புதன், 11 ஜூலை, 2018

குடந்தை திராவிட மாணவர் கழக மாநாட்டுச் சிந்தனை

**- ஓர் அரிமா நோக்கு**




குடந்தை நகராட்சி சார்பில் தந்தை பெரியாருக்கு வரவேற்பு அளித்த காட்சி (9.9.1956)




கோ. இலட்சுமணன்


15.04.1978 மாலை குடந்தையில் (கும்பகோணத்தில்) நடைபெற்ற திராவிட மாணவர் கழக கமிட்டிக் கூட்டத்தில்  நான் (ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்) கலந்து கொண்டு உரையாற்றினேன். அதில் திராவிடர் மாணவர் கழகம் தோன்றக் காரணம் மற்றும் காரண மானவர்கள் ஆகியவற்றைத் தெளிவாக எடுத் துரைத்தேன்.  அதிலிருந்து விடுதலையில் பதிவான சில முக்கியப் பகுதிகளை மட்டும் குறிப்பிட்டுள்ளேன். (விடுதலை 17.5.1978, பக்கம் 3)

இந்த திராவிட மாணவர் கழகம் தோற்றுவிக்கக் காரணமாக இருந்த நண்பர்கள் சிலர் இன்னும் இருக்கின்றார்கள். இன்னும் இந்த உணர்வுடனேயே இருக்கின்றார்கள். அவர்கள் எங்கிருந்தாலும் இந்த உணர்ச்சி குன்றாதவர்களாகவே காட்சி அளிக்கின்றார்கள் என்பதைப் பார்க்கின்றோம்.

தண்ணீர்ப் பானை சம்பவத்திற்கு மூலகாரணமான நண்பர் தவமணிராசன் அவர்கள் சிவகாசியில் கூட்டுறவு வங்கி ஒன்றில் செயலாளராக இருந்து ஓய்வு பெற்ற அதிகாரியாக இன்னமும் இருக்கின்றார். (பிறகு சில ஆண்டுகள் கழித்து மறைந்தார்.)

அவர் அய்யா, அம்மா ஆகியோரிடத்தில் மிக்க அன்புள்ளங் கொண்டவராக இருந்து வந்தவர் ஆவார். அடிக்கடி அவர்களைக் கண்டு அளவளாவியவர் ஆவார்.

சென்ற வாரம் அவரை சென்னையில் சந்திக்க நேர்ந்தபோது சென்னையில் நடக்க இருக்கின்ற மாணவர் பயிற்சி முகாமுக்கு தாங்கள் வரவேண்டும், முகாமைத் தொடங்கிவைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அவரும் வருவதாக மகிழ்வுடன் ஒத்துக் கொண்டு உள்ளார்.

நமது மாணவர்களுக்கும் இப்படிப்பட்டவர்களைப் பார்க்கக்கூடிய வாய்ப்பும், சரித்திரச் சான்றுகளுக்குச் சம்பந்தப்-பட்டவர்களை நேரில் காணும் வாய்ப்பும் கிட்டினால் மாணவர்களுக்கும், மற்றவர்-களுக்கும் மிக்க மகிழ்ச்சியையும், பயனையும் அளிக்கும் என்பதில் அய்யம் இல்லை.

அதேபோல இந்தக் குடந்தை கல்லூரியிலே தண் ணீர்ப் பானைப் போராட்டம் நடந்தபோது அதில் மிகத் தீவிரமாக இருந்தவர்களில் ஒருவர்தான் அன்று மாநிலங்களவையில் (தி.மு.கழக சார்பில்) உறுப்பினராக இருந்து மிகத் துடிப்புடனே செயல்பட்டு வருகின்ற அருமை நண்பர் ஜி.லட்சுமணன் எம்.பி. அவர்கள் ஆவார்.

அவர் ஆழமாக வரலாற்றுச் சுவடிகளை எல்லாம் படித்தவர். குடந்தை அரசினர் கல்லூரியில் பார்ப்பனர் களுக்குத் தனி தண்ணீர்ப் பானை, மற்றவர்களுக்குத் தனிப் பானை வைத்திருந்ததனால், தண்ணீர்ப் பானைத் தகராறு ஏற்பட்ட விவரங்களை எல்லாம் எடுத்துச் சொன்னால் மிகவும் பயன் உள்ளதாக அமையும். இன் றைக்கு டில்லியில் அவர் இல்லத்திற்குக்கூட பெரியார், அண்ணா இல்லம் என்றுதான் பெயர் வைத்து உள்ளார்.

மிகச் சோதனையான கட்டம் கடந்த காலத்தில் ஏற்பட்ட போதுங்கூட அவர் பயந்து ஓடி ஒதுங்கிவிட வில்லை. தாம் பெற்ற பதவியைப் பிறருக்கு அடகு வைக்காமல் இருந்தார் என்றால், காரணம் அவர் திராவிடர் மாணவர் கழகத்தில் ஆரம்ப காலத்திலே பெற்ற கொள்கைப் பிடிப்பும், சுயமரியாதை உணர்வுமே யாகும்.

இவர்கள் மட்டும் அல்ல; இன்னும் பல நண்பர்கள் இன்னும் இதே உணர்வுடனே இருந்துகொண்டு வரு கின்றார்கள்.

மாணவர் கழகம் என்பது கொல்லரது உலைக் கூடத்திலே இரும்பினைக் காய்ச்சி அடித்துப் பொருள்களைத் தக்க வடிவமைப்போடு உருவாக்குவது போல மாணவர் கழகம் அய்யா அவர்களின் இயக்கம் என்ற உலைக்கூடத்தில் எவ்வளவுக்கு எவ்வளவு அடிபடுகின்றார்களோ (பக்குவப்படுகின்றார்களோ) அவ்வளவுக்கவ்வளவு அவர்கள் இயக்கத்திற்கு வாளாய், கேடயமாய்  மற்ற போர்க் கருவிகளாய் பயன்பட முடியும். பயன்பட வேண்டும்.

எல்லாவிதமான சோதனைகளையும் தாங்கக்கூடிய பரிபக்குவத்தை மாணவ நண்பர்கள் இந்தக் கட்டத்தில் நன்கு பெற வேண்டும்.

வெறும் ஆவேசமாகப் பேசிவிடுவதன் மூலம் மட்டுமே நாம் காரியத்தைச் சாதித்துவிட முடியாது. அறிவுப்பூர்வமாகச் சிந்தித்துச் செயலாற்ற வேண்டியது தான் நமது மாணவர்களின் பணியாக இருத்தல் வேண்டும். மற்ற இயக்கங்களிலும் மாணவர்களிடையே ஆவேசம் இருக்கும். திடீர் என்று ஒரு காரியத்தைச் சுலபமாக ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் எப்படி முடிப்பது? யாரால் முடிப்பது? எங்கு கொண்டுபோய் விட்டுவிடும் என்பதே தெரியாத அமைப்புகளாகத்தான் அவை  சொந்த சிந்தனையை இணைத்து இயங்கும்.

ஆனால், நம்முடைய அமைப்பு அப்படிப்பட்ட நல்ல காரியங்களைத் தொடங்குவதற்கு முன்பு அறிவுப் பூர்வமாக நன்கு சிந்தித்து அதன் பிறகே காரியத்தில் இறங்கச் செய்யும்.

சுருங்கச் சொன்னால் நம் கிளர்ச்சி என்றால் நம் மாணவர்களுக்காகச் செய்கின்ற கிளர்ச்சியே தவிர, மாணவர்களைக் களத்தில் இறக்கி விடுகின்ற கிளர்ச்சி யினை நாம் என்றுமே செய்ய மாட்டோம்.

மாவோவின் புரட்சியையும் மிஞ்சியது அய்யாவின் புரட்சி


சீனத்தின் கலாச்சாரப் புரட்சி, மாவோவின் கலாச்சாரப் புரட்சி பற்றியும் நான் அறிந்துள்ளேன். ஆனால், தந்தை பெரியார் அவர் களுடைய கலாச்சாரப் புரட்சி 1925லேயே முகிழ்த்தது. பல நூற் றாண்டுகளாக சமுதாயத்தில் நடைபெற்று வந்த மூடநம்பிக்கைத் திருமணத்திற்கு மாறாக பார்ப்பானை அழைக்காமலும், மூடநம்பிக்கையினை நீக்கியும் திருமணத்தைச் செய்து வைக்கத் தொடங்கி, அதற்கு ஏற்பட்ட எதிர்ப்புகளை எல்லாம் சமாளித்து, அது ஆண்டுதோறும் பல்லாயிரக் கணக்கில் நிகழும்படிச் செய்து, சட்டம் அதைச் செல்லாது என்று தீர்ப்பு அளித்த பிறகும்கூட, சட்டத்தைப் பற்றி சமுதாயம் கவலைப் படாமல் எத் தனையோ பத்தாயிரக்கணக்கான திரு மணங்கள் நடந்து வந்திருக்கின்றன.

சீனப் புரட்சியை ஆங்கிலத்தில் எழுதினார்கள். பல நாடுகளிலும் பரப்பினார்கள். நமது கலாச்சாரப் புரட்சியை நாம் ஆங்கிலத்தில் எழுதவில்லை. நாம் வெளிநாடுகளில் பரப்பவும் இல்லை. இச்செய்தி மட்டும் வெளிநாடு களுக்குப் போய் இருந்தால் இதுவே அகில உலகத்திலும் மற்றவர்கள் சிந்தனைக்கும் மேலானது, தனித் தன்மை யானது? தந்தை பெரியார் அவர்களுடைய சிந்தனை, பெரியார் இயக்கத்தின் சாதனை என்று போற்றப்பட்டு இருக்கும். இதனை இளம் உள்ளங்களும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

மார்க்ஸ் தமது தத்துவத்தினைச் சொல்வதற்கு முன்னால் பிரிட்டிஷ் மியூசியம் என்ற நூலகத்திலே பல நூற்றுக்கணக்கான புத்தகங்களிடையே பல மாதங்கள் அங்கு உட்கார்ந்து கொண்டு ஆராய்ந்து படித்துப் படித்துத்தான் தமது தியரியை எழுதினார். மற்றவர்கள் சொன்ன கருத்துகளை அய்யா சொல்லவில்லை. அய்யா சொன்ன கருத்தை இன்னாரும் சொல்லி இருக்கின்றார்; அதுவும் இவ்வளவு காலந்தாழ்ந்து சொல்லி இருக்கின்றார் என்பதைக் காட்டத்தான் பயன்படும். எனவே அய்யா சொல்லாத கருத்துகளே கிடையாது. எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும், சந்தேகங்களுக்கும் அய்யா அவர்கள் நூல்களிலுள்ள கருத்துகளிலே விடை கிடைக்கும்.

மாணவர்களைப் பிரச்சாரப் படையாக முன்னிறுத்திப் பயன்படுத்திக் கொள்வோமே தவிர, அவர்களைக் களப்பலியாகக்கூடிய காரியத்தை என்றைக்குமே செய்யாதவர்கள் நாங்கள்.

"உண்மை", (1.3.2015) (அய்யாவின்

அடிச்சுவட்டில்... 125ஆம் தொடர்)

- விடுதலை நாளேடு, 5.7.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக