வெள்ளி, 6 ஜூலை, 2018

அர்ச்சனை பண்ணும் பார்ப்பானுக்கும்

பஞ்சாங்கப் பார்ப்பானுக்கும் உரையாடல்27.12.1931 - குடிஅரசிலிருந்து

வந்ததே மோசம்

(உற்றுக்கேட்டவன்)

பஞ்சாங்கப் பார்ப்பனன்:- டே! ஊரு மொதுலு சுப்பு! எங்கு செல்கிறாய்? இங்குவாயே ஏதாவது கிராக்கி உண்டோ. தர்பையோடுபோவதைப் பார்த்தாலே தெரிகிறது. என்ன சங்கதி? எங்கே?

அர்ச்சனை அந்தணன்:- ஊர் மொதுலு. கீர்மொதூலுன்னு இனி மேல் பேசாதே; எனக்கு கெட்ட எரிச்சல் வந்து விடும். நீவண்னா மணக்குறாயோ, நானா வது ஊர் மொதுலு; நீயோ உலகமொதுலாயிற்றே, எங்கு பார்த்தாலும் பஞ்சாங்கத் துடன் நீதான் நிற்கிறாய்; உனக்கென்ன குறைச்சல் அப்படிகொள்ளையடித்துத் தின்று தான் உன் பெயருக்கு முன் குண்டு என்ற டைட்டில் கிடைத்திருக்கிறது. அதனால் தான் உன்னை குண்டுக்குப்பு என்று அழைக்கின்றார்கள்.

ப-பா:- எதற்கு வீண் சண்டை? எங்கு செல்கிறாய்? என்ன விசேஷம்.

அ-அ:- ஒன்றுமில்லை. நேற்று (அதோ தெரியுதே) அந்த ஆத்துச் சூத் திரனின் தகப்பனுக்குத் திதியாம் அங்கு செல்கிறேன்.

ப-பா:- ஆனால் நானும் அங்கு வரலாமோ! தட்சிணை கிட்சிணை கொடுப்பானோ? அந்த இடம் தாராள கைகள் தானே? எத்தனை மணிக்குப்போக வேண்டும்?

அ-அ:- ஆஹா! அவன் பெரும்பணக் காரன். கைவீச்சு ஜாதிதான், வா நீயும், 11 மணிக்குத்தான் போகவேண்டும்.

ப-பா:- அதற்கா இந்நேரத்தில் புறப்பட்டு விட்டாய். நல்ல வேலை செய்தனை. இன்னும் மணி எட்டே அடிக்கவில்லை.

அ-அ:- அப்படியா நான் அதிக நேரம் தூங்கிவிட்டேன் என்றல்லவோ நினைத்து முகம் மாத்திரம் அலம்பிக்கொண்டு ஓடி வந்தேன்.  அப்படியானால் இன்னும் டைம் இருக்கிறது; கிணற்றிற்குச்சென்று நீராடி வருவோம் வா?

ப-பா:- சரி போகலாம்.

அ-அ:- டே, சுப்பு! ஒரு செய்தி கேட் டாயா, பெரிய மோசம், சங்கதி பெரிதாய் விட்டது.

ப-பா:- என்ன! உனக்கே அது தாங்கவில்லை போலும் அப்படியாப்பட்ட விசேஷ சங்கதி என்ன?

அ-அ:- இது தெரியாதா? இத்தனை நாள் ஈரோட்டில் குடி அரசு நடத்திவரும் இராமசாமி நாயக் கர் தான் நம் தலையில் கல்லைப்போடுவார் என்று நாம் நினைத்தோம். அப்படி நமக்குத் தீங்கு நேரிட்டாலும் அவரை அடக்க நம்ம பெரியவாள் இருக்கா. இப்பொழுதுதே இன்னொன்று புறப்பட் டிருக்கு.

ப-பா:- சீக்கிரம் சொல்லித்தொல. அடிக்கடி முழுங்குறாயே.

அ-அ:- காங்கிரசிலிருந்து கொண்டு இது நாள்வரை நல்ல பெயர் எடுத்துக் கொண்டு இருந்த இராஜகோபாலாச்சாரி நேற்று சென்னையில் அதிகப்பிரசங்கதித் தனமாய் பேசினாரே என்ன சொல்வது?

ப-பா:- என்ன அதிகப் பிரசங்கித் தனம்?

அ-அ:- எல்லா ஜாதியும் ஒண்ணாப் போவேணும் என்று பேசியிருக்கிறான்.

ப-பா:- அப்படியா சங்கதி. வந்ததா மோசம். காங்கிரசில் சேர்ந்துகொண்டு கண்டவர்கள் எல்லாம் தொடும் பண் டத்தை உண்டுக்கொண்டும், சிறைக்குச் சென்று நம் ஜாதி வழக்கத்தைக் கவனி யாது சூத்திரன் செய்யும் பதார்த்தத்தைத் தின்று அனுஷ்டானதைக் கெடுத்த இந்தப் பேர்வழியை நம் ஜாதிப் பார்ப்பனர் வெளியில் சொல்லக்கூடாது; சொன்னால் சூத்திரர்களுக்கு எகத்தாளமாய் விடும், ஜாதியை விட்டுத் தள்ளாமல் இந்த ரகசி யத்தை மூடிவைத்துக்கொண்டு மரியாதை யைக் காப்பாற்றி வைத்த பலன் அல்லவா இது.

அ-அ:- என்னமோ கிடக்கிறார். நம் குலத்திற்கும் ஒரு மனிதன் பார்ப்பன ரல்லாத சூத்திரர்களுக்கு மேல் காங்கிரசிலிருக்கிறார் என்ற மதிப்புக் கொடுத்தது பெருந் தப்பிதமாய் விட்டதே.

ப-பா:- சங்கதியை வெட்ட வெளிச்ச மாக்கி மான மரியாதையைக் கெடுத்து வீட்டை விட்டு வெளியில வராமல் செய்யலாமா? நாம் சிந்தித்தால் தான் நிலைக்குமே. என்ன? யோசிக்கிறாய்.

அ-அ:- இரு. அவசரப்படாதே நம் கூட்டத்தை யெல்லாம் நம் ஆத்துக்கு வரச்சொல்லி அவர்களுக்கு இதை எடுத்துச் சொல்லி அவர்களது அபிப்பிரா யத்தின் பிரகாரம் நடக்கலாம். அவசரப் படக்கூடாது.

பிறகு இவ்விருவரும் குளித்துக் கொண்டு திதி நடக்கும் சல்லாப உல்லாச கிருஷ்ண தேவாராயப்ப குஞ்சரமூர்த்தி கோரை மூக்குக் கோனார் வீட்டிற்கு ஏகினர்.

தன் இனத்தைச் சேர்ந்த தனக்குக் கீழ் உத்தியோகத்திலி ருப்பவர்களைத் தூக்கிவிட வேண்டும். தப்புத் தவறு செய் தாலும் அவர்களை மன்னிக்க வேண்டும். தவறு செய்வது மனித சுபாவம். அதை வைத்துக் கொண்டு அவர்கள் வளர்ச் சியைக் கெடுக்கக்கூடாது. மன்னித்து வளர்ச்சிக்கு இடம் கொடுக்க வேண்டும்.

- தந்தை பெரியார்

ஒரு பெண்ணுக்குப் பல புருஷர்கள்

13.09.1931 - குடியரசிலிருந்து...

இந்தியாவில் ஒரு புருஷனுக்குப் பல பெண்ஜாதிகள் இருந்து வருவது சாதாரண மாகவும், அவ்வழக்கம் சமுகத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டதாகவும், மதத்துடனும் மதச்சம்பந்தமான கடவுள்கள், மதாச்சாரியார் முதலியவர் களுக்குள்ளும் இருந்து வருவதாகவும் ஒப்புக்கொள்ளப் பட்டு வருகின்றது. ஆனால், ஒருவித சீர்திருத்தக் காரர்கள் என்பவர்கள் மாத்திரம், அதுவும் வெள்ளைக்காரதேசத்தை, அவர்களது நாகரிகத்தைப் பின்பற்றியவர்கள் என்கின்ற முறையில் சிலர் ஒரு புருஷனுக்கு ஒன்றுக்குமேற்பட்ட பெண்கள் கூடாது என்று சொல்லுவார்கள்.  அதற்குக் காரணம் சொல்லவும் தெரியாது. இரண்டு பெண்டாட்டிகள் கட்டின மதாச்சாரியாரை வணங்கு வார்கள். இரண்டு பெண் டாட்டி கட்டின சாமியையும்  கும்பிடுவார்கள். அதற்கு கோயில்கட்டி, இரண்டு பெண்டாட்டிகளை வைத்துக் கும்பாபிசேகம் செய்து, பூசை உற்சவமும் செய்வார்கள். தாங்களும் பல பெண்களிடம் சகவாசமும் செய்திருப் பார்கள். தங்கள் காதலிகளாக பயன்படுத்தியும் வருவார்கள். ஆனால், வாயில் மாத்திரம் இரண்டு பெண் டாட்டிகளைக் கட்டிக்கொள்வது சீர்திருத்தத்திற்கு கொள்கைக்கு விரோதம் என்பார்கள். ஆகவே இக்கூட்டத்தார் சீர்திருத்தம் என்பதற்கு அர்த்தம் தெரியாதவர் களும், அதில் பொறுப்பும், கவலையும் இல்லாதவர்களும் ஆனவர்கள் என்று சொல்லப்பட வேண்டியதோடு, வெள்ளைக்கார நாகரிகத்தைக் தாங்களும் வாயினால் பேசுவதின் மூலம் தங்களை நாகரீகக்காரர் என்று பிறத்தியார் சொல்ல வேண்டும் என்கின்ற ஆசையையும் உடையவர்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

ஆகவே, இதன் நன்மை தீமை என்பது எப்படி இருந்தாலும், ஒரு மனிதனுக்கு உள்ள சுதந்திரம் ஒரு மனுஷிக்கும் இருக்கவேண்டியது என்கின்ற முறையில் பார்க்கும் போது நமது புருஷர்கள் இரண்டு பெண்டாட்டி களுடன் வாழுவது போலவே நமது பெண்கள் இரண்டு புருஷர்களுடன் வாழுவதில் குற்றமில்லை என்பதே நமதபிப்பிராயம் என்பதோடு, அம்முறையை இஷ்டப்படு பவர்கள் கையாளுவதில் எவ்விதத் தடையும் இருக்கக் கூடாது என்பதும் நமதபிப்பிராயமாகும்.  புருஷன் பெண் சாதியாக வாழுவது என்பது, புருஷன் பெண்சாதி என்பவர் களுடைய தனித்தனி சொந்த இஷ்டத்தைப் பொறுத்ததே தவிர, அதில் ஆதிக்கம் செலுத்த வேறு யாருக்கும் உரிமை இல்லை என்பதே அவ்விஷயத் தில் நமது அபிப்பிராய மாகும். இந்து மத ஆதாரங்களில் இவ்வழக்கம் இருந்து வந்ததாக எழுதப்பட்டிருப்பது ஒரு புறமிருந்தாலும், மலையாளப் பிரதேசத்தில் இவ்வழக்கம் இன்று பிரத்தியக்ஷத்தில் இருந்த வருவதைக் காணலாம். அதாவது, ஒரு வீட்டில் 2,3 புருஷர்கள் இருந்தால் அவர்கள் 2,3 பேருக்கும் ஒரு பெண்ணையே மனைவி யாகக் கொண்டு வாழ்க்கை நடத்தி வரப்படுகின்றது. இதுதவிர இந்தியாவின் வடகிழக்கில் உள்ள திபெத்து என்கின்ற நாட்டில் இன்றும் பெண்மக்களில் அவ்வழக்கம் தாராளமாய் இருந்து வருகின்றது. ஒரு பெண்ணுக்கு நான்கு, அய்ந்து புருஷர்கள் கணவர்களாக இருந்து வருகின்றார்கள். இதனால் சிறிதும் சண்டைச் சச்சரவின்றி சந்தோஷமாகவே வாழ்ந்து வருகின்றார்கள்.

இப்படியிருக்கின்ற இந்த ஜனங்களிடம் மிக்க  நல்ல குணங்களும். நாணயங்களும் இருந்து வருகின்றதாம். இதை திபெத்துக்கு இரண்டு தடவை பிரயாணம் செய்து நேரிலேயே சென்று பார்த்து விட்டுவந்த ஒரு பிரெஞ்சு மாதாகிய திருமதி. லாபூஜீ என்கின்ற ஒரு அம்மையார் இதைப்பற்றி வியக்கமாக எழுதுகிறார். (இந்த விபரம் 9-9-31 தேதி நவசக்தியில் காணலாம்.)

ஆகவே, நமது மக்களுக்குள் வாழ்க்கை முறையோ, சீர்திருத்தமோ, முற்போக்கோ என்பவைகளைப் பற்றி சுதந்திர உணர்ச்சியோ-சுதந்திர அபிப்பிராயமென்பதோ அநேகருக்கு இல்லையென்று தான் சொல்லவேண்டும். எந்தப்பழக்கவழக்கம் சீர்த்திருத்தம் என்றாலும் நம்நாடு--நம்மதம்--நம்ஜாதி--நம் வகுப்பு ஆகியவைகளில் என்ன இருக்கின்றது? எப்படி நடந்து வருகின்றது?  என்கின்ற அளவில் தான் அவரவர் புத்தியைச்செலுத்த அருகதை உள்ளவர்களாயிருக்கிறார்களே தவிர, உலகத்தில் மற்ற பாகங்களில் எப்படி இருந்தது?  எப்படி இருக்கின்றது? என்பவைகளைப்பற்றி கவனிப் பதோ, அல்லது இவ்விஷயங்களின் தன்மை என்ன? இதன் காரணமென்ன? நமது அறிவுக்கு எப்படிப்படுகின்றது? இப்படியிருந்தால் என்ன? என்பதுபோன்ற சுதந்திர அறிவோ, ஆராய்ச்சியோகிடையவேகிடையாது என்று தான் சொல்லவேண்டியிருக்கின்றது. இந்தக் காரணமேதான் உலகத்தில் முற்போக்கும், சுதந்திரமும், விடுதலையும் இந்திய நாட்டிற்கு மாத்திரம் தடைப்பட்டி ருக்கின்றது என்று சொல்ல வேண்டியும் இருக்கின்றது.

ஆகவே, எந்தக்காரியத்தையும் ஆராய்ந்து பார்த்து அனுபவகுண தோஷம் கண்டு, மனதின் சுதந்திரத்தைமறுக்காமல், அடக்காமல், சுயேச்சையாய் நடக்க வேண்டியது தான் மனித தர்மம் என்றும், அந்தப்படி உலகமே சுயேச்சையாயிருக்க சௌகரியம் இருப்பதுதான் மனித சமுக விடுதலை என்றும் சொல்லுகின்றோம்.

 -  விடுதலை நாளேடு, 6.7.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக