வியாழன், 27 பிப்ரவரி, 2020

உண்மையான பெரியார் தொண்டன் என்பதற்கு உண்மையான இலக்கணம் என்ன?

திருச்சி பொதுக்குழுவில் கழகத் தலைவர் வகுத்த இலக்கணம்

திருச்சி, பிப்.23 திருச்சியில் கடந்த 21.2.2020 அன்று நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் உண்மையான பெரியார் தொண்டன் என்பதற்கான இலக்கணத்தை வகுத்துக் கொடுத்தார். இதோ அவை:

தோழர்களே,

"நான் ஒரு உண்மையான பெரியார் தொண்டன்" என்று கூறுவீர்களானால்,

நீங்கள் எப்படிப்பட்ட தகுதி உடையவர்களாக இருக்கவேண்டும்; அல்லது இருக்க முயற்சிக்க வேண்டும்? எண்ணிப் பாருங்கள்.

உங்களுக்கு நீங்களே சுயமாக கேள்வி கேட்டு விடை காண முயலுங்கள்.

'பதவி நாடாத பொதுத் தொண்டன்' என்று நீங்கள் கூறுவது முதல் பதில் என்றால், அது உலகறிந்த ஒன்றுதான்.

அதற்குமேலாக, பெரியாரின் துணிவை, தியாகத்தை, தன்னலமறுப்பை, சிறைவாசத்திற்கு அஞ்சாத பாய்ச்சலை அவரது வாழ்வின் பல பக்கங்களைப் புரட்டிப் புரட்டிப் பாடம் படியுங்கள்.

அவர் சொன்னவற்றில், நடந்துகாட்டிய பொதுவாழ்வில் புகழ் நாடா - முட்டாள்களாலும், மூர்த்தண்ய முரடர்களாலும், வஞ்சகர்களாலும், பக்குவமில்லாத பண்பற்றவர்களாலும் வர்ணிக் கப்படும் "கெட்ட பெயரை" எடுக்க - துணிந்து உண்மையைச் சொல்லி, நேரிய வழியில், லட்சியப் பாதையில் நடைபோடும்போது ஏற் படும் கெட்ட பெயரை எடுக்கத் துணிந்து நில்லுங்கள்.

அதன்மூலம் எதிர்ப்பை வெல்லுங்கள்!

இன்று, இயக்கப் பணி என்ன செய்தோம்? என்று படுக்கப் போகும்போது ஒரு மணித் துளியாவது சிந்தியுங்கள்!

எல்லோருடைய உழைப்பும், தொண்டும், ஒரே மாதிரி இருக்கவேண்டியதில்லை.

ஒவ்வொருவருக்குள்ள வாய்ப்பும், வசதியும், தியாகமும் நபருக்கு நபர் வேறுபடுவது இயல்பே. அதனால் உங்களால் முடிந்த உதவியை செய்யலாம்!

நேரிடை உழைப்பைத் தர வாய்ப்பற்றவர்கள் - நிதி உதவி செய்யலாம்!

வாரத்திற்கு ஒரு 'விடுதலை', 'உண்மை ', 'மாடர்ன் ரேசனலிஸ்ட்', 'பெரியார் பிஞ்சு' சந்தா சேர்க்கலாம்!

மதவாதிகள் மாதந்தோறும் தாங்கள் வாங்கும் ஊதியத்தில் 10 விழுக்காடு அவரவர் மதத்திற்குத் தருவதுபோல, நீங்கள் உங்கள் வாழ்க்கையின் தேவைகளையெல்லாம் கணக்கிட்டு, ஒரு சிறு தொகையை 'பெரியார் பெருந்தகையாளர்' நிதியாகத் தரலாமே! என்ன தயக்கம்?

இளைஞர்கள், வாலிபர்கள், வேலை முடிந்த நேரங்களில் இயக்க நிகழ்ச்சிகளுக்குப் பொது மக்களிடம் சென்று துண்டேந்தலாமே!

நமக்காகவா 'பிச்சையெடுக்கிறோம்?' நன் கொடையே - அது ஒரு பிரச்சாரத் தொண்டு அல்லவா!

போராட்டம், சிறைச்சாலை என்று வருபவர் களுக்கு வெளியிலிருப்பவர்கள் தாங்கள் கலந்து கொள்ள வாய்ப்பில்லாத சூழ்நிலை இருக்கிறதே என்று "குற்ற உணர்வுடன்" எண்ணுபவரா நீங்கள்?

அப்படியானால், அபராதம்  உங்களுக்கு  - நீங்களே போட்டுக் கொள்ளலாமே! நம் கிளர்ச்சி யில் ஈடுபட்டு சிறை சென்றவர் குடும்பத்திற்கு உதவலாமே!

கூட்டம் நடத்த செயல் ஊக்கி'யாக இருக்க லாமே!

சந்தாக்களைச் சேர்த்து இயக்க ஏடுகளைப் பரப்பலாமே!

மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு நமது இயக்க நூல்களை - மலிவுப் பதிப்புகளை வாங்கி ஆர்வம் உள்ள இளைஞர்களுக்கு, மாண வர்களுக்குத் தந்து அவர்களைப் படிக்க வைத்து, அவர்களுக்கு மானமும், அறிவும் ஊட்டி, நல்ல மனிதர்களாக்கலாமே!

ஆங்காங்கு பயிற்சி வகுப்புகளை நடத்திட "எமது பங்களிப்பு இதோ" என்று அடக்கமாக அளித்து, ஆக்கப்பூர்வ பணி செய்யலாமே!

அதைவிட சிறப்பான பணி வேறு உண்டா?

தந்தை பெரியாரின் பக்கங்களை

புரட்டிப் புரட்டிப் படியுங்கள்!

* உண்மையைச் சொல்வதன் மூலம் 'கெட்ட பெயரை' எடுக்கத் தயங்காதீர் - துணிவு கொள்வீர்!

* உழைப்பைத் தர முடியாதவர்கள் நிதிஉதவி செய்யலாம்   -  பெரியார் பெருந் தகையாளர் பட்டி யலில் இணைத்துக் கொள்ளலாம்.

* வாரம் ஒரு முறை  இயக்க ஏடுகளுக்குச் சந்தா சேர்க்கும் பணியில் ஈடுபடலாம் - வாய்ப்புள் ளவர்கள் இயக்க நூல்களை வாங்கி இளைஞர்களுக்குத் தாருங்கள்.

* சிறை செல்ல முடியவில்லையா? சிறை சென்ற தோழர்களின் குடும்பங்களுக்கு உதவலாம்.

* உறங்கு முன் இன்று இயக்கப் பணி என்ன செய்தோம் என்று ஒரு மணித் துளியாவது சிந்தி யுங்கள் தோழர்களே!

- விடுதலை நாளேடு 23 2 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக