திங்கள், 22 ஜூலை, 2024

அன்னையாரின் தலைமை தாங்கும் ஆளுமைக்கு ஓர் எடுத்துக்காட்டு


 தந்தை பெரியார் அறிவித்த ஜாதி ஒழிப்பு போராட்டமான அரசமைப்புச் சட்ட எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு திருச்சி சிறையிலிருந்த பட்டுக்கோட்டை இராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி ஆகிய இரு கழக வீரர்கள் உணவுக் கோளாறு, அதிக ரத்தவயிற்றுப் போக்கினால் சரியான சிகிச்சை அளிக்காததால் மாண்டனர். அவர்களை காவல் துறையினர் சிறைக்கு உள்ளேயே புதைத்து விட்டனர். அவர்களது உறவினர்களுக்குக் கூட உடல்களை தரவில்லை! இந்தச் செய்தி அறிந்த மணியம்மையார் அவர்கள் கொதித்தார். அவசரமாக திருச்சி செல்ல முயன்றோம்.

நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்கள் பிளைமவுத் கார் வைத்திருந்தார். அவரும் வந்தார். அவருடைய காரில் அம்மாவும், நானும் உடனே திருச்சி சென்றோம். அம்மா இதனை அறிந்தவுடன் எப்படியும் இதற்கு பரிகாரம் தேடிட உடனே முனைந்தார். அதே காரில் சென்னை திரும்பி, மருத்துவமனையிலிருந்த அய்யாவை சந்தித்தார். அய்யா ஆணைப்படி, அன்றைய முதலமைச்சர் காமராசரை அவரது இல்லத்தில் நேரே சந்தித்து “இது தர்மமா? இறந்த எங்கள் தோழர்களின் உடல்களைக் கூட எங்களிடம் ஒப்படைக் காமல் உள்ளேயே அனாதைப் பிணங் களைப்போல் புதைத்து விடுவதா?” என்றெல்லாம் கொதித்துக் கேட்டவுடன், அவர் மிகவும் அதிர்ச்சியுடன், “அம்மா! நான் உடனே தவறை சரிப்படுத்தச் சொல்கிறேன், சங்கடப்படாதீர்கள்” என்று சமாதானம் சொன்னார். அம்மா திருச்சி திரும்புவதற்கு முன் பெரியார் மாளிகை முன் பெரிய கூட்டம். அவர்களை நானும் மற்ற இயக்கத் தோழர்களும் சமாதானப்படுத்தி வைத்திருந்தோம்.

சிறை அதிகாரிகள் பெரியார் மாளிகைக்கு வந்து ‘இருவர் உடலையும் வாங்கிக் கொள்ளுங்கள்‘ என்றார்கள். நாங்கள் அவர்களது உறவினர்களை அழைத்துச் சென்று வாங்கி வந்து பெரியார் மாளிகையில் மரியாதை செலுத்தும் வகையில் பார்வைக்கு வைத்திருந்தோம். அம்மா சென்னையிலிருந்து திரும்பிய பின்பே இறுதி ஊர்வலம்; அடக்கம் என்றோம். புதைக்கப்பட்ட அவ்விருவரது உடல்கள் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு, சிறை அதிகாரிகளால் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டது! சிறை நிர்வாகத்தின் இச்செயலைக் கண்டித்து கழகத் தோழர்கள், பொதுமக்கள் ஆத்திரம் கொப்பளிக்க அலை அலையாய் பெரியார் மாளிகை முன்பு சேர்ந்து கொண்டேயிருந்தனர்.
காவல் துறை அதிகாரிகளுக்கு நிலைமை கட்டுக்கடங்காது சென்று விடுமோ என்ற அச்சம் உலுக்கியதால், அவர்கள் உடனே உடல்களை எடுத்துப் பக்கத்தில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்து விடுங்கள் என்று, வழக்குரைஞர் வேதாச்சலனாருக்கு வற்புறுத்தலைத் தந்தனர். அவரும் தலை அசைத்து காவல் துறையினரின் குரலாகிவிட்டார். கழக தோழர்களோ உடன்படவில்லை. நானும் மற்ற தோழர்களும், பிடிவாதமாக அம்மா திரும்பி வந்த பிறகே இறுதி ஊர்வலம்.

அதுவும் காவிரிக் கரை சுடுகாட்டு மைதானம் வரை ஊர்வலம் நகர் முழுவதும் செல்லும் என்றோம். ஒரே பரபரப்பு. கொந்தளிப்பு. அம்மா வருவதற்குள் வேதாச்சலனாரின் நெருக்கடி வற்புறுத்தலால் ஊர்வலம் புறப்பட்டு திருச்சி தில்லை நகர் திருப்பம் வரும் போது அம்மா வந்துவிட்டார். எனக்கு நிம்மதி பெருமூச்சு. கடமை இனி அவருடையது. அவரது தலைமையில் ஊர்வலம் மிகப் பிரமாண்டமாக காந்தி நகர் மார்க்கெட் வழியே பெரிய கடைவீதி வழிச் செல்ல முயன்ற போது தலைமை காவல் அதிகாரி உட்பட வந்து தடுத்தனர். அம்மாவோ இசையவில்லை. ‘அனைவரும் அப்படியே உட்காருங்கள்’ என்றார். அதைக்கண்டு காவல் துறையினர் நெருங்கி அவர்களைத் தடுக்காமல் விட்டுவிட்டனர். இறுதி ஊர்வலம் நேரே சுடுகாட்டினை அடைந்தது. பல லட்சக்கணக்கான மக்கள் ஜாதி ஒழிப்பு வீரர்களுக்கு சாலையில், -கடை வீதியில், இருமருங்கிலும் நின்று மரியாதை செலுத்தினர்.
அது திருச்சி வரலாற்றில் ஒரு குறிப்பிட்டதொரு மனித உரிமைப் போராட்ட நிகழ்ச்சி. அன்னை மணியம்மையார் எப்படிப்பட்ட வீராங்கனை என்பதை உலகறியக்கூடிய வாய்ப்பும் தலைமை தாங்கக்கூடிய தனித்தகுதியும் அவருக்கு உண்டு என்பதை இக்கட்டான அந்த நிலைமையை சமாளித்த விதமே காட்டியது.


ஆசிரியர் கி.வீரமணி,
அய்யாவின் அடிச்சுவட்டில், பாகம் – 1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக