வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

‘‘வைக்கம் போராட்டம்'' நூலாசிரியர் பழ.அதியமானை பாராட்டி தமிழர் தலைவர் உரை

வைக்கம் போராட்டத்திற்காக தந்தை பெரியார் ஏழு முறை கேரளா சென்றார்

சமூகப் புரட்சி - அமைதிப் புரட்சி - அறிவுப் புரட்சி - ரத்தம் சிந்தாப் புரட்சியால்

வைக்கம் போராட்டம் வெற்றியடைந்தது

முனைவர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்துப் பாராட்டு.

தஞ்சை,பிப்.28 வைக்கம் போராட்டத்திற்காக தந்தை பெரியார் அவர்கள் ஏழுமுறை கேரளா சென்றார். சமூகப் புரட்சி, அமைதிப் புரட்சி, அறிவுப்புரட்சி, ரத்தம் சிந்தா புரட்சியால் வைக்கம்  போராட்டம் வெற்றியடைந்தது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் அருப்புக்கோட்டை து.கைலாசம் நினைவு டி.கே.சுப்ரமணியம் அறக்கட்டளை, நீதியரசர் டாக்டர் பி.எஸ்.சோமசுந்தரம் அறக்கட்டளை, பேராசிரியர் சி.வெள் ளையன் பொறியாளர் சுந்தரி அறக்கட்டளை ஆகிய அறக் கட்டளைகளின்  சார்பில் சிறப்புச் சொற்பொழிவு மற்றும் ‘‘வைக்கம் பேராட்டம்'' நூலின் ஆசிரியர் பழ.அதியமான் அவர்களுக்குப் பாராட்டுக் கூட்டமும் நடைபெற்றது. விழாவிற்குத் துணைவேந்தர் செ.வேலுசாமி தலைமை வகித்தார்.

‘‘வைக்கம் போராட்டம்'' நூல் சிறந்த நூலகத் தேர்வு செய்யப்பட்டு எழுத்தாளர் பழ.அதியமான் அவர்களுக்கு ரூபாய் 25,000/- பரிசு வழங்கி, பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றும் போது தெரிவித்ததாவது:

96 ஆண்டுகளுக்கு முன்பு....

நூல் ஆய்வாளர் பழ.அதியமானுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் பாராட்டி சிறப்பு செய்தார்

வைக்கம் பேராட்டம் 96 ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்ற பேராட்டம். இந்தியாவில் மனித உரிமைக் களத்தில் முதல் போராட்டம். உலகில் எங்கும் கேள்விப்படாத சமூகக் கொடுமையான தெருவில் நடக்கக்கூட கீழ் ஜாதிக்காரர்களுக்கு உரிமை இல்லாத நிலையில் வைக்கம் பேராட்டம் நடைபெற்றது.  அது சமூகப்புரட்சி, அமைதிப் புரட்சி, அறிவுப்புரட்சி,  ரத்தம் சிந்தாப் புரட்சி என்ற பெரு மைக்கு உரிய போராட்டம். போராட்டத்தில் கலந்துகொள்ள பெரியார் ஏழுமுறை வைக்கத்திற்குப் பயணம் மேற்கொண் டுள்ளார்.

கேரளாவில் 141 நாள்கள் தங்கி இருந்தார் என்றால் அதில் 74 நாள்கள் சிறையில் இருந்தார். இரண்டுமுறை கைது செய்யப்பட்ட ஒரே தலைவர் பெரியார்தான். மகத்தில் அண்ணல் அம்பேத்கர் போராட்டம் நடத்திட, வைக்கம் போராட்டம் விதையாகப் பயன்பட்டிருக்கிறது. பெரியாரின் அனுபவம் கொடுமையானது. பேசத் தடை, பிரவேசத் தடை, தங்குவதற்குத்தடை, சிறைவாசம், சிறப்பு வகுப்பு மறுப்பு, காலில் சங்கிலி, மற்றவர்களைவிட இருமடங்கு வேலை என துன்பங்களைக் சுமந்தவர் பெரியார்.

ஆய்வாளர் வேங்கடாசலபதி

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனப் பேராசிரியர் முனைவர் ஆ.இரா.வேங்கடாசலபதி தம் ஆய்வுரையில். உண்மை  அறிஞர்களைப் பாராட்டாமல் மறந்து போகின்ற சமூகம் பின் தங்கிப் போகும் என்றார். காந்தியடிகள் திரும்பிய பின் முதல்முறையாக சமூக ஒடுக்கு முறைக்கு எதிராக நடத்திய பேராட்டம் வைக்கம் போராட்டம் என்று குறிப்பிட்டார்.

எதிரிகளுக்கு எதிராக பேராட்டம் நடத்தப்படுகின்றதா? அல்லது நம்மை நோக்கியே பேராட்டம் நடத்தப்படுகின்றதா? என்பது பற்றி இந்த நூல் விரிவாகப் பேசுகிறது. நாரயண குரு இந்து மதத்தைக் கேள்வி கேட்கவில்லை. சமூக மாற்றம் என்பது இருக்கக்கூடிய அதிகார கட்டமைப்புகளை நியா யப்படுத்தக்கூடிய சித்தாந்த கருத்தியல் கட்டமைப்புகளை கேள்விக்கு உட்படுத்தவில்லை. அதன் விளைவு இன்று வரை முற்போக்குவாதிகள் நெருக்கடிக்குத் தள்ளப்படு கிறார்கள் என்பதற்கு சபரிமலை பிரச்சினை சான்றாகும். ஆதிக்க சக்திகளின் எதிர்வினை பெரிய சவாலாக இருக்கிறது. பெரியார்தான் துணை நிற்கிறார் என்றார்.

வைக்கம் போராட்டம் என்றால்

சமுகநீதியின் அடையாளம்

நூலாசிரியர், எழுத்தாளர் பழ.அதியமான் தம் ஏற்புரை யில், படிக்கின்ற வாசகன் இருந்தால் எழுத்தாளர் எழுது வதற்கு, உழைப்பதற்கு சலிப்பதில்லை என்றார். மாணவர்கள் படிக்கின்ற பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வைக்கம் சத்தியாகிரகம் அல்ல; வைக்கம் போராட்டம்தான். வைக்கம் போராட்டம் என்றால் சமுகநீதியின் அடையாளம் சிதம்பரம், பழனி என்று பெயர் வைப்பதுபோல பெரியாரின் தொண்டர்கள் தம் குழந்தைகளுக்கு ‘‘வைக்கம்'' என்று பெயர் சூட்டியி ருக்கிறார்கள். வைக்கம் போராட்டம் கோயில் நுழைவு போராட்டம் அல்ல; கோயிலைச்  சுற்றியுள்ள வீதிகளில் நடக்கின்ற உரிமை கோரும் போராட்டம். இப்போராட்டம் 610 நாள்கள் நடைபெற்றது. போராட்டத் தலைவர்கள் இல் லாத நிலையில் பெரியார் அழைக்கப்பட்டார். இவற்றை  எழுத ஆவணக் காப்பகமும், பத்திரிகைகளும் துணை புரிந் தன. மற்றத் தலைவர்களுக்குக் கடுங்காவல் தண்டனை கிடை யாது. அரசியல் கைதியாக நடத்தப்பட்டார்கள். ஆனால் பெரியாருக்குக் கடுங்காவல் தண்டனை. அரசியல் கைதியும் கிடையாது. பெரியார் அடைந்த துன்பத்தை அவர் சொல்லவில்லை மற்றவர்கள் கூறிய பதிவுதான் பெருமைக்குரியது.

மாணவி பூந்தளிர் நன்றி கூறினார்.

- விடுதலை நாளேடு 28 2 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக