சனி, 15 டிசம்பர், 2018

சென்னை அய்.அய்.டி.யில் உணவுக்கூடம் - கைகழுவும் இடங்களிலும் சைவ - அசைவத்துக்குத் தனித்தனி இடங்களாம்! மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு

நவீன 'சேரன்மாதேவி' உருவாகிறதா?




சென்னை, டிச.15 சென்னை அய்.அய்.டி.,யில் உணவுக்கூடம், கைகழுவும் இடங்களில்கூட சைவம் - அசைவம் என்ற பேரில் தனித்தனி இடங்களாம். பெரியார் - அம்பேத்கர் வாசகர் வட்டம் இதுகுறித்துப் புகார் தெரிவித்துள்ளது. மாணவர்கள் கிளர்ச்சிக்கும் தயாராகி விட்டனர்.

சென்னை அய்அய்டியில் ஜாதித் தீண்டாமைக் கொடுமை தலைவிரித்தாடி வருகிறது. பார்ப்பனர்களின் ஆதிக்க வெறியில்மத்தியஅரசின்மனிதவள மேம்பாட்டுத்துறையின்கீழ் இயங்கி வரும் கல்வி நிறுவனத்தில் பேராசிரியர்கள் பணி நியமனங்களில்  முறையாக இடஒதுக்கீடு கொள்கை நடை முறைப்படுத்தப்படுவதில்லை. பேராசிரியர்கள் பணியிடங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான பணியிடங் களில் மண்டல் குழு பரிந்துரையின்படி 27 விழுக்காடு பின்பற்றப்படவில்லை. மத்திய அரசின் கல்வி நிறுவனமே சமூகநீதிக்கு எதிராக  உள்ளது.

உயர்கல்வி பயிலும் பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு குறிப்பாக வகுப்பு வாதங்களை எதிர்க்கின்ற பெரியார் -- அம்பேத்கர் வாசிப்பு வட்டத்தின் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் எழுச்சியுடன் எதிர்த்து போராடும் நிலை ஏற்பட்டு வந்துள்ளது. மாட்டிறைச்சி விருந்து நடத்திய மாணவர்கள்மீது தாக்குதல்கள் நடந்துள்ளன. உயர்கல்வி மாணவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன.

1960 ஆம் ஆண்டுக்குமுன் அமெரிக்காவின் நிலை...




இந்தியா 58 ஆண்டுகள் பின்தங்கியுள்ளதோ...!


ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான ஏபிவிபியின் வன்முறைகள் அவ்வப் போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

தற்பொழுது உணவுக்கூடத்தில் மரக்கறி உணவு உண்பவர்கள் என்றும், இறைச்சி உணவு உண்பவர்கள் என்றும் பாகுபடுத்திடும் போக்கு திணிக்கப்பட்டு, தீண்டாமை கடைப்பிடிக்கின்ற அவல நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

பெரியார் அம்பேத்கர் வாசிப்பு வட்டம் கண்டனம்

சென்னை அய்.அய்.டி. தொழில்நுட் பக்கல்லூரியில் உணவுக்கூடத்தில் தீண்டாமை பின்பற்றப்படுவதாக பெரியார் அம்பேத்கர் வாசிப்பு வட்டத்தை சேர்ந்த அக்கல்லூரி மாணவர்கள் (APSC)) புகார் தெரிவித்துள்ளனர்.

சென்னை அய்.அய்.டி. தொழில்நுட்பக் கல்லூரியின் உணவுக் கூடத்தில் சைவ உணவு மற்றும் அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்குதனி நுழைவுவாயிலும் அதேபோல வெங்காயம், பூண்டு, உருளைக்கிழங்கு போன்ற பொருட்களை கலக்காத உணவுகளை சாப்பிடு பவர்களுக்கு வேறொரு வழியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதேபோலசைவ,அசைவஉணவு சாப்பிடுபவர்களுக்குத் தனியாக கைக் கழுவும் இடமும் மற்றும் வாஷ் பேஷி னும் அமைக்கப்பட்டுள்ளதாக பெரியார் அம்பேத்கர் வாசிப்பு வட்டம் புகார் தெரிவித்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டில் இதே போன்ற ஒரு திட்டத்தை சென்னை அய்.அய்.டி. நிர்வாகம் அமல்படுத்தியது. அதற்கு மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக பெரியார் அம்பேத்கர் வாசிப்பு வட்டம் அதை கடுமையாக எதிர்த்தது. இதனால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் மீண்டும் உணவுக் கூடத்தில் தீண்டாமையை கடைப் பிடிக்கும் வகையில் அசைவ, சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு தனித்தனி நுழைவுவாயிலை சென்னை அய்.அய்.டி. நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது. இதற்கான அறிவிப்புகளும் உணவுக்கூடத்துக்குச் செல்லும் கதவுகளில் ஒட்டப்பட்டுள்ளது.

உணவு சாப்பிடுபவர்களில் வேறு பாடு பார்ப்பது மட்டுமில்லாமல், சைவ மற்றும் அசைவ உணவுகளை சமைப்பதற்கு தனித்தனி பாத்திரங்கள் பயன்படுத்தப்படுவதாக அங்கு படிக்கும் மாணவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சென்னை அய்அய்டி நிர் வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கிவரும்கல்வி நிறுவனமாகிய மும்பை அய்.அய்.டி.யிலும் இதேபோன்ற அவலநிலை கடந்த ஜனவரியில் ஏற்பட்டு மாணவர்களின் எதிர்ப்பு வெடித்துக்கிளம்பியது.

தற்பொழுது அதே அய்.அய்.டி. நிறுவனத்தின் சென்னைக் கல்லூரியில் மரக்கறி உணவு உண்பவர்கள், இறைச்சி உண்பவர்கள் என்று மாணவர்களிடையே பாகுபாட்டைத் திணித்து, கல்வி பயிலும் ஆய்வு மாணவர்களின் கவனத்தை திசைதிருப்பி, வகுப்புவாதத்தைத் திணிக்கும் முயற்சியில் அய்அய்டி நிறுவனம் இறங்கியுள்ளது வேதனைக்குரியது.

- விடுதலை நாளேடு, 15.12.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக