வெள்ளி, 6 ஜூலை, 2018

வடமாநிலம் - பஞ்சாபில் தாழ்த்தப்பட்டோர் ‘திராவிடர்’ அடையாளத்தை விரும்பி ஏற்கின்றனர் திராவிடர் இயக்கத்திற்கு மாபெரும் வெற்றி! படம் பிடிக்கிறது ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஏடு



தந்தை பெரியாரால் 1925ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை வெற்றி 90 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் வடமாநிலத்தில் மாபெரும் தாக்கத்தினை ஏற்படுத்தி வருகிறது. பஞ்சாபில் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் தாங்கள் 'திராவிடர்' எனும் அடையாளத்துடன் இருப்பதை விரும்பி ஏற்று வருகின்றனர்.

அண்மையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் மூலம் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மரபினர் மீதான வன்கொடுமைச் தடுப்புச் சட்டத்தில் உள்ள நடவடிக்கைப் பிரிவுகள் நீர்த்துப்போன நிலையில், மத்திய பா.ஜ.க. அரசு அதனைக் களைந்திட உறுதியளித்து அறிவித்த அவசரச் சட்டம் எதையும் கொண்டு வராத நிலையில், அதிருப்திக்கு உள்ளான ஒடுக்கப்பட்ட மக்கள் 'திராவிடர்' அடையாளத்தை கொள்கைப் பூர்வமாக ஏற்று தமது பெயருக்குப் பின்னர் 'திராவிடர்' அடையாளத்தை சேர்த்துக் கொள்ளத் தொடங்கியுள்ளார்கள்.

இராவணன் பரம்பரை

ஆரியத்தை எதிர்த்து நின்ற இரா வணனின் பெயரில் இயக்கங்கள் நடத்தி தங்களது பெயருக்குப் பின்னால் தைத்ய, தானவ், அச்சூட் என்னும் திராவிடர் பெயர்களை சேர்த்துக் கொள்கின்றனர். 'ராட்சதன்' எனும் துணைப் பெயரையும் சேர்த்துக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். 90 ஆண்டுகளுக்கு முன்னர் தந்தை பெரியார் ஆரிய ஆதிக்கத்திற்கு - அடக்கு முறைக்கு எதிராக தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தின் நோக்கம், அதன் ஆக்கரீதியான - திராவிடர் அடை யாளப் போற்றுதல் என அவர் விரும் பியது இன்று வட மாநிலமான பஞ்சாபில் மலர்ந்து, உரிமை வேட்கையுடன் வலம் வரத் தொடங்கியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்டு வரும் இந்த மாபெரும் மாற்றம் குறித்து இன்று (ஜூலை 6, 2018) வெளிவந்துள்ள 'தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' ஆங்கில ஏட்டில் விரிவாக செய்தி வந்துள்ளது. ஆங்கிலத்தில் வந்த செய்தியின் தமிழ் மொழியாக்கம் பின்வருமாறு:

'பெரியார்' என பரவலாக அறியப் படும் ஈ.வெ.ராமசாமி அவர்கள் தமிழ் நாட்டில் 1925இல் சுயமரியாதை இயக் கத்தை, திராவிடர் இயக்கத்தை தொடங்கி  ஜாதி ஒழிப்பினை மூடநம்பிக்கை தகர்ப்பினை, கொள்கை முழக்கமாகக் கொண்டு  சுயமரியாதை உணர்வு ஊட்டப்பட்டுள்ளது. இருந்த போதிலும் அந்த இயக்கம் வட மாநிலங்களுக்கு எதிரானது எனவும் இந்தி மொழிக்கு எதிரானது எனவும் தவறாக கருதிடும் போக்கும் இருந்து வருகிறது.

இந்த தவறாகக் கருதும் போக்கு தகர்ந்திடும் வகையில் தற்பொழுது மாற் றங்கள்  நடைபெற்று வருகின்றன. தந்தை பெரியார் நிறுவிய 'திராவிடர்' இயக்கம் இன்று வட மாநிலங்களிலும் பரவி வருவது அவர்தம் கொள்கை கனவானது நனவாகி நடைமுறையாகி வருகிறது.

தாழ்த்தப்பட்டவர் 32 விழுக்காடு

சுயமரியாதை இயக்கம் தொடங் கப்பட்டு 90 ஆண்டுகள் கடந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் 'திராவிடர்' அடையா ளத்தை விரும்பி ஏற்றிடும் நிலை உரு வாகி உள்ளது. அந்த மாநிலத்தில் தாழ்த் தப்பட்ட சமுதாய மக்கள் 1930 ஆண்டு களில் தந்தை பெரியாரைப் பற்றி அறிந் திராத நிலையில், இப்பொழுது உள்ள தலைமுறையினர் தங்களை 'திராவிடர் எனும் அடையாளத்துடன், வேறுபடுத்திக் காட்டிக் கொள்வதில் முனைப்பு காட்டி வருகின்றனர். நமது நாட்டில் தாழ்த்தப் பட்ட சமுதாயத்தினர் மிக அதிகமாக -32 விழுக்காடு அளவில் வாழ்ந்து வரும் மாநிலம் பஞ்சாப் ஆகும்.

'திராவிடர்' அடையாளத்தை விரும்பி ஏற்றிடும் போக்கு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் ஒரு பிரிவினரான வால்மீகி (துப்புரவு தொழிலை ஆண்டாண்டு காலமாக செய்து வந்து, ஜாதிப் படி நிலையின் அடிமட்டத்தில் உள்ளவர்கள்) சமுதாய மக்களிடம் பரவலாகி வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் 'திராவிடர்' அடையாளத்தை விரும்பி ஏற்றி டும் போக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பே நிலவியது. எனினும் அத்தகைய நிலை இயக்கம் சார்ந்த செயற்பாட்டாளர்கள் அள வில் மட்டுமே இருந்தது. இப் பொழுது உள்ளது போன்று பரவ லான மனப்போக்கு உருவாகிட வில்லை. தாழ்த்தப்பட்ட, பழங் குடி மரபினர் மீதான வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் நடவடிக்கை விதிகளை கட்டுப் படுத்திடும் வகையில் உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியதற்குப் பின்னர், பஞ்சாப் மாநில தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களிடம் 'திராவிடர்' அடையாளத்தை விரும்பி ஏற்றிடும் போக்கு மிகப் பரவ லாகி உள்ளது. தாங்கள் அணியும் உடை யின் மீது தங்களது அடையாளத்தை காட்டிடும் விதமாக 'திராவிடர்' அல்லது 'அனாரியன்' (ஆரியர் அல்லாதார்) என முத்திரை பதித்து ஆடை அணிந்திடும் வழக்கத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

ராட்சசன் என்பதில் பெருமை

அவர்களில் மிகப் பலர் தங்களது பெயருக்குப் பின்னர் 'திராவிடர்' எனும் அடையாளத்தைக் காட்டிடும் வகையில், 'தைத்யா, தானவ், அச்சூட், லங்கேஷ்' எனும் துணைப் பெயரைச் சேர்த்துக் கொண்டு வருகின்றனர். இதற்கும் மேலாக 'ராட்சசன்' எனும் துணைப் பெயரையும் வைத்துக் கொள்கின்றனர். 'திராவிடர்' எனும் துணைப் பெயர் சூட்டிக் கொள்வதும் கடைப்பிடிக்கப் பட்டு வருகிறது. இத்தகைய பெயர் மாற்றங்கள், பதிவு செய்யப்படுவதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பினும், வழக்கத்தில், தாங்கள் அழைக்கப்படு வதில், அடையாளப்படுத்தப்படுவதில் - 'திராவிடர்' அடையாளத்தை வெளிப் படுத்தும் துணை பெயர்களுடன் இருப் பதை பெரிதும் விரும்புகின்றனர்.

ஆடி தரம் சமாஜ் அமைப்பின் நிறு வனர் தாவுத் ரதன் ராவண் கூறியதாவது:

உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு மற்றும் ஏப்ரல் 13 அன்று பக்வாரா கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கும், வலது சாரி எண்ணம் கொண்ட இந்துத்துவா பிரிவினருக்கும் நடந்த மோதலில், 'வால்மீகி' சமுதா யத்தைச் சார்ந்த ஒருவர் கொல்லப்பட்ட நிகழ்விற்குப் பின்னர், 'திராவிடர்' அடை யாளத்தை முன்னெடுக்கும் போக்கு சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. எங்களது அமைப்பு இத்தகைய 'திராவிடர்' அடை யாளம் சார்ந்த இயக்க செயல்பாட்டை முன்னெடுத்துச் செல்வதில் முனைப்பாக உள்ளது” என ராவண் கூறுகிறார்.

இராவண சேனை

இராவண் சேனா அமைப்பின் தலைவர் லங்கேஷ் கூறுவதாவது:

நகர்ப்புறப் பகுதிகளிலும், பெரு நகரங் களிலும் 'இராவண சேனை' அமைப்பில் சேர்ந்திட  எங்களது சமுதாய இளைஞர்கள்  ஆர்வம் காட்டி வருகின் றனர். எங்களது அமைப்பில் சேர்ந்திடு வோருக்கு அவர்களுக்கு துணைப் பெயர்களாக லங்கேஷ், தானவ், மற்றும் இதர 'திராவிடர்' அடையாளம் கொண்ட மகாத்மா இராவணன் வகுப்புப் பிரிவுப் பெயர்களை வழங்கி வருகிறோம்“

மேற்கண்டவாறு 'தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' செய்தியில் குறிப்பிடப்பட் டுள்ளது.

அன்றே பாடினார் புரட்சிக் கவிஞர்

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடிய (தந்தை பெரியாரின்) 'மண்டைச் சுரப்பை உலகு தொழும்' என்பதை மெய்ப்பிக்கும் வகையில் பெரியார் மறைந்து 44 ஆண்டுகள் கடந்தும் அவருடைய சுயமரியாதைக் கொள்கையின் தாக்கம் வட மாநிலங்களிலும் பரவிடத் தொடங்கி சூடு பிடித்து வருகிறது. "பெரியாரின் தத்துவம் மனிதநேய தத்துவம், மக்கள் சமத்துவ தத்துவம், எந்த ஒரு நிலப்பகுதிக்கும் மட்டும் சொந்தமானது அல்ல. மனிதர்கள் வாழக்கூடிய அனைத் துப் பகுதிகளுக்கும் பொருத்தமானது; ஏற்புடையது” என சுயமரியாதை இயக் கம் தோற்றுவிக்கப்பட்டது குறித்து வெளியான பிரகடனச் செய்தி இன்று நடைமுறையில் பரவலாகி வருகிறது. பெரியார்தம் கொள்கை உலகமயமாகி மேலும் வலுப்பட்டு வருகிறது.

 -  விடுதலை நாளேடு, 6.7.18

அதே குடந்தையில்தான்... (சட்ட எரிப்பு)


இந்திய அரசமைப்புச் சட் டத்தில் ஜாதியைப் பாதுகாக்கும் பகுதியைக் கொளுத்தும் போராட்டத்தை அறிவித்தார் தந்தை பெரியார் (தஞ்சை மாநாடு, 3.11.1957).

சட்டத்தைத் திருத்துவதற்குப் பதிலாக சட்டத்தைக் கொளுத்தி னால் 3 ஆண்டு தண்டனை என்று ஓர் சட்டம் (Prevention of Insult to National Honour-1952) அவசர அவசரமாகக் கொண்டு வரப்பட்டது.

ஆனால், அதைச் சற்றும் பொருட்படுத்தாமல் 10 ஆயிரம் கருஞ்சட்டைத் தொண்டர்கள் கொளுத்தி 3 மாதம் முதல் 3 ஆண்டுவரை தண்டனை ஏற்றனர். பலர் சிறையிலும் மாண்டனர் - நோய்வாய்ப்பட்ட நிலையில் வெளிவந்த பலரும் மரணத்தைத் தழுவினர். சிறை யில் பிறந்த குழந்தைக்கு சிறைப் பறவை' என்றும்கூடப் பெயர் சூட்டப்பட்டதுண்டு.

அந்தப் போராட்டத்தில் ஈடு பட்டுச் சிறை சென்ற 90 வயதைக் கடந்த முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் குடந்தை அரு.ரெங்கநாதன் நம்மோடு கருப்புடை அணிந்து உலாவந்து கொண்டுள்ளார்.

குடந்தை சோழபுரத்தில் நடந்த ஒரு நிகழ்வைக் கேளுங் கள்! கேளுங்கள்!!

சென்னை மாநில கனம் உள்நாட்டமைச்சர் அவர்களுக்கு சோழபுரம் திருப்பனந்தாள் வட்டகிராமத்தினர் எழுதிக் கொள்வது:- இதனடியில் கையொப்பமிட்டுள்ள நாங் கள் திராவிட நாட்டின்ஒப்பற்ற தலைவர்பெரியார்அவர்களின் கட்டளைப்படி26.11.1957இந்திய அரசியல் சட்டத்தின் அச்சுப்பிரதி களை ஆயிரக்கணக்கான பொதுமக்களின் முன்னிலை யிலும், போலீஸ் அதிகாரிகள் முன்னிலையிலும் கொளுத்தி னோம். அப்படிக் கொளுத்திய 139 பேர்களை போலீஸ் ஸ்டே ஷனுக்கு (திருப்பனந்தாள்) அழைத்துச் சென்றனர்.

பிறகு இரவு 9.30 மணிக்கு கும்பகோணம்தாலுக்கா திருப் பனந்தாள் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் எங்களில் 40 பேர்களை மட்டும் எடுத்துக் கொண்டு மீதி யுள்ள 99 பேர்களையும் கைது செய்ய முடியாது; வீட்டுக்குப் போங்கள் என்று கூறிவிட்டார். ஏன்' என்று கேட்டதற்கு நீங் கள் கொளுத்தியதை நான் பார்க்கவில்லை. அதனால் உங் களைக் கைது செய்ய முடியாது' என்று பச்சையாகப் பொய் சொல்லிவிட்டார்.உடனே நாங்கள் அப்படியானால் இப் போது உங்கள் எதிரிலேயே கொளுத்துகிறோம். இப்போது கைது செய்யுங்கள் என்று கூறியதற்கும் இரவாகிவிட்டது. இனி கொளுத்தினாலும் கைது செய்ய முடியாது என்று கூறிவிட்டார். அதன் பேரில் எங்கள் தலைவரின் கட்டளைப்படியே இந்திய அரசியல் சட்டத்தின் அச்சுப் பிரதிகளைக் கொளுத்தி அதன் சாம்பலை தேசிய கௌரவ சட்டம் கொண்டு வந்த அமைச்சராகிய தங்களுக்கு அனுப்பியுள்ளோம். மேற்படி நிகழ்ச்சிகள் நடந்ததை மேற் படி தொகுதி சென்னை சட்ட சபை உறுப்பினர் உயர்திரு. இராமாமிர்தத் தொண்டமான் அவர்களும் நேரிலேயே கண் டார்கள்  என முகவரியுடன் 99 பேர் கையொப்பமிட்டு அனுப்பி யுள்ளனர்.''

(விடுதலை' - 30.11.1957)

இத்தகு தொண்டர்களை உலகில் கேள்விப்பட்டதுண்டா?

அந்தத் தியாக சீலமாம் குடந்தை மாநாட்டுக்கு வாருங் கள் தோழர்களே!

- மயிலாடன்

-  விடுதலை நாளேடு, 6.7.18

வியாழன், 5 ஜூலை, 2018

மறைமலை அடிகள் பிறந்த நாள் 15.07.1876


தனித்தமிழ் எனும் சொல்லுக்கு வித்திட்ட காரணத்தால் தனித் தமிழ்த் தந்தை என அழைக்கப் பட்டவர்.
நாகப்பட்டினம் அருகே கடம்பாடி எனும் சிற்றூரில் பிறந்த மறைமலையடிகளின் தந்தை பெயர் சொக்கநாதப் பிள்ளை, தாயார் சின்னம்மை. மறைமலையடிகளின் இயற்பெயர் வேதாசலம். 
தமிழ் மேல் கொண்ட ஆர்வத்தின் காரணமாகத் தன் பெயரை வேதம் = மறை, சலம் = மலை எனும் அடிப்படையில் மறைமலை என்பதாக அவர் மாற்றிக்கொண்டார். நாளடைவில் இதுவே மறைமலையடிகள் என அழைக்கும்படி ஆனது.
நாகப்பட்டினத்தில் வெ.நாராயணசாமிப் பிள்ளை எனும் புலவரால் சிறுவயதிலேயே தமிழ் மேல் ஆர்வம் தூண்டப் பெற்றவர். தினந்தோறும் 50 ரூபாய்க்கு நூலை வாங்கிப் படிப்பதைக் கொள்கையாகக் கொண்டு அதனைக் கடைப்பிடித்து இன்று புகழ்பெற்று விளங்கும் மறைமலையடிகள் நூலகத்துக்கு அடித்தளமிட்டவர்.
அது நாள் வரை வடமொழி, ஆங்கிலம், உருது ஆகியவற்றின் கலப்பினால் மூச்சடைத்துக் கிடந்த தமிழ், தன்னுணர்வு பெற்று விழிப்பு நிலை பெற்றது இவரால். தொடர்ந்து தனித்தமிழ் எனும் இயக்கத்தையும் வழி நடத்தியவர் என்பது இவரது வாழ்நாள் சிறப்பு.
1898 முதல் 1911 வரை பதின் மூன்று ஆண்டுகள் சென்னை கிறித்துவக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். கல்லூரி நிருவாகம் தமிழ் வளர்க்க தமிழைக் கட்டாயப் பாடம் ஆக்காததைக் கண்டித்து தன் பணியைத் துறந்தார்.
இவர் எழுதிய ‘அறிவுக்கொத்து’ என்னும் நூல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாடமாக வைக்கப்பட்டபோது, அதில் அமைந்திருந்த ‘மேல்நாட்டவரும் தமிழ் நாட்டவரும்’ கட்டுரைக்கு பார்ப்பனர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. 
தந்தை பெரியார் இந்த எதிர்ப்புகளுக்கு பதிலடி தந்து ‘குடிஅரசு’ ஏட்டில் எழுதினார். அவை தொகுக்கப்பட்டு ‘மறப்புக்கு மறுப்பு’ எனும் தலைப்பில் புத்தகமாக வந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ், ஆங்கிலம், வடமொழி மூன்றிலும் புலமை பெற்ற அடிகள் வாழ்நாளில் எழுதிய நூல்களின் எண்ணிக்கை 50க்கும் மேல். 1937இல் நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு தன் தமிழைக் காப்பாற்றப் போராடியவர்.
-உண்மை இதழ்,1-16.7.17

75 ஆண்டுகளாக அணையாத தீ! கோவி. #லெனின்

#நக்கீரன்இதழில்

Periyar
75 ஆண்டுகளாக அணையாத தீ!
கோவி. #லெனின் 



பானையில் தண்ணீர் இருந்தது. தாகம் மிகுந்த மாணவர் அந்தத் தண்ணீரை ஒரு குவளையில் எடுத்து குடித்துவிட்டார். அவ்வளவுதான்.. பிரளயமே ஏற்பட்டுவிட்டது. கடும் வார்த்தைகளால் அந்த மாணவரை வறுத்து எடுத்துவிட்டனர் வருணாசிரமத்தின் காவலர்கள்.

“உங்களை மாதிரி ஆளுங்க குடிக்கத்தான் தனியா ஒரு பாணை இருக்குதே.. எங்களவா பானையில உள்ள ஜலத்தை ஏண்டா மொண்டு குடிச்சே..” என சம்பந்தத்தை கண்டித்ததுடன், அபராதமும் விதிக்கப்பட்டது. இது நடந்தது, அரசாங்கம் நடத்தும் கல்லூரியில்! ஆண்டு, 1943.

காவிரியாற்றை ஒட்டி அமைந்துள்ள கும்பகோணம் அரசு கல்லூரி விடுதியில்தான் இந்த நிலை. உயர்சாதியினரான பிராமண சமுதாய மாணவர்களுக்குத் தனி தண்ணீர் பானை. மற்ற சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒரு பானை. இந்த சம்பந்தத்தை அறியாமல் சம்பந்தம் என்ற கதர்ச் சட்டை அணிந்த மாணவர், தன்னைப் போன்ற சமூகத்தினர் தண்ணீர் எடுத்துக் குடிக்க வேண்டிய பானைக்குப் பதில், உயர்வகுப்பாருக்கான பானையிலிருந்து தண்ணீர் குடித்ததால், விடுதிக் காப்பாளர் கணேச அய்யரால் ‘விசாரணை’க்குட்படுத்தப்பட்டு, அபராதமும் விதிக்கப்பட்டது.

அதே கல்லூரியில் பி.ஏ. வகுப்பில் படித்துவந்த மாணவர் எஸ்.தவமணிராசனுக்கு இந்தத் தகவல் தெரிய வந்தது. தனது நண்பர் டி.மகாலிங்கத்துடன் சென்று சம்பந்தத்தை சந்தித்தவர், “அபராதம் கட்ட வேண்டாம் நண்பா.. என்ன நடந்தாலும் எதிர்கொண்டு உரிமையைக் காப்போம்” என்றார் உறுதியாக. மாணவர்களை அணி திரட்டினர். அவர்களின் போராட்டக் குணத்தால், அபராதத்தை ரத்து செய்தார் கல்லூரி முதல்வர் கே.சி.சாக்கோ.

ஆரியத்துக்கு எதிராக திராவிட மாணவர்கள் சுயமரியாதை உணர்வுடன் பெற்ற இந்த முதல் வெற்றியின் தொடர்ச்சியாக, கும்பகோணத்தில் நாடகம் நடத்திய எம்.ஆர்.ராதாவையும், சிதம்பரத்தில் திராவிட நாடு இதழ் வளர்ச்சிக்காக இயக்கப் பிரச்சார நாடகம் நடத்திய அறிஞர் அண்ணாவையும் மாணவர்கள் சந்தித்தனர். கும்பகோணம் அரசு கல்லூரிக்கு அழைத்தனர். அந்த அழைப்பினை ஏற்று 1.12.1943 அன்று திராவிட மாணவர் கழகத்தை கும்பகோணத்தில் தொடங்கி வைத்தார் அண்ணா.

75 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட திராவிட மாணவர் கழகத்தின் தலைவராக தவமணிராசனும் துணைத் தலைவராக கருணானந்தமும், செயலாளராக பழனிவேலும், பொருளாளராக சொக்கப்பாவும் பொறுப்பேற்றனர். தடுக்கி விழுந்தால் திருக்கோவில்களில்தான் விழவேண்டும் என்கிற அளவுக்கு ஆன்மிகம் தழைத்த நகரான கும்பகோணத்தில் ஆரியத்தின் தாக்கம் இன்று வரை உண்டு. அந்த மண்ணில்தான், முக்கால் நூற்றாண்டுக்கு முன், அண்ணாவை அழைத்து திராவிட மாணவர் கழகத்தை உருவாக்கியவர்கள், அடுத்ததாக பெரியாரையும் அழைத்தனர்.

ஆளுயர மாலை அணிவித்து பெரியாருக்கு வரவேற்பு அளித்து விருந்து தந்தது கல்லூரி நிர்வாகம் இலக்கிய மன்றத்தில் 2 மணி நேரம் உரையாற்றிய பெரியார்,  தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் குறித்து தனது தொலைநோக்குப் பார்வையை முன்வைத்தார். (இன்று கணினி பயன்பாட்டில் பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் மிக முக்கிய பங்காற்றி, இளைய தலைமுறையினருக்குத் துணை நிற்கிறது)

குடந்தை கல்லூரியில் தமிழ்த் தாத்தா உ.வே.சா நினைவாக பேச்சுப் போட்டிக்கு வழங்கப்படும் தங்கப் பதக்கத்தை, போட்டியில் பங்கேற்காத மேல் சாதி மாணவருக்கு கிடைக்கச் செய்ய நிர்வாகத்தினர் செய்த சதித் திட்டத்தை முறியடித்தது திராவிட மாணவர் கழகம். கீர்த்தனைகள் பாடுவது மட்டுமே இசைக் கச்சேரி என்றிருந்த நிலையில், கல்லூரித் தமிழ் மன்றத்தின் சார்பில் இசை விழாவை ஏற்பாடு செய்னர் திராவிட மாணவர்கள். இதற்கு மேலசாதியைச் சேர்ந்த கல்லூரி ஆசிரியர்களும் நிர்வாகத்தினரும் எதிர்ப்பு தெரிவித்த போதும், போராட்டக் களம் கண்டு, பூட்டப்பட்ட கல்லூரி விழா மண்டபத்தைத் திறக்கச் செய்து, அதில் தமிழ் இசைக் கருவிகள் ஒலிக்க இசை நிகழ்ச்சி நடத்திக் காட்டினர். கல்லூரியில் சமஸ்கிருதம் ஒலித்த மேடைகளை தமிழால் நிறைத்தனர் மாணவர்கள்.

திராவிட மாணவர் கழகத்தின் மாநில மாநாடு குடந்தை வாணி விலாச சபாவில் 1944ல் நடந்தது. அறிஞர் அண்ணா, புதுக்கோட்டை சமஸ்தான திவான் தாருல் இஸ்லாம், நாவலர் இரா.நெடுஞ்செழியன், பேராசிரியர் க.அன்பழகன், கே.ஏ.மதியழகன், இரா.செழியன், மா.நன்னன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். மாணவர்கள் இணைந்து உருவாக்கிய அமைப்புக்கு பெரியாரின் ஆதரவு தொடர்ந்து கிடைத்தது.


குடி அரசு' இதழில் எழுதிய அறிக்கையில், "அன்புள்ள மாணவர்களே.. பிற்காலம் உங்களுடையது. உங்கள் வயிற்றுப் பிழைப்புக்கோ, வாழ்வுக்கோ வகை செய்துகொள்வதற்கு மாத்திரமல்ல. நாட்டைப் பாருங்கள். நாட்டில் உங்கள் இன நிலைமையைப் பாருங்கள். கோழைகளையும்- தன்னல வீரர்களையும் நல்லுரு வாக்குங்கள். பெண் மக்களை ஆண்மையுள்ளவர்களாக ஆக்குங்கள். கீழ்மக்களை-தீண்டப்படாதவர்கள் என்ப வர்களை மேன் மக்களாக ஆக்குங்கள். இவை உங்களால் முடியும். கண்டிப்பாக முடியும். அதுவும் இப்போதே முடியும்" எனத் தெரிவித்திருக்கிறார் பெரியார்.

குடந்தை கல்லூரி மாணவர்கள் திராவிட மாணவர் சங்கத்தை உருவாக்கிய இதே காலகட்டத்தில்தான், திருவாரூரில் தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றத்தினை கலைஞர் மு.கருணாநிதி தன் மாணவப்பருவத்தில் தொடங்கி புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் வாழ்த்துக் கவிதையைப் பெற்றார். அந்த  மன்றத்தின் ஆண்டு விழாவில் சொல்லின் செல்வர் ஈ.வெ.கி.சம்பத், நாவலர் நெடுஞ்செழியன், கே.ஏ.மதியழகன், கி.வீரமணி உள்ளிட் டோர் பங்கேற்றனர். மாணவப் பருவத்தில் விதைக்கப் பட்ட விதைதான் ஓர் அரசியல் பேரியக்கத்திற்கு அடித்தளமானது.

மாணவர்கள் தங்கள் சுயநலத்துக்காகவும், வெற்று ஆடம்பரத் துக்காகவும் கத்தி-அரிவாள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு பேருந்திலும் ரயிலிலும் வன்முறை விளையாட்டில் ஆர்வம் காட்டும் இன்றைய நிலையில், திராவிட மாணவர் கழகத்தின் பவள விழா(75ஆம் ஆண்டு) கும்பகோணத்தில் ஜூலை 8ந் தேதி நடைபெறுகிறது. திராவிடர் கழகம் முன்னெடுக்கும் இந்த விழா, அன்றைய மாணவர்களைப்போல இன்றைய மாணவர்கள் மேற்கொள்ள வேண்டிய சமுதாயப் பணிகளை நினைவூட்டுவதாக அமையும்.

மாட்டுக்கறி தின்றதற்காக மனித உயிர்களைப் பறிக்கும் மதவெறி சக்திகள் தலைவிரித்தாடுவதுடன், கச்சநத்தம்-சந்தையூர் என சாதிக் கொடுமைகளுக்கான சாட்சியங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. தேர்தல் அரசியல் லாபத்தை மட்டுமே கருதுவோரால் ஒருபோதும் மனித குலத்தின் முழுமையான விடுதலையை நோக்கிப் பயணிக்க முடியாது.

சமூக அக்கறை கொண்ட இளைய சமுதாயம்தான் அதற்கானப் பயணத்தை உறுதியாகத் தொடர முடியும். முக்கால் நூற்றாண்டுக்கு முன் மூட்டிய தீ, இப்போதும் இருள் அகற்றும் தீப்பந்தமாக சுடர் விடுகிறது. அதனை ஏந்தப் போகின்ற கைகள் எவை?

-  விடுதலை நாளேடு, 5.7.18

புதன், 4 ஜூலை, 2018

அதே குடந்தையில்தான்... (ஆலய நுழைவு)

82 ஆண்டுகளுக்குமுன் கும்பகோணத்தில் நடந்த ஒரு செய்தியினை தினமணி' வெளியிட்டு இருந்தது.

அந்தச் செய்தி இதோ:

5.9.1936 சனிக்கிழமை குடந்தை ஆலயத்தில் பஜனைக் கோஷ்டி ஹரிஜனங்களா? உள்ளே பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்டது.

(நமது செய்தியாளர்)


கும்பகோணம் செப்.4 நேற்று இரவு இந்நகர் ஸ்ரீ சாரங்கபாணி ஸ்வாமி கோயிலில் சுமார் 15 பேர் பஜனை செய்துகொண்டு மேலண்டை கோபுர வாசல் வழியாய் உள்ளே வந்தார்கள். இவர்களைக் கண்டவுடன், அங்கிருந்த வைதீக இந்துக்கள் பயந்து, அவர்களை அணுகி, நீங்கள் யாரென்று கேட்கவே, தாங்கள் நீலகிரி வாசியென்றும், ஆலயப் பிரவேச உரிமை உள்ள ஜாதியைச் சேர்ந்தவர்கள்தான் என்றும் சொல்ல, நிச்சயமாய் அவர்கள் இன்ன ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்று ஒருவரும் இந்நகரில் தெரிந்துகொள்ள முடியாததால், உள்ளே போக அவர்களுக்கு அனுமதி மறுக் கப்பட்டது. அதற்குமேல் அவர் கள் வெளியேறி விட்டார்கள். ஸ்ரீகும்பேஸ்வரர் ஆலயத்திலும் இப்படியே தடை ஏற்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.''

(தினமணி', 6.9.1995)

82 ஆண்டுகளுக்குமுன் இது நடந்திருக்கலாம். இன்று மட்டும் என்ன வாழ்கிறது? கும்பகோணத்தில் மட்டுமல்ல - தமிழ்நாட்டில் கோவில்களில் பார்ப்பனர்களைத் தவிர அர்ச் சர்களாக மற்றவர்களால் வர முடிகிறதா?

ஜாதி இழிவையும், தீண்டா மைக்கொடுமையையும்ஒழிக் கும் போரில் தந்தை பெரியார் ஆற்றிய தொண்டு வரலாற்றின் உச்சியில் நின்று ஒளி வீசிக் கொண்டே இருக்கும்.

பொது வீதிகளில் நடக் கும் உரிமை, உயர்ஜாதி பார்ப் பனர்கள் உணவு விடுதியில் ஒடுக்கப்பட்ட மக்கள் உட் கார்ந்து உண்ணும் உரிமை என்று எழுத ஆரம்பித்தால், பட்டியல் அடங்காது.

குஷ்டரோகிகளும், நாய் களும், பறையர்களும் உள்ளே நுழையக்கூடாது என்று சென்னை மவுண்ட் ரோடிலும், ஜார்ஜ் டவுனிலும் விளம்பரப் போர்டே வைக்கப்பட்ட ஒரு காலகட்டம் இருந்ததுண்டு. இரயில்வே உணவு விடுதியில் பிராமணாள்-சூத்திராள்என்ற பேதம்இருந்தது.அவைஎல் லாம் அய்யாவின் அருந்தொண் டால் அடித்து நொறுக்கப்பட்டது.

தனது இறுதிப் போராட்ட மாக - இன இழிவு ஒழிப்புப் போராட்டமாக அனைத்து ஜாதி யினருக்கும் அர்ச்சகர் உரிமைப் போராட்டப் பதாகையைக் கையில் ஏந்தி வீதிக்கு வந்தார் வைக்கம் வீரர் தந்தை பெரியார்.

தந்தையே, உங்கள் தனயன் (கலைஞர்) ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்போது, நீங்கள் போராடவேண்டுமா? ஆணையிடுங்கள் நிறைவேற்றி முடிக்கிறேன்' என்று கூறி, இரு முறை சட்டங்கள் இயற்றியும், ஆரிய - வைதீகக் கும்பல் உச்சநீதிமன்றத்தின் கதவைத் தட்டி தடை செய்தது என்றாலும், அதில் இப்பொழுது நாம் வெற்றி பெற்றும், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை நிலை தான் இன்றுவரை!

இதற்கும் ஒரு முடிவு காண் போம். 1936 இல் குடந்தையில் நிகழ்ந்த இழிவுக்கு குடந்தை மாநாட்டில் முடிவு காண்போம் - வாரீர்! வாரீர்!!

- மயிலாடன்

-  விடுதலை நாளேடு, 4.7.18

பார்ப்பன உத்தியோகஸ்தரது ஜாதித்திமிர்

11.10.1931 - குடிஅரசிலிருந்து...

கன்னியாகுமரி

பத்மனாபபுரம் டிவிஷன் அசிஸ்டண்டும் அடி ஷனல் ஜில்லா மாஜிஸ்திரேட்டுமான திரு.எம்.எச்.வீரராகவ அய்யர் ஜமாபந்தி அலுவலாக அன்று கன்னியாகுமாரி முகாம் செய்திருந்தார். அன்று விசாரணைக்கு வைத்திருக்கும் வழக்குகளிலுள்ள கட்சிகள் பலர் காலை 10 மணி தொட்டே சத்திரத்தில் கூட ஆரம்பித்தார்கள்.  ரெவன்யூ உத்தியோகஸ்தர் பலர் சத்திரத்திலுள்ள பல அறைகளில் சுறுசுறுப்பாக வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். கோர்ட் சாதாரணமாகக் கூடுகிற அறையில் வழக்கம்போல எல்லா ஏற்பாடுகளுமா யிருந்தன. கடைசியாக மாஜிஸ்திரேட் அவர்களும் வந்தார்கள். திடீரென்று இன்று தொட்டு கச்சேரி விசாரணை அருகிலுள்ள போலீஸ் டேஷனில் நடைபெறும்  என்று ஆணை பிறப்பித் தார். போலீசாரும், சேவகர்களும் மேஜைகளை யும், நாற்காலிகளையும் கணப்பொழுதில் சத்திரத்திலி ருந்து அப்புறப்படுத்தினார்கள். கச்சேரியும் சிறிதும் இடவசதியில்லாத போலீஸ் ஸ்டேஷனில் நடந்தது.

திரு. அய்யருக்கு முன்னிருந்த மாஜிஸ்திரேட்டுகள் வழக்கமாகவே சத்திரத்திலேயே தங்கள் கோர்ட்டை நடத்திவந்தார்கள். இன்னும் 1 மணி வரையிலும் சத்திரத்திலேதான் கோர்ட் நடைபெறுமென்று எல் லோரும் எண்ணியிருந்தனர். எனவே இந்த விசேஷமான மாற்றத்திற்குக்காரணமேதேனுமிருக்க வேண்டுமென்று நிச்சயித்துக்கொண்டு கோர்ட்டிக்கு வந்திருந்த சில நண்பர்களிடம் விசாரித்துப் பார்த் தேன். உண்மைதெரிந்தது. ஜாதித் திமிர் நிறைந்த இந்தப் பார்ப்பன உத்தியோகஸ்தருக்கு எல்லா வகுப்பினரும் சத்திரத்தில் வருவது பிடிக்கவில்லை. சத்திரம் ஜாதி இந்துக்களுடைய உபயோகத்திற் கென்று கட்டப்பட்டிருக்கிறதாம். (ஆனால் சத்திரத்தி லேயே தொங்கவிடப்பட்டிருக்கும் அறிக்கையில் இந்து யாத்திரீகர்களுடைய அவசியத்திற்கென்றுதான் வரையப்பட்டிருக் கின்றது. ஜாதி இந்துக்களுக்கென் றில்லை) தாம் கச்சேரி நடத்துவதால் எல்லோருக்கும் பிரவேசனம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிடுமேயென்று மனம் புழுங்கினார்.

தம் கச்சேரியைப் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றி விட்டார். இன்று இங்கு வந்திருந்த வக்கீல் நண்பரொரு வரிடமிருந்து இது சம்பந்தமாக இன்னொரு செய்தி கிடைத்தது - நேற்று சுசீந்திரம் சத்தியாக்கிரக கேஸ்கள் விசாரணைக்கு வந்தன. சர்க்கார் தரப்பு வக்கீல் திரு. சக்கரபாணி அய்யர் அவர்கள் வராததால் நாளது புரட்டாதி 10ஆம் தேதிக்கு ஒத்திபோடப் பட்டன. கோர்டில் வைத்து பிரதிவாதிகளிடம் மாஜிஸ் திரேட் 10ஆம் தேதி கன்னியாகுமரி சத்திரத்தில் விசாரணை நடைபெறுமென்றார். கொஞ்சம் பொறுத்து திடீரென்று சத்திரத்தில் எல்லோருக்கும் பிரவேசனம் இல்லையே! ஏதானாலும் கன்னி யாகுமரிக்கு வாருங்கள். போலீஸ் ஸ்டேஷனிலாவது கச்சேரி கூடலாம் என்று சொன்னாராம்.

நேற்று தாம் செய்து கொண்ட முடிவைத்தான் திரு. அய்யர் நிறைவேற்றி வைத்திருக் கிறார். இந்த நாகரிக காலத்திலும் திரு. அய்யர் புதிதாகத் தீண்டா தாருக்குத் துரோகம் செய்ய முனைகிறார். இவருக்கு முன்வேலை பார்த்த மாஜிஸ்திரேட்டுகள் திரு. பத்மனாபன் தம்பி, திரு. ஆண்டிப் பிள்ளை முதலி யவர்கள் இந்தச் சத்திரத்திலேயே கச்சேரி நடத்தி வந்திருக்கிறார்கள். வழக்கத்திற்கு மாறாக நடக்க மாட்டோமென்று நெஞ்சிற் தட்டிக் கொள்ளுகிற அரசாங்கத்தின் உத்தியோஸ்தர் தீண்டாதாருடைய உரிமைக்கு உலைவைக்க மட்டும் வழக்கத்தை மீறத் தயங்குவதில்லையென்னும் உண்மையை நிரூபித்து விட்டார்.

தாழ்த்தப்பட்ட வகுப்பினர் திருவிதாங்கூரில் இத்தகைய மனப்பான்மையை உடைய பார்ப்பன உத்தயோகஸ்தர்களிடம் எவ்வளவு நியாயம் சம் பாதித்துக் கொள்ளக் கூடுமென்பதை வாசகர்களே அறிந்து வேண்டுவன செய்வார்களாக, ஏழைகளின் சொல் அம்பலமேறுவதில்லை. திருவிதாங்கூர் அரசாங்கம் பார்ப்பனரது அம்பலம்.

மனிதனுக்கு மானமும் பகுத்தறிவும் இருக்கிறது. அது கண் மூடித்தனமான மிருகத் தன்மைக்கு ஏற்பட்டதல்ல. பகுத்தறிவை மனிதன் தப்பாகப் பயன்படுத்தியே அதிகமான தொல்லைக்குட்பட்டான்.

- தந்தை பெரியார்-

-  விடுதலை நாளேடு, 30.6.18

பல்லாவரப் பொதுநிலைக் கழகக் கூட்டம்

15.02.1931 - குடிஅரசிலிருந்து...

சென்ற வாரம் பல்லாவரத்தில் கூடிய பொது நிலைக் கழக ஆண்டு விழாவில் பல தீர்மானங்கள் செய்ததாக நமக்குத் தகவல்கள் கிடைத் திருக்கின்றன.  அவை ஒர் அளவில் பண்டிதர்களின் மனமாறுதலைக் காட்டக்கூடியதாகவும், சைவத்தின் புதிய போக்கைச் சிறிதாவது காட்டக் கூடியதாகவுமிருப்பதால் அதைப் பற்றி சில குறிப்பிடுகின்றோம்.

இம்மன மாறுதலும், இப்புதிய போக்கும் நமக்கும் சிறிது பயனளிக்கலாம் என்று நம்ப அத்தீர்மானங்கள் இடம் கொடுக்கின்றன.

பல்லாவரத் தீர்மானங்களில் முக்கியமானவை திருவாடுதுறை திருப்பனந்தாள் மடாதிபதிகளின் நன்கொடைகளுக்கும், வாக்குறுதி களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ளும் தீர்மானங்களும், தமிழுக்கும், சைவத்திற்கும் மடாதிபதிகள் பொருளுதவி செய்ய வேண்டுமென்னும் வேண்டுகோள் தீர்மானமும் மற்றும் தமிழைப் பற்றிய சில தீர்மானங்களும் செய்யப்பட்டிருப்பதுடன் சீர்திருத்த சம்பந்தமான பல தீர்மானங்கள் செய்யப்பட்டிருப்பதுவே நாம் குறிப்பிடத்தக்கதாகும்.  அவையாவன,

கோவிலுக்குள் செல்ல எல்லா ஜாதியாருக்கும் எல்லா விஷயங்களிலும் சமத்துவ உரிமை இருக்க வேண்டும்.

ஆதிதிராவிடர்களுக்கு கோவில் பிரவேசமளிக்க வேண்டும்,

கோவில்களில் தேவதாசி முறை கூடாது, அனாவசியமானதும் அதிகச் செலவானதும் சமயக் கொள்கைக்கும்  அறிவுக்கும் பொருத்தமில்லாததுமான உற்சவங்களை நிறுத்திவிடவேண்டும்.

சாரதா சட்டத்தை உடனே அமலில் கொண்டு வர வேண்டும்.

பெண்களுக்கு ஆண்களைப் போல சொத்துரிமை வழங்க வேண்டும்.

ஜாதி வித்தியாசம் பாராமல் கலப்பு மணம் செய்து கொள்ளலாம்.

விதவை விவாகம் செய்யப்பட வேண்டும்.

இவைகளுக்குச் சமய ஆதாரங்களில் இடமிருக்கிறது.  அன்றியும் இக்காரியங்கள் அறிவுக்கும், ஒழுக்கத்திற்கும் ஏற்றவையாகும்.

என்பதாகத் தீர்மானித்திருப்பதோடு மற்ற காரியங்களிலும், அறிவுக்கும், ஒழுக்கத்திற்கும் ஒத்துவராதது எதுவாயினும் அது மத நூலாயிருந்தாலும் (அதாவது கடவுள் வாக்காகவோ, வேத கட்டளையாகவோ இருந்தாலும்) அதை ஒப்புக்கொள்ள முடியாது என்பதாகவும் தீர்மானித்திருப்பதாகத் தெரிய வருகின்றது.  இது அதாவது பகுத்தறிவையும், (நியாயமாகிய) ஒழுக்கத்தையும் ஏற்றுக்கொண்டதோடு அக்கொள்கை கள் அவர்கள் கருதும் கடவுள் வாக்குக்கும் வேத (மறை)க் கட்டளைக்கும் விரோத மானாலும் லட்சியம் செய்ய வேண்டியதில்லை என்பதாகத் தீர்மானிப்பதிலிருந்து மாறுதல் வேண்டும் என்பவர்களுக்குக் சற்று நம்பிக்கை ஏற்பட்டிருக்கும்.  இனி சைவம் என்பது எது அதன் கொள்கை அல்லது தத்துவம் என்பவை எவை என்பதைப் பற்றி நமக்கு இப்போது அதிக கவலையில்லை.  ஏனெனில், அறிவுக்கும் ஒழுக்கத்திற்கும் பொருத்தமானவை களை ஒப்புக்கொள்வதும், பொருத்தமற்றவைகள் எதுவானாலும் தள்ளி விடுவதும் என்கின்ற தன்மை ஏற்பட்டு விட்டால் அந்தக் கொள்கைகள் கொண்ட எந்தச் சமயத்தினிடமும், எந்தக் கூட்டத்தினிடமும் நமக்கு தகராறு இல்லை.  மற்றபடி இனிமேல் அறிவு எது? ஒழுக்கம் எது? நியாயம் எது? என்பது போன்ற சில விஷயங்கள் இங்கு கவனிக்கப்பட வேண்டியதாகும்.  இவைகள் மனிதனுக்கு மனிதன் இடத்திற்கு இடம் காலத்திற்கு காலம், நிலைமைக்கு நிலைமை வேறு படத் தோன்றலாம் வேறுபட லாம்.  ஆனபோதிலும் இந்த வேறுபாடு மனித சமுக மொத்தத் திற்கும் பொருத்தமானதே ஒழிய, சைவத்திற்கு மாத்திரமோ ஒரு தனிக் கூடத்திற்கு மாத்திரமோ ஏற்படக் கூடியதல்லவானதால் அதைப் பொது அபிப்பிராய வேறுபாடாகக்  கருதி அவர் களுடைய ஒத்துழைப்பை ஏற்றுக்கொண்டு நடுநிலையில் இருந்து விவாதிக்கத் தாராள உரிமையும், சௌகரியமும் ஏற்பட்டிருப்பதாகவே கருதுகின்றோம்.

முடிவில் பல்லாவரத் தீர்மானங்கள் சைவர்கள் என்பவர்களும் பண்டிதர்கள் என்பவர்களும் வேறு தத்துவார்த்தமல்லாமல் ஒப்புக் கொள்ளும் தீர்மானங்களானால் அவர்களைப் பொருத்தவரையில் பொருத்தமான விஷயங்களில் ஒத்துழைக்கத் தயாராயிருக்கின்றோம் என்பதைத் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.

பல்லாவரம் அடிகளை நாம் ஆதியிலேயே முரட்டுச் சைவர்களோடும், புராணப்பிழைப்புப் பண்டிதர்களோடும் சேர்த்ததேயில்லை.  அடிகளுடைய பழைய ஆராய்ச்சி முடிவுகள் பெரிதும்முற்கூறிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது என்பதும் சைவர்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர்களில் சிலருக்காவது சீர்திருத்த  உணர்ச்சியும், சமத்துவ உணர்ச்சியும் ஏற்பட்டிருக்குமானால்,  பண்டிதக் கூட்டத்தார்களில் எவருக்காவது பகுத்தறிவு உணர்ச்சி ஏற்பட்டிருக்குமானால், அது பெரிதும் திரு. மறைமலை அடிகள் சாரலாகத்தானிருக்கும் என்றும் கருதியிருந்ததோடு நாம் எவ்வெத் துறையில் எவ்வித மாறுதல்கள் விரும்புகின்றோமோ அத்தனைக்கும் அடிகள் ஆதரவளிப்பார் என்னும் நம்பியும்  இருந்தோம்.  எரிதல் காரணமாய் சிலர் பல காரணங்களால் பல சூழ்ச்சிகளால் அடிகளை சறுக்கலில் இழுத்து விட்டார்கள் எனினும் அடிகள் முற்றிலும் சறுக்கிவிடாமல் தன் ஆற்றலையே பிடித்துச் சமாளித்துக் கொண்டார்.  இதற்கு உதாரணம் வேண்டியவர்கள் திருநெல்வேலி சைவப் பெரியார் மகாநாட்டிற்கும் திருப்பாதிரிப் புலியூர் மகாநாட்டிற்கும் உள்ள வித்தியாசத்தையும் திருப்பாதிரிப்புலியூரில் அடிகள் நிகழ்த்திய சொற்பொழிவையும் நோக்கினால் உண்மையுணரலாம்.  எனவே, இவை நமக்கறிவிக்கப்பட்ட பல்லாவரப் பொதுநிலைக் கழகத் தீர்மானங்கள் என்பவைகளைக் கொண்டு  கொண்ட அபிப்பிராயகும்.

மற்றவை முழு நிகழ்ச்சிகளையும் அறிந்த பின்னர் விவரமாய் தெரிவித்துக்கொள்ள ஆசை கொண்டுள்ளோம்.

-  விடுதலை நாளேடு, 30.6.18