சனி, 11 பிப்ரவரி, 2017

1979 ஆம் ஆண்டில் திமுக - அதிமுக இணைப்பிற்கு திராவிடர் கழகத்தின் தலைவர்


தமிழர் தலைவர் எடுத்த நடவடிக்கைகள் பற்றி
‘தி இந்து’ - ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’ ஆங்கில நாளேடுகளில் செய்தி!
‘தி இந்து’ - ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’ ஆங்கில நாளேடுகள் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு துவங்கியுள்ள நிலையில் ஜனவரி 17 அன்று வெளிவந்த இதழ்களில், திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் திமுக - அதிமுக அரசியல் கட்சிகளின் இணைப்பிற்கு எடுத்த முயற்சி நடவடிக்கைகள் குறித்து செய்திக் கட்டுரைகள் வெளியிட்டுள்ளன. 1979ஆம் ஆண்டின் இறுதியில் இணைப்பிற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்து விரிவாக செய்திக் கட்டுரைகள் வந்துள்ளன.
எம்.ஜி.ஆரின் வாழ்க்கை பற்றிய புத்தகத்தினை ஆங்கிலத்தில் எழுதிவரும் திராவிடர் இயக்க எழுத்தாளர் ஆர்.கண்ணன் அவர்களின் கூற்றாக,  அந்த செய்திக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. அண்ணா பற்றி ஏற்கெனவே ஆங்கிலத்தில் விரிவாக புத்தகம் எழுதியுள்ள ஆர்.கண்ணன், தாம் எழுதி வரும் எம்.ஜி.ஆர். பற்றிய புத்தகத்திற்கு தமிழர் தலைவரை இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்னை - பெரியார் திடலில் சந்தித்தார். திராவிடர் இயக்கத்தின் அங்கமாக எம்.ஜி.ஆர். வளர்ந்த விதம், தந்தை பெரியாரிடம் எம்.ஜி.ஆர். கொண்டிருந்த பற்று, தொடர்பு மற்றும் பங்கேற்ற நிகழ்வுகள் பற்றி கேட்டறிந்து சென்றிருந்தார். அது சமயம் தமிழர் தலைவரிடம் பேட்டி கண்டபோது கூறிய செய்திகளின் அடிப்படையில் செய்திக் கட்டுரை வெளிவந்துள்ளது.
‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’ செய்தி
1977ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பின்னர், எம்.ஜி.ஆர். தனது நம்பிக்கைக்குரிய எழுத்தாளர் சோலையிடம் திமுக - அதிமுக இணைவதற்கான முயற்சிகளை எடுக்கும்படி பணித்தார். இரண்டுகட்சிகளின் தாய்க் கழகமான திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி அவர்கள்தான் இந்த இணைப்பிற்கான முன்னெடுப்பு நடவடிக்கைகளை செய்திடுவார் என எம்.ஜி.ஆரிடம் சோலை தெரிவித்தார்.
கி.வீரமணி அவர்களைப் பொறுத்தவரையில் இரண்டு அரசியல் கட்சிகளின் இணைப்பு என்பதை விட தமிழகத்தை ஆண்ட, ஆண்டுவரும் திராவி டர் இயக்க கட்சிகளின் இணைப்பு எனக் கருதினார்.
கி.வீரமணி கூறுகிறார்: ‘எம்.ஜி.ஆர். என்னை அவரது ராமாவரம் தோட்ட இல்லத்திற்கு காலை சிற்றுண்டி அருந்த அழைத்திருந்தார்’. அப்பொழுது அதிமுகவை திமுகவுடன் இணைப்பதற்கு கலைஞர் கருணாநிதியுடன் பேசும்படி கூறினார். நான் கலைஞரிடம் சென்று இணைப்புப் பற்றி எம்.ஜி.ஆரின் விருப்பத்தைத் தெரிவித்தேன். ஆனால் கலைஞர், இம்மாதிரியான இணைப்பு முயற்சிகள் ஏற்கெனவே சில தடவைகள் எடுக்கப்பட்டு முடிவடையாமல் போயிருக்கின்றன எனக்கூறி இப்பொழுது எடுக்கப்படும் முயற்சி பற்றி ஒருவித அய்யப்பாடுடன் இருந்தார். பின் னர் கலைஞர் - எம்.ஜி.ஆர். இருவரும் ஒரு முடிவினை எடுத்தனர். இரண்டு அரசியல் கட்சிகளும் இரண்டு மாத காலத்திற்கு பல பொதுக் கூட்டங்களை  நடத்திடலாம் எனவும், அந்தக் கூட்டங்களில் இரண்டு கட்சியின் தலைவர்களும் சேர்ந்து கலந்து கொள்ளலாம் எனவும் எம்.ஜி.ஆர். தெரிவித்தார். இந்த கூட்டங்களின் ஏற்பாடு மற்றும் தலைவர்களின் பங்கேற்பு மூலமாக இரண்டு கட்சிகளின் தொண்டர்களும் நெருங்கி வருவார்கள் எனவும் எம்.ஜி.ஆர். தெரிவித்தார். ஆனால் ‘கலைஞர் - எம்.ஜி.ஆர் இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு வெளியில் கசிந்துவிட்டது’. இவ்வாறு - கி.வீரமணி கடந்த கால சம்பவங்களை எடுத்துக் கூறினார்.
அந்த சமயத்தில் மத்தியில் ஆட்சியில் இருந்த ஜனதா கட்சியின் தலைவர்களுள் ஒருவரான பிஜூ பட்நாயக் (ஒடிசா மாநில முதல்வராக இருந்தவர்) அகில இந்திய அளவில் வலுவான  அரசியல் அமைப்பு தேவை எனக்கருதி, திராவிடர் இயக்க அரசியல் கட்சிகளான திமுகவும், அதிமுகவும் இணைவது அதற்கு ஆக்கம் கூட்டும் என முயற்சி எடுத்தார்.
1979ஆம் ஆண்டில் நிகழ்ந்த கலைஞர் - எம்.ஜி.ஆர் சந்திப்பில் இரண்டு கட்சிகளின் இணைப்பிற்கான அடிப்படைப் பணிகள் வகுக்கப் பட்டன. இணைப்பிற்கு பின்பு கட்சியின் பெயர் ‘திராவிட முன்னேற்றக் கழகம்‘ என இருந்திடல் வேண்டும். எம்.ஜி.ஆர். முதல்வராக நீடிப்பார். இணைப்பிற்குப் பின்பான கட்சியின் தலைவராக கலைஞர் இருப்பார். சமூகநீதிக் களத்தில் எம்.ஜி.ஆர். கொண்டுவந்த பொருளாதார அடிப் படையிலான (ரூ. 9000/- ஆண்டு வருமான வரம்பு) இட ஒதுக்கீட்டு ஆணை ரத்து செய்யப்பட வேண்டும் என முடிவுகள் எட்டப்பட்டன.
இந்த இணைப்பு முயற்சிகளுக்கு அப்பொழுது அமைச்சராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் எதிர்ப்பு நிலை கொண்டிருந்தார். இரண்டு கட்சி களின் இணைப்பு நடைபெற்றால் தங்களது எதிர்காலத்தையே எம்.ஜி.ஆரிடம் அர்ப்பணித்த அதிமுகவின் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்களின் நிலை என்னவாகும்? எனவே திமுக - அதிமுக இணைப்பு நடைமுறையில் சாத்தியப்படாது என எம்.ஜி.ஆரிடம் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார். இந்த இணைப்பிற்கான சந்திப்பு மற்றும் செய்தி வெளியில் கசிந்து வர ஆரம்பித்த நிலையில் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றத்தின் தலைவர் முசிறி புத்தன், திமுகவினரால் தாக்கப்பட்ட செய்தி  வந்தது. எம்.ஜி.ஆரும் இணைப்பு சாத்தியப்படாது என்னும் நிலையினை ஏற்க வேண்டி வந்தது.
இந்த நிலையினை - திராவிட இயக்கத்தின் இரண்டு அரசியல் கட்சிகளும் தனித்தனியாக பிரிந்து இருப்பதற்கு, மத்திய உளவுத்துறையும் அக்கறை எடுத்தது; அதன் பங்கும் உள்ளது எனும் சந்தேகம் நிலவியதையும் கி.வீரமணி தெரிவித்தார்.
‘தி இந்து’ செய்தி
ஆர்.கண்ணன் எழுதிய ‘பொதுமக்களை வயப் படுத்தும் இளவரசர்’ (ஜிலீமீ ஜீக்ஷீவீஸீநீமீ ஷீயீ ஜீஷீஜீuறீவீsவீனீ) எனும் கட்டுரையில் உள்ள சில பகுதிகள்:
1973இல் நடைபெற்ற திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில், அதிமுக வெற்றி பெற்றது. அது, ‘சினிமா கவர்ச்சியின் வெற்றி’. நாளடைவில் அந்தக் கவர்ச்சி மறைந்து விடும், என திமுகவின் தலைவர்கள் குறைத்து மதிப்பிட்டனர். அந்த மதிப் பீடு தவறாகப் போய்விட்டது. 1977இல் அதிமுக ஆட்சி அமைத்த பின்னர், வியப்படையும் விதமாக, திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி அவர்களை இரண்டு கழகங்களை - அதிமுக, திமுக இணைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டி எம்.ஜி.ஆர் வற்புறுத்திக் கூறினார். 1979இல் ஜனதா கட்சியின் தலைவர்களுள் ஒருவரான பிஜூ பட்நாயக் தமக்கு உரிய முறையில் இரண்டு கழகங்களின் இணைப்பிற்கு முயற்சி எடுத்தார். பின்னர் கடைசி நேரத்தில் எம்.ஜி.ஆர் தனது மனநிலையினை மாற்றிக் கொண்டார்.
மேற்கண்டவாறு ஆங்கில நாளேடுகள் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, அதிமுக - திமுக ஆகிய இரண்டு திராவிட அரசியல் கட்சி களின் இணைப்பிற்கான முயற்சிகளில் ஈடுபட்டதை செய்திக் கட்டுரைகளின் மூலம் தெரிவித்துள்ளன.
அதிமுக - திமுக இணைப்பிற்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி 1979ஆம் ஆண்டில் எடுத்த முயற்சிகள் பற்றி, எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் ப்ருக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பொழுது அருகில் இருந்து உறுதுணை புரிந்த தொழில் அதிபர் டாக்டர் பழனி. ஜி.பெரியசாமியும் தமது “இதய ஒலி” நூலில் குறிப்பிட்டுள்ளார். 2016 அக்டோபர் 24 இல் திராவிடர் கழகத்தின் சார்பாக சென்னை - பெரியார் திடலில் நடத்தப்பட்ட எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிலும் டாக்டர் பழனி ஜி.பெரியசாமி ‘இதய ஒலி’ நூலில் பதிவு செய்ததை தமது உரையிலும் வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-விடுதலை,19.1.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக