செவ்வாய், 17 மார்ச், 2020

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு விழா

மகளிர் சிறப்புக் கருத்தரங்கம், அஞ்சல் தலை - மலர் -குறுந்தகடு வெளியீடு, படக்கதை நூல் அறிமுகம்

தமிழர் தலைவர் கி.வீரமணி தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்ற

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு விழா

சென்னை,மார்ச்17, அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு விழா சென்னை வேப்பேரி பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நேற்று (16.3.2020) திங்கள்கிழமை மாலை எழுச்சியுடன் நடைபெற்றது.

மகளிர் மட்டுமே பங்கேற்ற

மகளிர் சிறப்புக் கருத்தரங்கம்

மாலை 4 மணிக்கு தொடங்கி நடைபெற்ற மகளிர் சிறப்புக் கருத்தரங்கத்தில் மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்செல்வி வரவேற்புரையாற்றினார். காப்பாளர் க.பார்வதி, கு.தங்கமணி, ந.தேன்மொழி, சி.கிருஷ்ணேசுவரி, பசும்பொன்செந்தில்குமாரி, வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, சி.வெற்றிசெல்வி, பூவை செல்வி, வி.வளர்மதி, சி.ஜெயந்தி, மு.ராணி ஆகியோர் முன்னிலை  வகித்தனர்.

திராவிட இயக்க வீராங்கனைகள் எனும் பொதுத்தலைப்பில் வழக்குரைஞர் ம.வீ.அருள்மொழி  ‘இந்தி எதிர்ப்புக் களத்தில்’ தலைப்பிலும், ஓவியா அன்புமொழி ‘பெண்ணுரிமைக் களத்தில்’ தலைப்பிலும், சே.மெ.மதிவதனி ‘ஜாதி ஒழிப்புக் களத்தில்’ தலைப்பிலும், வழக்குரைஞர் பா.மணியம்மை ‘சுயமரியாதைக் களத்தில்’  தலைப்பிலும், பேராசிரியர் மு.சு.கண்மணி  ‘சமூக நீதிக் களத்தில்’ தலைப்பிலும் கருத்தரங்க உரையாற்றினார்கள்.

திராவிட இயக்க வீராங்கனைகள் படத்தை எழுத்தாளர் ஓவியா திறந்துவைத்து சிறப்புரையாற்றினார்.

திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக் குரைஞர் அ.அருள்மொழி கருத்தரங்கத்துக்கு தலைமை வகித்து சிறப்புரையாற்றினார்.

கருத்தரங்கில் பங்கேற்றோருக்கு சிறப்பு

கருத்தரங்கில் பங்கேற்ற வழக்குரைஞர் அ.அருள்மொழி, எழுத்தாளர் ஓவியா ஆகியோருக்கு பொதுக்குழு உறுப்பினர் சி.வெற்றிசெல்வி பயனாடை அணிவித்து இயக்க வெளியீட்டினை வழங்கி சிறப்பு செய்தார். வழக்குரைஞர் ம.வீ.அருள்மொழி, ஓவியா அன்புமொழி ஆகியோருக்கு தென்மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கிருஷ்ணேசுவரி இயக்க வெளியீட்டினை வழங்கி சிறப்பு செய்தார். பேராசிரியர் மு.சு.கண்மணி, வழக்குரைஞர் பா.மணியம்மை, சே.மெ.மதிவதனி ஆகியோருக்கு வடக்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் தேன்மொழி இயக்க வெளியீட்டினை வழங்கி சிறப்புசெய்தார்.

பொன்னேரி செல்வி இணைப்புரை வழங்கினார்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மற்றும் சிறப்பு விருந்தினர்கள், கழகத்தின் முன்னணி பொறுப்பாளர்கள் பலரும் மேடையின் முன் வரிசையில் அமர்ந்திருக்க மகளிர் மட்டுமே பங்கேற்ற சிறப்புக் கருத்தரங்கம் எழுச்சியுடன் நடைபெற்றது. மகளிர் சிறப்புக் கருத்தரங்கத்தைத் தொடர்ந்து அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு விழா திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர்ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தே.செ.கோபால், வழக்குரைஞர் சு.குமாரதேவன், இரா.வில்வநாதன், தாம் பரம் ப.முத்தையன், புழல் த.ஆனந்தன், எண்ணூர் வெ.மு.மோகன், நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன் முன்னிலையில் கழகத் துணைப்பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி வரவேற்புரையாற்றினார்.

பெரியார் களம் இறைவி இணைப்புரை வழங்கினார்.

அன்னையார் படத்திறப்பு

அன்னை மணியம்மையார் படத்தை திராவிடர் கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் திறந்துவைத்து தமதுரையில் அன்னை மணியம்மையார் குறித்த பல்வேறு வரலாற்று பூர்வத் தகவல்களை சுருக்கமாக வழங்கினார்.

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா சிறப்பு நிகழ்வாக அஞ்சல் தலை வெளியீட்டு விழா நடைபெற்றது. அன்னை மணியம்மையார் உருவம் பொறிக்கப்பட்ட அஞ்சல் தலையை வி.அய்.டி.பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன் வெளியிட்டார். பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.  முன்பதிவு செய்துகொண்டவர்கள் மட்டுமல்லாமல் மேடையிலும் ரூ.500 தொகை கொடுத்து ஆர்வமுடன் ஏராளமானவர்கள் அன்னை மணியம்மையார் உருவம் பொறிக்கப்பட்ட அஞ்சல் தலை தொகுப்பைப் பெற்றுக்கொண்டனர்.

அஞ்சல் தலையை  வெளியிட்ட வி.அய்.டி. பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன் அவர்களின் கல்வி தொண்டறப்பணிகளை எடுத்துரைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து இயக்க வெளியீடுகளை அளித்து சிறப்பு செய்தார்.

வேந்தர் கோ.விசுவநாதன்  ஆற்றிய சிறப்புரையின் தொடக்கத்திலேயே தான் எந்த கட்சியிலும் உறுப்பினராக இல்லை என்றும், என்றைக்கும் சுயமரியாதைக்காரன் என்றும் பிரகடனப்படுத்தினார் பார்வையாளர்களின் கரவொலி அடங்க சிறிது நேரம் ஆனது.

அன்னை மணியம்மையார் பொறுப்பேற்ற காலக்கட்டத்தில் பெரியார் திடல் கட்டடப்பணி களில்  பெரும் பங்காற்றிய பொறியாளர் என்.எஸ்.ஏகாம்பரம் அவர்களை அறிமுகப்படுத்திய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அவருடனான தமது பழைய நினைவுகளை எடுத்துக்காட்டி, அவருக்கு பயனாடை அணிவித்து இயக்க வெளியீடுகளை வழங்கி சிறப்பு செய்தார்.

பெரியார் திடலில் தாம் பணியாற்றிய போது அன்னை மணியம்மையார் அன்புள்ளம், துணிவு, உறுதிப்பாடு, ஆளுமைத்திறன், தொலைநோக்கு சிந்தனைகள் குறித்து பொறியாளர் ஏகாம்பரம் பேசுகையில் மிகவும் உருக்கமாக அன்னையாரின் பிரிவாற்றாமையை வெளிப்படுத்தினார்.

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா மலரை திமுக துணைப்பொதுச்செயலாளர் மேனாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் வெளியிட்டார். சென்னை மண்டல திராவிடர் கழகத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி பெற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து ஏராளமானவர்கள் ரூ.200 அளித்து மலரை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடமிருந்து பெருமகிழ்வுடன் பெற்றுக்கொண்டனர்.

அன்னை மணியம்மையார் தொண்டுள்ளம், தொண்டறப்பணிகள் குறித்து கவிப்பேரரசு வைரமுத்து, பாவலர் அறிவுமதி, கவிஞர் கலி.பூங்குன்றன், கவிஞர் யுகபாரதி ஆகியோர் எழுதிய பாடல் வரிகளுக்கு இசை அமைப்பாளர் தாஜ்நூர் இசைஅமைத்து, அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழாவில் ‘தூற்றலைத் தோற்கடித்த வீராங்கனை’ இசைக் குறுந்தகடு வெளியிடப்பட்டது.

குறுந்தகட்டினை  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வெளியிட, மேனாள் சட்டமன்ற உறுப்பினர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மகளிர் பிரிவுத் தலைவர் தோழர் பத்மாவதி பெற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து ரூ.100 தொகை அளித்து தமிழர் தலைவர் அவர்களிடமிருந்து பலரும் அன்னை மணியம்மையார் குறித்த இசைக் குறுந்தகட்டினைப் பெற்றுக்கொண்டார்கள். இசைஅமைப்பாளர் தாஜ்நூரைப் பாராட்டி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

அன்னைமணியம்மையார் நூற்றாண்டு விழாவில் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் வளர்ந்தவர்கள் தங்காத்தாள் தலைமையில் ரூ.1 லட்சத்தை ஈவெ.ரா.மணியம்மை பவுண்டேஷன் அறக்கட்டளை நிதியாக நன்றியுடன் அளிப்பதாக அறிவித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம்  வழங்கினார்கள்.

கழகத் துணைப்பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி குடும்பத்தினர் ரூ.50ஆயிரம் தொகையை ஈவெ.ரா.மணியம்மை பவுண்டேஷன் அறக்கட்டளை நிதியாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கி மகிழ்ந்தார்கள்.

கும்மிடிப்பூண்டி கழக மாவட்டம் மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் முருகன், மாவட்ட மகளிரணி செயலாளர் மு.ராணி ஆகியோர் அடிமைத்தளையாம் தாலியை மேடையில் தமிழர் தலைவர் முன்னிலையில் அகற்றிக்கொண்டனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மகளிர் பிரிவுத் தலைவர் தோழர் பத்மாவதி சிறப்புரையாற்றினார்.

திமுக துணைப்பொதுச்செயலாளர், மத்திய, மாநில மேனாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் சிறப்புரை ஆற்றினார்.

அன்னை மணியம்மையார் நூற்றாண்டை யொட்டி அன்னையாரின் வாழ்க்கை வரலாறு இயக்க வரலாற்று படக்கதை விடுதலை நாளிதழில்  தொடர்ந்து வெளியானது. அதன் தொகுப்பு தொண்டறத்தாய்  தலைப்பில் நூலாக வெளிவருகிறது. அதனை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிமுகம் செய்துவைத்து, அன்னை மணியம்மையாரின் நூற்றாண்டு தொடக்கம் முதல் நிறைவு விழா வரை தொடர்ச்சியாக அன்னையாருக்கு சிறப்பு சேர்க்கும் வண்ணம் புத்தகங்கள் வெளியீடு, குறுந்தகடு வெளியீடு, படக்கதை நூல் அறிமுகம் என அத்துணைக்கும்  கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் மற்றும் பொறுப்பாளர்களை பாராட்டினார்.

விழா நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நிறைவுரை சிறப்புரை ஆற்றினார். விழா முடிவில் அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

கலந்துகொண்டோர்

விழாவில் கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், மருத்துவர் இராஜசேகரன், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், பேராயர் எஸ்றா சற்குணம், சட்டக்கதிர் ஆசிரியர் வி.ஆர்.எஸ்.சம்பத், கவிஞர் கண்மதியன், த.கு.திவாகரன், பேராசிரியர் ப.காளிமுத்து, பெரியார் மருத்துவக் குழும இயக்குநர் இரா.கவுதமன், மோகனா அம்மையார், தஞ்சை கலைச்செல்வி, அகிலா எழிலரசன், சுதாஅன்புராஜ், பெரியார்செல்வி, பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் இரா.தமிழ்செல்வன், மாநில மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், அமைப்புச்செயலாளர்கள் ஊமை ஜெயராமன், ஈரோடு த.சண்முகம், புதுவை மாநிலத் தலைவர் சிவ.வீரமணி, பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் மா.அழகிரிசாமி, துணைத் தலைவர் அண்ணா.சரவணன், விழுப்புரம் மண்டலத் தலைவர் க.மு.தாஸ், செயலாளர் குழ.செல்வராசு, வேலூர் மண்டலத் தலைவர் சடகோபன், தஞ்சை வழக்குரைஞர் சி.அமர்சிங், திருப்பத்தூர் கே.சி.எழிலரசன், தருமபுரி தமிழ்செல்வன், காரைக்குடி என்னாரெசு பிராட்லா மற்றும் மாநில, மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்கள், மகளிரணி, மகளிர் பாசறை பொறுப்பாளர்கள் உள்பட அனைத்து அணிகளின் பொறுப்பாளர்களும், தோழர்களும் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு விழாவில்  கலந்துகொண்டனர்.

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நினைவு அஞ்சல் தலையினை வி.அய்.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் வெளியிட்டார் - குறுந்தகடு, வரலாற்று நூல் வெளியீடு (16.3.2020)

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு விழாவில் சான்றோர்கள்

உரை கேட்க திரண்டிருந்த பார்வையாளர்கள் (சென்னை பெரியார் திடல், 16.3.2020)

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நினைவு அஞ்சல் தலையினை வி.அய்.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் வெளியிட்டார் - குறுந்தகடு, வரலாற்று நூல் வெளியீடு (16.3.2020)

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு விழாவில் சான்றோர்கள்

உரை கேட்க திரண்டிருந்த பார்வையாளர்கள் (சென்னை பெரியார் திடல், 16.3.2020)


- விடுதலை நாளேடு, 17.3.20

சமஸ்கிருதம் உயிருள்ளதா? -56

குடிஅரசு,  08.09.1940-லிருந்து...

12.3.2020  அன்றைய தொடர்ச்சி

எனவே, ஆரியவர்க்கத்தார் தங்கள் நிலையை உயர்த்த, தங்கள் செல்வாக்கைப் பாதுகாக்க இந்த 20ஆம் நூற்றாண்டிலே, இவ்வாறு பச்சையாக சரித்திரத்திற்குப் புறம்பானதும், தங்களுக்கு அதைக்குறித்து சிறிதும் அறிவோ, ஞானமோ, இல்லாததுமான காரியத்தை சொல்லத் தயங்கவில்லையானால், அந்நாளில் சூதுவாதற்ற நம்மவர்களை - திராவிடர்களை என்னென்ன சொல்லி ஏய்த்திருக்க வேண்டும் என்று எண்ணிப் பார்க்கக் கோருகிறோம்.

இதுவரை மூர்த்தியார் தங்கள் சமஸ்கிருத மொழியின் பெருமைகளைக் குறித்துக் கூறியதைக் கவனித்தோம். இனி தோழர் சி. ராஜகோபாலாச்சாரியார் என்ன சொல்லுகிறார் என்பதை சிறிது கவனித்தால் ஆரிய ஆதிக்கத்தை நிலைநிறுத்த எத்தகைய முறையைக் கையாளுகிறார்கள் என்பது புலனாகும் என்று கருதுகின்றோம். சென்ற மாதம் 31ஆம் தேதியில் திருநெல்வேலி எம்.டி.டி. இந்து காலேஜ் சமஸ்கிருத ஆரம்ப விழாவில் தோழர் சி. ராஜகோபாலாச்சாரியார் “சமஸ்கிருதத்தின் பெருமை களைக் குறித்துப் பேசுகையில் சமஸ்கிருதம் இறந்துபோன பாஷையென்று சொல்வதைக் கண்டிக்கிறேன். சமஸ்கிருதம் உயிருள்ளது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

சமஸ்கிருதம், ஆரிய மொழி (இது நாம் சொல்லும் பெயரல்ல. ஆங்கில இலக்கணாசிரியர்களே சமஸ்கிருதம் ஆரிய வர்க்கத்தைச் சேர்ந்தது என வகுத்திருக்கின்றனர்) இறந்துபோன மொழியென்றும், ஆரிய துவேஷிகளோ, பார்ப்பன துவேஷி களோ, சுயமரியாதைக்காரர்களோ, ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களோ சொல்லுவதாக யாரும் எண்ணவேண்டாம். மொழி ஆராய்ச்சியாளர்களே, மொழிக்கு இலக்கணம் எழுதினவர்களே அவ்வாறு  கூறியிருக்கின்றனர். எம்மொழி பழைய எழுத்துச் சுவடியில் அதாவது எழுத்து வழக்கில் மட்டுமிருக்கிறதோ அதற்கு இறந்த மொழியென்றும், எம்மொழி எழுத்து வழக்கிலும் பேச்சு வழக்கிலுமிருக்கிறதோ அதற்கு உயிருள்ள மொழிகள் எனவும், ஆராய்ச்சியாளர் வகுத்திருக்கின்றனர். ஆங்கிலத் தில் அதைக் குறித்து எழுதியிருப்பதை  அப்படியே வாசகர்களுக்கு சமர்ப்பிக்கிறோம். அதாவது,

“A living language is one which is used in common speech. A language which has ceased to be spoken but is found in writings of the Past is a Dead Language. Sanskrit and Latin are dead Languages " என எழுதப்பட்டிருக்கிறது.

இறந்த மொழிக்கு உள்ள லட்சணம், இன்னது இந்த லட்சணத்தை உடைய மொழிகள், இறந்த மொழிகள் என்று சொல்லுகையில், “நான் அவ்வாறு சமஸ்கிருதத்தை இறந்த மொழியென்று சொல்லுவதைக் கண்டிக்கிறேன். சமஸ்கிருதம் இறந்த மொழியன்று” என்று சொல்லி காரணம் கூறாமல் ஆத்திரப்பட்டுக் கண்டிக்க முன்வருவதை அறிவுலகம் ஏற்றுக்கொள்ளுமா? என்று கேட்கிறோம்.

இதுவரை சமஸ்கிருதம் இறந்த மொழி என்று சொல்லப்பட்டு வந்திருக்க, அதைப்பற்றிச் சிறிதும்கவலை கொள்ளாது, இன்று மட்டும்  இவர் இவ்வாறு ஆத்திரங்கொள்ளக் காரணம் என்ன என்றால், திராவிடர்கள் விழிப்படைந்து விட்டார்கள், சமஸ்கிருதம் இறந்த மொழியென்று சொல்லி வருவது மறைக்கப்படாவிட்டால், “இறந்த மொழியாகிய சமஸ்கிருதம் இந்நாட்டிற்கு என்ன அவசியம்? அதற்கு ஏன்  ஒவ்வொரு  உயர்தரக் கலாசாலைகளிலும் தனிப் பண்டிதரும் அதற்கு கரிக்குலத்தில் அதாவது பாடத் திட்டத்தில் தனி இடமும் கல்லூரிகளில் சமஸ்கிருத பேராசிரியர்களும் என்று கருதி அதை ஒழித்து விடுவார்கள்” என்ற அச்சத்தைத் தவிர, வேறு என்னவாயிருக்க முடியும் என்று கேட்கிறோம்.

அதோடு நின்றார் இல்லை ஆச்சாரியார். சமஸ்கிருதம் தெரியாத இந்தியனுக்கு எந்நாட்டிலும் மதிப்பில்லை எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இது எவ்வளவு விஷமுள்ள ஆணவமான பேச்சு என்பதை எண்ணிப்பார்க்கக் கோருகிறோம். இந்தியன் என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறவன் உலகத்தினரால் மதிக்கப்படவேண்டும் எனக் கருதினால்தானே சமஸ்கிருதம் தெரிந்திருக்கவேண்டும். அதனால்தான் திருவாரூர் ஜஸ்டிஸ் மாநாட்டில் திராவிடன் தன்னை இந்தியன் என்று சொல்லிக்கொள்ளக் கூடாதென்றும், தன்னை இந்து என்று சொல்லிக்கொள்ளக் கூடாதென்றும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருக்கிறது.

எனவே, ஆச்சாரியார் வாதப்படி இந்தியன் என்று எவன் தன்னைச் சொல்லிக் கொள்ளுகிறானோ, எவன் தன்னை உலகோர் மதிக்க வேண்டுமென எண்ணுகிறானோ அவன்தான் சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டுமென்பதும், திருவாரூர் மாநாட்டு தீர்மானப்படி, திராவிடர் என்று சொல்லிக் கொள்கிற வனுக்கு சமஸ்கிருதம் தெரியவேண்டிய அவசிய மில்லையென்பதும் நன்கு விளங்கும்.

இதிலிருந்தாவது ஆரியவர்க்கத்தினர், தங்கள் மொழி யைக்  குறித்து எவ்வளவு உயர்வு கொண்டிருக்கின்றனர் என்பதையும், தமிழ் மொழியையோ அல்லது வேறு மொழி களையோ குறித்து எவ்வளவு தாழ்வு கொண்டிருக்கின்றனர் என்பதையும், எண்ணிப் பார்க்கவே கோருகிறோம். கடைசியாக, ஆரியத்திற்கு இந்நாட்டிலே சாவுமணி அடித்தாய் விட்டது என்பதை ஆரியவர்க்கத்தினர் நன்கு உணர்ந்து கொண்டுவிட்டனர் என்பதையும், அதன் காரணமாக சரித்திரத்திற்கும், உண்மைக்கும் புறம்பானதும் பொருத்தமற்றதுமான காரியங்களைச் சொல்லி எப்படியாவது ஆரிய ஆதிக்கம் நிலைக்க அருமுயற்சிகள் எடுத்து வருகிறார்கள் என்பதையும், இப்பொழுதே திராவிடர்கள் விழிப்பாயிருந்து மக்களுக்கு அவ்வப்போதே உண்மையை விளக்கி, சரித்திர ஆதாரங்களை எடுத்துக்காட்டி ஆரிய சூழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டுமென்பதும் விளங்குகிறது அல்லவா? என்று கேட்கிறோம்.

இதைச் செய்ய ஒவ்வொரு திராவிடரும் முன் வருவார்களாக

- விடுதலை நாளேடு 17 3 20

வெள்ளி, 13 மார்ச், 2020

கழகத் தலைவர் அன்னை மணியம்மையார்

கழகத் தலைவர் அன்னை மணியம்மையார்

அருமைத் தோழர்களே!

தாய்மார்களே!!

தந்தை பெரியார் அவர்களால் ஏற் படுத்தப்பட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவு இயக்கம் என்று எந்தப் பெயரால் அழைத் தாலும் அதுதான் இன்று ஓரளவு நாம் மனி தத் தன்மை அடைந்ததற்கு அடிகோலிட்ட தாகும் என்று சொன்னால் மிகையாகாது.

சுயமரியாதை உணர்ச்சி நாட்டு மக்களி டத்தில் சற்று வலுப்பெற்ற பிறகுதான் நம்மை நாம் யார் என்று உணரவும், தமிழ் மக்களை இழிவுபடுத்தி வருகின்ற வருணா சிரமக் கொள்கைகளைத் தகர்த்தெறியவும், ஜாதியற்ற சமுதாயமாக ஆக்க முயற்சிகள் மேற்கொள்ளும் துணிச்சலையும், ஆரியக் கடவுள்களையும், அதன் ஆபாச சின்னங் களையும் அடியோடு உருத்தெரியாமல் சுக்கு சுக்காக உடைத்து நொறுக்கும்படியான ஒரு துணிவையும் உண்டாக்கி இருக்கிறது என்பது மட்டும் அல்ல, அதுதான் சுத்த ரத்த ஓட்டமுள்ள தமிழரின் தலைசிறந்த கடமை யாகும் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியவர்களாய் - இருக்கின் றோம்.

எப்பக்கம் நோக்கினும், எத்துறையினை எடுத்துக்கொண்டாலும், தென்னாட்டவரை மட்டம் தட்டுவது, இழிவுபடுத்துவது, அவர் கள் தலை எடுக்காமல் செய்ய என்னென்ன வழி வகைகள் உண்டோ அவைகளைச் செயலாக்குவது, இதுதான் இன்றைய நம் பிறவி எதிரிகளாகிய பார்ப்பனர்களின் நோக்கமும், வடநாட்டாரின் கருத்தும், முயற்சியும் ஆகும். நம் உயர்வுக்கும், மேம்பாட்டிற்கும் சிறிதேனும் இடம் கொடுக் காமல் இருப்பதற்கெல்லாம் முக்கிய கார ணம், ஆதிக்கம், தலைமை அதிகாரங்கள் அனைத்தும் வடவர் கைப்பிடியில் வைத் துக் கொண்டு இருப்பதும், பெரும்பாலான தமிழகப் பார்ப்பனர்கள் (இங்கு, அவர்க ளின் ஆதிக்கம் உத்தியோகத் துறையில் ஒழிக்கப்பட்டபின்) வடக்கில் சென்று பெரிய பெரிய உயர் பதவிகளில் அமர்ந்து அவர்களுக்கு உற்ற துணையாக இருந்து தங்களுக்கே உரித்தான சூழ்ச்சித் திறனா லும், தந்திரத் தன்மையாலும் வடவர்களைத் தம் கைவசப்படுத்தி, தங்கள் நல்வாழ்விற் கும், தம் இனத்தின் முன்னேற்ற உயர்வுக்கும் என்னென்ன அவசியமானதும், தேவையா னதுமான காரியங்களோ அவைகளை எல் லாம் எவ்விதத் தங்கு தடையின்றி ஒற்று மையாக இருந்து நிறைவேற்றிக் கொள்வ துடன், சமய சந்தர்ப்பங்கள் நேரிடும் போதெல்லாம் நம்மினத்தவர்களை அழுத்தி ஒழிக்க முயற்சி எடுத்துக்கொண்டு முழு மனதுடன் ஒன்று போல் எல்லோரும் அதே வேலையாய், கவனமாய் இருந்து வருகிறார்கள்,

தமிழ் மக்களாகிய நமக்கோ அத்தகைய மனப்பான்மை சிறிதேனும் இல்லாமல் இருப்பது எவ்வளவு இழிவு என்பதை நாம் சற்றும் நினைத்துப் பார்த்ததில்லை. அந்த ஒற்றுமை, ஒத்த கருத்து அந்த இனத்திற்கு இருக்கின்ற அளவில் நமக்குக் கடுகு அளவுகூட கிடையாது; வருவதே இல்லை; சிந்திப்பதும் இல்லை; கவலைப்படுவதும் இல்லை என்று அடிக்கடி நம் தந்தை பெரியார் அவர்கள் எடுத்துச் சொல்லிச் சொல்லி நமக்கு உணர்ச்சியை ஊட்டி வருவார். அவரின் அயராத அத்தகைய முயற்சியின், பாடுபட்டதன் பலன் முழு வதும் நாம் அடையவில்லை என்றாலும், நினைத்துப் பார்த்துச் சரி என்று உணரும் அளவிற்கு இன்று வந்துள்ளோம் என்று சொல்வதில் தப்பில்லை என்றே நினைக் கிறேன்.

இனிமேல் நம் இனத்தின் மீதும், சமுதாய வளர்ச்சியின்மீதும் முழுக்கவனம் செலுத் துதல் மிக மிக அவசியம் என்பதை நாம் உணரவேண்டும். தம் வரையிலும் பெரு மையும், மதிப்பும் இருந்தால் போதும் என்று எண்ணுவதாலும், ஒருவரையொருவர் கவிழ்ப்பதாலும், தகாத வார்த்தைகளால் தூற்றுவதாலும், பொறாமையும், அழுக் காறும் கொண்ட ஒற்றுமையற்றவர்களாய் இருப்பதாலும்தான் எதிரிகளின் சூழ்ச்சிக் குப் பெரும்பாலும் நாம் பலியாகிவிட நேர்ந்து விடுகின்றது.

உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோ மானால், இன்றைய தி.மு.க. ஆட்சி கட்டிக் காக்க வேண்டிய ஆட்சி என்பதை நாம் மறந்துவிடுகிறோம். இந்த ஆட்சி செய்த நன்மைகள் நம் நினைவில் நிலைத்து நிற்ப தில்லை ; எண்ணிப் பார்ப்பதில்லை. அசல் தமிழர் ஆட்சி, அதோடு பகுத்தறிவுக் கொள்கை கொண்டவர்களால், தந்தைபால் பற்றுக் கொண்டவர்களால் ஆளப்படுகின்ற ஆட்சி,  ஏழை மக்களுக்கு, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பெருவாரி யான நன்மைகள் செய்கிறவர்கள், செய்ய வேண்டும் என்று இன்னமும் எண்ணுகி றவர்கள், அதே வேலையாய் அலைகிற வர்கள், தங்களுக்கு இருந்துவரும் அதிகா ரத்திற்கு உட்பட்ட அளவிற்கு என்னென்ன நன்மைகள் செய்ய வேண்டுமோ அவை களை செய்து வருகிறார்கள் என்றால், மிகையாகாது. அப்படிப்பட்ட ஒரு சிறந்த தமிழர் ஆட்சியைப்பற்றி இன்று பார்ப்பனர் களைவிட குறையும், குற்றமும், சொல்கிற வர்கள், தூற்றுகிறவர்கள், வாய்க்கு வந்தபடி, மனதிற்கு தோன்றியபடி பொய்யும், இல்லா தவற்றைக் கற்பனையாகவும், தனிப்பட்ட முறையிலும் பேசுகிறவர்கள் யார் என்று பார்க்கிறபோது, எல்லாவிதமான நன்மை களும் பெற்று, அனுபவித்து வருகின்ற நம் மக்கள்தான் பெரும்பாலானவர்கள். இதுவே பார்ப்பன ஆட்சியாய், அவர்கள் அடிமைகளாய் ஆளப்படுகிற ஆட்சியாய் இருந்தால் இதே தமிழர்கள் என்று சொல் லப்படுகிறவர்கள்கூட அவர்களுக்கு வெண் சாமரம் வீசிப் போற்றிப் புகழுவார்கள். அத்தகைய குணம் இன்னும் நம்மிடமிருந்து மாறவில்லை. என்றைக்கு அந்த இழிகுணம் நம்மைவிட்டுப் போகிறதோ, என்றைக்கு நாமெல்லாம் ஒன்று என்கிற உணர்வும், எது வந்தாலும் அதை லட்சியம் செய்யாமல் தமிழன் என்றால் ஒரே இனம் என்கிற எண்ணமும் வருகிறதோ அன்றுதான் நாம் உண்மையான மனிதத்தன்மை பெற்ற வர்கள் ஆவதுடன், எதிரிகளும் நம்மைக் கண்டு அஞ்சும்படியான ஒரு நிலைக்கு ஆளாகியவர்களாவோம்.

தலைவர் பெரியார் அவர்கள் நமக்கு அடிக்கடி சொல்லுகின்ற தத்துவமே அது தான். அதை நம் வாழ்வில் உயிர்போல் கருதி, வளர்த்துவர வேண்டியதுதான் நமது எண்ணமாய்ஆசையாய் இருத்தல் வேண் டும். நமது கொள்கையை நாட்டில்-மக்க ளிடத்தில் பரப்பும் முயற்சிக்கு இந்த அரசைப்போல் எந்த அரசு வந்தாலும் வழிவகுக்காது என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது. அய்யாவின் மறைவிற்குப் பின் நமது தமிழக அமைச்சரவை எந்த அளவு அவருக்கு மதிப்பும் மரியாதையும் அளித்திருக்கிறது என்பதை நினைக்கும் போது, உண்மையிலேயே நாம் அவர்க ளுக்கு என்றென்றும் நன்றிக் கடனாற்ற வேண்டியவர்களாய் இருக்க வேண்டும் அல்லவா? பேச்சும் - மூச்சும் - செயலும் இன்று அய்யாவைப்பற்றியே, போகும் இடங்களிலெல்லாம் அவர்கள் பரப்புகின்ற முறை, பேசுகின்ற முறை நம்மை மகிழ்விக் கிறது அல்லவா? இப்படிப்பட்ட ஒரு நிலை எந்த ஓர் ஆட்சி இருந்தாலும் உறுதியாக நமக்கு கிடைக்கவே கிடைக்காது. காரணம், இவர்கள் உண்மையிலேயே தந்தையிடம் பழகிய காரணத்தால் அவர்களால் அதை நீக்க முடியவில்லை என்பது மட்டும் அல் லாமல், உள்ளத்திலேயும் நம் கொள்கைகள் ஆணித்தரமாகப் பதிந்து இருப்பதும் ஒரு காரணமாகும். தாங்கள் இருக்கின்றவரை இனி எந்தவித அதிருப்திக்கு ஆளானாலும் கவலை இல்லை என்று கருதித்தான் துணிந்து பற்பல காரியங்கள் செவ்வனே செய்துவருகிறார்கள். இதன்மூலம் எவ் வளவு பெரிய தொல்லைகளுக்கும், வெறுப் புக்கும் ஆளாக நேரிடுகிறது என்பதைத் தினம் தினம் பத்திரிகையின் வாயிலாக நாகரிகமற்ற முறையில் வருவதைப் பார்க் கிறோமே! அதனால்தான் நாம் இந்த அரசைக் கட்டிக்காக்க நம்மால் முடிந்த அளவு முழு மனதோடு இறங்கிச் செயல்பட வேண்டும் என்று நமது தமிழ் மக்களையும்- கழகத் தோழர்களையும் அன்போடு வேண்டி வருகிறோம்!

நான்கு ஆண்டுகளுக்கு முன்பே அதா வது, நம் அருமைத் தந்தையின் 92ஆவது பிறந்தநாள் மலருக்கு எழுதிய எனது நிலை என்ற தலைப்பில் குறிப்பிட்டுள்ளதை நினைவுபடுத்த விரும்புகிறேன். அறிஞர் அண்ணா மறைந்தவுடன் தி.மு.க. ஆட்சி என்ன ஆகுமோ என்று பயந்து கோபுரம் தாங்கும் பொம்மைபோல் எல்லாப் பொறுப்பும் என் மேலேயே இருப்பதுபோல் நானே நினைத்துக் கொண்டு, எப்படியோ என்று நாம் போய்விடக் கூடாதே, இந்த ஆட்சி நிலைக்க வேண்டுமே என்று கவ லைப் பட்டுக்கொண்டு துறவற ஆசையை மறந்து பெரிய குடும்பஸ்தனைப்போல் கவலை கொண்டு வாழ ஆசைப்பட்டு விட்டேன்; ஆசைப் பட்டாலும் முடிவு சமீபித்துக் கொண்டு வருகிறது; அதற்குள் ஏதாவது செய்தாக வேண்டுமே என்ற பேராசையோடு சற்று தீவிரமான சொற் களை, கருத்து களைத் துணிவாகப் பேசவும், எழுதவும் துவங்கினேன் என்று கூறி யுள்ளார்.

அவரது எண்ணம் என்ன என்பது நமக்குத் தெளிவாக விளங்குகிறது. எப்படி யும் இந்த ஆட்சி நீடிக்க வேண்டும் என்பதில் மிகுந்த கவலையும் அக்கறையும் கொண்டுள்ளார். தனக்கு முடிவு சமீபித்துக் கொண்டே வருகிறது என்பதிலும் கவலை கொண்டு வந்திருக்கிறார். அவர் கவலை கொண்டபடியே அவர் முடிவு முடிந்து விட்டது; ஓர் ஆண்டும் முடியப்போகிறது. இந்நிலையில் அவரது உள்ளுணர்வை உணர்ந்த நாம் நமது கடமை என்னவென்று நினைத்து அதன்படி நடந்து கொள்ள வேண்டியது தான் அவருக்கு உண்மையான பின்பற்றுபவர்களாக, அன்பு செலுத்துப வர்களாக நாம் ஆவோம்.

ஆகவே, அருமைத் தோழர்களே! தாய்மார்களே!! இன்றுள்ள நிலையில் எதிரிகள் ஒரே மூச்சாய் ஒன்று திரண்டு, ஒரே பல்லவியை அதிலும் மக்களுக்கு வெறுப்புணர்ச்சி ஏற்படும் வகையில், உணவுப் பிரச்சினையைக் காட்டி கண்டபடி உண்மைக்கு மாறாகப் பேசியும் எழுதியும் வருகிறார்கள். நாடு பூராவும் உள்ள நெருக்கடியைவிட நாம் எவ்வளவோ மேலாக இருந்தும் அதுவும் இந்த அரசின் விடாமுயற்சியின் பயனாய் சமாளிக்கப்பட் டிருந்த போதிலும் அதைப் பற்றி எல்லாம் ஒரு சிறிதும் சொல்லாமல், மிகைப்படுத்திப் பேசுவதன் நோக்கமே எப்படியும் இவர் களை ஒழித்துக் கட்டுவதற்கு இச்சந்தர்ப் பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்களே தவிர, உண்மையிலே மக்கள்பால் உள்ள பற்றின், அன்பின் காரணமல்ல; பதவி ஆசை அந்த அளவிற்கு அவர்களுடைய அறிவை மழுங்க வைத்துவிட்டது!

நாம் தந்தையின் பகுத்தறிவு வழியில் வந்தவர்கள்; நமக்குப் பகுத்துணரும் பண்பு உள்ளது. அதனால் நாம் நம் கடமையில் துணிந்து இறங்கிவிட வேண்டும்; உண்மை களை மக்களிடத்தில் சொல்லித் தெளிவாக்க வேண்டும்; பொய்யர்களின் புரட்டுகளை அம்பலப்படுத்த வேண்டும். தீவிரப் பிரச் சாரத்தில் நம் தோழர்கள் இறங்கி, ஒவ் வொருவரிடத்திலும் உள்ளதை தெரிவித்து, தெளிவாக்கித் தந்தையின் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டியது தான் நமது முதல் கடமை; அவரது முதலாண்டு நினைவு நாளில் நாம் நம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது - இன்னும் 20 ஆண்டு காலமாவது அய்யாவின் சொற்படி, இந்த ஆட்சி இம் மண்ணை ஆண்டு நம் மக்களை உண்மையான பகுத்தறிவுப் பெட்டகங்களாகவும், ஜாதியற்ற சமுதாய மாகவும், மூடப்பழக்க வழக்கங்கள் ஒழிந்த உயர்ந்த லட்சியங்கள் கொண்ட உயர் சமுதாய மக்களாக ஆக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு முடிக்கிறேன். நம் தோழர் களும் இதையேதான் விரும்புவார்கள் என்பதில் துளியும் அய்ய மில்லை. அரு மைத் தந்தையின் முதலாம் நினைவுநாளை இம்முயற்சிக்கு வெற்றி காணும் நாளாக ஆக்கிக்கொள்வோம்.

- விடுதலை 28.12.1974

- விடுதலை ஞாயிறு மலர், 7.3.20

நீதிக்கட்சிக்குத் தகுந்த காப்பாளர் பெரியாரே

- திருநெல்வேலி ஏ.வி.முத்தையபிள்ளை)

(வாசக நேயர்களே,

ஊன்றிப் படித்துப் பயன்பெற வேண்டிய முக்கியப் பகுதி இது.

இதுபற்றி தங்களது கருத்தினை சுருக்கமாக எழுதி அனுப்புமாறு வேண்டுகிறோம்.

திராவிடர் இயக்கம் - 80 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாடு அரசியல் களத்தின் முக்கிய நிகழ்வுகள் - வரலாறு பற்றிய காலக்கண்ணாடியாக - திராவிடத்தின் தேவைக்கான நுண்ணாடியாக இது அமையும் ஒன்று. இதற்கான தேவை - பயன் - நுகர்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் பெரிதும் வரவேற்கப்படுகிறது. - ஆசிரியர்)

தலைவர்

1. நம் கட்சிக்கு பெரியார் அவர்களே அன்னார் ஆயுள் பரியந்தம் தலைவராக இருக்க வேண்டும். சுமார் 6 மாத காலத்திற்கு முன்பே இந்த நோக்கத்தைக்கொண்ட ஓர் தீர்மானம் தென்னிந்திய நல உரிமைச்சங்க கமிட்டியில் கொண்டுவந்திருப்பதை அநுசரித்து இந்த மாநாட்டில்  (திருவாரூர் மாநாட்டில்) அவர்களையே ஜீவிய தலைவராக இருக்க வேண்டுமென்பதற்குரிய கொள்கையைத் திட்டத்தில் செய்ய வேண்டிய மாறுபாடுகள் செய்து நிறைவேற்ற வேண்டியது முதல் கடமை.

ஆயுள் பரியந்தம் தலைமைப் பதவி வகிப்பதென்னும் கொள்கை, பொதுவாய் ஜனநாயகம் உலவும் நாட்டில் நிராகரிக்கப்பட்டு வந்தாலும், நம் தலைவரின் ஒப்பு உயர்வற்ற தன்மையைச் சீர்தூக்கிப் பார்த்தால், இவர்கள் விஷயத்தில் அக்கொள்கைக்கு மாறாக நடப்பது கெடுதியை உண்டு பண்ணாது.

ஏனெனில் இக்கட்சியில் நடுநிலைமையை வகித்து பிரதி பிரயோஜனம் எதிர்பாராத நிலையும் உள்ளவர்கள் கட்சி பிளவுபட ஏற்படவேண்டுமானால் பணம், கையாடல், பதவி வேட்டையாடல் தான் காரணம்; இப்பேர் வழிகளை கட்டுப் படுத்தி தன்னைப் போன்ற நடுநிலையுள்ள அறிவாளிகளை தேர்ந்தெடுக்கும் சக்தியுள்ளவர்கள் அவர்களே ஆகையால் கட்சியில் பிளவுபடாமல் நீதியை நிலைநாட்டும் குணசீலரும் பகுத்தறிவு வாய்ந்தவர்கள் என்பதும் நாம் எல்லோரும் ஒப்புக்கொள்ள வேண்டியதே என்பது அவர்கள் பகுத்தறிவே கொண்டு சென்ற 20 வருஷ காலங்களாக சுயமரியாதை இயக்கத்தை கையாண்டு நீதிக்கட்சித் தலைவரானார்கள் இது யாவரும் அறிந்த விஷயமே. இயக்கத்தில் ஒவ்வொரு அங்கத்தினரும் பகுத்தறிவைப் போற்றி நீதியை தன் நலம் கருதாமல் கையாள வேண்டுமானால், நம் தலைவரைப் பின் பற்றி நடப்பது தான் நம் கடமையாகும்.

ஏனெனில் நம் தலைவரவர்கள் தனக்கென வாழாப் பிறர் குரியாளர், இந்தியா முழுவதிலுமுள்ள எக்கட்சித் தலைவர்களுக்குமுரிய எவ்வித மேம்பாட்டிலும் ஓர் சிறிதும் குறைபடாதவர், வீரபுருஷர். அறிவு கேள்வி, பேச்சு வன்மை, மனித சுபாவத்தை நிதானிக்கும் புத்தி நியாயமான கொள்கைகளைக் கடைப்பிடித்து நிற்கும் பிடிவாதம், தன் குற்றங்கண்டவிடத்து பொறுமையுடன் ஒப்புக்கொள்ளுதல், எதிரிக்குச் சந்தர்ப்பம் கொடுத்து அவர்களின் கேள்விகளுக்கு அறிவிற்குப் பொருத்தமானதும் எல்லோரும் ஒப்புக் கொள் ளக் கூடியதுமான விடையளித்தல், இன்னும் இதுபோன்ற தலைவராக இருப்பவர்களுக்கு வேண்டிய பல நற்குணங்கள் எல்லாம் ஒருங்கே அமையப் பெற்றவர்களாதலால் இவர்கள் ஆயுள்கால தலைவராக அமைந்தால் அது நம் அதிர்ஷ்டமே என்றுதான் சொல்லவேண்டும். ஆதலால் அவர்களையே ஜீவிய தலைவராக எல்லோரும் ஏகமனதாய்த் தெரிந்தெடுக்கக் கேட்டுக் கொள்கிறேன்.

"தமிழ் நாடு தமிழருக்கே"

2 தமிழ்நாடு தமிழருக்கே என்பது தான் இனி நமது மூலமந்திரமாக இருக்க வேண்டும். திராவிட நாட்டைப் பிரித்து விட்டால் நமக்குண்டான கேடுகள் எல்லாம் சூரிய னைக் கண்ட பனிபோல் நீங்கிவிடும். நம் எதிரிகளையடக்க வேறு எந்த வழியும் தேவையில்லை. தற்போது ஆரியர்கள் முஸ்லிம் பிரிவினையை எதிர்ப்பதெல்லாம் எங்கே திராவிடர்கள் முஸ்லிம்களைப் போல் பிரிந்து விடுவார்களோ என்ற பயத்தினால்தான். இந்து, சுதேசமித்திரன் போன்ற ஆரியப் பத்திரிகைகளில் காணப்படும் முஸ்லிம் பிரிவினை எதிர்ப்புகளெல்லாம் யார் மூலம் அவர்களுக்குக் கிடைக் கின்றன என்று அப்பத்திரிகைகளிலே, பாருங்கள், அநேகமாய் மேற்படி செய்திகளெல்லாம் அவர்கள் "சொந்த நிருபர்கள்" எழுதியதே என்று தெரியவரும். பத்திரிகைகளின் சொந்த நிருபர்கள் எப்படி விஷயத்தைத் திரித்துக் கூறுவார்களென்பது சொல்லாமலே விளங்கும். மேலும் முஸ்லிம் தலைவர்களென்று ஆரியப் பத்திரிகைகளால் விளம்பரம் செய்யப்பட்ட பேர்வழிகளின் நிலைமைகளை அந்த ஊரில் போய் விசாரித்துப் பாருங்கள் அப்பொழுது நன்கு புலனாகும். அப்போலித் தலைவர்களில் மிகுதியானவர்களை வலை போட்டு அரித்தாலும் காணமுடியாது. கண்டாலும், இவர்கள், தலை உடையவர்களாதலால் தலைவர்களென்பதைத் தவிர வேறொன்றும் கண்டுபிடிக்க முடியாது. விஷயத்தை விளக்கிச் சொல்ல வேண்டுமானால் தென்னிந்தியா காங்கிரஸ், ஜில்லா, தாலுகா தலைவர்களில் பலரின் தனிக் கவுரவத்தையும் அவர்கள் பூஸ்திதிகளையும் அவர்களுக்குப் பொது ஜனங்களிடையிருக்கும் மதிப்பையும் பார்த்துக்கொள்ளுங்கள். இவைகளெல்லாம் நமக்கு நன்கு தெரிந்தவைகளே. ஆனால் பத்திரிகைகளில் படிக்கும் வடநாட்டார் இவர்களைக் கண்டார்களானால் தென்னாட்டின் உண்மைத்தலைவர்கள் தானே என்று எண்ணுவார்கள். அதுபோல வடநாட்டிலுள்ள தலைவர்களை, நாமும் நம்பும்படி பத்திரிகை பிரசாரம் நடக்கின்றது. இந்தப் பேப்பரில் முஸ்லிம்லீக் பிரிவினை எதிர்ப்புச் செய்திகள் தவறாமல் வந்து கொண்டி ருக்கின்றது. அதனை அப்படியே விழுங்கிவிடாதீர்கள். அலசிப்பாருங்கள் உண்மை தெரியவரும். முஸ்லிம் பிரிவினை எதிர்ப்பே திராவிட பிரிவினை இல்லாமலிருக்கும்படி செய்வதற்காகத் தான். திராவிடர்கள் பிரிந்தால் ஆரியர்களுக்குக் கதியில்லை என்பது நன்றாய்த் தெரிந்த பயத்தின் மேல் தான், ஆரியர்கள் தங்களைக் காத்துக் கொள்ளும் பொருட்டு சூழ்ச்சிகளெல்லாம் செய்து வருகிறார்கள்.

"தாயை வெட்டுவதா சேயை வெட்டுவதா' என்பனபோன்ற மக்களை மயக்கும் வார்த்தைகளை காற்றில் வீசுகிறார்கள் இவ்வார்த்தைகளில் சிக்காதீர்கள்.

56 மன்னர்கள் ஆண்ட தேசம் எப்படி ஒன்றாயிருக்க முடியுமெனக் கேளுங்கள். இமயமுதல் குமரிவரை ஒன்றாயிருந்த  தெப்போதென்று வினாவுங்கள். பிரிட்டிஷ்காரர் வந்த 150 வருடத்திற்குப் பின் தானே? அதற்கு முன் ஒற்றைவெண் கொற்றக்குடையில் கோலோச்சிய கொற்றவனை சரித்திர பூர்வீகமாகக் காட்டுவீர்களா எனக்கேளுங்கள்.

இக்கேள்விகளைக் கேட்டால் ஆரியர்கள் கண்விழி பிதுங்கும். ஆடு மேய்த்தவர்கள் அரசாளவும் அரசாண்ட வர்கள் ஆடு மேய்க்கவுமாக இருந்த காலம் போய்விட்ட தென்று சொல்லுங்கள், "தமிழ்நாடு தமிழருக்கே தான்" இதனைப் பிரித்தே தீருவோம். முக்காலும் சத்தியம் என்று சொல்லி இன்று முதல் பிரித்துத் தீரும்வரை விடாமுயற்சியுடன் கருமமே கண்ணாயிருந்து பிரிவினை எண்ணத்தை நிறைவேற்றுவோம்.

கட்டுரையாளர் பற்றி...

திருநெல்வேலி ஏ.வி. முத்தைய பிள்ளை அவர்கள் எழுதிய கட்டுரை 19.6.1940 மற்றும் 20.6.1940 இரண்டு நாள்கள் விடுதலையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. சொல்ல வேண்டிய கருத்துகளை வரிசைபடுத்தி 26 விடயங்களை நுட்பமாக வெளிப்படுத்தியிருக்கிறார். திருவாரூர் மாநாடு நடப்பதற்கு இரண்டு மாத காலத்திற்கு முன்பே வெளிவந்த கட்டுரை இது. பெரியாரே நீதிக்கட்சிக்கு நிரந்தரத் தலைவராக இருக்க வேண்டும் என்பதில் தொடங்கி கொள்கை, பத்திரிகை, உறுப்பினர்கள், நிதி, பிரச்சாரம், கொடி, தொண்டர்படை என்று பல செய்திகளை திட்டவட்டமாகத் தெரிவிக்கும் தொலை நோக்குப் பார்வை கொண்ட தரமான கட்டுரை வாசகர்களுக்கு மிகவும் பயனளிக்கும்.

சென்சஸ்

3. சமீபத்தில் நடக்கப்போகும் சென்ஸஸ்ஸில் திராவிட ஆரிய பாகுபாட்டைக் கண்டு திராவிடர்கள் எவ்வளவு  என்று கணக்குத்தெரியும்படி செய்ய கவர்மெண்டாரை, திராவிடர் - ஆரியர் என்ற தலைப்பின் கீழ்குறிக்கும்படி கேட்டுக்கொள்ள வேண்டும்.

தினசரி

4. ஆங்கிலத்திலும், தமிழிலும் ஓர் தினசரி 12 பக்கங்களுக்குக் குறையாமல் செவ்வையாக நடத்துவதற்கு ஓர் ஏற்பாடு செய்ய வேண்டும் இது சரியாய் நடந்தபின் இதேமாதிரி தெலுங்கிலும் ஓர் தினசரி நடத்த வேண்டும்.

அங்கத்தினர்கள்

5. தெ. இ. க. உ. சங்கத்துக்கு ஏராளமான மெம்பர்களைச் சேர்க்க வேண்டும். திராவிடர் ஜனத்தொகை எவ்வளவோ அவ்வளவிலுள்ள ஆண் பெண்களில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களெல்லாம் தெ. இ. ந. உ. மெம்பர்கள் தான் என்ற நிலைக்குக்கொண்டுவர வேண்டும்.

பொது நிதி

6. கட்சிபலத்திற்கும் அபிவிருத்திக்குமாக ஓர் பொதுநிதி திரட்ட வேண்டும். இது பிரபுக்கள் தாராளமாய்க் கொடுப்பதைக் கொண்டு மட்டுமல்லாமல், ஜில்லாக்கள், தாலுகாக்கள் கிராமங்கள் தோறும்  ஙிவீக்ஷீtலீபீணீஹ் சிறீuதீ ஒன்று ஏற்படுத்தி நபர் ஒன்றுக்குக் குறைந்தது 8 அணா வீதம் வசூலித்து பொது நிதியுடன் சேர்த்துக்கொண்டே போக வேண்டும்.

பிரச்சாரம்

7. இங்கிலாந்து முழுவதும் நம் நாட்டில் ஆரியர்கள் நம்மை  எவ்விதம் நடத்துகிறார்களென்பதையும் அதன் காரணத்தையும் தெளிவுபட எடுத்து நன்கு விளக்கிக் காட்டுவதற்கு நம்மிடம் சம்பளம் பெற்ற ஆங்கிலேய விளம்பரக்காரர்களை நியமனம் செய்ய வேண்டும். மற்றும் அவர்களுக்கு ஒத்தாசையாக நம் செலவில் துண்டுப்பிரசுரம் கோடிக்கணக்கில் வினியோகம் செய்ய வேண்டும். நம் நாட்டிலும் இமயம் முதல் குமரிவரை மேலே சொல்லிய செய்தியைப் பரவச்செய்ய வேண்டும்.

- விடுதலை: 19.6.1940

தொடரும்....

வெள்ளி, 06 மார்ச் 2020 

6.3.2020 அன்றைய தொடர்ச்சி)

சொற்பொழிவாளர்கள்

8. நம்மவர்களில் பேச்சு வன்மையுள்ள வாலிபர்களைப் பொறுக்கி எடுத்து அவர்களைக் கொண்டு நம் கட்சியின் நோக்கத்தையும் ஆரியர்களாலுண்டாகும் கெடுதியையும் அதிலிருந்து நாம் மீண்டால் நமக்குக்கிடைக்கும் நன்மை களையும் தென்னிந்திய கிராமங்களிலும் பட்டணங்களிலும் உள்ள நம்மவர்களுக்கு அடிக்கடி எடுத்துப் போதிக்கச் சொல்ல வேண்டும். இவ்விதம் பிரச்சாரத்தில் ஈடுபட்ட இளைஞர்களின் நிலைமையை நாம் நன்கு கவனித்து அவர்கள் வீட்டிற்குவேண்டிய பொருளுதவி பொது நிதியி லிருந்து கொடுத்து வரவேண்டும். உலகமே விளம்பரத்திற் கடிமையென்பதை மறந்து விடக்கூடாது. அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகருமென்பதை ஊன்றிப் பார்க்க வேண்டும்.

இந்தப் பிரசுரங்கள் தமிழர் ஜில்லா ஒன்றுக்கு ஒருவருக்கு குறையாமல் தலைமைச் சங்கத்திலேயிருந்து அனுப்ப வேண்டும். ஜில்லா கமிட்டியார் மாதச்சம்பளமும் அந்தந்த ஜில்லாவில் - சுற்றுப்பிரயாணம் செய்து பிரசங்கம் செய்து வரப் போதுமானபடியும் கொடுத்து உதவ வேண்டும். சென்ற கிராமங்களில் வருஷ அங்கத்தினர்கள் சேர்ப்பதும் நன் கொடை வசூலிப்பதும் இப்பிரசங்கியின் முக்கிய வேலை யாக இருக்கவேண்டும். இது இல்லாதது ஒரு பெரும் குறை. இந்த இயக்கம் வளர்ந்தேறுவதில் யாரும் இதில் கவனம் செலுத்தவில்லை. இப்போதிய பிரச்சாரகர்கள் தன்னைக் கூப்பிடும் கிராமத்தார்களிடம் போய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அது முறையாகத் தோன்றவில்லை. இவர்கள் ஜில்லா சங்கத்தின் தலைவர் அல்லது அமைச்சர் மூலமாக அழைக்கப்பட வேண்டும். பண உதவி செய்யப்பட வேண்டுமேதவிர தனித்தமுறையாகச் செல்வதும், ஊதியம் தேடு முறையைக் கையாளாத வண்ணம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதை மாகாண சங்கத்தின் தலைவரவர்களை வணக்கமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தொண்டர் படை

9. ஓர் தமிழ் தொண்டர் படை திரட்டவேண்டும். தமிழுக் கென தன் உயிரையும் தியாகம் செய்யக் கூடிய வீரராகப் பார்த்து அமைக்க வேண்டும். அவர்களிடம் வீரம், ஒழுங்கு, நாகரீகம், பெருந்தன்மை முதலிய குணங்களே காணப்படும் படி அவர்களுக்கும் போதித்து வரவேண்டும். இந்தப் படை வேறு, பிரச்சாரர்கள் வேறு. இவர்களுக்கு டிரில் ஸ்போர்ட்ஸ் முதலியவைகளைப் பழக்கிக் கொடுக்க வேண்டும். இவர் களுக்கு மேல்நாட்டு நாகரீகம் கொண்ட ஓர் தனி உடை கொடுக்க வேண்டும். இவர்கள் தியாக சொரூபிகளென நம் எதிரிகளும்  கருதும்படியாக இருக்க வேண்டும். இவர்க ளுக்கு ஜில்லாவில் சாரண ஆசிரியர்கள் (Scout Master) போன்றவர்களை தெரிந்தெடுத்து நியமனம் செய்ய வேண்டும்.

கொடி

10. நமது கட்சியின் கொடி மதக்கலப்பில்லாமல் தயாரிக் கப்பட்டிருக்கிறது. அது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளத் தக்கதாகவுமிருக்கிறது.

சின்னம் (Badge)

11. பார்த்த மாத்திரத்திலேயே தெ.இ.ந.உ.ச என்று சொல் லும்படி ஓர் அறிகுறி (Badge) செய்து அதை வேறொருவர் செய்யாதபடி ரிஜிஷ்டர் செய்து கொள்ளவேண்டும். இந்த பாட்ஜை நமது தொண்டர்கள் தொப்பியிலும் பிரச்சாரகர்கள் மார்பிலும் அணிந்து கொள்ளவேண்டும்.

உடை

12. நம்மவர்கள் ஆணும் பெண்ணும் அவரவர்கள் விசேஷகாலங்களிலும் சாதாரண காலங்களிலும் அணிந்து கொள்ளவேண்டிய உடையைத் தீர்மானித்து அதில் முக்கியமாய் பெண்கள் தற்காலம் நாகரீகமாய்க்கட்டிவரும் உடையே அவர்களுக்கு அழகு செய்வதால் இதையே இன்னும் நாகரீகமான முறையில் அணிந்து கொள்ளும்படி செய்தும் ஆடவர்கள் மேல்நாட்டு உடையையும், நம்நாட்டு உடையையும் சமயசந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி அணிந்து கொள்ளச்செய்ய வேண்டும்.

மதம்

13. போலி மதங்களையும் ஆரியக்கடவுள்களையும் அடியோடு விட்டு விடுவது தான் நல்லது. அதற்கு வேண்டிய பகுத்தறிவு நம்மவர்களில் பெரும்பாலருக்கு இல்லையாத லால் அவர்கள் அப்பகுத்தறிவு எய்தும்வரை அப்போதனை செய்யாமல் மதத்திற்கும் கடவுளுக்குமென செய்யும் சடங்கு களின் செலவை எவ்வளவு குறைக்கமுடியுமோ அவ்வளவு குறைத்துச் செய்யும்படி போதனை செய்யவேண்டும்.

முதலில் நாம் திராவிடர் என்ற உணர்ச்சியையும், 'அதன் பின் மதம் இரண்டாவதாக பாவிக்க வேண்டும். யார் யார் எந்த மதத்தையும் கையாளலாம். ஆனால் அம்மத உணர்ச்சி அடுத்த திராவிடரை பாதிக்கக் கூடாது, மதத்தைக் கொண்டு தனிப்பட்ட ஒரு ஆண் - பெண் சமமாக பிறருடன் வாழ்வ தற்கு, தடை செய்யக்கூடாது, சமபோஜனத்திலும் சகலவாழ் கையிலும் திராவிடர்கள் ஒரு குலமே ஒருதாய் மக்களே என்ற உணர்ச்சி தான் வேண்டுவது. மதத்தைப் பொறுத்து கடவுள் வழிபாட்டில் வீண் செலவு எவ்வகையிலும் தனிப்பட்ட ஆண் பெண் செய்யக்கூடாது இதுகடவுளிடம் பேரம் செய்து கொண்டது போலாகும். கடவுள் உணர்ச்சி அடைய வேண்டுமானால் பகுத்தறிவு உணர்ச்சி வளர்ப்பதில் தான், கிட்டும். ஒவ்வொரு திராவிடரும் கடவுள் ஒருவரே, அவரை வணங்குவதிலும் அவரிடம் அருள்  பெறுவதிலும் மனம் சீராக இருக்க வேண்டுமே தவிர, பணம் கொண்டு உபசரித்து அருள் பெற முடியாதென்ற உண்மையை ஒவ் வொரு பிரச்சாரகர்களும் வற்புறுத்தி, போதிக்கவேண்டும். நம் அறிவாளராகிய பெரியாரையும் அக்கொள்கையைப் பரப்புவதால், நம் ஆரிய நண்பர்கள் நாஸ்திகர் என்று கூறி பாமரர்களை தன்குல ஆசாரப்படி பித்தலாட்டமாய் ஏய்த்து வருகிறார்கள். ஏனெனில் அவர்கள் பிழைப்பில் மண் விழுந்து விடுமல்லவா.

திராவிட முஸ்லிம் ஒற்றுமை

14. முகமதியர்களை நம்முடன் சேர்த்துக்கொள்ள வேண் டிய ஏற்பாடு செய்யவேண்டும். இதுவிஷயமாய் ஜனாப் ஜின்னா அவர்களை நம்மில் பொறுப்பு வாய்ந்த தலைவர்கள் நேரில் போய்ச் சந்தித்து அவர்களுடன் கலந்து திராவிடர் களும் முஸ்லீம்களும் என்றும் ஒன்றாயிருப்பதற்குரிய வழிகளைத் தேடவேண்டும்.

நாம் முஸ்லீம் லீக்கில் அங்கத்தினர்களாகவும், முஸ்லீம் கள் நம் இயக்கத்தில் மெம்பர்களாகவுமிருக்க வேண்டியது அவசியம். இருவர் மதங்களும் ஒரே கடவுளேயென்ற கோட்பாடுடையது என்பது திராவிட ஆதிமதக்கொள்கை தென்னாட்டு திராவிடர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் உணவும் பொதுவாகவே இருந்து வந்தது. அதாவது மாமிச மில்லா உணவு. மாமிச உணவு குளிர்ச்சியான நாடுகளில் வசிப்பவர்க்கு ஏற்பட்டது. உஷ்ணதேசங்களிலுள்ளவர் களுக்கு அது தேவை இல்லையென்பது, தெரிந்த விஷயமே. பழக்க வழக்கங்களால் இப்போது சகலரும் மாமிச உணவை கையாளுகிறார்கள். இன்நிலைமையில் சைவபோஜனம் பொதுவுணவாகவும், மாமிச உணவும் தனிப்பட்ட நிலைமை யிலும் வைத்துக் கொள்ளவேண்டுமே தவிர இந்த மாமிச உணவு கொள்வோரை பிரித்து நினைக்கவும் கூடாது, அத னால் குறை கூறவும் கூடாது.

தமிழ் மொழி

15. நம் தமிழ் சமஸ்கிருதத்தைப்போல classical language என்பதை கவர்மெண்டார் ஒப்புக் கொண்டு classical language வேண்டும் என்னும் இடங்களெல்லாம் தமிழ் சமஸ்கிருதத்தை விட மேலானதால் தமிழ் classical language தான் என்று அவர்களை ஒப்புக்கொள்ளும்படி செய்து சட்டங்களைத் திருத்தியமைக்கும்படி செய்ய வேண்டும்.

நமது ஸ்தாபனம்

17. முஸ்லிம்களுக்கு எப்படி லீக் சுயஸ்தாபனமோ அவ் விதமே திராவிடர்களுக்கு தெ.இ. ந.உ.ச. தான் ஸ்தாபனமே ஒழிய காங்கிரசுக்கு திராவிடனைப் பற்றிப் பேச யோக்கியதை கிடையாதென்பதை சர்க்கார் ஒப்புக்கொள்ளும்படி செய்ய வேண்டும். திராவிடர்கள் இடம், பொருள் ஏவல்களைப் பற்றிப்பேச ஆரியர்க்குரிமையில்லை என்பதை சர்க்கார் உணரும்படி செய்ய வேண்டும்.

எதிர்க்க வேண்டியவைகள்

18. கதர், வார்தா திட்டம், இந்திக்கல்வி, வேண்டா வரிகள், (விற்பனை, புகையிலை, வரி) முதலியவைகளை எதிர்த்துப் போராட வேண்டும். கடையடைப்பு வேலை நிறுத்தம், சத்தியாக்கிரகம், மறியல் முதலியன சண்டித்தனமென்பதற்கு மறு பெயரே ஒழிய வேறில்லையாதலால் அதில் பாமர ஜனங் கள் ஈடுபடாமலிருக்க நற்போதனை செய்தும் மேற்கண்டவை களை நடக்கவொட்டாமலும் எதிர்க்க வேண்டியது.

(தொடரும்)

- விடுதலை: 19.5.1940

9.3.2020 அன்றைய தொடர்ச்சி

சர்க்கார் வேலை

19. சர்க்கார் சம்பந்தமான துறைகளில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை அனுசரித்து வேலை கொடுக்க வேண்டு மென்னும் சட்டமிருந்தும் அது சரியாக அமுலில் நடை பெறாததின் காரணம் ஆரியர்கள் அதிகார வர்க்கத்தில் உயர்ந்த பீடத்திலிருப்பதேயாகும். எனவே மேற்படி சட்டத் தைச் சரியாய் அமுலுக்குக் கொண்டு வரும்படி கவர்ன் மெண்டாரை அடிக்கடி தூண்டிக்கொண்டேயிருக்கவேண்டும்.

வாசகசாலைகள்

20. ஒவ்வொரு ஜில்லாக்களின் தலைநகர்களில் நமது கட்சிக்கு ஒர் சொந்தக்கட்டிடம் கட்டி அதில் நம் தினசரிகளையும் பிரசுரங்களையும் பரவச் செய்தும் மனிதனுக்கு அறிவை வளர்க்கக்கூடியதும், நம் சமூகத்தை மேம்படக் காட்டக்கூடியது மான புத்தகங்களை நிரப்பி இலவச வாசகசாலை ஏற்படுத்த வேண்டும். தற்சமயம் கூடிய சீக்கிரம் ஜில்லாக்கள் தோறும் ஓர் வாடகைக் கட்டிடத்திலாவது ஏற்படுத்த வேண்டும். அதைப் பொறுப்பாக நடத்தக் கூடியவர்கள், பெரிய வீட்டுக் கரர்கள் பணக்கார்கள் என்னும் யோக்கியதைக்கல்லாமல் கட்சி அபிவிருத்தியும் சமூக நன்மையையும் கருதக்கூடியவர் களாகப் பார்த்துத் தெரிந்து அப்பேர்ப்பட்டவர்கள் வசம் நிருவாகம் ஒப்புவித்து நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

மடாதிபதிகள்

21. நம் மடாதிபதிகள் அனைவரும் ஆரியர்கள் வசம் சிக்கி தங்கள் சுயமரியாதையை இழந்து அவர்கள் (ஆரியர்கள்) ஆட்டிவைக்கும் பாவைகளாக இருந்துவருவதோடல்லாமல் நமது சமூகத்திற்கும் விரோத மனப்பான்மை கொண்டு தாறு மாறான வழியில் நடப்பதினால் அவர்களை ஆரிய மாயையிலிருந்து விடுவித்து நம் சமூகத் திற்கு பேருதவி செய்யக்கூடியவர்களாக ஆக்கமுயலவேண்டும். அவர்கள் இப்போது தலைவர்களாக இருக்கிறவர்கள் போக இனி அப்பதவிக்கு வருகிறவர்கள், கல்வியறிவிற் சிறந்தவர் களாகவும், ஒழுக்கமுடையவர்களாகவும், தாய்மொழிப் பற்றுமுடையவர் களாகயிருப்பவர்களைத் தெரிந்தெடுக்கச் செய்யவேண்டும். மேலைக்காவது இவர்களால் பொதுவாய் மனித சமூகத்திற்கும், குறிப்பாய் நம் சமூகத்திற்கும் பல நன்மைகள் ஏற்பட சக்தியுடையவர்களாக்க வேண்டும்.  அவர் களுக்கு நாமும் அவர்கள் மேன்மைக்குரிய மதிப்பைக்கொடுத்து அவர்களைக் கவுரவப்படுத்துவதோடு நாமும் அவர்களால் கவுரவம் அடைய வேண்டும். காலத்தையனுசரித்து அவர் களுக்கு சட்டம் மூலமாய் சில சவுகரியங்கள் (வாகனம் முதலிய வைகள்) செய்துகொடுத்து அவர்கள் பதிலுக்கு நமக்கும் பிரதியாக சில சவுகரியங்கள். செய்யும்படி ஏற்பாடு செய்ய வேண்டும். நாளடைவில் பின் பட்டத்திற்குரியவர்கள் இன் னின்ன பொறுப்பு கல்வி, திறமையுடையவர்களாக இருக்க வேண்டுமென்று திட்டம் செய்து  அவ்விதமுடையவர்களே பலரில், ஒருவரை பொது மக்களே தெரிந்தெடுக்கும்படி செய்ய வேண்டும்.

இந்துமத பரிபாலனச் சட்டம்

22. இந்துமத பரிபாலன சட்டத்தை முழுவதையும் சீர்திருத்தியமைக்க வேண்டும். பனகால் அரசர் செய்ததை மாற்றக்கூடாதென்று போராடுவது சரியல்ல. இப்போது பனகால் இருந்தால் அவரே அதை மாற்றியமைக்க. வேண்டுமென்று தானே ஓர் சீர்திருத்தம் கொண்டுவந்திருப்பார். தற்போது மத விஷய ஞானமில்லாதவர்கள் சிலர் போர்டு மெம்பர்களாய் இருப்பதால் அவர்களுக்குச் சில விஷயங்களை எடுத்துச் சொன்னாலும் செவியில் ஏறுகிறதில்லை. மேலும் பரம்பரைத் தர்ம கர்த்தாக்கள் எல்லோரும் தவறுதலாகவே நடக்கிறார் களென்று கருதி அவர்களை இம்சைப்படுத்துவதுதான் தாங்கள் செய்ய வேண்டிய காரியமென்பதைத் தவிர வேறொன்றும் அவர்கள் கருத்தில் இல்லை என்பதை அவர்கள் செயல் காட்டுகின்றது. கோர்ட் நடவடிக்கைகளில் போர்டு வாதி, பிரதிவாதியாக இருந்து கேஸ் நடத்தி தோற்றாலும், ஜெயித்தாலும் போர்டாரிடம் செலவு தொகை வசூலிக்கக் கூடாது என்று சட்டமிட்டு (போர்டு நியாயத்தப்பாய்ப் போனாலும்) வைத்திருக்கும் நம் கட்சிக்காரர் ஞிமீதீt ஸிமீறீuயீ ஙிவீறீறீ கடன் மசோதாச் சட்டம் மக்களைக் கஷ்டப்படுத்துகிறதென்று சொல்வதற்கு நாவுண்டா? போர்டாருக்கும் கட்டளைக் கார ருக்கும் சச்சரவு இல்லாமலிருக்க வேண்டுமானால் திட்டப்படி உள்ள தருமத்தை கட்டளைக்காரர்கள் கட்டாயம் நடத்தக் கடமைப்பட்டவர் களென்றும் மற்ற எஞ்சிய மீதிக்கட்டளை காரர்களுக்கேயொழிய போட்டாருக்கில்லை என்றும் கண்டிப் பாய் சட்டம் செய்தாலொழிய விவகாரம் ஓயாது. தமிழ்நாடு தமிழருக்கே என்பது போல் கட்டளைகள் கட்டளைக்காரருக்கே என்று விவகாரம் பண்ணுவதில் என்ன குற்றமிருக்கின்றது.

தமிழ்ப் புலவர்கள்

23. தமிழ் தோன்றிய காலம் தொட்டு தமிழ்ப் பெரும் புலவர்கள் எல்லாம் திராவிடர்களே. உதாரணம், திருவள்ளுவர் கம்பர், அவ்வை, புகழேந்தி, ஒட்டக்கூத்தர் முதலியவர்கள் இன்னும் தமிழ்ப் புலமையில் தலை சிறந்து விளங்குபவர்கள் திராவிடர்களே. கவிராயர் மகன் கவிராயர் என்னும் வழக்கு திராவிட சமூகத்தை தவிர ஆரியர்களிடையே கிடையாது, நம்மவர்களுக்கு புலமைத் தொழில் வம்ச பரம்பரையாகவே அருளாய் எற்பட்டு "குலவித்தை கல்லாமலே" என்றபடி தற்காலமும் தோன்றி புலமை நடத்திவருகிறார்கள், அவ்வித மிருந்தும் சர்க்காரால் வழங்கப்படும் மகா மகோபாத்தியாயப் பட்டம்" திராவிடர் ஒருவர்க்கேனும் கொடுக்கப்படவில்லை என்பது விசனிக்கத்தக்கதே,  தற்போது பட்டம் பெற்ற ஆரிய ரொருவர் திராவிடப் பெரும்புலவரொருவரின் மாணாக்கரே என்பது குறிப்பிடத் தக்கது. இதற்கெல்லாம் காரணம் நம்மவர் களுக்குத் தமிழில் ஆர்வமில்லாததுதான். இனி மேலாவது நம் புலவர்களுக்கெனப் பட்டமளிக்க வேண்டுமெனச் சர்க் காரை வேண்டிக்கொள்வதுடனல்லாமல் இன்னும் தொல் புலமைத் திறமுடன் முதுமை எய்தியிருக்கும் நம் புலவர் பெருமான் ஒருவருக்குக் கூடிய சீக்கிரம் மேற்படி பட்டம் கொடுத்து நாமெல்லோரும் மகிழும்படி சர்க்காரை வேண்டிக்கொள்ள வேண்டும். மற்றும் பட்டத்திற்குரிய எஞ்சிய புலவர்களையும் (ஏராளமாக இருக்கிறார்கள்) சர்க்கார் ஞாபகத்தில் வைத்து சமயம் தவற விடாமல் பட்டமளிக்கும்படி செய்ய வேண்டும்.

ஸ்தல ஸ்தாபனங்கள்

24, இப்போது ஸ்தல ஸ்தாபனங்கள் இருக்கும் சீர்கேட்டைக் கவனிக்கும்போது இவைகளையெல்லாம் அடியோடு ஒழித்து விடுவதே நலமெனச் சொல்லலாம். ஆனால், நமது கோரிக்கை யல்ல,  முதல் முதல் கட்சிப் பேய் ஸ்தல ஸ்தாபனங்களில் தாண்டவமாடக் கூடாது. ராஜீய விஷயங்களைப் பற்றியோ அல்லது அதன் சாயல் கொண்ட விஷயங்களையோ காரியங் களையோ ஸ்தல ஸ்தாபனங்களில் புகுத்தக்கூடாது. நம் கட்சி பலத்திற்கு வரும் காலத்திலும் இதைவிட்டு நழுவக் கூடாது. ஸ்தலஸ்தாபனத் தலைவர் சர்வாதிகாரியுமாயிருக்கக் கூடாது. அவர் பைசாக் கடனேனும் பிறருக்குக் கொடுக்கக் கட்டுப்பட்டவராக இருக்கக் கூடாது,  இவ்விதமிருப்பின் அவர் லஞ்சம் வாங்கவும், கடன் உதவியவருக்கு சலுகைகாட்ட வேண்டியதும் திட்டமாய் ஏற்படும். அன்னவர் அப்பதவிக்கு உதவாது. மேலும் தலைவராக உள்ளவர் ஆங்கிலம் தெரிந்தவராக இருக்க வேண்டும். ஆனால் ஆங்கிலக் கல்வியில் பட்டம் பெற்றவர் தானிருக்க வேண்டுமென்பது கருத்தல்ல உத்தியோகத்தைக் கண்ணியமாய் நடத்தும் திறமை யுடையவராக இருக்க வேண்டும். எல்லாக்கட்சியாரையும் சமமாக நினைப்பவராக வேண்டும். ஜனங்களிடையே பரந்த செல் வாக்கும், (நன்மதிப்பு), உள்ளவராயிருக்க வேண்டும். பொதுஜன கஷ்ட நஷ்டங்களை நன்றாய் அறியும் திறமை யுடையவராகவும், தன் சுயமரியாதையைக் கிஞ்சித்தேனும் விட்டுக் கொடுக்காத நிலையுடையவராகவுமிருக்க வேண்டும்.

சிறிது காலத்திற்கு முன் ஸ்தலஸ்தாபனங்களின் தலைவர் களில் பலர் பெரும் பணக்காரர்களாயும் அவர்களினது பணம் முழுவதையும் விழுங்கக் கூடிய கடனுடையவர் களாயுமி ருந்தார்கள். இவர்களால் ஸ்தலஸ்தாபனங்களுக்கு ஏற்பட்ட கெடுதி கொஞ்ச நஞ்சமல்ல. அவர்கள் செய்த கெடுதிகள் இன்றும் பசு மரத்தாணி போல் மேற்படி ஸ்தாபனங்களில் பார்க்கக் காணலாம் இவர்களிலும் பலர் நம்கட்சிப் பேரைச்சொல்லி வந்தவர்கள். இவர்கள் பதவிவகித்த காலம் தொட்டுத்தான் நம்கட்சி சீரழியத்தொடங்கியது. இவர்களால் சமூகத்திற்கும் அளவிறந்தகெடுதி உண்டாயிற்று. இவர்கள் தாங்களும் கெட்டு கட்சியையும் அழிநிலையில் கொண்டு வந்துவிட்டு "ஏறிய ஏணியை உதைப்பது போல் எக்கட்சியால் தங்கள் கடன்பாரங்களை நீக்கினார்களோ அக்கட்சியைப் படுகுழியில் தள்ளிவிட்டு எதிர்க்கட்சி யாரிடம் அடிபணிந்து பிச்சையேற்று அன்றும் இன்றும் திரிந்து கொண்டிருக்கிறார்கள். சுயமரியாதை யுடைய மனிதனொருவனுக்கு இவர்களும் மனிதர்களா" என்கின்ற எண்ணம் உண்டாகின்றது. "தீயார் குணங்களுரைப் பதுவும் தீதே" என்பது ஞாபகத்திற்கு வருவதால் இத்துடன் நிறுத்துகிறேன்.

- விடுதலை: 20.6.1940

(தொடரும்)

11.3.2020 அன்றைய தொடர்ச்சி

மதுவிலக்குப் புரட்டு

25. இது ஆச்சாரியார் உலகில் ஓர் போலிப் பெயரெடுத்துக் கொள்ள உண்டு பண்ணிய ஓர் தந்திரம். வடநாட்டார் செய்ய முடியாததை தென் நாட்டில் தான் சாதித்துவிட்டதாகக் காட்டி வடநாட்டில் தனக்குப் போதிய செல்வாக்கு உண்டு பண்ணிக் கொள்வதற்கான யோசனை. இதை எதிர்ப்பவர் மீது பெரும்பழி சுமத்த தேடிக்கொண்ட உபாயம். வாஸ்தவத்தில்  ஆச்சாரியார் மதுவிலக்கு அவசியமேற்படவேண்டுமென்று நினைத்தால் முதல் முதல் காங்கிரஸ் மெம்பர்களில் குடிப்பவர்களை அடியோடு விலக்க வேண்டியதவசிய மல்லவா? அவ்விதம் செய்ய அவர் வரிந்து கட்டி முன் வருவாரா காங்கிரஸ்காரர்களில் குடிப்பவர்களை எப்படித் தெரிவதென்று அவர் கேட்பாரானால் தனது மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் குடிப்பவர்கள் தானே தனக்கு நன்கு தெரிந்திருப்பவர்களையாவது இக்காரணம் கொண்டு களைவாரா? முன்பு காங்கிரஸ் சர்க்கார் நடக்கும் பொழுதும் தற்போது காங்கிரசிலும் பெரிய பதவிகள் வகித்துக் கொண்டிருந்தவர்களும் இருக்கிறவர்களும் குடிக்கிறவர் கள்தான் என்று நாட்டில் உலவும் வதந்தி தனக்குத் தெரியா தென கையில் கீதையுடன் நெஞ்சில் கை வைத்து கனமாயிருந்த ஆச்சாரியார் கூறுவாரா! அல்லது அவர் சம்மந்தியான காந்தியார் தான் உபநிஷத்தின் மேல் ஆணையிட்டுக் கூறுவாரா! இவர்கள் தங்கள் வீட்டைச் சுத்தமிட்ட பிறகல்லவா மற்றவர்களைப் புனிதமாக்க வேண்டும்.

குடியை நாட்டை விட்டு விலக்குவதில் பிரியப்படாதவர் களில்லை. ஆனால் அதை விலக்கவேண்டிய வழி இதுவல்ல. ஒரு காரியத்தைச் செய்வதற்காக பல நற்காரியங்கள் நடக்கவொட்டாமல் தடுப்பதா?

ஜனங்களிடை பிரசாரத்தைச் செய்து ஜனங்கள் தாங்கள் சொல்வதையே தெய்வ வாக்காக நினைக்கிறார்கள் என்று சொல்லிப்பெருமையடித்துக் கொள்ளும் காங்கிரஸ்காரர்கள் பிரசாரத்தினாலேயே மதுவிலக்கை நீக்கியிருக்கலாமே. எத்தனையோ வர்ணப்பெட்டிகளிருக்க காங்கிரஸ்காரர்கள் சொன்னதும் வேதவாக்காகக் கொண்டு மஞ்சள் பெட்டியில் ஓட்டைப் போட்ட ஜனங்களை, கள்ளுக்கடைகள் எத்தனையிருந்தாலும் போகவொட்டாமல் சொல்லித் தடுப்பதென்ன பெரிதா? வேண்டியபோது "பெய்யெனப் பெய்யு மழை" எனச் சொல்லிய காங்கிரஸ்காரர்களுக்கு சாதிக்க முடியாதது என்ன இருக்கிறது. நிற்க.

மதுவிலக்கினால் சர்க்காருக்குப் பணம், நஷ்டமாகி விட்டதால் பணக்குறைவால் பள்ளிக்கூடங்களையும் சுகாதார வசதிகளையும் இன்னும் இது  போன்றவைகளையும் கெடுத்து மதுவிலக்கு வெற்றிபெறச் செய்வது ஒழுங்கான ஆளு முறையைக் கைக் கொண்ட அரசாங்கம் செய்யும் காரியமல்ல. மேல் கண்ட வசதிகள் செய்யவேண்டுமானால் அதற்காகப் புதிய வரிகளைப் போடு வதில் மூளை செலுத்துவதும் அழகல்ல. ஆகவே நாளடைவில் அதற்குரிய வழிகளை யோசித்துச் செய்ய வேண்டுமாகையால் உடனே மேற்படி சட்டத்தை ரத்துச் செய்ய வேண்டும். மூடியிருக்கும் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட வேண்டும்.

நம் சித்த வைத்தியம்.

26. நம் நாட்டிற்கு பழமையாயுள்ளதும் வைத்தியங் களெல்லாவற்றிலும் மிக மேன்மையுடையதும் சித்த வைத்தியமே, தற்கால நவீன (Allopathic - Homes Pathic) வைத்தியங்களில் புதிதாய்க் கண்டு பிடிக்கப்படும். சில வியாதிக் கூறுகளையும், சிகிச்சை, விஷயங்களையும், வைட்டமின் A B C D. முதலிய உணவு தாதுப் பொருள்களையும் முன்னமே ஒளிவுபடுத்தி விளக்கிக் காட்டியும் மக்களில் சிறந்த அறிவுடையவர்களே அதைக் கற்க வேண்டுமென்றும் கருத்தடங்கிய மொழிகளை உடையதும் எல்லாவற்றிற்கும் மேலாக ஸிமீழீuஸ்மீஸீணீtவீஷீஸீ என்னும் தற்கால "வாலிபம் திரும்பல்'' என்பதை அதைவிட ஓர்படி மேலாக "சாகாதிருத்தல்' என்னும் பெயர் கொண்ட "கற்ப சாதனம்" என்னும் உயர்தர மருந்துகளையும் கொண்டதாக இருக்கிறது.

மேலும் ஆயுர்வேதமென்பது ஆரியர்களால் செய்யப் படும் வைத்தியம். அது அவர்கள் சிந்து நதிக்கரையிலும் கங்கைக் கரையிலுமுள்ள மூலிகைகளைக் கொண்டு அவர்கள் வசித்தநாட்டின் சீதோஷ்ண ஸ்திதிக்குத் தக்கபடி தயாரிக்கப் பட்டுள்ளன. சித்த வைத்தியமோ நம் திராவிட நாட்டிலுள்ள மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டதால் இந்நாட்டாருக்கு இதுவே ஏற்றது.

சித்த வைத்தியம், ஆரியர்களின் கொடுமையால் அநேக நற்காரியங்கள் நசுக்குண்டது போல் இதுவும் நசுக்குண்டு போயிற்று.எனினும் இடைஇடையே இதை ஆராய்ச்சி பண்ணி அந்த பெரியவர்களினால், முழுதும் நாசமாகவிடாமல் காப்பாற்றப்பட்டது. பரம்பரையாக சிலகுடும்பங்களில் இதையே தொழிலாகக் கொண்டு நடத்திய ஆச்சரியப்படும் படியான குணாசக்தி சித்தவைத்தியத்திற்குண்டென்பதை இடையே அடிக்கடி காட்டிக்கொண்டு வருவதை நாம் கண்டும் கேட்டும் வருகிறோம். இவ்விதப்புகழுடைய அரியவைத்தியத்தைக் கைகழுவவிடக்கூடாது.

சித்த வைத்திய சம்மந்தமான ஓலைச்சுவடிகளெல்லாம் ஒருங்கு சேர்த்து தகுந்தவர்களைக் கொண்டு சரிபார்த்து அச்சியற்றி அவைகளை பழியாமல் காக்க வேண்டும். இதற்கு சர்க்கார் உதவி தேடுவதற்குள் காலங்கடந்துவிடும். பொதுநிதி யிலிருந்தே இவ்வரிய கல்வியை அழியாமல் தடுக்கும் படி வேண்டிய ஏற்பாடு செய்ய வேண்டும்.

சிறந்த தருமம்

உலகத்தில் மானிடர்க் குற்றபிணியைப் போக்கி அவர்களை நெடுநாள் ஜீவித்திருக்கும்படி செய்வதைத் தவிர சிறந்த தருமம் வேறென்ன? இதையே மேல் நாட்டார் கண்ணும் கருத்துமாய் செய்து வருகிறார்கள். மேல் நாட்டார் தங்களின் சமூகம் 100க்கு 90-95 வயதுடையவர்களாக ஆக்கிக் கொண்டு போகப்பார்க்கிறார்கள். நம் நாட்டிலோ சராசரி 100க்கு 25 வயதாகத் குறைந்து கொண்டே வருகிறது. இதைத் தடுத்து நிவர்த்தி செய்ய முயல வேண்டாமா?

எனது தாழ்மைபான அபிப்பிராயத்தில் சித்தவைத்தியம் தகுந்த ஆராய்ச்சியாளரைக் கொண்டு ஆராய்ச்சி பண்ணி தற்கால முறைகளினால் கிடைக்கும் யந்திர உதவிகளைக் கொண்டு மருந்துகள் தயார் செய்து நாடெங்கும் பரவச் செய்தால் மேற்சொன்ன காரியங்களெல்லாம் சாதிப்பதோடல் லாமல் சித்தவைத்தியமும் பூலோகபுகழுடன் International Frame விளங்குமென்பது திண்ணம். இதன் பெருமைகளை விளக்கிக்காட்டினால் மேல் நாட்டாராகிய இங்கிலீஷ், ஜெர்மன், பிரஞ்சுக்காரர்களும் இதில் ஈடுபட்டு நம்முடன் ஒத்துழைத்து நமக்கு மேன்மை தேடிக்கொடுப்பதோடல்லாமல் அவர்கள் நாட்டிலும் இதைப் பரவச்செய்வார்கள்.

இந்த சித்த வைத்தியத்தில் அவ்வளவு மேன்மையிருக்கிறது. நம் தமிழ் பாஷைக்கடுத்த (Lagacy) வரப் பிரசாதம் நம் சித்த வைத்தியம் தானென்று சொன்னால் மிகையாகாது. இதற்கு போதிய ஆதரவு கொடுக்க வேண்டுமென்று மற்றும் ஓர்முறை வற்புறுத்துகின்றேன்.

"தமிழ்நாடு தமிழருக்கே "

- விடுதலை: 20.6.1940

- விடுதலை நாளேடு 13. 3 .20


சமஸ்கிருதம் உயிருள்ளதா?

குடிஅரசு,  08.09.1940-லிருந்து...

இந்தி மொழி கட்டாயப் பாடமாக திராவிட நாட்டில், காங்கிரஸ் (ஆரிய) மந்திரிகளால் புகுத்தப்பட்ட காலையில், இந்தி ஆரிய வர்க்க மொழியென்றும், அம்மொழி கட்டாயப் பாடமாக சிறுவர்களுக்குக் கற்பிக்கப்படுமேயாகில், திராவிடச் சிறுவர்கள், எதிர் காலத்தில், திராவிடக் கலை, நாகரிகம், பழக்கம், வழக்கம் ஆகியவைகளை மறந்து ஆரியத்திற்கே அடிமையாய் விடுவார்கள் என்றும், மக்களின் வாழ்க்கையைத் திருத்துவதற்கு ஒரு ஒழுங்குபடுத்துவதற்கு கல்வியைத் திருத்தியமைத்தால் போதும் என்றும், அதை இன்று ரஷ்யா, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளில் கண்கூடாகப் பார்க்கலாம் என்றும், எனவே, இந்திமொழி கட்டாயப் பாடமாக புகுத்தக்கூடாதென்று கூறி மறுத்து வந்தது எவ்வளவு உண்மையானது என்பதை  சமீபகாலமாக இந்(திராவிட) நாட்டிலுள்ள ஆரிய வர்க்கத்தினர் சாஸ்திரிகளும், ஆச்சாரிகளும் பேசிவருவதும், அறிக்கைகள் விடுவதும் நன்கு விளக்கும்.

ஆரிய ஆதிக்கத்தை ஆரிய செல்வாக்கை இந்நாட்டை விட்டு விரட்டியடிக்க, குழி தோண்டிப் புதைக்க திராவிடர்கள் விழிப்படைந்து விட்டார்கள். தூங்கினவன் தொடையில் கயிறு திரிப்பது இனி செல்லாது என்பதை உணர்ந்துதான் ஆரிய வர்க்கத்தார், அதை நிலைநிறுத்த வேறு வழி செய்தால் பலிக்காது என்று கருதி மொழியின் மூலமாக இஞ்சக்‌ஷன் செய்ய முனைந்திருக்கின்றனர்.

நாம் ஒன்று மிகைப்படுத்தியோ, அல்லது அவர்களைப் போல் கற்பனை செய்தோ கூறுவதாக யாரும் கருதவேண்டிய தில்லை. நாம் சொல்வது எவ்வளவு ஆதாரமுடைய தென்பது இந்நாட்டில் பத்திரிகைகள் படிப்போர்களுக்கு நன்கு தெரியவரும். அவர்கள் ஒரு நாளும் நாம் சொல்வதை மறுக்க முன்வரார் என்றே கருதுகிறோம். உதாரணத்திற்காக இரண் டொருவர் பேசியதை மட்டும் எடுத்துக் காட்டினால் வாசகர்கள் உண்மையை உணர்ந்துகொள்ள முடியுமெனக் கருதுகிறோம். சென்ற 2ஆம் தேதி சென்னையில் பச்சை யப்பன் கல்லூரி சமஸ்கிருத மாணவர் சங்க ஆதரவில் நடை பெற்ற ஒரு கூட்டத்தில் சத்தியமூர்த்தி சாஸ்திரியார் பேசுகை யில், “தமிழுக்கு சமஸ்கிருத சம்பந்தம் ஏற்பட்டதினால்தான் வளர்ச்சியும் பெருமையும் ஏற்பட்டதென்று நான் கூறுவேன்” என்று கூறியிருக்கிறார்.

நியாயப்படி இவர் சொல்லியிருக்க வேண்டியது, “தமிழுக்கு சமஸ்கிருத சம்பந்தம் ஏற்பட்டதினால்தான் இழிவும், சிறுமையும் ஏற்பட்டிருக்கிறதென நான் கூறுவேன்” என்பதாகும். இதற்குத்தான் என்று கட்டாய இந்திப் போர் இந்நாட்டில்  துவக்கப்பட்டதோ அன்று முதல் நாளது வரை சமஸ்கிருத மொழியால், தமிழ் மொழி எந்தெந்த வகைகளில் வளர்ச்சி குன்றி பெருமையிழந்து சிறுமையுற்றிருக்கிறதென்று ஆதாரங்களுடன் தமிழ்ப் பேராசிரியர்கள் முதல் பண்டிதர்கள் ஈறாகக் கட்டுரைகள் வெளியிட்டும், பிரசுரங்கள் பிரசுரித்தும், வாதங்கள் நடத்தியும் வந்திருக்கின்றனர் என்பதை வாசகர் கள் இதற்குள் மறந்திருக்க மாட்டார்கள் என்றே கருதுகிறோம்.

சமஸ்கிருத சம்பந்தத்தினால்தான் தமிழ் மக்களை, ஒரு சாதாரண கலியாணப் பத்திரிகையைக் கூட சமஸ்கிருத மொழிக் கலப்பில்லாமல் எழுதமுடியாத நிலைக்குக் கொண்டு வந்து விட்டதென்றால், இதை யாரும் மறுக்க முன்வருவார் என்று நாம் நம்பவில்லை. இத்தகைய நிலைமை உலகில் வேறு எந்நாட்டிலேனும் இருப்பதாக இவர் சொல்ல முன் வருவாரா என்று கேட்கிறோம். ஒரு ஆங்கிலேயன் ஆங்கிலத்தில் கலியாணப் பத்திரிகையை எழுதவும், ஒரு பிரஞ்சுக்காரன் பிரஞ்சு மொழியில் எழுதவும், ஒரு ஜப்பானியன் ஜப்பானிய மொழியில் எழுதவும் முடியாத நிலையிலும் இருக்கிறானா என்று எடுத்துக்காட்ட முடியுமா என்று எண்ணிப்பாருங்கள்.

இன்று பள்ளிக் கூடங்களில், கணிதம். பூகோளம், சரித்திரம், ரசாயனம், பவுதிகம் ஆகியவைகளில் வழக்கி லிருந்து வரும் எண்ணற்ற சொற்கள் தமிழ்ச் சொற்கள் என்று எந்த தமிழ் மகனாவது  ஒப்புக்கொள்வானா என்று கேட் கிறோம். இவை களுக்கு தமிழ் மொழியில் சொற்கள் இல்லாது ஒழிந்துவிட்டனவா? இல்லை. எல்லாவற்றிற்கும் இருக் கின்றன. அப்படியிருந்தும் ஏன் சமஸ்கிருத மொழிச்சொற் களை உபயோகித்து வருகின்றனர் என்றால், சமஸ்கிருத மொழிக்கு உயிரைக் கொடுத்து தமிழ்ச் சொற்களை வழக்கிலி ருந்து மறையச் செய்ய வேண்டும் என்ற சூழ்ச்சியைத் தவிர, வேறு என்னவாயிருக்க முடியும் என்று கேட்கிறோம்.

இவ்வாறு தமிழ் மொழியின் சொற்களை சொல் வழக்கிலிருந்து மறையச் செய்து அவ்வெழுத்துக் கொண்ட சமஸ்கிருத மொழிச் சொற்களை வளர்ப்பதுதான் தமிழ் மொழி வளர்ச்சியடைவதும் பெருமையடைவதும் என்ப தற்கு அறிகுறியா என்று கேட்கிறோம்.

எனவே, சமஸ்கிருதமொழிக் கலப்பால் தமிழ்மொழி எவ்வகையிலும் வளர்ச்சி பெறவோ, பெருமையடையவோ இல்லையென்பதும் அதற்கு மாறாக தமிழ் மொழி சிதைவுற்று அதன் பண்டைய பெருமையெல்லாம் அழிவுற்றுமிருக்கிறது என்பதும் விளங்கும்.

ஒரு மொழி, மற்றொரு மொழியுடன் சம்பந்தம் கொள்வதால் சம்பந்தம் கொள்ளும் மொழி கேடுறாது, சிதைவுறாது என்று கூறும் மூர்த்தியாருக்கு இரண்டு மொழிகளைக் குறித்து எவ்வளவு ஞானம் - அறிவு இருக்கிறது என்று முதலில் ஒரு வினா எழும். அந்த வினாவுக்கு  அவரது பேச்சிலே விடையிருக்கிறது. அதாவது, “நான் தமிழில் ஒரு நூல்கூட வாசித்ததில்லை. சில நாவல்கள் மட்டுமே படித்திருக்கிறேன். சமஸ்கிருதத்தில் எனக்கு கொஞ்சம் பரிச்சயம் உண்டு” எனக் குறிப்பிட்டிருக்கிறார். இது செப்டம்பர் 3 ஆம் தேதிய சுதேசமித்திரன் 5 ஆம் பக்கம்  3 ஆம் கலம் தலைப்பிலிருந்து 9 ஆம் வரியிலிருந்து 4, 5 வரிகளில் காணக்கிடக்கிறது.

எனவே, ஒரு மொழியின் கலப்பால் மற்றொரு மொழி கெடாது என்று கூறும் - வாதிக்கும் வாதம் நியாயமானதா நியாயமற்றதா என்பது ஒரு புறமிருந்தாலும் வாதிக்க அவருக்கு அருகதையிருக்கிறதா என்பதை முடிவு கட்டும் பொறுப்பை வாசகர்களுக்கே விட்டுவிடுகிறோம். இவ்வாறு, முன்னுக்குப்பின் சம்பந்தமில்லாமல் பேசிவருகிறார்களே, அதையும்  பத்திரிகை களில் பிரசுரித்து வருகிறார்களே யென்றால், அது நம்மவர்களின் ஏமாளித்தனத்தை அல்லாது வேறு எதைக் காட்டுகிறதென்று கேட்கிறோம். ‘தட்டிக்கேட்க ஆள் இல்லையேல் தம்பி சண்டப்பிரசண்டன்தான்’ என்று நாட்டிலே சொல்லுவார்கள். அவ்வாக்கு இன்று இவர்களுக்குத் தான் பொருத்தமாயிருக்கிறது. இவ்வாறு முரணாகப் பேசிவருவதை இமைகொட்டாமல் மக்கள் கேட்டுக் கொண்டிருந்த தினால்தான் சிறிதும் சரித்திரத்திற்கும் உண்மைக்கும் மாறாக கம்பன் சமஸ்கிருதத்தில் சிறந்த பண்டிதர் எனக் கூறியிருக்கிறார்.

கம்பன் சிறந்த சமஸ்கிருத பண்டிதர் என்று எந்த ஆதாரத்தின் மீது மூர்த்தியார் கூறுகிறாரோ நாமறியோம். கம்பனுக்கு சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருந்த இராமாயணத்தை சமஸ்கிருத பண்டிதர்கள் வாசித்து விளக்க, அதைக் கேட்டு கம்பர் தமிழில் எழுதினார் என்று இராமாயணத்திலே சான்று இருக்கிறது. அதை மூர்த்தியார் பார்த்ததில்லையா? எவ்வாறு பார்த்திருக்க முடியும்? அவருக்குத்தான் தமிழில் சில நாவல்களைத் தவிர, வேறு எந்த நூலும் தெரியாதே, அப்படியிருக்க, அதை அவர் எப்படி பார்த்திருக்க முடியும்?

தொடரும்....

- விடுதலை நாளேடு, 12.3.20

புதன், 11 மார்ச், 2020

அன்னை மணியம்மையார் சிந்தனை முத்துகள்

திராவிடர் கொடி

திராவிட நாடும், திராவிட சமுதாயமும் இந்திய நாடு, இந்தியச் சமுதாயம் என்பது போன்ற ஒரு கற்பனை நாடும், கற்பனைச் சமுதாயமும் அல்ல; கற்பனைச் சொற்களும் அல்ல. வேத - புராண - இதிகாசங்களுக்கு முன்பிருந்தே திராவிட நாடும், திராவிட சமுதாயமும், திராவிடத் தனி ஆட்சியும் இருந்து வந்திருக்கிறது. வேதத்தில் மீன் கொடியைப் பற்றியும், இராமாயண இதிகாசங்களிலும் மீன் கொடியைப் பற்றியும் குறிப்புகள் இருக்கின்றன.

ஆகவே, சரித்திர காலத்திற்கு முன்பிருந்தே வெகுகாலமாக இருந்து வந்ததான நம் நாடும், சமுதாயமும், ஆட்சியும் மறைவுபட்டு, அன்னியர் ஆதிக்கத்திற்கும், சுரண்டுதலுக்கும், ஏவல் கொள்வதற்கும் ஆளாகி ஈன நிலையில் இருக்கும் நம் நாடும், சமுதாயமும் அடியோடு மறைந்து அழிந்து போன நம் அரசும் மறுபடியும் புத்துயிர் பெற்று எழ வேண்டுமானால், அவற்றிற்கேற்ற இலட்சியத்தையும், உணர்ச்சியையும், ஊக்கத்தையும் குறிக்கும்படியான சின்னமாக நம் திராவிடக் கொடியை திராவிட மக்கள் யாவரும் கருத வேண்டும்.

(கோபியில் 27.5.1944 அன்று தோழர் இரா. நெடுஞ்செழியன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கோபி தாலுகா திராவிடர் இளைஞர் மாநாட்டுக் கொடியேற்று விழாவில், அன்னை மணியம்மையார் கொடியேற்றி வைத்து ஆற்றிய சொற்பொழிவு)

- குடிஅரசு  (3.6.1944)

அய்யாவைப் போல் உழைக்க உறுதிகொண்டு விட்டேன்

அய்யாவைப் போலவே என் வாழ்நாள் முழுவதும் என் சக்திக்கு இயன்ற அளவு உழைக்கவும், மக்களுக்கு அவர் செய்துவந்த உயிர் நாடிக் கொள்கையை இயன்ற அளவு பரப்பவும், மனிதத் தன்மையோடு, பண்போடு, உண்மையும், ஒழுக்கமும் உயர்வெனக்காட்டிய வழியிலேயே நாமும் இனி வாழ்நாளெல்லாம் வாழவேண்டும் என்று ஓர் உறுதியான எண்ணத்துடன் இன்று முதல் செயல்படத் தொடங்கி விட்டேன். இனி எனக்கு என்று எந்தவித மான சுயநலப்பற்றும், பாசமும் - பந்தமும் இல்லாது மனநிறைவோடு, மனிதப் பற்றோடு வாழ்வை நடத்த வேண்டும் என்ற ஒரு முடிவுக்கு என்னை ஆளாக்கிக் கொண்டேன்.

அன்புள்ள தமிழ் மக்களே, தாய்மார்களே! உண்மையாகவே நாம் அய்யாவிடம் அன்பு செலுத்துபவர்களாய் இருந்தால் அவர் கொள்கையை - அவர் நினைவை கருத்தைத் தொடர்ந்து செய்துகொண்டே நம்மை நாமே பக்குவப்படுத்த நல்ல உறுதியான மனங்களைப் பெற்றுத் தொடருவோம் நம் பணியை. அய்யாவின் பணியைக் குறையில்லாமல் செய்து நிறைவு பெறுவோம்; அவர் சிந்தனைக்கு வழிவகுப்போம்.

(அய்யாவின் மறைவுக்குப் பின் அன்னை மணியம்மையார் அவர்கள் தோழர்களுக்கு விடுத்த அறிக்கை)

- விடுதலை (4.1.1974)

பணி தொடர்வோம்

குழந்தையே இல்லாத தந்தை பெரியார் அவர்கள் தமிழ்நாட்டு சூத்திர பஞ்சமர்கள் அனைவரையும் தம்முடைய சொந்தக் குழந்தைகளாகக் கருதி, தமக் கென்று ஒன்றும் இல்லாமல், தம் தளராத முயற்சியால் ஈட்டிய தனம் - தன் சிக்கன வாழ்க்கையால் சேமித்த பொருள் எல்லாவற்றிற்கும் சூத்திர பஞ்சமக் குழந்தை களையே வாரிசாக்கி வைத்துவிட்டுப் போயிருக் கிறார்கள். தமக்கென வாழா அந்தப் பெருந்தகை யாளரின் பேரன்புக்குப் பாத்தியப்பட்ட பெரியார் தொண்டர்களாகிய நாம், அவர்கள் விட்டுச் சென்றிருக்கிற பணியை, அவர் போட்டுத் தந்திருக்கிற பாதையில் எவ்விதச் சபலங்களுக்கும் ஆளாகாமல், ஒற்றுமையாக, கட்டுப்பாடாக இருந்து செயல்படு வோம் என்ற உறுதியினை எடுத்துக்கொண்டு பணி யினைத் தொடருவோம்.

(அன்னை மணியம்மையார் அவர்கள் எழுதிய அறிக்கை)

- விடுதலை  (10.1.1974)

அய்யா அறிவித்த போராட்டம்

அய்யா அவர்கள் வெறும் சொத்துகளை மட்டும் விட்டுச் செல்லவில்லை; காலத்தால் அழிக்க முடியாத கருத்துச் செல்வங்களை - கொள்கைக் கருவூலங்களைச் சேமித்து வைத்துவிட்டுச் சென்று இருக்கிறார்கள்.

அந்தக் கருத்துகள் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல - இந்தியாவிற்கு மட்டுமல்ல - மனித சமுதாயத்திற்கே தேவையான கருத்துகள். அந்த கருத்துகளை உலகமெல்லாம் பரப்ப வழிவகை செய்ய வேண்டும்.

பிரச்சாரம் மட்டும் முக்கியமல்ல. இனி நாம் மேற்கொள்ள வேண்டியதெல்லாம் அவற்றைச் செம்மையாகச் செயல்படுத்துவதேயாகும்.

கழகத் தோழர்களிடையே புதிய வேகம் கிளம்பி இருக்கிறது. பொதுமக்களிடத்தே நிரம்ப ஆதரவு பெருகி இருக்கிறது. அய்யா இன்று இல்லையே; நாட்டிற்கு நாதி இல்லையே என்று அவர்கள் வேதனைப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்தச் சந்தர்ப்பத்தை நாம் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அய்யா அவர்கள் அறிவித்துச் சென்ற போராட்டத்தை நாம் தொடங்கி வெற்றிகரமாக முடிக்க வேண்டும்.

(காஞ்சி, தர்மபுரி, சேலம், தஞ்சை, காரைக்குடி ஆகிய ஊர்களில் நடந்த பொதுக்கூட்டங்களில் அன்னை மணியம்மையார் அவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கம்).

- விடுதலை (27.01.1974)

பொறுப்பை உணர்ந்தே இருக்கிறேன்

தந்தைக்குப் பிறகு அன்னை இருக்கிறார்கள் என்று நம் தோழர்கள் கூறினார்கள். அன்னை இருப்பது உண்மைதான்; அந்த அன்னை யாரை நம்பி இருக்கிறார்கள் என்றால், அய்யா அவர்கள் தயாரித்து உருவாக்கி விட்டிருக்கிற எண்ணற்ற எஃகு உள்ளம் கொண்ட தன்னலமற்ற தனயர்களை நம்பித்தான் இருக்கிறார். அந்தத் தனயர்களின் ஒத்துழைப்பு அய்யா காலத்தில் இருந்ததுபோல் நிச்சயம் இருக்கும் என்ற நம்பிக்கைதான் இந்தப் பொறுப்பை ஏற்கும் தைரியத்தை எனக்குக் கொடுத்திருக்கிறது. அய்யா அவர்களது இடத்தை யாரும் பூர்த்தி செய்ய முடியாது. ஆனால், அவர் இலட்சியத்தைப் பூர்த்தி செய்ய நம்மால் முடியும்.

இந்தப் பொறுப்பை ஏற்பதில் இருக்கிற ஆழமான கருத்தை  உணர்ந்தே இருக்கிறேன்.

இதை நான் பெருமையாகக் கருதிவிடுவே னேயானால், அந்தப் பெருமையே  காரியங்கள் நடை பெறுவதில் குந்தகத்தை ஏற்படுத்தி விடும் என்று நல்லவண்ணம் உணர்ந்தே இருக்கிறேன்.

(காஞ்சி, தருமபுரி, சேலம், தஞ்சை, காரைக்குடி ஆகிய ஊர்களில் நடந்த திராவிடர் கழக மாவட்ட நிர்வாகக் குழுக் கூட்டங்களில் அன்னை மணியம்மையார் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து)

- விடுதலை (29.1.1974)

பயிற்சிதான்

எல்லாத் துறைகளிலுமே அய்யா அவர்கள் நமக்கு நல்ல பயிற்சியை அளித்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.

அய்யா அவர்களின் மறைவுக்குப் பிறகு நம் மிடையே குழப்பம் தலைதூக்காமல் கட்டுப்பாடும், ஒற்றுமையும் நிலவுகிறது என்றால், அதற்குக் காரணம் என்ன? அது அய்யா அவர்கள் நமக்குத் தந்துவிட்டுப் போயிருக்கிற பயிற்சிதான்.

(இராசபாளையம், மதுரை, நாகர்கோவில், திருநெல்வேலி ஆகிய ஊர்களில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடந்த உறுதிநாள் கூட்டங்களில் அன்னை மணியம்மையார் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து)

- விடுதலை (2.2.1974)

சுதந்திரத்தின் பேரால்...

நம் ஆட்சி நமது நாட்டுக் குடிமக்களால் ஆளப்படு மானால், நம் நாட்டு மக்களுடைய ஆட்சியாக இருக் குமானால் - நம் நாட்டு மக்களுக்காக ஆளப்படும் ஆட்சியாக நடைபெற்று வருமானால், இந்த மாதிரி யான ஒரு போராட்டத்திற்கு அவசியமே ஏற்பட்டி ருக்காது.

ஆனால், அதற்கு மாறாக நமது நாடு, நமக்குச் சிறிதும் சம்பந்தமேயில்லாத, நம்முடைய வாழ்வைப் பற்றிக் கவலைப்படாத, நம்மை அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்தி வருகிற ஜாதியின் கையில் சிக்கிக்கொண்டு அவதிப்பட்டுக் கொண்டிருப்பதால், நம்முடைய இழிதன்மை இந்த இருபதாம் நூற் றாண்டிலும்கூட ஒழிக்கப்பட முடியாத நிலையிலே இருந்து வருகிறது. நம் அருமை தந்தை பெரியார் அவர்கள் அடிக்கடி எடுத்துக்காட்டி வந்தது போல சண்டையிலே ஜெயித்த மக்கள் தோற்றுப் போன மக்களை எவ்வளவு கேவலமாக நடத்துவார்களோ, அந்தப்படிதான் இன்றைக்கு சுதந்திரத்தின் பேரால், ஜனநாயகத்தின் பேரால், ஆட்சி, சட்டம் என்கிற அமைப்பின் பேரால் இன்றைய ஆட்சியாளர்களான பார்ப்பனர்களும், வடநாட்டுக்காரர்களும் நம்மை நடத்தி வருகிறார்கள்.

(அன்னை மணியம்மையார் அவர்கள் எழுதிய தலையங்கம்)

- விடுதலை 9.3.1974

கட்டுப்பாடு

நம்முடைய எண்ணமெல்லாம் நம்முடைய கொள்கைகள் நாட்டிலே வேகமாகப் பரவ வேண்டும் என்பதுதான். அதற்கான கொள்கை விளக்கங்களை எல்லாம் அய்யா அவர்களே புத்தகங்களாகத் தந்துவிட்டுப் போயிருக்கிறார்கள். நேரத்தைச் சிறிதும் வீணாக்காமல் அவற்றையெல்லாம் நன்கு படித்துப் பயன் பெறவேண்டும். மேடையில் ஒவ்வொரு நாளும் எவ்வளவு நேரம் பேசினோம் என்று எண்ணாமல், இன்று என்ன புதிய செய்தி சொன்னோம் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்; அதற்கான புத்தகங்களை நிறையப் படிக்க வேண்டும்.

ஒவ்வொருவரும் கருஞ்சட்டை அணியாமல் எந்த நிகழ்ச்சிக்கும் போகக் கூடாது. அய்யா அவர்கள் கடைசி வரை வெயிலின் காரணமாக எவ்வளவு புழுக்கமாக இருந்தாலும் யாராவது பார்க்க வருகிறார்கள் என்றால் உடனே கறுப்புச் சட்டையை அணிந்து கொள்வார்கள். ஒவ்வொரு கட்சிக்கும் பல சின்னங்கள் இருப்பதைப் போல், காங்கிரசுக்கு கதர் என்று இருப்பதைப் போல் மதவாதிகளுக்கும் பல சின்னங்கள் உள்ளன.

நாம் அணியும் கருஞ்சட்டை நம்மைப் பார்த்த வுடன் இவர்கள் சமுதாயத் தொண்டு செய்பவர்கள், மூடநம்பிக்கையை ஒழிப்பவர்கள், சாதியை ஒழிப்ப வர்கள் என்பதோடு, இவர்கள் எல்லாம் பெரியாரின் தொண்டர்கள் என்கிற வகையில் பாராட்டுவார்கள்.

(சென்னை பிரச்சாரப் பயிற்சிப் பள்ளியை முடித்து வைத்த கழகத் தலைவர் அன்னை மணியம்மையார் அவர்கள் மாணவர்களிடையே ஆற்றிய உரை)

- விடுதலை (28.5.1974)

இராவண லீலா

இராமனைக் கொளுத்துவது என்பது வெறும் விளம்பரத்திற்காகவோ, நம் பெருமையைத் தம் பட்டம் அடித்துக் கொள்வதற்காகவோ அல்ல மற்றும் வடநாட்டு வறட்டுப் பிடிவாதத்திற்கு எதிர் நடவ டிக்கை என்று மட்டுமே எவரும் கருதிவிடக் கூடாது. சாதியை ஒழிக்க வேண்டும் என்று உண்மையாக நம்புகிறவர்கள் எவரானாலும் செய்து தீர வேண்டிய ஒரு முக்கிய மானம் காப்பாற்றும் முயற்சியும் ஆகும். பார்ப்பனர்கள் எப்போதும் மரத்திற்குப் பின் மறைந்து நின்று செயல்படும் இராமனைப் போல், எதற்கும் பின்னால்தான் இருப்பார்கள். நமது சுக்ரீவர்களும், அனுமார்களும், விபீஷணர்களும்தான் குதியாட்ட மும், கும்மாளமும் போடுவார்கள். இது அன்றைய இராமாயணக் காலம் தொட்டு இன்றைய இராணவ லீலா காலம் வரை பளிங்குபோல் தெரியும் சரித்திர உண்மையாகும். இதுகுறித்து நாம் அதிசயப்படவோ, அதிர்ச்சி யடையவோ தேவையில்லை எனலாம்.

(இராவண லீலா குறித்து அன்னை மணியம்மையார் அவர்கள் எழுதிய அறிக்கை)

- விடுதலை (22.12.1974)

இன எதிரிகளுக்கு எச்சரிக்கை

நாம் நடத்திக் காட்டிய இராவண லீலா நிகழ்ச்சி இந்தியத் துணைக் கண்டத்தில் மட்டுமல்ல; உலகம் முழுவதுமே ஒரு பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. நாம் இராமனையும், சீதையையும், இலட்சுமணனையும் எரித்தது ஏதோ ஒரு பரபரப்புக்காக அல்ல; போட்டிக் காகவும் அல்ல! நம்மை வெறுப்பவர்களை நாம் வெறுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படை யில்தான். வருடாவருடம் இராம லீலா அங்கு நடக்குமானால், வருடாவருடம் இராவண லீலாவும் வீட்டுக்கு வீடு, வீதிக்கு வீதி தமிழகத்தில் நடந்தே தீரும். தந்தை பெரியார் அவர்கள் நமக்கு ஊட்டிச் சென்றிருக்கிற தன்மான உணர்வு எத்தகையது என்பதை அளவிட அது ஒரு வாய்ப்பாகவே நிச்சயம் அமையும் என்பதை இன எதிரிகளுக்கு எச்சரிக்கை யாகக் கூற விரும்புகிறேன்.

நம் இன எதிரிகள் நினைக்கக் கூடும், இந்தியாவின் ஆட்சிதான் நம் இனத்தவர் இந்திராவின் கையிலே இருக்கிறதே, மத்திய அமைச்சர்கள் எல்லோருமே நம் இனத்தவர்களாகத்தானே இருக்கிறார்கள், அரசமைப்புச் சட்டமும் நமக்குச் சாதகமாகத் தானே இருக்கிறது. இவர்கள் என்ன செய்துவிட முடியும் என்று நம்மை ஏளனமாகக் கருதக் கூடும். நம் உரிமைக் குரலை மதிக்க மறுக்கவும் கூடும். ஆனால், அதன் விளைவு எங்கு கொண்டு போய் முடியும் என்பதை எண்ணிப் பார்க்கும்படி வேண்டுகிறேன்.

(தென் மாவட்டங்களில் கழகத் தலைவர் அன்னை மணியம்மையார் அவர்கள் மேற்கொண்ட சிறப்பான சுற்றுப்பயணத்தின்போது பொதுக் கூட்டங்களில் கலந்துகொண்டு ஆற்றிய உரைகளின் தொகுப்பு)

- விடுதலை (7.4.1975)

ஆடம்பரம் அற்ற வாழ்வு

நான் முன்பு குறிப்பிட்டதுபோல் 50 சதவிகிதம் நமக்குப் பதவிகளிலே, உத்தியோகங்களிலே அரசாங்கம் ரிசர்வேஷன் செய்ய வேண்டும். மற்றும் பெண்கள் இன்றைக்கு ஆடம்பரத்தில் ரொம்பவும் மோகமாக இருக்கின்றார்கள். அதனைத் தவிர்க்க வேண்டும். உடுக்கும் துணி, அணியும் நகை முதலிய வற்றில் பெண்கள் பைத்தியமாக இருக்கின்றார்கள். இங்கு அவை கொஞ்சம் குறைவு. நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். உங்களிடம் இருந்து நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டியவை பல உள்ளன. உங்களது உணவு, உடை முதலியவற்றை மற்ற நாட்டு மக்கள் மிகவும் பின்பற்ற வேண்டும். உங்கள் உணவு மிகவும் எளிய உணவு; உங்களுடைய உடை மிகவும் ஆடம்பரம் இல்லாத சாதாரண உடை. அதே நேரத்தில் மிகவும் சுத்தமான உடை. ஆடம்பரம் அற்ற வாழ்வு. இத்தகைய பழக்கங்களை மற்றப் பகுதி மக்களும் பின்பற்றினால்கூட நாம் ஓரளவுக்கு முன்னேறி விடலாம்.

(கேரள மாநிலம் வைக்கத்தில் நடந்த வைக்கம் சத்தியாக்கிரகப் பொன் விழாவில், 26.4.1975 அன்று பெண்கள் மாநாட்டைத் திறந்து வைத்து அன்னை மணியம்மையார் அவர்கள் ஆற்றிய உரை)

- விடுதலை (23.5.1975)

- விடுதலை நாளேடு, 10.3.20

செவ்வாய், 10 மார்ச், 2020

சமஸ்கிருத "சனியன்" (தேசியத் துரோகி) - 54

தேசியத் துரோகியாகிய நாம் கூறும் விஷயங்கள் முழுவதும், எழுதும் சங்கதிகள் எல் லாம், மக்களுக்குப் பயன்படாத பழைய காரியங்களில் ஆசையுடையவர் களுக்கு வெறுப்பாகத்தான் இருக்கும். ஆனால் அதைப் பற்றி அதாவது எவருடைய வெறுப்பைப் பற்றியும் எதிர்ப்பைப் பற்றியும் நாம் கவலைப் படுவது கிடையாது. ஆகவே இப்பொழுது ஒரு தேசியத்தைக் கண்டிக்கவே இந்த முகவுரையைக் கூறிக் கொண்டு முன்வந்தோம்.

சென்னை மாகாணத்தில் கல்வியிலாகாவில் சிக்கனம் செய்வதைப் பற்றி ஆலோசனைக் கூறிய சிக்கனக் கமிட்டியார் கூறியிருக்கும் யோசனைகளில் சென்னைப் பிரசிடென்சிக் கல்லூரியில் உள்ள சமஸ்கிருத ஆனர்ஸ் வகுப்பை எடுத்து விட வேண்டும் என்பதும் ஒரு யோசனையாகும்.

உண்மையிலேயே, தேசமக்கள் கல்வியினால் அறிவு பெறவேண்டும்; கல்வியினால் பகுத்தறிவு பெறவேண்டும் என்று விரும்புகின்றவர்கள் சமஸ்கிருதக் கல்வியை எடுத்து விடுவது பற்றிக் கொஞ்சமும் கவலையோ, வருத்தமோ அடையமாட்டார்கள். ஏனென் றால் இன்று இந்து மதம் என்று சொல்லும் ஒரு கொடுமையான மதம் இருப்பதற்கும், இந்த இந்து மதத்திலிருந்து பிறந்த ஜாதிக்கொடுமை, சடங்குக்கொள்ளை, கடவுள் முட்டாள் தனம் ஆகியவைகள் கற்றவர்கள் கூட்டத்திலும், கல்லாத வர்கள் கூட்டத்திலும், தலைவிரித்தாடி அவர்கள் உழைப் பையும், அறிவையும், சுதந்திரத்தையும் கொள்ளை கொண்டிருப்பதற்கும் காரணம் சமஸ்கிருதமேயாகும். இன்று வருணாசிரமக்காரர்கள் சனாதன தருமம் காப்பாற்றப்பட வேண்டும் என்று சொல்லுவதற்கும், சுயராஜ்யத்தைவிட சனாதன தருமமும், வருணாசிரம தருமமும் காப்பாற்றப்படுவதே முக்கியமானதென்று சொல்லுவதற்கும் சமஸ்கிருதப் பாஷைப் படிப்பும் அதில் உள்ள நூல்களுமே காரணமாகும்.

தீண்டத்தகாதவர்களைத் தெருவில் நடக்கக் கூடாது; கோயிலுக்குள் செல்லக்கூடாது; குளத்தில் குளிக்கக் கூடாது; பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படிக்கக்கூடாது என்று சொல்லுவதற்கும் காரணம் சமஸ்கிருத நூல்களேயாகும். சாரதா சட்டம் போன்ற சீர்திருத்தச் சட்டங்களைச் செய்யக்கூடாது என்று சொல்லுவதற்கும், பொட்டுக் கட்டு வதைத் தடுக்கும் சட்டம், பிரஜா உற்பத்தியைக் கட்டுபடுத்துவதற்கு உதவியளிக்கும் சட்டம், பெண்கள் சொத்துரிமைச் சட்டம், விவாக விடுதலைச் சட்டம் முதலியவைகளை மத விரோதமானவைகள் என்று கூறித் தடுப்ப தற்கும் திரு. சிவராஜ், பி.ஏ., பி.எல்., எம்.எல்.சி. அவர்களை எங்கும் எதையும் தின்னும் பார்ப் பனர், பார்ப்பனரல்லாதார் கூடிய சென்னை காஸ்மா பாலிட்டன் கிளப்பில் அங்கத்தினராகச் சேர்த்துக்கொள்ள மறுத்ததற்கும் காரணமாயிருப்பவை சமஸ்கிருத நூல்களேயாகும். சீர்திருத்தத்திற்கு விரோதமாகக் கிளர்ச்சி செய்து குரைத்துக் கொண்டு தொண்டை வீங்குகின்ற வர்ணாசிரமக் கூட்டத்தார்கள் எல்லோரும் தங்கள் கொள்கைகளுக்குச் சமஸ்கிருத, வேத, புராண, இதிகாச, ஸ்மிருதிகளையே பிரமாணங்களாகக் காட்டுகின்றனர். அவை என்ன சொல்லுகின்றனவென்று கவனிக்கின் றார்களே ஒழிய தங்கள் அறிவு என்ன சொல்லுகின்றது? உலகப் போக்கு என்ன சொல்லுகின்றது? என்று கொஞ்சங்கூடக் கவனிக்கின்றார்களில்லை. இவ்வாறு கவனிக்கக் கூடிய அறிவு அவர்களிடம் இல் லாதபடி அவர்கள் மூளையை அந்தச் சமஸ்கிருதப் பழங்குப்பைகளாகிய சாஸ்திரங்கள் என்பன உறிஞ்சி விட்டன. ஆகையால் இனி வருங்கால இளைஞர்களின் நல்ல தூய்மையான மூளைகளிலாவது கோளாறு ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் அவர்களிடம் மூட நம்பிக்கைகளும், சுயநலமும் உண்டாகாமல் பகுத்தறிவும், சமதர்ம நோக்கமும் உண்டாக வேண்டுமானால் சமஸ்கிருதக் கல்வியை அடியோடு ஒழிக்க வேண்டியதே முறையாகும்.

ஆனால் நமது நாட்டில் உள்ள சமஸ்கிருதப் புராணக் குப்பைகளாலும் அவைகளைப் பார்த்துச் செய்த தமிழ்ப்புராணக் கூளங்களாலும், குடிகொண்டிருக்கும் மூட நம்பிக் கைகள் போதாதென தேசிய ஆடைகளைப் புனைந்து இந்தி என்னும் பாஷையையும் கொண்டு வந்து நுழைத்துக் கொண்டு பார்ப்பனர்கள் நம் மக்களை ஏமாற்றுகிறார்கள்.

இந்தியைப் பரப்புவதற்காகப் பார்ப்பனர் பிரயாசைப்படுவதற்குக் காரணம் அதன் மூலம் மீண்டும் வருணாசிரம தருமத்தையும், புராண நம்பிக்கை, மத நம்பிக்கை, பிராமண பக்தி, சடங்கு பக்தி முதலியவைகளை விருத்தி செய்து தங்கள் பழைய கவுரவத்தையும், ஏமாற்று வயிற்றுப் பிழைப்பையும் புதுப்பித்துக் கொள்ளலாம் என்பதற்காகவே என்பது சுயமரி யாதைக்காரர்களுக்குத் தெரியாத விஷயமல்ல. ஆகையால் இத்தகைய பார்ப்பனர்கள் இந்த இந்தி பாஷை முதலானவை களுக்கெல்லாம் அடிப்படையாக இருக்கும் சமஸ்கிருதத் தைக் கைவிட சம்மதிப்பார்களா? ஒருக்காலும் சம்மதிக்க மாட்டார்கள்.

ஆகையால்தான் பார்ப்பனர்கள் ஊருக்கு ஊர் கூட்டங்கூடி சென்னை அரசாங்கச் சிக்கனக் கமிட்டியர் பிரசிடென்சி கல்லூரியில் உள்ள சமஸ்கிருத ஆனர்ஸ் வகுப்பை எடுக் கும்படி சிபாரிசு செய்ததைக் கண்டிக் கிறார்கள்.

பொருளாதார நிலையைப் பற்றிய கவலையும் அவர்களுக்கில்லை. எந்தப் பொருளாதாரம் எக்கேடு கெட்டாலும் தங்கள் சுயநலத்திற்குத் துணை செய்கின்ற மதமும் அதற்குச் சாதகமாய் இருப்பவைகளும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதே அவர்களின் கொள்கையாக இருந்து வருகின்றது.

காப்பி கிளப்பு பார்ப்பான், உத்தியோகப் பார்ப்பான், அரசியல் பார்ப்பான், சட்ட மறுப்புச் செய்து ஜெயிலுக்குப் போகும் பார்ப்பான் உள்பட எல்லோரும் இக்கொள் கையைக் கைவிடாமலே வைத்துக் கொண்டு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் ஆகையால் இச்சமயத்தில் நாமும் கிளர்ச்சி செய்ய வேண்டும். பார்ப்பனர்களின் வெறுங் கூச்சல்களுக்குப் பயந்து கொண்டு அரசாங்கத்தார் சிக்கனக்கமிட்டியில் சிபாரிசைக் கைவிட்டு விடக் கூடாதென எச்சரிக்கை செய்யவேண்டும். சில பார்ப்பன ரல்லாதவர் வாலிபர் சங்கங்களிலும், சுயமரியாதைச் சங்கங்களிலும், சிக்கனக் கமிட்டியின் யோசனையைப் பாராட்டியும் இன்னும் சமஸ்கிருத கல்விக்காகக் கொடுக்கும் உபகாரத் தொகையை நிறுத்தும் படியும் தீர்மானங்கள் செய்து அரசாங்கத்திற்கு அனுப்பியிருக்கிறார்கள்.

இவ்வாறே நாடெங் கும் பலத்தீர்மானங்கள் செய்து அரசாங்கத் தாரை எச்சரிக்கை செய்ய வேண்டும். அப் பொழுதுதான் சமஸ்கிருதச் சனியன் ஒழியும்.

17. 01. 1932 - குடிஅரசு

- விடுதலை நாளேடு, 10.3.20