வியாழன், 22 மார்ச், 2018

பெரியார் இயக்கத்தை பார்த்து அச்சப்படுகிறார்கள்

து.ராஜா எம்.பி., 

தேசிய செயலாளர், 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி



திரிபுராவில் வெற்றி பெற்றதை பிரதமர் மோடி உள்பட பாஜக தலைவர்கள் கொள்கை ரீதியிலான வெற்றி என்று கூறிவருவது சரி யல்ல என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் து.ராஜா கூறியுள்ளார்.

திரிபுராவில் வெற்றி பெற்றதையடுத்து பாஜக, ஆர்.எஸ்.எஸ். கும்பல் லெனின் சிலைகளை சேதப்படுத்தியது. அதுபோன்ற தாக்குதல்கள்குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் து.ராஜா ஏசியன்ஏஜ் இதழ் செய்தியாளர் சிறீபர்ணா சக்ரபர்த்திக்கு அளித்த பேட்டியில் தன்னுடைய கருத்து களைக் கூறியுள்ளார்.

பாஜக, ஆர்.எஸ்.எஸ். நம்பகத்தன்மை இல்லாதவை என்பதையே இதுபோன்ற நிகழ்வுகள் காட்டுகின்றன. தேர்தலில் பல்வேறு யுத்திகளைக் கையாண்டு அவர்கள் வெற்றி பெற்றிருக்கலாம், ஆனால், இந்தியாவில் கொள்கைக்கான வெற்றி ஆகிவிடமுடியாது. இங்கொன்றும், அங்கொன்றுமாக தேர்தல் களில் வெற்றி பெற்றுவிடலாம். ஆனால், அதுவும் அவர்களுக்கு எளிதானதாக இல்லை என்று து.ராஜா கூறியுள்ளார்.

செய்தியாளர்: திரிபுரா தேர்தல் முடிவைத் தொடர்ந்து சிலைகள் பிரச்சினைகளை எப்படி பார்க்கிறீர்கள்?

து.ராஜா: சிலைகள் உடைப்பு பிரச்சி னைகள் கண்டிக்கப்பட வேண்டியவை. மிகவும் கண்டனத்துக்குரியவை. தேர்தல் முடிவு வரத்தொடங்கிய நிலையில் பாஜக, ஆர்.எஸ்.எஸ். சிலைகள் உடைப்பு பணி களைத் தொடங்கிவிட்டது. லெனின் சிலை களை முதலில் குறி வைத்தார்கள். அதன் பின்னர் இடதுசாரி தொண்டர்களைக் குறி வைத்தனர். இது வன்மையான கண்டனத்துக் குரியது. திரிபுராவில் பெற்ற வெற்றியை தங்களின் கொள்கைக்கு கிடைத்த வெற்றி யாக பிரதமர் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கூறத் தொடங்கியுள்ளனர். இது கொள்கைக் கான வெற்றி அல்ல. கொள்கைக்கான வெற்றி என்றால், கொள்கையுடனான மோதலில்தான் ஏற்படும். இதை முறையாக புரிந்துகொள்ள வேண்டும்.

டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத் தில் தாக்குதல்கள் நடைபெற்றபோதுகூட, காவல்துறையினரைக்கொண்டு மாணவர்கள், செயற்பாட்டாளர்கள்மீது  தேசவிரோத குற்றச்சாற்றுகள் சுமத்தப்பட்டன. ஆனால், அதிலும் கொள்கைரீதிலான வெற்றி என்றே கூறினார்கள். காவல்துறையைக்கொண்டு தேசவிரோத குற்றங்களை சுமத்தி ஒடுக்குவது என்பது கொள்கைரீதியில் பெறுகின்ற வெற்றி என்று எப்படி கூற முடியும்? நீங்கள் சிலை களை உடைக்கலாம் ஆனால், உங்களால் கொள்கைகளை அழித்துவிடமுடியுமா?
செய்தியாளர்: இப்போது பெரியார் சிலைகள்வரை பரவிவருகிறதே...?

து.ராஜா: நாடுமுழுவதும் பரவுகின்ற சிலை உடைப்பு பிரச்சினை லெனின் சிலையுடன் நிற்கவில்லை. தமிழ்நாட்டில் பெரியார் சிலை கள் குறிவைக்கப்படுகின்றன. உத்தரப்பிரதேச மாநிலத்தில் அம்பேத்கர் சிலைகள் குறி வைக்கப்படுகின்றன. கொள்கைரீதியிலான மோதல் என்பது வேறு, சிலைகள் உடைக் கப்படுவது என்பது வேறு. பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். செயல்கள் ஏற்கமுடியாதவை யாகும்.

செய்தியாளர்: நோக்கம் என்னவாக இருக்கும் என்று கருதுகிறீர்கள்?

து.ராஜா: நாடுமுழுவதும் நல்லிணக்கம் இல்லாத சூழலை உருவாக்க அவர்கள் விரும்புகிறார்கள். பெரியார் சிலைகளைக் குறிவைப்பதன் மூலமாக தமிழ்நாட்டில் கொந்தளிப்பான நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணமானவரான பாஜகவைச் சேர்¢ந்தவருக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன.

பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் முறை யாக வரலாற்றைப் புரிந்து கொள்ளவேண்டும். ஆனால் அவர்கள் மூடிய மனப்போக்கில் உள்ளனர்.    அவர்களின் மனப்போக்கு என்பது பாசிச கொள்கையால் உருவாக்கப் பட்டது. எல்லாமே அவர்களிடமிருந்துதான் தொடங்குவதாக நினைக்கிறார்கள். அதே போல் அவர்களிடமே முடிந்துவிடுவதாகவும் நினைக்கிறார்கள்.

லெனின் என்றால் கொள்கை. மனிதத்தன் மைக்கான தலைவராக லெனின் இருக்கிறார்.  லெனினை பகத் சிங்கும் போற்றினார். பகத்சிங் தூக்கிலிடப்படுவதற்கு முன்பாக கடைசி நேரத்தில்கூட லெனின் புத்தகத்தைப் படித்தார். இது வரலாற்றில் இடம்பெற்ற தகவலாகும்.

அப்படி இருக்கும் போது, பாஜகவினர் தற் பொழுது லெனினை இந்தியாவுக்கு அந்நிய ராக கூறுவது எப்படி? ஏன் இந்த நிலை? இந்த உலகமே ஒரு குடும்பம் என்றும் ஒரு பக்கத்தில் கூறுகிறார்கள். பொதுவுடைமைக்கு எதிரான நோய்தானே தவிர வேறொன்றுமில்லை.



செய்தியாளர்: இதுபோன்ற நிகழ்வு களால் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

து.ராஜா: இது ஏற்கெனவே நடந்துள்ளது தான். பெரியார் மாபெரும் தலைவர். சுயமரியாதை இயக்கம், பகுத்தறிவு இயக்கம் ஆகிய மாபெரும் இயக்கத்தின் தலைவர். அவர் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக போராடினார். சமூகநீதிக்காக போராடினார். அவர் இந்தக்கட்சிக்குத்தான் சொந்தக்காரர் என்று யாராலும்   தள்ளிவிடமுடியாது. அவர் எல்லாவற்றையும் விட மேலானவர். பெரி யாரை ஏன் பாஜக குறிவைக்கிறது என்பதை அவர்கள்தான் விளக்க வேண்டும். பெரியார் கொள்கை அவர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. பெரியார் இயக்கத்தின் காரணமாகவே அவர்களால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியவில்லை. பெரியார் அந்த அளவுக்கு பகுத்தறிவுக் கருத்துகளை பரப்பினார். பெரியாரின் பகுத் தறிவுக் கொள்கைகளை எதிர்த்துப் பாசிச வகுப்புவாத ஆர்.எஸ்.எஸ்- அமைப்பால்  நிற்கமுடியவில்லை. அதனாலேயே பெரியார் இயக்கத்தைப் பார்த்து அச்சப்படுகிறார்கள். இப்போது அவர்களுக்கு எதிராகவே திரும்பி யுள்ளது. திரும்பிக்கொண்டிருக்கிறது. ஆகவேதான் அவர்கள் அச்சப்படுகிறார்கள். லெனினைக்கூட அவர்கள் முயன்று பார்க் கலாம், ஆனால், பெரியார் எப்போதும் அச் சுறுத்தலாகவே இருக்கிறார்.

செய்தியாளர்: தாலிபானில் பாமியன் புத்த விகாரம் உடைக்கப்பட்டதுடன் மக்கள் இதை ஒப்பிட்டுப் பார்க்கிறார்களே?

து.ராஜா: அதுதான் நடக்கின்றது. வர லாற்று புரிதலில் தாலிபானின்  குறுகிய நிலைகுறித்து நீங்கள் விமர்சிக்கலாம். இந்தியா வேறுபாடுகளைக் கொண்டுள்ளதால் இங்கு அந்த நிலை இல்லை. இதுபோன்றவற்றை வெளிநாடுகளில் எப்படி புரிந்து கொள் கிறார்கள்? நாம் இப்பொழுது உலக மய காலத்தில் இருக்கிறோம். பன்னாட்டளவில் அனைவரும் ஒருவரையொருவர் சார்ந்தி ருக்கின்ற நிலை உள்ளது. அவர்களின் கருத்து என்ன? திரிபுராவில் தேர்தலில் வெற்றிபெற பல்வேறு யுத்திகளைக் கையாண்டதைப்போல் செய்துவிடலாம் என்று எண்ணுகிறார்கள். ஆனால் கொள்கைரீதியில் அவர்கள் வெற்றி பெறவில்லை. இங்கொன்றும் அங்கொன்று மாக தேர்தல் வெற்றிகளைப் பெற்றிருக்கலாம். ஆனால், அதுவும் தற்பொழுது அவர்களுக்கு அறைகூவலாக உள்ளது.

செய்தியாளர்: நாடுமுழுவதும் பாஜக தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருவதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

து.ராஜா:  இல்லை. அடித்தளத்தில் அவர்கள் ஆதரவினை இழந்து வருகிறார்கள். ராஜஸ்தானில் பாஜக அடைந்த தோல்வியை எப்படி விளக்கிக் கூறுவீர்கள்? குஜராத்தில் கூட, ஆச்சரியப்படுகின்ற அளவுக்கு வெற்றியைப் பெற்றுவிடவில்லை. இந்திய வேறுபாடுகளைக் கொண்டுள்ள நாடு.  இந்த வேறுபாடுகள் மதிக்கப்பட வேண்டும். பலதரப்பட்ட கலாச்சாரங்களை கட்டாயம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.   பன்முகத் தன்மை கொண்ட நம்முடைய ஜனநாயகத்தை அவசியம் புரிந்துகொள்வேண்டும். ஆனால் அவர்கள் புரிந்துகொள்ளவில்லை.

- ஏசியன் ஏஜ், 11.3.2018

- விடுதலை ஞாயிறு மலர், 17.3.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக