செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

பெரியார் - மரணத்திற்குப் பின்னும் நிலைத்து வாழ்கிறார்; வாழ்வார்!முரசொலி தலையங்கம்

'முரசொலி' தலையங்கம் [28.1.2020]

பெரியார் - மரணத்திற்குப் பின்னும் நிலைத்து வாழ்கிறார்; வாழ்வார்!

1971-ஆம் ஆண்டு பெரியாரின் சேலம் மாநாடு தமிழ்நாட்டின் 'பெரு'மக்களாலும், ஏடுகளாலும் மறுமதிப்பு செய்யப்பட்டு, மறுவாசிப்புக்கு உட்படுத்தப் பட்டன - மறுமதிப்புகள் ஒப்பாய்வுக்குரியன. ஒரு கனவானின் அந்த மாநாட்டு விமர்சனம் அத்தகைய தாய் இருந்தது. அதையொட்டி உத்திரமேரூர் அருகே பெரியாரின் சிலை சேதப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஒரு நபர் கைதும் செய்யப்பட்டிருக்கிறார். இதற்கு யார் காரணம்? எவர் காரணம்? இதன் பின்புலம் என்ன என்று நாம் தெரியாதவர்கள் இல்லை.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பெரியாரைத் ‘தங்கத் தேரில் அறிவின் தேக்கம்' என்பார். அவர் ‘இடித்தாலும் வானம், எரிந்தாலும் மின்னல், அடித்தாலும் சூறை அனல்தான், பிடித்தாலும் குன்றான இவ்வீரன் குன்றான் - நிலைகுலையான்' என்றும் சொல்வார். பெரியார், வர்ணாசிரமத்தின் 5, 4 ஆம் படிகளுக்கான மக்களின் வழிகாட்டி, பஞ்சம, சூத்திர ஜாதிகளின் புருஷரில் உத்தமன் அவர்; அதாவது நமக்குப் புரு ஷோத்தமன்! நம் மக்கள், தொகையில் பெரும்பான் மையினராய் இருந்தும் மவுடீகிகளாய் இருக் கிறார்களே, என்று வருந்தியவர் அவர்.

பெரியார் அவர்தம் வாழ்நாளில் கிளர்ச்சி, போராட்டம், சிறை என்பதைத் தவிர வேறெதுவும் அவருக்குத் தெரியாது. பஞ்சம, சூத்திர மக்கள் உயர்வுக்குத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர். அதற்காக அவர் அறிமுகம் இல்லாத மக்களுக்குப் பரிந்துரைக் கடிதம் கொடுத்தவர்; உயர்த்தியவர். ஓயாமல் அம்மக்களுக்காகச் சுற்றுப்பயணம் செய் தவர். சொல்லடிகளுக்கு - கல்லடிகளுக்குக் கவலைப் படாதவர். தாக்குதல்களை ஏற்று இறுதி வரை - மரண பரியந்தம் வரை பொது வாழ்வைத் தொடர்ந்தவர்.

கடைசிக் கட்டத்தில் படுக்கையில் கிடந்த போதும் 'ஒரு நிகழ்ச்சிக்குத் தேதியைக் கொடுத்து விட்டேன், அதில் கலந்து கொண்டு விட்டு மருத்துவமனைக்கு திரும்பி விடுகிறேன்' என்று மருத்துவரிடம் அனுமதி கோரியவர். ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள் ளுங்கள் என வெள்ளைக்கார ஆளுநர் இருமுறை அழைத்தபோதும் மறுத்தவர். அதிகார ஆசை இல் லாதவர். அதிகாரத்தில் இருப்பவரை தம்வயப்படுத்தி மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்தவர்.

இந்திய சமூக அமைப்பில் நாம் எங்கே சிக்கி இருக்கிறோம் என்பதைக் கண்டறிந்து நமக்குச் சொன்னவர். நமக்கு வழங்கப்பட்ட இடத்தையும், அதற்குரிய உண்மையான பொருளையும் எடுத்துக் காட்டியவர். வெகுமக்களாக இருக்கிற நாம் - பொருள் உற்பத்தியில் ஈடுபட்டு உழைக்கிற நம் சக்தியை அறியாத ஆதிக்கவாதிகளுக்கு அதன் உன்னதத்தைத் தமது பரப்புரையின் மூலம் எடுத்தோதி திடுக்கிட வைத்தவர். ஒருகட்டத்தில் ‘வெளியேறு' என்று ஒரு பிரகடனத்தை முன்வைத்தவர்.

நமது எதிரிகள் எத்தகையவர்கள் என்பதை கிரிப்ஸ் தூதுக்குழுவுக்கு எடுத்துரைத்தவர். எங்கள் அரசியல் அதிகாரத்தை உங்கள் பார்வையின் கீழ் வைத்துக் கொண்டு எங்கள் இன மக்களைக் காப்பாற்றுங்கள் எனத் தீர்மானத்தின் மூலம் வெள்ளையனைக் கோரியவர். நமது சுதந்திரத்தை ஆதித்தாய் தீயை காப்பாற்றியது போல காக்க முயன்றவர். நான் ஏதாவது தவறு செய்து இருந்தால் - 'அவிசாரி' போயிருந்தால் உங்களுக்காகச் செய்து இருப்பேனே தவிர எனக்காக அல்ல என்று பகிரங்கமாக சொன்னவர்.

சமூகம் ஏற்றுக் கொண்ட முறைகளும், மரபுகளும் 'சமன்மைக்கு’ எதிராக உள்ளன, ஆகவே, அவற்றை ஏற்றுக் கொள்ள மறுத்து அதனை அழிக்க முற்பட்ட வர் தம்மை 'அழிவு வேலைக்காரன்' என்று தமது பொதுப்பணியை விமர்சனம் செய்தவர். வேத, உபநிடத, இதிகாச, புராண, இலக்கியங்கள் எதுவும் மக்கள் வாழ்க்கைக்கு ஆக்கம் தருவதாக இருக்க வேண்டும். அதன் அறிவுரைகள் உண்மைக்கு மாறா னதாக - மனித குலத்திற்கு எதிராக இருக்குமானால் அவற்றை நிராகரியுங்கள் என்று அறிவைக் கொளுத்தியவர்.

பெரியார் தமது பரப்புரையின் போது இறுதியில் 'நான் சொல்வதாலேயே இதை எல்லாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இல்லை. நான் சொல் வதைச் சீர்தூக்கி ஆராய்ந்துப் பாருங்கள், உண்மை இருப்பின் ஏற்று கொள்ளுங்கள்' என்றே சொன்னார். பெரியார் ஆட்சி அதிகாரம் இல்லாத ஒரு மனிதராக இருந்தவர், அவருடைய எச்சங்களாகப் பெரியார் இயக்கங்கள் இருக்கின்றன. அவரின் கொள்கையை அவர்கள் பரப்பி வருகிறார்கள், பெரியார் இறந்து 47 ஆண்டுகள் ஆகி விட்டன, ஆனால், அவரின் கொள் கைகளோ அல்லது அவரின் பணிகள் பற்றியோ பேசப்படும்போது ஆதிக்க சக்திகள் துடிதுடித்துப் போகின்றன.

ஏடுகளும், ஊடகங்களும், பேரிரைச்சல் இடு கின்றன. ஒரு குறிப்பிட்ட சாரார்கள் அதிகமாகப் பேசுகிறார்கள். பெரியார் கூறாததை, அவர் இயக்கம் செய்யாததைத் திரித்துச் சொல்கிறார்கள். அதற்குப் புதுப் பொருளைக் கற்பிக்கிறார்கள். வானமே இழந்து விழுமளவுக்கு அவர்கள் பேரொலி எழுப்பினாலும் நம் பக்கம் வெற்றி சங்கநாதம் ஊதப்படுகிறது. போர் முரசம் அதிருவது போல் பஞ்சம, சூத்திர மக்கள் மரித்தும் வாழும் அம்மானுடனுக்காக - அவரின் கொள்கைக்காக அணிவகுத்து நின்று விட்டார்கள்.

படை, இரண்டு அணிகளாக நிற்கின்றன. எள்ளும் பச்சையரிசியுமாக, பளிச் சென்றுத் தெரிகிறது. ஆக, ஒரு கனவான் இப்போது பெரியார் நடத்திய நிகழ்ச்சியைப் பற்றி தப்பும் தவறுமாகப் பேசியதன் விளைவு - எவனோ ஒருவன் உத்திரமேரூர் பக்கம் பெரியாரின் சிலையை உடைத்துள்ளான். அதைச் சில மணி நேரங்களில் சரி செய்துவிட்டார்கள் என்று செய்தி வருகிறது. அந்தக் கனவான் முரசொலி ஏட்டையும் பேசினார். தி.மு.க.காரன் கையில் வைத்திருப்பான் முரசொலி ஏடு - என்று பேசினார். அடுத்து ‘அறிவாளி' வைத்திருக்கும் ஏடொன்றின் பெயரைச் சொன்னதன் விளைவு - முரசொலியை வைத்திருப்பவர் யார் என்று பொருள் ஆகிறது - அந்தக் கனவானின் பேச்சுப்படி! ஆகவே, 'திமிர் வாதக்காரர்களை' தோற்றுவிப்பதற்கு நமது எதிரி களுக்கு ஒரு காரணம் இருக்க வேண்டும்.

நம்மை தஸ்யூக்கள், தாசர்கள், கருப்பர்கள், சூத்திரர்கள், அசுரர்கள் எனத் தொடங்கி 'திராவிடப் பொறுக்கிகள்' வரை ஏசி முடித்து இருக்கிறார்கள். அதாவது ‘இன' இழிவுப்படுத்தி இருந்தார்கள்; படுத்தியும் வருகிறார்கள். பின்னர் ‘ராட்சசர்கள்' வேறு; ‘அசுரர்கள்’ வேறு என்றார்கள். அசுரர்கள் ராட்சசர்கள் அல்ல என்றனர். அசுரர்கள் தேவர்களுக்குப் பகைவர் என்றனர். இவர்கள் இருவகை தேவர்களுக்கும் பகைவர்கள் என்றனர். அதே ஆட்டத்தை ‘அந்தக் காலத்திற்குப்’ பிறகு இந்தக் கனவான் மூலமாக நமது அரசியல் எதிரிகள் ‘இந்தக் காலத்தில்' மீண்டும் தொடங்கி இருக்கின்றனர்,

1971 - தேர்தலின்போது பெரியார் மாநாட்டின் ஊர்வலப் பிரச்சினையைக் கிளப்பினார்கள். இப் போது இன்னும் ஓர் ஆண்டில் தேர்தல் வரப் போகிறது, இப்போதும் அதே முழக்கத்தை அதே பாணியில் கிளப்பி இருக்கிறார்கள். நம்மை தமிழக மக்களிடமிருந்து அந்நியப்படுத்த ஓர் ஆதிக்கச் சக்தி தன் முயற்சியை ஒரு கனவானின் வழி தொடங்கி இருக்கிறது. நம் முன்னோர் வகுத்த சூத்திரம் வேலை செய்ய தொடங்கிவிட்டது. பெரியாரின் பிறந்த நாளைக் கொண்டாடாத ஆட்சியாளர்கள்கூட கனவானை எதிர்க்கிறார்கள்.

நாம் ஜனநாயக யுகத்தில் இருக்கிறோம். நம் ஆசான்மார்கள் ‘அவர்களை'ப் பற்றி எல்லாவற்றை யும் நமக்குக் கற்பித்துச் சென்று இருக்கிறார்கள். முதன்முதலில் மான்கொம்பைக் கூர்தீட்டி எழுத்து களைப் பானை ஓட்டில் எழுதிய இனம் - நம் இனம்! சிந்து முதல் வைகையை தாண்டி ஏழ்பனை நாடு களும் நம் நாடுகளாக இருந்தவை. இந்தப் பரம் பரையில் வந்தவன் முரசொலிதான் வைத்திருப்பான்; அது அவனின் வெற்றி வேற்கை! (வேல் +கை),

பெரியாரும், அவர் கொள்கையும் அவர் மரணத்திற்குப் பின்னும் பேசப்படுகிறது என்பது தொடர் நிகழ்மை; ஏனெனில் ‘சநாதனம்' இருக்கும் வரையும் அந்நிகழ்மை இருந்தே தீரும். ஆகவே பெரியார் மரணத்திற்குப் பின்னும் நிலைத்து வாழ்கிறார்; வாழ்வார்! முரசொலியும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

- விடுதலை நாளேடு 28 120

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக