சனி, 29 பிப்ரவரி, 2020

சமுதாய வாழ்வும் சமற்கிருத மயமாக்கப்பட்ட கல்வி அறிவும் - 47

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமுதாய வாழ்வும் சமற்கிருத மயமாக்கப்பட்ட கல்வி அறிவும் எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் கு.வெ.கி. ஆசான் ஆற்றிய உரை வருமாறு:

4.2.2020 அன்றைய தொடர்ச்சி

20. பார்ப்பனரல்லாதவர் சமற்கிருதம் பயிலத் தடையெழுந்ததேன்? தேவ பாஷை என்ற போர்வையில் மத நம்பிக்கை மிகுந்த சூழலைப் பயன்படுத்தி சமூக ஏற்றம் பெற்ற வடமொழி, உலக வாழ்விற்கான பிற துறை நூல்களையும் தன்னகத்தே ஆக்கிக்கொண்டு கொழுத்தது. அத்தகு மொழியின் வழியே ஆன்மீக லவுகீக அறிவை தங்கள் முற்றுரிமை ஆக்கிக்கொள்ள முனைந்த பார்ப்பனர், மற்றவர்கள் சமற்கிருதம் பயிலக்கூடாது எனத் தடுத்தனர் ; அண்மைக்காலம் வரை வெற்றியும் கண்டனர்.

21.          ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் நிலை பெற்ற பின், ஆங்கிலத்தின் வழியே நவீன அறிவு தரப்பட்டது. முன்னேறிய புதிய உலக அறிவு ஆழ்ந்து விரிந்து நின்றது. அய்ரோப்பியர் வருகைவரை படிப்புத்துறையில் தனியுரி மையை நுகர்ந்ததால் ஏற்றம் பெற்றிருந்த பார்ப்பனர், ஆங்கிலேயருக்கு நிருவாகத்தில் துணைநின்று அவர் களுடைய ஆதரவைப் பெற்று அவர்களுடைய ஆட்சியிலும் தாங்களே புதிய அறிவுலக மேதைகளாக உயரவேண்டும் என்ற தன்னலப் போக்கில், சூத்திரப் பஞ்சமரை என்றும் படிக்காதவர்களாகவே வைத்திருக்கச் செய்த சூழ்ச்சிகளில் ஒன்று, கல்வித்துறையில் சமற்கிருதத்திற்குத் தனியான ஏற்ற நிலை பெற்றதாகும். மருத்துவக் கல்லூரியில் சேர சமற்கிருதம் பயில வேண்டும் என்ற விதியிருக்கும் ; ஆனால் அம்மொழியைப் பயிலச் சூத்திரப் பஞ்சமருக்கு வாய்ப்புகள் அரிதாகும்! தமிழ்ப் பண்டிதர் பட்டம் பெறு வதற்குக்கூட வடமொழி அறிவு தேவையென்ற விதி இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தது! தமிழ் அறிஞர்களும் இனத்தலைவர்களும் போராடி, ஆங்கில ஆட்சியில் நியாயம் கோரி மேற்கண்டவை போன்ற அநியாய விதிகளைப் போக்கினர்.

22.          இந்துக் கோயில் கருவறைக்குள் சென்று அர்ச்சனை செய்யும் தனி உரிமை வேதிய இரு பிறப்பாளருக்கே என்ற வருண தருமமும், அர்ச்சனை மொழியாகத் தெய்வ பாஷையாம் சமற்கிருதம் மட்டுமே இருக்க முடியும் என்ற மூட நம்பிக்கையும் நிலவும்வரை, தங்களுடைய சமுதாய மேலாண்மையைத் தக்க வைத்துக்கொண்டு அரசியல் பொருளாதாரத் தனியேற்றம் பெற முடியும் என்ற எண்ணம் பார்ப்பன வகுப்பாரின் பொது நடப்புகளின் அடிப்படையாக இன்னும் அமைகிறது. இதை மெய்ப்பிக்கும் போக்குகள் பலவற்றை அன்றாடம் நாம் காண்கிறோம். ஆயினும், இரண்டு எடுத்துக்காட்டுகள் சாலும் எனக்கருதி அவற்றை மட்டும் இங்குத் தருகிறோம்.

23.          திராவிடர் கழகம், பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு மாநாடுகள் நடத்தியதைக்கண்டு, 27-06-1982 நாளிட்ட கல்கி வார இதழில் ஒரு கட்டுரை எழுதி, பொதுச்செயலாளர் கி.வீரமணி அவர்களை முறையின்றி கேலி செய்து, பார்ப் பனியம் எங்கும் இல்லை என்று முடிக்கிறார் ஆசிரியர் கி.இராஜேந்திரன். ஆனால் அதே இதழில், 1542 இல் ஸ்தாபிதம் என விளம்பரம் செய்துகொண்டு கும்ப கோணத்தில் உள்ள, ராஜா வேத காவிய பாடசாலை ஓர் அறிவிப்புத் தருகிறது ; உபநயனம் ஆன 7 வயதிற்கு மேற்படாத அந்தணச் சிறுவர்களை சேர்த்துக்கொண்டு ரிக், யஜூர், ஸாம வேத அத்யயனமும், காவ்யம், இங்கிலீஷ், தமிழ், கணிதம் முதலிய பாடங்களும் சொல்லி வைக்கிறோம். உபநயனம் செய்ய முடியாதவர்களுக்கு, இவ்விடமே உபநயனம் செய்விக்கிறோம். கோத்ரம், ஜூத்ரம், எந்த வேதம், உபநயனம் ஆகிவிட்டதா? முதலிய விவரங்கள் எழுதி விண்ணப்பித்துக் கொள்ளக் கோறுகிறோம். ( இந்த விளம்பரத்தில் கோறுகிறோம் என்பதில் வல்லின று அச்சுப்பிழையெனக் கொள்வோம். மகிழ்ச்சி தரும் திருமண அழைப்பிதழ்களின் முடிவில் கோருகிறோம் என்று முடிக்காமல், கொள்ளுகிறோம் எனும் பொருளில் கோறுகிறோம் என்று அச்சடிக்கிறவர்களும் இருக்கிறார்களே! என்று உடுமலை உயர் பள்ளித் தமிழ் ஆசிரியர் நயினார் முகமது அவர்கள் சொன்னது முப்பத்திரண்டு ஆண்டுகட்குப் பின்னும் நினைவிற்கு வருகிறது. ) இந்த விளம்பரத்தில் உபநயனம் எனும் சொல்லைத் தடித்த எழுத்தில் மூன்று இடங்களில் அச்சடித்துள்ளதன் உள்நோக்கத்தைப் பார்த்தால் வேதிய சமற்கிருத ஏந்துகளைக் கொண்டு வருண தருமத்தை நிலைநாட்டத் துடிக்கும் வேகம் தெரியும். இந்த லட்சணத்தில் அய்யோ பாவம் பார்ப்பனியம் என்ற தலைப்பில் முன்னே குறிப்பிடப்பட்ட கட்டுரையையும் வெளியிட்டிருக்கிறார்கள். இது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் கெட்டிக்காரத்தனம்; வேறென்ன?

24.          இதே வகையில் 17-10-1984 இந்து ஆங்கில நாளேட்டில் கோவைப் பதிப்பில் ஓர் அறிக்கை. பள்ளி இல்லாத பின் நேரங்களில் உபாத்யாயம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்றும், வேதங்களும் சமற்கிருதமும் கற்றுத்தரப்படும் என்றும், உபநயனம் செய்தவர்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் சிறீ காஞ்சி காமகோடி வித்யா மந்திர் டிரஸ்ட் அறிவிப்பு செய்திருக்கிறது. வேதமும் சமற்கிருதமும் உபநயனத்தோடு தனி நிலையில் பின்னிப் பிணைந்திருக்க வேண்டும் என்பதில் மகந்துகள், ஆச்சாரியார்கள், ஜீயர்கள், பிராமண சங்கங்கள் முதலியவை காட்டும் ஆர்வமும் தீவிரமும் சமுதாய சமனிய ஒற்றுமையை வேண்டுவோருக்கு வேதனை தருபவை அன்றோ?

25.          சமயச் சடங்குகள் மட்டுமின்றி, சமற்கிருதத்தை எங்கெல்லாம் நுழைக்க முடியுமோ அங்கெல்லாம் சதுர் வருணிய தருமத்தைப் புகுத்த வேதியர் தவறியதில்லை. இடைக்காலத்தில் தமிழோடு சமற்கிருதம் கலந்து புதிய நடையொன்று, இலக்கிய மரபொன்று பிறக்கிறது. இதைப்பற்றி பேராசிரியர் வி.டி. செல்வம், தமிழகம்-வரலாறும் பண்பாடும் எனும் நூலில் இப்படி எழுதுகிறார்:- "வடமொழி தென் மொழிகளின் அணுகல் தமிழகத்தில் ஏற்பட்டது. தமிழ்மொழியில் வடசொற்கள் கலந்தன. புதிய தமிழ் நடை தோன்றியது. அதுவே மணிப்பிரவாள நடையாகும். அதற்குத் துணையாக கி.பி. 7 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி நிகண்டு நூற்களின் காலமாக விளங்கியது. சேந்தன் திவாகரம், பிங்கலத்தை நிகண்டு போன்றவை தோன்றின. இவை இலக்கண வரைமுறைகளில் மாற்றம் காட்டின. இலக்கண நூல்களிலும் நால்வகை ஜாதிக் கோட்பாடுகள் புகுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்." (பக்கம் 151) இத்தகு இலக்கியங்கள் உலவும் நாட்டில் சமூக நீதியும் சமனியமும் பெறுவது எப்படி?

26.          முறைசார் கல்விக்கான வாய்ப்புகளையும், முறைசாரா கல்விக்கான வாய்ப்புகளையும், இவ்வாறெல்லாம் சதுர்வருணிய தருமத்தின் வழியும், சமற்கிருத மயமாக்கத்தின் வழியும் தங்கள் முன்னுரிமை ஆக்கிக்கொண்டு பார்ப்பனியப் படிநிலை மேலாண்மைக்கு நல்ல பாதுகாப்பு தேடிக் கொண்டார்கள். தமிழாக இருந்து, காலப்போக்கில் நிலவழித் தொடர்பு பெருமளவு அருகிய காரணத்தால், வேறு வகையில் வளர்ந்து கன்னடம், தெலுங்கு என உருவாகியுள்ள மொழிகளில் இன்று பண்பாடு என்பதற்கான சொல் சமஸ்க்ருதி என்பதாகும்! ஆம்! தங்களுக்குச் சாதகமான பண்பாட்டு வலையை சமுதாயம் முழுமையும் அகல விரித்து மற்றவர்களை இறுக்கி வாழும் ருசி கண்ட வேதியப் பூனைகள், அறிவே ஆற்றல்(Knowledge is power)
என்ற உண்மையை விடாமல் பற்றி, நுணுக்கமான உளஇயல் தந்திரங்களைக் கையாண்டு நிருவாகப் பொருளாதாரக் கட்டுக்கோப்பைத் தங்களுடைய செல்வாக்கிலும், கட்டுப் பாட்டிலும் வைத்திருக்க இயலுகிறது. இந்த சூழலில் வாழும் சூத்திரப் பஞ்சமர்களில் பலர் தங்களுடைய சமுதாயம், பண்பாடு, கலை, மொழி போன்ற முன்னுரிமையை நிலைநாட்டி, உயரவேண்டும் என்ற துணிவு அற்றவர்களாக, மதத்தின் பேரால் தெரியாமை, புரியாமை, அறியாமை, தெளியாமை என்பனவற்றில் சிக்கி ஆமைபோல் அடங்கி வாழ்கிறார்கள். வேறு வழி அறியாதவர்களாய், தங்களைத் தாழ்த்தும் சமற்கிருத மயமாக்கப்பட்ட அமைப்பில், ஏதோ கிடைக்கின்ற மரியாதையையும், இடத்தையும் பெற முந்துகிறார்கள். பார்ப்பனர்கள் மெல்லிய பூணூல் போட்டுக்கொண்டால் மற்றவர்களும் வடக்கயிறு போல் மாட்டிக்கொள்கிறார்கள். அவர்கள் திருநீறு இட்டுக்கொண் டால் இவர்கள் அதைப் பூசிக்கொள்கிறார்கள். அவர்கள் நாமம் போட்டுக்கொண்டால், இவர்கள் பட்டை நாமம் தீட்டிக் கொள்கிறார்கள். அவர்கள் பிரம்மத்தோடு இணைத்துத் தங்களை பிராமணர் என அழைத்துக் கொண்டு, வேத முனிவர்களின் கால் வழியினர் எனக் கற்பித்துக் கொள் கிறார்கள். இவர்களும் தங்களுக்குச் சந்திர குல, சூரிய குல, தேவேந்திர குல மூலங்களையும், அருந்ததியர், விசுவகர் மாக்கள் பட்டங்களையும், தருகின்ற புராணக் கற்பிதங் களையும் ஏற்றுக்கொள்கிறார்கள். இந்த உலகையே தாங்கிப் பிடிக்கக்கூடிய பாவனையில் அவர்கள் வேத மந்திரங்களை ஓத, அவற்றைப் புரியாமலேனும் கேட்டுக்கொண்டிருப்பது தங்களுக்குப் பெருமை தரும் என்றோ, உய்ய முடியும் என்றோ நினைத்து இந்தச் சூத்திரப் பஞ்சமர்கள் ஊமையராய் பவ்வியத்தோடு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இத்தகு போலித்தனங்கள் போயொழியவேண்டும் என்பதற்காக தந்தை பெ ரியார் அறிவாயுதத்தை ஏந்தினார்கள். பொழுது புலர்கிறது ; பொய்மை இருள் விலகுகிறது ; மானுடம் வெல்கிறது!

-  பேராசிரியர் கு.வெ.கி. ஆசான்

 -  விடுதலை நாளேடு, 6.2.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக