வியாழன், 19 மார்ச், 2020

அவசர நிலையை எதிர்த்துப் போர்ப் பிரகடனம்! - மணியம்மையார்

நம் நாட்டுக்குச் "சுதந்திரம்" வந்து 28 ஆண்டுகள் ஆன பிறகும் காட்டுமிராண்டித்தனமான இழிவுச் சின்னமாகக் கருதப்படுகின்ற ஜாதி இன்னமும் ஒழிந்த பாடில்லை. அதற்கு நேர்மாறாக, முன்பைவிடப் புது முறுக்கும், தெம்பும், ஆணி அடித்ததுபோல் உறுதியும், பலமும் கொண்டதாகவே அது நமது "சுதந்திரத்தின்" கீழ் ஆகியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

வறுமையும், ஏழ்மையும் ஒழியாமல் இன்னமும் இருந்து  வருகிறது. மக்களில் இன்னும் நூற்றுக்கு அறுபது பேர் எழுதப் படிக்கத் தெரியாத தற்குறிகளாகவே இருக்கின்றனர்.

சோஷியலிசம் என்பது ஆட்சியின் கொள்கை யென்று பிரகடனப்படுத்தப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் அது இன்னும் கானல்நீர் வேட்கையாகவே இருந்து வருகிறது.

ஆனால், இன்றைய நிலை என்ன?

இரண்டு அவசர காலச் சட்டங்கள், பத்திரிகை "சென்சார்" எல்லாம் செய்து பொருளாதாரத் திட்டங்களை அறிவிக்கும் நிலை இருக்கிறது என்றால், இது மகிழ்ச்சி அடையக் கூடிய நிலையா? அல்லது வெட்கமும், வேதனையும் அடையத்தக்க நிலையா?

நம்மைப் பொறுத்தவரையில் நாம் நம் தந்தை வகுத்த வழியிலிருந்து சிறிதும் தவறி நடக்காமலும், பாதையைக் கெடுக்காமலும் ஒரே ஒழுங்காகவே வைத்துக் கொண்டு சீரான நேர்வழியில் நடைபோட்டு வருகிறோம். அதிலும் நமது நிலையிலிருந்து சிறிதும் பிறழாமல் ஒரே தன்மையில், அறிவையே மூலதனமாகக் கொண்டு அமைதியாக நடந்து வருகின்றோமே தவிர, அழிவுப் பாதையிலோ அவசர அலங்கோல முடிவையோ நாம் கைக் கொள்ளவில்லை. தந்தை அவர்கள் நமக்குப் பயிற்றுவித்த அறிவுக் கொள்கை தன்னம்பிக்கை, மான உணர்ச்சி, துணிவு, எதற்கும் விட்டுக் கொடாமை. இவற்றையே பின்பற்றி வருவதால் இன்றுள்ள அரசியலில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பான நிலையால் நமக்கு எந்த விதத்திலும் அதிர்ச்சியோ, பயமோ ஏற்படுவதற்கு வழியில்லை. இவற்றை எல்லாம் நாம் எதிர்பார்த்தவர்கள். அத்தோடு இவை கட்டாயம் என்றாவது ஒருநாள் வந்துதான் தீரும். அப்போதுதான் நமது நாட்டிற்கு, மக்களுக்கு ஒரு விடிவு ஏற்படும் என்று நம் மதிப்புக்குரிய பெரியார் அவர்கள் என்றென்றும் சொல்லி வந்தார்கள். இன்று அதற்கு ஏற்றாற்போல் வந்துள்ளதே தவிர வேறில்லை. அய்யா அவர்கள் சொல்லியவை நம் நினைவிலிருந்து இன்னும் மறைந்து விடவில்லை. "அதாவது நமது நாட்டை யார் ஆளு கிறார்கள் என்பது முக்கியமல்ல. எவர் ஆண்டாலும் எனக்குக் கவலை இல்லை. இங்கு பல ஆயிரமாண்டு களாக இருந்து வருகின்ற அமைப்பை மாற்றி, நம்மை எல்லாம் மனிதனாக மதித்து, மானமுள்ள, அறிவுள்ள மனிதர்களாக ஆக்கி, ஜாதியற்ற ஒரு சமுதாயமாக மாற்றி, மனிதத் தன்மையோடு ஆண்டால் அதை நான் முழுமனதோடு வரவேற்பேன். அந்த நிலையைக் கொண்டுவரும் எவரையும் ஆதரிப்பேன். இன்னும் சொல்லப் போனால் அவர்களுக்கு முழுமையாகக் கடமைப்பட்டுத் தொண்டு செய்வேன். அதனால் எனக்கு யார் ஆளுகிறார்கள்; எவர் வருகிறார்கள் என்ற கவலை கிடையாது" என்று துணிந்து தைரியத்தோடு முழங்குவார். அதே நிலையைத்தான் அவருக்குப் பின்னும் நமது இயக்கம் கைக்கொண்டு செயல்பட்டு வருகிறது.

அதனால்தான் நாம் நமது நிலையிலிருந்து சற்றும் பின் வாங்கவோ,  தளர்நடை பயிலவோ இல்லாத துணிந்த முடிவுடன் நமது சுயமரியாதைப் பாதையில் நடந்து வருகிறோம். அதனால்தான் மக்களுக்கு நன்மை செய்வதை எந்தப் பிற்போக்குக் கும்பல் எதிர்த்தாலும் அதனை அரசு அடக்கி, ஒடுக்கி உண்மையான - தீவிர மான திட்டங்களைச் செயல்படுத்துவதை எப்போதுமே வரவேற்கவே செய்திருக்கிறோம். தந்தை அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே தீட்டிய திட்டங்கள்தான் இன்று புதியதாகத் தாங்கள் கண்டுபிடித்த திட்டமாக 20 அம்சப் பொருளாதாரத் திட்டத்தைப் பிரதமர் திருமதி. இந்திராகாந்தி அம்மையார் அவர்கள் சொல்லி இருந்தாலும், அதைப்பற்றி நமக்கு ஒன்றும் கருத்து மாறுபாடு இல்லை. எப்படியோ இப்பொழுதாவது எந்த ரூபத்திலாவது நமது அருமைத் தலைவரின் எண்ணங்கள் வெளிப்படுத்தப்படுகிறதே என்று நமக்கு மகிழ்ச்சிதான். இந்தத் திட்டத்தில் பெரும் பகுதியை தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆளுங்கட்சியான தி.மு.க. தந்தை வழியைப் பின்பற்றி நடைமுறையில் கொண்டு வந்து பலவற்றை நிறைவேற்றி வந்திருக்கிறது, வருகிறது. அதைப் பாராட்ட நம் மக்களின் மனநிலை பண்பட்டு வரவில்லை. இப்பொழுது அம்மையார் அறிவித்தவுடன் ஏதோ ஒரு புதிய கண்டுபிடிப்புக் கண்டுபிடித்தது போன்று அதிசயப்படத்தக்க விதத்தில் பாராட்டி வரவேற்கிறார்கள். இருக்கட்டும். அதைப்பற்றி நமக்கு ஒன்றும் பொறாமையோ, வருத்தமோ கிடை யாது. என்றாலும் ஒரு விதத்தில் நாமும் ஏற்றுக்கொள்ளக் காரணமாய் இருப்பது நமது கருத்தின் எதிரொலியாய் இருப்பதனால்தான். இன்னும் எவ்வளவோ செய்ய வேண்டி இருக்கின்றது.

அவற்றையும் துணிந்து செயல்படுத்திட முன் வந்தால் நம்மைப்போல மகிழ்வடையக் கூடியவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். ஆனால், அவற்றைச் செய்ய மகா தைரியம் வேண்டுமே! அம்மையார் அவர்கள் அதில் கை வைப்பார்களா? நினைத்துத்தான் பார்ப்பார்களா? அந்தக் காரியம் அதாவது மதத்தில் கை வைத்து மக்களுக்கு அறிவுப் பாதையை விளக்கி அமல்படுத்த வந்தால் இந்த நாட்டு மதவாதிகள் ஒரே நாளில் அம்மையாரை இருக்கும் இடம் தெரியாமல் செல்லாக் காசாக்கி விடுவார்களே.

"இந்த நாட்டிலே ஜாதி கிடையாது, மதம் கிடையாது, ஜாதியாலும், மதத்தாலும் மக்களை இழிவுபடுத்தி, வருகின்ற தன்மைகள் ஒழிக்கப்படும். சூத்திரன், பறையன், பஞ்சமன், பார்ப்பனர் என்கின்ற வருணாசிரம முறைகளை அடியோடு ஒழித்துவிட்டு எல்லோரும் மனிதர்கள் - ஜாதி, சமயமற்ற மனிதர்கள் - அவர்கள் நல்வாழ்விற்காகவே இருக்கின்றேன்; அதைச் செய்வது தான் எனது முக்கியக் குறிக்கோள்" என்று சொல்லட்டும். அன்றைக்கே நம்மைப் பொறுத்தவரையில் எல்லா வற்றையும் மூட்டை கட்டி மூலையில் போட்டுவிட்டு அம்மையாருக்குக் கொடி தூக்கிப் புகழ்பாடிப் வரவேற் கிறோம். எங்களுடைய இலட்சியமே அதுதான். மனிதன் மனிதனாக மதிக்கப்பட வேண்டும்; மானமுள்ள, அறிவுள்ள மனிதனாக வாழவேண்டும். செய்ய முன் வருவார்களா அல்லது சொல்லவாவது துணிவார்களா? அதுதானே இன்று அவசரமாக அவசியமாகச் செய்ய வேண்டியவை. அதை விட்டுவிட்டு எதை எதையோ சொல்லி இந்த நிலைக்கு நாட்டை ஆளாக்கி விட்டார்கள். அவசர நிலையைப் பிரகடனம் செய்து பல தலைவர்களை எல்லாம் உள்ளே வைத்து, பத்திரிகை உரிமைகளையும் பறித்துப் பரிதாபத்திற்குரிய நிலையை ஏற்படுத்தி, மக்களை வாய்மூட வைத்து அமைதியைக் காத்து விட்டோம் என்று நினைத்து மகிழ்கிறார்கள்.

இந்த அவசர நிலைப் பிரகடனச் சட்டத்தை அம்மையார் அவர்கள் திரும்பப் பெற்று மக்களுக்கு உரிமைகளைத் தரவேண்டும் என்றும், கைது செய்யப்பட்டுக் காவலில் வைத்திருக்கும் தலைவர்களை எல்லாம் விடுதலை செய்ய வேண்டுமென்றும், நமது ஆளும் கட்சியாக இருக்கும் தி.மு.க. அரசும், ஸ்தாபன காங்கிரசும் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி இருக்கிறார்கள்.

நமது நிலையை நாம் "விடுதலை" வாயிலாக முன்பே தெளிவுபடுத்தியுள்ளோம்.

தமக்கு மாறான கருத்தையே யாரும் சொல்லக் கூடாது என்பது அரசியலிலோ அல்லது அறிவு வளர்ச்சிக் கண்ணோட்டத்திலோ சரியான ஒன்றாகாது!

அந்தப்படிப் பார்க்கையில் தமிழ்நாட்டில் அவசர நிலைப்பிரகடனம் பற்றி இப்படி ஒரு கருத்துக் கிளம் புவது குறித்தும், சிந்தனை பரவலாக நான்கு கோடி மக்களிடமும் ஏற்பட்டிருப்பது குறித்தும், திருமதி. இந்திராகாந்தி அம்மையார் அவர்கள் எப்படிக் கருதுகிறார்கள் என்பதைவிட, இங்குள்ள நாட்டு மக்கள் நிலையும், நினைப்பும், எண்ணங்களும் எப்படி இருக்கின்றன என்பதே அரசினர் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

பிரதமர் அம்மையார் அவர்கள் சில நாள்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், "இந்தியாவில் நடப்பது போலீஸ் ராஜ்யமல்ல; ஒரு கட்சி ஆட்சியாகவும் ஆகிவிடவில்லை. இன்னமும் ஜனநாயக முறைப்படிதான் காரியங்கள் அவசர நிலைப் பிரகடனம் உள்பட நடைபெறுகிறது" என்று கூறியிருப்பதாகச் சில பத்திரிகைகளில் படித்தேன்.

அது உண்மையென்றால் மாற்றுக் கருத்தும், யோசனையும் கூறி வேண்டுகோள் விடுவிக்கும் பொறுப்பு வாய்ந்த மக்கள் தலைவர்களையும், இயக்கங்களையும், ஏடுகளையும் தமக்கு எதிரானவை என்று அவர் கருதத் தேவையில்லை என்பதுதான் தர்க்கரீதியான விடையாகும்.

நம் கழகம் அரசியல் கட்சியைச் சார்ந்தது அல்ல; சமுதாயத்தில் "பிராமணன் - சூத்திரன்", "மேல்-கீழ்" என்ற பிறவி பேதத்தையும், இழிவையும், அடியோடு ஒழித்து, எல்லா மக்களும் ஒரு நிலை என்று கூறி கடவுள், சாஸ்திர, சம்பிரதாயப் பழக்க வழக்கக் குருட்டு நம்பிக்கையிலிருந்து மக்கள் விடுபட இடையறாது பாடுபட்டு வரும் ஒரு சமுதாய அறிவு இயக்கமாகும்.

இந்த இயக்கத்தின் வளர்ச்சியால் தங்கள் வாழ்வு பாதிக்கப்பட்டு விட்டது. ஆதிக்கம் அடியோடு சரிந்து விட்டது என்று கருதுகிற பார்ப்பனர்களும், பணக்காரர்களில் சிலரும், இந்த இயக்கம் தமது சுகபோக வாழ்வுக்கு எங்கே இடையூறாக இருக்குமோ என்று அஞ்சும் சில பதவி வெறியர்களும் இந்தச் சந்தர்ப்பத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி நம்மை ஒழித்து விடலாம் என்று துணிந்து முயற்சி எடுத்து அவசர அவசரமாகப் பதைப்புக் காட்டக்கூடும்.

பலாத்காரத்திலோ, ரகசிய முறைகளிலோ பொதுச் சொத்தை - பொது ஒழுக்கத்தை நாசம் செய்யும் கிளர்ச்சி முறைகளிலோ சிறிதும் நம்பிக்கையற்ற மாபெரும் மக்கள் இயக்கமாகிய நமது இயக்கத்தையும் ஒழித்துவிடலாம் என்று கருதி அந்தப்படி காரியங்கள் ஒருவேளை நடந்தால் அதுகுறித்து நாம் அனைவரும்  கவலைப்படாமல் நமது இலட்சியத்திற்குத் தரப்பட வேண்டிய கடுமையான விலைகளில் அதுவும் ஒன்று என்று கொள்வோமே தவிர, நம் தலைவர் தந்தை  பெரியார் அவர்கள் 60 ஆண்டுக் காலம் பாடுபட்டு உழைத்து அவர்களால் முடிக்காமல் விட்டுச் சென்ற எஞ்சிய பணிகளை முடிக்கும்வரை நமக்கு எந்த இடர்ப்பாடு நேரிடினும் பின்வாங்க மாட்டோம்! அது உறுதி! உறுதி!! முக்காலும் உறுதி!!!

சுத்த வீரன் எப்பொழுதும் வீரனாக மடிவானே தவிர, கோழையாக மடிய மாட்டான்.

அதுபோலவே, தமிழ்நாட்டில் ஒழுங்கு அமைதி நிலையைக் காத்து ஏழை, எளிய மக்களுக்கும், தாழ்த்தப்பட்டு, ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் பலகோடி மக்களுக்கும் புதுவாழ்வு தரும் தி.மு.க. ஆட்சியையும் ஒழித்துக் கட்ட இதுதான் தருணம் என்று எதிரிகள் கருதினால் அது அவர்களுக்கு ஒரு தற்காலிக வெற்றி மயக்கமாகத்தான் இருக்க முடியுமே தவிர, உண்மை வெற்றியாகவோ, சரித்திரச் சாதனையாகவோ இருக்கவே முடியாது.

தமிழ்ப் பெருமக்களுக்கும், நம் இயக்கத் தோழர்களுக்கும் இப்போது நம் அய்யா அவர்கள் இல்லையே என்ற ஏக்கப் பெருமூச்சு மிகவும் தீவிரமாக இருப்பதை நன்கு உணர முடிகிறது.

அய்யா இன்று இல்லை என்றாலும், அவரால் உருவாக்கப்பட்ட உணர்வு அணையா விளக்காக ஒளி வீசிக் கொண்டு இருக்கிறது.

அவ்வொளியில் நிற்கும் நம்மை எந்த இருளும் கவ்வாது. எதையும் திடசித்தமுடன் உறுதியோடு ஏற்க என்றும் தயாராவோம்!

ஜாதியற்ற சமுதாயம் - மூடநம்பிக்கையற்ற சமுதாயம் காண்பதைத் தவிர, நமக்கு வேறு இலட்சியம் இல்லை என்பது நமது துணிவும், தெளிவும் தரும் கொள்கைக் கவசங்களாகும்.

தோழர்களே! எந்தத் தியாகத்திற்கும் எந்த நிலையிலும் தயாராக இருங்கள். தந்தை நமக்குப் போதித்த பாடம் இது ஒன்றுதான்!

கோழைகளாக வாழாமல் மனிதத் தன்மை மேம்பாட்டிற்காக நாம் நம்மை முழுமையாக ஆளாக்கிக் கொள்வோம் என்று ஒவ்வொருவரும் உறுதி கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

வாழ்க பெரியார்!

வளர்க அவர்தம் அறிவுக் கொள்கை!

(அன்னை மணியம்மையார் அவர்கள் எழுதிய தலையங்கம்)

- "விடுதலை" (8.7.1975)

- விடுதலை நாளேடு, 15.3.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக