வியாழன், 26 ஜூலை, 2018

சமத்துவம் அவ்வளவு பலவீனமானதா?

பிற இதழிலிருந்து

இந்த வார "ஆனந்த விகடன்" - பேட்டி: த.கதிரவன்

படம்: சொ.பாலசுப்ரமணியன், ஓவியம்: பிரேம் டாவின்ஸி



 

சமீபகாலமாகவே சர்ச்சைகள் சுற்றிவருகின்றன திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை. அவர் ஒரு திருமணத்தில் மணமக்களுக்குத் தாலி எடுத்துக் கொடுத்த வீடியோ, "வீரமணி பேரனின் திருமணம்" என்று சமூக வலைதளங்களில் பரவியது. அது ஓய்ந்த சில நாள்களிலேயே கும்பகோணம் "திராவிட மாணவர் கழகப் பவள விழா" மாநாட்டில், கி.வீரமணி, சாரட்டில் பயணித்ததும் சர்ச்சை யானது.  அவரைச் சந்தித்துப் பேசினேன்.

"சமூக நீதி, சமத்துவம் பேசும் கி.வீரமணி, தொண்டர் களிடையே சாரட் வண்டியில் பயணித்து வந்தது சரி தானா?"

"குதிரை வண்டியில் நான் ஏறி வந்ததால், குதிரைக்கு வலி வந்துவிட்டது என்று சொன்னால்கூட அதில் அர்த்தம் இருக்கிறது. ஆனால், இவர்களுக்கு ஏன் வலி வந்தது என்றுதான் எனக்குப் புரியவில்லை. திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில், பேரணி, ஊர்வலம், முழக்கங்கள் எல்லாமே ஒரு வகையான பிரச்சார உத்தி. ஜாதி ஒழிப்புப் போராட்டத்துக்காகச் சிறைசென்ற பெரியார் விடுதலை யானபோது, சிதம்பரத்தில், தேரில் வைத்து ஊர்வலமாக அழைத்துவரப்பட்டார். அந்தக் காட்சியை வர்ணித்துதான் "அவர்தாம் பெரியார்" பாடலை இயற்றினார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.

இப்போது குடந்தையில், 75 ஆவது ஆண்டைக் கொண்டாடும் மாணவர் கழகத்தின் பவளவிழா மாநாட்டில், அய்யாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். 'பொது ஒழுக்கத்தோடு நடப்போம்‘, `சொந்த சாதியில் திருமணம் செய்துகொள்ள மாட்டோம்‘ என்பது உள்ளிட்ட 10 உறுதிமொழிகள் மாநாட்டில் எடுக்கப்பட்டன. கட்டுப்பாட்டுடன் திரண்டெழுந்த இந்த மாணவர் எழுச்சி பற்றிய சிறப்புச் செய்திகளை எல்லாம் மறைக்கவே ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் திட்ட மிட்டு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார்கள்.  "பல்லக்கில் பவனி வந்தார்" என்று மோசடியாகச் சித்திரித்து பரவ விட்டுள்ளனர்.

1995 ஆம் ஆண்டு, கன்ஷிராம், மாயாவதி தலைமையில், உத்தரப்பிரதேசத்தில் "பெரியார் மேளா" கொண்டாடப் பட்டது. இந்தியா முழுக்கப் பரவிய இந்தச் செய்தியைப் பின்னுக்குத் தள்ள வேண்டுமென்றே, அப்போது 'பிள்ளை யார் பால் குடிக்கிறார்' என்று கிளப்பிவிட்டார்கள். இதை யடுத்து, 'பிள்ளையார் பால் குடிக்க முடியுமா? பால் குடித்தது உண்மையா? பால் குடித்தது சரியா?‘ என்றெல்லாம் விவா திக்க ஆரம்பித்துவிட்டார்கள். எனவே, இது காலங்காலமாக அவர்கள் செய்துவரும் உத்தி; காலாவதியான உத்தி!"

"ஜமீன், ராஜாக்களின் அடையாளமான சாரட் வண்டி யில், சமத்துவத்தை வலியுறுத்தும் இயக்கத் தலைவரே தோழர்களுக்கு மத்தியில் பயணித்து வந்தது குறித்து முற்போக்காளர்கள் சிலரும் விமர்சிக்கிறார்களே..?"

"குதிரை வண்டியில் ஏறிவந்தாலே, சமத்துவம் போய் விடுமா? சமத்துவம் அவ்வளவு பலவீனமானதா?அப்படி 'வீக்'கானதாகத்தான் சமத்துவம் இருக்கிறதென்றால், அப்படி யொரு சமத்துவமே இருக்கக்கூடாது. காவல்துறையில், அணிவகுப்பு நடக்கிறது, அரசியல் கட்சியினர் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்துகின்றனர்... அப்போதெல்லாம் தலைவர்கள் காரில் அமர்ந்தவாறேதான் பார்வையிடு கின்றனர். நான் காரில் அமர்ந்து செல்லும்வழியிலேயேகூட தோழர்கள் எனக்கு வணக்கம் தெரிவிக்கிறார்கள்; நானும் பதில் வணக்கம் வைக்கிறேன். எனவே, இது ஒரு சாதாரண நிகழ்வுதான்.

சமத்துவம் என்பது எதில் வரவேண்டும்... உத்தியோகத் தில், பேச்சில், சுடுகாட்டில் என்று சமத்துவம் வரவேண்டிய இடங்கள் எவ்வளவோ இருக்கின்றன. திராவிடர் கழகம் அளவுக்கு சமூக நீதிக்காகப் போராடுகிற இயக்கம் வேறு எங்கேயிருக்கிறது? எனவே, இதில்போய் சமத்துவத்தைத் தேடுவதென்பது, அவர்களுக்குச் சரியான பார்வை இல்லை என்பதைத்தான் காட்டுகிறது!"

"ஆன்மிக விஷயங்களில் ஆர்வம் காட்டிய துரை முருகன், கோ.சி.மணிக்கு எதிராக ஆவேசம் காட்டிய திரா விடர் கழகம்., மு.க.ஸ்டாலின், சிறீரங்கம் கோயிலுக்குச் சென்று வந்தது குறித்து எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்க வில்லையே...?

"அது உண்மையில்லீங்களே... ஒரு திருமண விழாவை நடத்திவைக்கத்தானே ஸ்டாலின், சிறீரங்கம் சென்றார். அங்கேயுள்ள பார்ப்பனர்கள்தான், வலியவந்து 'பூரண கும்ப மரியாதை' கொடுப்பதாகச் சொல்லி அவருக்குப் பொட்டு வைத்திருக்கிறார்கள். அதையும்கூட ஸ்டாலின், உடனே அழித்துவிட்டார். இப்போது, அதையும் வைத்துப் பிரச்சாரம் பண்ணுகிறார்கள். ஸ்டாலினே முன்வந்து ஏதாவது கோயி லுக்குப் போனதாக ஏதேனும் செய்திகள் இருக்கிறதா... சொல் லுங்கள்... நான் கண்டிக்கிறேன்!"

"சிறீரங்கம் கோயிலை ஸ்டாலின் வாகனத்திலேயே வலம் வந்ததாகவும், யானைக்கு கரும்பு, வெல்லம் கொடுத்துப் பரிகாரம் செய்ததாகவும் செய்திகள் வெளி யாகி யிருக்கின்றனவே...?"

"பரிகாரம் செய்வதற்காக ஸ்டாலின் அங்கே போக வில்லை. அது தேவையும் இல்லாத விஷயம். 'ஸ்டாலின், கோயிலுக்குள் சென்றார்... கும்பிடு போட்டார்... அர்ச்சனை செய்தார்‘ என்று சொல்லுங்கள்... நான் கண்டிக்கத் தயாராக இருக்கிறேன். ஏனெனில், கண்டிப்பதற்கு நாங்கள்  யோசிப்பதே இல்லை.

பா.ஜ.க-வோடு தி.மு.க கூட்டு வைத்தபோது, அதனை நாங்கள் ஏற்கவில்லையே... தி.க-வைப் பொருத்தவரையில், தவறு செய்தால் தயவு தாட்சண்யத்துக்கு இடமே கிடையாது. இன்னும் சொல்லப்போனால், பெரியாராவது மடத்துக்குப் போயிருந்தபோது குன்றக்குடி அடிகளார் வைத்த பொட் டினை உடனே அழித்துவிடாமல், கொஞ்சம் தாமதமாகத் தான் அழித்தார். ஆனால், ஸ்டாலினோ உடனே பொட் டினை அழித்து, தான் எவ்வளவு சிறந்த கொள்கையாளர் என்பதைக் காட்டி விட்டாரே...!"

"ஸ்டாலின், குங்குமத்தை அழித்த சம்பவம் இந்து மதத்தினரைப் புண்படுத்தாதா?"

"ஒரு விஷயத்தை ஏற்காதவரிடம் போய் அதே விஷயத் தைச் செய்வதென்பது அறிவுடைமையா? குன்றக்குடி அடிகளார் அழைத்ததின் பேரில், ஒருமுறை மடத்துக்குச் சென்றார் பெரியார். அங்கே வரவேற்பு முறையில் ஒன்றாகப் பெரியாருக்குத் திருநீறு பூசப்பட்டது. ஆனால், இங்கே ஸ்டாலின், 'தனக்குப் பூரண கும்ப மரியாதை செய்ய வேண்டும்' என்று யாரையும் அழைக்கவே இல்லையே... ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகப் போயிருந்தவரை ஒரு குழப்பு குழப்பிவிட வேண்டும் என்பதற்காக, பார்ப்பனர்களே வலியப்போய் பூரண கும்ப மரியாதை செய்திருக்கின்றனர். ஆனால், அவர்களது முயற்சி எதுவும் 'டேக் ஆஃப்' ஆகவில்லை. எனவே, ஸ்டா லின், குங்குமத்தை அழித்துக்கொண்டதுதான் இப்போது செய்தியாகியிருக்கிறது. இது பாராட்டப்படக் கூடியதுதான்!"

"தாலி அகற்றும் விழா நடத்துகிற கி.வீரமணி, தன் பேரன் திருமணத்தைத் தாலி கட்டி நடத்தியிருப்பதாகச் செய்திகள் பரவியதே?"

"1,500 பேர் முன்னிலையில் நடந்த திருமணம் அது. அப்படியொரு சம்பவமே அங்கு நடைபெறவில்லை. எனவே, இந்தச் செய்தியில், துளியளவும் உண்மையில்லை. ஆனாலும், திரும்பத் திரும்ப இப்படியொரு பொய்ச் செய்தியைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இதழான 'விஜயபாரத'த்தில், இந்தச் செய்தி வந்தவுடனேயே வக்கீல் நோட்டீஸ் அனுப்பி, இப்போது வழக்குப் போடவும் தயாராகியிருக்கிறோம்."

"தாலி அகற்றும் விழாவில் பிரச்சினை ஏற்பட்டபோது திராவிடர் விடுதலைக்கழகம், ம.க.இ.க. போன்ற அமைப் புகள் உங்களுக்குத் துணைநின்றன. ஆனால், இதற்குச் சில மாதங்கள் கழித்து, 'பெரியார் தொகுப்பு' தொடர்பாக நீங்கள் கொளத்தூர் மணிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினீர்களே... இது தோழமைச் சக்திகளிடம் விரிசலை ஏற்படுத்தாதா? "

"இது தவறான கருத்து... அப்படி எந்த நோட்டீஸும் அனுப்பப்படவில்லை. பெரியார் புத்தகம் அச்சடிப்பது தொடர்பாக ஏற்கெனவே ராமகிருஷ்ணன் மீது தொடுத் திருந்த வழக்குதான் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக் கிறது. சில இளைஞர்கள், இந்தப் பக்கம் வருகிறார்கள். அதற்காக இதுபோன்ற திட்டமிட்ட தகவல்கள் பரப்பப்படு கின்றன... அவ்வளவுதான்!"

"அரசியலில், ரஜினியின் ஆன்மிகத்தையும், கமல் ஹாசனின் பகுத்தறிவையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?"

"தேர்தல் மார்க்கெட்டில் அதிக விலை போவது எது என்ற பிரச்சினையில், இவர்கள் இரண்டு பேருக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதாவது, 'நான் பகுத்தறிவாளர் என்றாலும்கூட, என்னுடன் இருப்பவர்கள் அனைவருமே பகுத்தறிவாளர்கள் என்று சொல்லமாட்டேன்' என்று பின்வாங்கிவிட்டார் கமல்ஹாசன். ஏனெனில், தேர்தலில் வாக்கு வாங்கும்போது, பகுத்தறிவை வலியுறுத்த முடியாது என்பது அவருக்குத் தெரிந்துவிட்டது. இதையே ரஜினிகாந்த் மாற்றிப் போட்டுவிட்டார். அதாவது, மதவாதம் என்று சொன்னால், மாட்டிக்குவாங்க பி.ஜே.பி எனக் கருதி, ஒண்ணும் புரியாத, இல்லாத ஒன்றை இருப்பதாகக் கற்பனை செய்து 'ஆன்மிகம்' என்று சொல்கிறார். இதனால் அவரும் குழம்பி, அடுத்தவர்களையும் குழப்புகிறார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இது பெரியார் மண். இங்கே மாய மான் வேட்டையெல்லாம் எடுபடாது!"

"திராவிடர் கழகத்துக்கு தலித்தை தலைவராகக் கொண்டு வர முடியுமா? என்று எஸ்.வி.சேகர் கேட்கிறாரே....?"



"தி.க-வைப் பொருத்தவரையில், இங்கே ஆதி திராவிடர், மீதி திராவிடர், பாதி திராவிடர் என்பதெல்லாம் கிடையாது. இங்கே இருப்பவர்களுக்கு சாதி, மதம் கிடையாது என்பதுதான் தி.க-வின் அடிப்படையே. இங்கே தலித்துகள் இவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று நான் சொன்னால், அந்தத் தோழர்களை நான் கொச்சைப்படுத்துவதாகாதா...! இங்கே தலித்துகள் இருக்கிறார்களா இல்லையா என்று நாங்கள் மற்றவர்களுக்குக் கணக்கெடுத்து சொல்லவேண்டிய அவசியமும் இல்லை. கொள்கை உறுதி, உழைப்பு ஆகியவற்றைக் கணக்கிட்டே தோழர்கள் பொறுப்புக்கு வருகிறார்கள். அதனால், இங்கே இருக்கிறவர்களுக்குத் தெரியும்... எந்தவிதமான பொறுப்புகளில் நடத்தப்படுகிறார் கள் என்று!"

"உங்கள் மகன் அன்புராஜை, தி.க பொதுச் செயலாள ராகக் கொண்டுவந்ததின் மூலம், இங்கேயும் வாரிசு அரசியலைக் கொண்டு வந்துவிட்டீர்களே....?"

"ஜெயேந்திரர் போனவுடன், விஜயேந்திரருக்கு பட்டம் சூட்டப்பட்டது" என்று சொல்வதற்கு தி.க ஒன்றும் மடம் கிடையாது. இது தெளிவானதொரு அமைப்பு. இங்கே செயற்குழு, பொதுக்குழு எல்லாமே இருக்கின்றன.

அன்புராஜ், ஏற்கெனவே பொதுக்குழு உறுப்பினராக இருந்திருக்கிறார். தோழர்கள் விரும்பியதன் அடிப்படையில், நான்கு பொதுச்செயலாளர்களுள் ஒருவராக அன்புராஜும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் அவ்வளவுதான். என் மகன் என்பதாலேயே அவர் தகுதிக்குறைவுக்கு உள்ளாக்கப் படுவதும் கிடையாது; அதே காரணத்தினாலேயே அவருக்கு அதிகத் தகுதி இருக்கிறது என்று முன்னே வந்து நிறுத்தப்ப டுவதும் இங்கே கிடையாது."

"வாழ்நாள் முழுக்க ஓய்வின்றி, மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தவர் பெரியார். ஆனால், இப்போதைய திராவிடர் கழகம் பெரியார் திடலைத் தாண்டி பிரச்சாரங்கள் செய்வ தில்லையே?"

"அதிகமான எண்ணிக்கையில் பொதுக்கூட்டங்களை நடத்துகின்ற இயக்கம் திராவிடர் கழகம்தான். மாதத்தில், 25 நாட்கள் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறேன். தெருமுனைக் கூட்டங்கள், மாநாடுகள், உலகளாவிய அளவில் 'விடுதலை' நாளேடு விநியோகம், இணையத்தில் 'பெரியார் வலைக்காட்சி' மூலமாக உடனுக்குடன் செய்தி ஒளிபரப்பு என தீவிரமாகவே கழகப் பணியாற்றி வருகி றோம். அதனால்தான் பஞ்சாபிலேயே, 'பெரியார் வாழ்க' என்ற முழக்கம் எழுந்திருக்கிறது. இப்போதுகூட அமெ ரிக்காவில், சுபவீ போன்றோர் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

'திராவிடம் 2.0' என்ற தலைப்பின்கீழ் பெரிய அளவில் பிரச்சாரங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ராமாய ணத்துக்கு எதிரான பிரச்சாரத்தையே நாங்கள்தானே முழு மையாக செய்துவருகிறோம்! எனவே பெரியார் காலத்தில், தமிழக அளவில் இருந்த பகுத்தறிவுப் பிரச்சாரம்... இன்றைக்கு உலகளாவிய நிலைக்கு மாறியிருக்கிறது!"

நன்றி: "ஆனந்த விகடன்", 1.8.2018

- விடுதலை நாளேடு, 26.7.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக