வெள்ளி, 21 டிசம்பர், 2018

தமிழர் தலைவர் பற்றி தினமலர் நாளேடு

டிசம்பர் 2, 1933 இதே நாளில் அன்று




கி.வீரமணி: கடலூர் மாவட்டம், முதுநகரில், சி. எஸ். கிருஷ்ணசாமி - மீனாட்சி தம்பதிக்கு, 1933, டிச., 2இல் பிறந்தார்; இவரது இயற்பெயர், சாரங்கபாணி. தன், 10ஆவது வயதில், ஈ.வெ. ரா.,வின் கொள்கைகளை, மேடைகளில் பேசத் துவங்கினார். 11ஆவது வயதில், சேலத்தில் கூடிய, நீதிக் கட்சி மாநாட்டில், ஒரு தீர்மானத்தின் மீது உரையாற்றினார். 1944 ஜூலை, 29இல்,  ஈ.வெ.ரா.,வை சந்தித்தார்.

தன், 12ஆவது வயதில், காரைக்குடியில் நடந்த, ராமநாதபுர மாவட்ட முதலாவது, திராவிடர் கழக மாநாட்டில் உரையாற்றினார். 17 வயதிற்குள், அவர், 227 நிகழ்வுகளில் பங்கேற்றார்; 16 மாநாடுகளில் கலந்து கொண்டார்.

தன், 23ஆவது வயதில் முதுகலை வகுப்பை முடித்து, முதல் மாணவராக தேர்ச்சி பெற்று தங்கப் பதக்கம் பெற்றார். 27ஆவது வயதில் சட்டக் கல்வியை முடித்ததுடன், தேசப்பட எரிப்புப் போரிலும் ஈடுபட்டு, ஈ.வெ.ரா.,வுடன், தடுப்புக் காவல் சட்டப்படி கைதானார்.

விடுதலைக்கு பின், தி.க.,வின் பொதுச்செயலரானார். 29ஆவது வயதில், 'விடுதலை' பத்திரிகையின் நிர்வாக ஆசிரியராகவும், 38ஆவது வயதில், ஆங்கில மாத இதழின் ஆசிரியராகவும் பொறுப்பேற்றார். 43ஆவது வயதில், 'மிசா' சட்டத்தில் கைது செய்யப் பட்டு, 358 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டார். 1998இல், 'ஈ. வெ. ரா., பிஞ்சு குழந்தைகள்' இதழை துவக்கி, அதன் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார்.

கடந்த, 1962இல், 'விடுதலை' நாளிதழ் ஆசிரியரானார். நான்கு பக்கங்களுடன் சென்னையில் இருந்து வந்து கொண்டிருந்த, நாளிதழ், இன்று எட்டு பக்கங்களுடன் சென்னை, திருச்சி என, இரண்டு பதிப்புகளில் வெளி வந்து கொண்டிருக்கிறது.

தி.க.,வின் பொதுச்செயலராக, முழு நேரமும் கட்சிப் பொறுப்பை கவனிக்கும் விதத்தில், ஈ.வெ.ரா.,வால், 1962இல் நியமிக்கப் பட்டவர். 2003ஆம் ஆண்டு முதல், தி.க.,வின் தலைவராகப் பொறுப்பேற்று, செயல்படுகிறார்.

பெரியார் மணியம்மை பல்கலை உள்ளிட்ட, ஏராளமான கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். மருத்துவம், இலக்கியம், கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில், இவர் பங்காற்றி வருகிறார். பகுத்தறிவு சம்பந்தமான, எண்ணற்ற நுல்களையும், ஹிந்து சமயத்திற்கு எதிரான கருத்துகள் கொண்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

ராமர் படம் எரிப்பு, ரயில் நிலையங்களில் ஹிந்தி எழுத்துக்களை அழித்துப் போராட்டம் நடத்தியது உள்ளிட்ட பல்வேறு போராட்டங் களில் ஈடுபட்டதற்காக, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

'பிராமணர்கள், மனிதர்களாக தான் இருக்க வேண்டும்; தங்களை, மற்றவர்களை விட, உயர்ந்தவர்களாக கருதக் கூடாது. தாங்கள் தான் உயர்ந்தோர் என, பார்ப்பனர்கள் உரிமை கொண் டாடக் கூடாது; சமுதாயத்தில் அவர்கள் ஆதிக் கம் செலுத்திக் கொண்டிருக்கக் கூடாது. தி.க., என்பது, பார்ப்பன எதிர்ப்பு இயக்கம்' என, எப்போதும் முழங்குபவர், வீரமணி. அவர் பிறந்த தினம், இன்று. (2.12.2018)

நன்றி: தினமலர், 2.12.2018, பக்கம் 8

- விடுதலை ஞாயிறு மலர், 8.12.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக