செவ்வாய், 9 ஜூலை, 2024

குடிஅரசு’ எழுத்துலகில் புரட்சி செய்த திராவிடர் இயக்கத்தின் போர்வாள்!- முனைவர் துரை.சந்திரசேகரன்

 

விடுதலை நாளேடு

- முனைவர் துரை.சந்திரசேகரன்


இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சிந்தனையாளர் தந்தை பெரியாரின் பொதுவாழ்வு என்பது அவர் ஈரோடு நகரசபை தலைவராக இருந்து மக்கள் தொண்டாற்றிய 1917 முதல் தொடங்குவதாகக் கொள்ளலாம். அவரின் நிர்வாக ஆளுமைக்கு மக்கள் நலத்தில் இருந்த அக்கறைக்கு இன்றும் சாட்சியாக இருப்பது ஈரோட்டில் நூற்றாண்டு கண்ட சிறப்பினைப் பெற்ற குடிநீர் தேக்கத் தொட்டி. அய்யாவின் செயல்பாட்டின் சிறப்பை உணர்த்திடும் வகையில் இன்றைக்கும் அந்த குடிநீர்த் தொட்டி செயல்பட்டு வருவதைக் காணலாம்!

1919இல் மோதிலால் நேரு தலைமையில் நடைபெற்ற அமிர்தசரஸ் காங்கிரஸ் மாநாடு பெரியார் பங்கு பெற்ற மாநாடு. காங்கிரசில் இணைந்து நாட்டின் விடுதலைக்கும், மக்களின் வாழ்வாதார விடுதலைக்கும் தொண்டாற்ற விரும்பிய பெரியார் தமது மக்கள் பணிக்கு காங்கிரசு ஏற்புடையதாக இருக்குமென்று கருதியே தீவிரமாக செயல்படத் தொடங்கினார் – 1919 ஆண்டு முதல். ஜாலியன் வாலாபாக் படுகொலையும் பெரியாரின் உள்ளத்தை பெரிதாக பாதித்தது. காங்கிரசில் இன்னும் தீவிரமாக உழைத்துப் பாடுபடலானார்.

வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை காங்கிரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். அத்தோடு மாகாண காங்கிரசு மாநாட்டில் தீர்மானமாக ஏற்று பார்ப்பனரல்லாதாரின் உரிமைகளை அங்கீரிக்க வேண்டும் என வலியுறுத்திவும் செய்தார் பெரியார். தீர்மானம் கொண்டுவர அவரே முனைப்பு காட்டினார். உரிய முயற்சிகளையும், வற்புறுத்தலையும் செய்து ஆதரவும் திரட்டினார்.

1920இல் திருநெல்வேலி,
1921இல் தஞ்சாவூர்,
1922இல் திருப்பூர்,
1923இல் சேலம்,
1924இல் திருவண்ணாமலை,
1925இல் காஞ்சிபுரம் மாநாடு

என தொடர்ந்து நடைபெற்ற காங்கிரசு மாநாடுகளில் பெரியாரின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. பெரியாரின் முயற்சிக்கு தொடர்ந்து தோல்வியே கிடைத்தது.

மக்களிடையே தமது கருத்துகளை கொண்டு செல்லவும், விடுதலை உணர்ச்சியை ஏற்படுத்தவும், எண்ணங்களை ஈடேற்றவும் ஒரு பத்திரிகை அவசியம் என்பதை உணர்ந்தார்.

தாம் முன்மொழியக்கூடிய தீர்மானங்கள் மக்கள் நலத்துக்கானது. மானுட உரிமைக்கானது. சமூகநீதி கோருவது. ஆயினும் காங்கிரசு தலைவர்கள் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட மறுக்கிறார்களே… என்றெல்லாம் எண்ணிய தந்தை பெரியார் பத்திரிகையின் அவசியத்தை உணர்ந்ததிலோ, தொடங்க வேண்டும் என்று எண்ணியதிலோ வியப்பில்லை.

பெரியாரின் தன்னம்பிக்கை!

“தமிழ் மக்களுக்குத் தேவையான சில கருத்துகளைச் சொல்லிப் பதிந்தாக வேண்டும். இன்று ஏற்றுக்கொள்ளா விட்டாலும், நாளை ஒரு நாள் ஏற்றுக் கொள்ளும் நிலை வரும். இக்கருத்துகளைச் சொல்லும் நிலையில் நான்தான் இருக்கிறேன்.

சொல்ல வேண்டிய கருத்துகளை நானே எழுதி, நானே அச்சுக் கோத்து, நானே அச்சிட்டு, நானே படித்துக் கொள்ளும் நிலைக்குப் போனாலும் ‘குடிஅரசை’ வெளியிட்டு என் கருத்துகளை வரும் தலைமுறைகளுக்கு விட்டுச் செல்ல வேண்டியது எனது கடமை (‘குடிஅரசு’ – 10.6.1929) என்று அவர் சொன்னதில் உள்ள தன்னம்பிக்கை வருங்காலத் தலைமுறை பற்றிய கவலை, கடமை உணர்வு அவருக்கு இருந்தது என்பதை நாம் உணர முடியும்.

1922 கோவை சிறையில் ‘குடிஅரசு’ ஏடு தந்தை பெரியாரின் எண்ணத்தில் கருக்கொண்டது.

19.1.1923இல் காங்கிரசில் தலைவராக இருந்தபோதே ‘குடிஅரசு’ பதிவு பெற்றது.

2.5.1925இல் பெரியாரால் நிறுவப் பெற்று, வ.மு.தங்கபெருமாள் பிள்ளை ஆசிரியர் பொறுப்பில் உருப்பெற்றது ‘குடிஅரசு’. கடலூர் – திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகள் தொடங்கி வைத்தார். ‘குடிஅரசு’ உதயமானது.

தங்கள் புரட்சிக் கருத்துகளைப் பரப்புவதற்கு மக்கள் பெரும் பயன் குவிப்பதற்கு காரல் மார்க்சுக்கு, ‘ரைனிஷ்’ இதழ் உதவியதைப் போல –மாமேதை லெனினுக்கு இஸ்க்ரா, ஸார்யா, ரயோச்சயா, கஸேத்தா பயன்பட்டதைப் போல-மக்கள் தலைவர் ஹோசிமின்னுக்கு வியத்லாட் உழைத்ததைப் போல –ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளி அம்பேத்கருக்கு ஜனதா, பகிஷ்கரத் பாரத் தோன்றாத் துணை நின்றதைப் போல-
இந்திய தேசத் தந்தை காந்தியாருக்கு ‘அரிசன்’, ‘யங் இந்தியா’ ஊன்று கோலாய் இருந்ததைப் போல-

அறிவுலகத் திருத்தூதுவராம் தந்தை பெரியாருக்கு ‘குடிஅரசு’ கருத்துப் பரவல் தூதுவனாய் அமைந்தது எனலாம்.

குடிஅரசின் முழக்கங்கள்!

 

“மனுநீதி போன்ற அதர்ம நீதி உலகில் மற்றொன்றும் இல்லை.”
“சூத்திரன் என்று உன்னைச் சொல்லிக் கொள்ளாதே.”
சூத்திரன் என்றால் வேசி மகன் என்று பொருள்.
“இறந்தவர்களைத் திருப்தி செய்யப் பார்ப்பனர்கள் வயிற்றை நிரப்பாதே”
“சுயமரியாதை பெற்றால் – சுயராஜ்யம் பெறலாம்!”
இப்படிப்பட்ட முழக்கங்கள் வெளியிடப் பெற்றிருந்தன.

முதல் ‘குடிஅரசு’ இதழிலேயே இவ்வாறு நோக்கங்களை பதிவு செய்திருந்தார் பெரியார்.

“நமது நாடு அரசியல், பொருளியல், சமூகவியல், ஒழுக்கவியல் முதலிய எல்லாத் துறைகளிலும் மேன்மையுற்று விளங்கச் செய்ய வேண்டும்.

நாட்டு மக்களின் உடல் வளர்ச்சிக்காகவும், அறிவு வளர்சசிக்காகவும், கலை வளர்ச்சிக்காகவும், மொழி வளர்ச்சிக்காகவும் இதன் மூலம் உழைத்து வருவோம்.

ஒவ்வொரு வகுப்பும் முன்னேற வேண்டும். இதை அறவே விடுத்து தேசம், தேசம் என்று கூக்குரலிடுவது எமது பத்திரிகையின் நோக்கமன்று.

மக்களிடம் தன் மதிப்பும், சமத்துவமும், சகோதரத்துவமும் ஓங்கி வளருதல் வேண்டும்.
மக்கள் அனைவரும் அன்பின் மயமாதல் வேண்டும்.”

(2.5.1925 – ‘குடிஅரசு’)

 

“மனித சமூகத்தில் சுயமரியாதை உணர்ச்சியும் சகோதரத்துவமும் தோன்ற வேண்டும். ஒருவன் உயர்ந்தவன், ஒருவன் தாழ்ந்தவன் என்ற எண்ணம் அகல வேண்டும். உலகுயிர் அனைத்தும் ஒன்றெனும் எண்ணம் உதிக்க வேண்டும்.

 

மேற்சொன்ன கொள்கைகளையாவது நாம் சிறிதளவு பயமின்றி எதிர்த்துச் சினேகிதர் – விரோதி என்ற வித்தியாசமில்லாமல் யாவரையும் கண்டிக்க நாம் பயப்படப் போவதில்லை” (2.5.1925 – குடிஅரசு)

தெளிந்த குறிக்கோளும், அச்சமற்ற தன்மையும் ‘குடிஅரசு’க்கு இருந்ததை தந்தை பெரியார் தெளிவாக்கி உள்ளதைப் பாருங்கள்.

 

‘குடிஅரசு’ – ‘புரட்சி’ எழுத்துகள்

 

“பிராமணரல்லாத இந்துக்களுடைய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைவிடத் தீண்டாதாரின் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் மிகவும் முக்கியமானது என்பதை நாம் கோபுரத்தின் மீதிருந்தும் சொல்வோம். ஏனெனில், சமுதாயப் பெருக்கத்துக்குத் தக்கவாறு கல்வியிலோ, உத்தியோகத்திலோ மற்றும் பல பொது வாழ்க்கையிலோ; அவர்கள் முன்னேறவே இல்லை.”

“மனித ஜீவனுக்கு எல்லாவற்றையும் விட முக்கியமான உணர்ச்சியாக மான அவமானமென்னும் தன்மானம் ஆகிய சுயமரியாதையைத்தான் பிறப்புரிமையாகக் கொள்ள வேண்டியிருக்கும்.” (9.1.1927 – குடிஅரசு)

“சமத்துவம், சுயமரியாதை என்பது நமது நாட்டிலுள்ள அனைவருக்கும் ஏற்பட்டாலன்றி, அதற்கு முன்னர் கிடைக்கும் சுயராஜ்யம் ஒரு ஜாதியார் (பார்ப்பனர்) பிழைப்பதற்கு இருக்குமே அல்லாது வேறில்லை.”

இவ்வாறு சுயமரியாதை என்ற கருத்தையே பரப்பிட ‘குடிஅரசு’ துணை நின்றது.

குடிஅரசின் மானிடப் பற்றுமிக்க
கட்டுரைத் தலைப்புகள்

குடிஅரசின் சில கட்டுரைத் தலைப்புகளைப் பார்த்தாலே தந்தை பெரியாரின் எழுத்தாற்றல், மானுடப் பற்று, மனித உரிமைக்குரல் வெளிப்படும் என்பதை உணரலாம்.

*தமிழர்களே! உங்களுக்கு புத்தி இல்லையா?
*புராண ஆபாசங்கள்
*ஆச்சாரியாரின் 10 கற்பனைகள்
*தண்ணி மயக்கமா? ஆணவ மயக்கமா?
*சென்னையே என்ன செய்யப் போகிறாய்?
*முத்தையா வாழ்க!
*இன்றைய ஆட்சிமுறை ஏன் ஒழிய வேண்டும்?
*தோழர் என விளியுங்கள்!
*போர் மூண்டுவிட்டது!
*சீர்திருத்தமா? அழிவு வேலையா?
*தமிழர் ஒன்று சேர்க!
*ஜாதித் தொழிலாளர் – கூலித் தொழிலாளர்!
*மகன் செத்தாலும் மருமகள் முண்டை ஆக வேண்டும்!
*சுயமரியாதைத் திதியும் புரோகிதத் திதியும்.
*இந்தியா ஒரு நேஷனா?
*நான் சொல்லுவது கட்டளையா?
*ஏன் காங்கிரசிலிருந்து வெளியேறினேன்?
*உதவாக்கரை இலக்கியங்கள்!
*தேவர்களின் காமவிகாரம்!
*பிராமணரைவிட வெள்ளைக்காரரே மேல்…
தொடக்கக் கல்வி மட்டுமே வாய்த்த தந்தை பெரியார் பிறவிப் பேரறிவாளர் என்பதை பறைசாற்றும் தலைப்புகள். பெரியாரின் எழுத்துகள் எந்த அளவு தனித்துவமிக்கவை – கவரும் தன்மை நிரம்பியவை என்பதும் வெளிப்படும்.

வாய்மைப் போரின் ஆயுதம்

தந்தை பெரியார் நடத்திய வாய்மைப் போருக்கு வலு சேர்ப்பதற்கும், வெற்றியை ஈட்டித் தருவதற்கும் போர் ஆயுதமாக பல ஏடுகள், இதழ்கள் அவரால் தொடங்கி நடத்தப்பெற்றன. அவற்றில் முதன்மையானதே குடிஅரசு, திராவிடன், புரட்சி, பகுத்தறிவு, விடுதலை, உண்மை என பல தமிழ் ஏடுகளும், Revolt, Justicite, The Modern Rationalist முதலான ஆங்கில இதழ்களும் அவற்றில் அடங்கும்.

“உண்மைகளை அறிதல்; உண்மைகளைக் கண்டு பிடித்தல்; உண்மைகளை உலகம் அறிய வெளியிடல்; உண்மைகளை ஊன்றுவதற்காக உழைத்தல்; உண்மைகளை நாட்டும் முயற்சியில் வெல்லுதல் முதலிய குறிக்கோள் கூறுகளைத் தன்னகத்தே கொண்டதுதான் வாய்மைப் போர் என்பது” என்கிறார் பெரியாரியலாளர் பேராசிரியர் அ.இறையன்.

“மனிதத் தன்மையும், பகுத்தறிவும் உடையவன் அன்பு காட்ட வேண்டிய இடத்தில் அன்பும், கோபம் காட்ட வேண்டிய இடத்தில் கோபமும், விருப்புக் காட்ட வேண்டிய இடத்தில் விருப்பும், வெறுப்புக் காட்ட வேண்டிய இடத்தில் வெறுப்பும் காட்டித்தான் தீர வேண்டும்” (18.12.1927 – குடிஅரசு) என்று போராடிய பெரியார் நடத்திய வாய்மைப் போருக்கு உற்ற துணையாக நின்று சமர் செய்ததே குடிஅரசு.

“திராவிடர் இயக்கத்தின் போராட்ட்த்துக்கு இதழ்கள் கருவிகளாகப் பயன்பட்டன. எவரும் துப்பாக்கி தூக்கவில்லை. எழுதுகோல்தான் அவர்களின் இணையில்லா ஆயுதம்! இதழ்களையே போர்க் கருவிகளாகப் பயன்படுத்தியே திராவிடர் இயக்கம் வெற்றி பெற்றது” என்பார் இதழியலாளர் அ.மா.சாமி.

திராவிடன் – ஜஸ்டிஸ் (Justice)

1916 நவம்பர் 20ஆம் நாள் தோற்றுவிக்கப் பெற்ற ‘தென்னிந்திய நலவுரிமைச் சங்கம்’ (SILF) எனும் இயக்கத்தின் பிரச்சார ஆயுதங்கள் ‘Justice’, ‘திராவிடன்’, ‘ஆந்திர பிரகாசிகா’. ‘Justice’ எனும் ஆங்கில ஏட்டுக்கு மக்கள் மத்தியில் எந்த அளவு செல்வாக்கு இருந்திருந்தால் கட்சியின் பெயரே Justice Party என்றும், ‘நீதிக்கட்சி’ என்றும் அழைக்கப்பட்டு இருக்கும்!

நீதிக்கட்சி சார்பாக 1917இல் தோன்றிய நாளிதழே ‘திராவிடன்’. 89 பக்கங்களில் வெளிவந்தது. தொடக்கத்தில் அதன் ஆசிரியர் என்.பக்தவத்சலம். 1923இல் ஏ.சண்முகம் பிள்ளை. 1927 செப்டம்பர் முதல் சில காலம் தந்தை பெரியார்… அய்யாவுக்குப் பின் ஜனக சங்கர கண்ணப்பர் (J.s.கண்ணப்பர்) ஆசிரியராக (இதழ் நிறுத்தப்பட்ட) 1931 வரை இருந்தார்.

‘திராவிடன்’ நாளிதழ் தோன்றுவதற்கான காரணத்தைக் கூற வந்த பெரியார், “படித்திருந்த பிராமணரல்லாதார் சிலர் தாங்கள் ஏன் தாழ்த்தப்பட்டுக் கிடக்கிறோம் என்று யோசனை செய்து பார்த்ததில், பிராமணப் பத்திரிகைகளும் கட்டுப்பாடான பிராமண சூழ்ச்சிகளுமே இதற்குக் காரணம் என்று கண்டுபிடித்து, தாங்களும், மற்றவர்களைப் போல முன்னேறுவதற்குத் தங்களுக்கும் பிரச்சாரத்திற்கு ஒரு பத்திரிகை வேண்டும் என்று கருதி… ‘திராவிடன்’ பத்திரிகையை ஏற்படுத்தினார்கள்.” (மலர் 13 – இதழ் 196) என்று குறிப்பிட்டுள்ளார்.

குடிஅரசின் தாராள உள்ளம்!

தாம் நடத்திய ‘குடிஅரசு’ (30.1.1927) இதழிலும் ‘திராவிடனை ஆதரிக்க வேண்டும்’ என்று தமது வேண்டுகோளை இப்படி விடுத்துள்ளார் தந்தை பெரியார்.

“… நமக்குப் பெரிய ஆபத்தாயிருப்பது பார்ப்பனப் பத்திரிகைகளே. அப்பத்திரிகைகளின் செல்வாக்கு, நம் நாட்டை அடியோடு முற்றுகை போட்டுக் கொண்டிருக்கிறது.

… சாதாரணமாக ‘திராவிடன்’ பத்திரிகை எவ்வளவு கஷ்ட நஷ்டங்களுக்கு இடையில் நடத்தப்பட்டு வருகிறது என்பதை யாராவது உணர்கிறார்களா? அது யாருடைய நன்மைக்கு நடத்தப்படுகிறது என்பதை யாராவது அறிகிறார்களா?… கட்டின பெண்டை தெருவில் அலைய விட்டுவிட்டு தாசிவீடு காத்துத் திரிவது போல், திராவிடனை விட்டுப் பார்ப்பனப் பத்திரிகைகளைக் கட்டி அலைவதை மறந்து, நமது மானத்தைக் காப்பாற்ற உதவி செய்ய வேண்டும் என்பதாகத் தாழ்மையோடு கேட்டுக் கொள்ளுகின்றோம். இதுவே நமது மக்கள் எல்லோருக்கும் சுயமரியாதை ஏற்படச் சரியான மார்க்கமாகும்.”

குடிஅரசின் தாராள உள்ளத்தைப் பாருங்கள். நம் இனத்துக்கான இன்னொரு இதழின் வளர்ச்சியில் எந்த அளவு அக்கறை இருப்பதை எண்ணுங்கள். பெரியாரின் உயர்ந்த இதழியல் பண்பாட்டு நோக்கும் போக்கும் இதன் மூலம் புரிந்துகொள்ளலாம் இல்லையா?

‘முதல் நாளிதழ்கள் மூன்று’ என்னும் தமது நூலில் “திராவிடன் நாளிதழ் ஜாதிப் பாகுபாடுகளைப் போக்குவதிலும், மக்களிடையே மண்டிக் கிடந்த மூடநம்பிக்கைகளை அகற்றுவதிலும் பேரார்வம் காட்டியது” என்கிறார் பேராசிரியர் மா.ரா.இளங்கோவன். முதல் மூன்று நாளிதழ்களில் திராவிடனும் ஒன்று.

தகுதிமிக்க தலையங்கங்கள்!

‘தலையங்கம் என்பது இதழின் உடலும் உயிரும் ஆகும். இதழாசிரியர் சிக்கல்களை ஆய்வதுடன், தெளிவாக, துணிவாக, பயன் விளையும் வகையில் தமது கருத்தினை வெளியிடல் வேண்டும்’ என்பார் வினோத் மேத்தா.
12.8.1926 ‘குடிஅரசு’ இதழின் தலையங்கம் இதோ…

“… ஆண்மை என்னும் பதமே பெண்களை இழிவுபடுத்தும் முறையில் உலக வழக்கில் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது என்பதைப் பெண்கள் மறந்துவிடக் கூடாது. பெண்களால் ‘ஆண்மை’ என்ற தத்துவம் அழிக்கப்பட்டால் அல்லது பெண் விடுதலை இல்லை என்பது உறுதி.

… பெண்கள் விடுதலை பெறுவதற்கு இப்போது ஆண்களை விடப் பெண்களே பெரிதும் தடையாய் இருக்கிறார்கள். ஏனெனில், தங்களுடைய இயற்கைத் தத்துவங்களின் நன்மையையே, தங்களை ஆண்களுக்கு அடிமையாகக் கடவுள் படைத்திருப்பதன் அறிகுறியாய்ப் பெண்கள் கருதிக் கொண்டு இருக்கிறார்கள்” என்று ‘பெண் விடுதலை’ பற்றிய கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது.

27.5.1928 குடிஅரசு இதழில்…

“செங்கற்பட்டு ஜில்லா போர்டு ஆரம்ப ஆசிரியர் மாநாடு திரு.ஈ.வெ.இராமசாமி நாயக்கரின் அக்கிராசனப் பிரசங்கம” என்னும் தலைப்பில் பெரியாரின் உரை வெளிவந்துள்ளது.

“ஆசிரியர்களே! நான் அறிந்த வரையில் தற்கால ஆசிரியர்கள் என்கிறவர்கள் ஒருவித தொழிலாளிகளே… ஆதலால், இம்மாதிரி மாநாட்டுக்கு, உபாத்தியாயத் தொழிலாளர் மாநாடு என்று சொல்லுவதுதான் பொருத்தமாக இருக்கும். எவ்வளவு பெரிய கல்வியும் ஒரு தொழிலாகப் போய்விட்டதேயல்லாமல் பகுத்தறிவுக்கு ஒரு சிறிதும் பயன்படுவதாக இல்லை!

அய்யாவின் ‘குடிஅரசு’ உரை ஆசிரியர்களை எந்த அளவுக்கு தன் உணர்வு பெற வைத்திருக்கும், சிந்திக்கத் தூண்டியிருக்கும்!

மறைமலை அடிகளார் தந்தை பெரியாரை, சுயமரியாதை இயக்கத்தை கடுமையாகத் தாக்கிப் பேசியதாக இதழ்களில் வெளிவந்த செய்தியை அடிப்படையாகக் கொண்டு ‘பல்லாவரத்துப் பண்டிதர்’ எனும் தலைப்பில் 29.7.1928 ‘குடிஅரசு’ இதழில் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. அதற்கு மறைமலை அடிகளார் “தங்களுக்காவது, தங்கள் இயக்கத்தைச் சார்ந்த அன்பர்களுக்காவது எவ்வகையான தீங்கும் செய்ய அல்லது செய்விக்க வேண்டுமென்று யான் எண்ணியதும் இல்லை; யாண்டும் சொல்லியதுமில்லை. தாங்கள் என்னை வேறாக நினைத்து என் மீது வருந்துதல் வேண்டாம்” என்று 24.8.1928 நாளிட்ட தமது கடிதம் மூலம் கருத்தறிவித்தார்.

அக்கடிதம் கண்ட பெரியார் 2.9.1928 ‘குடிஅரசு’ தலையங்கத்தில் “திரு.வேதாசலம் (மறைமலை அடிகளாரின் இயற்பெயர்) அவர்கள் தமிழ்நாட்டில் செல்வாக்கும் மதிப்பும் பெற்ற பண்டிதர் என்பதாக நாம் கருதி வந்ததால், பத்திரிகைகளிலும், நிரூபங்களிலும் கண்டவற்றுக்குச் சமாதானம் எழுதுவது என்பது நமக்குச் சற்று சங்கடமாகவே இருக்கிறது… திரு. வேதாசலம் அவர்களிடமிருந்து ஏதாவது ஒரு தகவல் கிடைத்தால் அதை ஆதாரமாக வைத்தே அவ்விஷயங்களை நழுவ விட்டுவிடலாம் என்றும் கருதி எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம்” என்று பதிலுரை தந்திருந்தார். மறைமலை அடிகளாரிடமிருந்து அய்யா எதிர்பார்த்தது போலவே பதிலும் வந்தது – என்பது பெரியாரின் குடிஅரசின் எழுத்தின் வலிமையை, நனி நாகரிகத்தை எடுத்தியம்புவதாய் இருப்பதை அறியலாம்.

நமது இயக்கமும், தந்தை பெரியாரும் ‘திறந்த புத்தகம்’ போல… என்பது சாலப் பொருத்தமன்றோ! வரலாற்றை புரட்டிப் போட்ட முக்கியத்துவம் வாய்ந்திட்ட இதுபோன்ற தலையங்கங்கள் ஏராளம் ‘குடிஅரசு’ ஏட்டில்!

‘குடிஅரசு’ ஏட்டில் ‘தீட்டாயிடுத்து’ என்னும் தலைப்பில் கலைஞர் எழுதிய தலையங்கம், அய்யா அவர்களாலேயே பாராட்டப்பட்ட தலையங்கம்.

“… தமிழர்கள் உயிரோடு வாழும் தமிழ்நாட்டிலே தமிழர்களுடைய மொழிக்குத் தடை உத்தரவு. ஆங்கில அரசாங்கம் அல்ல – ஆரிய அரசாங்கத்தின் ஆணை. தமிழ்மொழியில் பாடியதால் மேடை தீட்டாகிவிட்டது என்ற ஆணவப் பேச்சு கிளம்பியதற்குக் காரணம் தமிழர்கள் அடிமைகளாக, அனுமார்களாக வாழ்வதுதான்” என்று தலையங்கத்தில் கலைஞரால் எழுதப்பட்ட ஒரு சிறு பகுதி. படிப்போரை – வாசகர்களை அறிவைத் தூண்டி சிந்திக்கச் செய்யும் எழுத்தல்லவா இது! (9.2.1946 – குடிஅரசு)

‘குடிஅரசு’ தமிழ் உரைநடைக்கு ஆற்றியுள்ள பங்கு – பணியைப் பற்றி தமிழறிஞர் டாக்டர் மா.இராசமாணிக்கனார் ‘இருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ச்சி’ என்னும் நூலில் பதிவு செய்துள்ள கருத்தைப் படியுங்கள்:

“பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்கள் நடத்திய ‘குடிஅரசு’ மக்களுக்கு உலக அறிவையும் நன்கு ஊட்டியது. சமய சீர்திருத்தம் பற்றிப் பல கட்டுரைகள் அதனில் வெளிவந்தன. அவற்றை எதிர்த்துப் பல கட்டுரைகள் பல இதழ்களில் வெளிவந்தன. இவ்விதமாக அவை தமிழ் உரைநடையை வளர்த்தன.”

“பெரியார் அவர்கள் மிகுதியான அளவுக்குத் தமிழை இந்த நூற்றாண்டில் பயன்படுத்திய பெருமைக்குரியவர்… அவர் கையாண்ட மொழிநடை தனித்தமிழ் மொழிநடை அல்ல. அது மணிப்பிரவாள மொழி நடையும் அல்ல; அது வேறு ஒரு நடை என்பார் தமிழாய்வறிஞர் முனைவர் பொற்கோ. இவ்வாறு ‘குடிஅரசு’ எழுத்துலகில் புரட்சி செய்த திராவிடர் இயக்கத்தின் போர்வாள் அல்லவா பெரியார்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக