவைகளில் எதைப்பற்றியும் கவலைப்படாது, எப்படி யாவது தேர்தலைச் சமாளித்தாக வேண்டும், தேர்தலில் வெற்றி பெற்றாகவேண்டும் என்றுதானே தோன்று கிறது? நல்லதொரு சமுதாயம் அநியாயமாக, வீணாகக் கெட்டுப்போகிறதே என்று யார் கவலைப்படுகிறார்கள்?

மாற்ற வேண்டும்


இவைகள் எல்லாம் அதாவது வேதம், மதம், புராண, கடவுள் பற்றிய, நமது பழங்கால முதற்கொண்டு இருந்து வரும் மனப்பான்மை, அடிமைப்புத்தி மாற்றமடைய வேண்டும்; இவைகள் தானே இலக்கியம், நாடகம், சினிமா முதலிய எல்லாத் துறைகளிலும் புகுந்து பெரும் இடையூறாக இருந்து வருகின்றன? ஆகவேதான், மாற்றம் வேண்டும் இல்லையேல் முன்னேற்றத்திற்கு மார்க்கம் இல்லை என்று கூறுகிறேன்.

மற்றபடி, எனக்கு வேறு யாருடனும் விரோதமே கிடையாது. வேதம், மதம், புராணம், கடவுள்கள் இவைகளினால் என் மக்கள் நாசமாகி வருகிறார்கள், இழிவுபடுத்தப்படுகிறார்கள், அடிமைப் படுத்தப்படு கிறார்கள், சுரண்டப்படுகிறார்கள் என்று கூறுகிறேன். இவ்விதம் நான் சொல்லுவதும் அதற்காக ஏதோ என்னால் முடிந்த அளவு செயலாற்றுவதும், செயலாற்ற மக்களிடை பிரசாரம் செய்து தூண்டிவிடுவதும் பிடிக்க வில்லையானால், தோழர் ராஜகோபாலாச்சாரியார் போன்றவர்கள் சொல்லட்டுமே ஒரே வார்த்தை ஆரிய வேதம், மதம், புராணம், கடவுள்கள் இவைகளுக்கும் திராவிட மக்களுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது என்று. அதைவிடுத்து பிரசாரத்தின் மீது காய்வார்க ளேயானால், இனியும் நாம் சும்மா இருப்பதில் பய னில்லை. மாதம் ஒருபடி முன்னேற்றம் கண்டோம் என்ற முறையில், மாதமொரு பண்டிகை திருவிழா என்றிருப்பதுபோல் மாதம்தோறும் ஏதேனும் ஒரு புராணத்தை எரித்தல், விக்கிரகத்தை உடைத்தல் முதலிய நடவடிக்கைகளில் இறங்கியே ஆகவேண்டும். நம்மீது புகுத்தப்பட்ட புராண நூல்களை எரிப்பதாலும், விக்கிரகங்களை உடைப்பதாலும் புராணங்கள் அனைத்தும் அழிந்துவிடும். விக்கிரகங்கள் கூண்டோடு மறைந்துவிடும் என்று நான் கூற வரவில்லை. இதைப் பார்த்த மக்களுக்கு, ஏன் எரிக்கிறார்கள்? ஏன் உடைக் கிறார்கள் என்ற கேள்விகள் பிறக்கும். அதுசமயம் புராணக் கடவுள்களின் ஆபாசங்களை எடுத்துரைத்து, இவைதானா எங்களுக்கு வழிபாட்டு நூல்களும், கடவுள்களும் என்போம் - விமோசனம் பிறக்காது போகுமா பார்ப்போம்.

தோழர்களே! நான் இதுவரை சொன்னதில் ஏதாவது, சிறிதாவது நியாயம் உண்மை இருக்கிறது என்று உங் களுக்குத் தோன்றினால், உங்கள் வீட்டில் மாட்டி யிருக்கும் கடவுள்களின் உருவப்படத்தை எடுத்து எறி யுங்கள்! நெற்றியில் சாம்பல் மண் இடாதீர்கள்! உருவக் கடவுள் உள்ள கோவில்களுக்குச் செல்லாதீர்கள்! துரோ கம், வஞ்சகம் செய்யாதீர்கள்! உண்மை பேசுங்கள்! மக்களை ஏய்க்காதீர்கள்! அதுதான் கடவுள் தொண்டு!.

- தொடரும்

- விடுதலை நாளேடு, 3 .10. 19

செவ்வாய், 1 அக்டோபர், 2019

இந்து மதத்தில் 25 கோடி மக்களாக இருந்தும் என்ன பயன்? - 13

26.9.2019 அன்றைய தொடர்ச்சி...


கந்த புராணமே இராமாயணம்


இன்னும் சொல்லப்போனால், கந்த புராணமே ஆரியர் திராவிடர் போராட்டத்திற்குப் பின் கற்பனை செய்யப்பட்ட முதல் கதையாகும். இதுபோலவே இராமாயணம் முதலிய வையுமாகும். இராமாயணத்தில் பலவகை இராமாயணங்கள் இருக்கின்றன. அதன்படிப் பார்த்தால் இராமாயணம் பால காண்டம், அயோத்தியா காண்டம் என்று இரு காண்டங் களுடன் முடிகிறது. இராவணன், இலங்கை, அனுமார், சீதை, வனவாசம் முதலியன எல்லாம் அவைகளில் இல்லை. பிற்பாடு கந்த புராணத்தைப் பார்த்து விஷயங்கள் கற்பிக் கப்பட்டு அதில் சேர்க்கப்பட்டவைகளேயாகும். கந்த புராணத்துக்கு அந்தக் காலத்திலிருந்த செல்வாக்கைக் கண்டு, அதற்குப் போட்டியாக இருக்க, பிற காண்டங்களை இராமாயணத்தில் சேர்த்தனர். பெயர்களை மாற்றியமைத் தனரே அன்றி, மற்றபடி கந்த புராண நிகழ்ச்சிகளை - காரணக் கதைகளை அப்படி அப்படியே இராமாயணத்தில் சேர்த்துள்ளனர். இராமாயணத்தில் அயோத்தியா காண்டம் வரை உள்ளவை மட்டுமே இராமாவதாரச் சேதிகளாகும். இராமாயணத்தில் கந்த புராண நிகழ்ச்சிகளைக் காணலாமே யன்றி கந்த புராணத்தில் இராமாயணத்தைக் காணமுடியாது. அதனால் இராமாயணமானது கந்த புராணத்தைப் பார்த்து, பின்னிட்டு உண்டாக்கப்பட்டது என்பதில் சந்தேகமே கிடையாது. ஆராய்வரேயாயின் பண்டிதர்களுக்கே இந்த உண்மை நன்கு தெரியும்.

ஆச்சாரியாரே கூறட்டும்


சிவன் - விஷ்ணு அவதாரங்கள் யாவும் ஆரியர் - திராவிடர், தேவர் - அசுரப் போராட்ட அடிப்படையில், ஆரியர் - தேவர் பாதுகாப்புக்கென, திராவிட அசுரர்களைக் கொன்று உண்டாக்கப்பட்டவையேயாகும். ஆக எல்லாம், இந்த ஆரியர் - திராவிடர் போராட்டம் என்பதாக இருக்கிற தேயன்றி, நமக்குக் கடவுளெனயாதிருக்கிறது? கடவுளின் பிரதிநிதியாக வக்காலத்து வாங்கிக் கொண்ட தன்மையில் பேசிவரும் தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் தான் கூறட்டுமே!

நம்மைப் பார்த்துப் பலர், ஆபாசங்களை மட்டும் காண்கிறீர்களே நல்லவைகள் ஏன் உங்கள் கண்களுக்குத் தெரிவதில்லை என்கிறார்கள். நல்லது ஏதேனும் இருப்பதாக உங்களுக்குத் தெரிந்தால் - தெரிவியுங்கள் என்றால் யாரும் வாய்கூடத் திறப்பதில்லை. ஆபாசங்களை நீக்கி எழுதுங் களேன் என்றாலும் எதுவும் பேசுவதில்லை.

ஆறுமுகம் பிறப்பு


ஆறுமுகம் என்னும் சுப்பிரமணியக் கடவுளின் பிறப்புப் பற்றி கந்தபுராணத்தில் கூறப்பட்டிருப்பதைத்தான் பாருங் கள். தேவர்கள், தங்களுக்கு அசுரர்கள் தொல்லை கொடுத்து வருவதாகவும், அசுரர்களை அழிக்க வழி செய்தாக வேண்டும் என்றும் சிவனார் என்னும் கடவுளிடம் முறையிட்டார்களாம். சிவனாரும் ஒரு புத்திரனைத் தோற்றுவிக்க வேண்டித் தமது தேவியார் பார்வதியுடன் கர்ப்பகோடி ஆண்டு கலவி செய்தாராம். இவர்களது கலவிக் காலம் கழிந்து அவதாரம் தோன்று முன் தேவர்கள் - அசுரர்கள் பேதமே தெரியாதொழிந்து விடுமே என்று அஞ்சி, தேவர்கள் சிவனாரை அணுகிக் கலவியை நிறுத்துமாறு வேண்டினராம். கலவியை இடையில் நிறுத்துவதாயின் வெளிப்படும் இந்திரியம் என்னாவது என்று சிவனார் கேட்கத் தேவர்கள் தாங்கள் ஆளுக்குச் சிறிதளவாக உட்கொண்டு விடுவதாக ஒப்பி அவ்விதமே செய்ய, அதன் பயனாக, தேவர்கள் அனைவரும் கருவுற்றனராம்! ஆண்கள் இந்திரியத்தை வாய் வழியாக உட்கொண்டு கருவுற்றனராம்! தேவர்கள் எதிர்பாராத இவ்விளைவைக் கண்டு அஞ்சி மறுபடியும் சிவனாரையே அணுகித் தமது கருக்கலைய வழி கேட்டனராம். அவரும் ஒரு குளத்தைக் காட்டி அதில் நீராடச் சொன்னாராம்; தேவர்கள் அவ்வாறே செய்து தமது கர்ப்பத்தைக் குளத்தில் சிதைத்துக் கொண்டனராம்; இவ் விதம் சிதைவான கருப் பாகங்கள் குளத்தில் ஆறு குழந் தைகளாகினவாம். அவைகளைச் சிவனார் ஒன்றுபடுத்தி ஆறுமுகம் என்றாக்கினராம். இவனே பிற்காலத்தில் சூரபத் மன் என்ற திராவிட அரசனைச் சூதினால் அழித்தான் என்று புராணத்தில் கூறப்பட்டிருக்கிறது.

எல்லாம் ஆபாசக் கதைகள்


இப்படியாகப் புராணங்கள் ஒவ்வொன்றிலும் ஆபாசக் கதைகள் நிரம்பியுள்ளன. பாகவதம் முதலிய பிற்பட்ட காலத்திய நூல்களில்தான் என்ன ஒழுக்கமிருக்கிறது? ஆக ஆரியர் - திராவிடர் போராட்டத்தைச் சமாளிக்க அவ்வப் போது ஏதேதோ செய்து இருப்பதாகவே அறிகிறோம்.

மச்சாவதாரம்


தசாவதாரங்களுள் முதலாவதாகச் சொல்லப்படும் மச்சாவதாரத்தை எடுத்துக் கொள்ளுங்களேன்; வேதத்தை யாரோ ஒரு அசுரன் சுருட்டி எடுத்துச் சென்று சமுத்திரத்துள் மறைத்துவைத்து விட்டானாம். அதை மீட்டுவர விஷ்ணு மீன் அவதாரமெடுத்தாராம். வேதத்தை எடுத்துக் கொண்டு ஓடி மறைந்தான் அசுரன் என்றால் என்ன பொருள்? அந்த நாட்களில் காகிதம், ஓலைச்சுவடி, அச்சுக்கூடம், அல்லது பேனா, பென்சில் எதுவும் கிடையாது. அதனாலே வேதம் புத்தகமாக அல்லது ஓலைச்சுவடியாக இருந்திருக்க முடியாது. அப்படியானால் அதை எவ்வாறு தூக்கிச் சென்று மறைத்திருக்க முடியும்? வேதம் அந்நாட்களில் வெறும் வாய்ச்சொல்லாக உள்ளத்திலே இருந்த ஒரு பொருளாகவே இருந்து வந்தது. அதை மறைப்பதெப்படி? அதாவது, வேதப் பிரசாரம் கூடாது என்பதாக திராவிட அரசன் ஒருவன் கண்டித்து ஆட்சேபித்திருக்கவேண்டும். அதற்குத் தடுத் தான் என்றுதானே பொருள்; தந்திரமாக அவ்வரசனை அசுரனாக்கிக் கொலை செய்து, வேதத்தைக் காப்பாற்றிக் கொண்டு இருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம் கொள்ள வேண்டும். ஆகவே, அந்தக் காலத்திலேயே வேதத்திற்குச் சரியான, சட்ட விரோதமாகக் கூட எதிர்ப்பும் இருந்திருக்கிறது.

வராகவதாரம்


வராகவதாரத்தின் லட்சணத்தைப் பார்த்தாலும் ஆபாசம் புரிகிறது. பூமியை அதாவது உலகைப் பாயாகச் சுருட்டி ஒரு அசுரன் கடலுக்குள் ஒளிந்து விட்டானாம். பூமியின் வடிவம் உருண்டை என்பதாகச் சில நூல் வல்லுநர்கள் கண்டிருக்கின்றனர். அப்படியானால் பூமியைச் சுருட்டுவ தெப்படிச் சாத்தியமாகும்? மேலும், எங்கிருந்து கொண்டு சுருட்டினான்? சுருட்டியவனும் பூமிக்குள் அகப்பட்டிருக்க வேண்டுமே! சுருட்டியதைக் கடலுக்குள் ஒளித்து வைத் தானாம். பூமி அல்லது உலகம் எனும்போது கடலும் அதில டங்கியது என்பதைப் புராணம் எழுதியவன் மறந்திருக்க வேண்டும் அல்லது அறியாதிருக்க வேண்டும்.

மற்றவை


அதேபோலத்தான் நரசிம்மன், பரசுராமன், பலராமன், இராமன், கிருஷ்ணன் முதலிய அவதாரங்களும் இருக் கின்றன.

பரசுராமன், இராமன் இவ்விரு அவதாரங்களும் ஒரே கடவுளின் அவதாரங்களெனப்படும். இவை ஒரே காலத்தில் இருந்து ஒன்றை இன்னொன்று எதிர்ப்பதும், போரிட்டுத் தோற்கடித்ததுமாக எழுதப்பட்டுள்ளது. இதேபோலப் பரசுராமன், பலராமன், கிருஷ்ணன் ஆகிய மூன்று அவதா ரங்களும் ஒரே காலத்தில் இருந்து செயல் புரிந்ததாகவும் எழுதப்பட்டிருக்கின்றது.

வேத எதிர்ப்பு


சுருக்கமாகச் சொல்லப்போனால் வேத எதிர்ப்பு என்ற சங்கதி தோன்றியது இன்று நேற்றல்ல. ஈரோட்டு ராமசாமியும், திராவிடர் கழகமும் தோன்றிய காலத்திலல்ல; புராண காலத்திலேயே வேதம் வெறுக்கப்பட்டு வந்திருக்கிறது என்று தெரிகிறது. மற்றபடி, வேதத்தை ஏன் படித்தாய்? என்ன படித்தாய்? என்பது அக்காலத்தே தெரியாது. கார ணம், அது குறிப்பிட்ட ஒரு வகுப்பாரிடையே வாய்மொழி யாக, உள்ளத்தில் ஒரு கருத்தளவிலேயே இருந்து வந் திருக்கிறது என்றாலும், இராவணன், இரணியன் ஆகியோர் வேதத்தை முழுவதும் படித்ததினாலேயே அவர்கள் வேதத் திற்கும் யாகத்திற்கும் தேவர்களுக்கும் பிராமணர்களுக்கும் விரோதிகளானார்கள் என்பதாகத் தெரிகிறது. இக்காலத் திலேயும் வேதப் பாதுகாப்புக்கென தோழர்கள் ராஜகோபா லாச்சாரியாரும், வக்கீல் வெங்கட்ராம சாஸ்திரியாரும், சர்.சி.பி.ராமசாமி அய்யர், ஜட்ஜ் ஏ.எஸ்.பி. அய்யர் போன்றோரும் முன் வருகின்றார்கள் என்றால், சுயமரியாதை இயக்கம் வேதத்தைக் கொளுத்த வேண்டும் என்று சொன்ன பிறகுதான். வேதம் எப்படி, எதற்காக ஏற்பட்டது என்று திராவிடரில் யார் ஆராய்ச்சி செய்தார்கள்!

எந்த மொழியில்?


எந்த மொழியில் வேதம் ஓதப்பட்டு வந்தது என்றே சொல்ல முடியாது. சமஸ்கிருத மொழியே வேதகாலத்தில் கிடையாது. சமஸ்கிருதம் என்று தனிமொழியே இருந்த தில்லை. அந்தக் காலத்திலே ஆரியர்கள் பேசிக் கொண்டி ருந்த மொழி பலமொழி, மலைவாசி மொழிகள். அப்படிப் பட்ட சகல மொழிகளையும் கிரமப்படுத்தி அதைச் சமஸ் கிருதம் - சம்ஸ்தத்தையும் ஒன்றாக்கிய மொழி என்றாக்கி னார்கள். சமஸ்கிருதம் என்ற பதத்துக்கு அர்த்தமே அது தான். அப்படிச் செய்யும் போது திராவிட மொழிகளிலிருந்தும் பல சொற்களை ஆரியர்கள் எடுத்துக் கொண்டனர். ஆனால், அச்சொற்களின் ஒலியை மட்டும் சிறிது மாற்றி யமைத்துத் தனிமொழி போலத் தோன்றுமாறு செய்து விட்டனர் என்பதாக என்சைக்ளோபீடியா என்னும் சர்வ பொருட் களஞ்சியம் கூறுகிறது.

தமிழ்ப் புலவர்கள்


இங்குள்ள நமது தமிழ்ப் புலவர்கள் எனப்படுவோர் தமிழைப் பிழைப்புக்காகக் கற்று வைத்துக் கொண்டு பாடுபடுகின்றனரே அன்றி, தமிழ்மொழி வளர்ச்சி, கலாச்சார வளர்ச்சிக்கென இம்மியும் காரியத்தில் இறங்கியது கிடையாது. தேவாரம், திருவாசகம், பிரபந்தங்கள் என்பதாகத் தமிழிலும் கடவுள் பாடல்கள் இருக்கின்றன. ஆனால் அவைகளும் வேதத் தேவர்களைக் கடவுளாகக் கொண்டு, பிரார்த்தனைப் பாடல்களாகப் பாடப்பட்டிருக்கின்றனவே அல்லாது தமிழர்களுக்கான கடவுள்களைக் குறித்து ஒரு சொல்லும் கூறுவதில்லை!

அகஸ்தியனைப் பற்றிய கூற்று


தமிழ்மொழி ஏற்பட்டதே அகஸ்தியன் என்னும் ஒரு குறுமுனிவனால் என்றும் சொல்கிறார்கள். இது ஒரு சிறிதும் உண்மையல்ல என்பதோடு தமிழர்களுக்கும் தமிழ் மொழிக்கும் வெட்கக்கேடு ஆகும். அகஸ்தியன் ஆரியக் கதைப்படி ஒரு ஆரியனாகும். ஆரியத்தைத் தெற்கே புகுத்த வடக்கிலிருந்து அனுப்பப்பட்டவன். அதாவது, சிவனாருக் கும் உமையாளுக்கும் திருமணம் இமயமலையில்  நடை பெற்றபோது தென்னாடு உயர்ந்து விட்டது என்று தேவர்கள் புகார் உரைத்தனராம்; தேவர்கள் என்றால் ஆரியர்கள் - பார்ப்பனர்கள்தாம். தென்னாடு உயர்ந்துவிட்டது என்றால், தென்னாட்டு மக்கள் ஆரியச் சூழ்ச்சிப் புராணக் கதைகளில் சிக்கிச் சீரழியாது முன்னேற்றமடைந்துவிட்டனர் என்பதாக அர்த்தம். தெற்கே யாரையாவது அனுப்பி உயர்ந்து விட்டவர்களை மட்டம் தட்ட வேண்டும் என்பது ஆரியரது விருப்பம். இதற்குத் தகுந்த நபராக அகஸ்தியன் என்பவரைத் தேர்ந்தெடுத்தனர் என்பதாக கந்தபுராணம் கூறுகிறது.

இந்த அகஸ்தியன் தெற்குநோக்கி வரும்போதே அப் போதைய எல்லைப் பகுதியான விந்தியமலைக்கருகில் ஆரியர் பிரவேசத்தையும் ஆரிய மதப் பிரச்சாரத்தையும் தடுத்தொழித்து வந்த வாதாபி வில்வலன் என்ற இரு திராவிட அரசர்களை இந்த அகஸ்தியன் என்பவன் சூழ்ச் சியால் வென்று கொன்றிருக்கிறான் என்று கூறப்பட்டி ருக்கிறது. தென்னாடு சென்று இராவணனைக் கொன்றுவா என்றே அகஸ்தியனுக்குக் கட்டளையிட்டதாகக் கூறப்படு கிறது. இந்த இராவணன் யார்? இராமாயண இராவணனா அல்லது வேறொருவனா என்பது தெரியவில்லை. இவ் வாறாக, அகஸ்தியன் தென்னாடடைந்தும், தமிழ் நூல்களை யெல்லாம் ஒழித்து ஆரிய மயமாக்கிவிட்டான்.

ஒரே வார்த்தையில் சொன்னால், திராவிடர்களைக் கொன்று குவித்து அழிக்கவே வேதமும் மதமும் கடவுள் களும் பயன்பட்டு வந்திருக்கின்றனவே அன்றி இவை களினால் என்ன உருவான பலன் ஏற்பட்டிருக்கிறது?.

தொடரும்

- விடுதலை நாளேடு, 1 .10. 19

வெள்ளி, 27 செப்டம்பர், 2019

இந்து மதத்தில் 25 கோடி மக்களாக இருந்தும் என்ன பயன்? - 12

24.9.2019 அன்றைய தொடர்ச்சி...

நம்மைப் பிரித்து வைத்துள்ளவை

வேதம், மதம், கடவுள்கள் எனப்படும் மூன்றாலுமே நாம் அனைவரும் இந்துக்கள் என்ற ஒரே சமுதாயப் பட்டிக்குள் திணிக்கப்பட்டிருக்கிறோம் எனினும் பல படியாகப் பிரித்து வைக்கப்பட்டிருக்கிறோம். இந்து மதத்தினராக உள்ள நாம், சுமார் 25 கோடி இந்துக்கள் இருப்பினும், நாம் யாவரும் இந்தக் கடவுள்களினாலோ, மதத்தினாலோ ஒன்றுபடுத்தப் படவில்லை.

இந்து மதம் என்று ஒரு மதமே இருந்தது கிடையாது எனக் காலஞ்சென்ற காந்தியார் உட்பட, பல ஆராய்ச்சிக்காரர்கள் கூறியிருக்கிறார்கள். மதத்தினாலேயே நாம் ஒன்றாயில்லை; பலகோடிக் கடவுள்கள் இந்து மதத்தினருக்குக் கற்பிக்கப் பட்டுள்ளனர். அவைகளில் யாவருக்கும் ஒன்று என்பதாக ஒன்றுகூட இல்லை. சாஸ்திரங்களின் பேராலும், வேதத்தின் பேராலும் இந்தியாவில் உள்ள இந்துக்கள் ஒன்றுபட்ட வர்களாக இல்லை. அதைவிடுத்து, சென்னை மாகாணத்தில் தமிழ்நாட்டில் உள்ள இந்துக்களாகிய நாமாவது எதனா லாவது ஒன்றுபட்டிருக்கிறோமா என்றால் அதுவும் இல்லை. முதலாவது, வேதத்தில் இருப்பவை என்ன என்றே நமக்குத் தெரியாது. ஏனெனில், நாம் தான் வேதத்தைப் படிக்கவோ, பக்கமிருந்து கேட்கவோ கூடாதே! தெரிந்த வரை ஆபாசங்களும் கேடுகளும் அதிலிருக்கின்றன என்று கண்டிருக்கிறோமே தவிர நமக்கு முறையாக வேதம் கற்பிக்கப்பட்டிருக்கிறதா? ஏன்? அதை நாம் பார்க்கப் படிக்க நேர்ந்தால் அதன் அசிங்கம் நமக்கு விளங்கிவிடும். அன்றியும், நம்மை இழிவுபடுத்தவும் ஒழிக்கவுமே வேதசாஸ்திரம், மதம், கடவுள்கள் இருக்கின்றனவே தவிர, அவைகளில் நம் நலத்திற்கென்று ஒன்றுமே இல்லை என்பது விளங்கிவிடும்.

சூரியன், சந்திரன், அக்கினி, இந்திரன், வருணன், ருத்திரன், அவன், இவன் என்று பெயர்களும் உருவங்களும் இருக் கின்றனவே தவிர, காட் (படின), அல்லா, கடவுள் என்பதாக ஒன்று நமக்கு இல்லை. சொல்லப்போனால், கடவுளுக்குத் தமிழில் ஒரு சொல்லே இல்லை. இந்தக் கடவுள் என்ற சொல் இடைக்காலத்தில் தமிழில் புகுந்தது தான். சரித்திரம் காணாத கால முதற்கொண்டே நாகரிக வாழ்வில் திளைத்திருந்த நாம், ஒரு பெரிய சமுதாயம் தனக்கென வேதம், மதம், கடவுள், சாஸ்திரம், கொள்கை இவைகள் இல்லாமல் அண்டிப் பிழைக்க வந்த ஒரு நாடோடிக் கூட்டத்தாரின் பிரச்சாரத் தந்திரத்துக்கு ஆளாகிக் கூத்தடிக்கிறோமே தவிர, வேதனைக்காளாகிறோமே தவிர வேறென்ன?

ஆரியர் - திராவிடர் என்னும் இரு இனப் பிரிவுகளை இந்த நாட்டுக் கம்யூனிஸ்டுகள் தவிர சர்வ சகல கட்சியினரும் அமெரிக்க - பிரிட்டிஷ் வரலாற்று நூலாசிரியர்களும், இந்தியாவின் காங்கிரஸ் தலைவர் - பிரதம மந்திரி பண்டித நேரு உட்பட ஒத்துக் கொள்ளுகின்றனர். நாம் கூறும் ஆரியர் - திராவிடர் பிரச்சினை ரத்தப் பரிசோதனையின் விளைவாக அல்ல; கொள்கைகளினால், கலாச்சாரத்தினால், பழக்க வழக்கங்களினால், பிரிக்கப்பட்டிருக்கும் பேதத் தினால் கூறுகிறோம். மற்றபடி ஆரியரும் - திராவிடரும் பெரும் அளவுக்கு இரத்தத்தினால் கலந்துவிட்டனர் என்பதை நாம் மறுக்க முன்வரவில்லை.

ஆரியர்கள் யார்

ஆரியர்கள் என்போர் யார்? என்சைக்ளோபீடியா என்ற சர்வபொருள் விளக்க நூலும் வேத நூல்களும், ஆராய்ச்சி உண்மை ஆதாரங்களும் சொல்லுவதென்ன?

பர்ஷிய என்னும் பாரசீகத்தில் இருந்தவர்களே ஆதியில் பெரிதும் ஆரியர்கள் எனக் கூறப்பட்டிருக்கிறது. இவர் களுக்குள் இரு கட்சிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதாவது, ஒரே இனத்தவர் எனினும், இங்கு உள்ள சைவர்கள், வைணவர்களைப் போல, ஒரு சாரார் தேவர்கள் என்றும், மற்றவர்கள் அசுரர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். இவர்களுக்குள் உயர்வு தாழ்வு கிடையாது; எனினும் கொள்கைத் துறையில் மாறுபட்டிருந்தனர். வானம், தீ முதலிய பிரகாசம் என்னும் பொருளைக் கொண்டதான வான ஒளி என்ற தத்துவத்தின் மீது தேவர்கள் வழிபாடு கொண்டிருந்தனர். மற்றவர்கள் இதற்கு மாறுபட்ட இயற்கைத் தத்துவத்தைக் கொண்டிருந்தனர். இவர்களுக்கு அசுரர் என்ற பெயர் இருந்து வந்தது. அசுரர்கள் மது, மாமிசம் சாப்பிடாதவர்கள்; கொலை பலி வெறுப்பவர்கள்.

தேவர்கள் மது, புலால், ஒழுக்கக் குறைவு, கொலைத் தொழில் முதலியவைகளில் ஈடுபட்டிருப்பவர்கள்; ஆதலால், அது காரணமாக அசுரர்கள் தேவர்களை வெறுத்து விரட்டி விட்டனர்.

வசவே வேதம்

விரட்டப்பட்டு ஓடியவர்கள், விரட்டியவர்களை எவ்வளவு கீழ்த்தரமாகவும் இழிவாகவும் பேச முடியுமோ அவ்வளவும் செய்து கொண்டு, வெளியேறிப் பல நாடுகளைச் சுற்றிவிட்டு, இறுதியாக இந்தி நதி (சிந்து நதிக்கரை) வந்தடைந்து, சாவகாசமாக உட்கார்ந்து கொண்டு, தம்மை விரட்டியவர் களை மேலும் தொடர்ந்து வசைபாடலாயினர். இந்தியா விலும் அவர்கள் கண்ட மனிதர்கள் அவர்களது நாட்டு அசுரர்களைப் போலவே உயர்ந்த தத்துவத்தினராக இருந்து இவர்களை வெறுக்கவே, அவர்களையும் அசுரர் என்றே கருதி, அவர்களை வைவது போலச் சபிக்கும் காரியத்தை இவர்கள் மீதும் செய்து வந்திருக்கின்றனர். அந்த வசவேதான் வேதமாயிற்று. இவ்விதம் பாரசீகத்தில் இருந்து வந்த ஆரியர்கள் இந்தியாவிலும் குடியேறிக் கண்ணுக்குக் காணும் சூரியன், சந்திரன், தீ, தண்ணீர் முதலிய இவை களையே கடவுள்களாக்கி, அவைகளின் எண்ணிக்கையை 33 ஆக ஆக்கினர். இவை எல்லாம் டாக்டர் முன்ஷி முதலியோர் தீட்டியிருக்கும் ஆதாரம் முதலியவைகளில் இருந்தும் உறுதிப்படுத்தப்படுகின்றன. இந்த 33 கடவுள்களில் இன்று கூறப்படும் சிவன் இல்லை; விஷ்ணு என்பவனைத் தங்கள் இனப்பாதுகாப்புத் தேவனாக, ஆபத்துக்களை அகற்றக்கோரித் துதிபாடுவதற்காக ஏற்படுத்தியிருந்தனர். ருத்திரன் என்றொரு கொடுமையான குணத்தைக் கொண்ட தேவராக ஆரியர் ஒரு தேவனைக் கொண்டிருந்தனர்.

இங்கு வந்த பின்பே ஆரியர்கள் ருத்திரன் என்ற தேவனை, சிவன் என்று பெயர்மாற்றி, அதை முக்கிய தேவனாக்கி, வேதத்தில் மிகச் சாதாரண - பிந்திய தேவனாக இருந்த விஷ்ணுவையும் முக்கியத்துவம் அளித்து நாளாவட்டத்தில் அவைகளையும் கடவுள்களாக ஆக்கி வந்திருக்கின்றனர். ஆயினும், பிரம்மா என்பதாக ஒரு கடவுள் வேதத்தில் காணப்படவில்லை. இவைகளையே நாளடைவில் விருத்தி செய்து சிவனின் பிள்ளைகள் என்றும், விஷ்ணுவின் அவதாரம் என்றும் பலரை உற்பத்தி செய்து தசாவதாரம், புராணக் கதைகள் என்பவைகளையும், கடவுள்களுக்குப் புத்திரர்களையும் உண்டு பண்ணினர். இவர்களெல்லாம் கடவுள்கள் அல்லர்; பெரிதும் தேவர்களும் அல்லர்; தேவர்கள் என்றால் பிரகாசமாக வானத்தில் இருப்பது என்பது அவர்கள் ஆதாரக் கருத்து.

வேதகாலம் தெரியாது

வேதங்களுக்கும் காலம், கர்த்தா, குறிப்பிட்ட கருத்து, முதலிய எதுவுமில்லை என்கிறார்கள். வேதம் ஏற்பட்ட காலம், எழுதியவர், அல்லது ஏற்படுத்தியவர் யார் என்று ருசுப்பிக்க ஆதாரங்கள் எதுவுமில்லை; ஆனால், இப்போது கூறுகிறார்கள் காலப்போக்கில் தொகுக்கப்பட்டவை என்று. இதையே இக்காலத்தில் உலகெங்கும் நிகரற்றது; சகல மதத்தையும் தழுவியதென்கிறார்கள். சங்கரர், ராமானுஜர், மாத்துவர் உள்பட ஆஸ்திகர் நாத்திகர்களும் பிறரும் தத்தமது ஆஸ்திக நாஸ்திகமான பலவிதக் கொள்கைகளை மதங்களாக வேதத்திலிருந்தே அவரவர் கருத்துக்கேற்ப விளக்கம் தந்து அமைத்திருக்கிறார்கள். கிளைக் கடவுள் களையும் அவதாரங்களையும் கொண்ட புராண இதிகா சங்கள் யாவும் ஒரே கருத்தில்தான் அதாவது ஆரியர் திராவிடப் போராட்டத்தின் மீதே ஏற்பட்டிருக்கின்றன.

அடிமைப்படுத்தும் தத்துவமே

திராவிடர்கள் என்றென்றைக்கும் தலைதூக்காதபடி செய்யும், நிரந்தரமாக ஆரியர்க்கு அடிமைப்பட்டிருக்கச் செய்யும் தத்துவமே புராண இதிகாசங்களின் தத்துவங் களாகும். சைவம், வைணவம் எல்லாமே இதே நோக்கம் கொண்டவை. திராவிடர் ஒழிப்பே அந்த நோக்கமாகும், இங்கு கண்டவர்களையும் நமது நாட்டு அசுரர்கள் என்றே கருதி ஆரியர்கள், திராவிடர்களைச் சூழ்ச்சிப் போரில் வென்று, அவ்வெற்றி தேவர்களால் ஏற்பட்டதென்று கருதி அத்தேவர்களையே அவதாரங்களாக்கி, அவற்றை நமது கடவுள்களாக ஆக்கிவிட்டனர். நமது நாட்டில் ஆரம்பிக்கப் பட்ட போராட்டத்தை அவர்கள் வெற்றி பெற்றதும் பல உருவில் கதைகளாக்கி அக்கதைகளைப் புராணங்களாக்கி விட்டனர். அக்கதையில் வந்த பாத்திரங்கள் எல்லாம்தான் கடவுள்களாக்கப்பட்டன.

இன்று

மக்களுக்கு இன்று உணர்ச்சி வந்துவிட்டதால், ஆரியர்கள் நம்மை அசுரர்கள், ராட்சதர்கள் என்று நேரில் கூறாமல் இருக்கின்றனர்; என்றாலும் அந்த வெறுப்புடன்தான் நம்மை நடத்துகிறார்கள்.

தேவர் - ஆரியப் பார்ப்பனரே

தேவர்கள் என்னும் ஆரியர்களை அதாவது பார்ப்பனர் களைப் பற்றி அவர்கள் நன்றாக எழுதி வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். திராவிடர்கள் போரில் தமக்குச் செய்த கொடுமைகள் காரணமாகவே மனுதர்மம் என்பதாக தமது வகுப்புக்கு ஒரு தனி அடக்குமுறை நீதிநூல் உண்டாக்கி அதை மத ஆதாரமாக ஆக்கிவிட்டார்கள். அந்த நூலில் யாகத்தின் பெயரால் திராவிடர்களைக் கொள்ளையடி என்றும், பலாத்காரமாய் பொருளைப் பிடுங்கிக் கொள் என்றும், ஆரியர்கள் எழுதியிருக்கிறார்கள். வசதிப்பட்ட போது திராவிடர்களும் ஆரியர்களை வெளுத்திருக் கிறார்கள். இக்கால மலைவாசிகள் யுத்தமுறை போன்று என்பதும் வேதத்தினால் விளங்குகிறது.

பெண் வேடத்தில் ஏமாற்றினர்

கஷ்டங்கள் நேர்ந்த காலத்தில் எல்லாம் பெண் வேடத்தில் ஆரியர்கள் திராவிடர்களை ஏமாற்றியிருக்கிறார்கள். தமது இனப் பெண்களென்பதற்குப் பதிலாக சிவன், விஷ்ணு பெண் அவதாரம் என்பதாகத் திரித்து எழுதியிருக்கிறார்கள். ஆக தந்திரம், சூது காரணமாகப் பல சாதனைகளைச் செய்திருக்கின்றனர். இது சம்பந்தமான கதைகளை எழுதும்போதும் ஆபாசங்களையும் மோசமான வைகளையும் அவர்கள் செய்யத் தயங்கவில்லை, நமக்கு வணக்கம், வழிபாடு இவைகட்கு உரியதாக புராணம் கடவுள்களை ஏற்படுத்திப் பார்ப்பனர்களுக்கு என்றென்றும் சுலபமான வகையில் சுகமாக வாழ வழி செய்துள்ளனர்.

தங்களுடைய ஆபத்துக் காலத்தில் புராண தந்திரங்கள் பயன்படவேண்டிய புராணப் பாத்திரங்களையும் நிகழ்ச்சி களையும், கடவுள்கள் திருவிழா, பண்டிகைகளாகக் கொண்டாடுமாறு செய்துவிட்டனரே அன்றி, நமக்கு என்று ஒரு தனிக் கடவுள் எதுவும் இல்லை. நம் கடவுள்கள் என்பனவெல்லாம் நம் பொருளையும் பணத்தையும் பார்ப்பனருக்குப் பிடுங்கிக் கொடுக்கவே இருக்கின்றன.

தொடரும்

- விடுதலை நாளேடு, 26. 9 .19