ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

பொதுவுடைமைத் தலைவர் சிங்காரவேலர்

இர.செங்கல்வராயன்
முன்னாள் துணைத் தலைவர்
பகுத்தறிவாளர் கழகம், செய்யாறு, தி.மலை.மா.
தமிழகத்தின் முதல் பொதுவு டைமைத் தலைவர், காங்கிரசின் முன் னணித் தலைவர், தன்மானத் தலைவர், பெரியாரின் நண்பர், சுயமரியாதை இயக்கத் தளபதி, தொழிலாளர் தலைவர் என்ற பன்முக ஆளுமை கொண்ட சிங்காரவேலர் 19-ஆம் நூற்றாண்டில் 1860 பிப்ரவரி 18-ஆம் நாள் பிறந்தவர்; மீனவவகுப்பைச் சேர்ந்த வெங்கடாசலம் செட்டிக்கும், வள்ளியம்மைக்கும் பிறந்து கல்வி அறிவால் பொதுவாழ்வில் உயர்நிலைக்கு வந்த சிங்கார வேலர் சேற்றில் பிறந்த செந்தாமரை.
சென்னையில் உள்ள மீனவர் சமு தாயத்தில் அக்காலத்தில் பெரிய பட்டி னவர், சிறிய பட்டினவர் என்று இரு பிரிவுகள் இருந்தன. பெரிய பட்டினவர் பிரிவைச் சேர்ந்த சிங்காரவேலர் சிறிய பட்டினப் பிரிவைச் சேர்ந்த அங்கம் மையை 1889-இல் கலப்புத் திருமணம் செய்து கொண்டார். 1894-ஆம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்ந்து பி.ஏ., பட்டம் பெற்றார். சில ஆண்டுகள் கழித்து சட்டக்கல்லூரியில் சேர்ந்து பி.எல்.பட்டம் பெற்றார். 1907-இல் தனது 47-ஆம் வயதில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பதிவு செய்து கொண் டார். ஆனால் அவர் பட்டப்படிப்பிற்கும் வழக்குரைஞர் ஆனதற்கும் 17 ஆண்டுகள் ஓடி விட்டன அவரது வணிக ஈடுபாடு இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம்.
வழக்குரைஞர் பணியுடன் பொது வாழ் வில் தீவிரமாக ஈடுபட்ட சிங்காரவேலர், பீகார் மாநிலத்தில் புத்தகயாவில் 1922 டிசம்பர் 27-ஆம் நாள் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டு புகழ் மிக்க சொற்பொழிவு ஆற்றினார். இதுவே அவர் கலந்து கொண்ட முதல் மாநாடு ஆகும். மே நாளை முதன் முதலில் இந்தியாவில் சென்னையில் 1-5-1923-இல் கொண்டாடிய பெருமை சிங்காரவேல ருக்கு உரியது. 1925 நவம்பர் 21, 22 நாள்களில் காஞ்சிபுரத்தில் திரு.வி.கல்யாண சுந்தரனார் தலைமையில் நடந்த காங்கி ரசின் மாநில மாநாட்டில் தந்தை பெரியா ருடன் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
1925 டிசம்பரில் கான்பூரில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட்டுகள் மாநாட்டிற்கு சிங்காரவேலர் தலைமை தாங்கி சிறப்பான சொற்பொழிவு ஆற்றினார். முதன் முதலாக இம்மாநாட்டில் நிறுவப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக சிங் காரவேலுவும், பொதுச்செயலாளராக எஸ். வி.காட்கேவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
1925-இல் சென்னை மாநகராட்சி மன்றத்திற்கு காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சி சார்பில் வேட்பாளராக நியமிக்கப்பட்டு 13-ஆவது யானைகவுனி டிவிசன் உறுப்பின ராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பன் மொழிப்புலவர் தெ.பொ.மீனாட்சி சுந்தர னாரும் அவ்வமயம் மாநகராட்சி மன்ற உறுப்பினராகப் பதவி வகித்தவர். சிங்கார வேலர் கல்விக் குழுவின் தலைவராக இருந்தபோது மாநகராட்சிப் பள்ளிகளின் எண்ணிக்கை 78 லிருந்து 94 ஆக உயர்ந்தது.
தந்தை பெரியாரின் அழைப்பை ஏற்று 1931 டிசம்பர் 26 இல் சென்னையில் நடை பெற்ற சுயமரியாதை மாநாட்டைத் திறந்து வைத்து சிறந்த சொற்பொழிவு ஆற்றினார்.
அவர் சிறப்புரையின் சில பகுதிகள் வருமாறு:
தலைவர் இராமசாமியார் மார்ட்டின் லூதரைப் போல் மதக்கற்பனைகள் நமது நாட்டினின்று ஒழியுமாறு உங்கள் இயக் கத்திற்கு வழி காட்டியுள்ளார். அவர் காட்டிய வழியைக் கடைப்பிடித்து நமது 35 கோடி மக்களும் அறியாமையைப் போக்க வேண்டுமென உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். பெரியார் காட்டிய பகுத்தறிவை உபயோகிப்பீர்களானால் சமதர்மமே அதாவது மதமற்ற, சாதி வேற்றுமையற்ற, பொருளாதார வேற்று மையற்ற தர்மமே நமது நாட்டையும் மற்ற நாடுகளையும் காப்பாற்றவல்ல இயக்க மாகும்.
1931-ஆம் ஆண்டு தந்தை பெரியார் சென்னையில் சிங்காரவேலரை அவர் இல்லத்தில் சந்தித்து தனது குடியரசு இதழில் பகுத்தறிவு மற்றும் சமதர்மக் கொள்கைகள் பற்றிக் கட்டுரைகள் எழுதி வரும்படி கேட்டுக்கொண்டார். 1931 முதல் 1935 ஆம் ஆண்டு வரை சிங்காரவேலர் குடியரசில் பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதியுள்ளார்.
1823-இல் வடலூரில் பிறந்த வள்ளலார், 1860-இல் பிறந்த சிங்காரவேலர், 1879-இல் பிறந்த தந்தை பெரியார் ஆகியோர் தங்களின் பகுத்தறிவுப் பிரச்சாரத்தைத் தமிழகத்தில் செய்யவில்லை என்றால் தமிழ்ச் சமுதாயம் இன்னும் பல கொடிய மூடநம்பிக்கைகளில் மூழ்கிக்கிடக்கும்.
தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் 1932 மே மாதம் சேலம் மாவட்ட சுயமரியாதை மாநாடு நடத்தியது. மாநாட்டிற்கு சிங்காரவேலர் தலைமை தாங்கினார். அவர் ஆற்றிய தலைமை உரையின் முக்கிய பகுதி வருமாறு: தோழர்களே! நமது நாட்டிலுள்ள 34 கோடி சாமான்ய மக்கள் உண்மையான சுதந்திரம் பெற்று, பசி இல்லாமலும், மத கற்பனை இல்லாமலும், சாதி, சமயமில்லாமலும், உண்ண, உடுக்க, இருக்க வசதிகள் யாவருக்கும் சரிநிகர் சமான வாழ்க்கை பெற சமதர்ம ராஜயத்தை ஸ்தாபியுங்கள்
சிங்காரவேலர் குடியரசில் எழுதி வந்த கட்டுரைகள் தமிழ் நாட்டில் சமதர்ம வெள்ளம் பெருக்கெடுத்து ஓடச்செய்தன என்று சாமி சிதம்பரனார் தனது தந்தை பெரியார் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
சிங்காரவேலர் மனித குலத்தின் மீது குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களின் மீது அவர் கொண்டிருந்த பரிவும் அன்பும் அவரைத் தொழிற்சங்கத் தலைவராகவும், சமதர்மவாதியாகவும் ஆக்கியது என்று கூறலாம். 1918-இல் சென்னை நகரில் பிளேக் நோய் பரவியபோது ஆயிரக்கணக் கானோர் மாண்டனர். அக்காலத்தில் தெற்குக் கடற்கரைச் சாலையில் உள்ள தன் வீட்டில் நோயால் பாதிக்கப்பட்டவர் களுக்குத் தன் சொந்த செலவில் மருத்து வர்களைக் கொண்டு இலவச மருத்துவ வசதி அளித்தார்.
1945 சூன் மாதம் அச்சகத் தொழிலாளர் மாநாட்டிற்கு சிங்காரவேலர் தலைமை வகித்து சொற்பொழிவு ஆற்றினார். அவருடைய உணர்ச்சி மிக்க உரையில் இப்பொழுது எனக்கு வயது 84 எனினும் தொழிலாளி வர்க்கத்திற்காக என் கட மையைச் செய்ய நான் இங்கு வந்துள்ளேன். உங்கள் மத்தியில் இறந்தாலும் அதைவிட எனக்குக் சிடைக்கக்கூடிய பாக்கியம் வேறென்ன? என்று கூறினார்.
பெரியாரைப்போல் சிறந்த பகுத்தறிவு வாதியான சிங்காரவேலர் இறைவழிபாடு என்பதன் பேரால் நாம் நடத்தும் திருவிழாக் களைச் சிங்காரவேலர் கண்டிக்கிறார். சிறு குழந்தைகள் அலங்கரித்த பொம்மை களைத் தூக்கி விளையாடுவதைப் போல் பெரிய குழந்தைகள் செய்வதை உற்சவ மென்கிறார்கள் என்று மத உற்சவங்களைக் கண்டிக்கிறார். கன்னியாகுமரியிலிருந்து திருத்தணி சுப்பிரமணியர் கோயில் வரை தமிழகத்தில் சுமார் 40,000 கோயில்களுக்கு ஆண்டு தோறும் ஆடம்பரமான திரு விழாக்கள் நடைபெறுகின்றன. இவற்றிற்கு ஒரு ஆண்டில் ரூபாய் 1,000 கோடி, 2000 கோடி என்று செலவாகும். திருவண்ணா மலை கார்த்திகை தீபவிழாவிற்கும், திருச்செந்தூர் சூரசம்மார விழாவிற்கும் 15 லட்சம், 20 இலட்சம் என்று மக்கள் கூடுகிறார்கள். இதனால் மக்களின் நேரம், உழைப்பு, பணம் செலவாவதைத் தவிர, நாட்டிற்கு என்ன நன்மை? மதங்களால் எத்தனை கோயில்கள் குருக்கள், மௌலா னாக்கள், பிஷப்புகள் உயிர் வளர்க்கின் றனர்? என்று புரோகிதக் கூட்டத்தைச் சாடுகிறார் சிங்காரவேலர்.
சிங்காரவேலர் தன் எண்பத்தாறாம் வயதில் 1946 பிப்ரவரி 11 ஆம் நாள் இயற்கை எய்தினார். அறிஞர் அண்ணா அவர்கள் 24.2.1946 தேதி திராவிட நாடு வார இதழில் பின் வருமாறு எழுதினார்.
மார்க்ஸியம் என்னும் பொருளாதார தத்துவத்தை சாதாரண மக்களும் உணரும் படி செய்த பெருமை தமிழ் நாட்டில் இருவரையே சாரும் - பெரியார் ராமசாமி அவர்களும், சிங்காரவேலரும், தோழர் சிங்காரவேலு சுயமரியாதை இயக்கம் வளர்வதற்குப் பெரிதும் பாடுபட்டார்.
1952 செப்டம்பர் 26 ஆம் நாள் பொன்மலை ரயில்வே தொழிலாளர் மாநாட்டில் சிங்காரவேலரின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்து தந்தை பெரியார் பின் வருமாறு உரை ஆற்றினார்.
பொதுவுடைமை, பகுத்தறிவு சம்பந்தமாக அவரைப்போன்று அப் போது இல்லை என்றே கூறலாம். அவர் எப்போதும் படித்துக்கொண்டே இருப் பார்.  அவர் வீடே புத்தக சாலையாகக் காட்சி அளித்தது. கடினமான பிரச்சினைகள் குறித்து எல்லாம் எழுதுவார். அவர் தைரி யமான நாத்திகர். காங்கிரசில் இருந்து கொண்டே நகர சபையில் கடவுளின் பெயரால் பிரமாணம் எடுக்கக் கூடா தென்று தீர்மானம் கொண்டு வந்தார். எதையும் ஆராய்ச்சி செய்யும் பண்பும், துணிச்சலும், தைரியமும் உடைய அவ ரைப் போன்று ஆராய்ச்சியாளர்கள் நிறைய விஷயம் உணர்ந்து வாதிப்பவர்கள் அவ ருக்குப் பிறகு தோன்றவில்லை.
சிங்காரவேலரின் நினைவைப் போற் றும் வகையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சிங்காரவேலர் மாளிகை என்று பெயர் சூட்டப்பட் டுள்ளது. சிங்காரவேலர், பெரியார் ஆகி யோரின் பகுத்தறிவுக் கொள்கைகளை இன்றைய தலைமுறைக்குத் தன் பேச் சாலும் எழுத்தாலும் பரப்பி வரும் தமிழர் தலைவர் மானமிகு வீரமணியார் அவர் களுக்குத் துணை நிற்க வேண்டியது ஒவ் வொரு தன்மானத் தமிழரின் தலையாய கடமையாகும்.
-விடுதலை ஞா.ம.,22.2.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக