புதன், 4 ஜூலை, 2018

பார்ப்பன உத்தியோகஸ்தரது ஜாதித்திமிர்

11.10.1931 - குடிஅரசிலிருந்து...

கன்னியாகுமரி

பத்மனாபபுரம் டிவிஷன் அசிஸ்டண்டும் அடி ஷனல் ஜில்லா மாஜிஸ்திரேட்டுமான திரு.எம்.எச்.வீரராகவ அய்யர் ஜமாபந்தி அலுவலாக அன்று கன்னியாகுமாரி முகாம் செய்திருந்தார். அன்று விசாரணைக்கு வைத்திருக்கும் வழக்குகளிலுள்ள கட்சிகள் பலர் காலை 10 மணி தொட்டே சத்திரத்தில் கூட ஆரம்பித்தார்கள்.  ரெவன்யூ உத்தியோகஸ்தர் பலர் சத்திரத்திலுள்ள பல அறைகளில் சுறுசுறுப்பாக வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். கோர்ட் சாதாரணமாகக் கூடுகிற அறையில் வழக்கம்போல எல்லா ஏற்பாடுகளுமா யிருந்தன. கடைசியாக மாஜிஸ்திரேட் அவர்களும் வந்தார்கள். திடீரென்று இன்று தொட்டு கச்சேரி விசாரணை அருகிலுள்ள போலீஸ் டேஷனில் நடைபெறும்  என்று ஆணை பிறப்பித் தார். போலீசாரும், சேவகர்களும் மேஜைகளை யும், நாற்காலிகளையும் கணப்பொழுதில் சத்திரத்திலி ருந்து அப்புறப்படுத்தினார்கள். கச்சேரியும் சிறிதும் இடவசதியில்லாத போலீஸ் ஸ்டேஷனில் நடந்தது.

திரு. அய்யருக்கு முன்னிருந்த மாஜிஸ்திரேட்டுகள் வழக்கமாகவே சத்திரத்திலேயே தங்கள் கோர்ட்டை நடத்திவந்தார்கள். இன்னும் 1 மணி வரையிலும் சத்திரத்திலேதான் கோர்ட் நடைபெறுமென்று எல் லோரும் எண்ணியிருந்தனர். எனவே இந்த விசேஷமான மாற்றத்திற்குக்காரணமேதேனுமிருக்க வேண்டுமென்று நிச்சயித்துக்கொண்டு கோர்ட்டிக்கு வந்திருந்த சில நண்பர்களிடம் விசாரித்துப் பார்த் தேன். உண்மைதெரிந்தது. ஜாதித் திமிர் நிறைந்த இந்தப் பார்ப்பன உத்தியோகஸ்தருக்கு எல்லா வகுப்பினரும் சத்திரத்தில் வருவது பிடிக்கவில்லை. சத்திரம் ஜாதி இந்துக்களுடைய உபயோகத்திற் கென்று கட்டப்பட்டிருக்கிறதாம். (ஆனால் சத்திரத்தி லேயே தொங்கவிடப்பட்டிருக்கும் அறிக்கையில் இந்து யாத்திரீகர்களுடைய அவசியத்திற்கென்றுதான் வரையப்பட்டிருக் கின்றது. ஜாதி இந்துக்களுக்கென் றில்லை) தாம் கச்சேரி நடத்துவதால் எல்லோருக்கும் பிரவேசனம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிடுமேயென்று மனம் புழுங்கினார்.

தம் கச்சேரியைப் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றி விட்டார். இன்று இங்கு வந்திருந்த வக்கீல் நண்பரொரு வரிடமிருந்து இது சம்பந்தமாக இன்னொரு செய்தி கிடைத்தது - நேற்று சுசீந்திரம் சத்தியாக்கிரக கேஸ்கள் விசாரணைக்கு வந்தன. சர்க்கார் தரப்பு வக்கீல் திரு. சக்கரபாணி அய்யர் அவர்கள் வராததால் நாளது புரட்டாதி 10ஆம் தேதிக்கு ஒத்திபோடப் பட்டன. கோர்டில் வைத்து பிரதிவாதிகளிடம் மாஜிஸ் திரேட் 10ஆம் தேதி கன்னியாகுமரி சத்திரத்தில் விசாரணை நடைபெறுமென்றார். கொஞ்சம் பொறுத்து திடீரென்று சத்திரத்தில் எல்லோருக்கும் பிரவேசனம் இல்லையே! ஏதானாலும் கன்னி யாகுமரிக்கு வாருங்கள். போலீஸ் ஸ்டேஷனிலாவது கச்சேரி கூடலாம் என்று சொன்னாராம்.

நேற்று தாம் செய்து கொண்ட முடிவைத்தான் திரு. அய்யர் நிறைவேற்றி வைத்திருக் கிறார். இந்த நாகரிக காலத்திலும் திரு. அய்யர் புதிதாகத் தீண்டா தாருக்குத் துரோகம் செய்ய முனைகிறார். இவருக்கு முன்வேலை பார்த்த மாஜிஸ்திரேட்டுகள் திரு. பத்மனாபன் தம்பி, திரு. ஆண்டிப் பிள்ளை முதலி யவர்கள் இந்தச் சத்திரத்திலேயே கச்சேரி நடத்தி வந்திருக்கிறார்கள். வழக்கத்திற்கு மாறாக நடக்க மாட்டோமென்று நெஞ்சிற் தட்டிக் கொள்ளுகிற அரசாங்கத்தின் உத்தியோஸ்தர் தீண்டாதாருடைய உரிமைக்கு உலைவைக்க மட்டும் வழக்கத்தை மீறத் தயங்குவதில்லையென்னும் உண்மையை நிரூபித்து விட்டார்.

தாழ்த்தப்பட்ட வகுப்பினர் திருவிதாங்கூரில் இத்தகைய மனப்பான்மையை உடைய பார்ப்பன உத்தயோகஸ்தர்களிடம் எவ்வளவு நியாயம் சம் பாதித்துக் கொள்ளக் கூடுமென்பதை வாசகர்களே அறிந்து வேண்டுவன செய்வார்களாக, ஏழைகளின் சொல் அம்பலமேறுவதில்லை. திருவிதாங்கூர் அரசாங்கம் பார்ப்பனரது அம்பலம்.

மனிதனுக்கு மானமும் பகுத்தறிவும் இருக்கிறது. அது கண் மூடித்தனமான மிருகத் தன்மைக்கு ஏற்பட்டதல்ல. பகுத்தறிவை மனிதன் தப்பாகப் பயன்படுத்தியே அதிகமான தொல்லைக்குட்பட்டான்.

- தந்தை பெரியார்-

-  விடுதலை நாளேடு, 30.6.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக