ஞாயிறு, 1 மார்ச், 2020

சங்க அரசியல் சமற்கிருத மயமாதல்

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation)  பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமுதாய வாழ்வும் சமற்கிருத மயமாக்கப்பட்ட கல்வி அறிவும் எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் திருமதி.  மீனாட்சி முருகரத்தினம்ஆற்றிய உரை வருமாறு:

அரசியற் சிந்தனை மூன்றுடன் தொடர்புடையது; (1) மனிதனின் பண்புகள், செயல்கள்; (2) புற உலகுடன் அவனது உறவு-வாழ்வின் பொருளாகவும் குறிக்கோளாகவும் அவன் கொள்வது; (3) இவ்விரண்டின் விளைவாகத் தோன்றுவதாகிய, மனிதன் பிற மனிதருடன் கொள்ளும் கூட்டுறவு. இவற்றுள் மூன்றாவது அரசின் தன்மை, நோக்கம், செயற்பாடு ஆகியன குறித்துப் பேசுவதாகும். ஏனெனில் மனிதன் அவனது குறிக்கோள், அவனுடைய சமூகத் தொடர்புகள், செயற் பாடுகள் ஆகியன ஒன்றோடொன்று உறவுடையவை.

அரசியற் சிந்தனைகளை அரசு பற்றிய கோட்பாடுகளாகக் காண்பது அரசியல் தத்துவம் (Political Philosophy); அரசின் அமைப்பு முதலியவைப்பற்றிக் கருதிப்பார்ப்பது அரசியல் அறிவியல்(Political Sciences)  இவ்விரண்டுமே ஆய்விற் குரியன.

இவற்றுள் முதலாவது, அடிப்படையில் மனித இயல்பு பற்றியதாகும். ஏனெனில், மனிதனை ஒரு குறிப்பிட்ட சமூகம் எந்தக் கண்ணோட்டத்துடன் நோக்கியதோ அதற்கேற்ப இது உருவாகும். அரசியற் சிந்தனை வரலாற்றில் இது காலத்துக்குக் காலம் மாறுவதாகும். மனிதனைப் பாவத்தின் உரு எனக் கருதியோர் உண்டு; சட்டங்களைப் பின்பற்றும் எந்திரமாய்க் கருதித் தானே பகுத்துச் செயற்படும் உரிமையை அவனுக்கு வழங்க மறுத்தோர் உண்டு. மனிதன் பற்றிய இக்கண்ணோட்ட வேறுபாடுகளால் அரசியற் சிந்தனைகள் எங்ஙனம் பாதிக்கப்படுகின்றன எனக் காணலாம்.

வீரத்துறக்கம் புகுதலே மனித வாழ்வின் குறிக்கோள். அகமும் புறமும் காதலும் போரும் அவன் கண்ணெனக் கருதியது வீரயுகம். அக்காலத்தில் களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனாக, நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடன் ஆக இருந்தது. வீரம் என்ற பெயரில் வெங்கொடுமைச் சாக்காட்டை விளைவித்தல் எற்றுக்கு? வீடுபேறே மனிதன் நாடும் பொருளாதல் வேண்டும் என்று, மனித வாழ்வின் பொருள் பேரின்பப் பேறே எனக் கருதியபோது மக்கள் நல்வாழ்வும் அறமும் வேள்வியும் மன்னன் கடனாயின; மக்கள் தொழிலுமாயின. அசோக மன்னனின் அரசியற் சிந்தனை மாற்றத்திற்குக் காரணமே, மனித வாழ்வின் குறிக் கோள் பற்றிய அவனது கருத்தில் ஏற்பட்ட மாற்றம்தானே? பேரரசின் விரிவே பேரரசன் சிறப்பென்பதை விடுத்து பேரன்பின் வழியே பெருமைக்கு அடிக்கல் எனக் கருதிய வுடன் அசோக அரசின் அமைப்பும் போக்கும் செயல் திட்டங்களும் முழுமாற்றம் உற்றன அல்லவா? அவ்வள வேன்? வீட்டில் பெற்றோர்-மக்கள் உறவு; பள்ளியில் ஆசிரியர்-மாணவர்; தலைமையாசிரியர்-ஆசிரியர் உறவு; முதலாளி-தொழிலாளி உறவு; அரசு-குடிமக்கள் உறவு ஆகிய அனைத்துமே, மனிதனின் பண்பும் செயற்பாடும் மனித வாழ்வின் குறிக்கோளும் பற்றிய கருத்துகளின் வேற்றுமை யால்தானே பல்வேறுவிதமாக அமைகின்றன?

எனவே, அரசின் நோக்கமும் செயற்பாடும், மனித வாழ்வு பற்றிய அந்தந்தச் சமூகத்தின் கண்ணோட்டத்திலேயே அமையும். எல்லாவித வேறுபாடுகளோடும் மனிதன் ஒற்றுமையாக உடன்பட்டு வாழவேண்டும் என்பது இன்றைய சிந்தனை. அதற்கேற்ப இந்திய அரசு சமய, இனச் சார்பற்ற(Secular) அரசாக உள்ளது. குறிப்பிட்ட சமயத்தைப் பின்பற்றி நடந்தாலே மனிதன் உய்திபெறலாம் எனக் கருதும் சமூகத்தில் சமய அரசு நிலவும். தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற உழைப்பும் தேவைக்கேற்ற ஊதியமும் கொண்டு மக்கள் சமமாக வாழவேண்டும் என்பது பொதுவுடைமை அரசு. அவரவர் முன்னேற்றம் அவரவர் பாடு என்றால், முதலா ளித்துவ அரசு. வீரமே விழுமியது எனில் அதை வெளிக்காட்ட வாய்ப்புத் தரும் போர் வேட்கை மிக்க அரசு செல்வமே பெரிது எனில், வாணிகமும் தொழிலும் பெருக் கியும் அதற்குப் பாதுகாப்புத் தந்தும் அரசை விரிக்கும் தொழிலரசு; வீடுபேறே பெரிதெனில் சமய அரசு. எனவே, மனிதன் அவன் தேவை, குறிக்கோள் முதலியனபற்றி ஒரு சமூகம் கொண்டிருக்கும் கோட்பாட்டின் தாக்கத்தால்தான் அரசு பற்றிய கோட்பாடும் அரசின் கோட்பாடும் உருவா கின்றன.

இவைபற்றி, எண்ணங்களாகத் தருவது அரசியல் தத்துவம்; அவ்வெண்ணங்களின் நடைமுறை அமைப்புப் பற்றி எண்ணுவது அரசியலறிவு, சட்டமன்றங்கள்-ஆட்சி மன்றங்கள் ஆகியவற்றுக் கிடையேயுள்ள உறவு, அரசின் பல்வேறு அங்கங்களின் பணிகள், தலைமை அதிகாரம், உள்ளாட்சி, குடிமகனின் நிலை இவைபற்றியெல்லாம் ஆராய்வது பின்னது.

அரசியற் சிந்தனையின் வரலாறு என்பது, மேற்குறித்த அரசியல் உறவுகளில் மனிதனின் ஆர்வமையம் மாறிவரு கின்ற வரலாறே ஆகும்.

இந்தக் கண்ணோட்டத்தில் தமிழக அரசியற் சிந்தனை யின் வரலாற்றை நோக்குகையில்-குறிப்பாகச் சங்ககால அரசு நிலையை ஆராய்கையில், அரசியல் உறவு நிலைகளில் ஒரு மாற்றம் ஏற்பட்ட காலமாக அது தோன்றுகிறது. சமற்கிருத மயமாதல் என்ற தொடருக்குப் பொருத்தமான சூழல் உருவாகி இருந்ததை அக்காலச் சமூக, அரசியல் வரலாற்று ஊற்றான இலக்கியத் துணைகொண்டு அறிய முடிகிறது.

மைசூரில் வாழ்கின்ற கூர்க் இன மக்கள் பற்றிய ஆய்வின் போது திரு. எம்.என். சீனிவாசனால் அறிமுகப்படுத்தப்பட்ட தொடர், சமற்கிருத மயமாதல். முதலில் பிராமண மயமாதல் என்ற தொடரும் பிறகு அதனினும் விரிந்த சமற்கிருத மயமாதல் என்ற தொடரும் பயன்படுத்தப்பட்டன. தொடக்கத்தில் சமயத் துறையில், சமூகத்தில் தாழ்ந்த இனத்தவராகக் கருதப்பட்டவர், தங்களைச் சமூகத்தட்டில் உயர்மட்டத்தவராய்க் காட்டிக் கொள்ளும் முயற்சியில், மேலினமாய்க் கருதப்பட்டோரின் பழக்க வழக்கங்களைத் தாங்கள் மேற்கொள்வதைச் சுட்டுதற்குப் பயன்படுத்தப்பட்ட இத்தொடர் அதன்பின் பொருளியல், சமூகத்துறைகளில் ஏற்படும் இத்தகு உயர்வு முயற்சிகள் அனைத்தையும் சுட்டப் பயன்படுத்தப்பட்டது. இக்கோட்பாட்டை வரலாற்று அடிப் படையிலும் பயன்படுத்தலாம். (Historical specific). சூழல் அடிப்படையிலும் பொருத்திப் பார்க்கலாம். (Contextual specific). பின்னதற்கு வரையறை இல்லை. ஒன்று மற்றொன்றன் தன்மைகளை ஏற்கும்போதெல்லாம் சமமாக வோ மேனோக்கியோ    கீணோக்கியோ      கூட இம்மாற்றம் அமையலாம். (Tribalisation, Desanbritisation, Dravidianisation, Urbanisation, Indianisation, westernisation in short any hyperisation or even alieinisation.)

பரந்தகன்றிருந்தாலும் இக்கோட்பாடு, பண்பாடு தொடர் பான சமூகவியற் கோட்பாடு. சமூகமாற்றம் ஒன்றை விளக்கு வதற்கு எழுந்தது. எல்லை அகலலாம்; தாண்டலாகாது அல்லவா? அரசியலுக்கு எப்படிப் பொருந்தும்? அரசியலில் உயர்வு தாழ்வு ஏது? மற்றோரினப் பழக்கத்திற்கு மாற வேண்டிய தேவை என்ன? இன்னோரன்ன நியாயமான வினாக்கள் எழலாம்.

முதலில், அரசியல் என்பதே சமூக ஒழுங்கிற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்புதான்; இரண்டாவது அரசியற் சூழல், சமூக மாற்றம் நிகழ-சமற்கிருத மயமாதல் நிகழ்தற்கும்-அடிப்படை ஆகலாம். இவ்விடத்தில் அரசியலால் விளையும் சமற்கிருத மயமாதற்கும், அரசியலில் விளையும் சமற்கிருதம யமாதற்கும் வேறுபாடு காணவேண்டும். இரண்டாவதே இக்கட்டுரையில் பேசப்படுகிறது.

சமற்கிருதமயமாதல் என்பது, தொடக்க நிலையில், சமூக அமைப்பு மாற்றம் (Structural change) சுட்டாமல், சமூக நிலை மாற்றம்(Positional change) மட்டும் அதுவும் சமூகக் குழுக்களிடையே மட்டும் நிகழ்வது என விளக்கப்பட்டது. பின்னர், Harold A. Gould போன்றோரால், சமூக அமைப்பிற்கும் பொருத் திப் பார்க்கக்கூடியதெனச் சுட்டப்பட்டது. அவர் கருத்துப்படி, சமற்கிருதமயமாதல் பண்பாட்டு ஒப்புமையாக்கம் மட்டு மன்று; சமூக பொருளியல் தாழ்நிலைகளை எதிர்த்துப் போராடும் உணர்ச்சியின் வெளியீடாகும். எனவே, பண்பாட்டு முகமூடியின்பின் நடைபெறும் பொருளியல் சமூக, மேனிலை கட்கான, உள்ளார்ந்த ஜாதிப் போராட்டம், வாழையடி வாழையாகச் சில இனங்கள் சமூக மேனிலை பெற்று வாழும் சமூகத்தில் இது நடைபெறும் என்பது அவர் கருத்து.

அரசியலில் சமற்கிருதமயமாதல் என்பது சமூகக் கட்டுக்கோப்பிலேயே நிகழும் மாற்றம் ஆகும். கட்டுக்கோப்பு என்பது ஜாதி, உறவுமுறைகள், இனங்கள், தொழிற் குழுக்கள், அரசு நிர்வாக அமைப்புக்கள் அனைத்தும் உள்ளடக்கிய சமூகக் கூட்டுறவு நிலைகள் ஆகும். ஏற்கெனவே நிலைத்திருக்கும் அமைப்பில் ஏற்பட்ட புதிய மாற்றங்களின் தன்மைகளை ஆய்வதே கட்டுக்கோப்பு மாற்ற ஆய்வு. சான்று-கூட்டுக்குடும்பம்-தனிக்குடித்தனம் - முடியாட்சி - குடியாட்சி, மருமக்கள் தாயம்-மக்கள் தாயம். இம்மாற்றங்கள் அனைத்தும் சமற்கிருதமயம் என அழைத்தற்குரியன அல்ல. சமூக ஏணியில் உயர்வு கருதி-தாம் இதுவரை பின்பற்றி வந்ததினும், பிறரால் அறிமுகப்படுத்தப்பட்ட மற்றொன்று தம் நலம் விளைப்பது என எண்ணி நிகழ்த்தும் மாற்றமே சமற்கிருத மயமாகும்.

அவ்வகையில் சங்கக் காலத்தில் ஆரியர் வருகையால் அரசு அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களே ஈண்டு சங்க அரசிய லில் ஏற்பட்ட சமற்கிருத மயங்களாகச் சுட்டப்படுகின்றன.

அஃது இருவகையில் நிகழ்ந்தது. ஆரியர் சமயம் தமிழக அரசர் ஆதரவு பெற்றுப் பின் அச்சமயத்தார் அரசியலில் உயர்வு பெற்றுப் பின் அச்சமயத்தைப் போற்றி வளர்த்த ஜாதியார் அரசாதரவுப் பெற்று அவர் தம் ஆரியக் கோட்பாடுகள் தமிழக அரசமைப்பில் மாற்றங்கள் ஏற்படுத்திய நிலை, வெளிப்படைச் சமற்கிருதமயமாக்கம். இலக்கியம், கலை, சமயம், பழக்க வழக்கங்கள் (உணவு தொடங்கி) முதலியவை ஆரியமயமாக அதனால் மனிதச் சிந்தனையில் மனித வாழ்வின் பொருளும் நோக்கமும் குறித்து ஏற்பட்ட மாற்றங்களால், அரசியல் தத்துவத்தில் ஏற்பட்ட மாறுபாடு, மறைமுகச் சமற்கிருதமயமாகும்.

டாக்டர் ந. சுப்பிரமணியன் தன் ஆய்வுரையில்(The Sangampolity) சுட்டுவது போல், இது திட்டமிட்ட செயலாக இல்லாமல் இருக்கலாம். எனினும் பொதுவாகவே, அக்கரைப் பச்சையில் மயங்குவதும் அடுத்தவர் மகவைப் போற்றுவதும் இந்தியப் பண்பாகத் தோன்றுவதால் அவ்வாசிரியரே விளக்குவதுபோல ஆரிய அந்தணரின் சமயக் கோட்பாடுகள் (Metaphysical thoughts) தமிழரைக் கவர அதனால் விரும்பி ஏற்பட்ட மாற்றமாதல் கூடும். காரணம் எதுவாயினும் மாற்றம் ஏற்பட்டமை மறுக்க முடியாதது. ஏறு தழுவல் சுட்டும் நூற்பாக்களைக் கொண்டிருக்கக் கூடிய பன்னிருபடலம் தமிழ் முறையாகக் கற்புகட்டும் தொல் காப்பியம் வைதீக நெறியாதல் கூடுமோ என டாக்டர் அறவா ணன் கருதுமளவு அந்நூலிலேயே ஆரிய வழக்குகள் (இடைச்செருகலோ, இருவர் நூல் மயக்கமோ, பிறசேர்க் கையோ) இருக்கின்றன.

மதுரைக் காஞ்சியில் மட்டும் அமைச்சர் தனியாகவும் நாற்பெருங் குழு தனியாகவும் சுட்டப்பட ஏனைய நூல்களில் இடம்பெறாமல், சிலம்பு, மேகலைகளில் மட்டும் திடீர் இடம்பெற்றுப் பின் மறைந்துவிடும் அய்ம்பெருங்குழு, எண் பேராயங்கள், புள் நிமித்தம் பார்த்த அரசர், புரோகிதர் கொண்டு நிமித்தம் காணல், செங்குட்டுவன் சமயச் சின்னம் அணிந்து போர்க் கெழல், சூதர் மாகதர் வைதாளிகர் துணை, அரசவையில் கணிகையர்க்கு இடம், பரத்தையர் சேரியன்றி நகர் நடுவே கணிகையர் தெருக்கள், அரசியலில் அந்தணர் முதன்மை, பார்ப்பார்க்கல்லது பணிபு அறியலையே (புறம் 6) எனப் பாடும் அளவும் பார்ப்பார்ப் பிழைத்தல் குற்றமெனக் கொள்ளும் அளவும் அவர்க்கு முதன்மை, அரசர்கள் வேள்வி இயற்றல், தரும வினைஞர் என, சமயச் செய்திகளைக் கவனிக்க அரசமைப்பில் இடம் ஒதுக்குதல், கஞ்சுக மக்கள் இடம்பெறல், அரசமைப்பின் அதிகாரிகள் வடமொழிப் பெயர்களால் சுட்டப்படல், பிரமதேயங்கள் எழல் இன் னோரன்ன பதச்சோறுகள், வீரயுகம் மறைந்து வேள்வியுகம்-வேதயுகம் பிறந்த அரசு நிலையைச் சுட்டுகின்ற முழுமையாக இதை ஏலாமல் எதிர்த்த நிலைகள் இருந்திருக்கின்றன. ஒருபுறம், சிவனாகிய இறைவனை எதிர்த்த சமயத்தாரை, வாதில் வென்றதாகப் பாராட்டுப்பெற்ற அந்தணர்பற்றிய குறிப்பும் (புறம் 166) மறுபுறம், துடியன், பறையன், பாணன், கடம்பன் இந்நான்கல்லது குடியும் இல்லை என மறத் தமிழ்க்குடி போற்றும் மானவுணர்வும் (புறம் 335) இருந்துள்ளன.

வேற்றுமை தெரிந்த நாற்பால் பிறந்தது. வேள்வி பெருகிற்று, வீடுபேறு குறிக்கோள் ஆயிற்று. வீரம் பிற்பட்டது. சான்றோர் வீரராக இருந்து அறிஞர் ஆயினர். சான்றோனாக்கு தல் தந்தைக்குக் கடனாக இருந்த வீரயுகத்தில் சான்றோர் வீரர், சான்றோன் எனக் கேட்டு மகிழ்ந்த தாயின் காலத்தில் சான்றோர் - அறிஞர். இந்த மாற்றம் எப்படி விளைந்தது? வீரவஞ்சிகள் அறவெண்பாக்களாகிச் சமய விருத்தங்களானது எவ்வாறு?

திரு. டி.பி. முகர்ஜி சுட்டுவதுபோல இந்திய மரபின் சிறப்பே அதன் நிதானத்தில்தான் உள்ளது. பழையன கழிதலும் புதியன புகுதலும் மெல்ல மெல்லவும் சிறிது சிறிதாகவும் திகழ்வதுடன், இடையில் தடை செய்து மாற்றத்தின் விரைவையும் அளவையும் குறைக்கும் மரபு மனங்கள் இருந்தமையாலும் அயன்மையை ஏற்றும் தன்மை மாறாமல், இரட்டைப் போர்க்குடன் வாழ முடிவதாலும் பல மாற்றங்களை நாம் உணராது போகலாம்.

எனினும் ஊன்றி நோக்கினால், சங்க அரசியல் வெளிப் படையாகவும் மறைமுகமாகவும் சமற்கிருத மயமாக்கப்பட்ட மையை உணரலாம்.

- திருமதி. மீனாட்சி முருகரத்தினம்  (தமிழ்த்துறை இணைப் பேராசிரியர், அஞ்சல்வழிக் கல்வித்துறை,

மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை - 21.)

- விடுதலை நாளேடு 20 2 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக