செவ்வாய், 8 ஜனவரி, 2019

ஈரோடு ஆலயப் பிரவேசம்

02.02.1930 - குடிஅரசிலிருந்து...

ஈரோடு ஆலயப் பிரவேச விஷயமாய் தமிழ்நாடு என்னும் பத்திரி கையில் சில விஷயமும் காணப்படுகின்றது.

அது விஷமத்தனமானதாகும். ஈரோடு தேவஸ் தானக் கமிட்டியில் ஆலயப் பிரவேச தீர்மானம் செய்யப்பட்டது முதல் தமிழ்நாடு பத்திரிகை செய்து வந்த விஷமத்தனமும் பொய்ப்பிரசாரமும் நாம் அவ்வப்போது அவைகளைப் பலமாய்க் கண்டித்ததும் நேயர்களுக்கு நினைவிருக்கும். அத்தீர்மானம் நிறை வேறிய பின் நாம் ஊரிலில்லாத காலத்தில் நமக்குச் சிறிதும் தகவல் அன்னியில் சிலர் திடீரென்று ஆலயப் பிரவேசம் செய்து வீண் கலாட்டா செய்துவிட்டார்கள் என்றாலும், நாம் ஊரிலிருந்து வந்து விஷயம் தெரிந்து இம்மாதிரி நம் பேரால், நம்மைக் கேட்காமல் திடீ ரென்று கலாட்டா செய்ததைப் பற்றி கண்டித்தபோது சிலர் ஆலயப் பிரவேசத்திற்கு நீதான் அதிகாரியா? உன்னைக் கேட்டுத்தான் செய்ய வேண்டுமா? எங்கள் இஷ்டப்படியே நடக்க எங்களுக்கு உரிமை உண்டு. ஆதலால் அதைப் பற்றி நீ கேட்க வேண்டியதில்லை. என்று சொன் னார்கள். இதை அனுசரித்து திரு.ஈஸ்வரனும் பத்திரிகைகளுக்கு அப்போதே ஒரு குறிப்பு அனுப்பி விட்டார். இருந்தபோதிலும் ஆலயப் பிரவேசம் செய்தவர்களைக் கவனிக்காவிட்டாலும் அக்கொள்கையைக் காப்பாற்றவேண்டும் என்கின்ற எண்ணத்தின்மீதே நாம் கேசு விஷயத்தில் நாம் செய்ய வேண்டிய காரியங்கள் எல்லாம் செய்தோம். இந்தக் கேசுக்கு சுமார் நானூறு ரூபாய்கள் இதுவரை செலவாகி இருக்கின்றது. (இது திரு. ஈஸ்வரன் சொன்ன கணக்குப்படி) இவற்றுள் சுமார் நூறு ரூபாய்கள் வரை நாம் கொடுத்திருக்கிறோம். மலாய் நாட்டுக்கு போன நமது ஏஜென்டு திரு.காளியப்பன் அவர்களால் நூறு ரூபாய்க்கு மேலாகவே வசூல் செய்தனுப்பப்பட்டது. நமது மைத்துனர் திரு.மாப்பிள்ளை ராமசாமி, ஈஸ்வரனிடத்தில் 45 ரூபாயிக்கு மேலாகவே கொடுக்கப் பட்டதாக அவர் சொன்னார். இது தவிர, இக்கேசு சம்பந்தமாய் வெளியூர்களிலிருந்து வருகின்றவர்கள் எல்லோருக்கும் ஜாகை சௌகரியம், சாப்பாடு ஆகிய வைகள் நமது வீட்டிலேயே நடந்து வந்திருக்கின்றது. திரு.ஈஸ்வரனுக்கும் அவரது சினேகிதர்களுக்கும் கேசு ஆரம்பித்த காலம் முதல் கேசு முடிந்த நாள் வரையில் - கேசு முடிந்து பணம் கட்டி விடுதலையாகி வெளிவந்த மறுநாள் வரை சாப்பாடு நமது வீட்டில்தான் நடந்துகொண்டு வந்தது; வருகிறது. அதற்கு முன்னும் வருஷக்கணக்காய் பல வருஷங்கள் நமது வீட்டில்தான் சாப்பிட்டு வருகிறார். தவிர கேசுக்கு ஆஜரான இரண்டு மூன்று வக்கீல்களும் யாருக்காக வந்தார்கள் என்பதையும் அவ் வக்கீல் களையே கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

இன்னும், இதுவிஷயமாக செய்த காரியங்கள் சுருக்கமாகச் சொல்வதனால் வக்கீல் கடைசியாக ஆர்க்குமெண்டுக்கு வந்துவிட்டுப் போனதற்குக்கூட நாம்தான் மலாய் நாட்டிலிருந்து வந்ததும் முதல் வேலையாக ரயில் சார்ஜ் கொடுத்தோம். மலாய் நாட்டுக்குப் புறப்படும்போதும் ரயிலேறியபின் கட்சி வேலையாக வக்கீலுக்கு ரயில் சார்ஜ் கொடுத்து விட்டுத்தான் பயணம் சொல்லிக்கொண்டோம், இந்த கேசுக்கு என்று வந்திருந்த திரு.கிரித்திவாசுக்கும் சில சமயம் ரயில் சார்ஜ் கொடுத்தோம். இவர்கள் கோயில் பிரவேசம் செய்யப் போகும்போது நமது வீட்டில்தான் சாப்பிட்டுவிட்டுப் போனார்கள். கோவிலுக்குள் இருந்தபோதுகூட நாம் ஊரில் இல்லாவிட்டாலும் நமது மனைவியார் சாப்பாடு அனுப்பி இருக்கிறார்கள்.

இவ்வளவு காரியங்களையும் பெற்றுக்கொண்டும் நாம் வழக்கிற்கு விரோதமாய் நடந்து கொண்டதாகவும், யாரையும் உதவி செய்யவிடாமலும் தடுத்ததாகவும் சொல்வதற்கு எவ்வளவு தூரம் துணிந்திருக்கிறார்கள் என்பதையும் புதைக்கப்பட்ட திரு.பி.வரதராஜுலு இக்கூட்டத்தைப் பிடித்து மறுபடியும் கரையேற நினைப்பதும் எவ்வளவு யோக்கியமான காரியம் என்பதையும் வாசகர்களே தெரிந்து கொள்ளட்டும்.

செய்துவிட்டுச் சொல்லிக் காட்டுவதற்கு இதை எழுதவில்லை. நமது மீது சுமத்தப்படும் பழிப்புக்குப் பதில் சொல்ல வேண்டியிருப்பதால் எழுதுகிறோம். ஆனால், நாம் ஒன்று ஒப்புக் கொள்ளுகின்றோம். அதாவது இக்கேசுக்குப் பணம் கொடுக்கும்படி பொதுஜனங்களுக்கு எனது மனைவியின் பேரால் ஓர் அப்பீல் வெளியிட ஆரம்பித்தார்கள். அதை நான் பத்திரிகையில் போட மறுத்ததுண்டு. காரணம் கேசுக்கு அதிக பணச் செலவில்லை. ஏனெனில் சாப்பாடு நம்முடையது. வக்கீல்களுக்குப் பீசு கிடையாது. சார்ஜ் சத்தமும் ஸ்டாம்பும்தான் வேண்டியது. இதற்கு அதிக மான பணம் தரவேண்டியதில்லை. நம்மைக் கேட்ட போதெல்லாம் மேல் கண்டபடி ஒரு தடவைகூட இல்லை என்று சொல்லாமல் பணம் கொடுத்திருக் கின்றோம். அடிக்கடி பொது ஜனங்களைப் பணம் கேட்பதால் கொள்கையில் அபிமானம் குறைந்து விடும் என்று சொல்லியே நமது பேரை உபயோகிக்க வேண்டாம் என்று சொன்னோம். மற்ற காரணங்களையும் மற்றும் இப்படி ஒரு கூட்டம் பொறுப்பில்லாமல் நடந்து கொள்வதால் நமக்கு அடிக்கடி ஏற்பட்டு வந்த இடையூறுகளையும், நஷ்டங்களையும் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டுவந்த நமது சகிப்புத் தன்மையும் பின்னால் விவரமாய் எழுதுகிறோம். ஆனால் ஒன்று, இன்றைய தினம் வெகுவீரமாய் ஈரோடு ஆலயப் பிரவேசத்தைப் பற்றி எழுதும் தமிழ்நாடு திரு.பி.வரதராஜுலு, திரு.ஈஸ்வரனைப் பாராட்டி ஒரு தந்தி கொடுத்து ஏமாற்றியதல்லாமல் ஒரு காதொடிந்த ஊசி அளவு உதவி செய்தாரா என்றாவது, இதுமாத்திரமல் லாமல் வேறு எந்த சத்தியாக் கிரகத்திலாவது கையெழுத்தும், வாக்குத் தத்தமும் செய்து நாணயமாய் நின்று அதை நிறைவேற்றாமல் ஏமாற்றி விட்டு நடு சந்தர்ப்பத்தில் விட்டுவிட்டு ஓடின நடவடிக்கைகள் ஒன்றுக்கு மேல்பட்ட தடவை இல்லையா என்றாவது நினைத்துப் பார்த்தால் இவ் வளவு விஷமத்தனம் செய்ய வெட்கப்படுவாரென்றே சொல்லுவோம்.
---––---------/////-----////-//------/////-///////---

எவனொருவன் கடவுளிடத்திலும் அதைப்பற்றிச் சொல்லும் மதக் கொள்கைகளிடத்திலும் பூரண நம்பிக்கை வைத்து எல்லாக் காரியங்களும் அவைகளுடைய செயல்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றானோ அவன் பூரண சுயேச்சை


என்னும் பதம் வாயினால் உச்சரிக்கக்கூட


யோக்கியதை அற்றவனாவான்.


-  விடுதலை நாளேடு, 29.12.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக