புதன், 28 மார்ச், 2018

மயிலை கபாலீஸ்வரர் “கோயில் முன் நடந்த வேண்டுகோள் அறப்போரின்போது



24.08.1982 அன்று சென்னை மயிலை கபாலீஸ்வரர் “கோயில் முன் நடந்த வேண்டுகோள் அறப்போரின்போது நான் கலந்துகொண்டு உரையாற்றினேன்.

இந்தப்பிறவி இழிவை ஒழிக்கத்தானே தந்தை பெரியார் கிட்டத்தட்ட அறுபது ஆண்டு காலம் போராடினார். உலகிலேயே எந்த நாட்டிலாவது பிறக்கும்பொழுதே இழி மக்களாய்ப் பிறக்கின்றனரா? இந்து மதம் பிறந்த இந்த நாட்டில்தானே இந்தப் பிறவி இழிவு.

உலகிலேயே இந்த நாட்டில்தானே உழைக்காதவன் உயர்சாதி, உழைக்கின்றவன் கீழ்சாதி!

தமிழனுடைய ஒவ்வொரு உரிமையும் போராடித்தானே பெறப்பட்டு இருக்கிறது. அன்று வைக்கம் வீதிகளிலே நடக்க உரிமையைப் போராடி வாங்கிக் கொடுத்தார் தந்தை பெரியார்.

“உண்டிச் சாலைகளிலே பார்ப்பனர்க்கு ஒரு இடம், இதராளுக்கு வேறொரு இடம்’’ என்று இருந்ததே, அதனை எதிர்த்துப் போராடியவரும் தந்தை பெரியார்தான்!

படித்த வக்கீல்களுக்கிடையேகூட வேற்றுமை இருந்தது. அண்மைக்காலம் வரை வக்கீல்கள் சங்க அலுவலகத்தில் (ஙிணீக்ஷீ கிssஷீநீவீணீtவீஷீஸீ)கூட பார்ப்பானுக்கு என்று தனித் தண்ணீர்ப் பானை இருந்ததுண்டு. இவை எல்லாம் மாற்றப் பெற்றது எப்படி? தந்தை பெரியார் போராட்டத்தால்தானே! உழைப்பால்தானே!

தோழர்களே! நம்முடைய உரிமை ஒவ்வொன்றும் போராடிப் பெறப்பட்டவை தானே தவிர உயர்சாதிப் பார்ப்பனரின் காருண்யத்தாலோ, மனமாற்றத்தாலே அல்ல! அல்ல!

அன்றைக்கு நடக்க உரிமை, கற்க உரிமை, உத்தியோக உரிமைகளுக்கு எப்படி போராடினோமோ, அதுபோலவேதான் இன்றைக்குப் பார்ப்பானுக்கு கோயில் கருவறைக்குள் நுழைய இருக்கும் உரிமை நமக்கும் வேண்டும் என்று போராடுகிறோம் என்று பல்வேறு வரலாற்றுச் சம்பவங்களை தந்தை பெரியார் அவர்கள் வென்று எடுத்த செய்திகளையே அன்று விளக்கிப் பேசினேன். இறுதியாக மாவட்டத் தலைவர் திரு.எம்.கே.காளத்தி நன்றியுரை ஆற்றினார்.

மம்சாபுரம் சம்பவத்திற்குப் பிறகு எனது உடல்நிலை முழு அளவுக்கு _ பழைய நிலைக்கு  நல்ல வண்ணம் இன்னமும் தேறவில்லை என்பதை விளக்கி கழகத் தோழர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் ‘விடுதலை’யில் 27.08.1982 அன்று முக்கியத் தகவல்களைத் தெரிவித்து இருந்தேன்.



- உண்மை இதழ், 1-15.3.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக