செவ்வாய், 21 ஏப்ரல், 2020
பெரியார் மணியம்மை திருமணத்தில்...
திங்கள், 13 ஏப்ரல், 2020
ஏப்ரல் 13 (1924) வைக்கம் வீரர் பெரியார் - வந்தார்; வென்றார்
இந்தியாவில் நடைபெற்ற முதல் மனித உரிமைப் போராட்டம், வைக்கத்தில் தான் துவங்கியது
வைக்கம் என்றதும் தமிழ் நாட்டினர்க்கு நினைவுக்கு வரும் முதல் உருவமும், பெயரும் தந்தை பெரியார் தான். 1924 முதல் இன்று வரை இதே நிலைமை தான்.
சேரன்மாதேவி, வைக்கம் போராட்டங்களின் ஊடா கவே, தந்தை பெரியார் சமூக சீர்திருத்த வீரர் என்று உணரப்பட்டு வரலாற்றில் நிலைத்தார்.
போராட்டம் நடந்தது வைக்கத்தில்! ஆனால், அந்தப் போராட்டத்திற்கு காரணமாக அமைந்தது திருவனந்தபுரத் தில் நடந்த ஒரு நிகழ்வே! திருவனந்தபுரம் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் நீதிமன்றம் அமைந்திருந்தது. திருவாங்கூர் ராஜாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக நீதிமன்றம் செல்லும் பொது இடம் பந்தல் போட்டு தடுக்கப் பட்டதால், வழக்கறிஞர் மாதவன் நீதிமன்றத்துக்கு செல்ல முடியவில்லை.
இதன் காரணமாய் ஈழவ வகுப்பு பிரமுகர்கள் ஒன்று கூடி சத்தியாகிரகம் செய்வது என தீர்மானித்து, திருவனந்த புரத்தில் நடந்தால், ராஜாவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால், வைக்கத்தில் நடத்திட முடிவு செய்தனர். வைக்கம் கோயிலின் நாலுபுற வாசற்படிக்கு எதிரில் உள்ள நான்கு தெருக்களிலும் ஈழவ மக்கள் நடக்க அனுமதியில்லை. ஆகவே, அதை மீறி நடப்பது என்று முடிவு செய்து சத்தியாகிரகம் தொடங்கி விட்டார்கள். இதுதான் வைக்கம் எனும் ஊர், போராட்டக் களமாக தேர்ந்தெடுக்கப்பட்டதன் வரலாறு.
கேரளப்பகுதி காங்கிரசின் ஆதரவில் 1924 மார்ச் 30-ஆம் தேதி வரலாற்றுப் புகழ்பெற்ற வைக்கம் சத்தியாகிரகம் டி.கே.மாதவன், கே.பி.கேசவ மேனன், ஜார்ஜ் ஜோசப், மன்னத்து பத்மாநாபன், கே.கேளப்பன் உள்ளிட்ட தலைவர் கள் துவங்கினார்கள்.
துவங்கிய நிலையிலேயே, அரசால் கைது செய்யப் பட்டதால், போராட்டத்தை நடத்தத் தலைவர்கள் தேவை என்ற ஜார்ஜ் ஜோசப்பின் கோரிக்கை, காந்தியார், பெரியார் ஆகியோருக்கு மட்டுமல்ல; இராஜாஜிக்கும் வந்தது. அவ் வேண்டுகோளை இராஜாஜி நிராகரித்தார்.
13 ஏப்ரல் 1924 அன்று தந்தை பெரியார் வைக்கம் வந்து சேர்ந்தார். அது போராட்டம் தொடங்கி பதினைந்தாவது நாள்.
“தமிழ் நாட்டுத் தலைவரான ஈ.வெ.ராமசாமி நாயக்கர் வைக்கத்திற்குச் சென்றிருக்கிறார். நாயக்கர் கர்ம வீரர். வீண் பேச்சுக்காரர் அல்லர். ஆடம்பரத்தை வெறுப்பவர். அதை யும் செய்கையில் காட்டும் ஆற்றல் பெற்ற பெரியார். ஆத லின் அவர் சத்தியாகிரகப் போர்க்களத்தின் பாசறையில் இதுகாலை சேனாதிபதிகளுடன் யோசித்து வருகிறார்” என பெரியாரின் வைக்கம் போராட்டச் செயல்பாட்டைப் பாராட்டி நவசக்தி (நவசக்தி 18 ஏப்ரல் 1924) எழுதியது.
”முகமதியரும், கிறித்துவர்களும் வைக்கம் கோயில் அருகில் உள்ள பொதுத்தெருவின் வழியே நடக்க அனுமதிக் கப்படுகிறார்கள். ஆனால், ஈழவர்கள் அனுமதிக்கப்படுவ தில்லை. இந்துவான புலையர்களும், பறையர்களும் அந்தச் சாலை வழியே நடக்க அனுமதிக்கப்படுவதில்லை. அந்த மனிதர்களே கிறித்துவர்களாகவோ, முகமதியர்களாகவோ மாறினால், திருவாங்கூர் அரசாங்கம் அவர்களை அத்தெரு வழியே நடக்க அனுமதிக்கிறார்கள்” என்று தந்தை பெரியார் 26 ஏப்ரல் 1924 அன்று நாகர்கோவிலில் நடைபெற்ற சத்தி யாக்கிரக ஆதரவு கூட்டத்தில் பேசினார்.
”வைக்கம் சத்தியாகிரகம் என்ற போர் அரசாங்கத்திற்கு எதிரானது அல்ல; மதச் சண்டையும் அல்ல; வகுப்புச் சண்டையும் அல்ல. இது பொது நலனுக்கான செயல். சமத்துவத்தை நிறுவும் நோக்கம் கொண்டது.” இது தந்தை பெரியார் திருவனந்தபுரத்தில் 1 மே 1924இல் பேசியது.
பெரியார் ஆற்றிய உரைகள் முழுவ தையும் படித்த அரசாங்கம் அவை ஏற் படுத்திய தாக்கத்தைக் கண்டு அரண்டு போயிருக்கக் கூடும். அதனால் திருவாங் கூர் அரசாங்கம் பெரியார் பேசுவதற்குத் தடை பிறப்பித்தது.
தடையை மீறி தந்தை பெரியார் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு கைதானார். ஒரு முறை அல்ல. இரு முறை.
தந்தை பெரியார் சிறையில் கொடு மையாக நடத்தப்படுவதைக் கண்டித்து இராஜாஜி அறிக்கை 27 ஆகஸ்டு 1924இல் வெளியிட்டார். அதில், “தற்போது திருவனந்தபுரம் மத்திய சிறையில் சத்தியாகிரகக் கைதியாக இருக்கும் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் உணவு மற்றும் தங்குமிடம் போன்ற விஷயங்களில் சாதாரண தண்டனைக் கைதியாக நடத்தப்படுவதாக நம்பகமான தகவல்கள் எனக்கு வருகின்றன. சிறை உடையை அவர் அணிகிறார். இரும்பு விலங்குகள் போடப்பட்டிருக்கிறார். தனிமைச் சிறையில் மற்ற சத்தியாகிரக சிறைவாசிகளிலிருந்து ரொம்ப தூரத்தில் வைக்கப்பட்டிருக்கிறார் என்று தெரிகிறது. இவ்வளவுக்குப் பிறகும், நாயக்கர் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறார் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
செல்வ வளத்தின் மகிழ்ச்சிகளையும் பதவிகளையும் வெறுத்து ஒதுக்கித் தள்ளிவிட்டு கடினமான இந்தப் பாதையை தேர்ந்தெடுத்து வந்துள்ளார். பெரும்பாலான நம்மைப் போல் அல்ல. உண்மையிலேயே தம்மைத் தூய் மைப்படுத்தும் இந்தச் செயல்களை அவர் வரவேற்கிறவர். சிறையில் இருக்கும் தமிழ்நாடு காங்கிரசுக் கட்சியின் தைரிய மிக்க தலைவருக்கு என் பாராட்டுகள்”. (தி இந்து 27 ஆகஸ்டு 1924).
”விடுதலையாகி வெளியே வந்ததும், வைக்கம் உட்பட எல்லா இடங்களிலும் பொதுரஸ்தாக்களில் எல்லோரும் நடமாடலாம் என்று அரசாங்கத்தார் அனுமதிப்பதற்கு அறிகுறியாகவே எங்கள் விடுதலையைக் கொள்ள நாங்கள் ஆவலாயிருக்கிறோம். அப்படி இல்லாவிடில் வைக்கம் போராட்டத்தை இனியும் நடத்துவோம்” என தந்தை பெரியார், கே.பி.கேசவ மேனன் முதலியவர்கள் கையெழுத் திட்டு அறிக்கை வெளியிட்டனர்.
வைக்கம் வீரர் தந்தை பெரியார் மீது அரசாங்கத்தார் தொடுத்திருந்த வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொண்டனர் (2 ஜனவரி 1925). வைக்கம் வீரர் என்ற சொல்லாட்சி போராட்டம் முடிவதற்கு முன்பே பத்திரிக்கை வழக்காகி விட்டது.
சத்தியாகிரக ஆசிரம தலைமைப் பொறுப்பு, பிரச்சாரம், ஆலோசனை, சத்தியாகிரக ஊர்வலத் தலைமை, பண வசூல் எனப் பலவிதத்திலும் செயலாற்றிச் சத்தியாகிரகம் தொய்வடையாமல் பார்த்துக் கொண்டார் தந்தை பெரியார்.
கேரள வரலாற்றுப் பேராசிரியரான டி.கே.ரவீந்திரன் தனது (Eight furlongs of Freedom) ஆங்கில நூலில் ’ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் தலைமை இயக்கத்துக்குப் புதிய உயிர் கொடுத்தது’ என்கிறார்.
வைக்கம் சத்தியாகிரகம் தொடர்பாக காந்தியார் வைக் கம் உள்ளிட்ட இடங்களுக்கு வருகை தந்தார். திருவனந்த புரத்தில் இராணியாரோடு பிரச்சினை குறித்துப் பேசுகிறார். அரசியார் அவரிடம், “நாங்கள் சாலையைத் திறந்து கொடுக் கின்றோம். ஆனால் அடுத்ததாக கோயி லுக்குள் நுழைவதாக ஈ.வெ.ராமசாமி நாயக்கர் பேசிக் கொண்டிருக்கிறார். அவர் அதைச் செய்யாமல் இருக்க உறுதி அளித்தால், தடையை நீக்கி விடு கிறேன்" என இராணியார் சொன்னதும், காந்தியார் தந்தை பெரியாரை அழைத்து, அவரது கருத்தை கேட்கிறார். "நமது இலட்சியம் கோயில் நுழைவுதானே. ஆனால் இப்போது அதைப் பற்றி அழுத்தம் கொடுக்கப்போவது இல்லை" என்று சொல்லி விடுங்கள் என காந்தியா ரிடம் சொன்னதும், அதையே இராணியா ரிடம் தெரிவித்தார். உடன் வைக்கத்தில் நான்கு தெருக்களில் கிழக்கு தவிர ஏனைய மூன்று தெருக்களையும் அனைவரும் நடக்க அரசாங்கம் உத்தரவிடுகிறது.
இந்த நிகழ்வு, தந்தை பெரியார் வைக்கம் போராட்டத்தில் எத்தகைய முக்கியஸ்தராக இருந்தார் என்பதை தெளிவாக்கு கிறது.
சத்தியாகிரக ஆசிரமத்தின் செயலாளர் கேளப்பன் ஏற்பாட்டில் வைக்கத்தில் வெற்றிக் கொண்டாட்டம் 29 நவம்பர் 1925 அன்று தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்றது. நாகம்மையார், டி.கே.மாதவன், மன்னத்து பத்மாநாபன் ஆகியோர் பங்கேற்றனர்.
பெரியார் பேசுகையில், “சத்தியாகிரகத்தின் உத்தேசம் கேவலம் நாய், பன்றி நடக்கும் தெருவில் நாம் நடக்க வேண்டும் என்பதல்ல. மனிதனுக்கு மனிதன் பொதுவாழ்வில் வித்தியாசம் இருக்கக்கூடாது என்பது தான். அந்தத் தத்துவம் இந்த தெருவில் நடப்பதோடு முடிந்துவிடவில்லை. ஆகையால், தெருவில் நிரூபித்த சுதந்திரத்தைக் கோவிலுக் குள்ளும் நிரூபிக்க வேண்டியது மனிதர் கடமை” எனப் பேசினார்.
வைக்கம் போராட்டம் காந்தியார் தொடங்கியது அல்ல; அவர் நேரடியாகக் கலந்து கொண்ட போராட்டமும் அல்ல. வைக்கம் போராட்டம் என்பது காந்தியாரைப் பொறுத்தவரை ஜாதியை ஒழிக்காமல், வருணாசிரமத்தைத் தக்க வைத்துக் கொண்டே, இந்து மதத்திலிருந்து தீண்டாமை, நெருங்காமை ஆகிய பாவங்களை ஒழிக்க முயல அவருக்குக் கிடைத்த வாய்ப்பு.
வைக்கம் போராட்டத்தை இந்துக்களுக்கானது எனச் சுட்டி, இந்து அல்லாதவர்களைப் போராட்டத்திலிருந்து வெளியேற்ற முயன்றார் காந்தி. இதனால், ஜார்ஜ் ஜோசப் மற்றும் சீக்கியத் தலைவர்கள் போராட்டத்தில் இருந்து ஒதுங்கினர்.
கேரள அழைப்பை ஏற்று பெரியார் வைக்கம் சென்ற தற்குக் காரணம், அடிப்படையில் தீண்டாமை ஒழிப்பு நோக்கம் தான். அடுத்து அவருக்கே உரிய போராட்ட குணம். மூன்றாவது, அன்றைய காலக்கட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தது.
வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார் மட்டுமல்ல, அவரது குடும்பத்தினர் - மனைவி நாகம்மையார், தங்கை எஸ்.ஆர்.கண்ணம்மாள் உள்ளிட்டவர்கள் பங்கு பெற்றனர். இந்தக் கிளர்ச்சியில் முதலில் பங்கு பெற்றவர்கள் பெரியாரின் குடும்பத்துப் பெண்கள் என எழுத்தாளர் வளர்மதி தனது நூலில் குறிப்பிடுகிறார்.
போராட்டக் காலத்திலேயே தந்தை பெரியாரை, தமிழ்த் தென்றல் திரு.வி.க., ’வைக்கம் வீரர்’ எனப் புகழ்ந்தார். நவசக்தி இதழும் பலமுறை அவ்வாறே குறிப்பிட்டது. இது மட்டுமல்ல, அய்.வி.பீட்டர் என்பவர் ‘ஒடுக்கப்பட்ட சமுதாயம் வரலாறு படைத்தது’ என்ற நூலில் தந்தை பெரியாரை வைக்கம் வீரர் என குறிப்பிடுகிறார்.
அமெரிக்க ஆய்வாளர் மேரி எலிசெபத் கிங் எழுதிய Gandhian non-violent struggle and untouchability in South India (2015) என்ற நூலில் ”The 1924-25 Vykom Satyagraha and the mechanisms of change” என்ற துணைத் தலைப்பில் தந்தை பெரியாரைப் பற்றிய குறிப்புகள் 18 இடங்களில் வருகின்றன.
1924 மார்ச் 30-ல் வைக்கம் போராட்டம் தொடங்கியது. 610 நாட்கள் நடந்தது. நவம்பர் 1925-ல் முடிவுற்றது. தந்தை பெரியார் 13 ஏப்ரல் 1924-ல் வைக்கம் சென்றார். நவம்பர் 1925-க்குள் ஏழு முறை அந்த போராட்டத்திற்காக அங்கே பயணம் மேற்கொண்டுள்ளார்.
வைக்கம் போராட்டத்திற்காக, தந்தை பெரியார் அவர்கள் திருவாங்கூர் பகுதியில் வெளியில் 67 நாட்களும், சிறையில் 74 நாட்களும் (மொத்தம் 141 நாட்கள்) தங்கியிருந்து போராட்டத்தில் பங்கேற்றார்.
வெளிமாநிலத்திலிருந்து சென்று ஏறத்தாழ 140 நாள்கள் வைக்கம் போராட்டத்திற்காக செலவிட்ட தலைவர் தந்தை பெரியார் ஒருவரே.
இருமுறை சிறை சென்றவரும், கடுங்காவல் தண்டனை அனுபவித்தவரும் தந்தை பெரியார் ஒருவர்தான்.
சத்தியாகிரக வெற்றி விழாவிற்குத் தலைமை ஏற்க அழைக்கப்பட்டவர் தந்தை பெரியார் மட்டுமே (அயலகத் தலைவரும் என்றபோதிலும்).
வைக்கம் சத்தியாகிரகப் போரைத் தொடங்கியவர்கள் கேரள காங்கிரஸ் கமிட்டியாரானாலும், அப் போரின் பின் நிகழ்ச்சிகளில் தமிழ்நாட்டவர் பெரும்பங்கு எடுத்துக் கொண்டார்கள். இதில் கோவை அய்யாமுத்து, பெருந் தலைவர் காமராசர் உள்ளிட்டோர் அடங்குவர். இதுகுறித்த ஒரு பட்டியலை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஆண் டறிக்கை (1924) வெளியிட்டது.
அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய தனஞ்செய் கீர், அண்ணல் அம்பேத்கர் மகத் குளத்தில் தாழ்த்தப்பட்டோர் தண்ணீர் எடுத்திடும் போராட் டத்தை நடத்திட தூண்டுகோலாக வைக்கம் போராட்டம் இருந்ததாக குறிப்பிடுகிறார்.
வைக்கத்தில் இரு அரசுகளின் சார்பில் (தமிழ்நாடு, கேரளம்) ’தந்தை பெரியார் நினைவகம்’ அமைக்கப்பட்டு உள்ளது.
வைக்கம் பேராட்டம் 96 ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்ற பேராட்டம். இந்தியாவில் மனித உரிமைக் களத்தில் முதல் போராட்டம். உலகில் எங்கும் கேள்விப்படாத சமூகக் கொடுமையான தெருவில் நடக்கக்கூட தாழ்த்தப் பட்டோருக்கு உரிமை இல்லாத நிலையில் வைக்கம் பேராட்டம் நடைபெற்றது. அது சமூகப்புரட்சி, அமைதிப் புரட்சி, அறிவுப்புரட்சி, ரத்தம் சிந்தாப் புரட்சி, தந்தை பெரியாரின் தீவிரப் பங்களிப்பால் வெற்றி பெற்றது எனத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், வைக்கம் போராட்டம் நூலாசிரியர் பழ.அதியமான் அவர்களுக்கு 27 பிப்ரவரி 2020 அன்று நடைபெற்ற பாராட்டு விழாவில் சிறப்பாக தெரிவித்தார்.
இத்தகைய மனித உரிமைக்கான முதல் வரலாற்றைப் படைத்த வைக்கம் சத்தியாகிரகம் எனும் போரில், தந்தை பெரியாரின் மகத்தானப் பங்களிப்பை மறைத்திட, சில கைகள் உயர்ந்தாலும், ஒரு போதும் உண்மை எனும் ஆதவனை மறைத்திட இயலாது என்பதை அரசின் ஆவ ணங்கள், பல்வேறு ஆய்வாளர்களின் நூல்கள் தெளிவாகப் பறைசாற்றுகின்றன. இதனை நல்ல வண்ணம் தொகுத்து ஆவணப்படுத்திய பழ.அதியமானுக்கு திராவிடர்களின் சார்பில் பாராட்டுகள்! வாழ்த்துகள்!
- குடந்தை கருணா
(பழ.அதியமான் எழுதிய ‘வைக்கம் போராட்டம்’ நூலில் இருந்து தொகுக்கப்பட்டது.)
வியாழன், 26 மார்ச், 2020
வரலாறு : மதுரைக் கோவில் நுழைவும் ஆர்.எஸ். நாயுடுவும் !
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த ஆலயப் பிரவேசத்தில் முக்கியப் பங்கு வகித்தவர் கோவிலின் அறங்காவலரான ஆர்.எஸ். நாயுடு. சி.ஜே. ஃபுல்லர் எழுதிய Servents of the Goddess புத்தகத்தில் ஆலயப் பிரவேசத்தில் இவரது பங்களிப்பு குறித்து விரிவாகப் பேசப்பட்டிருக்கிறது. ஆனால், அவரைப் பற்றி தனிப்பட்ட விவரங்கள் அதிகமாக இல்லை.
ஆர்.எஸ். நாயுடுவின் வழித்தோன்றல்கள் இப்போதும் மதுரை நகரில் வசிக்கிறார்கள். ஆர்.எஸ். நாயுடுவின் பேரன்கள் வழக்கறிஞர் ஆர். கோபிநாத் மற்றும் சேக்ஸ்ஃபியர் ஆகிய இரண்டு பேரையும் நான் சந்தித்தேன். இவர்களிடம் தங்கள் தாத்தா குறித்த தெளிவான விவரங்கள் இல்லை. ஆனால், நாயுடுவின் பல புகைப்படங்களை அவர்களிடமிருந்து பெற முடிந்தது.
சென்னையில் பாரி அண்ட் கம்பனியில் ஆடிட்டிங் பிரிவில் பணியாற்றியவர் ரெங்கமன்னார் நாயுடு. அந்த காலத்திலேயே ஆயிரக் கணக்கில் மாத ஊதியம் பெற்றவர். இவருக்கு இரு மகன்கள். ஒருவர் ஆர். சேஷாச்சலம் நாயுடு. மற்றொருவர் ஆர். நெம்பெருமாள் நாயுடு. இவர்களில் சேஷாச்சலம் நாயுடு தன் பெயரை ஆர்.எஸ். நாயுடு என கெஸட்டிலேயே மாற்றிக்கொண்டார், நெம்பெருமாள் நாயுடு ஆர்.என். நாயுடு என மாற்றிக்கொண்டார். நெம்பெருமாள் நாயுடு மருத்துவர். ஆர்.எஸ். நாயுடு இங்கிலாந்தில் பார் அட் லா முடித்தவர்.
இதற்குப் பிறகு மதுரை திரும்பிய ஆர்.எஸ். நாயுடு, நீதிக் கட்சியில் பெரும் ஈடுபாடு காட்டினார். அந்தக் கட்சியின் சார்பில் மதுரை நகர சபைக்குப் போட்டியிட்டு நகர சபைத் தலைவராக 12 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். அவர் நகரசபைத் தலைவராக இருந்த காலகட்டத்தில்தான் சைமன் கமிஷன் என பரவலாக அழைக்கப்பட் சர் ஜான் சைமன் தலைமையிலான The Indian Statutory Commission மதுரைக்கு விஜயம் செய்தது.
காங்கிரசும் ஜின்னா தலைமையிலான முஸ்லீம் லீகும் இந்த கமிஷனை புறக்கணித்த நிலையில், இந்த கமிஷன் சென்ற இடமெல்லாம் எதிர்ப்பு நிலவியது. ஆனால், இந்தியாவில் இரண்டே இரண்டு கட்சிகள் இந்த கமிஷனை ஆதரித்தன. ஒன்று முகமது ஷாஃபி தலைமையிலான முஸ்லீம் லீக். இரண்டாவது நீதிக் கட்சி.
ஆகவே, மதுரைக்கு வந்த சைமன் கமிஷனை நீதிக் கட்சியைச் சேர்ந்த ஆர்.எஸ். நாயுடு வரவேற்றார். அந்த கமிஷனில் இடம்பெற்றிருந்த, பின்னாளில் பிரிட்டனின் பிரதமரான லேபர் பார்ட்டியைச் சேர்ந்த கிளமன்ட் அட்லி, ஆர்.எஸ். நாயுடுவின் வீட்டிற்கும்கூட வந்தார். (கிளமன்ட் அட்லியும் ஆர்.எஸ். நாயுடுவும் இங்கிலாந்தில் ஒன்றாகப் படித்தவர்கள் என்கின்றனர் அவரது குடும்பத்தினர். இதை உறுதி செய்ய முடியவில்லை).
12 ஆண்டுகள் மதுரை நகர சபையின் தலைவராகப் பணியாற்றிய பிறகு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் நிர்வாக அதிகாரியாக 1937-ல் நியமிக்கப்பட்டார் ஆர்.எஸ். நாயுடு. நீதிக் கட்சி ஆட்சியின் இறுதிக் காலத்தில் மதுரையில் செல்வாக்குடன் விளங்கிய நீதிக் கட்சித் தலைவர் பி.டி. ராஜனால், நாயுடு நியமிக்கப்பட்டார்.
மீனாட்சி அம்மன் கோவிலின் நிர்வாக அதிகாரியாக ஆர்.எஸ். நாயுடு செய்த மாற்றங்கள், சீர்திருத்தங்கள் பாரதூரமானவை. அவர் நிர்வாக அதிகாரியாக இருக்கும்போதுதான் ஆலய நுழைவு நடந்தது என்பது எல்லோரும் அறிந்தது. ஆனால், மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்தில் அவர் செய்த மாற்றங்களும் மேம்பாடுகளும் போற்றத்தக்கவை.
ஆலயப் பிரவேசத்தை ஒட்டிய காலத்தில், ஆர்.எஸ். நாயுடு மிக கண்டிப்பாக நடந்து கொண்டார். அதனாலேயே, பட்டர்களின் கலகத்தை மீறியும் ஆலயப் பிரவேசம் நிலைத்து நின்றது. ஆலயப் பிரவேசத்திற்கு அடுத்த நாள் சந்நிதானக் கதவுகளைப் பூட்டிக்கொண்டு சாவியைத் தர மறுத்த முத்து சுப்ப பட்டரையும் மேலும் இரண்டு பேரையும் இடைநீக்கம் செய்தார். அதற்குப் பிறகு, அன்றைக்கு பூசை உரிமை உள்ளவர்கள் கோவிலுக்கு வராமல் போனால், உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

சில வாரங்களில் சாந்து பட்டரைத் தவிர எல்லா பட்டர்களும் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். பூசைகளைத் தொடர்ந்து செய்ய திருநெல்வேலியிலிருந்து 12 ஆதி சிவாச்சாரியார்களை வரவழைத்தார் நாயுடு.
1939 ஜூலை 29-ஆம் தேதி கோவிலுக்குள் சென்று சுத்தீகரண சடங்குகளைச் செய்ய வேண்டும் என சில பட்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்தபோது, கோவில் கதவுகளை மூடியதோடு சஸ்பென்ட் ஆன பட்டர்கள் கோவிலுக்குள் வரக்கூடாது என்று விதித்தார். சுத்தீகரணச் சடங்கையும் அனுமதிக்க மறுத்தார்.
ஆகஸ்ட் மாதம் ஆவணி மூலத் திருவிழாவின்போது வேத பாராயணம் செய்யும் பாடகர்கள் கோவிலை விட்டு வெளியேறியபோது, வேறு கோவில்களில் இருந்து வேத பாராயணம் செய்யவைத்தார். முடிவில் 1945 செப்டம்பர் மாதத்தில், சுத்தீகரணச் சடங்கு ஏதும் செய்யாமல், ஆர்.எஸ். நாயுடுவுடன் சமரசம் செய்துகொண்டுதான் பட்டர்கள் மீண்டும் கோவிலுக்குள் நுழைய முடிந்தது.
இந்த அர்ச்சகர்கள் கோவிலில் இல்லாத காலகட்டத்தில் பல நிர்வாகச் சீர்திருத்தங்களை அவர் முன்னெடுத்தார்.
1. 1939 ஆகஸ்டில் அர்ச்சனை செய்ய விரும்பும் பக்தர்கள் அலுவலகத்தில் சீட்டு வாங்க வேண்டும். பட்டர்களிடம் நேரடியாக காசு கொடுக்கக்கூடாது. சீட்டின் விலை 3 அணா. இதில் 1 அணா பட்டருக்கு. 2 அணா கோவிலுக்கு.
2. நாயுடு வருவதற்கு முன்பாக கோவிலில் 2 உண்டியல்கள் மட்டுமே இருந்தன. இதனால் பக்தர்கள் பலர் பட்டர்களிடம் காசு கொடுத்தனர். வட இந்தியர்கள் காசுகளை சந்நிதியில் தூக்கி எறிந்தனர். இதைப் பார்த்த நாயுடு கோவில் முழுக்க உண்டியல் வைக்க உத்தரவிட்டார். சந்நதியில் பணம் எறியும் பழக்கம் தடுத்து நிறுத்தப்பட்டது.
3. முக்கியப் பிரமுகர்கள் வரும்போது அவர்களை பட்டர்கள் வரவேற்றனர். அதை மாற்றிய நாயுடு, கோவில் நிர்வாக அதிகாரிகளே இனி முக்கியப் பிரமுகர்களை வரவேற்பார்கள் என செயல்படுத்தினார். இப்போதுவரை அந்த முறையே நீடிக்கிறது.
4. மீனாட்சிக்கும் சுந்தரேஸ்வரருக்கும் பட்டாபிஷேகம் நடக்கும் போது அவர்கள் செங்கோல்களை முதன்மை பட்டர்தான் எடுத்துச் சென்றார். ஆனால், 1940-ல் இந்தப் பழக்கத்தை நாயுடு மாற்றினார். சாந்து பட்டர்தான் கடைசியாக இப்படி செங்கோலைக் கொண்டுசென்ற பட்டர். அதற்குப் பிறகு, நிர்வாக அதிகாரியோ, அறங்காவலரோதான் செங்கோலைப் பெறுகின்றனர்.
5. கோவில் பேஷ்காராக அதுவரை பிராமணர்களே நியமிக்கப்பட்டனர். ஆனால், முதல் முறையாக பிராமணரல்லாத ஒருவரை 1945 பிப்ரவரியில் நாயுடு நியமித்தார்.
6. எந்தெந்த நேரத்தில் வழிபாடு நடக்கிறது என்பது பலகைகளில் எழுதி வைக்கப்பட்டது. அந்தந்த நேரத்தில் பூஜை நடக்கிறதா என்பதை பேஷ்கார் கண்காணிக்கும் முறை வந்தது.
7. புதிய பட்டர்கள் தீட்சை பெறும் அதிகாரம் பட்டர்கள் கையிலிருந்து கோவில் நிர்வாகத்தின் கைக்கு வந்தது.
1945-ல் ஆர்.எஸ். நாயுடு கோவில் நிர்வாகத்தில் இருந்து ஓய்வுபெற்றார்.
ஆர்.எஸ். நாயுடுவுக்கு மூன்று மகன்கள். ராஜேந்திரன், எஸ்டி ராய், கிருஷ்ணமோகன். இவர்களில் ராஜேந்திரனும் வெளிநாட்டில் சட்டம் படித்தவர். ஆனால், படிப்பை முடிக்கவில்லை. தந்தையின் சொத்தை குதிரைப் பந்தையத்தில் செலவழித்தார். மதுரையிலிருந்து செயல்பட்ட சித்ராலயா ஸ்டுடியோவில் சில காலம் நிர்வாகியாகவும் பணியாற்றினார்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
இவரது மகன்கள் கோபிநாத், ஷேக்ஸ்பியர் ஆகியோரைத்தான் நான் சந்தித்தேன். ஏப்ரல் 23-ஆம் தேதி பிறந்ததால், ஷேக்ஸ்பியர் என தன் மகனுக்கு பெயர் வைத்திருக்கிறார் ராஜேந்திரன்.
கோவில் நுழைவுப் போராட்டத்தில் ஆர்.எஸ். நாயுடுவுக்கு பக்கபலமாக நின்ற சாந்து பட்டரின் மகன் சுப்பிரமணியன், ஆர்.எஸ். நாயுடு மிக உறுதியான, அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு நிர்வாகி என நினைவுகூர்கிறார்.
ஆர்.எஸ். நாயுடுவுக்கு இங்கிலாந்தில் இருந்து வந்த கடிதங்கள் அனைத்தையும் தூக்கியெறிந்துவிட்டதாக ஷேக்ஸ்பியர் சொல்கிறார். ஆர்.எஸ். நாயுடு மதுரை நகர சபை தலைவராக இருந்தபோது செய்த பணிகள் என்ன என்பது இன்னொரு ஆய்வுக்குரியது.
நன்றி: Muralidharan Kasi Viswanathan
வினவு இணையம், December 31, 2018,
வியாழன், 19 மார்ச், 2020
அன்னை மணியம்மையார்பற்றி தந்தை பெரியார்
ஆகஸ்ட் முடிந்தால் 93 வயது முடிந்துவிட்டது. செப்டம்பர் பிறந்தால் 94ஆம் ஆண்டு பிறக்கின்றது. தயவு தாட்சண்யம் காட்டாமல் சுதந்திரமாய் இருந்து பார்க்கலாம் என்று கருதுகின்றேன். நான் சென்னைக்கு வந்தால் ‘உண்மை’ மாத இதழையும், சென்னைக்குக் கொண்டு வந்துவிடலாம் என்று கருதுகின்றேன்.
சென்னைக்கு வருவதில் வேறு பல சங்கடங்களும் இருக் கின்றன. திருச்சியில் பயிற்சிப் பள்ளிகள் இரண்டு இருக் கின்றன; பிரைமரிப் பள்ளி ஒன்று இருக்கின்றது; அநாதைப் பிள்ளைகள் விடுதி ஒன்று இருக்கின்றது; வரும் ஆண்டு முதல் உயர்நிலைப் பள்ளி ஒன்று ஏற்படுத்த அனுமதி பெற்று நடத்தப்படப் போகின்றது. ஈரோட்டில் ஒன்று ஏற்படுத்த உத்தேசம். இவையெல்லாம் திருமதி மணியம்மையார் முயற்சியில்தான் நடைபெறு கின்றன. 10, 12 ஏக்கர் தோட்டப் பண்ணை ஒன்றும் நடைபெறுகின்றது. பல ஆயிரக் கணக்கில் வாடகை வரும் பல கட்டடங்களும் திருச்சியில் இருக்கின்றன. ஆகவே, மணியம்மை அவர்கள் திருச்சியில் இருக்க வேண்டி யிருக்கிறது. நான் சென்னைக்கு வந்தால், மணியம்மையார் என்னைத் தனியாய் இருக்கச் சம்மதிக்க மாட்டார்கள். அவர்கள் சென்னைக்கு வந்து விட் டால், திருச்சி நடப்புகள் பாதிக்கப்படும். இது ஒரு சங்கடமான நிலைமை என்றாலும் ஏதாவது செய்தாக வேண்டியிருக்கிறது.
- 'விடுதலை’ - தலையங்கம் - 19-7-1972
«««
இயற்கையை வெல்வது கடினம்தான்! உனக்கு ஏதாவது இன்று நேர்ந்திருந்தால் அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால், என் எண்ணம் வீணாயிற்றே. வீண் பழிக்கும் பொல்லாப்புக்கும் ஆளானேனே. எந்தக் காரணத் திற்காக - என்ன நோக்கத்திற்காக இந்த ஏற்பாடுகள் (பல பேரின் அதிருப்திக்கும் - வெறுப்புக்கும் ஆளாகி) செய் தேனோ அது நிறைவு பெறாமல் நீ போய்விடுவாயோ என்றுதான் கலங்கினேன். இந்த உயிர் இந்த வயதிலும் சாகாமல் இருக்கின்றது என்றால், இந்த அம்மாவால்தான் என்பது யாருக்குத் தெரியாது? எனது உடம்புக்கு ஏற்ற உணவு பக்குவப்படி கொடுப்பது, உடை மாற்றுவது, எல்லாம் அந்த அம்மாதானே! என்னை நேரிடையாக எதிர்க்கத் துணி வில்லாத இவர்கள் அந்த அம்மா மீது குறை கூறுகிறார்கள்.
- 'விடுதலை' 13.2.1972
«««
என் உடல் நலத்தைப் பேணவும் எனக்குப் பின் கழகத்தை நடத்திச் செல்லவும் சொத்துக்களைக் காக்கவும் நம்பிக்கை யான வாரிசு மணியம்மை. (25.9.1949)
«««
மணியம்மையார் இயக்கத் தொண்டுக்கென்றே என்னிடம் வந்த இந்த 20 ஆண்டில் எனது வீட்டு வசதிக்கான பல காரியங்களுக்கு, தேவைக்கு உதவிசெய்து வந்ததன் காரண மாக என் உடல்நிலை எப்படியோ என் தொண்டுக்குத் தடையில்லாமல் நல்ல அளவிற்கு உதவி வந்ததால், என் உடல் பாதுகாப்பு, வீட்டு நிர்வாகம் ஆகியவற்றில் எனக்குத் தொல்லை இல்லாமல் இருக்கும் வாய்ப்பை அடைந்தேன்.
- விடுதலை 15.10.1962
- விடுதலை நாளேடு,15.3.20
அவசர நிலையை எதிர்த்துப் போர்ப் பிரகடனம்! - மணியம்மையார்
நம் நாட்டுக்குச் "சுதந்திரம்" வந்து 28 ஆண்டுகள் ஆன பிறகும் காட்டுமிராண்டித்தனமான இழிவுச் சின்னமாகக் கருதப்படுகின்ற ஜாதி இன்னமும் ஒழிந்த பாடில்லை. அதற்கு நேர்மாறாக, முன்பைவிடப் புது முறுக்கும், தெம்பும், ஆணி அடித்ததுபோல் உறுதியும், பலமும் கொண்டதாகவே அது நமது "சுதந்திரத்தின்" கீழ் ஆகியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
வறுமையும், ஏழ்மையும் ஒழியாமல் இன்னமும் இருந்து வருகிறது. மக்களில் இன்னும் நூற்றுக்கு அறுபது பேர் எழுதப் படிக்கத் தெரியாத தற்குறிகளாகவே இருக்கின்றனர்.
சோஷியலிசம் என்பது ஆட்சியின் கொள்கை யென்று பிரகடனப்படுத்தப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் அது இன்னும் கானல்நீர் வேட்கையாகவே இருந்து வருகிறது.
ஆனால், இன்றைய நிலை என்ன?
இரண்டு அவசர காலச் சட்டங்கள், பத்திரிகை "சென்சார்" எல்லாம் செய்து பொருளாதாரத் திட்டங்களை அறிவிக்கும் நிலை இருக்கிறது என்றால், இது மகிழ்ச்சி அடையக் கூடிய நிலையா? அல்லது வெட்கமும், வேதனையும் அடையத்தக்க நிலையா?
நம்மைப் பொறுத்தவரையில் நாம் நம் தந்தை வகுத்த வழியிலிருந்து சிறிதும் தவறி நடக்காமலும், பாதையைக் கெடுக்காமலும் ஒரே ஒழுங்காகவே வைத்துக் கொண்டு சீரான நேர்வழியில் நடைபோட்டு வருகிறோம். அதிலும் நமது நிலையிலிருந்து சிறிதும் பிறழாமல் ஒரே தன்மையில், அறிவையே மூலதனமாகக் கொண்டு அமைதியாக நடந்து வருகின்றோமே தவிர, அழிவுப் பாதையிலோ அவசர அலங்கோல முடிவையோ நாம் கைக் கொள்ளவில்லை. தந்தை அவர்கள் நமக்குப் பயிற்றுவித்த அறிவுக் கொள்கை தன்னம்பிக்கை, மான உணர்ச்சி, துணிவு, எதற்கும் விட்டுக் கொடாமை. இவற்றையே பின்பற்றி வருவதால் இன்றுள்ள அரசியலில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பான நிலையால் நமக்கு எந்த விதத்திலும் அதிர்ச்சியோ, பயமோ ஏற்படுவதற்கு வழியில்லை. இவற்றை எல்லாம் நாம் எதிர்பார்த்தவர்கள். அத்தோடு இவை கட்டாயம் என்றாவது ஒருநாள் வந்துதான் தீரும். அப்போதுதான் நமது நாட்டிற்கு, மக்களுக்கு ஒரு விடிவு ஏற்படும் என்று நம் மதிப்புக்குரிய பெரியார் அவர்கள் என்றென்றும் சொல்லி வந்தார்கள். இன்று அதற்கு ஏற்றாற்போல் வந்துள்ளதே தவிர வேறில்லை. அய்யா அவர்கள் சொல்லியவை நம் நினைவிலிருந்து இன்னும் மறைந்து விடவில்லை. "அதாவது நமது நாட்டை யார் ஆளு கிறார்கள் என்பது முக்கியமல்ல. எவர் ஆண்டாலும் எனக்குக் கவலை இல்லை. இங்கு பல ஆயிரமாண்டு களாக இருந்து வருகின்ற அமைப்பை மாற்றி, நம்மை எல்லாம் மனிதனாக மதித்து, மானமுள்ள, அறிவுள்ள மனிதர்களாக ஆக்கி, ஜாதியற்ற ஒரு சமுதாயமாக மாற்றி, மனிதத் தன்மையோடு ஆண்டால் அதை நான் முழுமனதோடு வரவேற்பேன். அந்த நிலையைக் கொண்டுவரும் எவரையும் ஆதரிப்பேன். இன்னும் சொல்லப் போனால் அவர்களுக்கு முழுமையாகக் கடமைப்பட்டுத் தொண்டு செய்வேன். அதனால் எனக்கு யார் ஆளுகிறார்கள்; எவர் வருகிறார்கள் என்ற கவலை கிடையாது" என்று துணிந்து தைரியத்தோடு முழங்குவார். அதே நிலையைத்தான் அவருக்குப் பின்னும் நமது இயக்கம் கைக்கொண்டு செயல்பட்டு வருகிறது.
அதனால்தான் நாம் நமது நிலையிலிருந்து சற்றும் பின் வாங்கவோ, தளர்நடை பயிலவோ இல்லாத துணிந்த முடிவுடன் நமது சுயமரியாதைப் பாதையில் நடந்து வருகிறோம். அதனால்தான் மக்களுக்கு நன்மை செய்வதை எந்தப் பிற்போக்குக் கும்பல் எதிர்த்தாலும் அதனை அரசு அடக்கி, ஒடுக்கி உண்மையான - தீவிர மான திட்டங்களைச் செயல்படுத்துவதை எப்போதுமே வரவேற்கவே செய்திருக்கிறோம். தந்தை அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே தீட்டிய திட்டங்கள்தான் இன்று புதியதாகத் தாங்கள் கண்டுபிடித்த திட்டமாக 20 அம்சப் பொருளாதாரத் திட்டத்தைப் பிரதமர் திருமதி. இந்திராகாந்தி அம்மையார் அவர்கள் சொல்லி இருந்தாலும், அதைப்பற்றி நமக்கு ஒன்றும் கருத்து மாறுபாடு இல்லை. எப்படியோ இப்பொழுதாவது எந்த ரூபத்திலாவது நமது அருமைத் தலைவரின் எண்ணங்கள் வெளிப்படுத்தப்படுகிறதே என்று நமக்கு மகிழ்ச்சிதான். இந்தத் திட்டத்தில் பெரும் பகுதியை தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆளுங்கட்சியான தி.மு.க. தந்தை வழியைப் பின்பற்றி நடைமுறையில் கொண்டு வந்து பலவற்றை நிறைவேற்றி வந்திருக்கிறது, வருகிறது. அதைப் பாராட்ட நம் மக்களின் மனநிலை பண்பட்டு வரவில்லை. இப்பொழுது அம்மையார் அறிவித்தவுடன் ஏதோ ஒரு புதிய கண்டுபிடிப்புக் கண்டுபிடித்தது போன்று அதிசயப்படத்தக்க விதத்தில் பாராட்டி வரவேற்கிறார்கள். இருக்கட்டும். அதைப்பற்றி நமக்கு ஒன்றும் பொறாமையோ, வருத்தமோ கிடை யாது. என்றாலும் ஒரு விதத்தில் நாமும் ஏற்றுக்கொள்ளக் காரணமாய் இருப்பது நமது கருத்தின் எதிரொலியாய் இருப்பதனால்தான். இன்னும் எவ்வளவோ செய்ய வேண்டி இருக்கின்றது.
அவற்றையும் துணிந்து செயல்படுத்திட முன் வந்தால் நம்மைப்போல மகிழ்வடையக் கூடியவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். ஆனால், அவற்றைச் செய்ய மகா தைரியம் வேண்டுமே! அம்மையார் அவர்கள் அதில் கை வைப்பார்களா? நினைத்துத்தான் பார்ப்பார்களா? அந்தக் காரியம் அதாவது மதத்தில் கை வைத்து மக்களுக்கு அறிவுப் பாதையை விளக்கி அமல்படுத்த வந்தால் இந்த நாட்டு மதவாதிகள் ஒரே நாளில் அம்மையாரை இருக்கும் இடம் தெரியாமல் செல்லாக் காசாக்கி விடுவார்களே.
"இந்த நாட்டிலே ஜாதி கிடையாது, மதம் கிடையாது, ஜாதியாலும், மதத்தாலும் மக்களை இழிவுபடுத்தி, வருகின்ற தன்மைகள் ஒழிக்கப்படும். சூத்திரன், பறையன், பஞ்சமன், பார்ப்பனர் என்கின்ற வருணாசிரம முறைகளை அடியோடு ஒழித்துவிட்டு எல்லோரும் மனிதர்கள் - ஜாதி, சமயமற்ற மனிதர்கள் - அவர்கள் நல்வாழ்விற்காகவே இருக்கின்றேன்; அதைச் செய்வது தான் எனது முக்கியக் குறிக்கோள்" என்று சொல்லட்டும். அன்றைக்கே நம்மைப் பொறுத்தவரையில் எல்லா வற்றையும் மூட்டை கட்டி மூலையில் போட்டுவிட்டு அம்மையாருக்குக் கொடி தூக்கிப் புகழ்பாடிப் வரவேற் கிறோம். எங்களுடைய இலட்சியமே அதுதான். மனிதன் மனிதனாக மதிக்கப்பட வேண்டும்; மானமுள்ள, அறிவுள்ள மனிதனாக வாழவேண்டும். செய்ய முன் வருவார்களா அல்லது சொல்லவாவது துணிவார்களா? அதுதானே இன்று அவசரமாக அவசியமாகச் செய்ய வேண்டியவை. அதை விட்டுவிட்டு எதை எதையோ சொல்லி இந்த நிலைக்கு நாட்டை ஆளாக்கி விட்டார்கள். அவசர நிலையைப் பிரகடனம் செய்து பல தலைவர்களை எல்லாம் உள்ளே வைத்து, பத்திரிகை உரிமைகளையும் பறித்துப் பரிதாபத்திற்குரிய நிலையை ஏற்படுத்தி, மக்களை வாய்மூட வைத்து அமைதியைக் காத்து விட்டோம் என்று நினைத்து மகிழ்கிறார்கள்.
இந்த அவசர நிலைப் பிரகடனச் சட்டத்தை அம்மையார் அவர்கள் திரும்பப் பெற்று மக்களுக்கு உரிமைகளைத் தரவேண்டும் என்றும், கைது செய்யப்பட்டுக் காவலில் வைத்திருக்கும் தலைவர்களை எல்லாம் விடுதலை செய்ய வேண்டுமென்றும், நமது ஆளும் கட்சியாக இருக்கும் தி.மு.க. அரசும், ஸ்தாபன காங்கிரசும் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி இருக்கிறார்கள்.
நமது நிலையை நாம் "விடுதலை" வாயிலாக முன்பே தெளிவுபடுத்தியுள்ளோம்.
தமக்கு மாறான கருத்தையே யாரும் சொல்லக் கூடாது என்பது அரசியலிலோ அல்லது அறிவு வளர்ச்சிக் கண்ணோட்டத்திலோ சரியான ஒன்றாகாது!
அந்தப்படிப் பார்க்கையில் தமிழ்நாட்டில் அவசர நிலைப்பிரகடனம் பற்றி இப்படி ஒரு கருத்துக் கிளம் புவது குறித்தும், சிந்தனை பரவலாக நான்கு கோடி மக்களிடமும் ஏற்பட்டிருப்பது குறித்தும், திருமதி. இந்திராகாந்தி அம்மையார் அவர்கள் எப்படிக் கருதுகிறார்கள் என்பதைவிட, இங்குள்ள நாட்டு மக்கள் நிலையும், நினைப்பும், எண்ணங்களும் எப்படி இருக்கின்றன என்பதே அரசினர் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
பிரதமர் அம்மையார் அவர்கள் சில நாள்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், "இந்தியாவில் நடப்பது போலீஸ் ராஜ்யமல்ல; ஒரு கட்சி ஆட்சியாகவும் ஆகிவிடவில்லை. இன்னமும் ஜனநாயக முறைப்படிதான் காரியங்கள் அவசர நிலைப் பிரகடனம் உள்பட நடைபெறுகிறது" என்று கூறியிருப்பதாகச் சில பத்திரிகைகளில் படித்தேன்.
அது உண்மையென்றால் மாற்றுக் கருத்தும், யோசனையும் கூறி வேண்டுகோள் விடுவிக்கும் பொறுப்பு வாய்ந்த மக்கள் தலைவர்களையும், இயக்கங்களையும், ஏடுகளையும் தமக்கு எதிரானவை என்று அவர் கருதத் தேவையில்லை என்பதுதான் தர்க்கரீதியான விடையாகும்.
நம் கழகம் அரசியல் கட்சியைச் சார்ந்தது அல்ல; சமுதாயத்தில் "பிராமணன் - சூத்திரன்", "மேல்-கீழ்" என்ற பிறவி பேதத்தையும், இழிவையும், அடியோடு ஒழித்து, எல்லா மக்களும் ஒரு நிலை என்று கூறி கடவுள், சாஸ்திர, சம்பிரதாயப் பழக்க வழக்கக் குருட்டு நம்பிக்கையிலிருந்து மக்கள் விடுபட இடையறாது பாடுபட்டு வரும் ஒரு சமுதாய அறிவு இயக்கமாகும்.
இந்த இயக்கத்தின் வளர்ச்சியால் தங்கள் வாழ்வு பாதிக்கப்பட்டு விட்டது. ஆதிக்கம் அடியோடு சரிந்து விட்டது என்று கருதுகிற பார்ப்பனர்களும், பணக்காரர்களில் சிலரும், இந்த இயக்கம் தமது சுகபோக வாழ்வுக்கு எங்கே இடையூறாக இருக்குமோ என்று அஞ்சும் சில பதவி வெறியர்களும் இந்தச் சந்தர்ப்பத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி நம்மை ஒழித்து விடலாம் என்று துணிந்து முயற்சி எடுத்து அவசர அவசரமாகப் பதைப்புக் காட்டக்கூடும்.
பலாத்காரத்திலோ, ரகசிய முறைகளிலோ பொதுச் சொத்தை - பொது ஒழுக்கத்தை நாசம் செய்யும் கிளர்ச்சி முறைகளிலோ சிறிதும் நம்பிக்கையற்ற மாபெரும் மக்கள் இயக்கமாகிய நமது இயக்கத்தையும் ஒழித்துவிடலாம் என்று கருதி அந்தப்படி காரியங்கள் ஒருவேளை நடந்தால் அதுகுறித்து நாம் அனைவரும் கவலைப்படாமல் நமது இலட்சியத்திற்குத் தரப்பட வேண்டிய கடுமையான விலைகளில் அதுவும் ஒன்று என்று கொள்வோமே தவிர, நம் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் 60 ஆண்டுக் காலம் பாடுபட்டு உழைத்து அவர்களால் முடிக்காமல் விட்டுச் சென்ற எஞ்சிய பணிகளை முடிக்கும்வரை நமக்கு எந்த இடர்ப்பாடு நேரிடினும் பின்வாங்க மாட்டோம்! அது உறுதி! உறுதி!! முக்காலும் உறுதி!!!
சுத்த வீரன் எப்பொழுதும் வீரனாக மடிவானே தவிர, கோழையாக மடிய மாட்டான்.
அதுபோலவே, தமிழ்நாட்டில் ஒழுங்கு அமைதி நிலையைக் காத்து ஏழை, எளிய மக்களுக்கும், தாழ்த்தப்பட்டு, ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் பலகோடி மக்களுக்கும் புதுவாழ்வு தரும் தி.மு.க. ஆட்சியையும் ஒழித்துக் கட்ட இதுதான் தருணம் என்று எதிரிகள் கருதினால் அது அவர்களுக்கு ஒரு தற்காலிக வெற்றி மயக்கமாகத்தான் இருக்க முடியுமே தவிர, உண்மை வெற்றியாகவோ, சரித்திரச் சாதனையாகவோ இருக்கவே முடியாது.
தமிழ்ப் பெருமக்களுக்கும், நம் இயக்கத் தோழர்களுக்கும் இப்போது நம் அய்யா அவர்கள் இல்லையே என்ற ஏக்கப் பெருமூச்சு மிகவும் தீவிரமாக இருப்பதை நன்கு உணர முடிகிறது.
அய்யா இன்று இல்லை என்றாலும், அவரால் உருவாக்கப்பட்ட உணர்வு அணையா விளக்காக ஒளி வீசிக் கொண்டு இருக்கிறது.
அவ்வொளியில் நிற்கும் நம்மை எந்த இருளும் கவ்வாது. எதையும் திடசித்தமுடன் உறுதியோடு ஏற்க என்றும் தயாராவோம்!
ஜாதியற்ற சமுதாயம் - மூடநம்பிக்கையற்ற சமுதாயம் காண்பதைத் தவிர, நமக்கு வேறு இலட்சியம் இல்லை என்பது நமது துணிவும், தெளிவும் தரும் கொள்கைக் கவசங்களாகும்.
தோழர்களே! எந்தத் தியாகத்திற்கும் எந்த நிலையிலும் தயாராக இருங்கள். தந்தை நமக்குப் போதித்த பாடம் இது ஒன்றுதான்!
கோழைகளாக வாழாமல் மனிதத் தன்மை மேம்பாட்டிற்காக நாம் நம்மை முழுமையாக ஆளாக்கிக் கொள்வோம் என்று ஒவ்வொருவரும் உறுதி கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.
வாழ்க பெரியார்!
வளர்க அவர்தம் அறிவுக் கொள்கை!
(அன்னை மணியம்மையார் அவர்கள் எழுதிய தலையங்கம்)
- "விடுதலை" (8.7.1975)
இராமசாமி, இராமநாதன் இலங்கை விஜயம்
27-12-1931 - குடிஅரசிலிருந்து...
திருவாளர்கள், ஈ.வெ.இராமசாமி அவர்களும் எஸ். இராமநாதன் எம்.ஏ.பி.எல், அவர்களுமாக அய்ரோப்பா முழுவதையும் சுற்றிவருவதன் பொருட்டு சென்ற 13-12-1931 அன்று சென்னையினின்றும் அம்போய்சி என்னும் பிரஞ்சுக்கப்பலில் பிரயாணமாகிப் போகிறவழியில் கொழும்பு துறைமுகத்தில் 16-12-1931 மாலை 4 மணியளவில் இறங்கினார்கள். அஃது பொழுது ஜனாப் பி. எம். ஷாஹுல்ஹமீது அவர்கள் சந்தித்து இருவரையும் மோட்டாரில் ஏற்றிக்கொண்டு கொழும்பு நகரில் பிரதான இடங்களுக்கெல்லாம் அழைத்துச்சென்றார். இராமசாமி வேண்டுகோளுக்கிணங்கி புத்தமதக்கோவில்களையும் காண்பித்துக் கொண்டு நேரே தம் வியாபாரஸ்தலத்துக்கு அழைத்துவந்து சம்பாஷித்துக் கொண்டிருந்து விட்டு போட்டோ படம் பிடிக்கப்பட்டு அன்று இரவில் இராமசாமிக்கு வழியனுப்பு உபசாரம் செய்யும் பொருட்டு ஜனாப் பி.எம்.ஷாஹுல் ஹமீது அவர்களின் மீரான்மேன்ஷன் பங்களாவில் ஓர் சிற்றுண்டிவைபவம் நடத்தப்பெற்று இராமசாமிக்கு வழியனுப்பு உபசாரம் ஜனாப் எஸ்.எம். ஷேகப்பா அவர்களின் தலைமையின் கீழ் அதி விமரிசையாக நடந்தேறியது. அது சமயம் திருவாளர்கள் ஈ.வெ. இராமசாமி அவர்களும், இராமநாதன் அவர்களும் தங்கள் மேனாடுசெல்லும் நோக்கத்தைபற்றியும், சுயமரியாதை இயக்க கொள்கையை பற்றியும் 1 மணிநேரம் விளக்கி சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். அதன் பின் ஒ.கே. முஹிதீன் ஸாஹிபவர்களின் வந்தனோபசாரத்தோடு கூட்டம் இனிது முடிவுற்றது. நிற்க, திரு. இராமசாமி அவர்கள் கொழும்பில் இறங்கியதெல்லாம் சில கடிதங்கள் எழுதவேண்டிய காரியத்தினிமித்த மேயன்றி யாரையும் சந்திக்கவோ அன்றி பிரசங்கங்கள் புரியும் நோக்கமாகவோவன்று. என்றாலும் அவர்கள் கொழும்பில் இறங்கிய செய்தி கணநேரத்தில் பரவி விட்டது. கொழும்பிலுள்ள இந்திய சுயமரியாதைச் சங்கத்தின் ஆதரவில் திரு. எஸ். ஆர். முத்தையா அவர்களின் தலைமையில் கிரின்பாத்தி லுள்ள லேடி சிஸ்டர் சர்ச்சில் ஒரு பாராட்டுக் கூட்டம் கூடியது. அது போது இரண்டு தலைவர்களுக்கும் இந்திய சுயமரியாதைச் சங்கத்தாராலும், இலங்கை இந்திய சங்கத்தாராலும், இராமனாதபுரம் ஜில்லா ஆதிதிராவிட மகாஜன சங்கத்தாராலும், மேற்படி ஜில்லா ஆலம்பட்டு ஆதிதிராவிட அய்க்கிய சங்கத்தாராலும் சுயமரியாதை வீரரும் குடி அரசு ஏஜண்டுமான திரு. எஸ். பரமசிவம் அவர்களாலும், இராமநாதபுரம் ஜில்லா செம்பனூர் ஆதிதிராவிட அபிவிர்த்திச்சங்கத்தாராலும், மலையாள சுயமரியாதைச் சங்கத்தாராலும் செல்வரசன் கோட்டை ஆதிதிராவிட சங்கத்தாராலும், இன்னும் பல பிரபலஸ்தர்களாலும் மாலைகள் சூட்டி வரவேற்புப்பத்திரங்கள் தனித்தனியே வாசித்துக் கொடுக்கப்பட்டது. மேற்படி பத்திரங்களுக்கு இரண்டு தலைவர்களும் தக்க பதில் அளித்த பின் சுமார் 2 மணி நேரம் இயக்கக் கொள்கைகளைப்பற்றியும், தாழ்த்தப் பட்டவர்களின் நிலையைப்பற்றியும், இன்னும் பல அரிய விஷயங்களைப்பற்றியும் சொற்பொழிவாற்றினார்கள். பின் சுயமரியாதைக்காரர்களின் நீண்ட பிரிவுபசாரத்தோடு நள்ளிரவு 12 மணி சுமாருக்கு கப்பலை அடைந்தார்கள். இக்கூட்டத்திற்கு சுமார் 1500 பேர்கள் ஆண்களும் பெண்களும் விஜயம் செய்திருந்தார்களென ஒரு நிருபர் எழுதுகிறார்.
- விடுதலை நாளேடு 14.3.20
இரண்டு ஆச்சாரியார்கள்
20.12.1931, குடிஅரசிலிருந்து...
தனி உரிமையும் மதமும் வேண்டுமாம். (தேசியத் துரோகி)
மத நடுநிலைமையின் ஆபத்து
நாசிக்கில் உள்ள கோயிலில் பிரவேசிக்கவும், ராமகுண்டம் என்னும் தீர்த்தக் குளத்தில் குளிக்கவும் தீண்டாதார்கள் சத்தியாக்கிரகம் செய்து வருகின்றனர். இச்சத்தியாக்கிரகத்தை வைதிக இந்துக்கள் தடுத்து வருகின்றனர். இதைப் பற்றி இந்திய சனாதன வைதிகசபைத் தலைவர், திரு. காசி கிருஷ்ணமாச்சாரியார் என்பவர் ஒரு அறிக்கை விடுத்திருக்கிறார். அவ்வறிக்கையில்,
நாசிக்குக்காக மிஸ்.மேயோவை மறுபடியும் இந்தியாவின் மீது கிளப்பி விட்டு விடாதீர்கள். சனாதன தர்மிகளும், பஞ்சமர்களும் சுயநலக்காரர்களின் வார்த்தைகளைக் கேட்டு ஒருகாரியத் தையும் செய்யவேண்டாமெனக் கேட்டுக்கொள்ளுகிறேன். சத்தியாக்கிரகத்தின் நோக்கம், சத்தியத்தைக் காப்பதேயாகும். ராமகுண்ட தீர்த்தம் பொதுச் சொத்தல்ல. அது பொது சொத்தாக இருந்தால் தான், தீண்டாதார்களும் ஜாதி இந்துக்களைப் போல அதில் உரிமை கொண்டாட முன் வரலாம். காங்கிரசும் மற்றும் பொறுப்புள்ள ஸ்தாபனங்களும், மூலாதார உரிமைகளை ஒப்புக் கொண்டிருக்கின்றன. சொந்த அதிகாரமுள்ள சொத்துக்களையும், தர்ம ஸ்தாபனங்களையும், பொதுச் சொத்துக்களாக மாற்ற மேற்படி தாபனங்கள் ஒப்புக்கொள்ள முடியாது என்ற விஷயங்கள் காணப்படுகின்றன. இதிலிருந்து காங்கிரஸ் மத நடுநிலைமையின் ஆபத்தை உணரலாம். எந்தக் கோயில்களும், தரும ஸ்தாபனங்களும், ஒருவர் அதிகாரத்திலேயோ, அல்லது ஒரு கமிட்டியின் அதிகாரத்திலேயோ அடங்கிதான் இருக்கும். அப்படிப்பட்ட ஸ்தாபனங்களில் மற்றவர்கள் பிரவேசிக்க உரிமையில்லை என்பதே திரு. ஆச்சாரியாரின் வாதம். இதுதான் காங்கிரசின் நடு நிலைமைக்கும் வியாக்கியானம். இந்நிலைமையில் தீண்டாதவர்கள் எப்படி பொது ஸ்தாபனங்களில் சமத்துவம் பெற முடியும்?
மிஸ். மேயோவைக் கிளப்பி விடவேண்டாம் என்று திரு.ஆச்சாரியார் கூறுகிறார். யார் மிஸ்.மேயோவைக் கிளப்பிவிடுகிறவர்? ஒரு குளத்தில் தீண்டாதவர்களும் குளிப்பதற்காகத் தடைகூறும், திரு ஆச்சாரியார் போன்றவர்கள் மிஸ். மேயோவைக் கிளப்பி விடுகிறார்களா? அல்லது குளத்தில் குளிக்க எங்களுக்கும் பாத்தியம் வேண்டும் என்று கேட்கின்ற தீண்டாதவர்கள் கிளப்பி விடுகிறார்களா? நன்றாய் யோசித்துப் பாருங்கள். சத்தியாக்கிரகம் என்றால் சத்தியத்தைக் காப்பாற்றுவதாம்! எது சத்தியம்? நாசிக்கோயிலில் ஜாதி இந்துக்கள் மாத்திரம் செல்ல உரிமையிருப்பது சத்தியமா? ராமகுண்டம் என்னும் குளத்தில் ஜாதி இந்துக்களுக்கு மாத்திரம் குளிக்க உரிமையிருப்பது சத்தியமா? இவைகளில் தீண்டாதார்கள் பிரவேசிக்காமலிருப்பது சத்தியாமா? திரு, ஆச்சாரியார் கருத்துப்படி தீண்டாதவர்கள், தீண்டாதவர்களாகவே ஒன்றிலும் சுதந்திரம் இல்லாமலிருப்பதும், ஜாதி இந்துக்கள் வழக்கமாகத் தங்களுக்குள்ள ஏகபோக உரிமைகளை அனுப வித்துக் கொண்டிருப்பதுந் தான் சத்தியம் என்று கருதுகிறார் எனத்தெரிகிறது.
இது சத்தியமானால், இதற்காக சத்தியாக்கிரகமானால், இதை மற்றொரு வருணாசிரம தருமம் என்பதில் என்ன தவறு இருக்கிறது? ஆகையால் இத்தகைய சத்தியம் வேண்டவே வேண்டாம். இன்னும் எத்தனை மேயோக்கள் வந்தாலும் வரட்டும், அதைப் பற்றிக் கவலையில்லை வேண்டுவது எல்லாருக்கும், எல்லா விடங்களிலும் சமவுரிமை தான்.
கோயில்களும், தரும ஸ்தாபனங்களும், சிலருடைய ஆதிக்கத்திலிருந்தாலும் அவைகள் பொதுச்சொத்துக்கள் தான். அவைகளைப் பொதுச் சொத்துக்களாக ஆக்கித் தேசத்திற்குப் பயன்படச்செய்ய வேண்டுமென்பது தான் நமது கொள்கை. இதற்குத் தற்கால நிலைமையில் சத்தியாக்கிரகம் சிறிதும் பயனளிக்காது.
மதத்தைக் காப்பாற்ற வேண்டும்
நமது சனாதன வைதிக நண்பர், திரு.எம்.கே.ஆச்சாரியார் அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில்,
அரசாங்கத்தார், மதவிஷயங்களில் நடுநிலைமை வகிக்க வேண்டும் என்பதை ஞாபகத்தில் வைத்திருப்பார்கள் என்றும், இதைப் பற்றி வட்டமேஜை மகாநாட்டில் வற்புறுத்த வேண்டிய அவசியமில்லை. என்றும் லார்டு இர்வின் இந்தியாவை விட்டுப் புறப்படுமுன் பாரத தர்ம மகா மண்டலத்திற்கு உறுதி கூறியதாகத் தெரிகிறது. ஆனால், சாரதா சட்டம் சம்பந்தமாக அவர் நடந்து கொண்டதிலிருந்து இவ்வுறுதிமொழி பயனற்ற தாகும். சாதாரண அய்ரோப்பியர்களுக்கும், நவீன நாகரிகத்தில் உள்ள இந்தியர்களுக்கும் மதம் என்பதன் கருத்து வைதிக இந்துக்களுக்கு இருப்பது போல் தோன்றுவதில்லை, மதத்திற்கும் கல்யாணம் போன்ற சமுக விஷயங்களுக்கும் சம்பந்தம் இருக்கக்கூடாது என்று அவர்கள் கூறுகின்றனர். இவர்கள் எது மத விஷயம்? எது மத விஷயம் அல்ல வென்பதில் தங்கள் அபிப்பிராயத்தை வைதிக இந்துக்களின்மேல் பலவந்தமாகச் சுமத்த அதுமதிக்கக் கூடாது. இதே மாதிரி காங்கிரசும் மத சுயேச்சை அளிப்பதாக உறுதி கூறியிருப்பதும் பிரயோஜனமற்றதாகும். காந்திக் கட்சியினர் ஆலய சத்தியாக்கிரகம் என்று கூறுவதைக்கொண்டும், தீண்டாமையை ஒழிப்பதாகக் கூறுவதைக் கொண்டும் மத விஷயத்தில் அவர்கள் நடு நிலைமை வகிக்கும் விதம் விளங்குகின்றது.... மேல் நாடுகளில் மதத்தையே ஒழித்து விட்டனர். இந்தியாவிலும் ஒழிக்க முயலுகின்றனர். அதற்கு நாம் இடங் கொடுக்கக் கூடாது என்று கூறியிருக்கிறார். இதிலிருந்து சீர்திருத்த விஷயத்தில் வைதிகர் களின் மனப்பான்மை எப்படி இருக்கிறது என்ற விஷயத்தைத் தெளிவாய் அறிந்து கொள்ளலாம்.
அரசாங்கத்தார் சாரதா சட்டத்திற்கு ஆதரவு அளித்து விட்டதனால், அரசாங்கம் மதநடுநிலைமை வகிக்கவில்லையாம். கல்யாணம் போன்றவைகள் மத விஷயங்களாக அப்படியானால், சாப்பிடுவது, குளிப்பது, பல்விளக்குவதும் ஒன்றுக்குப் போவது, வெளிக்குக் போவது முதலியவைகளும் மதவிஷயங்கள் தான் போலும். இவைகளுக்கும் தான் சாதிரங்களில் விதிகள் கூறப்படுகின்றன. மற்ற வருணத்தாருடைய சொத்துக்கள் எல்லாம் பிராமணருக்கே சொந்தமானது என்பது பார்ப்பனர்களின் மிருதிக்கொள்கை, ஆகையால் இதுவும் மத விஷயம் ஆனதால், பார்ப்பனர்கள் யார் வீட்டில் கொள்ளையடித்தாலும், யாருடைய சொத்துக்களைக் கவர்ந்தாலும் அவர்களைப் பிடிக்கவோ விசாரிக் கவோ, தண்டிக்கவோ பொது ஜனங்களுக்கும், அதிகாரிகளுக்கும் அரசாங்கத்திற்கும் அதிகாரமில்லை என்றும் சொல்லாம். இதுவும் மத விஷயந்தானே! இவற்றில் எல்லாம் அரசாங்கத்தார் நடுநிலைமை வகிக்க வேண்டும் என்று சொல்லுவது போலத்தான் சமுகச் சீர்திருத்த சட்டங்களுக்கு அரசாங்கத்தார் ஆதரவு அளிக்கக்கூடாது என்று சொல்லுவதும், ஆதரவு அளித்தால் அரசாங்கத்தார் மதத்தில் தலையிட்டு விட்டார் என்று சொல்லுவதும் ஆகும்.
அடுத்தபடியாக, மதம் என்பதன் கருத்து வைதிக இந்துக்களுக் குக் தோன்றுவது போல் நவீன நாகரிகமுடையவர்களுக்குத் தோன்றுவதில்லையாம். இது உண்மைதான் நவீன நாகரிகமும் ஆராய்ச்சியும், அறிவும் உடையவர்களுக்கு மதம் இன்னது சமுக விஷயம் இன்னது என்று தெரியும். ஆகையால் அவர்கள் சமுகச் சீர்திருத்தஞ் செய்வதற்குப் பின்வாங்கமாட்டார்கள். வைதிக இந்துக்கள் பகுத்தறிவற்றவர்கள். சுருங்கவும் விளங்கும்படியும் கூறவேண்டுனால் முட்டாள்கள் ஆகையால் அவர்கள் சமுக விஷயங்களையும் மதம், மதம் என்று சொல்லிக்கொண்டு ஒரு சீர்திருத்தத்திலும் மனமில்லாமல் பழைய இருட்டு உலக்திலேயே வசிக்கவிரும்புவார்கள். ஆகையால் வைதீகர்கள் அபிப்பிராயத்தை அலட்சியம் செய்தால்தான் சமுகம் முன்னேற்றம் அடையமுடியும். திரு. ஆச்சாரியார் போன்றவர்களின் அபிப்பிராயத்தால் சமுகம், சமத்துவமும், விடுதலையும் பெறமுடியாது என்று சொல்லுகிறோம்.
அடுத்தபடியாக, காங்கிரஸ் ஒரு காரியமும் செய்யாமல் இருக்கும்போதே காங்கிரசைச் சேர்ந்த சிலர் வாயளவில் ஆலய சத்தியாக்கிரகத்தை ஆதரித்துப் பேசும்போதே காங்கிரஸ்காரர்கள் தீண்டாமை போகவேண்டுமென்று மேடைக் கூச்சல் இடும்பொழுதே நமது திரு. ஆச்சாரியார் அவர்கள் மத நடுநிலைமை தவறிவிட்டது என்று கூச்சலிட ஆரம்பித்து விட்டார். உண்மையிலேயே காங்கிரஸ் இவ்வேலைகளைச் செய்ய எண்ணுமானால் நிச்சயமாக நமது திரு. ஆச்சாரியார் போன்ற வைதிகர்கள் அதை ஒழித்து விடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
அடுத்தபடியாக, மேல் நாட்டில் மதம் ஒழிந்து விட்டதாம், நமது நாட்டில் அப்படி ஒழியாமல் பாதுகாக்க வேண்டுமாம். மதத்தைப் பாதுகாக்க வேண்டுமென்றால் பிராமண ஆதிக்கம் நிலை நிற்க வேண்டுமென்றுதானே அர்த்தம். இனியும் மதத்தைக் கொண்டு ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது என்று எச்சரிக்கிறோம். பகுத்தறிவும், கஷ்டமும், பொருளாதாரச் சங்கடமும் அதிகப்படுகின்றகாலத்தில் மதம் தூள்தூளாகப் பறக்க வேண்டியதைத் தவிர நிலைக்க முடியாது. ஆகையால் திரு. ஆச்சாரியார் வீண் கனாக் காண வேண்டாமென்று மீண்டும் எச்சரிக்கின்றோம்.
- விடுதலை நாளேடு 14 3 20


