வியாழன், 22 மார்ச், 2018

பெரியார் சிலையல்ல - உயிரோட்டமான கொள்கை!

வட இந்திய ஏடுகளின் பார்வையில்...

பெரியார் சிலையல்ல - உயிரோட்டமான கொள்கை!

மறைந்து 45 ஆண்டுகளாகியும் மதவாதிகளுக்கு பெரும் அச்சுறுத்தல்!



அண்மையில் தந்தை பெரியார் சிலையை உடைப்போம் என்று ஓர் இந்துத்துவா வெறியன் விஷம் கக்கியதையும் திருப்பத் தூரில் (வேலூர் மாவட்டம்) தந்தை பெரியார் சிலை பிஜேபிக்காரரால் சேதப் படுத்தப்பட்டதையும் தொடர்ந்து தமிழ் நாட்டில் மட்டுமல்ல; வட இந்திய ஏடுகளிலும் தந்தை பெரியார் என்ற மாமனிதரின் பெரும் சக்தி குறித்து விரிவாக எழுதியுள்ளன. அவற்றுள் ஒரு சில இங்கே...

கபர் இந்தி (7.3.2018) (பீகார், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம்)

பெரியார் மறைந்த பின்பும் அவர் கொள்கைவழியாக மதவாதிகளுக்கு நெருக்கடி கொடுத்துக்கொண்டு இருக்கிறார். தற்போது நாடு முழுவதும் சிலைகள் குறித்து பேச்சாக எழுகிறது, கருத்துக்களால் மக்களிடையே பிரபலமான தலைவர்கள் அவர்களின் மரணத்திற்குப் பிறகு நினைவு கூறும்வகையில் வைக்கப்பட்ட சிலைகள் உடைக்கப் படுகின்றன. சில சிலைகள் புல்டோசர் கொண்டு தகர்க்கப்படு கின்றன. சில சிலைகள் முழு மையாக உடைத்து நொறுக்கப்படுகின்றன. சில சிலைகள் மீது சாயம் வீசப்படுகிறது, ஆனால் வடகிழக்கில் உள்ள சிறிய மாநிலத்தில் லெனின் சிலைமீது புல்டோசர் ஏறிய பிறகு இந்துத்துவா வெறியர்களின் தூண்டுதலால் தெற்கில் பெரிய மாநிலமாக திகழும் தமிழ கத்தில் வேலூரில் உள்ள பெரியார் சிலை சில அரசியல்வாதிகளால் உடைபடுகிறது.   காலையில் துவங்கி மாலைவரை வாழ் வாதாரத்திற்காக ஓடிக்கொண்டு இருக்கும் சாமானியர்களுக்கு அந்த சிலைகளால் எந்த பாதிப்பும் இல்லை, ஆனால் எதிர்ப்பரசியல், மதவாத அரசியல் செய்பவர்களுக்கு அந்த சிலைகள் உறுத்தலாக இருக்கின்றன. அந்த சிலைகள் கொள்கை விரோதிகளாக மாறி யுள்ளன.    இன்று மதவெறியர்களினால் சேதப் படுத்தப்பட்டு இந்தியாவையே திரும்பிப் பார்க்கும் நிலைக்கு கொண்டு சென்ற பெரியார் குறித்து சில குறிப்புகள்:  மதவாத அமைப்புகளுக்கு சிம்ம சொப்ப னமாக விளங்கிய பெரியார்! அவர் மறைந்த பின்பும் அவர் கொள்கைவழியாக மதவாதி களுக்கு நெருக்கடி கொடுத்துக்கொண்டு இருக்கிறார். அப்படி அவர் என்ன செய்து விட்டார், அவரது கொள்கைகள் மக்களாட்சி உள்ள இந்த நாட்டில் எப்படி எடுபட்டது?

பெரியார் என்றால் தலைசிறந்தவர் என்று பொருள்

எந்தப் பெரியார் சிலை உடைக்கப் பட்டதோ, அதே பெரியார் சிலை அமைந்த மண்ணில் தென்னக அரசியல் வளர அவர் உரமாக இருந்துள்ளார். தென்னக அரசி யலின் டி.என்.ஏ பெரியார் தான், இந்த மரபணுவில் மறந்தும் கைவைத்தால் விளைவு  கடுமையாக இருக்கும், அதன் சிறு பகுதிதான் பெரியார் சிலை உடைப்பிற்குப் பிறகு தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பு! பெரியார் கடைசி வரை தன்னுடைய கொள்கைகளை விட்டுக் கொடுக்கவே இல்லை, இன்றளவும் அவரது கொள்கைகள் உயிரோட்ட மாக இருக்க காரணம் அவரது கொள்கை பிடிப்பும், மக்கள் மனதில் அவர் விதைத்த கொள்கை முழக்கமும் தான்.

தைனிக் ஜாகரன் 7.3.2018 (மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உ.பி.)

யார் இந்தப் பெரியார், இவரின் சிலை மீது கை வைத்தால் இந்தியா முழுவதும் ஏன் அதிர்வலை எழுகிறது?  பெரியார் தென் இந்தியாவின் சமூக செயற்பாட்டாளர் மற்றும் அரசியல் வாதியாவார். தென்னகத்தில் வாழும் மனிதர் களுக்குச் சுயமரியாதை உணர்வை ஊட்டி யவர், அவரது முழுபெயர் ஈ.வெ.ராமசாமி நாயக்கர். பிற்காலத்தில் இவரே தன்னுடைய பெயரின் பின்னால் இருக்கும் ஜாதி அடை யாளமான நாயக்கர் என்ற பெயரை தூக்கி எறிந்துவிட்டார். அவரைத் தொடர்ந்து முழு தமிழகமுமே ஜாதிப் பெயரை குறிப்பிடுவதைக் கைவிட்டு விட்டது.   ஆசியாவின் சாக்ரடீஸ் என்றழைக் கப்பட்ட பெரியார் 1932 ஆம் ஆண்டில் பிரிட்டன், ரஷ்யா, ஜெர்மன் போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார். பெரியாரின் ஓய்வில்லா சமூகப்பணியின் வீச்சு மக்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது, ஆகையால் தான் தமிழகத்தில் பெரியார் சிலைமீது கைவைத்த உடன் இந்தியா முழுவதும் அதிர்வலை எழுந்தது. தெ வோல்ர்ட் இந்தி நியூஸ் (தைனிக் பாஸ்கர்) குழுமம் 8.3.2018  (அரியானா, பஞ்சாப், உ.பி. ம.பி. ராஜஸ்தான், குஜராத்)  ஜாதி மற்றும் மதத்திற்கு எதிராக நீண்ட நெடிய போராட்டம் நடத்தியவர் பெரியார்.

பெரியார் ஒரு சமூக செயற் பாட்டாளர் அரசியல் கொள்கைப் படைப் பாளி, அவரது அரசியல் திராவிட அரசியல் என்று அடையாளப் படுத்தப் படுகிறது. பெரியார் ஜாதி மற்றும் மதத்திற்கு எதிராக மிக நீண்ட போராடடம் நடத்தியுள்ளார். பெரியார் துவக்கக் காலத்தில் காங்கிரசு கட்சியில் மிகவும் தீவிர ஈடுபாட்டுடன் இருந்தார். பிறகு அங்கு காணப்பட்ட பிரிவினை காரணமாக காங்கிரசை விட்டு வெளியேறினார். உயர் ஜாதி ஆதிக்கம்(பார்ப்பனர்) எல்லா இடத்திலும் அதிகரிப்பதை பார்த்து தமிழகத்தை தனிநாடாக அறிவிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.  அதன் முன்னோட்டமாக பார்ப்பனரல் லாத வர்களின் நலனுக்காக என்று ஆரம் பிக்கப்பட்ட நீதிக்கட்சியின் தலைவரானார்.  அரசியலில் கொள்கையை விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதாலேயே தனது கொள்கையில் இருந்து விலகாமல் இருக்க அரசியலில் இருந்து விலகி திராவிடர் கழகத்தை துவக் கினார். 1937ஆம் ஆண்டு ராஜகோபாலாச் சாரியார் கொண்டுவந்த இந்தித் திணிப்பை எதிர்த்து மக்களைத் திரட்டி போராட்டத்தில் இறங்கினார். தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான உரிமைப் போராட்டம், தமிழ் மொழிக்கான சேவை, குழந்தைத் திருமணம் ஒழிப்பு, கைம்பெண் மறுமணத்திற்கு ஆதரவு தெரிவித்து தானே முன்வந்து தனது குடும்ப கைம்பெண் ஒருவருக்கு மறுமணம் நடத்தி வைத்தது போன்றவை பெரியாரின் புரட்சி களுக்குச் சான்றாக விளங்குகின்றன. பெரியார் சிலை அல்ல, உயிரோட்டமான கொள்கை

(இமாசல்பிரதேசம், சண்டிகர், உத்திரா கண்ட், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் வெளியாகும் நவ்ஜீவன் இந்தி நாளிதழில் 8.3.18 அன்று வெளியான செய்தி)

உடைக்கச்சொன்னவரும், உடைத்த வர்களும்  தாங்கள் கைவத்தது ஒரு சிலை அல்ல அது உயிரோட்டமான கொள்கை என்பதை புரியாமல் போனார்கள், சிலையை உடைத்ததன் மூலம் பெரியாரின் கொள் கைகள் மீண்டும் புத்துயிரோட்டம் பெற்றிருக்கிறது. திரிபுராவில் பாஜக வெற்றிபெற்ற உடன் லெனின் சிலை உடைக்கப்பட்டது, அந்தச் செய்தி பரபரப்பாகிக் கொண்டு இருக்கும் போதே, தமிழகத்தைச் சேர்ந்த பாஜகவைச் சேர்ந்த ஒருவர் அடுத்து உடைபட வேண்டியது பெரியார் சிலை என்று கூறி யிருந்தார். உடனடியாக ஒரு பாஜக பிரமுகர் வேலூர் மாவட்டத்தில் திருப்பத்தூரில் சிலையை சேதப்படுத்தினர்.

அதன் பிறகு தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பு அலை என்பது இந்தியாவையே திரும்பிப் பார்க்கவைத்தது, யார் இந்த பெரியார்? அவர் மறைந்த இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அவரது கொள்கைகளைக் கண்டு பயப்படும் அளவிற்கு அவர் என்ன செய்தார், அவரை ஏன் இன்றளவும் வலதுசாரிகள், மதவாதக் கொள்கைகளைக் சுமப்பவர்கள் கடுமையான எதிரிகளாக பார்க்கின்றனர்?. லெனின் அம்பேத்கர், இதர பிரபல தலைவர்களை ஓரளவு ஏற்றுக்கொண்ட ஒரு கூட்டம் இன்றுவரை பெரியாரைக் கண்டால் ஏன் அஞ்சுகிறார்கள்?   பெரியாரின் கொள்கை களை முன்னெடுத்துச் செல்பவர்கள் இருக்கும் வரை, சமூகநீதிப்பாதையில் அவரால் பயன டைந்தவர்கள் இருக்கும் வரை ஒரு சிலையை உடைப்பதன் மூலம் பெரியாரின் உன்னதமான கருத்துகளை முடக்கிவிடமுடியாது. பெரியார் குறித்து இந்தியா முழுவதும் பேசிக்கொண்டு இருக்கும் நேரத்தில் அவர் குறித்து நாம் இங்கே அறிந்துகொள்வது மிகவும் தேவை யான ஒன்றாகும்.  1879 செப்டம்பர் 17 அன்று தமிழ் நாட்டின் ஈரோடு நகரில் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தார்.. இளமைப் பருவத்தில் இருந்தே மதம், மூடநம்பிக்கை, ஜாதி, சமூக ஏற்றத்தாழ்வு களுக்கு எதிராக குரல் கொடுத்துவந்தார். தமிழகத்தில் இவரை தந்தை பெரியார் என்று அன்போடு அழைக்கின்றனர். பெரியார் என்பதின் பொருள் உயர்ந்த குணமிக்க மனிதர் ஆகும்.  சிறுவயதில் இருந்தே இவர் கடவுள் மறுப்புக் கொள்கையில் தீவிரமாக இருந்தாலும் 1904-ஆம் ஆண்டு இவரது வாரணாசி பயணம் அங்கு சன்யாசிகளின் சல்லாபங்களைப் பார்த்த பிறகு இவரை முழுமையாக நாத்திகராக மாற்றியது. தமிழகம் திரும்பிய இவர் பல்வேறு புரட்சிகளைச் செய்தார். அதில் பெயருக்குப் பின்னால் இருக்கும் ஜாதிப்பெயரை அகற்று வதும் ஒன்று, 1929 ஆம் ஆண்டு மாநாடு ஒன்றில் தன்னுடைய பெயருக்குப் பின்னால் இருக்கும் நாயக்கர் என்ற பெயரை அகற் றினார். அவரைத் தொடர்ந்து தமிழகத்தில் அனைவரும் தங்கள் பெயருக்குப் பின்னால் இருக்கும் ஜாதிப்பெயரை அகற்றினர். இன்றுவரை யாரும் தங்கள் ஜாதிப்பெயரை பொதுவெளியில் பயன்படுத்து வதில்லை. திராவிடர் கழகத்தை பெரியார் உருவாக் கினார். அதன் அடிச்சுவட்டைப் பின்பற்றியே இன்றுவரை தமிழகத்தின் கட்சிகள் செயல் படுகின்றன. தமிழகத்தில் அரசியல் அடித்தளம் பெரியார் இட்டது, இதன் மீதுதான் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் களம் எழுந்துநிற்கிறது, இதை மீறி வேறு எந்த அரசியல் கட்சியும் தமிழகத்தில் இன்றும் இனி வரும் காலங்களிலும் தலை யெடுக்க முடியாது. திராவிட தேசியத்திற்கு ஆதரவான பெரியார் திராவிடர் இனப் போராட்டத்திற்கு சுயமரியாதை இயக்கம் ஒன்றை துவக்கினார். இதைத் துவக்குவதன் மூலம் பெரியார் ஒரே களத்தில் இருந்தார் என்று நினைக்க வேண்டாம், அவர் சிந்தனாவாதி, அரசியல் தலைவர், சமூக செயற்பாட்டாளர், பெண்ணிய உரிமைப் போராளி என அவரது செயல் பாடுகள் பரந்து விரிந்துகொண்டே செல் கின்றன. 1919-லிருந்து 1925-ஆம் ஆண்டுவரை பெரியார் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். அதன் தலைவராகவும்  உயர்ந்தார். கள்ளுக் கடை மறியல், கதராடை பிரச்சாரம், ஒத்துழையாமை இயக்கம் போன்றவற்றை தமிழகத்தில் மூலைமுடுக்குகளில் கொண்டு சேர்த்ததில் பெரியார் பங்கு மிக அதிகம். காங்கிரஸ் கட்சியில் உள்ளே காணப்படும் ஜாதிபேதங்களைக் கண்டு காங்கிரஸ் கட்சியி லிருந்து விலகினார். 1939-ஆம் ஆண்டு ஜஸ்டிஸ் கட்சியின் தலைவரானார்.   1944ஆம் ஆண்டு ஜஸ்டிஸ் கட்சியின் பெயரை திராவிடர் கழகம் என மாற்றி அரசியலில் இருந்து விலகினார். ஆனால் 1949-ஆம் ஆண்டு பெரியாரின் சீடரான அண்ணாதுரை சில கருத்துவேறுபாடுகளால் பெரியாரை விட்டு விலகி திராவிட முன்னேற்ற கழகம் என்று அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கினார். பெரியார் நேரடி அரசியலில் இல்லை என்றாலும் அவரது கொள்கைகளே அரசி யலாக அறிஞர் அண்ணாவால் முன்னெடுக் கப்பட்டது. ஆசியாவின் சாக்ரடீஸ் என்று அழைக்கப்பட்ட பெரியார் தன்னுடைய காலத் திலும் அதற்குப் பின்பும் சிறந்த புரட்சியாளர், பகுத்தறிவுவாதியாக அறியப்படுகிறார்.   பெரியார் மிகத்தீவிரமான கடவுள் பக்தி கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். இருப்பினும் பார்ப்பனீய ஆதிக்கத்தை கடுமையாக எதிர்த்தார். பார்ப்பனீய கொள்கை நூல்களை எரித்தார். ராவணனைக் கொண்டாடினார்.  1925-ஆம் ஆண்டு குடியரசு என்ற இதழை வெளியிட்டார்,  தொடர்ந்து தனது சிந்தனைகளை சிறு சிறு நூல்களாக வெளியிட்டார். அவர் பல நூல்களை எழுதியுள்ளார். அதில் சச்சி ராமாயண் எனும் இந்தி நூலும் அடங்கும். குழந்தைத் திருமணம், தேவதாசி முறை மற்றும் இந்து வர்ணாசிரமம் முறைகளைக் கடுமையாக எதிர்த்தார்.  விதவை மறுமணம், ஜாதிமறுப்புத் திருமணம், பெண்களுக்கான உரிமைகள் போன்றவற்றை தன்னுடைய வாழ்நாளில் தானே முன்னின்று நடத்திக்காட்டினார்.  24 டிசம்பர் 1973-ஆம் ஆண்டில் பெரியார் காலமானார். ஆனால் அவர் உயிரோடு வாழ்ந்த காலத்திலும் சரி, அவர் மறைந்த பிறகும் சரி அவரது கொள்கைகள், செயல்பாடுகள், போராட்டங்கள் தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் எதிரொலிக் கின்றன. எதற்குமே கொள்கைகளை விட்டுக் கொடுக்காத பெரியாரின் எழுத்துக்களில் உள்ள தீவிரம் குறித்து பல காலகட்டங்களில் பேசப்பட்டு வந்தது. சிலர் இது மதத்திற்கு எதிரான எழுத்து என்று கூறுகிறார்கள். சிலர் இது தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்றதல்ல என்று கூறுகின் றனர். ஆனால் அவர் மறைந்த 50 ஆண்டுகளை நெருங்கிக்கொண்டு இருக்கும் இந்த காலகட்டத்திலும், வலதுசாரிகளுக்கு மிகப் பெரும் ஆபத்தாகவே இருக்கிறார். பெரியார் வழிநடக்கும் தமிழகத்தில் இன்றளவும் அவரது கொள்கைகள் வேரூன்றிப் பரவி இருக்கின்றன.  எங்கு நோக்கினும் அவர் தான் தெரிகிறார். தென் இந்தியாவில் தற்போது மதவாதிகளுக்கு வேலையில்லை என்பதை அவர் சிலைமீது கை வைத்தவர்களுக்கு உணர்த்திவிட்டனர் தமிழர்கள்.

தொகுப்பு: சரவணா ராஜேந்திரன்

- விடுதலை ஞாயிறு மலர், 17.3.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக