வெள்ளி, 30 நவம்பர், 2018

தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்குக் கல்வி வாய்ப்பு!

#திராவிடம்அறிவோம்(52)



தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்குக் கல்வி வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதில் நீதிக்கட்சி தொடர்ந்து முனைப்புடன் செயல்பட்டது.
படத்தில் காணும் அரசாணை பனகல் அரசர் காலத்தில் வெளியிடப்பட்டது.
சென்னை மாநகராட்சி, பிற நகராட்சிகள் போன்றவை நடத்தும் பள்ளிகளில் இன்னும் மிகுதியாகத் தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் பள்ளியில் பயில்வோர் பட்டியலை அனுப்பும்போது பள்ளியில் சேர்க்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர் பற்றிய விவரங்களை அளிக்கவேண்டும் என்றும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.
[அரசாணை எண்.205, சட்டம்(கல்வி), நாள்: 11.02.1924]
இத்தகைய முயற்சி நீதிக்கட்சி தோல்வியடைந்த பின், சுயேட்சையான சுப்பராயன் தலைமையில் அமைந்த அமைச்சரவையிலும் முன்னெடுத்துச் செல்லப்பட்டது.
தாழ்த்தப்பட்ட மக்களின் பிள்ளைகளைச் சேர்க்க மறுக்கும் பள்ளிக்கூடங்களுக்கு உதவித்தொகை மறுக்கப்பட்டது. (குடிஅரசு, 02.11.1930).
- வெற்றிச்செல்வன்

வியாழன், 29 நவம்பர், 2018

சட்ட எரிப்பு - ஒரு சரித்திரக் காவியம் (3)

"திராவிட இயக்கமும், கம்யூனிஸ்டும் இணைந்து ஜாதி, மதவாத சக்திகளை முறியடிப்போம்!"


கலி. பூங்குன்றன்ரம்




ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பகுதிகளைக் கொளுத்தும் போராட்டம் தந்தை பெரியார் கட்டளைப்படி 1957 நவம்பர் 26 அன்று நடைபெற்ற நாளை நினைவு கூரும் வகையில் சென்னையில் பெரியார் திடல் - நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில்  ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாடாக நடைபெற்றது. மாநாட்டில் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தோழர் இரா. முத்தரசன் பங்கு கொண்டு சிறப்பான கருத்துகளை எடுத்து வைத்தார். அவ்வுரையில் மின்னிய சிந்தனை முத்துகள் சில.

தோழர் இரா. முத்தரசன் பெரியார் திடலில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் வரலாற்றுச் சிறப்புடன் - பின்னணி யுடன் நடைபெற்று வருகின்றன.

வேறு யாரும் சிந்திக்காதவற்றை முன்னிலைப் படுத்தி நடைபெறும் நிகழ்ச்சிகளாக அவை அமைகின்றன. எவ்வளவோ நாகரிகம், நவீனங்கள் எல்லாம் பேசப்படுகின்றன. அப்படிப்பட்ட ஒரு கால கட்டத்தில் ஆணவக் கொலைகளும் இன்னொரு பக்கத்தில் நடந்துகொண்டு தானிருக்கின்றன - அப்படியென்றால் நாம் பெருமைப்பட்டுக் கொள் ளும் அந்த நாகரிகமும், நவீனமும் எத்தகையது? பாராட்டத்தக்கதுதானா என்ற வினாவை எழுப் பினார் அந்தப் பாட்டாளி இயக்கத் தோழர்.

எந்தக் காலத்திலோ, யார் சூழ்ச்சியாலோ உருவாக்கப்பட்ட இந்த ஜாதி இன்னும் உயிர் வாழ்வது வெட்கக் கேடு.  இதிகாசங்களையும், வேதங்களையும் பெருமையாகப் பேசுகிறோம். உண்மையிலே பெருமைப்பட அவற்றில் என்ன இருக்கிறது என்பதை தந்தை பெரியார் ஒரு முக் கால் நூற்றாண்டுக் காலம் எடுத்துக் கூறியிருக்கிறார்.

எடுத்துக்காட்டாகக் கீதையையே எடுத்துக் கொள்வோம். போர்க் களத்தில் நிற்கும் அர்ஜுனன் போர் செய்யத் தயங்குகிறான். என் எதிரே உற்றார், உறவினர்கள் இருக்கிறார்கள் அவர்கள் மறைந்து விடுவார்கள் என்பதோடு அவன் நிற்கவில்லை.  போர் செய்யத் தயங்குவதற்கு அர்ஜூனன் கூறும் காரணங்கள் என்னென்ன?

யுத்தம் செய்யும்போது ஆட வர்கள் மரணம் அடைவார்கள். அதனால் ஏராளமான பெண்கள், விதவையாகி விடுவார்கள். இதனால் வருணக் கலப்பு ஏற்பட்டு விடும் - குல தர்மம் அழிந்து விடும் என்று அர் ஜுனன் சொல்லுவதாகக் கீதை சொல்லுவதை தோழர் முத்த ரசன் எடுத்துக் கூறினார்.

கீதை என்பதே வருணக் காப்பு நூல்தானே!

"நான்கு வருணங்கள் என் னால் உண்டாக்கப்பட்டவை. அவரவர்களுக்குரிய கருமங்களை அவரவர் மீறாமல் செய்ய வேண்டும் அதனை மாற்றிச் செயல்பட வைக்க அந்த வருண தரும உற்பத்தியாளனாகிய என்னால்கூட முடியாது" (கீதை அத்தியாயம் 4 - சுலோகம் 13).

காந்தியாரைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சேகூட இந்தக் கீதையின் சுலோகங்களை எடுத்துக் கூறித்தான் தனது செயலுக்கு 'நியாய தர்மம்' கற்பித்தான்.

பஞ்சாப் உயர்நீதிமன்றத்தின் மேனாள் நீதிபதி ஜி.டி. கோஸ்லா "மகாத்மாவின் கொலை" (The Murder of Mahatma) என்ற நூலில் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

"கோட்சே பகவத் கீதையைப் படித்திருந்தார்; அதன் பெரும்பாலான சுலோகங்களை மனப் பாடமாகப் படித்திருந்தார். நல்ல குறிக்கோளை அடைவதற்காகச்  செய்யப்படுகின்ற வன்செயல் களை நியாயப்படுத்துவதற்கு அவற்றை மேற் கோளாகக் காட்டுவதில் அவர் விருப்பம் கொண்டி ருந்தார்" (பக்கம் 274) என்று குறிப்பிட்டுள்ளார்.

இவர்களின் கீதை ஒரு மகாத்மாவையே கொலை செய்தது. தோழர் இரா. முத்தரசன் அவர்களின் உரை இதனைத்தான் உள்ளடக்கமாகக் கொண்டதாக அமைந்திருந்தது.

2018இலும் ஜாதி தீண்டாமை ஒழிப்பைப் பற்றிப் பேச வேண்டிய அவல நிலையை நொந்துகொண்ட தோழர் முத்தரசன் அவர்கள் இந்தப் பிறவிக் கொடுமையை ஒழித்துக் கட்ட கம்யூனிஸ்டுகளும், திராவிடர் கழகமும், திராவிட இயக்கமும் ஒன்று பட்டுப் போராட வேண்டும் - இந்த கைகோர்ப்பு வலிமையாகத் தொடர வேண்டும் என்ற கருத்தை முத்தாய்ப்பாக வைத்தபோது பார்வையாளர்கள் மத்தியில் பலத்த கரஒலி.

1952 பொதுத் தேர்தலில் தந்தை பெரியார் கம்யூனிஸ்டு கட்சியை ஆதரித்தார். நல்ல வெற் றியும் பெற்றது - ஆட்சி அமைக்க வாய்ப்பும்கூட இருந்தது. ஆனால் சூழ்ச்சிகள் காரணமாக அந்த வாய்ப்புப் பறி போனதையும் நினைவுப்படுத்திய தோழர் முத்தரசன் அவர்கள் மீண்டும்  நம்மிடையே ஒருங்கிணைப்புத் தொடர வேண்டும் என்று கூறி நவம்பர் 26  சட்ட எரிப்புப் போராட்டத்தில் ஈடு பட்டு வீர மரணம் அடைந்த தோழர்களுக்கு இந் தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் சார்பில் வீர வணக் கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

தோழர் கே. பாலகிருஷ்ணன்

இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் மாநில செயலாளர் தோழர் கே. பாலகிருஷ்ணன் இம்மாநாட்டில் பங்கேற்று மக்கள்முன் சவாலாக தோன்றி நிற்கும் மதவாத, ஜாதிய சக்திகளை முறியடிப்போம் என்று சூளுரை புகன்றார்.

60 ஆண்டுகளுக்குமுன் ஜாதியைப் பாது காக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பகு தியைக் கொளுத்தும் போராட்டத்தை அறிவித்து அதில் பல ஆயிரம் தோழர்கள் பங்கேற்றுச் சிறை சென்ற தியாக வரலாற்று நாளிது. சிறையில் பலரும் மாண்டனர் என்பதெல்லாம் ஜாதி ஒழிப்புச் சரிதத்தில் முக்கியமானதாகும்.

தந்தை பெரியாரைப் பொறுத்தவரை அவர் ஒரு வாழ்நாள் போராளி. ஒவ்வொரு நாளும் பிரச்சாரம் - போராட்டம் என்பதே அவரின் வாழ்க்கைப் பயணமாக அமைந்திருந்தது. மனுதர் மத்தை, பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து அவர் உதிர்த்த ஒவ்வொரு சொல்லுமே ஒவ்வொரு போர் ஆயுதமாகும்.

இன்னும் ஜாதிப் பாம்பு சாகவில்லை; ஜாதி ஆணவக் கொலைகள் நடைபெறுவது வெட்கக் கேடு.

பரியேறும் பெருமாள் படத்தில் ஒரு காட்சி. மேல் ஜாதிக்காரன் பகுதிக்குக் கீழ் ஜாதிக்காரன் வீட்டு நாய் செல்லக் கூடாதாம், இது ஒரு சரியான சமுதாயப் படை எடுப்பு.

பெற்றோர்களே தாங்கள் பெற்றெடுத்த - பாசத்தோடு வளர்த்த பெண்ணைக் கொலை செய் கிறார்களே! ஜாதியால் மனிதன் மிருகமாக மாறி விடுகிறான்.

முற்போக்கு சக்திகளுக்கு அதிக வேலை காத்திருக்கிறது. அன்று 1932களில் தந்தை பெரியார் ருசியா சென்று வந்தபிறகு ஈரோட்டிலே தந்தை பெரியாரும், சிங்காரவேலரும் சந்தித்து உருவாக்கிய ஈரோட்டுத் திட்டம் போல - இந்தக் கால கட்டத் திலே கம்யூனிஸ்டுக் கட்சிகளும், திரா விடர் கழகமும், திராவிட இயக்கங்கள் மூன்றும் இணைந்து போராட்டத் திட்டத்தை வகுத்துச் செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். வடக்கே அயோத்தி பிரச்சினையையும், தெற்கே சபரி மலையையும் இந்த இந்துத்துவ மதவாத சக்திகள் கைகளில் எடுத்துக் கொண்டுள்ளன; ஆட்சி சாதனைகளை சொல்ல வக்கற்றவர்கள், மத வாதத்தைக் கையில் எடுத்துக் கொண்டுள்ளனர்.

கம்யூனிஸ்டு கட்சியும், திராவிட இயக்கமும் இணைந்து முறியடிப்போம் என்று தோழர் கே. பாலகிருஷ்ணன் முழக்கமிட்டார்.

 -  விடுதலை நாளேடு, 29.11.18

சட்ட எரிப்பு -ஒரு சரித்திரக் காவியம் (2)

நேருவின் பேச்சும் - தந்தை பெரியாரின் பதிலும்


கலி.பூங்குன்றன்


ஜாதி - தீண்டாமையை எதிர்த்து தந்தை பெரியார் நடத்திய போராட்டம்தான் 1957 நவம்பர் 26 இல் தந்தை பெரியார் அறிவித்து நடத்திய இந்திய அரசமைப்புச் சட்ட எரிப்புப் போராட்டமாகும்.

பேரா.சுப.வீரபாண்டியன்




அந்நிகழ்ச்சியில் பங்கு கொண்ட திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள்.

அரசமைப்புச் சட்டத்தை எரிக்கலாமா என்று தந்தை பெரியாரை நோக்கி எழுப்பிய வினாக்களுக்குத் தந்தை பெரியார் சுடச் சுட அளித்த பதில்களைக் கோடிட்டுக் காட்டினார்.

நீங்கள் கதர்த் துணியை எரிக்கவில்லையா? ஆண்டுதோறும் ராம் லீலா என்ற பெயரில் திராவிட வீரன் இராவணனைக் கொளுத்துவதில்லையா?

கொளுத்துவது ஒரு போராட்ட வடிவம் - அவ்வளவுதான் என்று சொன்ன தந்தை பெரியாரின் பதிலை யாரே மறுக்க முடியும்?

அரசமைப்புச் சட்டத்தில் சிற்பி அண்ணல் அம்பேத்கர் நாடாளுமன்ற மாநிலங்களவையில் 1953 செப்டம்பர் 3 ஆம் தேதி பேசியதை நினைவூட்டினார் பேரா.சுப.வீ.

அண்ணல்  அம்பேத்கர் என்ன பேசினார்? இதோ:

‘Sir my friends tell me that I made the constitution. But I am quiet prepared to say that I shall be the first person to burn it out. I do not want it. It does not suit any body.

எனது நண்பர்கள், நான்தான் அரசியல் சட்டத்தை ஏற்படுத்தினேன் என்று சொல் கிறார்கள்.

நான்தான் அதை நெருப்பிலிட்டுப் பொசுக் குவதிலும் முதன்மையானவனாக இருப்பேன்.

நான் அதை முற்றிலும் வெறுக்கிறேன்.  அது யாருக்கும் பொருத்தமானதும் அல்ல" என ஆந்திர மசோதாபற்றிய விவாதம் மாநிலங் களவையில் நடந்தபோது டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் முழங்கினார் (3.9.1953 இல்).

இன்றைய இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கியமான தகவலும் சுப.வீ. அவர்களின் உரையில் இருக்கிறது. அந்தத் தகவல் அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேரு பேசியது.

தந்தை பெரியார் ஜாதியைப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டத்தின் பகுதியைக் கொளுத்தும் போராட்டத்தை அறிவித்தார் அல்லவா! திருச்சிக்கு வந்த பிரமதர் நேரு பேசிய பேச்சுதான் அது.

திராவிடர் கழகத் தலைவரானாலும், திராவிடர் கழகத்தவர் களானாலும் சரி, எங்களுடைய அரசியல் சட்டம் பிடிக்காவிட்டால், அவர்கள் தங்கள் மூட்டை முடிச்சுகளுடன் இந்நாட்டை விட்டு வெளியேறி எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும் போகட்டும்; அதைத் தாராளமாக வரவேற்கிறேன்'' என்று பேசினார்.

நேருவின் பேச்சு குறித்து தந்தை பெரியார் கொடுத்த பதிலடி என்ன தெரியுமா?

நேருவின் இந்தப் பேச்சுக்கு கெட்டிக்காரத்தனத் தையோ, துணிவையோ, வீரத்தையோ பொருத்த வேண்டியதில்லை. தமிழனின் மானமற்ற தன்னல ஈனப் பிழைப்பும், கோழைத்தனமும், நாட்டைக் காட்டிக் கொடுத்து வயிறு வளர்க்கும் தன்மையும்தான் காரணமாகும்'' என்றார் தந்தை பெரியார்.

இதன் பொருள் - தமிழனிடம் தன்மான உணர்வும், துணிவும் இருந்திருக்குமேயானால், நேருவுக்கு இப்படியெல்லாம் பேசத் துணிவு வராது என்பதே! அப்பொழுதுகூட நேருவின்மீது சீற்றம் கொள் வதைவிட, தமிழனின் ஈனத்தன்மையை எண்ணிதான் வேதனைப்படுகிறார். தமிழனுக்குத் தன்மான உணர் வையும், துணிவையும் ஊட்ட வேண்டும் என்ற உணர்வும் இதனுள் இருப்பதை அறிய முடிகிறது.

சட்டமன்றத்தில் அண்ணாவின் விவாதங்கள்!


ஜாதியைப் பாதுகாக்கும் சட்டப் பிரிவைக் கொளுத்தும் போராட்டத்தை தந்தை பெரியார் அறிவித்துவிட்டார். அவசர அவசரமாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்படுகிறது. அந்த விவாதத்திலே அண்ணா அவர்கள் பங்கு கொண்டு தெரிவித்த கருத்துகளைப் பேராசிரியர் சுப.வீ. எடுத்துச் சொன்னார்.

விவாதம் என்றால் சாதாரணமானதல்ல. அனல் பறக்கக் கூடியவை அவை. அந்த நேரத்திலே அண்ணா என்ன பேசினார்?

அது தேவையற்ற சட்டம் என்று அண்ணா விவாதம் செய்கிறார். (இவ்வளவுக்கும் அந்தக் காலகட்டத்தில் திராவிடர் கழகமும் - தி.மு.க.வும் எதிர்நிலையில் இருந்த சூழல்).

"பாட்னா நகரத்தில் கிளர்ச்சி செய்யப்பட்ட நேரத்தில் காந்தியார் படத்தைக் கொளுத்தியிருக் கிறார்கள். நேருவுக்குக் கொடும்பாவி கட்டி இழுத்திருக் கிறார்கள். அரசியல் சட்டத்தைக் கிழித்திருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் நீங்களே அரசியல் சட்டத்தை ஏழு ஆண்டுகளுக்குள்ளாக பத்துத் தடவை கொளுத்தியிருக்கிறீர்கள்."

"அரசியல் சட்டத்தைக் கொளுத்தும் காரியத்தைத் தான் ரொம்ப நாகரிகமாகப் பத்துத் தடவை திருத்தியிருக்கிறீர்கள். ரொம்பப் புனிதமானது என்று போற்றப்படுகிற அந்தச் சட்டம் உங்களாலேயே திருத்தப்படுகிறது என்றால் என்ன? கொளுத்தப்பட்டது என்றுதான் ஆகிறது'' என்று அவையிலே எடுத்து வைத்தார் அண்ணா.

அதோடு நிறுத்தவில்லை அண்ணா அவர்கள்.

நீங்கள் சட்டத்தை நிறைவேற்றவிட்டாலும், 10 ஆயிரம் பேர் அந்தச் சட்டத்தை மீறி, மூன்றாண்டு அல்ல முப்பதாண்டல்ல சிறையில் இருக்கத் தயங்கமாட்டார்கள். நான் உங்களைப் பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்.''

(தந்தை பெரியார் பற்றியும் திராவிடர் கழகத் தோழர்கள் பற்றியும் அண்ணாவின் உயர் மதிப்பீடு இது.)

பெரியார் அவர்கள் செயலுக்குப் பின்னால் இருக்கிற நோக்கத்தை தயவு செய்து ஆராய்ந்து பாருங்கள். அந்த நோக்கத்தை வெளிப்படுத்துகிற பெரியாருடைய பழைய கால நடவடிக்கைகளை, உங்களுக்குள்ள தொடர்புகளையும் ஒருகணம் எண்ணிப் பாருங்கள்'' என்று ஜாதி ஒழிப்புக் கொள்கை நோக்கில் விவாதங்களை அடுக்கிச் சென்றார் அண்ணா.

மேலும் அண்ணா கேட்டார், 'காமராசரை எப்படி யெல்லாம் பாராட்டுகிறார் பெரியார்?

காமராசரின் அருங்குணங்களையெல்லாம் எடுத்துக் கூறுகிறார் பெரியார். சாதனைகளையெல்லாம் விளக்கிக் கூறுகிறார். அப்படிப்பட்ட பெரியாரை காமராஜர் ஏன் நேரில் சந்திக்கக் கூடாது? என்றும் கூடக் கேட்டுப் பார்த்தார் அண்ணா.

புதிய சட்டம் இப்பொழுது தேவையில்லை - தேவையெல்லாம் காமராஜர் - பெரியார் சந்திப்புதான் என்று ஆலோசனையையும் தந்தார் சட்டப் பேரவையில் அறிஞர் அண்ணா.

உள்துறை அமைச்சர் பக்தவத்சலம் அவர்களைப் பார்த்து அறிஞர் அண்ணா சொன்னார்,

சட்டத்தைக் கொளுத்தினால் மக்கள் நெஞ்சில் புண்ணை ஏற்படுத்தும் என்று அமைச்சர் சொன்னார். பெரியாரை அடக்குவதற்காக நீங்கள் கடுமையான சட்டம் கொண்டு வந்தால் மனம் புண்படுபவர்கள் இன்று தமிழகத்தில் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள் என்பதை அமைச்சரவை தயவு செய்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று அண்ணா அவர்கள் சொன்னார்.

பேராசிரியர் சுப.வீ. அவர்களின் உரையில் ஒளி தரும் இந்த வரலாற்றுப் பரல்களை கோடிட்டு காட்டினார். சுப.வீ. அவர்களின் உரையில் முத்தாய்ப்பான ஒன்று - தந்தை பெரியார் அறிவித்த போராட்டம், அது தொடர்பான சட்டம்பற்றி சட்டமன்றத்தில் விவாதம் நடந்தபோது முதலமைச்சர் காமராஜ் அவையில் இருந்தார், ஆனாலும் எதுவும் பேசவில்லை. அண்ணா விவாதித்தார். இதில்  பெரியார், அண்ணா, காமராஜ் ஆகியோரை எந்தப் பார்வையில் பார்க்கவேண்டும். அவர்களின் உள்ளக்கிடங்கு எத்தகையது  என்ப தையும் நுட்பமாகக் கோடிட்டுக் காட்டினார் பேரா. சுப.வீ. அவர்கள்.

(நாளையும் தொடரும்)
-  விடுதலை நாளேடு, 28.11.18

சட்ட எரிப்பு - ஒரு சரித்திரக் காவியம்

சட்ட எரிப்பு - ஒரு சரித்திரக் காவியம்

கலி. பூங்குன்றன்ரம்




ஒவ்வொரு நாளும் நாட்காட்டியில் ஒரு தாளைக் கிழிக்கிறோம். சில நாள்கள்தான் நம்மை பிரமிக்கச் செய்கின்றன. வீர வணக்கம் செலுத்தக் கூடிய நாட்களாக அமைகின்றன.

அத்தகு நாள்களில் கம்பீரமாக நம் நினைவில் நிற்கக் கூடிய, வீர வணக்கம் செலுத்தக் கூடிய நாள்தான் நவம்பர் 26. என்ன சிறப்பு? இந்திய அரசமைப்புச் சட்டத் தின் சில பிரிவுகளைக் கொளுத்தச் சொல்லி தந்தை பெரியார்  அவர்களால் கட்டளையிடப்பட்ட நாள்! எந்தெந்த பிரிவுகள்?

13(2), 25(1), 26, 29(1)(2) 368 - இந்தப் பிரிவுகள் ஜாதியை மதத்தின் பேரால் கெட்டியாகப் பாது காக்கக் கூடியவை.

ஒரு சுதந்திர நாட்டில் ஜாதியைப் பாதுகாக்கும் இந்தப் பகுதிகளைக் கொண்ட  அரசமைப்புச் சட்டம் இருக்கலாமா? ஜாதி இருக்கும் நாட்டில் சுதந்திரம் இருக்குமா? சுதந்திர நாட்டில் பிராமணன் -  சூத்திரன் என்ற பேதம் ஏன்? பேதத்தை ஒழிப்பது தானே உண்மையான சுதந் திரம்? என்ற வினாவை எழுப்பினார் தந்தை பெரியார்.

தஞ்சையிலே ஜாதி ஒழிப்பு (தனி) மாநாடு கூட்டி, இரண்டு இலட்சத்துக்கும் அதிகமானோர் கூடிய அந்த மக்கள் கடலின் முன் ஓர் அறிவிப்பை - தீர்மானத்தைக் கொடுத்தார் அறிவுலக ஆதவனாம் நம் தந்தை பெரியார் (3.11.1957).  "15 நாட்கள் வாய்தா தருகிறேன் மத்திய அரசுக்கு. அதற்குள் ஜாதியைப் பாதுகாக்கும் இந்தப் பகுதிகளை நீக்க வேண்டும். இல்லையேல் பட்டப் பகலில் முன் கூட்டியே  அறிவித்து விட்டு ஜாதியைப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டத்தின் - இந்தப் பகுதிகள் கொளுத்தப்படும்" என்று அறிவித்தார்.

உலகில் அதுவரை எவரும் கேள்விப்படாத அறிவிப்பு அது. நாடே கிடுகிடுத்தது - அக்கிர காரம் அலறியது. ஆரிய ஏடுகள் ஆத்திர நெருப்பை அள்ளி வீசின.

நேரு தலைமையில் அமைந்த மத்திய அரசு என்ன செய்தது? ஒரு மாபெரும் மாநாட்டில், இலட்சக்கணக்காக கூடிய மக்கள் சமுத்திரத்தின் முன் - பெருமையும் சீலமும் மிகுந்த மாபெரும் தலைவர் - தந்தை என்று ஓர் இனத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர் தலைமையிலே நடைபெற்ற மிகப் பெரிய மாநாட்டில் ஒரு தீர் மானம் நிறைவேற்றப்பட்டது என்றால் - நடப் பது  மக்களாட்சி என்றால் என்ன செய்திருக்க வேண்டும்? அமைச்சரவையைக் கூட்டிப் பரிசீலனை செய்திருக்க வேண்டுமல்லவா?

நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நியாயம் குறித்து அலசி ஆராய்ந்திருக்க வேண்டாமா?

மாறாக அவர்களின் புத்தி எங்கே போய் மேய்ந்ததாம்? சட்டத்தைக் கொளுத்தினால் என்ன தண்டனை என்று ஆய்வு செய்தார்கள்.

என்ன வேடிக்கை தெரியுமா தோழர்களே? சட்டத்தை கொளுத்தினால் என்ன தண்டனை என்று  சட்டத்திலேயே இடமில்லை.

இப்படி ஒரு தலைவர் வருவார் - இப்படி யொரு அறிவிப்பைக் கொடுப்பார் என்று எவரும் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள் போலும்.

சென்னை மாநில சட்டப் பேரவையில் அவசர அவசரமாக ஒரு சட்ட முன்வடிவு கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

அது குறித்துத் தந்தை பெரியார் கலங்க வில்லை. கருஞ்சட்டைத் தோழர்களும் பின் வாங்கவும் இல்லை.

அதுகுறித்துத் தந்தை பெரியார் அறிக்கை ஒன்றினை வெளியிட்டார்.

"மூன்று ஆண்டுக்கோ,

பத்து ஆண்டுக்கோ,

நாடு கடத்தலுக்கோ, தூக்குத் தண்டனைக்கோ, ஆளாக்கப்பட்டாலும் மற்றும், பிரிட்டிஷ் காரன், காங்கிரசுக் கிளர்ச்சியின்மீது கையாண்ட எந்த விதமான கொடிய, தீவிரமான அடக்கு முறைகளை நம்மீதும், கழகத்தின்மீதும் பிரயோ கித்தாலுங்கூட, அவைகளுக்குப் பயப்பட்டு என் இலட்சியத்தையோ, திட்டத்தையோ, மாற்றிக் கொள்ளப் போவதில்லை.

கழகத் தோழர்களே! தீவிர இலட்சிய வாதிகளே! நீங்கள் மூன்று ஆண்டு தண்டனைக்குப் பயந்துவிட வேண்டியதில்லை. பயந்துவிட மாட்டீர்கள்! சட்டத்தைப் பார்த்துப் பயந்து விட்டதாகப் பெயர் வாங்காதீர்கள்! ஆகவே, இஷ்டப்பட்டவர்கள் (விருப்பப்பட்டவர்கள்) தஞ்சை மாநாட்டுத் தீர்மானத்தை நிறைவேற்ற - பெயர் கொடுங்கள்!"

- ஈ.வெ.ரா. (விடுதலை', 11.11.1957)

போராட்டத்தில் ஈடுபடவிருக்கும் தோழர்களின் பட்டியல் 'விடுதலை'யில் வந்து கொண்டே இருந் தது. குடும்பம் குடும்பமாக போட்டிப் போட்டுக் கொண்டு பட்டியலில் இடம் பிடிக்க முயன்றனர்.

'விடுதலை'யிலே ஒரு பெட்டிச் செய்தி வந்தது அது என்ன தெரியுமா?

சட்டத்தைக் கொளுத்துங்கள்! சாம்பலை மந்திரிக்கு அனுப்புங்கள்!!

"சட்டத்தை நிறைவேற்றிவிட்டதன் மூலம் அரசாங்கத்தினர் "ஜாதியைக் காப்பாற்றித்தான் தீர வேண்டும்" என நமக்கு சவால் விட்டு இருக்கின்றனர். இந்த சவாலுக்கு நீங்கள் சட்டம் கொளுத்தாவிட்டால் மனிதர்கள்தானா?

சட்டம் கொளுத்தி சாம்பலை சட்டம் செய்த மந்திரிக்கு அனுப்பிக் கொடுங்கள்!

சட்டம் கொளுத்தின மக்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள் என்பதை அதன்மூலம் கொஞ்சமாவது தெரிந்து கொள்ளட்டும்!"

- ஈ.வெ.ரா. (விடுதலை', 14.11.1957)

தந்தை பெரியார் இரயில் சுற்றுப் பயணம் செய்தார். முக்கியப் பொறுப்பாளர்கள் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டனர்.

ஆம் நவம்பர் 26 வந்தது - வந்தே விட்டது - தமிழ்நாடெங்கும் 10 ஆயிரம் பேர் கொளுத்தினர்! கொளுத்தினர்!!

முதல் நாள் (25.11.1957) சிறீரங்கம் பொதுக் கூட்டத்தில் பேசி விட்டு, மறுநாள் சென்னையில் சட்டத்தைக் கொளுத்தவிருந்த தந்தை பெரியாரை, 25.11.1957 மாலை - சிறீரங்கம் பொதுக் கூட்டத்திற்குப் புறப்படத் தயாராக இருந்தபோது முன்கூட்டியே கைது செய்தது காவல்துறை.

தமிழ் நாடெங்கும் 10 ஆயிரம் கருஞ்சட்டைத் தோழர்கள் ஜாதியைப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டத்தின் பகுதியைக் கொளுத்தி அதன் சாம்பலை அரசுக்கு அனுப்பி வைத்தனர்.

நீதிமன்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட பொழுது யாரும் எதிர் வழக்காடவில்லை. அதே நேரத்தில் சட்டத்தை எரித்த தோழர்கள் என்ன கூற வேண்டும்  என்பதையும் அறிக்கை மூலம் தெரிவித்தார் தந்தை பெரியார்.

"நான் சாதி ஒழிப்புக் கிளர்ச்சிக்காரன். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதிக்கும், அதை உண் டாக்கிய மதத்துக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டி ருக்கிறது. அரசமைப்புச் சட்டம் தமிழர் நலனுக்காக வகுக்கப்படவுமில்லை; அச்சட்டத்தைத் திருத்தக் கூடிய வசதி தமிழர்களுக்கு இல்லை.

ஆதலால் என் எதிர்ப்பைக் காட்டிக் கொள்ளும் அறிகுறியாக இச்சட்டத்தைக் கொளுத்தினேன். இப்படிக் கொளுத்துவதற்கு எனக்கு உரிமையுண்டு. இதனால் எந்த உயிருக்கும், எந்தப் பொருளுக்கும் சேதமில்லை. ஆதலால் நான் குற்றவாளியல்ல. இந்த நீதிமன்ற நடவடிக்கையில் நான் கலந்து கொள்ள விரும்பவில்லை. நான் எதிர்-வழக்காட விரும்பவில்லை. நான் குற்றவாளி என்று கருதப் பட்டால் அதற்குரிய தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளத் தயாராயிருக்கிறேன்."

பெரியார் அறிக்கை: (விடுதலை 23-11-1957)

சிறை செல்லுமுன் தந்தை பெரியார் என்ன சொன்னார்?


"நவம்பர் 25ஆம் தேதி நடக்கும் விசாரணையில் எனது முச்சலிக்கா பாண்டு கேன்சல் ஆகி என்னைச் சிறைப்படுத்தும்படியான நிலைமை பெரும்பாலும் ஏற்படலாம். இந்தச் சமயத்தில் பொது மக்களுக்கு ஏதாவது சொல்லவேண்டியது அவசியமாகும். நான் சிறைப்படுத்தப்பட்டு விட் டேன் என்பதாலேயோ அல்லது பொது மக்கள், அரசமைப்புச் சட்டத்தைக் கொளுத்துவார்கள் என்கிற எண்ணத்தால் அதைத் தடுக்க அரசாங் கத்தார் ஏராளமான மக்களைக் கைதுசெய்து விட்டார்கள் என்ற எண்ணத்தாலேயோ, புதிய சட்டத்தின்படி நீண்டநாள் தண்டிக்கப்படநேரிடும் என்ற அச்சத்தினாலேயோ யாரும் அதாவது கொளுத்த வேண்டியது அவசியந்தான் என்று கருதுகிறவர்கள், எந்தவிதமான தயக்கமும் இல் லாமல் அரசியல் சட்டத்திலிருந்து பொறுக்கி எடுத் துப் போட்டிருக்கிற, நமக்குக் கேடான நாலைந்து பிரிவுகளைக் கொண்ட பிரசுரத்தொகுப்பைக் கொளுத்தியே தீரவேண்டியது முக்கியமான காரியம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

இதைவிட முக்கியமான காரியம் ஒன்றை வணக்கமான வேண்டுகோளாகத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். அதை அவசியம் ஒவ்வொரு வரும் கவனிக்கவேண்டியதும், என்னை ரிமாண்டு (சிறையடைப்புச்) செய்வதனாலேயோ மற்றும் இப்பொழுது செஷன்சில் (மாவட்ட நீதிமன்றம்) நடைபெறும் வழக்கின் பெயரால் என்னை நீண்டநாள் அரசாங்கத்தார் தண் டனைக்குள்ளாக்கி விடுவதாலேயோ பொது மக்கள் யாரும் ஆத்திரப்படுவதற்கோ, நிலை குலைந்து விடுவதற்கோ ஆளாகாமல் மிக்க மகிழ்ச்சியோடு அச்சேதியை வரவேற்க வேண்டும். எந்தவிதமான கலவரமோ, பலாத் காரமோ, பார்ப்பன சமுதாயத்தை சேர்ந்த ஆண்களுக்கோ, பெண்களுக்கோ, குழந்தை களுக்கோ, துன்பம், வேதனை உண்டாக்கக் கூடியதான எப்படிப்பட்ட பலாத்காரமான செய்கையையும், நஷ்டம் உண்டாக்கக் கூடியதான செய்கையையும் அதாவது ஆயுதப் பிரயோகமோ, அடிதடியோ, நெருப்புக் கொளுத் துதலோ முதலிய ஒரு சிறுகாரியம் கூட நடத்தாமலும், நடைபெறாமல் இருக்கும்படியும் ஒவ்வொருவரும் நடந்துகொள்ள வேண்டும். நான் ஆயுதப் பிரயோகம் செய்யவேண்டும் என்றும், அக்கிரகாரங்கள் கொளுத்தப்பட வேண்டும் என்றும் சொன்னதும், சொல்லி வரு வதும் உண்மை. ஆனால் அவை இப்பொழுது அல்ல. அதற்கான காலம் இன்னும் வரவில்லை. வரக்கூடாதென்றே ஆசைப்படுகிறேன். அப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபடுவதற்குக் காலம் எப்போது வரும் என்றால் அரசியல் சட்டத்தைக் கொளுத்துவது முதலிய இன்னும் நான்கைந்து கட்டங்கள் நடத்தி, அவைகளால் ஒன்றும் பயனில்லை, வெற்றிக்கு அவை பயன் படவில்லை என்று கண்டு, பலாத்காரத்தைத் தவிர வேறு வகையில்லை என்ற முடிவுக்கு வந்தபிறகுதான் நாம் அவற்றில் இறங்க வேண் டியவர்களாக இருக்கிறோம்.

ஆதலால் இந்த என்னுடைய தாழ்மையான வேண்டுகோளை ஒவ்வொருவரும் கருத்தில் வைக்க வேண்டும்

இப்பொழுது எனக்கு ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் தண்டனையானது நம் முடைய அடுத்த திட்டங்களுக்கு வலுவான ஆதரவுகளையும், உணர்ச்சியையும், ஊக்கத் தையும், துணிச்சலோடும், வேகத்தோடும், ஈடு படுவதற்கு தூண்டுதலை உண்டாக்குவதற்கு வலிமையான சாதனமாக அமையும். பொது மக்கள் மீது எனக்குப் பலமான செல்வாக்கு (ஆதிக்கம்) இருக்கிறது என்று அரசாங்கமும், இந்தியாவிலுள்ள மற்ற மக்களும் எண்ணியி ருக்கிற ஒரு எண்ணத்திற்குப் பாதகம் ஏற்படாமல் பொதுமக்கள் நடந்துக் கொள்ள வேண்டு மென்றால் நான் மேலே வேண்டிக்கொண்டு இருக்கிறபடி எந்தவிதமான தண்டனைக்குப் (ஏற்பட்டால்) பிறகு பொது மக்களிடையில் மேற்சொன்னபடி எந்த விதமான கலவரமும், செய்கையும் ஏற்படாமல் இருக்க வேண்டிக் கொள்ளுகிறேன்; அதிகாரி களிடத்தில், போலீஸ்காரர்களிடத்தில், மரியாதை யாகவும், கட்டுப்பாடாகவும் நடந்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்."

- ஈ.வெ.ரா. ('விடுதலை' - 26.11.1957)

இப்படி அறிக்கை வெளியிட்ட  ஒரு தலைவரை வரலாறு கண்டதுண்டா? இதனை சொல்லுக்குச் சொல்  - வரிக்கு வரி ஏற்றுக் கொண்டு நடந்து கொண்ட கட்டுப்பாட்டின் கவசம் பொதுத் தொண் டின் புடம் போட்ட தொண்டர்களாம் பத்தரை மாற்றுத் தங்கங்களைத் தான் வரலாறு சந்தித்த துண்டா?

(தொடரும்)

-  விடுதலை நாளேடு, 27.11.18

புதன், 28 நவம்பர், 2018

சுயமரியாதை

29.09.1929 - குடிஅரசிலிருந்து...

ராமனாதபுரம் ஜில்லா அருப்புக்கோட்டையில் நாடார் சகோதரர் களின் நிர்வாகத்திலும் அவர்களது பொதுப் பணத்திலும், வெகு காலமாக ஒரு உயர்தரப் பாடசாலை நடந்துவரும் விபரம் அனேகருக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் அப்பள்ளியில் இதுவரை ஆதிதிராவிடர் பிள்ளைகளைச் சேர்ப்பதில்லை என்ற நிர்ப்பந்தம் இருந்து வந்ததுடன் அந்தப் படிக்கே சேர்க்காமலும் இருந்துவந்தார்கள். சில மாதங்களுக்கு முன்பு திரு. சவுந்திரபாண்டியன் அவர்களுக்கு ஜில்லா போர்ட் தலைவர் பதவி கிடைத்ததற்காக அருப்புக்கோட்டை மகாஜனங்களும் மற்றும் பல தனித் தனி வகுப்பாரும் அவரைப் பாராட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததில் அருப்புக் கோட்டை நாடார் சமூகத்தாரும் ஒரு தனியான விருந்தும் பாராட்டுக் கூட்டமும் செய்து உபச்சாரப் பத்திரங்கள் வாசித்துக் கொடுத்தார்கள். அவ்வு பச்சாரப் பத்திரங்களுக்குத் திரு.சவுந்திரபாண்டியன் பதிலளிக்கையில் மனித சமூகத்தில் சில வகுப்பாரைத் தாழ்த்தி கொடுமைப்படுத்தி வரப்படுவதை அடியோடு ஒழிக்க வேண்டியதே, இது சமயம் மனிதனின் முதல் கடமை என்றும் அந்த வேலைக்கே பெரிதும் தனது எல்லாப் பதவிகளையும் உபயோகிக்கப் போவதாயும், ஆனால் அதில் தனக்கு சில கஷ்டங்கள் நாடார் சமுகத்தாராலேயே இருப்பதாகவும் சொல்லி உதாரணமாக அருப்புக் கோட்டையில் உள்ள நாடார் ஹைஸ்கூலில் ஆதிதிராவிடப் பிள்ளைகளைச் சேர்த்துக் கொள்ளு வதில்லை என்கின்ற நிர்ப்பந்தமிருப்பதேதான் முக்கியமான தடையென்றும் கூறி, அதனால் தான் மிகுதியும் வெட்கமடைவதாயும் தன்னுடைய சமூகத்திலேயே இவ்விதக் கொடுமையிருந்தால் தன்னுடைய உத்தியோக ஓதாவில் மற்ற சமுகத்தாருக்குள் இருக்கும் கொடுமைகளை நீக்கும் படி சொல்ல தனக்கு எப்படி தைரிய முண்டாகுமென்றும், ஆகவே எவ்வளவுக்கெவ்வளவு சீக்கிரத்தில் இவ்வருப்புக் கோட்டை பள்ளிக்கூடத்தில் இக்கொடுமை நீக்கப்படுகின்றதோ, அவ்வளவுக்கு அவ்வளவு தனது வேலை சுலபமாகுமென்றும் அவசியம் செய்ய வேண்டும் என்றும் தனது சமுகத்தலைவரை அடிப்பணிந்து கேட்டுக் கொள்ளுவதாகவும் சொன்னார். அதற்கிசைய அன்று அப்பள்ளிக்கூட நிர்வாகிகள் அவ்வித நிர்ப்பந்தத்தை நீக்கிவிட்டு ஆதிதிராவிட மக்களை அந்தப் பள்ளிகூடத்தில் சேர்த்துக் கொண்டார்கள் . இது நமது நாட்டில் உள்ள தீண்டாமையும் உயர்வுதாழ்வும் ஒழிய ஒரு பெரிய அறிகுறியாகும் என்றே சொல்ல வேண்டும். இவ்வித அரிய காரியத்தைச் செய்த அருப்புக் கோட்டை நாடார் தலைவர்களை மனமாரப் பாராட்டுகிறோம்.

-  விடுதலை நாளேடு, 24.11.18