திங்கள், 24 ஜனவரி, 2022

ஈரோட்டில் நடைபெற்ற முதல் கோயில் நுழைவு போராட்டம்

ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்குள்ளே வைத்து பூட்டப்பட்ட சுயமரியாதை இயக்கத்தினர்!                                            

ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்குள் ஆதிதிராவிடர்களையும் அனுமதிக்க வேண்டும் என்று 1929 மார்ச் 12ஆம் தேதி தேவஸ்தானகமிட்டி ஒரு தீர்மானத்தைக் கொண்டுவர, தேவஸ்தான கமிட்டித் தலைவரான தந்தைபெரியார் முன்னின்றார். அதற்கு அடுத்த நாளே பெரியார் கோவை சென்று விடுகிறார். தேவஸ்தானக் கமிட்டியின் தீர்மானத்தை பெரியாரின்  தளபதி குத்தூசிகுருசாமி முன்னின்று நடத்திக் காட்டினார்.

பெரியாரின் துணைவியார் நாகம்மையாரின் துணையோடு பொன்னம்பலனார் மற்றும் ஈரோடு கச்சேரி வீதி ஈசுவரன், ஈரோடு மஞ்சை மேடு பசுபதி, ஈரோடு கிருஷ்ணம்பாளையம் கருப்பன் ஆகிய மூன்று தாழ்த்தப்பட்ட தோழர்களுக்கு திருநீறு பூசச் செய்து தேங்காய், பழம், பூ ஆகியவை அடங்கிய தட்டோடு ஈரோட்டின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாகச் சென்று கோட்டை ஈசுவரன் கோவிலுக்குள் நுழைந்துவிட்டார்.

குத்தூசி குருசாமி தனது தோழர்களுடன் கோவிலுக்குள் நுழைந்ததும் பார்ப்பனர்கள் செய்தியை ஊருக்குள் பரப்பி பெரும் கூட்டத்தைக் கூட்டி தோழர்களை கோவிலுக்கு உள்ளேயே வைத்து வெளிக்கதவை இழுத்துப் பூட்டி விட்டனர்.

இரண்டு நாட்கள் பூட்டிய கதவைத் திறக்க மறுத்துவிட்டனர். இரண்டு நாட்களுக்குப் பின் பெரியார் வந்த பிறகே கோவில் கதவு திறக்கப்பட்டது. குத்தூசி குருசாமி மற்றும் தோழர்கள் மீது வழக்கு போடப்பட்டது.

இது தொடர்பான வழக்குகள் குறித்த செய்திகளை ‘குடிஅரசு’ (21.4.1929) பதிவு செய்துள்ளது.

9 மாதங்கள் நடந்த விசாரணைக்குப் பிறகு ஈசுவரன், பசுபதி, கருப்பன் ஆகியோருக்கு ரூ.60 அபராதம் விதிக்கப்பட்டது. ஈசுவரன் மட்டும் அபராதம் கட்டமறுத்து சிறை சென்றார். ”ஆலயப் பிரவேச சரித்திரத்தில் தோழர் ஈசுவரன் பெயர் முதல் பெயராக இடம்பெறும்” என்று குடிஅரசில் எழுதினார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக