செவ்வாய், 10 மார்ச், 2020

சமஸ்கிருத "சனியன்" (தேசியத் துரோகி) - 54

தேசியத் துரோகியாகிய நாம் கூறும் விஷயங்கள் முழுவதும், எழுதும் சங்கதிகள் எல் லாம், மக்களுக்குப் பயன்படாத பழைய காரியங்களில் ஆசையுடையவர் களுக்கு வெறுப்பாகத்தான் இருக்கும். ஆனால் அதைப் பற்றி அதாவது எவருடைய வெறுப்பைப் பற்றியும் எதிர்ப்பைப் பற்றியும் நாம் கவலைப் படுவது கிடையாது. ஆகவே இப்பொழுது ஒரு தேசியத்தைக் கண்டிக்கவே இந்த முகவுரையைக் கூறிக் கொண்டு முன்வந்தோம்.

சென்னை மாகாணத்தில் கல்வியிலாகாவில் சிக்கனம் செய்வதைப் பற்றி ஆலோசனைக் கூறிய சிக்கனக் கமிட்டியார் கூறியிருக்கும் யோசனைகளில் சென்னைப் பிரசிடென்சிக் கல்லூரியில் உள்ள சமஸ்கிருத ஆனர்ஸ் வகுப்பை எடுத்து விட வேண்டும் என்பதும் ஒரு யோசனையாகும்.

உண்மையிலேயே, தேசமக்கள் கல்வியினால் அறிவு பெறவேண்டும்; கல்வியினால் பகுத்தறிவு பெறவேண்டும் என்று விரும்புகின்றவர்கள் சமஸ்கிருதக் கல்வியை எடுத்து விடுவது பற்றிக் கொஞ்சமும் கவலையோ, வருத்தமோ அடையமாட்டார்கள். ஏனென் றால் இன்று இந்து மதம் என்று சொல்லும் ஒரு கொடுமையான மதம் இருப்பதற்கும், இந்த இந்து மதத்திலிருந்து பிறந்த ஜாதிக்கொடுமை, சடங்குக்கொள்ளை, கடவுள் முட்டாள் தனம் ஆகியவைகள் கற்றவர்கள் கூட்டத்திலும், கல்லாத வர்கள் கூட்டத்திலும், தலைவிரித்தாடி அவர்கள் உழைப் பையும், அறிவையும், சுதந்திரத்தையும் கொள்ளை கொண்டிருப்பதற்கும் காரணம் சமஸ்கிருதமேயாகும். இன்று வருணாசிரமக்காரர்கள் சனாதன தருமம் காப்பாற்றப்பட வேண்டும் என்று சொல்லுவதற்கும், சுயராஜ்யத்தைவிட சனாதன தருமமும், வருணாசிரம தருமமும் காப்பாற்றப்படுவதே முக்கியமானதென்று சொல்லுவதற்கும் சமஸ்கிருதப் பாஷைப் படிப்பும் அதில் உள்ள நூல்களுமே காரணமாகும்.

தீண்டத்தகாதவர்களைத் தெருவில் நடக்கக் கூடாது; கோயிலுக்குள் செல்லக்கூடாது; குளத்தில் குளிக்கக் கூடாது; பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படிக்கக்கூடாது என்று சொல்லுவதற்கும் காரணம் சமஸ்கிருத நூல்களேயாகும். சாரதா சட்டம் போன்ற சீர்திருத்தச் சட்டங்களைச் செய்யக்கூடாது என்று சொல்லுவதற்கும், பொட்டுக் கட்டு வதைத் தடுக்கும் சட்டம், பிரஜா உற்பத்தியைக் கட்டுபடுத்துவதற்கு உதவியளிக்கும் சட்டம், பெண்கள் சொத்துரிமைச் சட்டம், விவாக விடுதலைச் சட்டம் முதலியவைகளை மத விரோதமானவைகள் என்று கூறித் தடுப்ப தற்கும் திரு. சிவராஜ், பி.ஏ., பி.எல்., எம்.எல்.சி. அவர்களை எங்கும் எதையும் தின்னும் பார்ப் பனர், பார்ப்பனரல்லாதார் கூடிய சென்னை காஸ்மா பாலிட்டன் கிளப்பில் அங்கத்தினராகச் சேர்த்துக்கொள்ள மறுத்ததற்கும் காரணமாயிருப்பவை சமஸ்கிருத நூல்களேயாகும். சீர்திருத்தத்திற்கு விரோதமாகக் கிளர்ச்சி செய்து குரைத்துக் கொண்டு தொண்டை வீங்குகின்ற வர்ணாசிரமக் கூட்டத்தார்கள் எல்லோரும் தங்கள் கொள்கைகளுக்குச் சமஸ்கிருத, வேத, புராண, இதிகாச, ஸ்மிருதிகளையே பிரமாணங்களாகக் காட்டுகின்றனர். அவை என்ன சொல்லுகின்றனவென்று கவனிக்கின் றார்களே ஒழிய தங்கள் அறிவு என்ன சொல்லுகின்றது? உலகப் போக்கு என்ன சொல்லுகின்றது? என்று கொஞ்சங்கூடக் கவனிக்கின்றார்களில்லை. இவ்வாறு கவனிக்கக் கூடிய அறிவு அவர்களிடம் இல் லாதபடி அவர்கள் மூளையை அந்தச் சமஸ்கிருதப் பழங்குப்பைகளாகிய சாஸ்திரங்கள் என்பன உறிஞ்சி விட்டன. ஆகையால் இனி வருங்கால இளைஞர்களின் நல்ல தூய்மையான மூளைகளிலாவது கோளாறு ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் அவர்களிடம் மூட நம்பிக்கைகளும், சுயநலமும் உண்டாகாமல் பகுத்தறிவும், சமதர்ம நோக்கமும் உண்டாக வேண்டுமானால் சமஸ்கிருதக் கல்வியை அடியோடு ஒழிக்க வேண்டியதே முறையாகும்.

ஆனால் நமது நாட்டில் உள்ள சமஸ்கிருதப் புராணக் குப்பைகளாலும் அவைகளைப் பார்த்துச் செய்த தமிழ்ப்புராணக் கூளங்களாலும், குடிகொண்டிருக்கும் மூட நம்பிக் கைகள் போதாதென தேசிய ஆடைகளைப் புனைந்து இந்தி என்னும் பாஷையையும் கொண்டு வந்து நுழைத்துக் கொண்டு பார்ப்பனர்கள் நம் மக்களை ஏமாற்றுகிறார்கள்.

இந்தியைப் பரப்புவதற்காகப் பார்ப்பனர் பிரயாசைப்படுவதற்குக் காரணம் அதன் மூலம் மீண்டும் வருணாசிரம தருமத்தையும், புராண நம்பிக்கை, மத நம்பிக்கை, பிராமண பக்தி, சடங்கு பக்தி முதலியவைகளை விருத்தி செய்து தங்கள் பழைய கவுரவத்தையும், ஏமாற்று வயிற்றுப் பிழைப்பையும் புதுப்பித்துக் கொள்ளலாம் என்பதற்காகவே என்பது சுயமரி யாதைக்காரர்களுக்குத் தெரியாத விஷயமல்ல. ஆகையால் இத்தகைய பார்ப்பனர்கள் இந்த இந்தி பாஷை முதலானவை களுக்கெல்லாம் அடிப்படையாக இருக்கும் சமஸ்கிருதத் தைக் கைவிட சம்மதிப்பார்களா? ஒருக்காலும் சம்மதிக்க மாட்டார்கள்.

ஆகையால்தான் பார்ப்பனர்கள் ஊருக்கு ஊர் கூட்டங்கூடி சென்னை அரசாங்கச் சிக்கனக் கமிட்டியர் பிரசிடென்சி கல்லூரியில் உள்ள சமஸ்கிருத ஆனர்ஸ் வகுப்பை எடுக் கும்படி சிபாரிசு செய்ததைக் கண்டிக் கிறார்கள்.

பொருளாதார நிலையைப் பற்றிய கவலையும் அவர்களுக்கில்லை. எந்தப் பொருளாதாரம் எக்கேடு கெட்டாலும் தங்கள் சுயநலத்திற்குத் துணை செய்கின்ற மதமும் அதற்குச் சாதகமாய் இருப்பவைகளும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதே அவர்களின் கொள்கையாக இருந்து வருகின்றது.

காப்பி கிளப்பு பார்ப்பான், உத்தியோகப் பார்ப்பான், அரசியல் பார்ப்பான், சட்ட மறுப்புச் செய்து ஜெயிலுக்குப் போகும் பார்ப்பான் உள்பட எல்லோரும் இக்கொள் கையைக் கைவிடாமலே வைத்துக் கொண்டு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் ஆகையால் இச்சமயத்தில் நாமும் கிளர்ச்சி செய்ய வேண்டும். பார்ப்பனர்களின் வெறுங் கூச்சல்களுக்குப் பயந்து கொண்டு அரசாங்கத்தார் சிக்கனக்கமிட்டியில் சிபாரிசைக் கைவிட்டு விடக் கூடாதென எச்சரிக்கை செய்யவேண்டும். சில பார்ப்பன ரல்லாதவர் வாலிபர் சங்கங்களிலும், சுயமரியாதைச் சங்கங்களிலும், சிக்கனக் கமிட்டியின் யோசனையைப் பாராட்டியும் இன்னும் சமஸ்கிருத கல்விக்காகக் கொடுக்கும் உபகாரத் தொகையை நிறுத்தும் படியும் தீர்மானங்கள் செய்து அரசாங்கத்திற்கு அனுப்பியிருக்கிறார்கள்.

இவ்வாறே நாடெங் கும் பலத்தீர்மானங்கள் செய்து அரசாங்கத் தாரை எச்சரிக்கை செய்ய வேண்டும். அப் பொழுதுதான் சமஸ்கிருதச் சனியன் ஒழியும்.

17. 01. 1932 - குடிஅரசு

- விடுதலை நாளேடு, 10.3.20

ஞாயிறு, 8 மார்ச், 2020

பழ. அதியமானின் வைக்கமும் ஜெயமோகனின் குதர்க்கமும்

ப.  திருமாவேலன்
பெரிய மகாபாரதத்தை அதனினும் பெரிதாக ‘வெண்முரசு’ கொட்டி வருகிறார் ஜெயமோகன். புனைவை புனைவு ஆக்குவதால் அதில் யாரும் மோதப் போவது இல்லை. இருந்தாலும் அது அந்த 127 பேருக்கான விவகாரம். ‘வெண்முரசு’ அடிப்பது போலவே இன்னொன்றையும் பல ஆண்டுகளாகச் செய்து வருகிறார் ஜெயமோகன். அதுதான் வைக்கம் பற்றிய வன்மமுரசு’. ஏற்கெனவே கிழிந்த தோலை எத்தனை தடவை மொத்தினாலும் சத்தம் வராது. ஆனால் கையில் குழல் இருப்பதால் அதை வைத்து மத்தளத்தை சுரண்டிச் சுரண்டி அவ்வப்போது ஒலி எழுப்பி வருகிறார். இதோ, இப்போது மீண்டும் வன்மமுரசு ஒலிக்கிறது. பழ.அதியமான், ஜெயமோகனைச் சீண்டிவிட்டார்.
பெரியாரிய மதத்துக்குள் (அதைச் சேர்ந்தவன் தான் நான்! அந்த மடாதிபதி, தனது செயலை தானே விமர்சித்துக் கொண்டவர். அடுத்தவர் கேள்விக்கு நிறுத்தி நிதானமாக ஒவ்வொரு கூட்டத் திலும் பதில் சொன்னவர். அந்த மதம் கடவுள் இல்லை என்றதே தவிர எந்தக் கோவிலையும் இடிக்கவில்லை. எந்த மதத்த வரையும் கொல்லவில்லை. எந்தச் சாதியினர் மீதும் அவதூறு செய்ய வில்லை. அவர் ஒரு மதத்தைக் கூட ஏற்படுத்தி விட்டுப் போயி ருக்கலாமோ என்ற அளவுக்கு நல்லவராக வாழ்ந்தார்!) மட்டுமே இதுவரை பேசப்பட்டு வந்த ‘வைக்கம் வீரர்’ பெருமையை பழ.அதியமான் ஆதாரப்பூர்வ மாக ஆக்குகிறாரே என்ற ஆற் றாமை ஒரு பக்கம். அதுவும், திராவிடப் பதிப்பகமாக இல் லாமல் ‘காலச்சுவடு’ இதனை வெளியிட்டு விட்டதே என்ற பொறாமை எல்லாம் கலந்து ஜெயமோகனைச் சிந்தை கலங்க வைத்துள்ளது.
அதனால் 646 பக்க புத்தகத்தை இந்த சிட்டி ரோபோ பாணியில் படித்து விட்டு, ‘வைக்கம்,ஈவெரா,புதிய கழைக் கூத்தாடிகள்’ என்று பழைய வாந்தியை திரும்ப எடுத்துள்ளார் ஜெயமோகன். காலச்சுவடு வெளியிட்ட பழ.அதியமானின், ‘வைக்கம் போராட்டம்‘ என்ற நூலை ஆய்வு நூலாக ஒப்புக்கொள்ளமாட்டாராம் ஜெயமோகன். ஆய்வு என்றால் என்ன என்றே தெரியாத ஜெயமோகனுக்கு இது ஆய்வு நூலாகத் தெரிந்தால் தான் ஆச்சர்யப்பட வேண்டும். பின்னி மில் எங்கே இருக்கிறது என்றே தெரியாமல், ‘வெள்ளையானை’ எழுதுவது தான் அவரைப் பொறுத்தவரை ‘கள ஆய்வு’. இப்படிப்பட்ட கள்ள ஆய்வுகளில் தேர்ந்தவர் அவர்.
சுமார் 10 ஆண்டுகளாக ஒரே கருத்தை திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார் ஜெயமோகன். அதற்கு எதிராகத் தரப்பட்ட எந்த ஆதாரத்தையும் அவரது மூளை ஏற்கவில்லை . திரும்பத் திரும்பத் தான் சொன்னதையே சொல்கிறார் என்றால் ‘மதம்‘ யாருக்கு பிடித்திருக்கிறது?
ஜெ. வைக்கும் வரலாறு!
‘வைக்கம் போராட்டத்தைப் பெரியார் தொடங்கவுமில்லை, நடத்தவு மில்லை, முடிக்கவுமில்லை ‘ என்பது மட்டும்தான் ஜெயமோகன் நிறுவ நினைக்கும் ஒரு வரி வரலாறு. ‘நான் தான் தொடங்கினேன், நான் நடத்தினேன் , நானே முடித்தேன்’ என்று பெரியாரும் சொல்லவில்லை. வைக்கம் வரலாற்றுக் குறிப்பு நூலை எழுதிய திராவிடர் கழகத் தலைவர்
கி.வீரமணியும் எழுதவில்லை. தான் வைக்கம் செல்வதற்கு முன்னால் அங்கு யாரெல்லாம் போராடி வந்தார்கள் என்பது பெரியாரின் பேச்சுகளில் இருக்கிறது. கி.வீரமணியின் நூல்களிலும் இருக்கிறது. ஆனால் ‘பெரியார் மட்டும்தான்’ என்று சொல்லிக்கொள்வதாக ஜெயமோகனாகக் கற்பனை செய்துகொள்கிறார். கேட்டால், ‘தமிழ்நாட்டுப் பள்ளி பாடப்புத்தகங்களில் இருக்கிறது’ என்கிறார். அவரது வரலாற்று அறிவு, ஒன்பதாம் வகுப்பு பாடப்புத்தகங்களோடு நின்று விட்டதற்கு நாம் பொறுப்பாக முடியாது. பாடப்புத்தகங்கள் எந்தத் தலைவரைப் பற்றிய கட்டுரையோ அந்தத் தலை வரைத் தான் புகழ்ந்து எழுதும். அதன் தன்மை அதுதான்.
‘வைக்கம் வீரர்’ என்கிறார்களே என்று தனது வயிற்றில் தானே அடித்துக் கொள்கிறார் ஜெயமோகன். ‘வைக்கம் வீரர்’ என்று பெரியாரை முதலில் அழைத்தது திராவிடர் கழகத்தவர் அல்ல. சுயமரியாதை இயக்கத்தைப் பெரியார் தொடங்குவ தற்கு முன்பே, பெரியார் காங்கிரஸ் இயக்கத்தில் இருக்கும் போதே திரு,வி.க. தான் அவரை வைக்கம் வீரர்’ என்றவர். இவர் பெரியாரின் மதத்தைச் சேர்ந்தவர் அல்ல.
‘திருவனந்தபுரம் சிறையில் இருக்கும் தீரரைத் தமிழ்நாடு பாராட்டு கிறது’ என்று எழுதியவர் இராஜாஜி. ( சுதேசமித்திரன் 26.6.1924). இவர் பெரியாரை வீழ்த்தும் மதத்தைச் சேர்ந்தவர் என்ற வரலாறு ஜெயமோகனுக்குத் தெரிந்திருக்கும்.
‘தொடங்கவுமில்லை, நடத்தவுமில்லை , முடிக்கவுமில்லை’ என்ற வார்த்தைகளில் வரலாற்று மறுப்பைப் பின்னர் சொல் கிறேன். முதலில் இந்த விமர்சனமே வரலாற்றறிவு அற்றது.
வீரபாண்டிய கட்டபொம்மன், இந்திய சுதந்திரப் போராட்டத்தைத் தொடங்கவுமில்லை, தலைமையேற்று நடத்தவுமில்லை, முடிக்கவுமில்லை. அதற்காக அவர் சுதந்திரப் போராட்ட வீரர் அல்ல என்பாரா?
நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ், இந்திய சுதந்திரப் போராட்டத்தை தொடங்கவுமில்லை, தலைமை யேற்று நடத்தவுமில்லை, முடிக்கவு மில்லை. அதற்காக அவர் சுதந்திரப் போராட்ட வீரர் அல்ல என்பாரா?
வ.உ.சிதம்பரனார், இந்திய சுதந் திரப் போராட்டத்தை தொடங்கவு மில்லை, தலைமையேற்று நடத்தவு மில்லை, முடிக்கவுமில்லை, அதற் காக அவர் சுதந்திரப் போராட்ட வீரர் அல்ல என்பாரா?
என்ன அபத்தம்? யாரெல்லாம் வரலாறு எழுத வந்துவிடுகிறார்கள்? 1947 ஆகஸ்ட் 15 அன்று இவர்கள் மூவருமே உயிரோடு இல்லை. என்ன செய்யலாம்? வரலாற்றில் அவர்களது பங்களிப்பை எவ்வாறு அளவிடுவது? அவர்கள் வாழ்ந்த காலத்தில் ‘இந்திய சுதந்திரம்‘ என்ற கருத்தாக்கத்துக்காக என்ன செய் தார்கள் என்று அளவிட்டுச் சொல்ல வேண்டும். அதேபோல அளவிட்டால் பெரியார், வைக்கம் வீரர்’ தான். தமிழ்நாட்டின் தீரர் தான்!
தொடங்கினாரா?
வைக்கம் போராட்டத்தை பெரியார் தொடங்கினாரா? இல்லை ! அப்படி அவரே சொல்லவில்லை!
வைக்கம் - என்பது அன்றைய சென்னை மாகாணத்தில் இல்லை. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தது. அந்தப் போராட்டத்தைத் தொடங்கியவர்கள் பட்டியல் பெரிது. போராட்டத்தில் கைதானவர்களைப் பாருங்கள். அவர்கள் தான் அதனைத்தொடங்கியவர்கள். முழு முதல் காரணம் டி.கே.மாதவன். இவர் தான் அரீநாராயண தர்ம பரிபாலன இயக்கத் தொண்டர். 1915 முதல் கேரளாவில் தீண்டாமைக்கு எதிராகப் போராடியவர்.
1924 ஜனவரி மாதம் எர்ணாகுளத்தில் கூடிய கேரள மாநில காங்கிரஸ் கூட்டத்தில் ‘கேரள மாநில தீண்டாமை ஒழிப்புக் குழு’ அமைக்கப்பட்டது. பிரச்சாரக் குழுவும் அமைக்கப் பட்டது.  ‘பொது இடங்களைப் பயன்படுத்துவதில் தடை கூடாது’ என்ற தீர்மானத்தை இவர்கள் கொல்லம் சுயராஜ்யா ஆசிரமத்தில் கூடி எடுக்கிறார்கள். வைக்கம் மகாதேவன் கோவில் தெருவில் அனைத்து ஜாதியினரும் மார்ச் 30ஆம் நாள் செல்லலாம் என்று தீர்மானிக்கப்படுகிறது. 30ஆம் தேதி மூன்று பேர் கைது. 31ஆம் தேதி மூன்று பேர் கைது. ஏப்ரல் 1,2 போராட்டம் இல்லை . அதிலிருந்து வரிசையாக கேசவமேனன், டி.கே.மாதவன்(7ஆம் தேதி), ஏ.கே.பிள்ளை, கேளப்பன் நாயர், வேலாயுதமேனன்(9ஆம் தேதி), சாத்துக் குட்டி நாயர், கிருஷ்ணன் பாச்சன், நாராயணன் ( 10ஆம் தேதி) வி.ஆர்.பிள்ளை, ஜிதான் நாயர், வி.கே. தாஸ், கே.ராகவன், பத்மநாபன், ராமதாஸ், ஜார்ஜ் ஜோசப், கே.ஜி.நாயர், பி.டபிள்யூ.செபஸ்தியான் (11ஆம் தேதி), சாத்துக்குட்டி நாயர், கிருஷ்ணன்பாச்சான், நாராயணன்( 12ஆம் தேதி) ஆகியோர் வரிசையாக கைதாகிறார்கள். சிறையில் அடைக்கப்பட்டார்கள். இந்த நிலையில் தான் பெரியார் கேரளாவுக்குள் நுழைகிறார்.பெரியாரின் ஒரு பொதுக்கூட்ட பேச்சில்கூட இது விரிவாக உள்ளது. எனவே, பெரியார் தொடங்கியதாக அவரது மதத்தைச் சேர்ந்தவர்கள் சொல்லவில்லை. அதுவே ஜெய மோகனின் கற்பனை!
தொடர்ந்து நடத்தினாரா?
ஆம்! கேசவமேனனும், ஜார்ஜ் ஜோசப்பும் பெரியாருக்கு எழுதிய ரகசியக் கடிதம், பெரியாருக்கு கிடைக்கிறது. 13ஆம் தேதி பெரியார் வைக்கம் வந்துவிடுகிறார். அதாவது போராட்டம் தொடங்கிய 15ஆவது நாள் பெரியார் வைக்கம் வந்துவிடுகிறார்.
மிக முக்கியமான கேரளத் தலைவர்கள் அனைவரும் சிறைக்குள் இருந்ததால் முன்னர் அமைக்கப்பட்ட தீண்டாமை ஒழிப்புக் குழு மாற்றி அமைக்கப்பட்டது. அந்தக் குழுவில் பெரியார், மன்னத்து பத்மநாப பிள்ளை, சிஷ்ஷேடத்து சங்கு பிள்ளை, கோயமுத்தூர் அப்துல் ரகீம் ஆகியோர் இருந்தனர். இவர்களது முயற்சியால் கே.ஜி.குஞ்சுகிருஷ்ண பிள்ளை தலைமையில் திருவனந்தபுரத்தில் மாநாடு நடந்தது. அதில் பெரியார் மூன்று மணிநேரம் பேசி இருக்கிறார். அவரது பேச்சை 13.4.1924 தேதியிட்ட ‘கேரள கவுமுதி’ வெளியிட்டுள்ளது. அதனை மொழிபெயர்த்துள்ளார் த.அமலா. (வைக்கம் நினைவலைகள் பக்கம் 65- 70) ‘கேரளாவில் வெளியான அக்காலத்திய நாளிதழ் ஆதாரங்களில் அநேகமாக எங்குமே ஈவெராவின் பெயர் காணப்படவில்லை’ என்று இந்த சிட்டி ரோபோ சொல்கிறார்( வைக்கம் குறித்த டிசம்பர் 26, 2013 கட்டுரையில்!) அவர் த.அமலாவின் புத்தகத்தை பார்க்கவேண்டும். ஏனென்றால், இவர், கேரள கவுமுதி, மலையாள மனோரமா, தேசாபிமானி, மாத்ருபூமி ஆகிய கேரள இதழ்களை பார்த்துத்தான் இந்தப் புத்தகத்தையே எழுதி இருக்கிறார். ஒருவேளை ஜெயமோகன் சொல்லும் கேரளம் வேறு எங்காவது இருக்கிறதா எனத் தெரியவில்லை.
பெரியாரையும் உள்ளடக்கிய குழு தான் ஏப்ரல் 18 அன்று திருவனந்தபுரத்தில் பந்த் நடத்த முடிவெடுத்தது. சத்தியாகிரகத்தின் தலைமையகத்தை கொச்சிக்கு மாற்றியதும் இக்குழு தான். டி.ஆர். கிருஷ்ணசாமி அய்யரிடம் தலைமைப் பொறுப்பை வழங்கியதும் இக்குழுதான். ஏப்ரல் 25ஆம் தேதி அன்று டி.ஆர்.கிருஷ்ணசாமி அய்யர் கைது ஆகிறார். . அன்று மாலையில் கொச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பெரியார், குரூர் நீலகண்டன் நம்பூதிரிபாடு,சி.குட்டன் நாயர், டாக்டர் நாயுடு ஆகியோர் அக்கூட்டத்தில் பேசினார்கள். 'மகாராச திருமனசின் குடிமக்களான பல இனத்தவரிலேயே பகைமையை வளர்க்கிறார்கள்’ என்று குற்றம் சாட்டப்பட்டு பெரியாருக்கும், கோவை அய்யாமுத்துவுக்கும், மாவட்ட நீதிபதி பேச்சுரிமைத் தடை விதிக்கிறார். இன்னொரு மாவட்ட நீதிபதியும் தடை உத்தரவு விதிக்கிறார். மே 8 அன்று நடந்த நாயர் - ஈழவர் கூட்டத்தில் பெரியார் கலந்து கொள்கிறார். மே 13ஆம் தேதி பெரியாருக்கு மீண்டும் கோட்டயம் நீதிபதி பேச்சுரிமை தடை போடுகிறார்.இரண்டு முறை தடையுத் தரவை மீறவில்லை. மீறவேண்டாம் என்று இராஜாஜி கடிதம் அனுப்புகிறார். ஆனால் மூன்றாவது முறை மீறிப் பேசுகிறார். ‘நான் மீற வேண்டியவனாக இருக்கிறேன்’ என்று கோட்டாறு நீதிபதிக்கு கடிதம் அனுப்புகிறார் பெரியார். மே 21 அன்று வைக்கம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் படுகிறது. அருவிக்குத்தி சிறையில் ஒரு மாத காலம் பெரியார் இருந்தார். தண்டனை முடிந்து ஜூன் 21 அன்று விடுதலை யானார். திருவனந்தபுரம், கோட்டயம் மாவட்டத்தில் பேசக்கூடாது என்று ஜூன் 24 அன்று தடை நீடிக்கப்பட்டது. அவரை வெளி யேற்ற ஜூலை 1ஆம் தேதி உத்தரவு போடப்பட்டது. இதை மீறியதற்காக ஜூலை 5 அவரைக் கைது செய்வ தற்கான உத்தரவு போடப்பட்டது . அதற்கு முந்தைய நாள் ஈரோடு சென்றார் பெரியார். அங்கேயே தங்கி விட வில்லை . ‘ தலைமறைவு’  ஆகி விட வில்லை . ஜூலை 10ஆம் தேதி மீண்டும் கேரளா வருகிறார். 18ஆம் தேதி நடந்த கூட்டத் தில் பேசுகிறார். இவர் மீதான இரண் டாவது வழக்கு ஜூலை 27ஆம் தேதி விசாரிக்கப்பட்டு நான்கு மாத கடுங்காவல் தண்டனை தரப்படுகிறது.  கோட்டயம், திருவனந்தபுரம் சிறையில் வைக்கப்பட்ட பெரியார் செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். செப்டம்பர் 9ஆம் தேதி ஈரோடு வந்துவிட்டார்.
அதாவது ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி வைக்கம் போராட்டம் தொடங்குகிறது. அதற்கு 15 நாள் கழித்து அதாவது 13.4.1924 அன்று கேரளா வருகிறார் பெரியார். சுமார் அய்ந்து மாத காலம் வைக்கம் போராட்டத்தை ‘நடத்துகிறார்’. இதில் 22.5.1924 முதல் 21.6.1924 வரையிலும், 27.7.1924 முதல் 1.9.1924 வரையிலும் சுமார் இரண்டு மாதங்களுக்கு மேல் சிறையிலும் இருக்கிறார்.
சரியாகச் சொன்னால் வைக்கம் போராட்டத்தின் முதல் காலக்கட்ட மான 30.3.1924 முதல் 1.9.1924 வரையிலான காலக்கட்டத்தில் முதல் 13 நாளும், இடையில் 6 நாளும் தான் அவர் கேரளாவில் இல்லை. கேரளாவை சேர்ந்தவர்களைத் தவிர மற்றவர்கள் வெளியேற வேண்டும் என்று காந்தி உத்தர விட்டார், இராஜாஜி கடிதம் அனுப்பி வரச்சொல்லிவிட்டார். இந்த இரண்டு காரணங்களால் பெரியார் அங்கிருந்து வெளியே வந்துவிட்டார். அவ்வளவுதான். காந்தி சொல்ல வில்லை என்றால் பெரியார் அங்குதான் இருந்திருப்பார்.
இதன் பிறகும் சொல்வீர்களா? ‘வைக்கம் போராட்டத்தை அவர் நடத்தவில்லை’ என்று?
முடித்து வைத்தாரா?
ஆம்!
‘வைக்கம் போராட்டத்தை பெரியார் முடிக்கவில்லை’ என்பது ஜெயமோகன் கண்டுபிடிப்பு.
1925ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதிதான் வைக்கம் போராட்டத்துக்கு முழு வெற்றி கிடைத்தது.
பெரியார் வைக்கத்தில் இருந்து புறப்பட்டது 1924 செப்டம்பர். அதே ஆண்டு டிசம்பரில் பெல்காம் காங்கிரஸ் மாநாட்டுக்கு பெரியார், டி,கே.மாதவன், குரூர் நீலகண்டன் நம்பூதிபாடு,சத்ய விரத சுவாமிகள் ஆகியோர் சென்றனர். அதில் டி.கே.மாதவன், குரூப் நீலகண்டன், குஞ்சு கிருஷ்ண பிள்ளை ஆகியோர் மட்டும் தான் காந்தியைச் சந்தித்தார்கள். மற்றவர்கள் முன்கூட்டியே திரும்பி விட்டார்கள். 1925ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் நாள் வைக்கம் வந்தார் காந்தி. சவர்ண இந்துக்கள் 17 பேருடன் பேசினார். எத்தகைய ஜாதி வன்மம் தலைதூக்கிய சமூகமாக கேரளா இருந்தது என்பதை த.அமலாவின் மொழிபெயர்ப்பில் படிக்கலாம். (பக்கம் 99- 132) மார்ச் 12 ராணியைச் சந்தித்தார் காந்தி. அன்றைய தினம் நாராயணகுருவைச் சந்தித்தார் காந்தி. அந்த நேரத்தில் பெரியாரும் அங்கு தான் இருந்தார். 13ஆம் தேதி ராணியைச் சந்திக்கச் சென்றார் காந்தி. அவரோடு இராஜாஜியும் இருந்தார். பெரியாரும் சேர்ந்து மூவரும்தான் ராணியின் பங்களாவுக்கு சென்றார்கள். ஆனால் பாதியில் இறங்கிக்கொண்டார் பெரியார்.
‘நாங்கள் சாலையைத் திறந்து கொடுக்கிறோம். ஆனால் அடுத்ததாக கோவிலுக்குள் நுழைவோம்‘  என்கிறார் ராமசாமி நாயக்கர். அவர் அதைச் செய்யக்கூடாது. ‘கோவில் நுழைவுக் கிளர்ச்சியை அவர் செய்யாவிட்டால் இப்போதே தடையை நீக்கிவிடுகிறேன்’ என்றார் ராணி. உடனே காந்தி, பெரியார் தங்கி இருந்த இடத்துக்கு வருகிறார். பெரியாரிடம் கேட்கிறார். ‘நமது லட்சியம் கோவில் வரை தானே? தெருவிலே போவதால் என்ன ஆகும்? இந்தப் பேதம் ஒழிவதற்குத்தானே கிளர்ச்சி செய்கிறோம். ஆனால் நாம் இப்பொழுது இதைப் பற்றி அழுத்தம் கொடுக்கப் போவது இல்லை. மக்களை அதற்கு பக்குவப்படுத்தித்தான் செய்ய வேண்டும்‘ என்கிறார் பெரியார். ‘இதை ராணிக்கு சொல்லி விடலாமா?’ என்று கேட்கிறார் காந்தி. சரி என்கிறார் பெரியார். மீண்டும் ராணியை சந்திக்கிறார் காந்தி. ‘இப்போதைக்கு கோவில் நுழைவு இல்லை’ என்கிறார் காந்தி,
17ஆம் தேதி கவிஞர் வள்ளத்தோள் - காந்தி சந்திப்பு நடக்கிறது. 18ஆம் தேதி காவல்துறை ஆணையருக்கு காந்தி கடிதம் எழுதி, ‘வைக்கம் சாலைக்கான தடையை நீக்குங்கள்’ என்று கோரிக்கை வைக்கிறார். அன்றைய தினம் 18.3.1925 அன்று வைக்கம் சாலையில் அனைவரும் செல்லலாம் என்று அரசு அறிவிக்கிறது. ஆனாலும் தடை நீடிக்கிறது. கிழக்கு பாதை நீங்கலாக மற்ற பாதையில் செல்லலாம் என்கிறார்கள். அதன்பிறகு அந்தத் தடையும் 1925 நவம்பர் 21ஆம் நாள் உடைகிறது.
இதன்படி பார்த்தால் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை காந்திக்கும் ராணிக்கும் நடக்கும் போது பெரியாரும் கேர ளாவில் தான் இருந்து முடித்து வைத் துள்ளார். வைக்கம் சத்தியாகிரகம் முடி வுற்றதாக அதிகாரப்பூர்வமாக 23.11.1925 அன்று அறிவிக்கப்படுகிறது. இந்த சத்தியாகிரகத்தின் வெற்றி விழா 27.11.1925 அன்று வைக்கம் சத்தியாகிரக ஆசிர மத்தில் நடந்தது. அதற்கு பெரியாரும், நாகம்மாளும் வரவழைக்கப் பட்டார்கள். கூட்டத்துக்கு பெரியார் தலைமை வகிக்க வேண்டும் என்று முன்மொழிந்தவர் கேளப்பன் நாயர். ‘நான் தலைமை தாங்க வரவில்லை, உங்கள் அனைவரையும் பார்க்கவே வந்தேன்’ என்றார் பெரியார். அதில் பெரியார் பேசுகிறார். மற்றவர்களும் பேசுகிறார்கள். ‘தமிழகப் பிராமணர்கள் தான் இந்த தடையை நீக்க தடையாக இருந்தார்கள்’ என்று பலரும் பேசி இருக்கிறார்கள்.பெரியார் முன்பு தான் இவை நடந்துள்ளன.
இதற்கு என்ன பெயர்? முடித்து வைப்பதுதானே ஜெயமோகன்?
அதியமான் மீது ஆத்திரம் ஏன்?
பழ.அதியமான் மீது ஆத்திரம் வரக் காரணம்.. இது வரை ஜெயமோகன் சொல்லி வந்த மேம்போக்கான ‘சோஷியல் மீடியா வகைப்பட்ட’ வரலாற்றை இனியும் தொடர விடாமல் செய்துவிட்டாரே என்ற வருத்தம்தான். சோஷியல் மீடியாவில் எதையும் சொல்லலாம். ஆதாரம் தரத் தேவையில்லை. அந்த வழி தான், ஜெயமோகன் வகைப்பட்டவர்களின் வரலாறு எழுதும் முறை.
வைக்கம் போராட்டத்துக்கும், பெரியாருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று முதலில் முழங்கிய ஜெய மோகனை, ‘பெரியாரும் பங்கெடுத்தார்’ என்று சொல்ல வைத்துவிட்டார் பழ.அதியமான். அதுதான் ஜெயமோகன் கதறக் காரணம்.
2010 ஜனவரி 17ஆம் நாள் ‘வைக்கம்‘ குறித்த  ஜெய மோகனின் பதிவுக்கும் 2020 ஜனவரி 16ஆம் நாள் பதிவுக்கும் நிறைய வேறுபாடுகள்.
2010இல் ஜெயமோகன் ‘வைக்கம்‘ வரலாறு என்ன சொன்னது என்றால்: 'ஈவெரா தனது மனைவி நாகம்மாளுடன் வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டார். அவர் தமிழ்நாட்டில் இருந்து எந்த ஓர் அமைப்பின் சார்பிலும் வரவில்லை . அவருக்கு தொண்டர் பின்புலமும் அன்று இருக்கவில்லை. ஈவெரா, அன்று கைதானவர்களில் ஒருவர் மட்டுமே. அவர் முக்கியமானவராக அன்று கருதப்படவில்லை . அப்போது அவருக்கு 45 வயதுதான். தமிழக அரசியலில் கூட அவரது இடம் என ஏதும் இருக்கவில்லை . கேரளாவில் வெளியான அக்காலத்திய நாளிதழ் ஆவணங்களில் அநேகமாக எங்குமே ஈவெராவின் பெயர் காணப்படவில்லை. டி.கே.மாதவன் வாழ்க்கை வரலாற்றில் அவர் பெயர் இல்லை.
யங் இந்தியாவில் அவர் பெயர் இல்லை’ - இது 2010இல் ஜெயமோகன்!
2013 டிசம்பர் 26 அன்று ஜெயமோகனின் ‘வைக்கம்‘ வரலாறு என்ன சொன்னது இதுதான்: ‘வைக்கம் போராட்டத்தை ஈவெரா தொடங்கவில்லை, தலைமை தாங்கி நடத்தவில்லை, முடிக்கவில்லை. அதில் பங்குபெற்றார். அவரது பங்களிப்பு அதில் சிறியதே. அவரே நடத்தினார் என்று சொல்லக்கூடாது’ - இது 2013இல் ஜெயமோகன்.
பழ.அதியமான் புத்தகம் வெளிவந்தபிறகு 2020 ஜனவரி 16 அன்று ஜெயமோகன் ‘வைக்கம்‘ வரலாறு என்ன சொன்னது என்றால் இதுதான்:
‘ஈ.வெ.ரா வைக்கம் போராட்டத்தில் பங்கெடுத்தார். போராடினார். மெட்ராஸ் மாகாண காங்கிரசு சார்பில் இங்கிருந்து சென்றவர்களில் ஒருவர் ஈவெரா. அவரே முதல்வர் என்றோ , இவர்களைவிட ஈவெராவின் பங்களிப்பு சற்றே மேல் என்றோ அவருடைய ஆதரவாளர்கள் சொல்வதில்கூட எனக்கு மாற்றுச்சொல் இல்லை. ஈவெரா சிறை சென்றவர் என்பது உண்மை. அவரைவிட சிறை சென்றவர் அதிகம். கேரள முன்னணி போராளிகள் சிறை சென்றமையால் தான் மெட்ராஸ் மாகாணத்தவர் செல்ல நேர்ந்தது. தமிழகத்திலிருந்து காங்கிரஸ் கமிட்டி சார்பில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் ஈவெரா. அவருடைய பங்களிப்பு அவ்வகையிலேயே. அது அவருடைய இளமை வீச்சால் ஆற்றல் கொண்டதாக இருக்கலாம். வைக்கம் போராட்டம் முடிவுக்கு வருவதற்கு முன்னரே ஈவெரா தமிழகம் திரும்பி விட்டார். அவர் அதன் பின் ஆர்வம் காட்டவில்லை.
தமிழகப் பாடநூல்களில் அவர் தான் போராட்டம் நடத்தினார் என்று இருக்கிறது. வைக்கத்தில் பெரியார் பங்கு முக்கியமானது. அதில் சந்தேகம் இல்லை . அன்று தமிழகத்தில் இருந்து சென்ற எம்.பெருமாள் நாயுடு, கோவை அய்யாமுத்து ஆகிய மூன்று தலைவர்களில் முக்கியமானவர் பெரியார்.’
- இது 2020இல் ஜெயமோகன்.
வைக்கம் போராட்டத்தில் கைதானவர்களில் பெரியாரும் ஒருவர் என்கிறார் 2010இல். ‘பெரியாரின் பங்களிப்பு சிறியதே’ என்கிறார் 2013இல். ‘பெரியார் பங்களிப்பு சற்றே மேல், சிறை சென்றார், காங்கிரஸ் கட்சி சார்பில் வந்தார், இளமை வீச்சால் ஆற்றல் பெற்றவராக இருந்தார், பெரியாரின் பங்கு முக்கியமானது, தமிழகத்தில் இருந்து வந்த மூன்று பேரில் முக்கியமானவர்’ என்கிறார் ஜெயமோகன் 2020இல். இது தான் பழ.அதியமான் புத்தகத்தின் வெற்றி. இப்படிச் சொல்லித் தொலைக்க வேண்டியதாக இருக்கிறதே என்ற கோபம்தான் ‘இது ஆய்வு நூல் அல்ல’ என்று அவரைச் சொல்ல வைக்கிறது.
பெரியார் மதம் சாராத ஆதாரங்கள்
திருவனந்தபுரத்தில் உள்ள கேரள பல்கலைக் கழக வரலாற்று பேராசிரியர் டாக்டர் டி.கே. இரவீந்திரன்     eight furlongs of freedom
என்ற ஆய்வு நூலை 1980இல் எழுதி வெளியிட்டார். கேரள அரசாங்கத்தின் ஆவணக் காப்பகத்தில் உள்ள தரவுகளைக்கொண்டு எழுதப்பட்ட நூல் இது. 1924ஆம் ஆண்டு காவல்துறை குறிப்புகளை வைத்து இந்நூலை எழுதி இருக்கிறார் டி.கே.இரவீந்திரன். இவர் தமிழருமல்ல, பெரியார் மதம் சார்ந்தவரும் அல்ல. திருவிதாங்கூர் கவர்னர் ஜெனரலின்  ஏஜெண்டாக இருந்த சி.டபிள்யூ.இ.காட்டன், அன்றைய சென்னை ராஜதானி தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதுகிறார். அதனை ரவீந்திரன் தனது நூலில் குறிப்பிடுகிறார். இந்தக் கடிதத்தை இணைப்பாகவும் கொடுத்திருக்கிறார் ரவீந்திரன்.
‘தீண்டாமை எதிர்ப்புக் குழுவில் இடம்பெற்ற முக்கியத் தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறை யிலடைக்கப்பட்ட பின்னால் பல்வேறு இடங்களில் இருந்து தலைவர்களும் தொண்டர்களும் கேரளாவை நோக்கி வரத் தொடங்கினார்கள்’ என்று எழுதிவிட்டு தனது நூலில் ஒரு அடிக்குறிப்பு போடுகிறார் ரவீந்திரன்.
‘ஈவெராமசாமி நாயக்கர், அய்யா முத்து கவுண்டர், மற்றும் எம் பெருமாள் நாயுடு போன்ற தமிழகத் தலைவர்கள் சத்தியாகிரகத்தில் பங்கேற்று கைது செய்யப்பட்டனர். இதில் ராமசாமி நாயக்கரின் பேச்சு திருவிதாங்கூர் மக்களை ஈர்ப்பதாக இருந்தது’ என்று எழுதுகிறார் ரவீந்திரன்.
‘’ஒரு சிக்கலான நேரத்தில்தான் சென்னை ராஜதானியில் இருந்து தலைவர்கள் வந்தார்கள். .... சத்தியாகிரகிகளுக்கு ஆதரவும் பணமும் இயக்கத்தை நடத்தும் தலைமையும் சென்னையிலிருந்து கிடைத்தது. ஈவெராமசாமி நாயக்கர் இந்த இயக்கத்துக்கு புத்துயிர் ஊட்டினார். கேரளாவுக்கு வருவதற்கு முன் அவர் தமிழ்நாட்டு மக்களுக்கு அறிக்கை வெளியிட்டார். உணர்வுபூர்வமான அறிக்கை இது.....
அவரின் உணர்ச்சிபூர்வமான பேச்சுகள் வைக்கத்தின் சுற்று வட்டாரத்திலும், திருவிதாங்கூரின் பகுதிகளிலும் உள்ள மக்கள் மத்தியில் ஒலித்தது. தர்க்கமாகவும் உறுதியாகவும் அவர் வைத்த வாதங்கள் மனத்தடுமாற்றம் உள்ளவர்களைக்கூட போராட்டத்தின் பக்கம் இழுத்தது.... ராமசாமி நாயக்கர் பேச்சு குறிப்பாகச் சொன்னால் மக்கள் மத்தியில் பதியக்கூடியதாக இருந்தது. திருவிதாங்கூர் அரசின் மதிப்பையே குலைக்கக்கூடியதாக இருந்தது. எனவே அவர் பலமுறை கைது செய்யப்பட்டார்” என்று தனது நூலின் பல்வேறு பக்கங்களில் (63,67,87,88,89,90,115,) ரவீந்திரன் எழுதுகிறார்.
வைக்கம் போராட்டம் குறித்து தனது ‘கடந்த காலம்‘ என்ற நூலில் பெரியாரைக் குறிப்பிடுகிறார் கே.பி.கேசவமேனன். அவரே ‘பந்தனத்தில் நின்னு’ என்ற நூலை மலையாளத்தில் எழுதினார். அதாவது ‘தளைகளைவிட்டு’ என்ற நூலில், கேசவமேனன் சொல்லும் சொற்களைக் கவனியுங்கள்:
“.... தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், ஈரோடு முனிசிபல் கவுன்சிலின் சேர்மனுமாக இருந்தவரும், ஒரு பெரும் பணக்காரரும், உத்தம தேசாபிமானியுமான நாயக்கரின் காலில் சங்கிலிகளும், கைதிகளது தொப்பியும், முழங்கால் வரையிலான வேட்டியும் கழுத்தில் மரக்கட்டையும் மாட்டி கொள்ளைக்காரர்கள் மற்றும் கொலைகாரர்களுடன் ஒன்றாக வேலைக்குச் செல்வதைக் கண்டு கேரளாவின் தீண்டாமைச் ஜாதிக்காரர்களது சுதந்திரத்துக்காக தமிழ் நாட்டின் ஒரு பெரிய மேற்குல இந்துவை, இப்படிப்பட்ட தியாகத்துக்கு உந்திய சிரேஷ்டமான இயக்கத்தின் மகிமை எங்களுக்கு புத்துயிர் தராதிருக்கவில்லை ...( மலையாள நூல் பக்கம் 76, தமிழில் எனது நண்பர் சிவன்).
ஜெயமோகன் எதிர்பார்ப்பைக் கேசவமேனன் பூர்த்தி செய்வாரா எனத் தெரியவில்லை. ஆனால் இந்தப் புத்தகத்தை மேற்கோள் காட்டுவதற்கு இன்னொரு முக்கியமான காரணம், வைக்கம் போராட்டம் நடந்து கொண்டு இருக்கும்போதே எழுதப்பட்ட புத்தகம் இது. மாத்ருபூமி பதிப்பகம் 1924இல் முதல் பதிப்பு வெளியிட்டுள்ளது. நூலின் முன்னுரையில் 27.10.1924 என்று தேதி குறிப்பிடுகிறார் மேனன். 1947,1986 ஆண்டுகளில் இது மறுபதிப்பு கண் டுள்ளது.
கும்பா வைக்கம் வரும்போது பெரியார் சாதாரண ஆள் என்று 2000இல் எழுதுகிறார் ஜெயமோகன். ஆனால் கே.பி.கேசவமேனன் என்ன சொல்கிறார் என்பதைக் கவனியுங்கள். பெரியார் யார்? தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர், ஈரோடு முனிசிபல் சேர்மன், பெரும் பணக்காரர், உத்தம தேசாபிமானி, தமிழ் நாட்டின் ஒரு மேற்குல இந்து...’ என்கிறார் மேனன். ஆனால் பெரியார் ஜெயமோக னுக்கு சாதாரணமானவராகத் தெரிகிறார். அவரவர் தரம், அவரவர் பயன்படுத்தும் சொல்லில் வெளிப்படுகிறது.
எல்லா பதிலும் இதில் இருக்கிறது!
‘வைக்கம் பற்றி விரிவாக எழுதி இருக்கிறேன். அதில் ஒரு தகவல் கூட மறுக்கப்படவில்லை ‘ என்று ஜெயமோகன் இன்னமும் கனவு காண்கிறார். அவர் பழ.அதியமான் புத்தகத்தை உண்மையில் படித்திருந்தால் இப்படிச் சொல்ல மாட்டார். ஏனென்றால் வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் பங்களிப்பை நிராகரிக்கும் அத்தனை வாதங்களையும் ஆதாரங்களுடன் மறுக்கிறது. பழ.அதியமான் நூல்.
அதனை, பெரியாரின் மதம் சார்ந்த ஆவணங்களில் இருந்து அல்லாமல் அதற்கு வெளியில் உள்ள ஆதாரங்களை வைத்து உடைக்கிறார் அதியமான். கேரள ஆவணக்காப்பகம், காவல்துறை அறிக்கைகள், கேரள இதழ்கள், இப்போராட்டத்தில் பங்கெடுத்த கேரளியர் பதிவுகள், அந்தக் காலக்கட்டத்து சுதேசமித்திரன், நவசக்தி, நாடார்குலமித்திரன், குமரன் மற்றும் ஆங்கில இந்து நாளிதழ்களை வைத்து எழுதுகிறார் அதியமான். பொத்தாம் பொதுவாக வீண்முரசாக இல்லாமல்!
பெரியார் களத்துக்கு வந்தபிறகு போராட்டத்தை நடத்தினார் என்பதையும், இறுதிப்பேச்சு காலக்கட்டத்தில் வைக்கத்தில் பெரியார் இருந்ததும், வெற்றிவிழாவில் பேசியதும், வெற்றி விழாவுக்குப் பிறகும் அரசு ஆவணங்களில் பெரியார் பெயர் இருப்பதும் அதியமானின் அரிய கண்டுபிடிப்புகள். வர்க்கலையில் காந்தியுடன் பெரியார் இருந்ததை திருவனந்தபுரம் காவல் ஆணையர் அறிக்கையில் இருந்து ஆதாரம் தருகிறார். நாராயணகுருவைக் காந்தி சந்தித்தபோது பெரியார் உடனிருந்ததையும் அதே ஆதாரம் சொல்கிறது. பெரியார் மீதான அனைத்துத் தடையாணை களையும் மன்னர் திரும்பப் பெற்றுள்ளார் 1925 ஆகஸ்ட் 7 இல். அதற்கு காந்தி நன்றி சொல்லி இருக்கிறார். இறுதிக்கட்ட பேச்சுவார்தைக்குப் பிறகு, அனை வருக்கும் பொதுப் பாதையாக திறந்து விட்ட பிறகு தேவஸ்வம் ஆணையர், திருவிதாங்கூர் திவானுக்கு அனுப்பிய கடிதத்தில்
‘இ.ராமஸ்வாமி நாயக்கர்’ என்ற பெயர் இருப்பதை அதியமான் கண்டுபிடித்துக் கொண்டு வந்து போட்டுள்ளார்.
வைக்கம் போராட்ட காலமான 604 நாட்களும் பெரியாரின் தொடர் பங்களிப்பை கொட்டும் போதுதான் அதியமானின் உழைப்பு தெரிகிறது. தன்னை அறிஞராகக் காட்டிக்கொள்ள, ஆய்வாளராகக் காட்டிக்கொள்ள அவர் இந்தப் புத்தகத்தை எழுதவில்லை. பெரியாரை ‘வைக்கம் வீரர்’ என்று நிரூபிக்கத் துடித்த துடிப்பைத்தான் ஒவ்வொரு பக்கமும் பார்க்க முடிகிறது.
இவை அனைத்துக்கும் மேலாகடி.கே.மாதவனின் பதிவுகளில் பெரியார் பெயர் இல்லை என்பாரே ஜெயமோகன்? என்ன பதில் சொல்லலாம். பாவம் டி.கே.மாதவன். அவருக்கு, ஒரு எழுத்தாளன் செத்த ஒரே நாளில் அவருக்கான இரங்கல் நூலை 100 பக்கத்துக்கு எழுதும் வித்தையோ வேகமோ இல்லை. பாவம் டி.கே.மாதவன், வைக்கம் போராட்டம் நடந்த அய்ந்து ஆண்டுகளில் காசநோய் காரணமாக 44 வயதில் இறந்து போனார். அவர் எழுதவில்லை என்றால், பெரியார் பங்கெடுக்கவில்லை என்று பொருளா? இது என்ன வகை வரலாற்று அறம்?
போகிற போக்கில் பொய்கள்!
வைக்கம் பற்றி எழுதும் போது போகிற போக்கில் பல பொய்களையும் அவதூறுகளையும் தூக்கி வீசுகிறார் ஜெயமோகன். அதில் ஒன்று,
‘ஈவெரா வேறு எப்போதும் நீண்ட சிறைவாசம் அனுபவித்தவரல்ல என்பதால் அவருடைய தியாக வாழ்க்கையை இவ்வண்ணம் புனைய வேண்டிய தேவை அவர்களுக்கு உள்ளது’ என்கிறார் ஜெயமோகன். பெரியார் ஏதோ வைக்கம் போராட்டத்தில் மட்டும் தான் சிறை இருந்தது போல எழுதுகிறார். வைக்கத்துக்கு முன்னதாக கள்ளுக்கடை மறியலில் ஒரு மாதம் சிறை ( 1921 நவம்பர்) இருந்தார். வைக்கம் சிறைவாசம் முடிந்த அதே ஆண்டு கதர் பிரச்சாரத்தில் கைதாகி மூன்று மாதம் சென்னை சிறையில் (1924 டிசம்பர்) இருந்தார்.  1927 - 28 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் ரயில்வே ஊழியர் போராட்டத்தின் பொருட்டு கைதானார். ‘குடிஅரசு’ வில் எழுதிய ‘இன்றைய ஆட்சி முறை ஏன் ஒழியவேண்டும்‘ என்ற தலையங்கத்துக்காக 1933ஆம் ஆண்டு கைதாகி கோவை, ராஜபுரம் சிறைகளில் இருந்தார். 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைதாகி ஆறு மாத காலம் சிறையில் இருந்தார். 1948 இந்திப்போராட்டத்தில் இரண்டு முறை கைதானார். 1950 பொன்மொழி நூலுக்காக கைதாகி ஒரு வார காலம் சிறையில் இருந்தார். 1956இல் ராமர் படம் எரிப்பு, 1957 சட்ட எரிப்புப் போராட்டங்களில் கைதானார். 1958இல் குத்துவெட்டு பேச்சு வழக்கில் கைதாகி ஆறு மாத காலம் சிறையில் இருந்தார். யூனியன் படம் எரிப்புப் போரில் முன்னதாக கைது செய்யப்பட்டார் 1960இல்
இது எதையும் தெரிந்து கொள்ள முயற்சிக்காத சுயமோகம், ‘வேறு எப்போதும் நீண்ட சிறைவாசம் அனுபவித்தவரல்ல’ என்று மறைக்கிறார்.
அந்த வகைப்பட்ட அடுத்த அவதூறுதான், ‘வைக்கம் போராட்டம் முடிந்ததுமே இந்திய நிலம் எங்கும் காந்திய இயக்கம் ஆலய நுழைவை ஆரம்பித்தது. எதிலுமே ஈவெரா கலந்து கொள்ளவில்லை என்பது வரலாற்று உண்மை’ என்பதும். காந்திய இயக்கத்தின் ஆலய நுழைவு அரசியலை இங்கு ஆராயப்போவதில்லை. ஆனால் பெரியார் ஆலய நுழைவே செய்யவில்லையா?
1926இல் சுசீந்திரம் ஆலயப் போராட்டத்தில் பெரியார் பங்கெடுத்தார். அந்தக் காலக்கட்டத்து ‘குடிஅரசு’ இதழ்கள் சுசீந்திரம் போர்வாளாகத் திகழ்ந்தன.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஜே.என்.ராமநாதனும், திருவண்ணாமலை கோவிலில் ஜே.எஸ்.கண்ணப்பரும், திருச்சி மலைக்கோட்டை, மாயவரம், திருவானைக்காவல் ஆகிய கோவில்களில் கி.ஆ.பெ.விசுவநாதனும், சென்னை திருவல்லிக்கேணி கோவிலில் எஸ்.தண்டபாணியும், ஈரோடு ஈஸ்வரன் கோவிலில் குத்தூசி குருசாமி ஏற்பாட்டில் மூவரும் நுழைந்த வரலாறுகளை ஜெயமோகன் அறிய மாட்டார்.
ஏனென்றால் அவரது வரலாற்றறிவு பள்ளிக்கூடத்தோடு நின்றுவிட்டது. நாம் என்ன செய்ய முடியும்?
நன்றி: ‘நிலவெளி,’ மார்ச் 2020
 - விடுதலை நாளேடு, 8.3.20

வெள்ளி, 6 மார்ச், 2020

கமுதி ஆலய நுழைவுப் போராட்டம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறு நகர மான கமுதியில்1855 ஆம் ஆண்டு அங்குள்ள அதே ஊரில் அமைந்திருந்த நாடார்கள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் வழிபட உரிமை கோரினார்கள்.

அவர்களது கோரிக்கை மறுக்கப்பட்டது. 1897-ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் நாள் அங்குள்ள கோயில் ஊழியர்களின் எதிர்ப்பை மீறி மேற்கு வாசல் வழியாக நுழைந்து வழி பட்டனர் .இதற்காக ஒரு குற்ற வியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றம் நிரூபிக்கப் படவில்லை. அதைத் தொடர்ந்து கோயில் பரம்பரை அறங்காவலர் ஆன பாஸ்கர சேதுபதி மதுரை உரிமை நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். நாடார்கள் ஆலயத்தி னுள் நுழைந்து விட்டதற்காக கோயில் தீட்டுப் பட்டு விட்டதாகவும் அதற்கு பார்ப்பன புரோ கிதர்களை வைத்து தீட்டுக் கழிக்கும் சடங்கின் செலவிற்காக ரூபாய் 2500 வழங்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டி ருந்தார்.

இந்த வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு 20.7.1899 அன்று தீர்ப்பளித்தது.  அந்தத் தீர்ப்பில் கமுதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆல யத்தில் எந்த பகுதியிலும் நுழைய நாடார்க ளுக்கு உரிமை கிடையாது என்றும், ஆல யத்தை தூய்மைபடுத்தி, தீட்டு கழிக்க ரூபாய் 500 வழங்கும்படிதீர்ப்பளித்தது. மதுரை கிழக்கு சார்பு நீதிமன்றத்தின் பாஸ்கர சேதுபதி எதிர் இருளப்ப நாடார் வழக்கு தமிழக வரலாற் றில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

உயர்நீதிமன்ற மேல் முறையீடு நாடார்க ளுக்கு எதிராக முடிந்ததுமே நாடார்களின் கோயில் நுழைவுக்கு எதிராகவே தீர்ப்பளித்து நாடார்களின் கோயில் நுழைவு முயற்சி கனவா கவே, நாடார் நுழைந்த மேற்கு வாசல் முற்றிலும் அழிக்கப்பட்டு சுவர் எழுப்பப்பட் டது அந்த சுவடுகளை இன்றும் காணலாம்.

- விடுதலை ஞாயிறு மலர் 22 2 20

வியாழன், 5 மார்ச், 2020

வையம் பாராட்டும் வைக்கம் போராட்டம்

-  பேராசிரியர் நம்.சீனிவாசன்

இப்போது தமிழகத்தின் பேசு பொருள் வைக்கம் போராட்டம். பழ. அதியமான் தமிழக ஆய்வாளர்களில் குறிப்பிடத் தக்கவர். பெரியாரின் நண்பர் டாக்டர் வரத ராஜூலுநாயுடு வரலாறு, சேரன்மாதேவி குருகுலப் போராட் டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும், வைக்கம் போராட் டம் என்னும் மூன்று நூல்களைப் படைத்து திராவிட இயக்க வரலாற்றுக்குப் பெரும் பங்கு நல்கியவர். "வைக்கம் போராட் டம்" என்னும் நூல் ஜனவரி மாதம் வெளிவந்தது. திராவிடர் கழகத் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் படிக்கின்றார் - நூலாசிரியர் பழ.அதியமான் அவர்களின் கடும் உழைப்பை வியக்கின்றார். பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் சிறந்த நூலுக்கு ஆண்டுதோறும் பரிசு வழங்குவது வாடிக்கை.

சான்றோர் பெருமக்கள் பல்கலைக்கழகத்தில் நிறுவி யுள்ள அறக்கட்டளைகள் நற்பணிக்குப் பெருந்துணை புரி கின்றன. ஜனவரி மாதம் வெளிவந்த புத்தகத்திற்குப் பிப்ரவரி மாதம் பரிசு வழங்கும் விழா. சாதனைத் தமிழர்களைத் தோளில் தூக்கி வைத்து கொண்டாடும் பண்புடையவர் தமிழர் தலைவர் வீரமணி. பாராட்டுகின்ற பணியை காலம் தாழ்த்தக்கூடாது என்று அய்யா பெரியார் காட்டிய வழியில் மின்னலென முடிவெடுக்கின்றார். பழ.அதியமான் அவர் களுக்குப் பல்கலைக்கழகத்தில் பாராட்டு விழாவாக முகிழ்க் கின்றது.

2020 பிப்ரவரி 27 வியாழக்கிழமை "வைக்கம் போராட் டம்" நூல் படைத்த எழுத்தாளர் பழ.அதியமான் அவர்களுக் குப் பாராட்டுக் கூட்டம். நூல் ஆய்வுரை நிகழ்த்துபவர் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனப் பேராசிரியர் முனைவர் ஆ.இரா.வேங்கடாசலபதி. திராவிட இயக்க உணர்வாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், புத்தகப் பிரியர்கள், பெரியாரின் தொண்டர்கள், அரசியல் விமர்சகர்கள் அத்தனை பேரும் குதூகலித்தனர்.

27ஆம் தேதி விடிகாலை கதிரவன் பொன்கிரணங்களைப் பரப்பி புறப்பட்டபோது பல்கலைக்கழக வேந்தர் நடைப்பயிற்சிக்கு வளாகம் நுழைகிறார். எழுத்தாளர் அதியமான் அவர்களும் பேராசிரியர் வேங்கடாசலபதி அவர்களும், ஆர்வமுடன் நடைப்பயிற்சியில் இணைந்து கொள்கின்றனர். காலைப் பொழுதினிலே கருத்துப் பரிமாற்றம் களைகட்டு கின்றது. வரலாற்றுச் சம்பவங்கள், சமூக நிலை, கல்வித்தரம், எதிர்காலத் திட்டங்கள், இந்திய தேசியத் தலைவர்களின் தொடர்பு என பல தளங்களில் உரையாடல் விரிந்து விரிந்து இன்பமும் பயனும் கூட்டுகின்றன.

அருப்புக்கோட்டை துரை.கைலாசம் நினைவு டி.கே. சுப்பிரமணியம் அறக்கட்டளை, நீதியரசர் டாக்டர் பி.எஸ். சோமசுந்தரம் அறக்கட்டளை, பேராசிரியர் சி.வெள்ளையன் - பொறியாளர் சுந்தரி அறக்கட்டளை ஆகிய அறக்கட்ட ளைகளின் சார்பில் சிறப்புச் சொற்பொழிவும், சிறந்த ஆய்வு நூல் படைத்த பழ.அதியமான் அவர்களுக்குப் பாராட்டுக் கூட்டமும் பல்கலைக்கழக உள்விளையாட்டு அரங்கத்தில் காலை 11 மணிக்குத் தொடங்கியது.

அரங்கம் நிரம்பி வழிந்தது. அறிவார்ந்த கூட்டம் இளம் மாணவர்கள், கற்றறிந்த பேராசிரியர்கள், அலுவலர்கள், பெரியார் தொண்டர்கள் என குழுமி இருந்தனர். பார்வையா ளர்களின் கண்களில் உற்சாகம் மிதந்தது. பல்கலைக்கழக வேந்தர் அரங்கத்திற்குள் நுழைந்தபோது எழுந்து நின்று பலத்த கரவொலி எழுப்பி வரவேற்ற காட்சி மெய்சிலிர்க்க வைக்கும் காட்சியாகும்.

பெரியார் சிந்தனை உயராய்வு மய்ய இயக்குநர் வரவேற் புரையாற்றி வைக்கம் போராட்டத்தை மனக்கண்ணால் மட்டுமின்றி, விழிகளாலும் காட்சிகளாய் கண்டு களிக்க செய்யப்பட்டிருக்கும் ஏற்பாட்டினை எடுத்துரைத்தார். பிரின்ஸ் குழுவினர் "பெரியார்" திரைப்படத்தில் இடம் பெற்ற வைக்கம் காட்சிகளை ஒளிபரப்பினார்கள். மொத்தக் கூட் டமும் சத்தமில்லாமல் மனம் ஒன்றி வைக்கம் காட்சிகளில் கரைந்து போனார்கள். அதனைத் தொடர்ந்து சான்றோர் பெருமக்கள் மேடையை அலங்கரித்தார்கள். துணை வேந் தர் தலைமையுரை நிகழ்த்தினார்கள்.

பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர் கள் நூலாசிரியரை மனந்திறந்து பாராட்டினார். புத்தகத்தின் சிறப்பை நுட்பமாக விளக்கினார். அம்பேத்கர் எடுத்துரைத்த படிக்கட்டு ஜாதி முறையை விளக்கினார். தனஞ்செய் கீர் எழுதிய 'அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு' நூலில் இருந்து வைக்கம் போராட்டத்தின் மகத்துவத்தைச் சுட்டிக் காட்டினார்.

வைக்கம் போராட்டம் 96 ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்ற போராட்டம். இந்தியாவில் மனித உரிமைக் களத்தின் முதல் போராட்டம். 20 மாதங்கள் நடைபெற்ற தொடர் போராட்டம் என்றார். உலகில் எங்கும் கேள்விப் படாத சமூகக் கொடுமையான தெருவில் நடக்கக்கூட கீழ் ஜாதிக்காரர்களுக்கு உரிமை இல்லாத நிலையில் வைக்கம் போராட்டம் நடைபெற்றது. அது சமூகப்புரட்சி, அமைதிப் புரட்சி, அறிவுப்புரட்சி, ரத்தம் சிந்தாப்புரட்சி என்ற பெரு மைக்கு உரிய போராட்டம் என்று அடுக்கினார். போராட் டத்தில் கலந்து கொள்ள பெரியார் ஏழுமுறை வைக்கத்திற்குப் பயணம் மேற்கொண்டதை எடுத்துக்கூறி கேரளாவில் 141 நாட்கள் தங்கி இருந்தார் என்றும், அதில் 74 நாள்கள் சிறையில் இருந்தார் என்றும் கூறினார். இரண்டு முறை கைது செய்யப்பட்ட ஒரே தலைவர் பெரியார்தான் என்றார். வடநாட்டில் போராட்டம் நடைபெற வைக்கம் போராட்டம் விதையாகப் பயன்பட்டிருக்கின்றது. பெரியாரின் கள அனுபவம் கொடுமையானது. பேசத் தடை, பிரவேசத் தடை, தங்குவதற்குத் தடை, சிறைவாசம், சிறப்பு வகுப்பு மறுப்பு, காலில் சங்கிலி, இருமடங்கு வேலை என துன்பங்களைச் சுமந்தவர் பெரியார் என்று வைக்கம் போராட்டத்தைச் சித்திரமாகத் தீட்டினார். பெரியார் திருவனந்தபுரம் சிறையிலிருந்து விடுதலையாகி ஈரோட்டிற்கு வந்தவுடன் ராஜ துவேஷ குற்றத்திற்காக கைது செய்யப்படுகின்றார். அப் போது நாகம்மையார் வெளியிட்ட அறிக்கையில், அவர் திரும்பத் திரும்ப தேச ஊழியத்தின் பொருட்டு சிறைக்குப் போகும் பாக்கியம் பெற வேண்டும் என்றும், அதற்காக அவருக்கு ஆயுள் வளர வேண்டும் என்றும், கடவுளையும், மகாத்மா காந்தியையும் அதற்குப் பிரார்த்திக்கின்றேன் என் றும் பெரியாரின் மனைவி அறிவிக்கின்றார் - அவருடைய துணிச்சல் வியப்புக்குரியது என்றார்.

வைக்கம் போராட்டம் காணமுடியாத வரலாறு; கேட்டி ராத போராட்டம்; எவராலும் குவிக்கப்பட முடியாத வெற்றி என்று கவித்துவமாய் - ரத்தினச் சுருக்கமாய் பொழிந்தார்.

1975ஆம் ஆண்டு வைக்கத்தில் நடைபெற்ற வைக்கம் போராட்ட பொன்விழாக் கூட்டத்தின் தொடக்க விழாவில் பிரதமர் இந்திரா காந்தியும், நிறைவு விழாவில் அன்னை மணியம்மையாரும் கலந்து கொண்டுச் சிறப்பித்ததை நினைவு கூர்ந்தார்.

வைக்கத்தில் தந்தை பெரியார் சிலை திறக்கப்பட்ட சம்பவத்தை வேந்தர் விவரித்தார். எம்.ஜி.ஆரின் துணை வியார் வி.என்.ஜானகி அவர்கள் இடம் வழங்கியதையும், தமிழ்நாடு அரசு, கேரள அரசு இடம் வழங்கியதையும், ஜெயலலிதா அம்மையார் நிகழ்ச்சிக்கு வர இயலாமல் போனதையும், நாவலர் நெடுஞ்செழியன் சிலை திறப்பு செய் ததையும், அக்கூட்டத்திற்கு தாம் தலைமை வகித்ததையும் தம் நினைவுச் சுரங்கத்திலிருந்து வாரி வாரி வழங்கினார்.

விருப்பு - வெறுப்பு இன்றி தரவுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட புத்தகம் என்று மகிழ்ந்துரைத்தார். பெரியாரின் பங்களிப்பு - காந்தியாரின் பங்களிப்பு - அரசாங்கத்தின் பங் களிப்பு - ராஜகோபாலாச்சாரியாரின் பங்களிப்பு என்று எல் லோருடைய பங்களிப்புகளையும் இந்நூல் விளக்குகின்றது என்று சுருக்கமாய்த் தெரிவித்த வேந்தர் அவர்கள் அடுத்த பதிப்பில் புதிய தரவுகளை இணைத்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார். அம்பேத்கர் அவர்கள் வைக்கம் போராட்டம் குறித்து கூறிய வாசகங்களை அவருடைய ஆங்கில நடையிலேயே தாருங்கள் என்று கூறியதோடு 1925ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் வைக்கம் போராட்டத்தை - தந்தை பெரியாரைப் பாராட்டி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இணைத்துக் கொள்ளுங்கள் என்றார். ஆய்வு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்நூல் சான்று ஆவணம் என்று பாராட்டுப் பத்திரம் வழங்கி உரையை நிறைவு செய்த வேந்தர், சிறந்த நூலாகத் தேர்வு செய்யப்பட்ட "வைக்கம் போராட்டம்" புத்தகம் படைத்த பழ.அதியமான் அவர்களுக்கு 25,000 ரூபாய்க்கான காசோலையினை வழங்கினார்.

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனப் பேராசிரியர் முனைவர் ஆ.இரா.வேங்கடாசலபதி தம் ஆய்வுரையில், உண்மை அறிஞர்களைப் பாராட்டாமல் மறந்து போகின்ற சமூகம் பின் தங்கிப்போகும் என்றார். காந்தியடிகள் தென் னாப்பிரிக்காவிலிருந்து 1915இல் இந்தியா திரும்பிய பின் முதல் முறையாக, 'சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக நடத்திய போராட்டம் வைக்கம் போராட்டம்' என்று குறிப்பிட்டார். எதிரிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படுகின்றதா? அல்லது நம்மை நோக்கியே போராட்டம் நடத்தப்படு கின்றதா? என்பது பற்றி இந்த நூல் விரிவாகப் பேசுகிறது.

நாராயணகுரு இந்து மதத்தைக் கேள்வி கேட்கவில்லை. சமூக மாற்றம் என்பது இருக்கக்கூடிய அதிகார கட்டமைப்பு களை நியாயப்படுத்தக் கூடிய சித்தாந்த கருத்தியல் கட்ட மைப்புகளை கேள்விக்கு உட்படுத்தவில்லை. அதன் விளைவு இன்று வரை முற்போக்குவாதிகள் நெருக்கடிக்குத் தள்ளப்படுகிறார்கள் என்பதற்கு சபரிமலை பிரச்சினை சான்றாகும். ஆதிக்கச் சக்திகளின் எதிர்வினை பெரிய சவா லாக இருக்கிறது. பெரியார்தான் துணை நிற்கிறார் என்றார்.

நூலாசிரியர் பழ.அதியமான் தம் ஏற்புரையில், "படிக் கின்ற வாசகன் இருந்தால் எழுத்தாளர், எழுதுவதற்கு - உழைப்பதற்குச் சலிப்பதில்லை" என்றார். "மாணவர்கள் படிக்கின்ற பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆசிரியர் அவர்கள் இப்புத்தகத்தை வரிக்கு வரி வாசித் திருக்கிறார். இதை விட பெரும்பேறு எனக்கு வேறு இல்லை" என்று நெகிழ்ந்தார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வைக் கம் சத்தியாகிரகம் அல்ல. வைக்கம் போராட்டம் தான். வைக்கம் போராட்டம் என்றால் சமூக நீதியின் அடையாளம். சிதம்பரம், பழனி என்று பெயர் வைப்பது போல பெரியாரின் தொண்டர்கள் தம் குழந்தைகளுக்கு வைக்கம் என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள் என்று தெரிவித்தார். வைக்கம் போராட்டம் கோயில் நுழைவு போராட்டம் அல்ல; கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் நடக்கின்ற உரிமைகோரும் போராட்டம், இப்போராட்டம் 610 நாள்கள் நடைபெற்றது. போராட தலைவர்கள் இல்லாத நிலையில் பெரியார் அழைக்கப்பட்டார். இந்நூல் எழுத ஆவணக் காப்பகமும், பத்திரிகைகளும் பெருந்துணை புரிந்தன. மற்றத் தலைவர் களுக்குக் கடுங்காவல் தண்டனை கிடையாது. அரசியல் கைதியாக நடத்தப்பட்டார்கள். ஆனால் பெரியாருக்குக் கடுங்காவல் தண்டனை. அரசியல் கைதியாகவும் நடத்தப் படவில்லை. பெரியார் அடைந்த துன்பத்தை அவர் வெளிப் படுத்தவில்லை. மற்றவர்கள் அவருடன் சிறையில் இருந் தவர்கள் கூறிய பதிவுதான் பெரியாரின் பெருமையினை உலகிற்கு உணர்த்தியது என்றார். மாணவி பூந்தளிர் நன்றி கூற பாராட்டுக்கூட்டம் இனிதே நிறைவுற்றது.

தமிழர் தலைவர் அவர்களுடன் மதிய உணவருந்திய சிறப்பு விருந்தினர்கள், திருச்சி பெரியார் கல்வி நிறுவனங் களைப் பார்வையிட ஆசிரியருடன் வாகனத்தில் பயணித் தனர். பயண நேரம் ஒரு மணி நேரம் பயனுள்ள நேரமாக அமைந்தது. பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி தாம் எழுதும் 'பெரியார் வரலாறு' ஆங்கில நூலுக்குத் தேவையான தகவல்களைத் தலைவரிடம் வினாக்கள் தொடுத்து விடை களைப் பெற்றுக் கொண்டார். அய்யாவின் வாழ்க்கைத் தகவல்களை - வரலாற்றினை தம் நினைவு அடுக்கிலிருந்து உடனுக்குடன் அள்ளி வழங்கினார். பேராசிரியர் வேங்கடா சலபதி கவனமாய் குறித்துக் கொண்டார். தமிழர் தலைவரின் வாகனம் திருச்சி கல்வி வளாகத்திற்குள் நுழைய ஆசிரியர் களும், மாணவர்களும் ஆர்வமுடன் சூழ்ந்து கொண்டனர். பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் பழ.அதியமான் அவர்களுக்கும், ஆ.இரா. வேங்கடாசலபதி அவர்களுக்கும் பழக்கூடை வழங்கி வர வேற்றனர். கல்வி வளாகத்தைச் சிறப்பு விருந்தினர்களுக்குத் தமிழர் தலைவர் சுற்றிக் காண்பிக்கும் விதமாக நடந்து சென்றபோது, கம்பீரமான கட்டடமான பெரியார் மணி யம்மை பெண்கள் மேல் நிலைப்பள்ளியின் மாடியில் மாண வியர்கள் நின்று கொண்டு கரவொலி எழுப்பி மகிழ்ச்சிக் குரல் ஒலித்து, உற்சாகமாய் வரவேற்றனர். தமிழர் தலைவர் அவர்களும், சிறப்பு விருந்தினர்களும் கை அசைத்து மகிழ்ச்சியை ஏற்றுக் கொண்டனர். தவத்திரு குன்றக்குடி அடிகளார் நினைவுக் கூடம், சிவகங்கை இரா.சண்முகநாதன் நினைவுக் கூடம், திருமதி நாகபூசனம் அம்மாள் நினைவுக் கூடம், ஞான செபஸ்தியான் - குழந்தை தெரசா அம்மாள் நினைவுக்கூடம், புலவர் கோ.இமயவரம்பன் நினைவுக்கூடம் என எங்குப் பார்த்தாலும் மாணவியர்களின் உற்சாகம் நிறைந்த பாச வரவேற்பில் சிறப்பு விருந்தினர்கள் திக்கு முக்காடிப் போனார்கள்.

பெரியார் தொடக்கப்பள்ளி, நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனம், பெரியார் மருந்தியல் கல்லூரி என ஒவ்வொரு இடத்திலும் பூங்கொத்து, சாக்லேட், பயனாடை என அசத்திவிட்டார்கள். திருச்சி போல தித்திப்பான உபசரிப்பு யாங்கெனும் கண்டதில்லை. விருந்தினர்கள் தேன் குடத்தில் விழுந்த சிற்றெறும்பாய் பூரித்தனர். திருச்சி பெரியார் மாளிகையில் தந்தை பெரியார் தங்கியிருந்த அறை, பொருட்களைப் பார்வையிட்டு தமிழர் தலைவரிடம் அளவளாவி விட்டுப் புறப்பட்டனர். பழ.அதியமான்,

ஆ.இரா.வேங்கடாசலபதி இருவருக்கும் வாழ்வின் மறக்க முடியாத நாளாக அமைந்திருக்கும். தமிழர் தலைவரின் அருங்குணங்களை அருகில் இருந்து உணரும் நல்வாய்ப்புப் பெற்று மகிழ்ந்தனர். பெரியாரைக் கொண்டாடுபவர்களுக்குத் தொண்டனாய் திகழ்பவர்தான் தலைவர் வீரமணி.

- விடுதலை நாளேடு 3 3 20

புதன், 4 மார்ச், 2020

திராவிடர்கழகப்பெயர்மாற்றம்ஒரேநாளில்நிகழ்ந்தா?

வாலாசா வல்லவன்

திராவிடர் கழகப் பெயர் மாற்றம் ஒரே நாளில் நிகழ்ந்தா?

தென்னிந்தியர் நலவுரிமைச் சங்கம் என்ற ஜஸ்டிஸ் கட்சிக்குத் திராவிடர் கழகம் என்ற பெயர் மாற்றம் ஒரே நாளில் எடுக்கப்பட்ட முடிவல்ல. ஒராண்ட காலமாகப் பல்வேறு மாநாடுகளில் விவாதிக்கப்பட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

26-4-43 நண்பகல் 2 மணிக்குச் சேலம் தேவங்கர் பள்ளிக் கூடத்தில் ஜஸ்டிஸ் கட்சியின் நிர்வாகக் குழுக்கூட்டம் பெரியார் தலைமையில் கூடியது.  அக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் - 2

ஜஸ்டிஸ் கட்சிக்கு (S.I.L.F.) தென்னிந்திய நலஉரிமைச் சங்கம் என்றிருக்கும் பெயரைத் தென்னிந்திய திராவிடர் கழகம் என்றும்,  ஆங்கிலத்தில் South Indian Dravidan Fedrationஎன்றும் பெயர் திருத்தப்பட வேண்டும்.

தீர்மானம் - 4

இத்தீர்மானங்களைச் சேலத்தில் நடக்க போகும் கட்சி மாநாட்டில் உறுதிப்படுத்தி அமலுக்குக் கொண்டு வர வேண்டுமென்று இக்கமிட்டி தீர்மானிக்கிறது. (குடி அரசு 4-12-43 பக்கம் 5)

ஜஸ்டிஸ் கட்சிக்கு அமைந்த தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம் என்ற பெயர் இனித் தென் இந்திய திராவிடர் கழகம் என்பதாக அழைக்கப்பட வேண்டும் என்பதாகும்.  இந்தத் தீர்மானமும் ஒரு விதத்தில் திருவாரூர் மகாநாட்டில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்றே சொல்லலாம்.
(குடி அரசு 4-12-43 பக்கம் 11)

கோவையில் 19-11-43 அன்று அறிஞர் அண்ணாவின் சந்திரோதயம் நாடகத்திற்குப் பெரியார் தலைமைத் தாங்கினார்.  அப்போது பெரியாருக்கு வாசித்தளித்த வரவேற்புத் தாளில் கோவை மாவட்ட திராவிட கழகத்தால் என்று அச்சிட்டிருந்தனர்.
(குடி அரசு 18-12-43 பக்கம் 4)

சேலம் நகரில் செவ்வாய்பேட்டை திராவிடர் கழகத்தின் முதலாவது ஆண்டுவிழா 16-1-44 முற்பகல் 11 மணிக்குத் தொடங்கியது.  தொடக்கத்தில் சேலம் தோழர்கள் பெரியார் ஈ. வெ. ரா., அண்ணாதுரை, என்.அர்ச்தனன், ஐ. ச. கண்ணப்பர் ஆகியவர்களை இரட்டைக் குதிரை கோச்சு வண்டியில் அமரவைத்து ஊர்வலமாக அழைத்து வந்தனர். (குடி அரசு 22-1-44 பக்கம் 6)

1943இலேயே இங்குத் திராவிடர் கழகம் தொடங்கப்பட்டு முதலாமாண்டு விழாவும் நடைபெற்றுள்ளது.  புவனகிரி திராவிடர் கழக ஆரம்ப விழா 6-2-44 காலை 10.30 மணிக்கு சி. பி. சின்னராசு தலைமையில் நடைபெற்றது.  பெரியார் அவர்களுக்குத் திராவிடர் கழகத்தாரால் வாழ்த்து மடல் வாசித்து அளிக்கப்பட்டது.
(குடி அரசு 12-2-44 பக்கம் 5)

சென்னையில் நீதி கட்சியின் சென்னை மாவட்ட மாநாடு 13-2-44 அன்று தோழர் சி. என். அண்ணாதுரை அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  அப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் முதலாவது தீர்மானம் கட்சியின் பெயர் மாற்றத் தீர்மானமாகும்.

1.  தென் இந்தியர் நல உரிமைச் சங்கம் என்பதைச் சென்னை மாகாண திராவிடர் கட்சி என்று மாற்றுமாறு சேலத்தில் நடைபெறப்போகும் மாகாண மாநாட்டிற்கு இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.
(குடி அரசு 26-2-44 பக்கம் 14)

திருச்சி மாவட்ட நீதிக்கட்சி 15ஆவது மாநாட்டில் 20-2-44 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று கட்சியின் பெயர் மாற்றத் தீர்மானம் பற்றியது ஆகும். அண்மையில் சேலத்தில் நடக்கவிருக்கும் நமது மாகாண மாநாட்டில் நமது கட்சியின் பெயரைத் திராவிடர் கழகம் என்று மாற்ற வேண்டுமென்ற கோரிக்கையை இம்மாநாடு சிபாரிசு செய்கிறது.  (குடி அரசு 4-3-44 பக்கம் 4)

நாகையில் திராவிடர் கழகம் திறப்பு விழா 9-3-44 முற்பகல் 11.45 மணிக்கு நடைபெற்றது.  நாகை திராவிடர் கழகத்தாரால் பெரியாருக்கு நல்வரவேற்பிதழ் வாசித்து அளிக்கப்பட்டது.  சி. பி. சின்னராசு, எஸ். கே. சாமி ஆகியோர் உரையாற்றிய பின் டி. வி. சொக்கப்பா தலைமையில் பெரியார் திராவிடர் கழகத்தைத் திறந்து வைத்தார்.
(குடி அரசு 18-3-44 பக்கம் 5)

11-3-44 அன்று திருச்சி பொன்மலையில் கற்கண்டார் கோட்டை திராவிடர் கழகத் திறப்பு விழாவும் பொதுக் கூட்டமும் நடைபெற்றது.  பெரியாருக்கு 102 காலனாக்கள் பணமுடிப்பளித்தனர்.
(குடி அரசு 18-3-44 பக்ம் 10)

கோவை மாவட்ட திராவிட இளைஞர் மாநாடு

17-4-44 அன்று ஈரோடு சரஸ்வதி ஹால் என்னும் மண்டபத்தில் கோவை மாவட்ட முதலாவது திராவிட இளைஞர் மாநாடு தோழர் சி. என். அண்ணாதுரை அவர்கள் தலைமையில் நடைபெறும்.  க. அன்பழகன், இரா. நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள்.  அனைவரும் வருக.
(குடி அரசு 15-4-44 பக்கம் 5)

மேற்கண்ட மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று பெயர் மாற்றத் தீர்மானம் ஆகும்.  அண்மையில் நடக்கவிருக்கும் நீதி கட்சியின் மாகாண மாநாட்டில் அக்கட்சியின் பெயரைத் திராவிடர் கழகமென்று மாற்ற வேண்டுமென்ற கோரிக்கையை இம்மாநாடு வலியுறுத்துகிறது/

சேலத்தில் சூன் 18, 19 ஆகிய நாட்களில் நடைபெற்ற சேலம் மாவட்ட திராவிட இளைஞர் மாநாட்டு தீர்மானங்களில் முதன்மையானது.

1.  நீதி கட்சியையும், தன் மதிப்பியக்கத்தையும், ஒன்றுபடுத்தி திராவிடர் இயக்கமென்று பெயரிட்டு நிதியும், கழகங்களும், தினசரித்தாளும் அமைத்து ஆக்க வேலை செய்ய பெரியால் ஈ. வெ. ரா.வை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
(குடி அரசு 8-7-44 பக்கம் 11)

11-7-44 அன்று தஞ்சையில் ஊ. ஆ. பூ. சௌந்தரபாண்டியன் தலைமையில் தஞ்சை மாவட்ட திராவிடர் இளைஞர் மாநாடு நடைபெற்றது.  இம்மாநாட்டில் நீதிக் கட்சியையும் தன் மதிப்பியக்கத்தையும் ஒன்றுபடுத்தி திராவிடர் இயக்கம் என்று பெயரிட வேண்டும்மென்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
(குடி அரசு 29-7-44 பக்கம் 2)

திராவிடர்களே சேலம் மாநாட்டிற்குச் செல்லுங்கள் என்ற தலையங்கம் எழுதப்பட்டது.  அத்தலையங்கத்தில் நாம் திராவிடர், நம் கழகம் திராவிடர் கழகம், நமக்கு வேண்டியது திராவிட நாடு  என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
(குடி அரசு 12-8-44 பக்கம் 6)

20-8-44இல் நடத்த இருந்த சேலம் மாநாடு சரியான ஏற்பாடு செய்யப்படாததால் 27-8-44க்குத் தள்ளி வைக்கப்பட்டு நடைபெற்றது.

சேலம் மாநாட்டுக்கு வரும் தீர்மானங்கள் கட்சி அரசியல் தீர்மானங்கள்

1. (அ)  இந்த மாநாடானது ஜஸ்டிஸ் கட்சி என்னும் இக்கட்சிக்கு உள்ள தென்இந்தியர் நலஉரிமைச் சங்கம் என்ற பெயரை திராவிடர் கழகம்  `னுசயஎனையை ஹளளடிஉயைவடி என்று பெயர் மாற்றத் தீர்மானிக்கிறது.
(குடி அரசு 26-8-44 பக்கம் 3)

சேலம் மாநாடு ஒரு வாரம் தள்ளிப் போடப்பட்டதால் மாநாட்டிற்கு வரும் தீர்மானங்கள் முன் கூட்டியே குடி அரசு இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

27-8-44இல் நடைபெற்ற சேலம் மாநாடு சேலம் நகரையே உலுக்கியது.  ஊர்வலத்தில் 30,000 பேர், உயிருக்குத் துணிந்த வீரர்கள் 5,000 பேர், 40 குதிரைகள், 2 யானைகள், 4 சக்கர இரட்டைக் குதிரை சாரட்டில் தலைவர் ஊர்வலம் டஜன் கணக்கான கார்கள் பின் தொடர்ந்தன.  புதிய உடையுடனும் கொடியுடனும் 300 தொண்டர்கள், 5 ஜதை பாண்டு, 10 ஜதை மேளம், 100 தப்பட்டை, 40 கொம்புகள் பெரியார் வாழ்க, திராவிட நாடு திராவிடர்க்கே, திராவிடர் கழகம் ஓங்குக என்ற முழுக்கம் பிற்பகல் மாநாடு பெரியார் தலைமையில் மாலை 3 மணிக்கு கூடியது.  ஜஸ்டிஸ் கட்சியின் பெயரை அதாவது தென்னிந்திய நல உரிமைக் கழகம் என்பதைத் திராவிடர் கழகம் என்பதாக மாற்ற வேண்டும் என்ற தீர்மானம் தோழர் அண்ணாதுரை அவர்களால் முன்மொழியப்பட்டது.  தோழர் டி. சண்முகம் அவர்கள் அமோதித்தார். இத்தீர்மானத்தைத் தோழர்கள் சி. ஜி. நெட்டோ, அ. கணேச சங்கரன், எ. வேணுகோபால் ஆகியவர்கள் விஷய ஆலோசனைக் கூட்டத்தில் அனுமதித்து விட்டுப் போதுமான கால நோட்டீஸ் கொடுக்கப்படவில்லை என்பதாக ஆட்சேபித்தார்கள்.  தலைவர் பெரியார் எழுந்திருந்து ஜஸ்டிஸ் என்பது பத்திரிக்கையின் பெயர் என்றும், இக்கட்சியின் பெயர் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்பதாகவும், சேலத்தில் 26-11-43 இல் கூடிய நிர்வாக சபை கூட்டத்தில் (இவர்களும் கூடியிருந்த நிர்வாகசபைக் கூட்டத்தில்) ஜஸ்டிஸ் கட்சி என்றிருப்பதை திராவிடர் கழகம் என்பதாக மாற்ற வேண்டுமென் மாகாண மாநாட்டுக்கு சிபாரிசு செய்திருப்பதாகவும் மற்றும் பல சங்கங்கள் ஆதரித்திருப்பதாகவும் தென்னிந்தியர் என்றாலும் திராவிடர் என்றாலும் ஒன்றுதான் என்றும் தெரிவித்தார். பின்னர் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.  ஆயிரக்கணக்கான கைகள் உயரத்துக்கின.  ஆட்சேபிக்கிறவர்கள் கை துக்கும்படி கேட்கப்பட்ட போது யாரும் கை துக்கவே இல்லை. ஆட்சேபித்தவர்களும் சும்மா இருந்து விட்டார்கள், எனவே தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
(குடி அரசு 2-9-44 பக்கம் 3)

சேலம் மாநாடு பற்றிப் பெரியார் அறிக்கை

சேலம் மாநாட்டைப் பற்றி ஒரு சிலர் தாறுமாறான அறிக்கைகளைப் பத்திரிகைகளுக்கு அனுப்பி வருகிறார்கள்.  அவைகள் ஒன்றும் நேர்மையானவை அல்ல, பெரும்பாலான விஷயங்கள் உண்மையுமல்ல.  அந்த அறிக்கைகள் எனக்கு ஒன்றும் அனுப்பவுமில்லை.
மாநாட்டில் ஜஸ்டிஸ் கட்சிக்கு தென் இந்திய நல உரிமைச் சங்கம் என்று, இருந்த பெயரைத் திராவிடர் கழகம் என்று மாற்றப்பட்டது உண்மைதான், ஆனால் அத்தீர்மானம் பொதுக்கூட்டத்தில்  பிரேயித்து ஆமோதித்தவுடன் இதற்குப் போதிய நோட்டீஸ் இல்லை  என்று மாத்திரம் தோழர் நெட்டோ சொன்னார்.  அதை கணேசங்கரன் ஆதரித்தார்.  தலைவர் அதற்குச் சமாதானம் சொன்னார்.

சேலத்தில் 26-11-43ம் தேதியில் நடந்த ளு. ஐ. டு. கு நிர்வாகச் சபைக் கூட்டத்தில் பெயர் மாற்றம் நிறைவேற்றப்பட்டு அதைச் சேலத்தில் நடக்கும் மாகாண (இந்த) மாநாட்டுக்குச் சிபார்சு செய்வதாகவும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.  அதில் தோழர்கள் நெட்டோ, இரத்தினம்பிள்ளை முதலியவர்களுக்கும் இருந்திருக்கிறார்கள்.  அதன் பின் சுமார் 20-க்கு மேற்பட்ட ஜில்லா, தாலுக்கா மாநாடுகளில் இது நிறைவேற்றப்பட்டு சேலம் மாநாட்டுக்குச் சிபார்சு செய்யப்பட்டு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  இந்த மாநாட்டிற்கும் இதுபற்றி வெளியூர்களில் இருந்து ஏராளமான தீர்மானங்கள் வந்திருக்கிறன்றன, அவை தோழர் நெட்டோ அவர்கள் வசமே இன்னமும் இருக்கின்றன.

அன்றியும் தென் இந்தியர் கழகம் என்பதும் திராவிடர் கழகம் என்பதும் ஆதியில் ஏற்படுத்தினவர்களின் கருத்தில் வித்தியாசம் கொண்டதல்ல, மக்களுக்கு இன எழுச்சியும், நாட்டு எழுச்சியும் ஏற்படுவதற்கும், திராவிட நாடு கேட்பதற்கும் ஊக்கம் அளிப்பதற்கும் ஆகவே அச்சிறு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்று சொன்னார்.

பிரதிநிதிகள் ஓட்டு ஓட்டு என்றார்கள், ஓட்டுக்கு விடப்பட்டது; ஏகமனதாய் நிறைவேறிற்று.  அப்போது தோழர் நெட்டோ அவர்களும் மற்றும் இப்போது அறிக்கை விடும் நண்பர்களும் இருந்தார்கள்.  எதிர்ப்புக்கு நெட்டோவாவது இதர நண்பர்களாகவது கை துக்கியோ, ஓட்டு கொடுக்கவில்லை; வேறு ஒருவரும் எதிர்ப்புக்கு ஓட்டு கொடுக்கவில்லை.  இதுதான் பெயர் மாற்றத் தீர்மானத்தினுடையவும் அதன் எதிர்ப்பினுடையவும் நடவடிக்கையாகும்.  நெட்டோ முதலியவர்களால் பத்திரிகைகளுக்கு வந்த சேதிகள் பின்னால் யோசித்துச் சொல்லப்படுபவைகளாகும்.

மாநாடு வெற்றியாக முடிந்து தலைவர் முடிவுரை ஆனாவுடன் ராவ்சாகிப் துரைசாமி பிள்ளை அவர்கள் வரவேற்புக் கழகச் சார்பில் தீர்மானங்களைப் புகழ்ந்து கூறித் தலைவருக்கும், தோழர் பாண்டியனுக்கும், வரவேற்புத் தலைவர், காரியதரிசி, ஆகியவர்களுக்கும் பிரதிநிதிகளுக்கும், மாநாட்டுக் கொட்டகை உதவிய முனிசிபாலிட்டியாருக்கும் மற்றவர்களுக்கும் பெருத்த கைத்தட்டலிடையே நன்றி கூறினார்கள்.  மாநாடு எவ்வித ஒரு சிறு அபிப்பிராய பேதமோ மேற்கண்டதைக் தவிர ஒரு சிறு எதிர்ப்போ இல்லாமல் நடைபெற்றது.  தீர்மானங்கள்யாவும் ஏகமனதாய் நிறைவேறின.  இதற்குப் பத்திரிகை நிருபர்களும் சர்க்கார் ஊ. ஐ. னு. சுருக்கெழுத்தாளர்கள், ரிக்கார்டுகளும், அதிகாரிகளும், கட்சியாளர்களும், பிரதிநிகளும் சாட்சியாகும்.
ஈ. வெ. ராமசாமி
(குடி அரசு 2-9-44 பக்கம் 8)

குறும்புத்தனமான அறிக்கைகள்

சேலம் மாநாடு முடிந்த பிறகு பத்திரிக்கைகளில் சிலர் குறும்புத்தனமான அறிக்கைகள் விட்ட வண்ணம் இருக்கிறார்கள்.  நம் எதிரிகளான பார்ப்பனர் முதலிய பத்திரிகைக்காராகள் இந்த சமயத்தைத் தங்களுக்கு அனுகூலமாக ஆக்கிக் கொண்டு அதற்கு விஷமத்தனமான பெரிய தலைப்புக் கொடுத்து அதிக விளம்பரம் செய்து வருகிறார்கள். நம் இயக்கம் செய்ய வேண்டிய வேலைகளும் அது அடைய வேண்டிய வெற்றிகளும் இந்த இரு கூட்டத்தினால் தடைப்பட்டு போய்விடாது என்கிற தைரியத்தாலேயே அவைகளை நாம் பிரமாதமாக லட்சியம் செய்வதில்லை என்பதோடு நம் உண்மைத் தோழர்களும் மதிக்கமாட்டார்கள் என்பதும் நாம் அறிவோம்.......................

ஒரு சபைக்குப் பெயர் மாற்ற அச்சபை பொது மாநாட்டிற்கு அதிகாரம் இல்லை என்று சொல்லுவது  அறிவுரையாகாதென்றே சொல்வோம்.

அடுத்த ஆட்சேபனை போதிய நோட்டீசு (அறிவிப்பு) இல்லை என்பது.  இது பரிகசிக்கத்தக்கதே யாகும்.

நோட்டீசு இல்லாமல் மாநாடுகளில் எத்தனையோ தீர்மானங்கள், எத்தனையோ மாகாண மாநாடுகளில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என்றாலும் அந்த முறையையோ, மாத்தியதையையோ இப் பேர் மாற்றத் தீர்மானத்திற்கு நாம் உரிமை பாராட்டவில்லை.

இத்தீர்மானமானது முறைப்படி சேலத்தில் 10 மாதங்களுக்கு மன் கூட்டப்பட்ட நிர்வாக சபைக் கூட்டத்தில் தோழர்கள் இரத்தினசாமி, நெட்டோ, அவர்கள் வீற்றிருந்த கூட்டத்தில் நெட்டோ அவர்களின் ஆதரிப்பின் பேரிலேயே தென் இந்திய நல  உரிமைச் சங்கம் என்பதை திராவிடர் கழகம் என்று அழைக்கப்பட வேண்டும் என்று ஏகமனதாக தீர்மானித்து இந்த தீர்மானத்தை மாகாண பொது மாநாட்டுக்கு இக்கமிட்டி சிபார்சு செய்கிறது என்று தீர்மானித்து இருப்பதோடு அப்படி கூட்டப்படும் மாநாட்டை சேலத்தில் நடத்த வேண்டும் என்றும் அந்த வினாடியிலேயே மாநாட்டை அழைத்தவர்கள் இதே தோழர்கள் இரத்தினம் பிள்ளையும் நெட்டோ அவர்களும் ஆவார்கள்.

அன்றியும் சேலம் நிர்வாக சபைக் கூட்டத்திற்கு பிறகு கூட்டப்பட்ட பல ஜில்லா, தாலுக்கா மாநாடுகளில் இத்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுக் காரியாலயத்திற்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. இவை மாத்திரமல்லாமல் 27-8-44 இல் நடந்த சேலம் மாநாட்டுக்குக் கூட மாநாட்டாரின் அறிக்கைப் படி இது சம்பந்தமாக பல ஸ்தாபனங்களிலிருந்தும், தனிப்பட்டவர்கள் இருந்தும் தீர்மானங்கள் வந்திருக்கின்றன.  இந்த 10 மாதகாலமாக  இவை பத்திரிகைகளிலும் விளம்பரப்படுத்தப் பட்டிருக்கின்றன.  இனி எந்த விதமான முன் அறிவுப்பு (நோட்டீசு) வேண்டுமென்று இவர்கள் கருதுகிறார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை.

அன்றியும் விஷயாலோசனைக் கமிட்டிக் கூட்டத்தின் போது இந்த ஆலோசனைக்காரர்கள் இருந்து இத்தீர்மானம் நிறைவேற்றப்படும் போது ஒரு அதிருப்தியும் காட்டாமல் ஆதரவாளர்களாக இருந்து விட்டு, வேறு காரியங்களுக்காக இவர்கள் மீது ஒழுங்கு முறை நடவடிக்கைத் தீர்மானம் நிறைவேறியவுடன் அத்தீர்மானம் தங்கள் மீதும் நடவடிக்கை எடுத்துக் கொள்ள இடமிருக்கிறதென்று கருதி பயந்து போய் அதிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள ஒரு தந்திரமாக இந்தச் சாக்கை ஒரு சிலர் உபயோகிக்க, பின்னால் யோசனை செய்து கண்டு பிடிக்கப்ப பட்டதல்லாமல் இதில் வேறு உண்மையோ, நியாயமோ, நாணயமோ என்ன இருக்க முடியும் என்று கேட்கிறோம்.
(குடி அரசு 9-9-44 பக்கம் 6, 7)

சேலம் மாநாட்டின் செயலாளராக இருந்தவர் நெட்டோ, சேலம் மாநாட்டின் வரவேற்புக்குழு தலைவராக இருந்தவர் இரத்தினம் என்பவர் இவர்கள் இருவரும் தான் திராவிடர் கழகம் என்பதற்குப் பதிலாக பழைய ஜஸ்டிஸ் கட்சி என்ற பெயரே இருக்க வேண்டும்.  பெயர் மாற்றம் தேவையற்றது அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அறிக்கை விட்டவர்கள்.

சேலம் மாநாட்டில் பெரியாரின் தலைமையை மாற்ற வேண்டுமென்று செயல்பட்டவர் பாலசுப்பிரமணியம் ஆவார், அவரும் பின்னர் தன்பேச்சை பின் வாங்கிக் கொண்டார்.
கி. ஆ. பொ. விசுவநாதம் மாநாட்டுத் திறப்பாளர்.  அவர் பெரியாரைப் பற்றி கிண்டலும் கேலியுமாகச் சில வார்த்தைகள் பேச எதிரே இருந்தவர்கள் அவரை உட்காரும்படி முழுக்கமிட்டவுடன் பெரியரைப் புகழ்ந்து பேசிவிட்டுப் பெரியாரின் சர்வாதிகாரத் தன்மை தேவைதான் என்று கூறி முடித்துவிட்டார்.

அருகோபாலன் கூறுவது போல கி. ஆ. பெ. விசுவநாதம் எந்தத் தீர்மானமும் கொண்டு வரவில்லை (குடி அரசு 2-9-44 பக்கம் 2)

கி. ஆ. பெ. அவர்களைப் பற்றி 1984இல் எம்ஃபில் ஆய்வு செய்த மணிமேகலை என்பவர் அவர் உயிருடன் இருக்கும் போதே அவரிடம் நேர் காணல் செய்துள்ளார்.  சேலம் மாநாட்டைப் பற்றி அவரிடம் கேட்டு பதிவு செய்துள்ளதில் தென்னிந்தியர் நல உரிமைச் சங்கத்தின் பெயரைத் தமிழ் நாடு நீதிக்கட்சி என்ற பெயரில் மாற்றி அமைத்து ஆதரவு திரட்ட வேண்டுமென்ற தமது  விருப்பத்தைத் தெரிவித்தார் என்று தான் பதிவு செய்துள்ளார்.
(முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம், வ. மணிமேகலை பக்கம் 48)

சி. ஆ. பெ. விசுவநாதம் நீதிக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகும்போது அதற்கான பல காரணங்கள் கூறியிருந்தார்.

ஜஸ்டிஸ் கட்சி எல்லோராலும் போற்றப்பட வேண்டுமானால் அடியிற்கண்ட வேலைத் திட்டத்தைப் போன்ற ஒரு முறையைக் கொண்டு கட்சியை பலம் பொருந்திய ஸ்பனமாக ஆக்குவதில் மூலம் தான் முடியும் என்ற எனது எண்ணத்தில் இன்றும் கூட மாறுதல் அடைய விரும்புவதில்லை என்பதை வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  நீதிக் கட்சியின் வளர்ச்சிக்கு யோசனைகள் தெரிவித்துள்ளார்.

கட்சியின் பெயர் மாற்றம் பற்றியோ பெரியார் கன்னடர் என்பது பற்றியோ ஒருவர் கூட இல்லை.  கடிதத்தை முடிக்கும் போது கூட இவைகளை எனது ஆலோசனைகளாகக் கட்சியின் நலனுக்காகக் குறிப்பிட்டுள்ளேன்.  நான் சாதாரண அங்கத்தினன் என்ற முறையில் என்னால் இயன்ற உதவிகளையும் எக்காலத்திலும் செய்யக் காத்திருக்கின்றேன் என்பதை வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
(மேற் கண்ட ஆய்வு நுல் பக்கம் 121-127)

மேற் கண்ட அறிக்கையின் மூலமும், சேலம் மாநாட்டில் அவர் கொண்டு வர நினைத்த தீர்மானம் தமிழ் நாடு நீதி கட்சி என்ற பெயரின் மூலம் அவர் பெரியாரைக் கன்னடர் என்று வெறுத்தார் என்பதற்கோ, தமிழர் கழகம் எனப் பெயர் மாற்ற முயன்றார் என்பதற்கோ எந்த வித சான்றும் இல்லை.  எனவே அருகோபாலனின் கற்றாகிய காலையில் தமிழர் கழகம் என்ற பெயரை மாலையில் பெரியார் மாற்றினார் என்பது சுத்தமான வடிக்கட்டின பொய் என்பது புலப்படும்.

அருகோ கூறும் இன்னொருவர் அண்ணல் தங்கோ, சுவாமிநாதன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் அன்றைய வடஆர்க்காடு மாவட்டம்  (வேலுர் மாவட்டம்) குடியற்றம் பகுதியைச் சேர்ந்தவர்.  அவர் இந்திய தேசிய காங்கிரசில் தீவிரமாக வேலை செய்து வந்தவர். 1934இல் காந்தி தமிழ்நாட்டிற்கு வந்த போது அவரைத் தமது பகுதியில் பேச செய்வதற்கு முன் அனுமதி பெற்று குடியற்றம் பாலற்றங்கரையில் மிகப் பெரிய கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்.  இவருடைய வளர்ச்சியை விரும்பாத பார்ப்பன இராசாசி காந்தி அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாதபடி பாதையை மாற்றி அழைத்துச் சென்று விட்டார்.  இதனால் வெறுப்புற்ற சுவாமிநாதன், பார்ப்பன எதிர்ப்பியக்கமான சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்தார்.  வடஆர்க்காடு மாவட்டத்தில் செல்வாக்குடன் இருந்தவர் சேலம் நீதிகட்சி மாநாட்டில் தீர்மானம் கொண்டுவரும் அளவுக்குச் செல்வாக்கு பெற்றிருக்கவில்லை.  அவருடைய பெயர் அந்த மாநாட்டின் நிகழ்ச்சி நிரலிலோ, இதழ்களிலோ இல்லை.  இவர் கி. ஆ. பெ.வுடன் சேர்ந்து தமிழர் கழகம் எனப் பெயர் மாற்றத் தீர்மானம் கொண்டு வந்தார் என்பது அருகோவின் கற்பனையே ஆகும்.

சேலம் மாநாடு முடிந்த பிறகும் கி. ஆ. பெ. விசுவநாதம் நாங்கள் தான் உண்மையான  ஜஸ்டிஸ் கட்சி என்று கூறிக் கொண்டிருந்த பி. டி. இராசன், பாலசுப்பிரமணியம் குழுவில் நீதிக் கட்சியில் தான் இருந்தார்.

சில ஆண்டுகள் கழிந்த பின்போ அவர் 1947இல் தமிழர் கழகம் என்ற அமைப்பையும் தமிழ் நாடு என்ற இதழையும் நடத்தி வந்தார்.  அவர் 21-6-1959இல் நடத்திய திருச்சி வானொலி நிலையத்தில் எழுதப்பட்டிருந்த ஆகாசவாணி பெயர்ப் பலகையைத் தார்ப் பூசி அழிக்கும் போராட்டத்தை நடத்திய போது பெரியார் சென்று அதில் கலந்து அவருடைய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.
(மேற் கண்ட நுல் பக்கம் 89)

எனவே தமிழர் என்ற பெயர் கொண்ட அமைப்பை எல்லாம் திராவிட இயக்கத்தினர் அழித்தனர் என்பதெல்லாம் வடிகட்டின பொய்யேயாகும்.

#திராவிடர்கழகப்பெயர்மாற்றம்ஒரேநாளில்நிகழ்ந்தா?
- வாலாசா வல்லவன் முகநூல் பதிவு

திங்கள், 2 மார்ச், 2020

நில உரிமைகளில் சமற்கிருத வழக்கு - 53

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation)  பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமுதாய வாழ்வும் சமற்கிருத மயமாக்கப்பட்ட கல்வி அறிவும் எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் திருமதி.  மீனாட்சி முருகரத்தினம்ஆற்றிய உரை வருமாறு:

நம்நாடு சுதந்திரமடைந்த பிறகு நில உடைமைச் சீர்திருத்தம் நமது கவனத்தைக் கவர்ந்துள்ளது. 1950ஆம் ஆண்டு முதல் பல நிலச் சீர்திருத்தச் சட்டங்கள் இயற்றப் பட்டன. ஜமீன்தாரி முறை நீக்கப்பட்டது. நிலக் குத்தகை, வாரம் போன்ற முறைகள் கட்டுப்படுத்தப்பட்டன. பண் ணையாள் முதலிய நில ஊழியர்களுக்கு நியாயக்கூலி கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. நில உடைமைக்கு உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டு, உபரி நிலங்கள் நில மில்லாத விவசாயிகளுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டது. இவ்வித சீர்திருத்தங்களால் விவசாயிகளின் ஏழ்மை யைப் போக்கலாம் என்ற எண்ணம் இந்திய அரசாங்கத் திடையேயும், பொதுமக்களிடையேயும் மிகவும் பரவி யுள்ளது.

ஆனால், கடந்த 35 ஆண்டுகளாக ஏற்பட்ட இந்தச் சீர்திருத்த முறையினால் நாம் கண்டது என்ன? உழவர்களின் ஏழ்மை அகன்றதா? உற்பத்தி பன்மடங்கு பெருகியதா? இந்தக் கேள்விகளுக்கு நமக்குக் கிடைக் கும் பதில் இல்லை என்பதுதான்.

ஆகையால் நாம் ஒரு திடமான முடிவுக்கு வர வேண்டும். இந்த நிலச் சீர்திருத்த முறை சரியான பாதையில் செல்லவில்லை. அடிப்படையிலேயே சில கோளாறுகள் ஊடுருவி இருப்பதால் இந்தச் சீர்திருத்தம் நமக்கு நன்மையை விளைவிக்கவில்லை என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

இந்திய நிலச் சீர்திருத்த முறைகள் பயன் அளிக் காததற்கு மூலக்காரணமாக இருப்பது, தனி உடைமை யாகும்(Right of private property) இந்தத் தனி உடைமை முறை ஆரியர்கள் வருகையிலிருந்து ஏற்பட்டதாகும். மனுதர்மத்தில் நிலம் தனி ஒருவனுக்குச் சொந்தமாகும். அவன் அதனைச் சீர்திருத்திச் சமப் படுத்திப் பயிர் செய்வதற்கு உகந்ததாகச் செய்தால் அது அவனுக்கு ஏகபோக உரிமை என்று சொல்லப்பட்டது. எப்படி காட்டில் வேட்டையாடும்போது ஒருவன் தன் அம்பினால் ஒரு விலங்கைக் கொன்றால் அது அவ னுக்கு உரிமையாகுமோ, அதேபோல் யார் முதன்முதல் ஒரு நிலப்பகுதியைக் காடுவெட்டிச் சீர்திருத்திப் பயிர் செய்வதற்குத் தயார் செய்கிறாரோ, அந்த நிலம் அவருக்குச் சொந்தமாகும் என்று விளக்கப்பட்டிருக்கிறது.

இந்த விளக்கத்தைத் தொடர்ந்து அர்த்த சாத்திரத்தில் நில வரிவிதிப்பு முறைகள் விவரிக்கப்பட்டிருக்கின்றன. (Durgajanapadasatya Bhritya Karma samudaya padena sthapayet) நிலச் சொந்தக்காரர், பண்ணையாள் என விவசாயத்தில் ஈடுபடும் மக்களைப் பிரித்துக் காட்டு கிறது. இது நில உடைமையாளர்களையும் நிலமற்ற தொழிலாளர்களையும் சேர்த்துச் சொல்லும் பதமாகும். இவர்கள் அரசனுக்கு அர்தசித்தா (Ardha Sitah) என்ற கொள்கைக்கு ஏற்ப நூலில் ஒரு பங்கோ அய்ந்தில் ஒரு பங்கோ நில வரியாகக் கொடுத்து வந்தார்கள்.

இந்த அர்த்தசாத்திர கோட்பாட்டிற்கு ஏற்றவாறு மவுரிய அரசில் நில வரி விதிப்பு முறைகள் வழக்கில் இருந்துவந்தன. நிலத்தில் இரண்டுவித வரிவிதிப்புகள் உண்டு. ஒன்று பாகா (Bhaga); மற்றொன்று உதகபாகா (Udahabhaga) என்பதாகும், சட்பாக (Shadbhaga) என்ற தண்ணீர் வரி, சுங்க வரி, சரக்கு ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும்போது கொடுக்கும் வரி (octroi) முதலியன விதிக்கப்பட்டன. நில உரிமையாளர்களுக்குத் தமது நிலத்தை விற்கவும், மற்றவருக்குக் கொடுக்கவும் அதனை அடமானம் வைக் கவும் அர்த்த சாத்திரத்தில் உரிமைகள் கொடுக்கப்பட்டு உள்ளன. அரசன் விவசாயத்தில் ஈடுபட்டிருப்போரைக் காப்பது முக்கியக் கடமையாகும். விவசாயத்தில் ஈடு பட்டிருப்போரை மற்றவர்கள் தாக்காமலும், அடிமையாக் காமலும், அதிகமான வரிச்சுமையால் அவதிப்படாமலும் பாதுகாப்பது அவன் கடமையாகும். அரசன் மீன் பிடித்தல், கடல்-ஆற்றுப் போக்குவரத்து, வெளிநாட்டு வியாபாரம், ஆறுகள், நீர்த்தேக்கங்கள் ஆகிய பொது வருமானப் பகுதிகளைத் தனக்கென்று வைத்துக்கொள்ள அர்த்த சாத்திரம் அனுமதி அளிக்கிறது.

இந்த அர்த்தசாத்திரத் தனி உடைமைக் கொள்கையி லிருந்துதான் பிற்காலத்தில் ஏற்பட்ட விஜயநகர நில வரிமுறைகளும், முகலாய நில வரி முறைகளும், ஆங்கி லேய நில வரி முறைகளும்  ஏற்பட்டன. இவைகளுக் கெல்லாம், அடிப்படை நிலம் தனி ஒருவனுக்குச் சொந்த மென்பதும், அந்த உரிமையை அரசன் பாதுகாக்க வேண்டும் என்பதும் கோட்பாடுகளாகும்.

இந்தத் தனி உடைமை முறை சமற்கிருதப் பண் பாட்டிலிருந்து ஏற்பட்டவுடன் பல சீர்கேடுகள் விளைந்தன.

(1)          அரசின் ஆதிக்கம் நிலத்தின் மேல் அதி கரித்தது.

(2)          வரிச்சுமை அதிகரித்தது.

(3)          விவசாயத் தொழிலாளர்கள் பிற்போக்கு நிலையை அடைந்தார்கள்.

(4)          அதிக அளவு குத்தகை வசூலிப்பதால் குத்தகை யாளர்கள் நட்டம் அடைய வாய்ப்புகள் அதிகரித்தன.

(5)          கிராமங்கள் சீர்கேடு அடைந்தன.

(6)          கிராமப் பஞ்சாயத்துமுறை நாளடைவில் மறைந்து எதற்கும் அரசாங்கத்தை அணுகும் முறை வளர்ந்தது.

ஆனால், ஆரியம் புகுமுன்பு இந்தியாவில் திராவிட சமுதாயம் இருந்துவந்தது. இதனை இராதா கமால்முகர்ஜி என்ற பொருளாதார நிபுணர் விளக்கியுள்ளார். அந்த முறையில் ஒவ்வொரு இனத்தாரும் அல்லது பழங்குடி மக்களும் (Tribes) தங்களுக்குப் பொது உடைமையாக நிலத்தை வைத்திருந்தார்கள். இதனை அந்தப் பகுதி கிராமச் சபை பரிபாலித்து வந்தது. தனித் தனிக் குடும் பத்திற்கு நிலப்பகுதி அவர்களின் தேவைக்குத் தகுந்த வாறு ஒதுக்கப்பட்டது. மேய்ச்சல் நிலம், வாய்க்கால், குளம் இவைகள் பொதுச் சொத்துக்களாகக் கிராமச் சபையால் கண்காணிக்கப்பட்டு வந்தது. அரசன் இந்தக் கிராமச் சமுதாயத்தில் தலையிடுவதில்லை. இந்த முறையே இந்தியத் துணைக்கண்டத்திலிருந்த பண் டைய முறை ஆகும்..

ஆரியம் புகுந்ததால் திராவிடப் பண்பாட்டிற்கு ஏற்ற பழங்குடி மக்களின் நில உடைமைமுறை (Tribal settlement) அடியோடு நீக்கப்பட்டுத் தனி உடைமை நிலப் பகுதிகளாக மாற்றப்பட்டது. இந்தக் காரணத்தினாலேயே சிலர் நிலச் சொந்தக்காரர்களாகவும் (Land Owners) பலர் நிலமற்றவர்களாகவும், மேலும் பலர் பொருளாதார சமூகத் துறையில் தாழ்த்தப்பட்டவர்களாகவும் இருக்க வழிகள் உண்டாயின.

தற்காலத்தில் கூட இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளில் வகுப்புவாரி நில உடைமை முறைகள் இருக்கின்றன. அதனை நாம் பிற்போக்குச் சமுதாயம் என்ற கண்கொண்டு பார்க்கிறோம். ஆரிய அளவு கோல் கொண்டு அந்த முறையையும் மாற்ற வேண்டு மென்று நினைக்கிறோம்.

எப்படியோ ஆரியத் தனி உடைமை முறை மேவி விட்டது. அதனை மாற்றுவது மிகக் கடினமாககும். ஆரிய முறை பரவலாக இருக்கும் இந்தக் காலத்தில் முன்பு இந்திய நாட்டில் வழக்கிலிருந்த வகுப்புவாரி நில உடைமை முறை(Communal Settlement) மக்களுக்கு ஏற்றதான நிலமுறையாக நமக்குக் காட்சி அளிக்கிறது.

- டாக்டர் அ. இராமசாமி

 - விடுதலை நாளேடு, 27.2.20

ஞாயிறு, 1 மார்ச், 2020

தமிழக வரலாற்றில் ஆரியம் விளைத்த அழிவுகள் - 52

பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன்

எம்.ஏ.,எம்.லிட்., டிப்-இன்-சான்ஸ்கிரிட்

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெரு மக் கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம்  (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமுதாய வாழ்வும் சமற்கிருத மயமாக்கப்பட்ட கல்வி அறிவும் எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் பேராசிரி யர் பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன், எம்.ஏ.,எம்.லிட்., டிப்-இன்-சான்ஸ்கிரிட், ஆற்றிய உரை வருமாறு:

என்ன தொடங்கிற்று?

தமிழக வரலாற்றில் ஆரியம் விளைத்த அழிவினை உணரமுடிகிறதேயன்றி அந்த அழிவின் தொடக்கம் எது என்று காலக்கணக்குக் காட்ட நம்மால் முடியவில்லை. சங்க நூல்களில் ஆரியர் நுழைவு பற்றி நேரடியான குறிப்பு ஏதுமில்லை. ஆரியர்கள் தமிழகத்தினுள் கி.மு. 1000த்திலேயே புகுந்துவிட்டனர் என்று சிலர் கருத்து அறிவித்தனர். ஆனால், அறிஞர் பெருமக்களால் இக்கருத்து ஏற்கப் பெறவில்லை. எனினும், எங்கிருந்து எப்போது ஆரியர்கள் இந்த மண்ணில் புகுந்தனர் என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், ஒன்று மட்டும் தெளிவாகத் தமிழ்ச் சங்க இலக்கியங்களை ஆய்வோர்க்குத் தெரிகிறது. ஆரியப் பண்பாடு நஞ்சைப் போலச் சிறிது தமிழ்பண்பாட்டில் பரவியிருக்கிறது என்ற உண்மைதான் அது.

ஆரிய நுழைவுக் காலம்

ஆரிய நாகரிகத்தின் கலப்பிற்கு நேரடிச் சான்று ஏது மில்லை. பண்டைய நாளில் வடவரின் காப்பியங்களான இரா மாயணம், பாரதம் ஆகியவற்றிலும் ஆரியர்களின் தொடர்பு குறித்த நேரடிச் செய்திகள் இல்லை. கி.மு. ஆறாம் நூற்றாண் டில் வட புலத்தில் வாழ்ந்த பாணினி என்ற வடமொழி இலக்கணப் புலவன், இந்தியத் தென் எல்லை அரசுகளைப் பற்றி ஏதும் குறிப்பிடவில்லை. தென்னக அரசுகளில் தமிழகத் திற்கு வடக்கேயுள்ள கலிங்கத்தைப்பற்றி மட்டும் குறிப்பிடு கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கி.மு. நான்காம் நூற்றாண்டில் காத்யாயனர் என்ற வடமொழியாளன் சோழ அரசைக் குறிப் பிட்டுக் காட்டுகிறான். மனித உறவுகளுக் குத் தடையாக அழிவு விதிகளை அமைத்த மனு ஆரிய வர்த்தம் அல்லது ஆரிய நாட்டின் தெற்கு எல்லை என விந்தியத்தைச் சுட்டு கிறான். இக்குறிப்புகள் ஆரியர்கள் தமிழ் மண்ணில் நுழைதல் என்னும் கேடு விளையத் தொடங்கியது கி.பி. நான்காம் நூற்றாண்டிற்குப் பின்னர்தான் என்று காட்டுகின்றன.

பார்ப்பனக் குழுக்கள்

டாக்டர் கே.கே. பிள்ளை அவர்கள் பட்டயச் சான்று களையும், பார்ப்பனக் குழுக்களின் பெயர்களான நாற்பத் தெண்ணாயிரவர் எழுநூற்றுவர் என்பதனையும் கருத்தில் கொண்டு ஒரே மொத்தமாக ஆரியர்கள் ஒரே நேரத்தில் தமிழ் மண்ணில் புகவில்லை என்று கருதுகிறார். இன்று தமிழகத்தில் ஸ்மார்த்தப் பார்ப்பனர்கள் வாழும் பெரும் பாலான சிற்றூர்களில் இப்பெயர்கள் விளங்கி வருகின்றன. அஷ்டசகஸ்ரம் என்று முதலில் அழைக்கப் பெற்றது. தமிழ் மண்ணில் புகுந்தவுடன் எண்ணாயிரம் என்ற தமிழ்ச் சொல்லாகி விட்டது.

வடமார் பிரிவு

வடக்கிலிருந்து வந்த பார்ப்பனர்கள் வடமார் (வடவர்கள்) என்றும், ஆரியத்தின் தூய்மைப் பிரிவினர் என்றும் தம்மை அழைத்துக் கொண்டனர். சங்கப் புலவர்களிலே வடமோதன் கிழார் வடமான் வணக்கன் தமோதரனார் வடமான் வணக் கன் பேரிசாத்தான் முதலான புலவர்கள் வடமண்ணிலிருந்து வந்து புகுந்தவர்கள் என்று அவர்தம் பெயர்கள் காட்டு கின்றன. சங்கக் காலத்திற்கு முன்னரே வடவர் இந்த மண் ணில் நுழைந்து விட்டனர். நுழைந்த வடவர் அத்துணைப் பேரும் பார்ப்பனர்களா என்றால் இல்லை என்றே வரலாறு காட்டுகிறது. வடபுலத்துப் பார்ப்பனர், வடபுலத்து வைசியர், வடபுலத்துச் சூத்திரர் என்று பிரிந்து இருந்தவர்கள் இங்கு வந்து நுழைந்தனர். கழைக் கூத்தாடிகள் ஆரியப் பிரிவில் சூத்திரர்கள் அவர்களும் இங்கு வந்து சேர்ந்தனர்.

முகவர்கள்

ஆரியப் பண்பாட்டின் முகவர்கள் மெல்லத் தங்கள் சமய, இலக்கிய நெறிகளைப் பரப்பினர். அதோடு சமுதாயத்தில் கற்ற பிரிவினராக மாறினர். சமுதாய மேல்மட்ட வர்க்கம் தான் இந்த ஊடுருவலுக்கு இடமளித்தது. (உட்புகப் பெரும் இடமளித்தது). இன்றும்கூட மேல்மட்டத்தவரிடையேதான் ஆரியப் பண்புக்கூறுகள் வாழ்வில் பரவி நிரவிக் கிடப்பதை யும், எளிதில் ஆட்பட்டிருப்பதையும் காண்கிறோம். சிறிய எண்ணிக்கையிலமைந்த ஆரியச் சமுதாயம் மேல்மட்டச் செல்வாக்குப் பெற்றமையால் செல்வாக்குடையதாக விளங் கத் தலைப்பட்டது.

இனவழிச் சமுதாயம்

சங்க காலச் சமுதாயம் இனவழிப்பட்ட இயற்கை வழியில மைந்த மேய்ச்சல், வேளாண்மை ஆகிய தொழில்களை மேற்கொண்டு, இனத் தலைமையின்கீழ் இருந்து வந்தது. அங்கே ஜாதி, பிறப்பு வேற்றுமைப் பேய்களின் காற்று வீசவில்லை. அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்று தொழில் வழியே பிரிந்து, மொழி, இனவழியே வேறுபாடின்றி வாழ்ந்து வந்தனர்.

ஜாதிப் புழுக்கள்

இந்த நிலையில் வந்தது வேள்வி என்றும் (யஜ்னா) வேதனைச் சடங்கு. தம் விருப்பப்படி சமுதாயத்தை நெறிக்க, வளைக்கச் சில அரசர்கள் வேள்விக் கொடியைக் கையிலேந் தினர். பின் என்ன? தமிழன் பின்னே தள்ளப்பட்டு விட்டான். ஜாதி வெள்ளம் புகுந்துவிட்டது. சமுதாயச் சாக்கடையில் ஜாதிப் புழுக்கள் பல்கிப் பெருகிவிட்டன. சமயத்துறையில் ஆரிய எண்ணங்கள், பழக்கங்கள் செல்வாக்குப் பெறவே எளிமையான வழிபாட்டு முறையிலமைந்த சமயச் சடங்குகள் அகலத் தலைப்பட்டன. ஆரிய அழிவுச் சின்னங்களைச் சமயத் தொடர்பானவற்றைப் பெயருடன், பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்று பெயர்களுக்கு முன் அடைமொழியாகச் சேர்த்து அகமகிழ்ந்தனர் அரசர்கள் என்ற வேதனையையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

பெயர் மாறிய தெய்வங்கள்

முருகன் என்ற பெயரே வேதங்களில் கிடையாது. இங் குள்ள குறிஞ்சி மக்களின் தலைவனுக்கு ஸ்கந்தர், சுப்ரமணி யர், கார்த்திகேயர் என்று ஆரியப் போர்வை போர்த்தப் பெற்றது. தமிழ்த் தெய்வங்களில் கொற்றவை, அகநானூற்றில் கான்அமர்ழூசெல்வி என்றும், கலித்தொகையில் பெருங் காட்டுக்கொற்றி எனவும் கூறப்பட்ட இறைவியைச் சிவனின் துணைவி பார்வதியாக்கினர். சங்க இலக்கியத்தில்கூட மாலுக்கு அவதாரப் பெருமை சேர்க்கப்பெற்றுத் தமிழ்த் தெய்வம் என்ற நிலையை மாற்றி இந்தியத் தெய்வமாக்கினர். இந்த மாறுதல்கள் புதுப் பார்ப்பனர்களிடமும், பார்ப்பனரல் லாத உயர்மட்டத்திலும்தான் இருந்ததே தவிர கீழ் மட்டத் திலிருந்த மக்கள் அதற்கு ஆட்படவில்லை. இலக்கியத்திலும், மொழியிலும்

சமயத்தில் மட்டும்தானா ஆரியம், சங்கடம் விளைத்தது. சங்க இலக்கியத்திலும், சங்க கால மொழியிலும், ஆரியச் சனியன் புகுந்துவிட்டது. தமிழ்மொழியில் கலப்பு ஏற்படலா யிற்று. தொடக்கக் காலச் சங்க இலக்கியங்களில் இரண்டு விழுக்காட்டிற்கும் குறைவாகவே வடசொற்கள் விரவி நிற் கின்றன. ஆனால், காப்பியங்களின் காலத்தில் பத்து விழுக் காடு என்று மாறின. அதை அடுத்த சமய காலங்களில் 15 முதல் 20 விழுக்காடு என வடசொல் எண்ணிக்கை உயர்ந்தது. பார்ப்பனர்கள் புலவர்களாக விளங்கினர். புதிய அவர்தம் கருத்துகளைத் தம் இலக்கியத்தில் புகுத்திப் பரப்பினர் வடமொழியும் தமிழும் அறிந்த அவர்களால் வடமொழிச் சொற்களை விடுத்துத் தனித் தமிழைப் படைத்திட இயல வில்லை. மொழித் தூய்மை அழிந்தது. மொழியில் மட்டும் தான் கலப்படமாவெனில் கருத்திலும் கலப்படம் விளைந்தது.

ஆரியப் பண்பாட்டு எதிரொலி

தங்கள் பண்பாட்டை இலக்கிய ஏடுகளில் ஏற்றினர். அவர்தம் பாடல்கள் தமிழர்களின் இனவழிப் பண்பாட்டைக் காட்டாது, ஆரியப் பண்பாட்டை எதிரொலித்தன. விதவைப் பெண்டிரின் தலையை மழித்தல் சங்க இலக்கியப் பாடல் ஒன்றில் மட்டும் காணப்பெறுகிறது. இன்றும்கூட இனவழிப் பட்ட சமுதாயத்தில் பெண்டிர் விதவைக் கோலம் ஏற்காது மணவாழ்வு மேற்கொள்வதைக் காண்கிறோம். சங்க இலக்கி யத்தில் கைம்பெண்டிர் தலைமழித்தலைக் காட்டும் பாட லைப் பாடியிருப்பது பார்ப்பனப் பெண் புலவர்தாம். அவர் களுடைய வழக்கம் இங்கே காட்டப் பெறுகிறது.

புறச் சடங்குகள்

திருமணச் சடங்குகளிலும்கூட, அகநானூறு எளிமையான புரோகிதமற்ற முறையைச் சுட்டிக்காட்டுகையில் (அகம் 86), கலித்தொகையில் கையில் தர்ப்பையைப் பிடித்த அந்தணர் அகவாழ்க்கை மேற்கொள்ளும் விழாவில் உட்புகும் காட்சியும், மணமக்கள் நெருப்பை வலம் வருதலும் காட்டப் பெறுகிறது. ஆரியம் என்ற வலை மெல்ல மெல்லப் பரவி விரிகிறது என்பதற்கு இதுபோன்ற எடுத்துக்காட்டுகள் ஏராளம் காட்டலாம்.

சங்கம் மருவிய காலம்

சங்கம் மருவியகால இலக்கியங்களான சிலப்பதிகாரமும், மணிமேகலையும் தமிழ்ப் பண்பாட்டை, தமிழினக் கூறுக ளைச் சிறிதும் வெளிப்படுத்தாதவை. ஆரிய நெறிமுறை சங்க இலக்கிய காலத்திற்குச் சற்றேறக்குறைய இருநூறு ஆண்டு களுக்குள் எப்படி வேரூன்றிவிட்டது என்று எடுத்துக்காட்ட இந்த இரு இலக்கியங்களும் தகுந்த சான்றுகள்,

அறநெறிப் போதிப்பு

தமிழ் இலக்கியங்களில் சங்க இலக்கியங்கள் இயற்கையை, இல்வாழ்வை, வீரத்தைப் போற்றிப் புகழ்ந்து பாடின. ஆனால், சங்க காலத்தையடுத்துவந்த பதினெண்கீழ்க்கணக்கு நூல் களும், காப்பியங்களும் இயற்கையைப் பாடும் நிலையி லிருந்து விலகி, அறநெறியைப் போதிக்கத் தலைப்பட்டன. சங்க இலக்கியத்தின் இனிமையும், வளமையும் குன்றி இவ் விலக்கியங்களில் இலக்கிய இனிமைக்கு வறுமையேற்பட்டது. செழுமையில்லாத எலும்புக்கூடாக இலக்கியம் ஆயிற்று. இதனை ஆரியத் தாக்கம் விளைத்த இலக்கியச் சுவை அழிவு என்றுதான் குறிப்பிட வேண்டும். பல்லவர் எனும் தமிழ்ப் பகைவர்

சங்க காலத்தை அடுத்து பல்லவர்கள் காலத்தில் நிலைமை படுமோசமாயிற்று. தமிழ் மன்னர்கள் ஆண்ட தரணியில் தமிழரல்லாதவர் அன்றே ஆட்சிக் கட்டிலில் ஏறிவிட்டனர். தமிழரல்லாத பல்லவர் தமிழ் இன உணர்வைத் தமிழ் இலக்கிய வளர்ச்சியைக் கெடுக்க வந்த தடைக்கற்கள் ஆயினர். மகேந்திர பல்லவன் காலம் வரையிலும் அரசர்கள் தமிழிலேயே பட்டயங்கள் ஒன்றும் வெளியிடவில்லை. தமிழ் மண்ணில் ஆட்சி செலுத்தும் அரசன், தமிழர்களை ஆள்பவன் வடமொழியில் பட்டயம் வெளியிட்டால் அவன் தமிழனாய் இருப்பானா? மகேந்திரவர்மன் நிலை மட்டும் என்ன? முதலில் வடமொழியிலும், பின்னர்த் தமிழிலும் அமைந்த பட்டயங்களை வெளியிட்டான். இந்திய அரசின் இன்றைய விளம்பரம் போன்றது இது.

சோழரும், பாண்டியரும்

ஆகப் பல்லவர்தாம் தமிழர் மொழியை, தமிழர் பண்பாட்டை, தமிழர் நெறியை அழித்தவர்கள். நல்லவேளை, தொண்டை மண்டலத்தோடு அவர்கள் நின்றுவிட்டனர். பின்னர் வந்த சோழர்களும், இதே காலத்தில் பாண்டி மண்டலத்தை ஆட்சி செலுத்திய பாண்டிய மன்னர்களும் பல்லவர்களைப்போல் தமிழ் இலக்கிய இன உணர்வை அழிக்கவில்லையென்றாலும் தனித் தமிழ்ப் பண்பாட்டு நெறியினில் நின்றார்கள் அல்லர். சங்க காலத்தில் மன்னர் களின் பெயர்கள் எல்லாம் தமிழில் செங்குட்டுவன், கோப் பெருஞ்சோழன், நெடுஞ்செழியன் என்றிருந்தன.

ஆனால், பல்லவர் காலத்திற்குப்பின் பெயருக்கும்கூடத் தமிழ்ப்பஞ்சம் ஏற்பட்டுவிட்டது. வடசொற்கலந்த, வட மொழிப் பெயர்கள்தாம் அனைத்தும் ஜடாவர்மன், மாற வர்மன், அரிகேஸரி இராஜராஜன், இராஜேந்திரன் போன்ற பெயர்களைப் பார்த்தாலே இந்த உண்மை விளங்கும்.

இராஜராஜன் விளைத்த கேடு

இன்றைக்கு ஆயிரமாவது விழாக் கொண்டாடப் பெற்ற இராஜராஜன் செய்த செயல் ஒன்று எண்ணுந்தோறும் வேதனையை நெஞ்சில் நிரப்புவது ஆகும். தஞ்சைப் பெரிய கோயிலை எழுப்பியவர் குடமுழுக்கு விழாவிற்கு சோமேசு வர பட்டர் முதலான வடபுலத்துப் பட்டரைத் தமிழகம் வரவழைத்து, இங்கேயே தங்கச்செய்து வரிசைகள் வாரி வழங்கிப் பெருமைப்பட்டுக் கொண்டான். இங்குள்ள புரோ கிதர் போதாதென்று வடபுலத்து இருந்து வரவழைத்த செயல் தமிழ்ப்பண்பாட்டுக் குழியை மண்போட்டு மூடியதாயிற்று. பின்னால் ஆட்சிக்கு வந்த நாயக்கர்களும், மராத்தியர்களும் மொழியால், இனத்தால் வேறுபட்டவர்கள். இவர்தம் ஆட்சியில் தமிழ் அரவம் என்று ஆகி அரவம் அத்துவாணம் என்று ஒதுக்கினர். ஒதுக்கப் பெற்றது தமிழ் மட்டுமல்ல; தமிழ் இன உணர்வு, தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை எல்லாம்தாம்.

- விடுதலை நாளேடு, 25.2.20