வியாழன், 19 மார்ச், 2020

இராமசாமி, இராமநாதன் இலங்கை விஜயம்

27-12-1931 - குடிஅரசிலிருந்து...

திருவாளர்கள், ஈ.வெ.இராமசாமி அவர்களும் எஸ். இராமநாதன் எம்.ஏ.பி.எல், அவர்களுமாக அய்ரோப்பா முழுவதையும் சுற்றிவருவதன் பொருட்டு சென்ற 13-12-1931 அன்று சென்னையினின்றும் அம்போய்சி என்னும் பிரஞ்சுக்கப்பலில் பிரயாணமாகிப் போகிறவழியில் கொழும்பு  துறைமுகத்தில் 16-12-1931 மாலை 4 மணியளவில் இறங்கினார்கள். அஃது பொழுது ஜனாப் பி. எம். ஷாஹுல்ஹமீது  அவர்கள் சந்தித்து இருவரையும் மோட்டாரில் ஏற்றிக்கொண்டு  கொழும்பு நகரில் பிரதான இடங்களுக்கெல்லாம் அழைத்துச்சென்றார். இராமசாமி  வேண்டுகோளுக்கிணங்கி புத்தமதக்கோவில்களையும் காண்பித்துக் கொண்டு நேரே தம் வியாபாரஸ்தலத்துக்கு அழைத்துவந்து சம்பாஷித்துக் கொண்டிருந்து விட்டு  போட்டோ படம் பிடிக்கப்பட்டு அன்று இரவில் இராமசாமிக்கு வழியனுப்பு உபசாரம் செய்யும் பொருட்டு ஜனாப் பி.எம்.ஷாஹுல் ஹமீது அவர்களின் மீரான்மேன்ஷன் பங்களாவில் ஓர் சிற்றுண்டிவைபவம் நடத்தப்பெற்று இராமசாமிக்கு வழியனுப்பு உபசாரம் ஜனாப் எஸ்.எம். ஷேகப்பா அவர்களின் தலைமையின் கீழ் அதி விமரிசையாக நடந்தேறியது. அது சமயம் திருவாளர்கள் ஈ.வெ. இராமசாமி அவர்களும், இராமநாதன்  அவர்களும் தங்கள் மேனாடுசெல்லும் நோக்கத்தைபற்றியும், சுயமரியாதை  இயக்க கொள்கையை பற்றியும் 1 மணிநேரம் விளக்கி சொற்பொழிவு  நிகழ்த்தினார்கள். அதன் பின் ஒ.கே.  முஹிதீன்  ஸாஹிபவர்களின் வந்தனோபசாரத்தோடு கூட்டம் இனிது முடிவுற்றது. நிற்க, திரு. இராமசாமி  அவர்கள் கொழும்பில் இறங்கியதெல்லாம் சில கடிதங்கள்  எழுதவேண்டிய காரியத்தினிமித்த மேயன்றி யாரையும் சந்திக்கவோ அன்றி பிரசங்கங்கள் புரியும் நோக்கமாகவோவன்று. என்றாலும் அவர்கள் கொழும்பில் இறங்கிய செய்தி கணநேரத்தில் பரவி விட்டது. கொழும்பிலுள்ள  இந்திய சுயமரியாதைச் சங்கத்தின் ஆதரவில் திரு. எஸ். ஆர். முத்தையா அவர்களின் தலைமையில் கிரின்பாத்தி லுள்ள லேடி சிஸ்டர் சர்ச்சில் ஒரு பாராட்டுக் கூட்டம்  கூடியது. அது போது இரண்டு தலைவர்களுக்கும் இந்திய சுயமரியாதைச் சங்கத்தாராலும், இலங்கை இந்திய சங்கத்தாராலும், இராமனாதபுரம் ஜில்லா ஆதிதிராவிட மகாஜன சங்கத்தாராலும், மேற்படி ஜில்லா ஆலம்பட்டு ஆதிதிராவிட அய்க்கிய சங்கத்தாராலும் சுயமரியாதை  வீரரும் குடி அரசு ஏஜண்டுமான திரு. எஸ். பரமசிவம் அவர்களாலும், இராமநாதபுரம் ஜில்லா செம்பனூர் ஆதிதிராவிட அபிவிர்த்திச்சங்கத்தாராலும், மலையாள சுயமரியாதைச்  சங்கத்தாராலும் செல்வரசன் கோட்டை ஆதிதிராவிட  சங்கத்தாராலும்,  இன்னும் பல பிரபலஸ்தர்களாலும் மாலைகள் சூட்டி வரவேற்புப்பத்திரங்கள் தனித்தனியே வாசித்துக் கொடுக்கப்பட்டது. மேற்படி  பத்திரங்களுக்கு இரண்டு தலைவர்களும் தக்க பதில் அளித்த பின் சுமார் 2 மணி நேரம்  இயக்கக் கொள்கைகளைப்பற்றியும், தாழ்த்தப் பட்டவர்களின்  நிலையைப்பற்றியும், இன்னும் பல அரிய விஷயங்களைப்பற்றியும் சொற்பொழிவாற்றினார்கள். பின் சுயமரியாதைக்காரர்களின் நீண்ட பிரிவுபசாரத்தோடு நள்ளிரவு  12 மணி சுமாருக்கு கப்பலை  அடைந்தார்கள். இக்கூட்டத்திற்கு சுமார் 1500 பேர்கள் ஆண்களும் பெண்களும் விஜயம் செய்திருந்தார்களென ஒரு நிருபர் எழுதுகிறார்.

- விடுதலை நாளேடு 14.3.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக