வெள்ளி, 2 மார்ச், 2018

தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்டோருக்கு திராவிடர் கழகம் ஒன்றும் செய்யவில்லையா?



[திராவிடர் கழகத்தையும் அதன் தலைவர்களையும் நோக்கி வீசப்படும் அவதூறுகள், பழிகள், புரட்டுகள் போன்றவற்றிற்கு பதிலளிக்கிறது இத்தொடர் ]

தலைவர் தந்தை பெரியார் அவர்கள், “என்னுடைய இயக்கம், மக்கள் இயக்கம், மனிதநேய இயக்கம், பகுத்தறிவு இயக்கம், இந்த இயக்கத்தினுடைய தத்துவம் இரண்டே வார்த்தைகளில் சொல்லுகிறேன். அனை வருக்கும் அனைத்தும் அதாவது, எல்லார்க்கும் எல்லாமும் என்பது சமதர்மம். அதற்குப் பெயர்தான் மனித தர்மம். அதற்குப் பெயர்தான் சுயமரியாதை. இன்னாருக்கு இதுதான் என்று சொல்லுவதிருக்கிறதே அது மனுதர்மம்’’ என்றார். அப்படிப்பட்ட பெரியாரை, அவரது இயக்கத்தைப் பார்த்து, தாழ்த்தப்பட்ட வர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று பழி சுமத்துகின்றனர் சிலர்.

இது உண்மையா?

தந்தை பெரியார் சாதிக் கொடுமைகளை எதிர்க்கத் தொடங்கிய காலத்தில், தாழ்த்தப்பட்டோரின் நிலை எப்படியிருந்தது என்பதையும், அதற்கு எதிராய் பெரியார் நடத்திய போராட்டங்களையும் அறிந்தால் இதற்கான விடை கிடைக்கும்.

1899இல் தாழ்த்தப்பட்டோருக்கு நாடகம் பார்க்க உரிமையில்லை

சென்னை வால்டேக்ஸ் சாலையில் ஒற்றை வாடை நாடகக் கொட்டகை இருந்தது. அந்த நாடகக் கொட்டகையில் சுகுணவிலாஸ் சபா சார்பில் அபிதான சுந்தரி நாடகம். அந்த நாடகத்திற்கு பெரிய நோட்டீஸ். அந்த நோட்டீசை பெரியார் நூலக ஆவணக் காப்பகத்தில் நீங்கள் காணலாம். அதைப் பதிவு செய்திருக்கிறோம். 

அந்த நாடகத்திற்கு விளம்பரம் கொடுத்திருந்தார்கள். அதில் சேர் கட்டணம் ஒரு ரூபாய், காலரி எட்டு அணா என்றெல்லாம் போட்டுவிட்டு பாய் 2 அணா. அந்த நோட்டீசிலே எழுதியிருக்கின்றார்கள். பஞ்சமர்களுக்கு (தாழ்த்தப்பட்டோருக்கு) இடம் இல்லை என்று.
அவன் நாடகம் பார்க்க காசு கொடுத்து டிக்கெட் வாங்கக் கூடிய சக்தி படைத்தவனாக இருந்தாலும், பஞ்சமன் என்று சொன்னால் இடமில்லை என்று சொன்னார்கள். ஆக, பொருளாதாரத்தில் உயர்ந்தாலும் தாழ்த்தப்பட்டவன் இழிவானவன் என்பதே இதன் பொருள்.

தாழ்த்தப்பட்டோரை பள்ளியில் சேர்க்க மாட்டார்கள்

பெரியார் பொதுப் பணிக்கு வந்த காலத்தில், எத்தனையோ பள்ளிக் கூடங்களில், அதுவும் நாட்டுப்புறப் பள்ளிக் கூடங்களில், ஆதி திராவிடர் பிள்ளைகளைச் சேர்க்கவே மாட்டார்கள். ஆகவே, அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்பு தாழ்த்தப்பட்டவர்கள் சிலராவது படித்தால்தான், பள்ளிக்கூடம் அங்கீகரிக்கப்படும் என்று அரசு ஆணையிட்டது.  அது பல்லாண்டு ஏட்டளவில் நின்றது. ஏன்? சிற்றூர்களில் ஆதி திராவிடப் பிள்ளைகள் மற்றவர்களோடு இருந்து படிக்க முயன்றால், பல பகுதிகளில், மற்ற ஜாதிக்காரர்கள் தாழ்த்தப்பட்டவர்களை பலவகையான துன்பங்களுக்கு ஆளாக்குவார்கள். ஆசிரியர்கள், சிலவேளை, சில ஆதிதிராவிடர்களை பதிவேட்டில் எழுதி வைப்பார்கள். ஆனால், பள்ளிக்கு வரவிடுவதில்லை. ஆய்வாளர் ஆண்டு தணிக்கைக்கு வரும்போது, அப்பிள்ளைகளைக் கொண்டு வந்து எவரையும் தொடாமல், ஒரு மூலையில் உட்கார வைத்து அனுப்பி விடுவார்கள். 

கோவைக்கு அருகில் உள்ள சிங்காநல்லூரிலும், இருகூரிலும் பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட பிள்ளைகளை 1930ஆம் ஆண்டு தொடக்கம் வரையில் சேர்க்காமல் இருந்தார்கள்.   பார்ப்பனத் தெரு வழியே தாழ்த்தப்பட்ட பிள்ளைகள் போகக் கூடாதென்று விரட்டினார்கள். இரட்டைமலை சீனிவாசன் அவர்களே தன்னை அடையாளம் காட்டாமல்தான் திண்ணைப் பள்ளியில் படித்தார்.
இப்படிப்பட்ட கொடுமையான காலக் கட்டத்தில்தான் பெரியார் ஜாதியொழிப்புப் போராட்டங்கள் நடத்தினார்.

தாழ்த்தப்பட்டோர் சமைக்கக்கூடாதா? ஏன்? தட்டிக்கேட்டார் தந்தை பெரியார்.

எந்த காங்கிரசு கூட்டத்திலாவது, பிராமணர்கள் வேறு; மற்றவர்கள் வேறு என்கிற பிரிவு இல்லாமல், உட்கார்ந்து சாப்பிட்டு இருக்கிறார்களா?

காங்கிரசு கான்பரன்ஸ் முதலிய எந்தக் கூட்டங்களிலும் பார்ப்பனர்களைக் கொண்டுதான் சமையல் செய்திருக்கிறார்களே ஒழிய, மற்ற ஜாதிக்காரர்களை சமையல் கட்டில், நுழைய விட்டிருக்கிறார்களா?

சுயமரியாதை மகாநாடுகளையோ, கூட்டங்களையோ எடுத்துக் கொள்ளுங்கள். நாடார், நாயுடு, முஸ்லீம், தீண்டப்படாதார் என்கின்றவர்கள் எல்லோரும் கலந்து சமையல் செய்கிறார்கள். இவர்கள் எல்லோருமே கலந்து பரிமாறுகிறார்கள். சைவர் முதல் பெரிய ஜாதிக்காரர்கள் என்பவர்களும் ஒன்றாய் உட்கார்ந்துதான் சாப்பிடுகிறார்கள்” என்றார் பெரியார்.

மனிதர்களை மனிதர்களாக நடத்தியதோடு, அந்நிலை சமுதாயத்தின் பொது நடைமுறையாகிவிட வேண்டுமென்பதற்காக, உயர்சாதியார் ஏச்சையும் பேச்சையும் தாங்கிக் கொண்டு, தொண்டு புரிந்தது தன்மான இயக்கம். 

சொக்காய் அணியக் கூடாது! 

தோளில் துண்டு போடக் கூடாது!

இருபதாம் நூற்றாண்டின் இருபதுகளில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மதுரை சிவக்கொழுந்து என்னும் நாயனக் கலைஞர் புகழ்பெற்று விளங்கினார். 

1924ஆம் ஆண்டு, கானாடுகாத்தான் என்னும் ஊரில், ஒரு தன வணிகர் வீட்டில் திருமணம். திருமண ஊர்வலத்தில், சிவக்கொழுந்து வாசித்துக் கொண்டு வந்தார். மக்கள், இசையின் நயத்தில் மயங்கியிருந்தார்கள்.

சிவக்கொழுந்து இடுப்பில் விலை உயர்ந்த சரிகைக்கரை வேட்டி அணிந்திருந்தார். உடம்பில் சொக்காய் இல்லை. ஏன்? நாயனக் கலைஞர்கள், வாசிக்கும்போது, சொக்காய் அணியக் கூடாது என்பது மரபு. சிவக்கொழுந்துவின் தோளில் மட்டும், சிறிய துண்டொன்று இருந்தது.

அஞ்சா நெஞ்சன் அழகிரி தன்மான இயக்கத்தின் பெருந்தூண். கானாடு காத்தானில் நடந்து கொண்டிருந்த, சிவக்கொழுந்துவின் நாயன இசைப் பொழிவைக் கேட்கச் சென்றார். சில மணித்துளிகள் சென்றன.

வாலிபர் ஒருவர், சிவக்கொழுந்துவை அணுகினார். தோளில் மேல் போட்டுள்ள சிறு துண்டை எடுத்து இடுப்பில் சொருகிக் கொள்ளச் சொன்னார். போட்டிருப்பதோ சிறு துண்டு, வாசிப்பு, வியர்வையைத் தள்ளும். அதைத் துடைக்க, தோளில் கிடப்பதே வசதி. மேல் துணியையல்ல; துண்டையே போட்டுள்ளேன் என்று கூறி அமைதிப்படுத்த முயன்றார் சிவக்கொழுந்து. வாலிபர் ஒப்பவில்லை. துண்டைத் தோளில் போட்டபடி வாசிக்கவிட மாட்டேன் என்று மிரட்டினார்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த பெரியாரின் பெருந்தொண்டர் அழகிரிசாமி, சிவக்கொழுந்து விடம் போனார். உரத்த குரலில், “துண்டை எடுக்க வேண்டாம்; இடுப்பில் கட்ட வேண்டாம்; இப்படியே வாசியுங்கள். கேட்கிறவர்கள் கேட்கட்டும்; விரும்பாதவர்கள் போகட்டும்’’ என்றார். பெரியார் தந்த உணர்வு அப்படி அழகிரியை ஆர்த்தெழச் செய்தது. எதிர்ப்புத் தெரிவித்த வாலிபரோடு, மேலும் சிலர் சேர்ந்து கொண்டு மிரட்டினார்கள். திருமண ஊர்வலம் நடுத்தெடுவில் நின்றது.

இதுபற்றி தந்தை பெரியாரிடம் முறையிட்டனர். செய்தியைக் கேட்பதில் பொறுமையைக் காட்டினார் பெரியார், 

“உங்களுக்கிருக்கின்ற பணக்கொழுப்பை காட்டுவதுதானே, இம்மாதிரியான அவமரியாதை எல்லாம். ஆனதினால்தான் நாங்கள் சிவக்கொழுந்துவை அழைத்துக் கொண்டு வந்து விடுகிறோம். நீங்கள் பாட்டிலே ஊர்வலம் போங்களேன்’’ என்று கடுமையாகச் சொல்லி அனுப்பி விட்டார்கள். 

வைத்த மேளத்தை நிறுத்திவிட்டு, திருமண ஊர்வலம் வருவது பெரும் இழிவு. எனவே, திருமண வீட்டுச் செட்டியார், துணிச்சலை, வலிந்து வரவழைத்துக் கொண்டார். “நாயனக்காரர் விருப்பப்படி துண்டை போட்டுக் கொண்டே வாசிக்கட்டும். விருப்பமுள்ளவர்கள் கேட்கலாம்; போகிறவர்கள் போகட்டும்’’ என்று அறிவித்து விட்டார். இழிவு துடைக்கப்பட்டது. மக்கள் ஒருநிலை நிலை நாட்டப்பட்டது. கலைஞர் சிவக்கொழுந்து, இன்பப் பெருக்கில், இனிமையின் சிகரத்திலே நடமாடி வாசித்துப் பெருமைப்பட்டார்.

[தரவு: நெ.து. சுந்தரவடிவேலு எழுதிய
 “புரட்சியாளர் பெரியார்”]

- உண்மை இதழ், 1-15.11.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக