வியாழன், 5 மார்ச், 2020

வையம் பாராட்டும் வைக்கம் போராட்டம்

-  பேராசிரியர் நம்.சீனிவாசன்

இப்போது தமிழகத்தின் பேசு பொருள் வைக்கம் போராட்டம். பழ. அதியமான் தமிழக ஆய்வாளர்களில் குறிப்பிடத் தக்கவர். பெரியாரின் நண்பர் டாக்டர் வரத ராஜூலுநாயுடு வரலாறு, சேரன்மாதேவி குருகுலப் போராட் டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும், வைக்கம் போராட் டம் என்னும் மூன்று நூல்களைப் படைத்து திராவிட இயக்க வரலாற்றுக்குப் பெரும் பங்கு நல்கியவர். "வைக்கம் போராட் டம்" என்னும் நூல் ஜனவரி மாதம் வெளிவந்தது. திராவிடர் கழகத் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் படிக்கின்றார் - நூலாசிரியர் பழ.அதியமான் அவர்களின் கடும் உழைப்பை வியக்கின்றார். பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் சிறந்த நூலுக்கு ஆண்டுதோறும் பரிசு வழங்குவது வாடிக்கை.

சான்றோர் பெருமக்கள் பல்கலைக்கழகத்தில் நிறுவி யுள்ள அறக்கட்டளைகள் நற்பணிக்குப் பெருந்துணை புரி கின்றன. ஜனவரி மாதம் வெளிவந்த புத்தகத்திற்குப் பிப்ரவரி மாதம் பரிசு வழங்கும் விழா. சாதனைத் தமிழர்களைத் தோளில் தூக்கி வைத்து கொண்டாடும் பண்புடையவர் தமிழர் தலைவர் வீரமணி. பாராட்டுகின்ற பணியை காலம் தாழ்த்தக்கூடாது என்று அய்யா பெரியார் காட்டிய வழியில் மின்னலென முடிவெடுக்கின்றார். பழ.அதியமான் அவர் களுக்குப் பல்கலைக்கழகத்தில் பாராட்டு விழாவாக முகிழ்க் கின்றது.

2020 பிப்ரவரி 27 வியாழக்கிழமை "வைக்கம் போராட் டம்" நூல் படைத்த எழுத்தாளர் பழ.அதியமான் அவர்களுக் குப் பாராட்டுக் கூட்டம். நூல் ஆய்வுரை நிகழ்த்துபவர் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனப் பேராசிரியர் முனைவர் ஆ.இரா.வேங்கடாசலபதி. திராவிட இயக்க உணர்வாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், புத்தகப் பிரியர்கள், பெரியாரின் தொண்டர்கள், அரசியல் விமர்சகர்கள் அத்தனை பேரும் குதூகலித்தனர்.

27ஆம் தேதி விடிகாலை கதிரவன் பொன்கிரணங்களைப் பரப்பி புறப்பட்டபோது பல்கலைக்கழக வேந்தர் நடைப்பயிற்சிக்கு வளாகம் நுழைகிறார். எழுத்தாளர் அதியமான் அவர்களும் பேராசிரியர் வேங்கடாசலபதி அவர்களும், ஆர்வமுடன் நடைப்பயிற்சியில் இணைந்து கொள்கின்றனர். காலைப் பொழுதினிலே கருத்துப் பரிமாற்றம் களைகட்டு கின்றது. வரலாற்றுச் சம்பவங்கள், சமூக நிலை, கல்வித்தரம், எதிர்காலத் திட்டங்கள், இந்திய தேசியத் தலைவர்களின் தொடர்பு என பல தளங்களில் உரையாடல் விரிந்து விரிந்து இன்பமும் பயனும் கூட்டுகின்றன.

அருப்புக்கோட்டை துரை.கைலாசம் நினைவு டி.கே. சுப்பிரமணியம் அறக்கட்டளை, நீதியரசர் டாக்டர் பி.எஸ். சோமசுந்தரம் அறக்கட்டளை, பேராசிரியர் சி.வெள்ளையன் - பொறியாளர் சுந்தரி அறக்கட்டளை ஆகிய அறக்கட்ட ளைகளின் சார்பில் சிறப்புச் சொற்பொழிவும், சிறந்த ஆய்வு நூல் படைத்த பழ.அதியமான் அவர்களுக்குப் பாராட்டுக் கூட்டமும் பல்கலைக்கழக உள்விளையாட்டு அரங்கத்தில் காலை 11 மணிக்குத் தொடங்கியது.

அரங்கம் நிரம்பி வழிந்தது. அறிவார்ந்த கூட்டம் இளம் மாணவர்கள், கற்றறிந்த பேராசிரியர்கள், அலுவலர்கள், பெரியார் தொண்டர்கள் என குழுமி இருந்தனர். பார்வையா ளர்களின் கண்களில் உற்சாகம் மிதந்தது. பல்கலைக்கழக வேந்தர் அரங்கத்திற்குள் நுழைந்தபோது எழுந்து நின்று பலத்த கரவொலி எழுப்பி வரவேற்ற காட்சி மெய்சிலிர்க்க வைக்கும் காட்சியாகும்.

பெரியார் சிந்தனை உயராய்வு மய்ய இயக்குநர் வரவேற் புரையாற்றி வைக்கம் போராட்டத்தை மனக்கண்ணால் மட்டுமின்றி, விழிகளாலும் காட்சிகளாய் கண்டு களிக்க செய்யப்பட்டிருக்கும் ஏற்பாட்டினை எடுத்துரைத்தார். பிரின்ஸ் குழுவினர் "பெரியார்" திரைப்படத்தில் இடம் பெற்ற வைக்கம் காட்சிகளை ஒளிபரப்பினார்கள். மொத்தக் கூட் டமும் சத்தமில்லாமல் மனம் ஒன்றி வைக்கம் காட்சிகளில் கரைந்து போனார்கள். அதனைத் தொடர்ந்து சான்றோர் பெருமக்கள் மேடையை அலங்கரித்தார்கள். துணை வேந் தர் தலைமையுரை நிகழ்த்தினார்கள்.

பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர் கள் நூலாசிரியரை மனந்திறந்து பாராட்டினார். புத்தகத்தின் சிறப்பை நுட்பமாக விளக்கினார். அம்பேத்கர் எடுத்துரைத்த படிக்கட்டு ஜாதி முறையை விளக்கினார். தனஞ்செய் கீர் எழுதிய 'அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு' நூலில் இருந்து வைக்கம் போராட்டத்தின் மகத்துவத்தைச் சுட்டிக் காட்டினார்.

வைக்கம் போராட்டம் 96 ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்ற போராட்டம். இந்தியாவில் மனித உரிமைக் களத்தின் முதல் போராட்டம். 20 மாதங்கள் நடைபெற்ற தொடர் போராட்டம் என்றார். உலகில் எங்கும் கேள்விப் படாத சமூகக் கொடுமையான தெருவில் நடக்கக்கூட கீழ் ஜாதிக்காரர்களுக்கு உரிமை இல்லாத நிலையில் வைக்கம் போராட்டம் நடைபெற்றது. அது சமூகப்புரட்சி, அமைதிப் புரட்சி, அறிவுப்புரட்சி, ரத்தம் சிந்தாப்புரட்சி என்ற பெரு மைக்கு உரிய போராட்டம் என்று அடுக்கினார். போராட் டத்தில் கலந்து கொள்ள பெரியார் ஏழுமுறை வைக்கத்திற்குப் பயணம் மேற்கொண்டதை எடுத்துக்கூறி கேரளாவில் 141 நாட்கள் தங்கி இருந்தார் என்றும், அதில் 74 நாள்கள் சிறையில் இருந்தார் என்றும் கூறினார். இரண்டு முறை கைது செய்யப்பட்ட ஒரே தலைவர் பெரியார்தான் என்றார். வடநாட்டில் போராட்டம் நடைபெற வைக்கம் போராட்டம் விதையாகப் பயன்பட்டிருக்கின்றது. பெரியாரின் கள அனுபவம் கொடுமையானது. பேசத் தடை, பிரவேசத் தடை, தங்குவதற்குத் தடை, சிறைவாசம், சிறப்பு வகுப்பு மறுப்பு, காலில் சங்கிலி, இருமடங்கு வேலை என துன்பங்களைச் சுமந்தவர் பெரியார் என்று வைக்கம் போராட்டத்தைச் சித்திரமாகத் தீட்டினார். பெரியார் திருவனந்தபுரம் சிறையிலிருந்து விடுதலையாகி ஈரோட்டிற்கு வந்தவுடன் ராஜ துவேஷ குற்றத்திற்காக கைது செய்யப்படுகின்றார். அப் போது நாகம்மையார் வெளியிட்ட அறிக்கையில், அவர் திரும்பத் திரும்ப தேச ஊழியத்தின் பொருட்டு சிறைக்குப் போகும் பாக்கியம் பெற வேண்டும் என்றும், அதற்காக அவருக்கு ஆயுள் வளர வேண்டும் என்றும், கடவுளையும், மகாத்மா காந்தியையும் அதற்குப் பிரார்த்திக்கின்றேன் என் றும் பெரியாரின் மனைவி அறிவிக்கின்றார் - அவருடைய துணிச்சல் வியப்புக்குரியது என்றார்.

வைக்கம் போராட்டம் காணமுடியாத வரலாறு; கேட்டி ராத போராட்டம்; எவராலும் குவிக்கப்பட முடியாத வெற்றி என்று கவித்துவமாய் - ரத்தினச் சுருக்கமாய் பொழிந்தார்.

1975ஆம் ஆண்டு வைக்கத்தில் நடைபெற்ற வைக்கம் போராட்ட பொன்விழாக் கூட்டத்தின் தொடக்க விழாவில் பிரதமர் இந்திரா காந்தியும், நிறைவு விழாவில் அன்னை மணியம்மையாரும் கலந்து கொண்டுச் சிறப்பித்ததை நினைவு கூர்ந்தார்.

வைக்கத்தில் தந்தை பெரியார் சிலை திறக்கப்பட்ட சம்பவத்தை வேந்தர் விவரித்தார். எம்.ஜி.ஆரின் துணை வியார் வி.என்.ஜானகி அவர்கள் இடம் வழங்கியதையும், தமிழ்நாடு அரசு, கேரள அரசு இடம் வழங்கியதையும், ஜெயலலிதா அம்மையார் நிகழ்ச்சிக்கு வர இயலாமல் போனதையும், நாவலர் நெடுஞ்செழியன் சிலை திறப்பு செய் ததையும், அக்கூட்டத்திற்கு தாம் தலைமை வகித்ததையும் தம் நினைவுச் சுரங்கத்திலிருந்து வாரி வாரி வழங்கினார்.

விருப்பு - வெறுப்பு இன்றி தரவுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட புத்தகம் என்று மகிழ்ந்துரைத்தார். பெரியாரின் பங்களிப்பு - காந்தியாரின் பங்களிப்பு - அரசாங்கத்தின் பங் களிப்பு - ராஜகோபாலாச்சாரியாரின் பங்களிப்பு என்று எல் லோருடைய பங்களிப்புகளையும் இந்நூல் விளக்குகின்றது என்று சுருக்கமாய்த் தெரிவித்த வேந்தர் அவர்கள் அடுத்த பதிப்பில் புதிய தரவுகளை இணைத்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார். அம்பேத்கர் அவர்கள் வைக்கம் போராட்டம் குறித்து கூறிய வாசகங்களை அவருடைய ஆங்கில நடையிலேயே தாருங்கள் என்று கூறியதோடு 1925ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் வைக்கம் போராட்டத்தை - தந்தை பெரியாரைப் பாராட்டி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இணைத்துக் கொள்ளுங்கள் என்றார். ஆய்வு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்நூல் சான்று ஆவணம் என்று பாராட்டுப் பத்திரம் வழங்கி உரையை நிறைவு செய்த வேந்தர், சிறந்த நூலாகத் தேர்வு செய்யப்பட்ட "வைக்கம் போராட்டம்" புத்தகம் படைத்த பழ.அதியமான் அவர்களுக்கு 25,000 ரூபாய்க்கான காசோலையினை வழங்கினார்.

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனப் பேராசிரியர் முனைவர் ஆ.இரா.வேங்கடாசலபதி தம் ஆய்வுரையில், உண்மை அறிஞர்களைப் பாராட்டாமல் மறந்து போகின்ற சமூகம் பின் தங்கிப்போகும் என்றார். காந்தியடிகள் தென் னாப்பிரிக்காவிலிருந்து 1915இல் இந்தியா திரும்பிய பின் முதல் முறையாக, 'சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக நடத்திய போராட்டம் வைக்கம் போராட்டம்' என்று குறிப்பிட்டார். எதிரிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படுகின்றதா? அல்லது நம்மை நோக்கியே போராட்டம் நடத்தப்படு கின்றதா? என்பது பற்றி இந்த நூல் விரிவாகப் பேசுகிறது.

நாராயணகுரு இந்து மதத்தைக் கேள்வி கேட்கவில்லை. சமூக மாற்றம் என்பது இருக்கக்கூடிய அதிகார கட்டமைப்பு களை நியாயப்படுத்தக் கூடிய சித்தாந்த கருத்தியல் கட்ட மைப்புகளை கேள்விக்கு உட்படுத்தவில்லை. அதன் விளைவு இன்று வரை முற்போக்குவாதிகள் நெருக்கடிக்குத் தள்ளப்படுகிறார்கள் என்பதற்கு சபரிமலை பிரச்சினை சான்றாகும். ஆதிக்கச் சக்திகளின் எதிர்வினை பெரிய சவா லாக இருக்கிறது. பெரியார்தான் துணை நிற்கிறார் என்றார்.

நூலாசிரியர் பழ.அதியமான் தம் ஏற்புரையில், "படிக் கின்ற வாசகன் இருந்தால் எழுத்தாளர், எழுதுவதற்கு - உழைப்பதற்குச் சலிப்பதில்லை" என்றார். "மாணவர்கள் படிக்கின்ற பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆசிரியர் அவர்கள் இப்புத்தகத்தை வரிக்கு வரி வாசித் திருக்கிறார். இதை விட பெரும்பேறு எனக்கு வேறு இல்லை" என்று நெகிழ்ந்தார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வைக் கம் சத்தியாகிரகம் அல்ல. வைக்கம் போராட்டம் தான். வைக்கம் போராட்டம் என்றால் சமூக நீதியின் அடையாளம். சிதம்பரம், பழனி என்று பெயர் வைப்பது போல பெரியாரின் தொண்டர்கள் தம் குழந்தைகளுக்கு வைக்கம் என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள் என்று தெரிவித்தார். வைக்கம் போராட்டம் கோயில் நுழைவு போராட்டம் அல்ல; கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் நடக்கின்ற உரிமைகோரும் போராட்டம், இப்போராட்டம் 610 நாள்கள் நடைபெற்றது. போராட தலைவர்கள் இல்லாத நிலையில் பெரியார் அழைக்கப்பட்டார். இந்நூல் எழுத ஆவணக் காப்பகமும், பத்திரிகைகளும் பெருந்துணை புரிந்தன. மற்றத் தலைவர் களுக்குக் கடுங்காவல் தண்டனை கிடையாது. அரசியல் கைதியாக நடத்தப்பட்டார்கள். ஆனால் பெரியாருக்குக் கடுங்காவல் தண்டனை. அரசியல் கைதியாகவும் நடத்தப் படவில்லை. பெரியார் அடைந்த துன்பத்தை அவர் வெளிப் படுத்தவில்லை. மற்றவர்கள் அவருடன் சிறையில் இருந் தவர்கள் கூறிய பதிவுதான் பெரியாரின் பெருமையினை உலகிற்கு உணர்த்தியது என்றார். மாணவி பூந்தளிர் நன்றி கூற பாராட்டுக்கூட்டம் இனிதே நிறைவுற்றது.

தமிழர் தலைவர் அவர்களுடன் மதிய உணவருந்திய சிறப்பு விருந்தினர்கள், திருச்சி பெரியார் கல்வி நிறுவனங் களைப் பார்வையிட ஆசிரியருடன் வாகனத்தில் பயணித் தனர். பயண நேரம் ஒரு மணி நேரம் பயனுள்ள நேரமாக அமைந்தது. பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி தாம் எழுதும் 'பெரியார் வரலாறு' ஆங்கில நூலுக்குத் தேவையான தகவல்களைத் தலைவரிடம் வினாக்கள் தொடுத்து விடை களைப் பெற்றுக் கொண்டார். அய்யாவின் வாழ்க்கைத் தகவல்களை - வரலாற்றினை தம் நினைவு அடுக்கிலிருந்து உடனுக்குடன் அள்ளி வழங்கினார். பேராசிரியர் வேங்கடா சலபதி கவனமாய் குறித்துக் கொண்டார். தமிழர் தலைவரின் வாகனம் திருச்சி கல்வி வளாகத்திற்குள் நுழைய ஆசிரியர் களும், மாணவர்களும் ஆர்வமுடன் சூழ்ந்து கொண்டனர். பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் பழ.அதியமான் அவர்களுக்கும், ஆ.இரா. வேங்கடாசலபதி அவர்களுக்கும் பழக்கூடை வழங்கி வர வேற்றனர். கல்வி வளாகத்தைச் சிறப்பு விருந்தினர்களுக்குத் தமிழர் தலைவர் சுற்றிக் காண்பிக்கும் விதமாக நடந்து சென்றபோது, கம்பீரமான கட்டடமான பெரியார் மணி யம்மை பெண்கள் மேல் நிலைப்பள்ளியின் மாடியில் மாண வியர்கள் நின்று கொண்டு கரவொலி எழுப்பி மகிழ்ச்சிக் குரல் ஒலித்து, உற்சாகமாய் வரவேற்றனர். தமிழர் தலைவர் அவர்களும், சிறப்பு விருந்தினர்களும் கை அசைத்து மகிழ்ச்சியை ஏற்றுக் கொண்டனர். தவத்திரு குன்றக்குடி அடிகளார் நினைவுக் கூடம், சிவகங்கை இரா.சண்முகநாதன் நினைவுக் கூடம், திருமதி நாகபூசனம் அம்மாள் நினைவுக் கூடம், ஞான செபஸ்தியான் - குழந்தை தெரசா அம்மாள் நினைவுக்கூடம், புலவர் கோ.இமயவரம்பன் நினைவுக்கூடம் என எங்குப் பார்த்தாலும் மாணவியர்களின் உற்சாகம் நிறைந்த பாச வரவேற்பில் சிறப்பு விருந்தினர்கள் திக்கு முக்காடிப் போனார்கள்.

பெரியார் தொடக்கப்பள்ளி, நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனம், பெரியார் மருந்தியல் கல்லூரி என ஒவ்வொரு இடத்திலும் பூங்கொத்து, சாக்லேட், பயனாடை என அசத்திவிட்டார்கள். திருச்சி போல தித்திப்பான உபசரிப்பு யாங்கெனும் கண்டதில்லை. விருந்தினர்கள் தேன் குடத்தில் விழுந்த சிற்றெறும்பாய் பூரித்தனர். திருச்சி பெரியார் மாளிகையில் தந்தை பெரியார் தங்கியிருந்த அறை, பொருட்களைப் பார்வையிட்டு தமிழர் தலைவரிடம் அளவளாவி விட்டுப் புறப்பட்டனர். பழ.அதியமான்,

ஆ.இரா.வேங்கடாசலபதி இருவருக்கும் வாழ்வின் மறக்க முடியாத நாளாக அமைந்திருக்கும். தமிழர் தலைவரின் அருங்குணங்களை அருகில் இருந்து உணரும் நல்வாய்ப்புப் பெற்று மகிழ்ந்தனர். பெரியாரைக் கொண்டாடுபவர்களுக்குத் தொண்டனாய் திகழ்பவர்தான் தலைவர் வீரமணி.

- விடுதலை நாளேடு 3 3 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக