புதன், 1 பிப்ரவரி, 2017

சுயமரியாதை இயக்க 90ஆம் ஆண்டு சிந்தனை;

சுயமரியாதை இயக்க 90ஆம் ஆண்டு சிந்தனை; எந்த மதுரை?  அந்த மதுரைதான்! 

மின்சாரம்

எந்த மதுரை? அந்த மதுரையில் தான் தோழர்களே - 1945ஆம் ஆண்டு வாக்கில் ஒரு நிகழ்வு

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சிலைத் திருட்டு ஒன்று நடைபெற்றது. அப்பொழுது தமிழ்நாடெங்கும் அந்தச் செய்தி பரபரப்பாக பேசப்பட்டது. ஏடுகளிலும் இடம் பிடித்தது.

அப்பொழுது ஆங்கிலேயர் ஆட்சி;  அந்தத் திருட்டைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு ஒரு போலீஸ் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. போலீஸ் அதிகாரியாக இருந்தால் மட்டும் போதுமா? அவர் என்ன ஜாதி என்பதுதான் முக்கியம் அப்பொழுதெல்லாம்.
அவர் கோயிலுக்குள் போகக் கூடாத நாடார் ஜாதியாம் - அதனாலேயே பார்ப்பனர்கள் கடும் எதிர்ப்பைத்  தெரிவித்தனர்.

வெள்ளைத் தோல்காரன் எதிர்த்தால் அந்த வெள்ளைக் காரன் தான் என்ன செய்வான்?  ஒரு பார்ப்பனர் ஆய் வாளரே நியமிக்கப்பட்டார்.

பார்ப்பனராக இருந்ததால் திருடன் ஓடி வந்து ‘நான்தான் திருடினேன்’ என்று சொல்லி விடுவானா என்ன? ஒன்றும் நடக்கவில்லை. பார்ப்பனர்களின் எதிர்ப்பையும் மீறி அந்த நாடார் சமுதாய போலீஸ் அதிகாரி மீண்டும் நியமிக்கப் பட்டார்.
இரண்டே நாளில் திருடனைக் கையும் களவுமாகப் பிடித்துக் கொடுத்தார்.

அப்படி என்னதான் ‘மாயம்‘ என்று கேட்கிறீர்களா?

அந்தக் கோயில் அர்ச்சகன் சம்பந்தமில்லாமல் அந்தத் திருட்டு நடந்திருக்க முடியாது என்று அவர் உறுதியாக நம்பினார். அந்த முறையில் அந்த அர்ச்சகப் பார்ப்பானை விசாரிக்க வேண்டிய முறையில் விசாரித்தார்.

அவ்வளவுதான்? உண்மையைக் கக்கிவிட்டான். அந்தப் போலீஸ் அதிகாரியை வெள்ளைக்கார அதிகாரிகள் பாராட்டினார்கள்.
நாடார் சமுதாயத்தை சேர்ந்த  அந்த அதிகாரியின் பெயர் கணபதி நாடார்.

போடி நாயக்கனூரில் 1985ஆம் ஆண்டு ஏப்ரலில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடந்து கொண்டிருந்த போது, ஓய்வு பெற்ற அந்த போலீஸ் அதிகாரி, அந்த முகாமுக்கே நேரில் வந்து இந்தத் தகவலை நமது கழகத்தின் தலைவர் ஆசிரியரிடம் சொன்னார் என்பதுதான் சுவையான தகவல்.

இன்னும் ஒரு கூடுதல் தகவலும் உண்டு. தந்தை பெரியார் அவர்களின் பரிந்துரையில் தான் அவருக்குக் காவல்துறையில் வேலை வாய்ப்பும் கிடைத்ததாம். அவரே நன்றியுணர்ச்சியோடு நெகிழ்ந்து சொன்னார்.

1945ஆம் ஆண்டு நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர் கோயிலுக்குள் போலீஸ் அதிகாரியாக இருந்தும் உள்ளே நுழையக்கூடாது என்றிருந்த நிலைமையும் இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தில் சுப்பிரமணிய நாடார் நீதிபதியாக இருந்தார். பார்ப்பன வக்கீல்கள் அவரைப் பார்த்து ‘ஓ மை லார்டு’(ஓ எனது கடவுளே) என்றதும் சாதாரண மாற்றம்தானா?  சுயமரியாதை இயக்கம் என்ன சாதித்தது, திராவிடர் இயக்கம் கிழித்தது என்ன? என்று உளறும் கிறுக்கர்களின் கன்னம் ‘கிழிவதற்கு’  இவை போதாதா?

இந்த நேரத்தில் திராவிடர் கழகத்தின் மாநகர தலைவராகவும், தென் மாவட்டங்களின் பிரச்சாரக் குழுவின் அமைப்பாளராகவும் இருந்த பெரியார் பெருந்தொண்டர் - மறைந்தும் மறையாமலும் நம் நெஞ்சங்களில் எல்லாம் பசுமையாக நிறைந்து கொண்டிருக்கக் கூடிய கல்வி வள்ளல்  மானமிகு தேவசகாயம் அவர்கள் நம் நினைவிற்கு வருகிறார் - அவர்  மகன்தான் கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் மானமிகு தே.எடிசன்ராஜா அவர்கள்.



பெரியார் பெருந்தொண்டர் மானமிகு தேவசகாயம் அவர்கள் பெருமையாக எந்த இடத்திலும் சொல்வதுண்டு. நான் நாடார் (அவர் மொழியில் சொல்லுவார் நான்  சாணான் என்று)  தட்டு தூக்கிப் பேரீச்சம் பழம் விற்று இருக்கிறேன். நானும், எனது மனைவி அன்னத்தாய் அம்மையாரும் சேர்ந்து உழைத்ததால் தான் பொருளாதாரத்தில் வளமை யாக இருக்கிறோம்.

எங்களை நாடார் என்று சொல்லி ஒதுக்கிடுவர் - வேறு விதமாக அன்று பார்த்தவர்களின் இன்றைய நிலை என்ன?

தட்டு தூக்கிச் சென்ற என்னுடைய கடைக்கு வந்து கியூவில் நின்று பலகாரங்களை வாங்கிச் செல்கின்றனர்.

ஆம், “தமிழ்நாடு எண்ணெய்ப் பலகாரக் கடை” என்றால் மதுரையில்  மட்டுமல்ல; தமிழ்நாடெங்கும் பிரசித்தி பெற்றது.

இத்தகு சமூக மாற்றத்திற்கு அடிப்படை வேர்கள் சமூகப் புரட்சி இயக்கமான திராவிடர் கழகம், சுயமரியாதை இயக்கம் தான்!

அந்தத் திராவிடர் கழகத்தின் மாநிலப் பொதுக்குழு, அதே மதுரையில் வரும் பிப்ரவரி 4ஆம் தேதி கூடு கிறது. அதில் முக்கியமான தீர்மானங்கள் எல்லாம் நிறை வேற்றப்பட உள்ளன; போராட்ட அறிவிப்பும் உண்டு.

அந்த மாலை - கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்கு கழகத்தின் மாணவரணி, இளைஞரணி சார்பாக பிரச்சார ஊர்தி அளிக்கப்படுகிறது என்பதுடன் சுட்டிக்காட்டப்பட வேண் டியது - சுயமரியாதை இயக்கத்தின் தொண்ணூறாம் ஆண்டு விழாவும் தான் என்பது முக்கியம்!

அதனால் தான் கணபதி நாடார் அவர்களையும், கல்வி வள்ளல் பே.தேவசகாயம் அவர்களையும் நினைவூட்ட வேண்டிய பொருத்தமும் அவசியமும் ஏற்பட்டன.

சுயமரியாதை இயக்கத்தின் சூறாவளி சுற்றுப்பயணம் மீண்டும் மேலும் தேவைப்படுகிறது. தமிழர் தலைவருக்கு அளிக்கப்படும் ஊர்தியின் சக்கரங்கள் வேகமாக சுழல வேண்டி உள்ளது. வாரீர்! வாரீர்!!

வைகையில் தண்ணீர் வற்றலாம். வற்றாத நீர்வீழ்ச்சி யன்றோ கருஞ்சட்டைக் கடல் - வருக! வருகவே!!

-விடுதலை,1.2.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக