ஞாயிறு, 29 ஜூலை, 2018

தருமபுரி - மத்தூரில் (28.7.2018) நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி மண்டல மாநாட்டில் ...

மத்தூர் மாநாட்டில் தமிழர் தலைவர் போர் முழக்கம்!
நமது சிறப்புச் செய்தியாளர்
'உண்மை' சந்தாக்கள் தமிழர் தலைவரிடம் வழங்கப்பட்டன (மத்தூர், 28.7.2018)

மத்தூர், ஜூலை 29 தந்தை பெரியார் இறுதியாக அறிவித்த அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான போராட்டத்தில் ஈடுபட்டு ஜெயிலுக்குப் போக இளைஞர்களை அழைப்பதாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி கூறினார்.
தருமபுரி - மத்தூரில் நேற்று (28.7.2018) நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி மண்டல மாநாட்டில் அவர் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:
அண்மைக் காலமாக புதுமுக இளைஞர்களை ஏராள மாகப் பார்க்கிறேன்; என்னைப் பொருத்தவரை ஒவ் வொரு கழகத் தோழரையும் நேரடியாகவே அறிந்திருப் பவன், அப்படிப்பட்ட எனக்கே அடையாளம் தெரியாத அளவுக்கு இளைஞர்கள், மாணவர்களை ஏராளமாகப் பார்த்து வருகிறேன். இந்த மாநாட்டிலும் அதனைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
தந்தை பெரியாருக்குப் பிறகு இயக்கம்
எப்படி இருக்கிறது?
பெரியாருக்குப் பிறகு இந்த இயக்கம் இருக்காது என்று சொன்னவர்கள், அந்த நிலை ஏற்பட வேண்டும் என்று ஆசைப்பட்டவர்களுக்கு இன்றைக்கு இயக்கத்தை நோக்கி இளைஞர்கள், மாணவர்கள் அலை அலையாக வருவதுதான் சரியான பதிலாகும்.
இந்த மாவட்டத்துக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. பெண் ஒருவர் மாவட்டத் தலைவராக வந்த முதல் மாவட்டம் இந்த மாவட்டமாகும்.
இந்த மாநாட்டுக்கு உள்ள கூடுதல் பெருமை சாதனை - 1000 உண்மை சந்தாக்களை அளிக்க இருக்கிறார்கள் என்பதுதான் - அளிப்பார்கள் என்றும் எதிர்ப்பார்க்கிறேன்.
பெரியார் நடத்திய ஏடுகள் இதழ்களின்
தனித் தன்மை
இதழ் உலகத்தில் தந்தை பெரியாரின் முத்திரை தனித் தன்மையானது - தான் துவக்கிய ஏடுகள், இதழ்களுக் கெல்லாம் தந்தை பெரியார் சூட்டிய பெயரினை நினைத் துப் பார்க்க வேண்டும்.
'குடிஅரசு' 'பகுத்தறிவு', 'புரட்சி', 'விடுதலை' ஆங்கி லத்தில் 'ரிவோல்ட்'  'உண்மை', 'பெரியார் பிஞ்சு' ஆங்கிலத்தில் 'தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்' என்றெல்லாம் ஏடு நடத்தி வந்திருக்கிறார்கள். ஏடுகள், இதழ்களுக்குச் சூட்டப்பட்ட பெயர்களே - அந்த ஏடுகளின் கொள்கை எந்தத் திசையில் இருக்கும் என்பதற்கு அடையாளமாகும்.
நீதிக்கட்சியால் தொடங்கப்பட்ட 'திராவிடன்' என்ற இதழையும், பிற்காலத்தில் தந்தை பெரியார் தம் பொறுப்பில் ஏற்று நடத்தினார். தமிழுக்குப் பெரியார் என்ன செய்தார் என்று சிறுபிள்ளைத்தனமாக சிலர் கேட்கிறார்கள். தந்தை பெரியாரால் தொடங்கப்பட்ட ஏடுகள் - இதழ்களுக்குச் சூட்டிய பெயர்களே - பெரியார் தமிழுக்குச் செய்த தொண்டினை பறைசாற்றும்.
மண்டைச் சுரப்பை உலகு தொழும்!
தந்தை பெரியார் கருத்துகள், கொள்கைகள் உலகம் பூராவும் பரவி வருகின்றன. கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் ஜெர்மனியில் கொலோன் பல்கலைக் கழகத்தில் பெரியார் சுயமரியாதைப் பன்னாட்டு மாநாடு நடைபெற்றது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் அறிஞர் பெரு மக்கள் கலந்து கொண்டு கருத்துகளை எடுத்துரைத்தனர். இந்தக் கால கட்டத்தில் தந்தை பெரியாரின் கொள்கைகள் மிகவும் தேவைப்படுகின்றன.
அடுத்த ஆண்டு செப்டம்பரில் அமெரிக்காவிலும் அத்தகைய மாநாடு நடைபெற உள்ளது. மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்று தந்தை பெரியார் பற்றி புரட்சிக் கவிஞர் தொலைநோக்கோடு பாடினார். அதன் நிலைப்பாட்டை - தேவையை இன்று நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
இது பெரியார் மண்!
காவிகள், சங்பரிவார்கள் என்ற பார்ப்பனீய பிற்போக்குச் சக்திகள் இந்தியாவின் வேறு சில பகுதிகளில் ஆட்டம் போட்டாலும் தமிழ்நாட்டில் அது எடுபட முடியாததற்குக் காரணம் - இது தந்தை பெரியார் மண் என்பதே!
சுவாசம் என்று சொல்லும் பொழுது, அதில் இரண்டைக் கவனிக்க வேண்டும். நல்ல காற்றை பிராண வாயு என்னும் ஆக்சிஜனை உள்ளே வாங்குகிறோம். கெட்ட காற்றான கரிமில வாயுவை வெளியே விடுகிறோம். சுவாசம் என்கிறபோது - இந்த இரண்டும் சேர்ந்ததுதான். நல்ல காற்றை அனுபவிக்க கற்றுக் கொடுப்பதுதான் திராவிடர் கழகம்.
போராட்டத்தின் சின்னம் கருப்பு
இன்றைக்குப் பல்வேறு காரணங்களுக்காகப் போராட வேண்டிய நிலையில் இருக்கிறோம். போராட வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் அனைவரும் அணிய வேண்டிய உடை கருப்புச் சட்டையாகத் தானிருக்கிறது.
எதிர்ப்புக்கு அடையாளம் கருப்புச் சட்டையாகவே இருக்கிறது; நீதி கேட்க வேண்டும் என்று நீதிமன்றம் செல்லுபவர்களும், நீதி வழங்கக் கூடிய இடத்தில் இருக்கக் கூடியவர்களும் கருப்புடைதான் அணிகிறார்கள்.
இளைஞர்களே, உங்களை அழைத்துச் செல்லவே இங்கு வந்திருக்கிறேன்!
நான் இந்த மாநாட்டுக்கு வந்ததன் முக்கியம் இளைஞர்களை அழைத்துச் செல்லுவதற்குத்தான்;  இளைஞர்களை அழைக்கிறோம் என்றால், எங்களிடம் வாருங்கள், பதவிக்குச் செல்லலாம் என்பதற்காக அல்ல.
எங்களிடம் வந்தால் ஊராட்சிமன்ற உறுப்பினராகக்கூட ஆக முடியாது. சட்டசபைத் தேர்தலில் போட்டியிட முடியாது.
"துறவிகளுக்கும் மேலானவர்கள் கருஞ்சட்டைக்காரர்கள்!"
தந்தை பெரியார் கூறுவார் - எங்கள் தொண்டர்கள் துறவிக்கு மேலானவர்கள் என்று கூறுவார். அந்தத் துறவிக்காவது அடுத்த ஜென்மத்தில் சொர்க்கத்திற்கு போக வேண்டும் என்ற ஆசை உண்டு. எங்களுக்கு  அதிலும் நம்பிக்கை கிடையாது. அதனால்தான் துறவிக்கு மேலானவர்கள் எங்கள் தொண்டர்கள் என்று தந்தை பெரியார் கூறினார்.
தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் - அதன் மூல வேரான ஜாதி அறவே ஒழிக்கப்பட வேண்டும் - ஜாதியைப் பாதுகாக்கும் அனைத்தும் ஒழிக்கப்பட வேண்டும். அதுவே கழகத்தின் அடிப்படைக் கொள்கை.
தந்தை பெரியார் இறுதியாக அறிவித்த போராட்டம்
குறிப்பாக தந்தை பெரியார் அவர்கள் இறுதியாக அறிவித்த போராட்டம் - அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதற்கான போராட்டம்.
தந்தை பெரியார் அவர்களின் சீடரான மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞர் அவர்கள் 'உங்கள் சீடர்களாகிய நாங்கள் ஆட்சியில் இருக்கும்போது நீங்கள் போராட வேண்டுமா என்று கேட்டு, அந்த வகையில் சட்டமே இயற்றினார். உச்சநீதிமன்றம் சென்றனர் பார்ப்பனர்கள். மறுமுறை ஆட்சிக்கு வந்தபோதும் மறுபடியும் சட்டம் ஒன்றை இயற்றினார் நமது கலைஞர். இப்பொழுது உச்சநீதிமன்றம் அதனை ஏற்றுக் கொண்டுள்ளது. தமிழ்நாடு அரசு அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர்களாக ஆக்க முடியும். ஆனால் அதிமுக அரசு அதைச்  செய்யாமல் தவிர்த்து வருவது தேவையில்லாதது - கண்டிக்கத்தக்கது.
உங்களை அழைப்பது ஜெயிலுக்கே!
இந்த நிலையில் நாம் அவசியம் போராட வேண்டிய நிலையில் இருக்கிறோம்.  நான் தொடக்கத்தில் சொன்னபோது - அதற்காகத்தான் இளைஞர்களை அழைப்பதற்காக இங்கு நான் வந்திருக்கிறேன் சட்டசபைக்கல்ல - ஜெயிலுக்கு அழைத்துப் போகத்தான் இங்கு வந்திருக்கிறேன். (பலத்த கரஒலி).
திராவிடர் கழகத்திற்கு வர விரும்புவோர் போராட்டத்திற்கு முன்வர வேண்டும் - அதில் ஈடுபட்டு ஜெயிலுக்குச் செல்லவும் தயாராக இருக்க வேண்டும்.
அந்த வகையில் இளைஞர்களே, வாருங்கள் வாருங்கள் என்று திராவிடர் கழகத்தின் சார்பில் அழைக்கிறோம் என்று கூறி போர் முரசம் கொட்டினார் திராவிடர் கழகத் தலைவர்.
"ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா?" என்ற புத்தகம் வெளியீடு
எழுத்தாளர் ப.திருமாவேலன் எழுதிய "ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா?" என்ற புத்தகத்தை கழகத் தலைவர் வெளியிட கே.சி.எழிலரசன், ஊமை.ஜெயராமன், தகடூர் தமிழ்ச்செல்வி, அரூர் ராஜேந்திரன், இந்திராகாந்தி, கரு.பாலன், அ.தமிழ்ச்செல்வன் மற்றும் ஏராளமானோர் பெற்றுக் கொண்டனர் (மத்தூர், 28.7.2018).

தீயவற்றைத் தீய்க்கும் தீப்பந்த வரவேற்பு (மத்தூர் - 28.7.2018)


மத்தூரில் (தருமபுரி) நேற்று நடைபெற்ற தருமபுரி மண்டல திராவிடர் கழக இளைஞரணி மண்டல மாநாட்டுக்கு வருகை தந்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்கு 250 கருஞ்சட்டை இளைஞர்கள் அணிவகுத்து அளித்த தீப்பந்த வரவேற்பு, எழுச்சிமிகு ஓர் உணர்ச்சிக் காவியமாகும். இரவு 7 மணியளவில் தருமபுரியிலிருந்து வருகை தந்த தமிழர் தலைவருக்கு தீப்பந்த வரவேற்பு அளிக்கப்பட்டது. தந்தை பெரியார் சிலை அருகே சாலையின் இரு புறங்களிலும் தீப்பந்தத்துடன் போர்ப்பாட்டு ஒலி முழக்கங்களை எழுப்பி வரவேற்றனர்.
தந்தை பெரியார் வாழ்க!  அன்னை மணியம்மையார் வாழ்க!  தமிழர் தலைவர் வீரமணி வாழ்க! பணி முடிப்போம் பணி முடிப்போம்! தந்தை பெரியார் பணி முடிப்போம்! என்ற ஒலி முழக்கங்களை மண்ணும் விண்ணும் அதிர முழக்கமிட்டு வரவேற்றனர். பல்வேறு கட்சிகள், இயக்கங்களைச் சேர்ந்த முன்னணியினரும், பொதுமக்களும் கூடி நின்று, கருஞ்சட்டைத் தோழர்கள் தமிழர் தலைவருக்கு இலட்சிய முழக்கமிட்டு வரவேற்ற காட்சியைக் கண்டு களித்தனர்.
இதுபற்றி மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் குறிப்பிட்டதாவது: மாநாட்டுக்கு இங்கே நான் வந்தபோது கழக இளைஞரணியினர் எழுச்சிமிகு தீப்பந்த வரவேற்பை அளித்தனர். எரித்து முடிக்கப்பட வேண்டிய பிற்போக்கு மதவாதக் கருத்துகள், மூடநம்பிக்கைகள், ஆதிக்கப் பழைமைச் சித்தாந்தங்கள், சமூக அநீதி போக்குகள் ஏராளமாக உள்ளன. அவை எதிர்த்து முறியடிக்கப்பட வேண்டும் என்பதற்கான அடையாளமாகத்தான் கழக இளைஞரணியினர் இந்த தீப்பந்த வரவேற்பினை அளித்தனர். அழிக்கப்பட வேண்டியவற்றை அழித்து முடிக்க அரிமாக்களாகிய நாங்கள் தயார் தயார் என்ற அறிவிப்பின் அடையாளம்தான் இந்தத் தீப்பந்த வரவேற்பு - அதற்குத் தயாராகி விட்ட இளைஞர்களின் சூளுரைதான் - அறிவிப்புதான் இந்தத் தீப்பந்த வரவேற்பு - அதனை ஏற்றுக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று குறிப்பிட்டார்.

மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி - தீச்சட்டி ஏந்தி மகளிர் ஊர்வலம்

  
தருமபுரி மண்டல திராவிடர் கழக இளைஞரணி மாநாட்டில் தமிழர் தலைவர் உரையைக் கேட்க திரண்டிருந்தோர்
- விடுதலை நாளேடு, 29.7.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக