புதன், 11 ஜூலை, 2018

குடந்தையில் திராவிட மாணவர் கழக பவள விழா மாநாடு!- சங்கொலி

**ஆ. வந்தியத்தேவன்**


மதிமுக  அமைப்புச் செயலாளர்




தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்னும் நீதிக்கட்சிக்கு "அண்ணாதுரை தீர்மானத்தால்" சேலத்தில் 27.08.1944 அன்று திராவிடர் கழகம் என பெயர் சூட்டப்பட்டது என்பது நாடறிந்த வரலாறு. ஆனால், அதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே குடந்தையில் கல்லூரி மாணவர்கள் திராவிட மாணவர் கழகம் என்ற அமைப்பினை துவக்கி தன்மான இயக்கத்தைத் துவக்கிய தனிச் சிறப்பினை தக்க வைத்துக் கொண்டார்கள். குடந்தையில் காவிரிக் கரையில் இருந்த அரசினர் கலைக் கல்லூரி யில், பார்ப்பன மாணவர்களுக்கு தனி தண்ணீர்ப் பானையும், மற்ற மாணவர்களுக்கு தனி தண்ணீர்ப் பானையும் வைக்கப்பட்டு இருந்தது. இன்டர்மீடியட் எனும் இடைநிலை வகுப்பு முதலாண்டு மாணவரான, கதர்ச் சட்டை அணிந்த சம்பந்தம் "பிராமணாள்" பானையிலிருந்து தண்ணீர் எடுத்து குடித்ததற்காக அவருக்கு ஒரு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து மாணவர்கள் போர்க்கொடி உயர்த்தி வெற்றி பெற்றார்கள்.

பல கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் உ.வே.சாமிநாத அய்யர் நினைவு தங்கப்பதக்க போட்டியில் குடந்தையில் இதே கல்லூரியில், பேச்சுப் போட்டியிலேயே கலந்து கொள்ளாத ஒருவரை அனுப்ப நிர்வாகம் எடுத்த முயற்சியையும் தமிழின மாணவர்கள் எதிர்த்து முறியடித்தார்கள். தமிழிசை விழா நடத்துவதற்கும் வந்த அடக்கு முறையை தூள் தூளாக்கினார்கள், மாணவர்கள்!

இத்தகைய பெருமைமிகு மாணவர்கள்தான் திராவிட மாணவர் கழகம் என்ற அமைப்பைத் துவக்கினார்கள். எஸ்.தவமணிராசன் - தலைவர், கருணானந்தம் - துணைத் தலைவர், பழனிவேல் - செயலாளர், சொக்கப்பா - பொருளாளர் என நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இந்த மாணவர் சேனையை 01.12.1943 அன்று துவக்கி வைத்தார் பேரறிஞர் அண்ணா!

இந்த மாணவர் பாசறையின் மாநாடு, திராவிட மாணவர் கழக மாநில மாநாடு என்ற பெயரில் குடந்தைவாணி விலாச சபாவில் 1944, பிப்ரவரி 19, 20 ஆகிய நாட்களில் நடை பெற்றது. மாநாட்டிற்காக தந்தை பெரியார் அவர்கள் வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தார். தி.மு.கழகத்தின் இன்றைய பொதுச்செயலாளர் (அன்றைய மாணவர்) பேராசிரியர் க.அன்பழகன் அந்த வாழ்த்துச் செய்தியை மாநாட்டில் படித்தார்.

கான்பகதூர் கலிபுல்லா, பேராசிரியர் முத்தையா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற மாநாட்டின் திறப்பாளர் தமிழ்ப் பொழில் ஆசிரியர் கோ.சி.பெரியசாமி, வரவேற்புரை எஸ்.தவமணிராசன். பேரறிஞர் அண்ணா, நாவலர் இரா.நெடுஞ் செழியன், ஏ.பி.ஜனார்த்தனம், இரா.செழியன், இளம்வழுதி, மா.நன்னன், புதுக்கோட்டை சமதான திவான் தாருல் இஸ்லாம் என தலைவர்கள் பலரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு முழக்கமிட்டார்கள்.

இத்தகைய சரித்திரச் சம்பவங்கள் நடந்து 75 ஆண்டுகள் கடந்த நிலையில் திராவிட மாணவர் கழகத்தின் பவள விழா மாநாட்டினை அதே குடந்தையில் 08.07.2018 அன்று திராவிடர் கழகம் நடத்துவது என்பது பாராட்டுக்குரியது. இன்று, புதிய குலக்கல்வித் திட்டத்தை புகுத்திட சதி ஆலோசனை நடக்கிறது. நீட்' எனும் தடை யால் தமிழின மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டு உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். இந்த சமூக அநீதி ஒருபுறம் கிடக்க, ஆதிக்க இந்தியை வீழ்த்திட அணி திரண்டு வந்த மாணவர்களின் இன்றைய இளம் தலைமுறையினர் பட்டாக் கத்திகளை ஏந்திக் கொண்டு கல்லூரி வாயிலில் ஆட்டம் போடுகிறார்கள்.

இதைப் பற்றி எல்லாம் சிறிதளவும் கவலைப்படாத மத்திய பாஜக அரசு கல்வித்துறையில் இந்துத்வா கொள்கைகளைத் திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. மோடி அரசு கல்வித்துறையை காவி மயமாக்கிவிட்டது. தீனா நாத் பத்ரா என்ற ஆர்.எஸ்.எஸ். சிந்தாந்தவாதியை பாடங்கள் தேர்வு செய்யும் குழுவின் தலைவராக அரசு அமர்த்தியுள்ளது. சுதர்சன் ராவ் என்ற மற்றொரு ஆர்.எ.ஸ்.எ.ஸ்.காரர் இந்திய வரலாற்று ஆய்வுக் குழுவின் தலைவராக நியமிக்கப் பட்டுவிட்டார். இதன் விளைவாக புராணக் கட்டுக்கதைகளை, வர்ணா சிரம கொள்கைகளை பாடத்திட்டத்தில் புகுத்தி காவி மயமாக்கும் பணியை ஆரவாரமின்றி செய்து வருகிறது பாஜக அரசு.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மனுதர்ம கொள்கைகளை 11 அம்ச திட்ட மாக்கி அதனை செயல்படுத்துமாறு பாஜக அரசுக்கு கட்டளை இடுகிறது. கல்வியை இந்திய மயமாக்குதல், பாரதியக்காரன் (Bharathiyakaran) என்ற காவிக் கொள்கைகளை பாரதிய ஷிஷான் மண்டல் என்ற அமைப்பு மத்திய அரசின் கல்வித்துறைக்கு அனுப்பியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் ஒருவரான நானாஜி தேஷ்முக் அவர்களின் பிறந்தநாளான அக்டோபர் 11 முதல் இந்த திட்டத்தினை மத்திய மனித வள மேம் பாட்டுத்துறை செயல்படுத்த போகிறதாம். சாணக்கியரின் நீதி சாஸ்திரம், பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம், சுக்கிர நீதி சாஸ்திரம் முதலானவைகளை சமஸ்கிருத மொழியில் இளம் தலை முறையினரிடம் பரப்புவதே இதன் நோக்கம். நாராயணகுரு, ஜோதி பாபுலே ஆகியோரின் கருத்துக் களை பரப்புகிறோம் என்கிற முகமூடியில் இந்து ராஷ்டிர கொள்கைகளைத் திணிக்கும் நயவஞ்சகமாக நரித்தன மாக பாஜக நடுவண் அரசு செயலில் ஈடுபட்டு வருகிறது. பாஜக ஆளும் மணிப்பூரில் 12ஆம் வகுப்பு மாண வர்களுக்கான தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி இது:

'திராவிடனிசம்' என்ற பெயரால் வகுப்புவாதக் கருத்து பரவலாக பரவி இருக்கும் மாநிலம் எது? என்பதே வினா. அதற்கான விடையை தேர்வு செய்ய வேண்டும். (அ) பஞ்சாப் (ஆ) தமிழ்நாடு (இ) மகாராஷ்டிரா (ஈ) உத்தரப்பிரதேசம் என்ற விடை களில் தமிழ்நாடு என்பதுதான் சரியான விடையாம்!

திராவிட இன வெறுப்பை மணிப்பூர் வரை கொண்டு சென்று பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை பாய்ச்சிக் கொண்டிருக்கிறது பாஜக அரசு. தமிழ கத்தை ஆளும் எடப்பாடி அரசு கொத்தடிமை யாகவே மாறி இந்தக் கொடுமைகளுக்கும், அக்கிரமங்களுக்கும் பச்சைக் கொடி காட்டிக் கொண்டிருக்கிறது.

இந்த சூழலில் மாணவர்களிடம் நம் திராவிட இயக்கக் கொள்கைகளை பதிய வைக்க, மறு மலர்ச்சியை உருவாக்கிட, மறுமலர்ச்சி தி.மு.கழகம் இந்த ஆண்டு "பெரியார் - அண்ணா" எனும் தலைப் பிலான பேச்சுப் போட்டிகளை பொறுப்புடன் நடத்திக் கொண்டிருக்கிறது.

தாய்க் கழகமாம் திராவிடர் கழகம் குடந்தையில் திராவிட மாணவர் கழக பவள விழா மாநாட்டினை ஜூலை 8 அன்று எழுச்சியுடன் நடத்துகிறது. மாணவர் பட்டாளத்தை அணிதிரட்டி, அவர்களை திராவிடர் இயக்க தீரர்களாக வார்ப்பிக்க, திராவிடர் கழகம் நடத்த உள்ள திராவிட மாணவர் கழக பவள விழா மாநாடு சிறக்கவும், வாகை சூடவும், திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியாக - அரசியல் அணியாக முழு வீச்சில் களமாடும் மறுமலர்ச்சி தி.மு.கழகம் வாழ்த்து மலர்களைத் தூவி வரவேற்கிறது! பாராட்டுகிறது!!

நன்றி: சங்கொலி' 13.7.2018

-  விடுதலை நாளேடு, 7.7.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக