வெள்ளி, 11 ஜனவரி, 2019

வித்தியாசமான தலைவர்

***கவிஞர் கலி.பூங்குன்றன்***


(திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் - டிசம்பர் 2இல் (2018) 86ஆம் அகவையில் அடி எடுத்து வைக்கிறார்  - அவரைக் குறித்து குறள் போல் ஒரு சுருக்கம்)




1. எளிய குடும்பத்தில் பிறந்தவர் - இன்றைக்கு உலகம் அறிந்த தமிழர் தலைவராக ஒளிர்கிறார்.

2. தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் அவருக்கே உரித்தான முறையில் சொன்னது மிகப் பொருத்தமானது.

(பெரியாருக்குப் பின்)

வெறிச்சோடிப் போகாமல் தமிழ்நாட் டைக் காப்பாற்றியவர் வீரமணி என்பது பாராட்டு என்று கருதக் கூடாது; அதில் ஆழ மான பொருளும், உண்மையும் நிறைந்து உள்ளன. (16.8.1981)

3. வயது ஒன்பதரை ஆண்டு இருக்கும் போதே மேசையின்மீது ஏற்றப்பட்டு முழக்க மிட்ட புதுமை இவரை சாரும்.

4. 11 வயதில் திருமணத்தில் வாழ்த்துரை வழங்கிய அதிசயம்.

5. 11 வயதில் சரித்திர திருப்பம் வாய்ந்த மாநாட்டில் (சேலத்தில் - நீதிக்கட்சி திரா விடர் கழகம் பெயர் மாற்றம் பெற்ற மாநாட் டில்) உரையாற்றிய வாய்ப்பு.

6. உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் போதே புதுமை முழக்கம் என்ற கையெழுத்து ஏட்டினை நடத்திய ஆர்வம்.

7. 13 வயதில் இவர் ஆற்றிய வீரவேக உரையைக் கேட்டு பெரும் பேச்சாளரான அண்ணா அவர்கள் திராவிடர் கழகத்தின் திருஞான சம்பந்தன் என்று தொலைநோக் கோடு கூறிய பாங்கு! இந்த வயதிலேயே வெளி மாவட்டங்களுக்குப் பேச அழைக் கப்பட்ட விந்தை!

8. தி.மு.க. பிரிந்தபோது இவருக்கு வயது 16.  தன்னை கொள்கைப் பாதையில் வார்த் தெடுத்த மூத்த அண்ணன், அவரின் குருநாதர்  - சுற்றியுள்ளோர் அனைவரும்  பெரியாரை விட்டு விலகிச் சென்ற நிலையி லும், அந்த வயதிலேயே தனக்குத் தலைவர் பெரியார்தான், இயக்கம் திரா விடர் கழகம் தான் என்று சஞ்சலம் ஏது மின்றி முடிவெடுத்த பக்குவம் - முதிர்ச்சி!

9. திராவிடர் இயக்கத்தைச் சேர்ந்த வர்கள் பலர் பல்கலைக் கழகங்களில் படித் திருந்தாலும், கல்வியில் திறன் காட்டியது இவர் அளவுக்கு யாரும் கிடையாது. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பொருளாதார பாடத் தில் (பி.ஏ. ஹானர்ஸ்) இரு தங்க மெடல் களைப் பெற்ற சாதனை!

10. சனி, ஞாயிறுகளில் பிரச்சாரக் கூட்டங்களுக்குச் செல்லுவது - மற்ற நாட்களில் பல்கலைக்கழகப் படிப்பில் கவனம் எனும் கடமை உணர்வு!

11. திருமணத்தில் கூட பெண்ணை நான் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை. பெரியார் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்த நம்பிக்கை.

12. திருமணம் முடிந்து தேனிலவு என்பது பெரியாரோடு சுற்றுப்பயணம் செய்த உள்ளம்.

13. வக்கீல் தொழிலைத் தொடங்கி நல்ல அளவு அதில் பரிணமித்தபோது, தம் தலைவர் அழைப்புக் கொடுத்தார் என்ற வுடன் அனைத்தையும் தூக்கி எறிந்து, சென்னை வந்து விடுதலை ஆசிரியர் பொறுப்பை ஏற்ற பொறுப்புணர்வு.

14. யாருக்கும் எளிதில் கிடைக்காத பாராட்டும், நம்பிக்கையும் பெரியாரிடம் இவருக்கு மட்டுமே கிடைத்த பேறு!

விடுதலையை வீரமணியின் ஏகபோக  நிர்வாகத்தில் விடுகிறேன் என்று தந்தை பெரியார் விடுதலையில் எழுதிய அதிசயம் (6.6.1964).

15. பெரியார் என்னும் மாமலை சாய்ந்த போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு கழகம் கலையாது - இணையாது அய்யா காட்டிய வழியில் நூலிழை பிறழாமல் நடப்போம் என்று சொன்ன உறுதி (25.12.1973).

16. எந்த ஒரு குற்றமும், தவறும் இழைக் காத நிலையில், மிசா கைதியாக ஓராண்டு காலம் கழித்த கொடுமை. பல்வேறு போராட் டங்களில் ஈடுபட்டு 52 முறை கைது - சிறை!

17. பெரியார் அறக்கட்டளையை வரு மான வரித்துறை மூலம் கபளீகரம் செய்து விடலாம் என்ற ஆரிய சூழ்ச்சியை முறிய டித்து, அறக்கட்டளைதான் என்று வருமான வரி தீர்ப்பாயத்திடமே (இரு நீதிபதிகளும் பார்ப்பனர்கள்) தீர்ப்புப் பெற்ற தீரம். வருமான வரித் துறையிடம் கட்டிய பணத் திற்கு வட்டி போட்டுத் திரும்பப் பெற்ற உலக அதிசயம்!

18. உடல்நலம் பாதிக்கப்பட்ட அன்னை மணியம்மையார் அவர்கள் அவசரமாக அழைத்து நடைபெற்ற திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தலைவர் பதவியிலிருந்து தாம் விலகிக் கொள்வதாக வும், அந்தப் பொறுப்பை வீரமணி ஏற்க வேண்டும் என்று அன்னை மணியம்மையார் எழுதியிருந்த கடிதத்தை சுக்கல் நூறாகக் கிழித்தெறிந்து -அம்மா இருக்கும்வரை அவர்தான் தலைவர் என்று உரத்த குரலில் ஓங்கி ஒலித்த உள்ளப் பாங்கு! (25.12.1977).

19. முதலமைச்சர் எம்.ஜி.ஆர். கொண்டு வந்த பிற்படுத்தப்பட்டோருக்கான ஆண்டு ஒன்றுக்கு 9000 ரூபாய் வருமானம் உள்ள வர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்ற ஆணையை எ(ரி)திர்த்து ஆணையைத் திரும்பப் பெறச் செய்தது - அதன்மூலம் 31 சதவிகித பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 50 விழுக்காடாக உயர்த்த காரணமாக இருந்தது (எம்.ஜி.ஆர். அரசில் போராட்டம் நடத்தி யாரும் வெற்றி பெற்றது கிடையாது என்பதையும் கணக்கில் கொள்க!)

20. மண்டல் குழுப் பரிந்துரைகளைச் செயல்படுத்த வேண்டும் என்று வற்புறுத்தி 42 மாநாடுகளையும் 16 போராட்டங் களையும் நடத்தி, இந்தியா முழுமைக்கும் பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக் கீடுக்கு வழி செய்தது.

21. இதன்மூலம் இந்திய அரசியலிலே சமூகநீதிக்கான அணி - சமூகநீதிக்கு எதிரான அணி என்னும் புதிய சமூக அரசியல் நிலைப்பாட்டை ஏற்படுத்திய நேர்த்தி.

22. நண்பர் வீரமணி அவர்களே, உங்களிட மிருந்து சமூகநீதி உணர்ச்சி பெறுகிறேன் என்று ஒரு பிரதமரே (வி.பி. சிங்) கூறியது.

23. ‘‘Veeramani is the most popular Leader in Tamil nadu’’ என்று ஒரு குடியரசுத் தலைவரே கூறியநிகழ்வு (25.5.1987 - கியானி ஜெயில் சிங்).

24. திராவிடர் கழகம் இருக்க, பெரியார் திடல் இருக்க வீரமணி இருக்க நான் எதற்கு அஞ்சப் போகிறேன் என்று முதலமைச்சர் கலைஞர் கூறும் அளவுக்கு உயர்நிலை (11.11.2006 திருச்சி).

25. வீரமணி எங்கள் ராஜகுரு என்று மக்கள் தலைவர் ஜி.கே.மூப்பனார் பெருமையாகக் கூறியது.

26. திராவிடர் இயக்க வரலாறு நூலை எழுதிய நாவலர் இரா. நெடுஞ்செழியன் அவர்கள் திராவிடர் இயக்க வரலாற்று நூலை வெளியிடத் தகுதி படைத்தவர் வீரமணியே என்று கூறியதில் உள்ள கூர்மை! (11.7.1996).

27. 50 சதவிகிதத்துக்குமேல் இட ஒதுக் கீடு போகக் கூடாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பி லிருந்து தமிழ்நாட்டின் 69 விழுக்காடு இடங் களைக் காப்பாற்ற சட்டம் எழுதித் தந்து (31-சி) மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றச் செய்து, நாடாளுமன்றத்தின் இரு அவை களின் ஒப்புதலும் பெற்று - நீதிமன்ற குறுக் கீட்டி லிருந்து காப்பாற்ற ஒன்பதாவது அட்ட வணையில் சேர்க்கச் செய்தது. (76 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம்). (முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் பி.வி. நரசிம்மராவ், குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா ஆக மூன்று பார்ப் பனரையும் பயன்படுத்தி சமூகநீதியைக் காப்பாற்றியது - சாதாரணமா?)

28. தந்தை பெரியார் காலத்தில் இருந்த கல்வித் தொடர்பான நான்கு நிறுவனங்கள் இப்பொழுது 50க்கும் மேற்பட்ட நிறுவனங் கள் அளவுக்கு வளர்த்த அசாதாரண செயல் - பல்கலைக்கழகம் உள்பட!

29. நான்கு பக்கங்களாக இருந்த விடுத லையை 8 பக்கங்களாக்கி ஆஃப்செட்டில் அச்சிட்டு பூத்துக் குலுங்கும் புதுமலராக நுகரச் செய்துள்ள திறன். திருச்சியிலும் இன்னொரு பதிப்பு. இணைய தளத்திலும் முதன்முதலாக வெளிவந்த ஏடு விடுதலை எனும் பெருமை.

விடுதலையில் வாழ்வியல் சிந்தனைகள் கழகத்திற்கு அப்பால் உள்ளவர்களையும் ஈர்க்கும் தலைசிறந்த படைப்பாளி!

1962ஆம் ஆண்டு முதல் தந்தை பெரியார் பிறந்தநாள் விடுதலை மலரை அறிவுப் பெட்டகமாகக் கொண்டு வந்த சாதனை.

30. அலை அலையாக வெளியீடுகள் பல மொழிகளிலும், 1949 வரை குடியரசு தொகுப்பு, தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு தொடர்ச்சி.

புதிய நூல்கள், பழைய நூல்கள், புதிய பொலிவிலும் வெளியீடு.

31. உலகளவில் பெரியார் கொள் கையைப் பரப்பிட பெரியார் பன்னாட்டு மய்யம்; உலக மனித நேய அமைப்பில்  (I.H.E.U) திராவிடர் கழகம் உறுப்பு. 1994 இந்தியாவின் தலைநகரமான புதுடில்லி யில் பெரியார் மய்யம் நிறுவிய நிகரற்ற சாதனை.

32. அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை சட்டம் கொண்டு வந்து யார் செயல்படுத்துகிறார்களோ அவர்க ளுக்கே ஆதரவு என்று நிபந்தனை வைத்து தேர்தலில் ஆதரவு அளித்த கொள்கை வழி அணுகுமுறை.

2018 மார்ச்சில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைக் சேர்ந்த மாரிச்சாமி மதுரை அய்யப்பன் கோயிலில் அர்ச்சகராக நியமனம் கண்டு பூரித்த சாதனைக்குரியவர்.

33. தன் பக்கம் நியாயம் இருக்கும் நிலையில் தந்தை பெரியார் அவர்களி டமே கூட வாதாடும் நிலை உண்டு.

34. தந்தை பெரியாரை அன்னை மணியம்மையார் உணவுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். உடலுக்கு ஒவ்வாத பொருளை தந்தை பெரியார் வாயில் வைத் தால் கையை விட்டு வெளியே எடுத்தெறிந் தவர் அன்னையார். அதே பணியை அன்னை மணியம்மையார் விடயத்திலும் மானமிகு கி. வீரமணி அவர்கள் செய்ததுண்டு.

35. ரயிலில் முன்பதிவு கிடைக்காமல் மூன்றாம் வகுப்பில் ரயிலில் நடை பாதை யில் படுத்து வந்ததும் உண்டு. (இக்கட்டுரை யாளர் கரூரிலிருந்து ஆசிரியருடன் அத் தகைய பயணத்தில் சென்றிருக்கிறார்).

36. தலைவர் தந்தை பெரியார் அவர்களுக்குப்பின் இயக்கத்தையும், நாட்டையும் பெரியார் போட்டுத் தந்த பாதையில் எவ்வித சபலங்களுக்கும் ஆளாகாமல் செய்து முடித்தமைக்காக எடைக்கு எடை வெள்ளி, தங்கம் அளித்து சீராட்டிய செயல். (எல்லாம் இயக்கத் துக்கே) மாலைக்குப் பதில் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாயும் கழகத்திற்கே வந்து சேரும்).

37. 56 ஆண்டுகாலம் ஒரு பத்திரி கைக்கு (விடுதலைக்கு) ஆசிரியராக இருந்த கின்னஸ் சாதனை. 50ஆம் ஆண்டில் 50 ஆயிரம் விடுதலை சந்தாக்களைத் தோழர் கள் சேர்த்து கொடுத்த அதிசயம்.

38. உடலில் அறுவை சிகிச்சை பெறாத இடம் இல்லை. கண், மூக்கு, தொண்டை, விலா எலும்பு, குடலிறக்கம் மூன்று முறை இருதய சிகிச்சை, மூலம் இவ்வளவையும் தாண்டி, சதா ஓடிக்கொண்டிருக்கும் நில் லாத கடிகாரம்.

39. மாமனார் மானமிகு சித. சிதம்பரம் அவர்கள் மறைந்த போது, அவர் உடலுக் குக் கொள்ளி வைக்கவேண்டும் என்று மாமியார் கேட்டுக் கொண்டபோது, அது என்ன கொள்ளி வைப்பு?- யார் தீ மூட்டி னால் என்ன? என்று கொள்கை பிடிவாதம் செய்ததால், திரண்ட சொத்துக்களை இழந்தவர்!

40. படிப்பு, பயணம், பிரச்சாரம், போராட்டம் என்று வாழ்வை வ(ரி)டித்துக் கொண்ட இவருக்கு வாய்த்த வாழ்வி ணையர் - (ஒரு வகையில் இரக்கம் ஏற்பட்டாலும் ஈடு கொடுக்கும் ஈகை உள் ளம் படைத்த பெரும் பண்பின் குடியிருப்பு!).

41. நிறுவனங்களை ஏராளமாக வளர்த்து விட்டு பெரும் சுமையை தொண்டறத்தின் ஒரு கூறாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம்.

சுயமரியாதைத் திருமணம், ஜாதி ஒழிப்புத் திருமணங்கள் எளிதாக, சிக்கனமாக நடைபெற, சுயமரியாதைத் திருமண நிலையம் பெரும் வீச்சில் நடைபெற ஆவன செய்தவர். தமிழ்நாட்டில் இந்த திருமணங்களை ஊக்குவிக்கும் வகையில் பல விடங்களிலும் மன்றல் இணைத் தேடல் பெருவிழா நடக்க ஆவன செய்தவர்.

42. ஈழத்தமிழர்களுக்காக ஈழ விடுதலை மாநாட்டை உலகத் தமிழர்கள் எழுச்சி கொள்ளும் வகையில் மதுரையில் நடத்திய மாண்பு (17, 18.12.1983)

43. மானமிகு, தொண்டறம் எனும் சொற்களைத் தமிழுக்குத் தந்த பெருமை.

44. தமிழர்கள் பிளவுண்டு போகக் கூடாது என்பதற்காக பிரிந்தவர்களை ஒன்றிணைக்க மேற் கொண்ட முயற்சி (தி.மு.க.- அ.தி.மு.க.) இணைப் புக்குக் கூட பெருமுயற்சி செய்தவர்.

பிரிந்திருந்த அப்துல் சமது அவர்களை யும், அப்துல் லத்தீப் அவர்களையும் ஒன்றிணைக்க தோள் கொடுத்த தோன்றல்)

தாழ்த்தப்பட்டோர் - பிற்படுத்தப்பட்டோருக்கிடையே நடந்த ஜாதி சண்டையைத் தீர்த்து வைக்கத் தயார் என்று அறிக்கை கொடுத்த அரிய தலைவர் (20.7.1997).

45. திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தை உருவாக்கி, ஆக்க ரீதியான பணியில் ஈடுபாடு. 46. தமிழா! தமிழா! ஒன்றுபடு - தமிழன் பகையை வென்றுவிடு! என்று முழக்கம் கொடுத்துவரும் இனப் பாதுகாவலர்.

47. கட்சிகளைக் கடந்து தமிழர்களால், மக்களால் மதிக்கப் பெறும் மானமிகு தலைவர்.

அனைத்துக் கட்சிகளையும் ஒருங் கிணைக்கும் தகுதியுள்ள தலைவர்.

48.    மம்சாபுரம் (20.7.1982), வடசென்னை (11.4.1985), (27.4.1985) மற்றும் சேலம் மாவட்டம் தம்மம்பட்டி (26.8.1987) ஆகிய இடங்களில் உயிருக்குக் குறிவைத்துத் தாக்கப்படுதல். பழனியில் பார்ப்பனர்கள் மாநாடு கூட்டி பாடை கட்டித் தூக்கிச் சென்ற நிலை (1981).

49. பிள்ளையார் பால் குடித்தார் என்று மூடநம்பிக்கை பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டபோது, சென்னை அண்ணா சாலையில் பிள்ளையார் பால் குடித்ததை நிரூபித்தால் ஒரு லட்ச ரூபாய் பரிசு என்றும், கொழுக்கட்டை சாப்பிட்டால் ரூ. 2 லட்சம் பரிசு என்றும் தோளில் தமுக்கை மாட்டிக் கொண்டு தமுக்கடித்துப் பிரச்சாரம் செய்த கவுரவம் பார்க்காத அதிசய மனிதர்.

50. கோபம் வரும் என்றாலும், உள்நோக்கம் இருக்காது. வந்த வேகத்தில் விடைபெறும். எதிலும் துல்லியம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பால் ஏற்படக் கூடிய இயல்பு அது.



51. தந்தை பெரியார் இயக்கத்தை உருவாக்கியதோடு தொலைநோக்கோடு செய்த ஏற்பாடுகள், தக்காரை உருவாக்கி அடையாளம் காட்டிய பான்மை பெரிதும் வியக்கத்தக்கது.

சிவகங்கை பொதுக்கூட்டத்தில் (10.4.1965) தந்தை பெரியார் தெரிவித்த கருத்து நூற்றுக்கு நூறு மானமிகு கி.வீரமணி அவர்களுக்குப் பொருந்து கிறது; இதோ பெரியார் பேசுகிறார்.

தலைவர் அவர்கள் தனது உரையில் எனக்குப் பின் எனது புத்தகங்களே வழிகாட்டும் என்று குறிப்பிட்டார்கள்.

இந்தத் தொண்டும் பிரச்சாரமும் அறிவை மட்டும் சேர்ந்ததல்ல; உணர்ச்சி யையும் சேர்ந்தது. அந்தப் பக்குவம் உள்ள ஒருவன் இருந்தால் அவன் அடுத்து தலைமை ஏற்க வருவான். அதுவரை யார் என்றால் இந்தப் புத்தகங்கள்தான். வேறு யாரும் வரக்கூடாது என்பதல்ல என் கருத்து. அந்தப் பக்குவம் உள்ளவனிருந் தால் அவன் வருவான். முகமது நபியைப் பார்த்து உங்களுக்குப் பின் யார்? என்று கேட்டதற்கு அவர், எனக்குப் பின் வேறு யாருமில்லை என்று கூறிவிட்டார். நான் அப்படிக் கூற விரும்பவில்லை.

அறிவும், உணர்ச்சியும், துணிவும் உள்ள யார் வேண்டுமானாலும் வரலாம் என்று குறிப்பிட்டார்கள்.

(ஆதாரம்: சிவகங்கையில் 10.4.1965 அன்று ஆற்றிய உரையிலிருந்து. விடுதலை 23.4.1965, பக்கம் 3)

பெரியார் பரவாயில்லை என்று கூறி ஆரியம் நடுங்கும் அளவுகோல் ஒன்றே போதும் - இந்தத் தலைவரின் (பழனியில் பாடை கட்டித் தூக்கவில்லையா?) எழுச் சிக்கும் ஈடில்லா சிறப்பிற்கும்! பெரியாரை இழந்த மானுடம் - பெரும் ஆறுதல் பெறுவது இவரிடம்!

52. திருச்சி சிறுகனூரில் பெரியார் உலகம் ஒன்றை உருவாக்கும் சாதனை என்பது - இவரின் சாதனைச் சிகரத்தின் மணி மகுடம் 188 அடி உயரத்தில் தந்தை பெரியார் சிலையாகத் தோன்ற போகிறார் (பீடம் 40 அடி, சிலை உயரம் 148 அடி)

53. 20 நாள்களுக்கு மேல் மாதத்தில் பிரச்சாரம் - 52 முறை கைது - சிறைவாசம்.

54. பெரியார் தொலைக்காட்சிக்கு முன் னோட்டமாக பெரியார் வலைக் காட்சி மூலம் அன்றாடம் பெரியார் கொள்கை - இயக்க செயல்பாடுகளை ஒளிபரப்பும் - விஞ்ஞான நோக்கு.

55. தந்தை பெரியார் கொள்கைகள் தான் இந்த மண்ணுக்குரியவை! சமுதாயத்தின் எல்லாத் தடத்திலும், தளத்திலும் தலைகீழ் புரட்சியை நடத்தியவை. பெரியார் மறை வுக்குப் பிறகு அந்தக் கொள்கை அடிப் படையில் பணியாற்ற விரும்புவோர் - நாட்டில் நல்லது நடக்க வேண்டும்; பெரும் பலன்கள் வேண்டும், பெரியாரியல் வெற்றி பெற வேண்டும் என்று உண்மையிலேயே விரும்புபவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் அணி வகுத்துக் கட்டுப்பாட்டு டன் பணியாற்ற வேண்டியது - மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் இயங்கும் - திராவிடர் கழகத்தில்தான்.

86 ஆண்டு வயதில் 76 ஆண்டு பொது வாழ்க்கை. அந்த வகையில் தமிழ்நாட்டின் மூத்த தலைவர் முத்தமிழ் அறிஞர் மான மிகு கலைஞர் அவர்களால் தமிழர் தலை வர் என்று போற்றி அழைக்கப்பட்டார்., தந்தை பெரியார் அவர்களால் வார்த்து எடுக்கப்பட்டவரும், இந்த வகையில் உலகத்தால் அறியப்பட்டவரும், இந்தப் பிரச்சினையில் வீரமணியின் கருத்து என்ன என்று எதிர்ப்பார்க்கப் பட்டு வருபவருமான ஒரு தலைவரின் கரத்தைப் பிடித்துக் கொள் வதுதான் பொறுப்பான புத்திசாலித் தனம்.

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

-  விடுதலை ஞாயிறு மலர், 1.12.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக