ஞாயிறு, 1 மார்ச், 2020

தமிழக வரலாற்றில் ஆரியம் விளைத்த அழிவுகள் - 52

பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன்

எம்.ஏ.,எம்.லிட்., டிப்-இன்-சான்ஸ்கிரிட்

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெரு மக் கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம்  (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமுதாய வாழ்வும் சமற்கிருத மயமாக்கப்பட்ட கல்வி அறிவும் எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் பேராசிரி யர் பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன், எம்.ஏ.,எம்.லிட்., டிப்-இன்-சான்ஸ்கிரிட், ஆற்றிய உரை வருமாறு:

என்ன தொடங்கிற்று?

தமிழக வரலாற்றில் ஆரியம் விளைத்த அழிவினை உணரமுடிகிறதேயன்றி அந்த அழிவின் தொடக்கம் எது என்று காலக்கணக்குக் காட்ட நம்மால் முடியவில்லை. சங்க நூல்களில் ஆரியர் நுழைவு பற்றி நேரடியான குறிப்பு ஏதுமில்லை. ஆரியர்கள் தமிழகத்தினுள் கி.மு. 1000த்திலேயே புகுந்துவிட்டனர் என்று சிலர் கருத்து அறிவித்தனர். ஆனால், அறிஞர் பெருமக்களால் இக்கருத்து ஏற்கப் பெறவில்லை. எனினும், எங்கிருந்து எப்போது ஆரியர்கள் இந்த மண்ணில் புகுந்தனர் என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், ஒன்று மட்டும் தெளிவாகத் தமிழ்ச் சங்க இலக்கியங்களை ஆய்வோர்க்குத் தெரிகிறது. ஆரியப் பண்பாடு நஞ்சைப் போலச் சிறிது தமிழ்பண்பாட்டில் பரவியிருக்கிறது என்ற உண்மைதான் அது.

ஆரிய நுழைவுக் காலம்

ஆரிய நாகரிகத்தின் கலப்பிற்கு நேரடிச் சான்று ஏது மில்லை. பண்டைய நாளில் வடவரின் காப்பியங்களான இரா மாயணம், பாரதம் ஆகியவற்றிலும் ஆரியர்களின் தொடர்பு குறித்த நேரடிச் செய்திகள் இல்லை. கி.மு. ஆறாம் நூற்றாண் டில் வட புலத்தில் வாழ்ந்த பாணினி என்ற வடமொழி இலக்கணப் புலவன், இந்தியத் தென் எல்லை அரசுகளைப் பற்றி ஏதும் குறிப்பிடவில்லை. தென்னக அரசுகளில் தமிழகத் திற்கு வடக்கேயுள்ள கலிங்கத்தைப்பற்றி மட்டும் குறிப்பிடு கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கி.மு. நான்காம் நூற்றாண்டில் காத்யாயனர் என்ற வடமொழியாளன் சோழ அரசைக் குறிப் பிட்டுக் காட்டுகிறான். மனித உறவுகளுக் குத் தடையாக அழிவு விதிகளை அமைத்த மனு ஆரிய வர்த்தம் அல்லது ஆரிய நாட்டின் தெற்கு எல்லை என விந்தியத்தைச் சுட்டு கிறான். இக்குறிப்புகள் ஆரியர்கள் தமிழ் மண்ணில் நுழைதல் என்னும் கேடு விளையத் தொடங்கியது கி.பி. நான்காம் நூற்றாண்டிற்குப் பின்னர்தான் என்று காட்டுகின்றன.

பார்ப்பனக் குழுக்கள்

டாக்டர் கே.கே. பிள்ளை அவர்கள் பட்டயச் சான்று களையும், பார்ப்பனக் குழுக்களின் பெயர்களான நாற்பத் தெண்ணாயிரவர் எழுநூற்றுவர் என்பதனையும் கருத்தில் கொண்டு ஒரே மொத்தமாக ஆரியர்கள் ஒரே நேரத்தில் தமிழ் மண்ணில் புகவில்லை என்று கருதுகிறார். இன்று தமிழகத்தில் ஸ்மார்த்தப் பார்ப்பனர்கள் வாழும் பெரும் பாலான சிற்றூர்களில் இப்பெயர்கள் விளங்கி வருகின்றன. அஷ்டசகஸ்ரம் என்று முதலில் அழைக்கப் பெற்றது. தமிழ் மண்ணில் புகுந்தவுடன் எண்ணாயிரம் என்ற தமிழ்ச் சொல்லாகி விட்டது.

வடமார் பிரிவு

வடக்கிலிருந்து வந்த பார்ப்பனர்கள் வடமார் (வடவர்கள்) என்றும், ஆரியத்தின் தூய்மைப் பிரிவினர் என்றும் தம்மை அழைத்துக் கொண்டனர். சங்கப் புலவர்களிலே வடமோதன் கிழார் வடமான் வணக்கன் தமோதரனார் வடமான் வணக் கன் பேரிசாத்தான் முதலான புலவர்கள் வடமண்ணிலிருந்து வந்து புகுந்தவர்கள் என்று அவர்தம் பெயர்கள் காட்டு கின்றன. சங்கக் காலத்திற்கு முன்னரே வடவர் இந்த மண் ணில் நுழைந்து விட்டனர். நுழைந்த வடவர் அத்துணைப் பேரும் பார்ப்பனர்களா என்றால் இல்லை என்றே வரலாறு காட்டுகிறது. வடபுலத்துப் பார்ப்பனர், வடபுலத்து வைசியர், வடபுலத்துச் சூத்திரர் என்று பிரிந்து இருந்தவர்கள் இங்கு வந்து நுழைந்தனர். கழைக் கூத்தாடிகள் ஆரியப் பிரிவில் சூத்திரர்கள் அவர்களும் இங்கு வந்து சேர்ந்தனர்.

முகவர்கள்

ஆரியப் பண்பாட்டின் முகவர்கள் மெல்லத் தங்கள் சமய, இலக்கிய நெறிகளைப் பரப்பினர். அதோடு சமுதாயத்தில் கற்ற பிரிவினராக மாறினர். சமுதாய மேல்மட்ட வர்க்கம் தான் இந்த ஊடுருவலுக்கு இடமளித்தது. (உட்புகப் பெரும் இடமளித்தது). இன்றும்கூட மேல்மட்டத்தவரிடையேதான் ஆரியப் பண்புக்கூறுகள் வாழ்வில் பரவி நிரவிக் கிடப்பதை யும், எளிதில் ஆட்பட்டிருப்பதையும் காண்கிறோம். சிறிய எண்ணிக்கையிலமைந்த ஆரியச் சமுதாயம் மேல்மட்டச் செல்வாக்குப் பெற்றமையால் செல்வாக்குடையதாக விளங் கத் தலைப்பட்டது.

இனவழிச் சமுதாயம்

சங்க காலச் சமுதாயம் இனவழிப்பட்ட இயற்கை வழியில மைந்த மேய்ச்சல், வேளாண்மை ஆகிய தொழில்களை மேற்கொண்டு, இனத் தலைமையின்கீழ் இருந்து வந்தது. அங்கே ஜாதி, பிறப்பு வேற்றுமைப் பேய்களின் காற்று வீசவில்லை. அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்று தொழில் வழியே பிரிந்து, மொழி, இனவழியே வேறுபாடின்றி வாழ்ந்து வந்தனர்.

ஜாதிப் புழுக்கள்

இந்த நிலையில் வந்தது வேள்வி என்றும் (யஜ்னா) வேதனைச் சடங்கு. தம் விருப்பப்படி சமுதாயத்தை நெறிக்க, வளைக்கச் சில அரசர்கள் வேள்விக் கொடியைக் கையிலேந் தினர். பின் என்ன? தமிழன் பின்னே தள்ளப்பட்டு விட்டான். ஜாதி வெள்ளம் புகுந்துவிட்டது. சமுதாயச் சாக்கடையில் ஜாதிப் புழுக்கள் பல்கிப் பெருகிவிட்டன. சமயத்துறையில் ஆரிய எண்ணங்கள், பழக்கங்கள் செல்வாக்குப் பெறவே எளிமையான வழிபாட்டு முறையிலமைந்த சமயச் சடங்குகள் அகலத் தலைப்பட்டன. ஆரிய அழிவுச் சின்னங்களைச் சமயத் தொடர்பானவற்றைப் பெயருடன், பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்று பெயர்களுக்கு முன் அடைமொழியாகச் சேர்த்து அகமகிழ்ந்தனர் அரசர்கள் என்ற வேதனையையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

பெயர் மாறிய தெய்வங்கள்

முருகன் என்ற பெயரே வேதங்களில் கிடையாது. இங் குள்ள குறிஞ்சி மக்களின் தலைவனுக்கு ஸ்கந்தர், சுப்ரமணி யர், கார்த்திகேயர் என்று ஆரியப் போர்வை போர்த்தப் பெற்றது. தமிழ்த் தெய்வங்களில் கொற்றவை, அகநானூற்றில் கான்அமர்ழூசெல்வி என்றும், கலித்தொகையில் பெருங் காட்டுக்கொற்றி எனவும் கூறப்பட்ட இறைவியைச் சிவனின் துணைவி பார்வதியாக்கினர். சங்க இலக்கியத்தில்கூட மாலுக்கு அவதாரப் பெருமை சேர்க்கப்பெற்றுத் தமிழ்த் தெய்வம் என்ற நிலையை மாற்றி இந்தியத் தெய்வமாக்கினர். இந்த மாறுதல்கள் புதுப் பார்ப்பனர்களிடமும், பார்ப்பனரல் லாத உயர்மட்டத்திலும்தான் இருந்ததே தவிர கீழ் மட்டத் திலிருந்த மக்கள் அதற்கு ஆட்படவில்லை. இலக்கியத்திலும், மொழியிலும்

சமயத்தில் மட்டும்தானா ஆரியம், சங்கடம் விளைத்தது. சங்க இலக்கியத்திலும், சங்க கால மொழியிலும், ஆரியச் சனியன் புகுந்துவிட்டது. தமிழ்மொழியில் கலப்பு ஏற்படலா யிற்று. தொடக்கக் காலச் சங்க இலக்கியங்களில் இரண்டு விழுக்காட்டிற்கும் குறைவாகவே வடசொற்கள் விரவி நிற் கின்றன. ஆனால், காப்பியங்களின் காலத்தில் பத்து விழுக் காடு என்று மாறின. அதை அடுத்த சமய காலங்களில் 15 முதல் 20 விழுக்காடு என வடசொல் எண்ணிக்கை உயர்ந்தது. பார்ப்பனர்கள் புலவர்களாக விளங்கினர். புதிய அவர்தம் கருத்துகளைத் தம் இலக்கியத்தில் புகுத்திப் பரப்பினர் வடமொழியும் தமிழும் அறிந்த அவர்களால் வடமொழிச் சொற்களை விடுத்துத் தனித் தமிழைப் படைத்திட இயல வில்லை. மொழித் தூய்மை அழிந்தது. மொழியில் மட்டும் தான் கலப்படமாவெனில் கருத்திலும் கலப்படம் விளைந்தது.

ஆரியப் பண்பாட்டு எதிரொலி

தங்கள் பண்பாட்டை இலக்கிய ஏடுகளில் ஏற்றினர். அவர்தம் பாடல்கள் தமிழர்களின் இனவழிப் பண்பாட்டைக் காட்டாது, ஆரியப் பண்பாட்டை எதிரொலித்தன. விதவைப் பெண்டிரின் தலையை மழித்தல் சங்க இலக்கியப் பாடல் ஒன்றில் மட்டும் காணப்பெறுகிறது. இன்றும்கூட இனவழிப் பட்ட சமுதாயத்தில் பெண்டிர் விதவைக் கோலம் ஏற்காது மணவாழ்வு மேற்கொள்வதைக் காண்கிறோம். சங்க இலக்கி யத்தில் கைம்பெண்டிர் தலைமழித்தலைக் காட்டும் பாட லைப் பாடியிருப்பது பார்ப்பனப் பெண் புலவர்தாம். அவர் களுடைய வழக்கம் இங்கே காட்டப் பெறுகிறது.

புறச் சடங்குகள்

திருமணச் சடங்குகளிலும்கூட, அகநானூறு எளிமையான புரோகிதமற்ற முறையைச் சுட்டிக்காட்டுகையில் (அகம் 86), கலித்தொகையில் கையில் தர்ப்பையைப் பிடித்த அந்தணர் அகவாழ்க்கை மேற்கொள்ளும் விழாவில் உட்புகும் காட்சியும், மணமக்கள் நெருப்பை வலம் வருதலும் காட்டப் பெறுகிறது. ஆரியம் என்ற வலை மெல்ல மெல்லப் பரவி விரிகிறது என்பதற்கு இதுபோன்ற எடுத்துக்காட்டுகள் ஏராளம் காட்டலாம்.

சங்கம் மருவிய காலம்

சங்கம் மருவியகால இலக்கியங்களான சிலப்பதிகாரமும், மணிமேகலையும் தமிழ்ப் பண்பாட்டை, தமிழினக் கூறுக ளைச் சிறிதும் வெளிப்படுத்தாதவை. ஆரிய நெறிமுறை சங்க இலக்கிய காலத்திற்குச் சற்றேறக்குறைய இருநூறு ஆண்டு களுக்குள் எப்படி வேரூன்றிவிட்டது என்று எடுத்துக்காட்ட இந்த இரு இலக்கியங்களும் தகுந்த சான்றுகள்,

அறநெறிப் போதிப்பு

தமிழ் இலக்கியங்களில் சங்க இலக்கியங்கள் இயற்கையை, இல்வாழ்வை, வீரத்தைப் போற்றிப் புகழ்ந்து பாடின. ஆனால், சங்க காலத்தையடுத்துவந்த பதினெண்கீழ்க்கணக்கு நூல் களும், காப்பியங்களும் இயற்கையைப் பாடும் நிலையி லிருந்து விலகி, அறநெறியைப் போதிக்கத் தலைப்பட்டன. சங்க இலக்கியத்தின் இனிமையும், வளமையும் குன்றி இவ் விலக்கியங்களில் இலக்கிய இனிமைக்கு வறுமையேற்பட்டது. செழுமையில்லாத எலும்புக்கூடாக இலக்கியம் ஆயிற்று. இதனை ஆரியத் தாக்கம் விளைத்த இலக்கியச் சுவை அழிவு என்றுதான் குறிப்பிட வேண்டும். பல்லவர் எனும் தமிழ்ப் பகைவர்

சங்க காலத்தை அடுத்து பல்லவர்கள் காலத்தில் நிலைமை படுமோசமாயிற்று. தமிழ் மன்னர்கள் ஆண்ட தரணியில் தமிழரல்லாதவர் அன்றே ஆட்சிக் கட்டிலில் ஏறிவிட்டனர். தமிழரல்லாத பல்லவர் தமிழ் இன உணர்வைத் தமிழ் இலக்கிய வளர்ச்சியைக் கெடுக்க வந்த தடைக்கற்கள் ஆயினர். மகேந்திர பல்லவன் காலம் வரையிலும் அரசர்கள் தமிழிலேயே பட்டயங்கள் ஒன்றும் வெளியிடவில்லை. தமிழ் மண்ணில் ஆட்சி செலுத்தும் அரசன், தமிழர்களை ஆள்பவன் வடமொழியில் பட்டயம் வெளியிட்டால் அவன் தமிழனாய் இருப்பானா? மகேந்திரவர்மன் நிலை மட்டும் என்ன? முதலில் வடமொழியிலும், பின்னர்த் தமிழிலும் அமைந்த பட்டயங்களை வெளியிட்டான். இந்திய அரசின் இன்றைய விளம்பரம் போன்றது இது.

சோழரும், பாண்டியரும்

ஆகப் பல்லவர்தாம் தமிழர் மொழியை, தமிழர் பண்பாட்டை, தமிழர் நெறியை அழித்தவர்கள். நல்லவேளை, தொண்டை மண்டலத்தோடு அவர்கள் நின்றுவிட்டனர். பின்னர் வந்த சோழர்களும், இதே காலத்தில் பாண்டி மண்டலத்தை ஆட்சி செலுத்திய பாண்டிய மன்னர்களும் பல்லவர்களைப்போல் தமிழ் இலக்கிய இன உணர்வை அழிக்கவில்லையென்றாலும் தனித் தமிழ்ப் பண்பாட்டு நெறியினில் நின்றார்கள் அல்லர். சங்க காலத்தில் மன்னர் களின் பெயர்கள் எல்லாம் தமிழில் செங்குட்டுவன், கோப் பெருஞ்சோழன், நெடுஞ்செழியன் என்றிருந்தன.

ஆனால், பல்லவர் காலத்திற்குப்பின் பெயருக்கும்கூடத் தமிழ்ப்பஞ்சம் ஏற்பட்டுவிட்டது. வடசொற்கலந்த, வட மொழிப் பெயர்கள்தாம் அனைத்தும் ஜடாவர்மன், மாற வர்மன், அரிகேஸரி இராஜராஜன், இராஜேந்திரன் போன்ற பெயர்களைப் பார்த்தாலே இந்த உண்மை விளங்கும்.

இராஜராஜன் விளைத்த கேடு

இன்றைக்கு ஆயிரமாவது விழாக் கொண்டாடப் பெற்ற இராஜராஜன் செய்த செயல் ஒன்று எண்ணுந்தோறும் வேதனையை நெஞ்சில் நிரப்புவது ஆகும். தஞ்சைப் பெரிய கோயிலை எழுப்பியவர் குடமுழுக்கு விழாவிற்கு சோமேசு வர பட்டர் முதலான வடபுலத்துப் பட்டரைத் தமிழகம் வரவழைத்து, இங்கேயே தங்கச்செய்து வரிசைகள் வாரி வழங்கிப் பெருமைப்பட்டுக் கொண்டான். இங்குள்ள புரோ கிதர் போதாதென்று வடபுலத்து இருந்து வரவழைத்த செயல் தமிழ்ப்பண்பாட்டுக் குழியை மண்போட்டு மூடியதாயிற்று. பின்னால் ஆட்சிக்கு வந்த நாயக்கர்களும், மராத்தியர்களும் மொழியால், இனத்தால் வேறுபட்டவர்கள். இவர்தம் ஆட்சியில் தமிழ் அரவம் என்று ஆகி அரவம் அத்துவாணம் என்று ஒதுக்கினர். ஒதுக்கப் பெற்றது தமிழ் மட்டுமல்ல; தமிழ் இன உணர்வு, தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை எல்லாம்தாம்.

- விடுதலை நாளேடு, 25.2.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக