பேராசிரியர் கு.வெ.கி. ஆசான்
பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.
சமுதாய வாழ்வும் சமற்கிருத மயமாக்கப்பட்ட கல்வி அறிவும் எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் கு.வெ.கி. ஆசான் ஆற்றிய உரை வருமாறு:
1. உரிமை வாழ்வே வாழ்வு; உரிமை வேட்கை மனிதனுக்கு இருக்கும் தனி இயல்பு; உரிமை விழைவின் விளைவு சமனியச் சமுதாயம்; நாணயம் ஒன்றின் இரு வேறு பக்கங்களைப் போல், உரிமையும் சமனியமும் ஒரு நிலையின் இரு அடிப்படைக் கூறுகள். உரிமையை வேண்டாதவர் சமனியத்தைப் பெறுவதில்லை; சமனியம் அற்ற இடத்தில் உரிமை நிலைப்பதில்லை.
2. இயக்கம் உலக இயல்பு. இயக்கத்திற்குத் தக ஏற்படும் சமுதாய மாற்றத்திற்கு ஈடுகொடுப்பவர்களே சமனிய உரிமை வாழ்வைப் பெற முடியும்; மற்றவர்கள் பின்தங்கி விடுவர். முற்போக்கான மாற்றத்தை மேற்கொள்ள அறிவுத் தெளிவும் அதற்கான கல்வியும் தேவை.
3. நாகரிக வாழ்வில் நாளும் மேன்மையடைய, உடலையும் உள்ளத்தையும் வளர்க்க வேண்டியிருப்பதால், அவ்வளர்ச்சிக்கு ஆதாரத் துணையாகும் கல்வியைப் போற்றிப் பெறவேண்டியது, இன்றியமையாதது ஆகிறது. கல்வியும் அறிவும் பெறாதவர்கள் மாறுதலுக்குத் தக முன்னேறாமல் பின்தங்கிவிடுகிறார்கள். பின்தங்கித் தேங்கியவர்களை, முன்னேறியவர்கள் ஒதுக்கவும் ஒடுக்கவும் முடிகிறது. இதனால் சமுதாயப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகின்றன. ஏற்றம் பெற்றவர்கள் தாழ்ந்துவிட்டவர்களின் உரிமையைப் பறித்து சுரண்டுகிறார்கள். இதன் விளைவு என்ன? ஜெனிவாவில் பிறந்து பதினெட்டாம் நூற்றாண்டில் ஃபிரான்சு நாட்டில் வாழ்ந்த அறிஞன் ரூசோ சொன்னதுபோல், கட்டற்றதாகப் பிறப்பெடுத்த மனித இனம் இப்பொழுது எங்கும் கட்டுண்டு கிடக்கிறது. தன்னுடைய சமுதாய ஒப்பந்தம் எனும் நூலில் இக்கருத்தைக் கூறும் ரூசோ, இதற்குத் தீர்வு காணக் கல்வியின் தேவையை அறிந்த காரணத்தினாலோ என்னவோ, ஆய்மீல் (Emile) எனும் நூலில் புதுமைக் கல்வித் திட்டம் ஒன்றை 1762இல் வகுத்தளித்தான்.
4. உரிமை, சமனியம், இயக்கம், மாற்றம், முன்னேற்றம், நாகரிக வளர்ச்சி எனும் வகையில் சுழலும் மனித வாழ்வில் அச்சாணியாக அமைவது கல்வி. ஏனென்றால் உரிமை முதலான அனைத்திற்கும் விளக்கம் தரும் அறிவு அதனால் பெறப்படுகிறது. இவ்வளவு முகாமையான கல்வியைப் பேணும் இனம் வாழும், உயரும்; பேணாத சமுதாயம் வீழும்; தாழும்! கடந்த சுமார் ஆயிரத்து அய்நூறு ஆண்டுகட்கு மேலாகத் தமிழர் தமக்குரிய கல்வியைத் துறந்ததால், இழந்ததால் வீழ்ச்சியுற்றனர். அப்படி அவர்கள் கல்வியைத் துறந்தது ஏன் எனும் வினாவிற்கு விடை காண, சமற்கிருத மயமாக்கம் எனும் போக்கினைத் தெரிவது பயன் தரும்.
5. சமற்கிருத மயமாக்கம் எக்காலத்தில், ஏன் நிகழ்ந்தது? தமிழாக்கத்தைப் பொறுத்தவரை சங்க காலத்தில் சிறிதே தலைகாட்டிய சமற்கிருத மயமாக்கம், களப்பிரர் இடையீட்டிற்குப்பின், பல்லவர் காலம் முதல் அய்ரோப்பியர் ஆட்சி தொடங்கும் வரை மெல்ல மெல்லப் பரந்த அளவிலும் ஆழமான முறையிலும் இங்கு கால்கொள்ள முற்பட்டது. செல்வாக்கோடு நிலவியும் வந்தது. அய்ரோப்பிய - ஆங்கிலேய புதிய கல்வி நிருவாக சமூக அமைப்பின் தாக்கத்தாலும், இந்நாட்டில் தோன்றிய மறுமலர்ச்சி, தன்மானப் பகுத்தறிவு இயக்கங்களாலும் அதன் பிடி மெல்லத் தளர்ந்து வருகிறது. இன்னும் மறைந்து வரவில்லை.
6. ஆரியர், இந்தியாவிற்கு வருவதற்கு முன் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என வாழும் இடத்தின் அடிப்படையில் வாழ்க்கை முறையும், அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் எனத் தொழில் அடிப்படையில் சமூக அமைப்பும் பகுக்கப்பட்டிருந்தன. ஆனால், ஆரியர் வருகைக்குப்பின், வருண தருமத்தின் அடிப்படையில் பிரம்ம, சத்திரிய, வைசிய, சூத்திரப் பாகுபாடுகள் பிறப்பின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டன. ஆரிய, திராவிடர் இடையே நாளடைவில், குருதிக்கலப்பு ஏற்பட்டாலும், பிறப்பின் அடிப்படையில் சலுகைகள் அனுபவித்தவர்கள், பார்ப்பன ( பிராமண ) மேலாண்மையின் கீழ் அமைந்த ஜாதி ஏற்பாட்டின் மேல்-கீழ் படிநிலைகளை விட்டுவிடாமல் உறுதியாக நிலைப்படுத்துவதற்கான சமய, சமூக, அரசியல் ஏற்பாடுகளைச் செய்துவிட்டார்கள். சமற்கிருத மயமாக்கம் என்பது இந்த ஏற்பாடுகளின் ஒரு வடிவமே ஆகும்.
7. சமூகவியல் அறிஞர் எம்.என். சீனிவாசன் அவர்கள், சமற்கிருத மயமாக்கம் என்னும் பொருள்படும் Sanskritization என்னும் சொல்லை ஆக்கினார் என்பர். அவர் எப்பொருளில் அச்சொல்லை பயன்படுத்தியிருப்பினும், சமற்கிருத மய மாக்கம் எனும் சொற்றொடரை இக்கட்டுரையில் பயன் படுத்தும் பொருளை வரையறை செய்தல் முறையாகும். பண்டிதப் பார்ப்பனச் சிறுபான்மையர்கள் மதம், சாத்திரம், சடங்கு, பழக்க வழக்கம், கலை, இலக்கியம் போன்றவற்றைப் பயன்படுத்தி, உழைக்கும் மக்களின் மனங்களை நல்ல கல்வி அறிவு பெறாத, தெளிவற்ற மயக்க நிலையில் நிறுத்தி, அவர்களை என்றும் பாமரர்களாகவே வைத்து, சூத்திர பஞ்சமராகத் தாழ்த்தி, ஆட்சியாளரின் வலிமையைத் துணை கொண்டு, சமூகப் பொருளாதார மேலாண்மையை நிலைப் படுத்திக்கொள்ள உதவும் ஒரு பண்பாட்டு ஏற்பாடுதான் சமற்கிருத மயமாக்கம் ஆகும்.
8. சமுதாயத்தின் ஒரு குறிப்பிட்ட வடிவமைப்பின் ( A particular frame -work) முகம் ஒன்றாகச் சமற்கிருத மயமாக்கம் அடைகிறது. உழைப்பிற்கு உரிய மதிப்பளிக் காமையும் பிறப்பின் அடிப்படையில் ஜாதி உயர்வு-தாழ்வு கற்பிப்பதும், வெகு மக்களின் கல்வியையும், மொழியையும் புறக்கணித்து அவர்களை ஒதுக்குவதும், கருத்தையும் காரியமாற்றுதலையும், (Theory and Practice) வெவ்வேறு பகுதியினருக்கு உரியனவாகப் பிரித்து அமைத்தலும் இந்துமதம் எனப்படுவதின் நடப்புக்கூறுகள் ஆகும். வருண தருமம், சதுர்வருணியம், பிராமணியம், சனாதன தருமம், வைதிக மதம், சண்மதம் போன்ற பெயர்களால் பல்வேறு காலங்களில், பல்வேறு இடங்களில் அழைக்கப்படும் இந்து மதத்திற்குத் தெளிவான கோட்பாடுகள் இல்லை என்பதோடு, முரண்பாடான கோட்பாடுகள் இருப்பினும், மேற்சொல்லப் பட்ட சமுதாயத் தாழ்வு நடைமுறைகள் அந்த மதத்துடன் அன்றும் இன்றும் பிணைந்தே இருக்கின்றன.
9. இந்த நடைமுறைகளை நிலைப்படுத்திக்கொள்ளப் பின்பற்றப்படும் ஏற்பாடுகள் வெளிப்படையாகத் தெரிந்தவையாயினும், அவற்றின் உள்நோக்கத்தைப் பாமரர் பல காலம் புரிந்து கொள்ளாமலேயே இருந்துவிட்டனர். ஸ்மிருதிகளாகிய வேதங்களை இறையளிப்பு எனவும் ஆய்விற்கு அப்பாற்பட்ட ஆதார ஏற்புகள் எனவும் கொண்டு அவற்றை அடியொற்றி வந்தனவாகப் போற்றப்படும் ஸ்மிருதிகளாகிய தரும சாத்திர இதிகாசங்கள் புராணப் புனைவுகளின் மூலம், ஒரு குலத்திற்கு ஒரு நீதி எனும் கொள்கை, மாற்றமுடியா தெய்வீகத்தன்மைத்து என்ற வகையில் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. உபநயனம் செய்து பூணூல் அணிவித்து சமற்கிருத மந்திரம் ஓதுவித்து, இருபிறப்பாளர் (துவிஜர்) ஆக்குதல், தீமூட்டி வேள்வி செய்தல், ஜாதித்தொழில் நிர்ணயித்தல், குடியிருப்புப் பகுதிகளை ஒதுக்குதல், தெருவில் செல்லுதல், கோயில் நுழைவு, ஏரி, குளம், கிணறு ஆகிய பொது இடங்களைப் பயன்படுத்துதல், ஆடை அணிகலன்கள் அணிதல், கல்வி பயிலுதல், பண்டிகை, திருவிழா, வழிபாடு, சடங்கு, சம்பிர தாயம், பழக்க வழக்கம் போன்றவற்றை வகைப்படுத்துதல், மேற்சொன்ன நடப்புகளிலும் அமைப்புகளிலும் காணப்படும் பிளவுத் தன்மைகளையும் வேறுபாடுகளையும் ஏற்றத் தாழ்வுகளையும் நியாயப்படுத்தக் கதைகளைப் புனைந்து நம்பவைத்தல், அதற்குத்தக ஆன்மா, மறுபிறப்புக் கோட்பாடுகளைத் திணித்தல் போன்ற எல்லாவற்றிலும் வேதியச் சதுர்வருணிய ஜாதிய வழிசார்ந்த பார்ப்பனிய மேலாண்மையும், பிறப்பினடிப்படை மேல் கீழ் சமூகப்படி நிலைகளும் கவனமாகப் பாதுகாக்கப்படுவதைக் காணலாம்.
10. நாயம், சமனியம், விழுமிய மனித இயல்புகளுடன் இணக்கம் என ஆக்கம் சேர்க்கும் சீரிய சமூக நெறிமுறைகள் செழுமையடைந்து நிலைபெற்று உறுதிப்படுவதற்குக் கல்வி அறிவு அடிப்படைத் தேவையாகும். மாறாக, சீரிய சமூக நெறிமுறைகளை மறுத்து ஒதுக்கும் சதுர்வருணிய மனுதரும அமைப்புகளும் கொள்கைகளும் நீடிக்கவேண்டுமெனில் பொதுக் கல்வியை இல்லாமல் செய்து, பாமரர்கட்கு அறிவுத் தெளிவு வராமல் கவனித்துக்கொள்ள வேண்டும். சமற்கிருத மயமாக்கப்பட்ட முறையின் மூலம் வெகுமக்களை, உழைப்பாளர்களை, படிக்காத, தெளியாத மூடநம்பிக்கையா ளர்களாகப் பல நூற்றாண்டுக் காலம் வைத்திருக்க முடிந்தது.
11. சமற்கிருத மயமாக்கம் கல்வியை எப்படி மறுத்தது? பாமரர்களை அறிவுத் தெளிவு அற்றவர்களாக எப்படி ஆக்கியது?
சிறு வயதிலும், இளமையிலும் சமுதாயத்தால் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட, அதற்குப் பழக்கப்பட்ட வகையில் குறிப்பிட்ட ஆசிரியர்களிடம் அதற்கான கூடங்களில் (இடங்களில் ) பயில்வது முறைசார் ((Eommal) கல்வியாகும். இத்தகைய வாய்ப்பினை விரும்பியோ, விரும்பாமலோ பெறாதவர்கள், அறிவை வளர்த்துக்கொள்ளும் வேட்கையில், ஏடுகளைக் கொண்டோ, கேள்வி ஞானத்தின் வழியோ, பட்டறிவின் மூலமாகவோ பயில்வது முறைசாராத (Non-Eommal) கல்வியாகும். இந்த இருவகைக் கல்வி வாய்ப்பு களும் சமற்கிருத மயமாக்க நெறியில் மறுக்கப்பட்டன.
12. பாட்டாளி மக்களாகிய சூத்திரரும் பஞ்சமரும் கற்கக்கூடாது என்பது வேதிய மனுதருமச் சமுதாயச் சட்டம். அதற்குத்தகவே இராமாயணத்தில் சம்புகனின் தலையை இராமன் கொய்து விடுகிறான். மகாபாரதத்தில் ஏகலைவன் கட்டைவிரலை துரோணன் கட்டணமாகப் (குரு தட்ச ணையாகப்) பெறுகிறான். ஆக உழைப்பாளிகளான வெகுமக்கள் கற்றுக்கொள்ள இந்துமத அரசு அனுமதிக்க வில்லை; ஆசிரியர்களும் கற்றுத்தர முன்வரவில்லை. ஆங்கிலேயர் ஆட்சி ஏற்பட்டபின், இந்தக் கொள்கை மாற்றப்பட்டதாயினும், அவர்களின் நேரடி ஆட்சிக்குட்படாத, இந்துமதக் கொள்கையின்படி ஆளப்பட்ட திருவிதாங்கூர், கொச்சி போன்ற சிற்றரசுகளில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்கூட தாழ்ந்த ஜாதியார் எனப்பட்டவர்கள் அனுமதிக்கப்படவில்லை என்பதையும், அனுமதிக்கப் பட்டாலும் தொல்லைகட்கு ஆட்படுத்தப்பட்டார்கள் என்பதையும் தற்கால வரலாறு தெரிவிக்கிறது.
13. ஒரு இனத்தின் விலைமதிக்க முடியாத உளவியல் கருவியாக, ஆன்மீகச் செல்வமாக, மனங்களைப் பிணைக் கும் உணர்வுப் பசையின் கொள்கலனாக, அறிவுத் தேக்கத்தைப் புதுப்பித்து நிறைக்கும் கருத்து ஓடையாக இலங்குவது மொழியெனில் அது மிகையன்று. இவ்வளவு சிறப்பு வாய்ந்த மொழியை ஒவ்வொரு இனமும் போற்றிப் பாதுகாத்து உயர்த்தி, அதனால் தானும் உயர்வு பெறல்வேண்டும். அவ்வாறு செய்யாத இனம் நாகரிகப் பண்பாட்டு நிலையில் வளர்ச்சி குன்றியதாக அறிவுத் தெளிவு குறைந்ததாக நின்றுவிடும். இந்த உண்மையை நன்கு அறிந்த பார்ப்பனக்கூட்டம், பண்பாட்டு வழியான தங்களின் சமூகப் பொருளாதார மேலாண்மையை (ஆதிக்கத்தை) தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகச் சமற்கிருதத்திற்கு உயர்வான நிலையையும், மக்கள் புழங்கும் மொழிகட்கு அடுத்த நிலையையும் ஏற்படுத்தி வைப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தனர். இன்றும் இருக்கின்றனர்.
தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக