புதன், 21 மார்ச், 2018

பெரியார் நாடு



தமிழ்நாடு - பெரியார் நாடு என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறது. வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் கால் நூற்றாண்டு காலம் ஆட்சிப் பீடத்தில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தது; பாரதிய ஜனதா கட்சி திரிபுராவில் ஆட்சியை அமைத்து விட்டது. சட்டமன்றத் தேர்தல் வெற்றி எனும் போதை தலைக்கேறிய திரிபுரா பா.ஜ.க.வினர் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடனேயே, மனிதகுலம் ஏற்றிப் போற்றும் மாபெரும் புரட்சியாளர் லெனின் சிலையை இடித்துத் தகர்க்கும் காட்சிகள், உலக அரங்கில் இந்தியாவுக்குத் தலை குனிவை ஏற்படுத்தின. லெனின் சிலை அகற்றப்படுவதை மேற்கோள் காட்டி, அதுபோன்று தமிழ்நாட்டில் ஈ.வெ.ரா. சிலைக்கும் நடக்கும் என்று முகநூலில் பதிவு செய்தார் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச். இராஜா.

06.03.2018 அன்று இந்த செய்தி வெளியானபோது ஈரோட்டில் மறுமலர்ச்சி தி.மு.கழக 26-ஆவது பொதுக்குழு, பவானி சாலையில் உள்ள பிளாட்டினம் மஹாலில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நண்பகல் 12 மணி அளவில், பெரியார் சிலையை அகற்று வோம் என்ற எச். இராஜாவின் முகநூல் பதிவு வந்தவுடனேயே மேடையில் ஒலிபெருக் கியின் முன்னால் வந்து நின்றார் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள். பொதுக்குழுவில், மாலையில் நிறைவுப் பேருரை ஆற்றுவதுதானே வழக்க மான நடைமுறை. பொதுச் செயலாளர் இப்பொழுதே ஒலிபெருக்கிக்கு அருகில் வந்து விட்டாரே என்று பொதுக்குழு உறுப் பினர்கள் அனைவரின் பார்வையும் தலைவர் மீது குவிந்தது. அப்போதுதான் பா.ஜ.க. எச். இராஜாவின் முகநூல் பதிவு குறித்த செய்தியைச் சொன்னார் தலைவர் வைகோ.

"திரிபுராவில் லெனின் சிலை தகர்க்கப் பட்டது போன்று தமிழ்நாட்டிலும் நாளை பெரியார் சிலைக்கும் நிகழும் என்று கூறுகிறாய் அல்லவா? பெரியார் சிலையை இரவு நேரத்தில் கூலிக்கு ஆள் பிடித்து 50 ஆயிரம் கொடுத்து களவாணித்தனமாக உடைக்கச் சொல்வது வீரமல்ல. பெரியார் சிலையை உடைப்போம் என்று சொல்லுகிறாய் அல்லவா? நாள் குறி; எந்த சிலையை உடைக்கப் போகிறாய் என்று சொல்லு; சென்னையில் அண்ணா சாலை பெரியார் சிலையா? திருச்சியில் உள்ள பெரியார் சிலையா? என்று சொல்லிவிட்டு வா; நானும் என் தோழர்களுடன் வருகிறேன். எங்களுக்கு எந்த போலீஸ் பாதுகாப்பும் வேண்டாம்.

நீ போலீஸ், மோடியின் இராணுவம், ஈழத்தில் தமிழர்களைக் கொன்று குவிக்கக் காரணமாக இருந்த இராணுவத் தோடு வா; பெரியார் சிலை மீது எவனும் கை வைத்தால் உன் கை, கால் துண்டு துண்டாகப் போகும்! இது அருவா பிடித்த கை" என்று தலைவர் வைகோ எரிமலையாக வெடித்துச் சீறினார். பிளாட்டினம் மஹாலில் கழகப் பொதுக் குழு உறுப்பினர் களின் கரவொலி ஆரவாரம் ஈரோடு நகரம் முழுவதும் எதிரொலித்தது.

பொதுக்குழுவில் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் பேசிய செய்தி அடுத்த நொடி யில் தொலைக் காட்சிகளில் மின்னல் வேகத்தில் சிறப்புச் செய்தியாக ஒளிபரப்பப்பட்டது.

"பெரியார் சிலையை எவரும் உடைக்க வந்தால் அவனது கை வெட்டப்படும்! ஈரோட்டில் வைகோ ஆவேசம்" என்று மாலை ஏடுகள் கொட்டை எழுத்துச் செய்தி ஆக்கின. தமிழ்நாடு முழுவதும் கொந்தளிக்கத் தொடங்கியது. உடனடியாக தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் எச். இராஜாவுக்குக் கண்டனம் தெரிவித்து அறிக்கை விடுத்தனர். மார்ச் 6-ஆம் தேதி இரவில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் தந்தை பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது. பெரியார் சிலையை சேதப்படுத்த முயன்ற இருவரைப் பிடித்து பொது மக்கள் தர்ம அடி கொடுத்து காவல்துறை யினரிடம் ஒப்படைத்தனர். இருவரும் பா.ஜ.க. நிர்வாகிகள் என்பது பின்னர் தெரிய வந்தது.

எச். இராஜாவின் முகநூல் பதிவும், திருப் பத்தூரில் தந்தை பெரியார் சிலை சேதப் படுத்தப்பட்ட தகவலும் வந்தவுடன் தமிழ்நாடே பொங்கி எழுந்தது. பா.ஜ.க. தவிர அனைத்துக் கட்சிகளும் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் தமிழக வரலாறு இது வரையில் காணாதது ஆகும்.

தந்தை பெரியார் சிலை அகற்றப்படும் என்ற நச்சுக் கருத்தும், திருப்பத்தூரில் பெரியார் சிலை சேதமும் தமிழகத்தில் எரிமலை வெடிக்கச் செய்தவுடன், டெல்லி செங்கோட்டையில் உள்ள 'காவிப்படையின் நாயகர்கள்' பிரதமர் மோடியும், அமித்ஷாவும் பா.ஜ.க.வுக்கு சிலைகளை அகற்றுவதில் நம்பிக்கை இல்லை என்றனர். திரிபுராவில் 'லெனின்' சிலை தகர்ப்புக்கும் பா.ஜ.க.வுக்கும் தொடர்பு இல்லை என்று முழு பூசணியை சோற்றில் மறைத்தார் அமித்ஷா. இதன் எதிரொலியாக திருப்பத்தூரில் அய்யா சிலையை சேதப்படுத்திய நபரை பா.ஜ.க. கட்சி யிலிருந்து நீக்கினார் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.

தந்தை பெரியார் விடயத்தில் இந்துத்துவக் கும்பல் ஆப்பசைத்த குரங்கு போல ஆனது. இவ்வளவு நடந்த பிறகு 36 மணி நேரம் கழித்து, "முகநூல் பதிவை எனக்குத் தெரியாமல் என் முகநூல் கணக்கை நிர்வகிக்கும் 'அட்மின்' பதிவு இட்டு விட்டார்" என்று டெல்லியில் விளக்கம் அளித்த எச். இராஜா, அதற்காக மன்னிப்பு கோரவில்லை. தமிழக பா.ஜ.க. முக்கிய தலைவரும், மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் நிதித்துறை இணை அமைச்சருமான பொன். இராதாகிருஷ்ணன் டெல்லியில் செய்தி யாளர்களிடையே பேசும்போது, "எச். இராஜா மிகுந்த கால தாமதமாக அளித்துள்ள விளக்கம் ஏற்புடையது அல்ல. அவர் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி கட்சித் தலைமை தான் முடிவு எடுக்க வேண்டும்" என்று சிறிது மன உறுத் தலுடன் கூறினார்.

ஆனால், எச். இராஜா மீது கட்சி நடவடிக்கை எடுக்காது என்று பா.ஜ.க. தலைவர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். இதி லிருந்து பா.ஜ.க. நோக்கம் வெளிப்பட்டு விட் டது. டெல்லியிலிருந்து தமிழகம் திரும்பிய எச். இராஜா, திண்டுக்கல்லில் செய்தியாளர்களி டம் பேசியபோது, "தந்தை பெரியார் தமிழ் மொழியை அவமானம் செய்தார்" என்று மீண்டும் பெரியார் மீது தாக்குதல் தொடுத்தார். மார்ச்சு 8, உலக மகளிர் நாளன்று, சென்னை தாயகத்தில் செய்தி ஊடகங்களைச் சந்தித்த கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் எச். இராஜா மீண்டும் இப்படி பெரியார் மீது அவதூறு பேசுவதற்கு மோடி, அமித்ஷா, கொடுக்கும் துணிச்சல்தான் காரணம் என்று குற்றம் சாட்டினார்.

"தந்தை பெரியார் சிலை மீது கை வைப்ப வர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கை துண்டு துண்டாக ஆகி விடும்" என்று பெரியார் பிறந்த ஈரோட்டு மண்ணில் முதன் முதலில் வீர முழக்கமிட்டவர் தலைவர் வைகோ; மேடையில் பிரதமர் மோடியை விமர்சனம் செய்து பேசி விட்டு, இறங்கி வீட்டுக்குப் பத்திரமாகப் போக முடியாது என்று எச். இராஜா இரண்டு ஆண்டு களுக்கு முன்பு கொக்கரித்தபோது, மறுமலர்ச்சி தி.மு.க. தொண்டர்கள் கொதித்தனர். ஆனால், கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், "எச். இராஜாவின் பேச்சை அலட்சியம் செய் யுங்கள்" என்று அறிவுறுத்தினார். ஆனால், அதே நபர் தந்தை பெரியாரை இழிவுப்படுத்தியதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் "நானே களத்துக்கு வருவேன்" என்று பிரகடனம் செய்தார். மறு மலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் எதிர்வினை, திராவிட இயக்க வரலாற்றின் பொன்னேடுகளில் பொறிக்கப்படும்.

தந்தை பெரியார் அவர்கள் மறைந்து 45 ஆண்டுகள் ஆன பின்னரும், இன்னும் இந்துத் துவ மதவெறிக் கும்பலுக்கு பெரியார்தான் சிம்ம சொப்பனமாக இருக்கிறார். 95 வயது வரையில் தந்தை பெரியார் ஆற்றிய அரும் பணியும், தூய தன்னலமற்றத் தொண்டும் தமிழ் நாட்டில் கோடானுகோடி மக்களின் இதயத்தில் கல்வெட்டாகப் பதிந்திருக்கிறது. தமிழகம் மட்டுமல்ல; வடபுலத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் ஈடு இணையற்ற தலைவராகவும் தந்தை பெரியார் போற்றப்படு கிறார்.

நூறாண்டு கடந்திருக்கிற திராவிட இயக்கம் அன்றும், இன்றும், என்றும் மதவாத அடிப்படை சித்தாந்தத்திற்கு எதிராக திமிறி எழுந்து நிற்கிறது. வட ஆரிய பண்பாட்டு படையெடுப்பு, வடமொழி திணிப்பு, இந்தி ஆதிக்கம், டெல்லியின் எதேச் சாதிகார அரசியல் இவை அனைத்தையும் சமரசமின்றி எதிர்த்துத் தகர்க்கும் பேரியக்கமாக 'திராவிட இயக்கம்' இன்னமும் வீரியமுடன் இருக்கிறது.

எனவேதான் டெல்லி ஆட்சிப்பீடத்தைக் கைப் பற்றிய 'சங் பரிவார்' இந்துத்துவக் கும்பல், தமிழகத்தில் ஓர் அடி கூட எடுத்து வைக்க முடியவில்லையே என்ற எரிச்சலில் 'தந்தை பெரியார்' மீது வன்மம் கொண்டு அலைகிறது. பெரியார் மீது அவதூறு சேற்றை அள்ளி வீச சில 'கைக்கூலி'களை, 'ஐந்தாம்படை'யை டெல்லி உருவாக்கி இறக்கி விட்டது.

ஆனால், எதிர்பார்த்த பலன் இல்லாததால், பெரியார் மீது நேரடி 'தாக்குதலுக்குத் தயார் ஆனது. ஆனால் அதன் விளைவு, பல்லாயிரம் மடங்கு வேகத்தில் இப்படி திருப்பித் தாக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை . தமிழக மக்கள் சமய நம்பிக்கைகளில் ஈடுபாடும், செயல் பாடும் கொண்டவர்கள்தான்; ஆனாலும் சமய, அரசியல், சாதி, மத எல்லைக் கோடுகளைத் தாண்டி தந்தை பெரியாரை நேசிக்கிறார்கள் என்பதை மீண்டும் ஒருமுறை இந்த நாடே கண்டு உணர்ந்து இருக்கிறது. தமிழ்நாடு என்றும் பெரியார் நாடு என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டு விட்டது.

நன்றி: 'சங்கொலி' தலையங்கம் 23.3.2018

- விடுதலை நாளேடு, 20.3.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக