செவ்வாய், 17 மார்ச், 2020

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு விழா

மகளிர் சிறப்புக் கருத்தரங்கம், அஞ்சல் தலை - மலர் -குறுந்தகடு வெளியீடு, படக்கதை நூல் அறிமுகம்

தமிழர் தலைவர் கி.வீரமணி தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்ற

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு விழா

சென்னை,மார்ச்17, அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு விழா சென்னை வேப்பேரி பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நேற்று (16.3.2020) திங்கள்கிழமை மாலை எழுச்சியுடன் நடைபெற்றது.

மகளிர் மட்டுமே பங்கேற்ற

மகளிர் சிறப்புக் கருத்தரங்கம்

மாலை 4 மணிக்கு தொடங்கி நடைபெற்ற மகளிர் சிறப்புக் கருத்தரங்கத்தில் மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்செல்வி வரவேற்புரையாற்றினார். காப்பாளர் க.பார்வதி, கு.தங்கமணி, ந.தேன்மொழி, சி.கிருஷ்ணேசுவரி, பசும்பொன்செந்தில்குமாரி, வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, சி.வெற்றிசெல்வி, பூவை செல்வி, வி.வளர்மதி, சி.ஜெயந்தி, மு.ராணி ஆகியோர் முன்னிலை  வகித்தனர்.

திராவிட இயக்க வீராங்கனைகள் எனும் பொதுத்தலைப்பில் வழக்குரைஞர் ம.வீ.அருள்மொழி  ‘இந்தி எதிர்ப்புக் களத்தில்’ தலைப்பிலும், ஓவியா அன்புமொழி ‘பெண்ணுரிமைக் களத்தில்’ தலைப்பிலும், சே.மெ.மதிவதனி ‘ஜாதி ஒழிப்புக் களத்தில்’ தலைப்பிலும், வழக்குரைஞர் பா.மணியம்மை ‘சுயமரியாதைக் களத்தில்’  தலைப்பிலும், பேராசிரியர் மு.சு.கண்மணி  ‘சமூக நீதிக் களத்தில்’ தலைப்பிலும் கருத்தரங்க உரையாற்றினார்கள்.

திராவிட இயக்க வீராங்கனைகள் படத்தை எழுத்தாளர் ஓவியா திறந்துவைத்து சிறப்புரையாற்றினார்.

திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக் குரைஞர் அ.அருள்மொழி கருத்தரங்கத்துக்கு தலைமை வகித்து சிறப்புரையாற்றினார்.

கருத்தரங்கில் பங்கேற்றோருக்கு சிறப்பு

கருத்தரங்கில் பங்கேற்ற வழக்குரைஞர் அ.அருள்மொழி, எழுத்தாளர் ஓவியா ஆகியோருக்கு பொதுக்குழு உறுப்பினர் சி.வெற்றிசெல்வி பயனாடை அணிவித்து இயக்க வெளியீட்டினை வழங்கி சிறப்பு செய்தார். வழக்குரைஞர் ம.வீ.அருள்மொழி, ஓவியா அன்புமொழி ஆகியோருக்கு தென்மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கிருஷ்ணேசுவரி இயக்க வெளியீட்டினை வழங்கி சிறப்பு செய்தார். பேராசிரியர் மு.சு.கண்மணி, வழக்குரைஞர் பா.மணியம்மை, சே.மெ.மதிவதனி ஆகியோருக்கு வடக்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் தேன்மொழி இயக்க வெளியீட்டினை வழங்கி சிறப்புசெய்தார்.

பொன்னேரி செல்வி இணைப்புரை வழங்கினார்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மற்றும் சிறப்பு விருந்தினர்கள், கழகத்தின் முன்னணி பொறுப்பாளர்கள் பலரும் மேடையின் முன் வரிசையில் அமர்ந்திருக்க மகளிர் மட்டுமே பங்கேற்ற சிறப்புக் கருத்தரங்கம் எழுச்சியுடன் நடைபெற்றது. மகளிர் சிறப்புக் கருத்தரங்கத்தைத் தொடர்ந்து அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு விழா திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர்ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தே.செ.கோபால், வழக்குரைஞர் சு.குமாரதேவன், இரா.வில்வநாதன், தாம் பரம் ப.முத்தையன், புழல் த.ஆனந்தன், எண்ணூர் வெ.மு.மோகன், நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன் முன்னிலையில் கழகத் துணைப்பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி வரவேற்புரையாற்றினார்.

பெரியார் களம் இறைவி இணைப்புரை வழங்கினார்.

அன்னையார் படத்திறப்பு

அன்னை மணியம்மையார் படத்தை திராவிடர் கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் திறந்துவைத்து தமதுரையில் அன்னை மணியம்மையார் குறித்த பல்வேறு வரலாற்று பூர்வத் தகவல்களை சுருக்கமாக வழங்கினார்.

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா சிறப்பு நிகழ்வாக அஞ்சல் தலை வெளியீட்டு விழா நடைபெற்றது. அன்னை மணியம்மையார் உருவம் பொறிக்கப்பட்ட அஞ்சல் தலையை வி.அய்.டி.பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன் வெளியிட்டார். பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.  முன்பதிவு செய்துகொண்டவர்கள் மட்டுமல்லாமல் மேடையிலும் ரூ.500 தொகை கொடுத்து ஆர்வமுடன் ஏராளமானவர்கள் அன்னை மணியம்மையார் உருவம் பொறிக்கப்பட்ட அஞ்சல் தலை தொகுப்பைப் பெற்றுக்கொண்டனர்.

அஞ்சல் தலையை  வெளியிட்ட வி.அய்.டி. பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன் அவர்களின் கல்வி தொண்டறப்பணிகளை எடுத்துரைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து இயக்க வெளியீடுகளை அளித்து சிறப்பு செய்தார்.

வேந்தர் கோ.விசுவநாதன்  ஆற்றிய சிறப்புரையின் தொடக்கத்திலேயே தான் எந்த கட்சியிலும் உறுப்பினராக இல்லை என்றும், என்றைக்கும் சுயமரியாதைக்காரன் என்றும் பிரகடனப்படுத்தினார் பார்வையாளர்களின் கரவொலி அடங்க சிறிது நேரம் ஆனது.

அன்னை மணியம்மையார் பொறுப்பேற்ற காலக்கட்டத்தில் பெரியார் திடல் கட்டடப்பணி களில்  பெரும் பங்காற்றிய பொறியாளர் என்.எஸ்.ஏகாம்பரம் அவர்களை அறிமுகப்படுத்திய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அவருடனான தமது பழைய நினைவுகளை எடுத்துக்காட்டி, அவருக்கு பயனாடை அணிவித்து இயக்க வெளியீடுகளை வழங்கி சிறப்பு செய்தார்.

பெரியார் திடலில் தாம் பணியாற்றிய போது அன்னை மணியம்மையார் அன்புள்ளம், துணிவு, உறுதிப்பாடு, ஆளுமைத்திறன், தொலைநோக்கு சிந்தனைகள் குறித்து பொறியாளர் ஏகாம்பரம் பேசுகையில் மிகவும் உருக்கமாக அன்னையாரின் பிரிவாற்றாமையை வெளிப்படுத்தினார்.

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா மலரை திமுக துணைப்பொதுச்செயலாளர் மேனாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் வெளியிட்டார். சென்னை மண்டல திராவிடர் கழகத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி பெற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து ஏராளமானவர்கள் ரூ.200 அளித்து மலரை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடமிருந்து பெருமகிழ்வுடன் பெற்றுக்கொண்டனர்.

அன்னை மணியம்மையார் தொண்டுள்ளம், தொண்டறப்பணிகள் குறித்து கவிப்பேரரசு வைரமுத்து, பாவலர் அறிவுமதி, கவிஞர் கலி.பூங்குன்றன், கவிஞர் யுகபாரதி ஆகியோர் எழுதிய பாடல் வரிகளுக்கு இசை அமைப்பாளர் தாஜ்நூர் இசைஅமைத்து, அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழாவில் ‘தூற்றலைத் தோற்கடித்த வீராங்கனை’ இசைக் குறுந்தகடு வெளியிடப்பட்டது.

குறுந்தகட்டினை  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வெளியிட, மேனாள் சட்டமன்ற உறுப்பினர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மகளிர் பிரிவுத் தலைவர் தோழர் பத்மாவதி பெற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து ரூ.100 தொகை அளித்து தமிழர் தலைவர் அவர்களிடமிருந்து பலரும் அன்னை மணியம்மையார் குறித்த இசைக் குறுந்தகட்டினைப் பெற்றுக்கொண்டார்கள். இசைஅமைப்பாளர் தாஜ்நூரைப் பாராட்டி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

அன்னைமணியம்மையார் நூற்றாண்டு விழாவில் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் வளர்ந்தவர்கள் தங்காத்தாள் தலைமையில் ரூ.1 லட்சத்தை ஈவெ.ரா.மணியம்மை பவுண்டேஷன் அறக்கட்டளை நிதியாக நன்றியுடன் அளிப்பதாக அறிவித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம்  வழங்கினார்கள்.

கழகத் துணைப்பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி குடும்பத்தினர் ரூ.50ஆயிரம் தொகையை ஈவெ.ரா.மணியம்மை பவுண்டேஷன் அறக்கட்டளை நிதியாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கி மகிழ்ந்தார்கள்.

கும்மிடிப்பூண்டி கழக மாவட்டம் மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் முருகன், மாவட்ட மகளிரணி செயலாளர் மு.ராணி ஆகியோர் அடிமைத்தளையாம் தாலியை மேடையில் தமிழர் தலைவர் முன்னிலையில் அகற்றிக்கொண்டனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மகளிர் பிரிவுத் தலைவர் தோழர் பத்மாவதி சிறப்புரையாற்றினார்.

திமுக துணைப்பொதுச்செயலாளர், மத்திய, மாநில மேனாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் சிறப்புரை ஆற்றினார்.

அன்னை மணியம்மையார் நூற்றாண்டை யொட்டி அன்னையாரின் வாழ்க்கை வரலாறு இயக்க வரலாற்று படக்கதை விடுதலை நாளிதழில்  தொடர்ந்து வெளியானது. அதன் தொகுப்பு தொண்டறத்தாய்  தலைப்பில் நூலாக வெளிவருகிறது. அதனை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிமுகம் செய்துவைத்து, அன்னை மணியம்மையாரின் நூற்றாண்டு தொடக்கம் முதல் நிறைவு விழா வரை தொடர்ச்சியாக அன்னையாருக்கு சிறப்பு சேர்க்கும் வண்ணம் புத்தகங்கள் வெளியீடு, குறுந்தகடு வெளியீடு, படக்கதை நூல் அறிமுகம் என அத்துணைக்கும்  கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் மற்றும் பொறுப்பாளர்களை பாராட்டினார்.

விழா நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நிறைவுரை சிறப்புரை ஆற்றினார். விழா முடிவில் அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

கலந்துகொண்டோர்

விழாவில் கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், மருத்துவர் இராஜசேகரன், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், பேராயர் எஸ்றா சற்குணம், சட்டக்கதிர் ஆசிரியர் வி.ஆர்.எஸ்.சம்பத், கவிஞர் கண்மதியன், த.கு.திவாகரன், பேராசிரியர் ப.காளிமுத்து, பெரியார் மருத்துவக் குழும இயக்குநர் இரா.கவுதமன், மோகனா அம்மையார், தஞ்சை கலைச்செல்வி, அகிலா எழிலரசன், சுதாஅன்புராஜ், பெரியார்செல்வி, பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் இரா.தமிழ்செல்வன், மாநில மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், அமைப்புச்செயலாளர்கள் ஊமை ஜெயராமன், ஈரோடு த.சண்முகம், புதுவை மாநிலத் தலைவர் சிவ.வீரமணி, பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் மா.அழகிரிசாமி, துணைத் தலைவர் அண்ணா.சரவணன், விழுப்புரம் மண்டலத் தலைவர் க.மு.தாஸ், செயலாளர் குழ.செல்வராசு, வேலூர் மண்டலத் தலைவர் சடகோபன், தஞ்சை வழக்குரைஞர் சி.அமர்சிங், திருப்பத்தூர் கே.சி.எழிலரசன், தருமபுரி தமிழ்செல்வன், காரைக்குடி என்னாரெசு பிராட்லா மற்றும் மாநில, மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்கள், மகளிரணி, மகளிர் பாசறை பொறுப்பாளர்கள் உள்பட அனைத்து அணிகளின் பொறுப்பாளர்களும், தோழர்களும் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு விழாவில்  கலந்துகொண்டனர்.

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நினைவு அஞ்சல் தலையினை வி.அய்.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் வெளியிட்டார் - குறுந்தகடு, வரலாற்று நூல் வெளியீடு (16.3.2020)

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு விழாவில் சான்றோர்கள்

உரை கேட்க திரண்டிருந்த பார்வையாளர்கள் (சென்னை பெரியார் திடல், 16.3.2020)

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நினைவு அஞ்சல் தலையினை வி.அய்.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் வெளியிட்டார் - குறுந்தகடு, வரலாற்று நூல் வெளியீடு (16.3.2020)

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு விழாவில் சான்றோர்கள்

உரை கேட்க திரண்டிருந்த பார்வையாளர்கள் (சென்னை பெரியார் திடல், 16.3.2020)


- விடுதலை நாளேடு, 17.3.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக