சனி, 8 பிப்ரவரி, 2020

சேலம் சுயமரியாதை சங்க வழக்கில் வெற்றி: படிப்பகம் - நூலகம் - ஆய்வகம் தொடங்கப்படும்

செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

சேலம், ஜன.25  சேலம் சுயமரியாதை சங்க வழக்கில், இயக்கம் வெற்றி பெற்றிருக்கிறது. அந்த இடத்தில்  படிப்பகம், நூலகம், ஆய்வகம் தொடங்கப்படும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

சேலத்தில் நேற்று (24.1.2020) செய்தியாளர் களுக்கு  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அளித்த பேட்டி வருமாறு:

செவ்வாய்ப்பேட்டை -

சுயமரியாதைச் சங்கம்

பத்திரிகையாளர்களுடைய சந்திப்பின் முக்கிய நோக்கம்,  உங்களில் சிலருக்கு நினை விருக்கும், புதிதாக வந்துள்ளவர்களுக்கு நினைவு இருக்க வாய்ப்பில்லை. சேலம் சுய மரியாதை சங்கம் என்று தந்தை பெரியார் அவர்கள் காப்பாளராக இருந்து, ஏறத்தாழ 80 ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய்ப்பேட்டையில் நடைபெற்ற சுயமரியாதை சங்கம் - மனுகுல தேவாங்க சங்கம் என்ற ஒரு சங்கத்தோடு சேர்த்து, திட்டமிட்டே அதை தாங்கள் இணைத்துக் கொள்கிறோம் என்று அவர்கள் எடுத்துக்கொண்டார்கள். இது நடைபெற்றது ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன்பு. அதற்குப் பிறகு அவர்கள் யாரையும்பற்றி கவலைப் படாமல், வழக்கைப்பற்றி கவலைப்படாமல், அங்கே கடைகளை கட்டுகிறோம் என்ற நிலையை ஏற்படுத்தினர். அந்த இடம் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்திற்கு உரிய ஒன்றாகும் அது.

சென்னை உயர்நீதிமன்றத்தின்

தெளிவான தீர்ப்பு

அப்படிப்பட்ட சூழ்நிலையில், அந்த இணைப்பு செல்லாது என்று, தெளிவாக அரசாங்கப் பதிவுத் துறை யிலேயே ஒரு உத்தரவை வாங்கி, சேலம் சுயமரியாதை சங்கம் என்பதை மீண்டும் புதுப்பித்து, அவர்களுடைய எண்ணப்படி, தெளிவாக அதற்கான அளவிற்கு ஆன முயற்சிகளை எடுத்து, கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து இங்கே நடத்திக் கொண்டு வருகின்ற சூழ்நிலையில்,  அந்த உத்தரவிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர்கள் மேல்முறையீடு செய் தார்கள். அந்த  மேல்முறையீடு டிஸ்மிஸ் செய்யப்பட்டு, அந்த சொத்து என்பது, பெரியார் சுயமரியாதைப் பிரச் சார நிறுவனம் - சேலம் சுயமரியாதை சங்கத்திற்குத்தான் உரியது என்பதை மிகத் தெளிவாக சென்னை உயர்நீதி மன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்திருக்கிறது.

அந்தத் தீர்ப்பின்படி, எங்களுடைய வழக்குரைஞர் கள், பொறுப்பாளர்கள் இங்கே வந்திருக்கிறார்கள். கழகத் தோழர்கள், அதனுடைய உறுப்பினர்கள், தனி அமைப்பு அது.

ஆகவே, சேலம் சுயமரியாதை சங்கம் என்பது,  அது தெளிவாகவே இன்றைக்கு எங்களது பொறுப்பிலே வருகிறது என்பதை உங்களுக்குத் தெளிவாக சொல்லிக் கொள்கிறேன்.

ஆய்வகம் - படிப்பகம்- நூலகம்

அங்கே புதிய வாசக சாலை, நூலகம், ஆய்வகம் மற்றவை வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அது எங்களுடைய பொறுப்புக்கு வந்தவுடன், சேலத்தில் ஒரு சிறந்த அளவிற்கு, திராவிட இயக்கத்தைப்பற்றியும், சமூக மாற்றங்களைப்பற்றியும் இருக்கக்கூடிய ஆய்வுகளை செய்யக்கூடிய ஒரு ஆய்வகமாகவும், படிப்பகமாகவும், பெரிய நூலகமாகவும் அதை உருவாக்குவதற்கு திட்ட மிடப்பட்டுள்ளது என்பதை எல்லோருக்கும் தெரிவிப்ப தற்காகத்தான் இந்த செய்தியாளர்கள் சந்திப்பு.

ஏற்கெனவே ஏழு ஆண்டுகளுக்கு முன்பும் இது போன்ற செய்தியாளர்கள் சந்திப்பினை ஏற்பாடு செய் தோம். மூத்த செய்தியாளர்கள் இருந்தால், அவர்களுக்கு நன்றாக நினைவில் இருக்கும். நீங்கள் இங்கே வந்ததற்கு மகிழ்ச்சி, புத்தாண்டு வாழ்த்துகள்.

நீட்: சட்ட விரோதமான ஒரு சட்டம்

நீட் தேர்வு என்பது நம்முடைய பிள்ளைகளை யெல்லாம் மருத்துவப் படிப்பிற்கு லாயக்கற்றவர்களாக ஆக்கக் கூடிய மிகப்பெரிய ஒரு கேடான ஏற்பாடாகும். அது அரசமைப்புச் சட்டத்தினுடைய அடிப்படை உரிமைகளுக்கும் விரோதமாக இருக்கிறது. நம்முடைய பிள்ளைகள் அனிதாக்களும், சுபசிறீக்கள் உள்பட இதுவரை 8 மாணவிகள் தற்கொலை செய்துகொண்டுள் ளனர். அது தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

பல லட்சக்கணக்கான ரூபாய் செலவில், கார்ப்ப ரேட்டுகள், கோச்சிங் சென்டர் பயிற்சி மய்யங்களை நடத்துகிறோம் என்று சொல்லி, கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஊழலை ஒழிக்கிறோம் என்று கொண்டு வந்த நீட் தேர்வில், தேர்வு எழுதச் சென்ற பிள்ளைகளை உடல் பரிசோதனைகளையெல்லாம் செய்து, அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளான சூழ்நிலையை ஏற்படுத்தி னார்கள்.

நீட் தேர்வில் ஊழல்கள் மலிந்திருக்கின்றன

இப்பொழுது நீதிமன்றங்களில் வந்த வழக்குகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள், நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆள்மாறாட்டம் செய்து, வேறொரு நபர் நீட் தேர்வை எழுதக்கூடிய அளவிற்கு, அங்கே அவ்வளவு ஊழல்கள் மலிந்திருக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது.

எனவே, ஊழலை ஒழிக்கிறோம், தனியார் ஆதிக்கம் இல்லாமல் செய்கிறோம் என்று சொல்லி இவர்கள் ‘நீட்' தேர்வை கொண்டு வந்தார்களோ, அதற்கு மாறாக எந்த ‘நீட்' தேர்வில் ஊழல்கள் மலிந்திருக்கின்றன. கிராமப் பிள்ளைகள் மருத்துவப் படிப்பை படிக்க முடியாத சூழ்நிலை.

பிளஸ் டூ என்று சொல்லக்கூடிய மாநில கல்வி யைப்பற்றி அவர்கள் கவலைப்படாமல், அந்த மதிப் பெண்களை நாங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளமாட் டோம் என்று சொல்லக்கூடிய நிலை இருக்கிறது.

மத்திய கல்விக் கொள்கை என்ற ஒன்றை, புதிய கல்விக் கொள்கை என்ற பெயராலே புகுத்திக் கொண் டிருக்கிறார்கள். அந்தப் புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு அமல்படுத்துவதற்கு முன்பே, மாநில அரசு ராஜாவை விஞ்சிய ராஜ விசுவாசியாக இருந்துகொண்டு, அமல்படுத்தவேண்டும் என்ற அளவிலே இறங்கியிருக்கிறார்கள்.

5 ஆம் வகுப்பிலே பொதுத் தேர்வு, 8 ஆம் வகுப்பிலே பொதுத் தேர்வு, 10 ஆம் வகுப்பிலே பொதுத் தேர்வு, 11 ஆம் வகுப்பிலே பொதுத் தேர்வு, 12 ஆம் வகுப்பிலே பொதுத் தேர்வு - இப்படி பொதுத் தேர்வு, பொதுத் தேர்வு என்று மாணவர்களை மன அழுத்தத்திற்கு உண்டாக்குகிறார்கள்.

குலக்கல்வியினுடைய மறு வடிவம் -

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை!

கிராமப்புறத்தில் உள்ளவர்கள் ஆரம்பப் பள்ளிக் கூடங்களில் பிள்ளைகளை சேர்ப்பதே கடினம். இதில் இடைநிற்றல் என்று சொல்லக்கூடிய ‘டிராப்அவுட்' ஏராளமாகும். நம்முடைய பிள்ளைகளின் கல்வியில் மண்ணைப் போட்டு, மீண்டும் பழைய குலக்கல்வி எப்படி கிராமப்புறத்தில் நம்முடைய பிள்ளைகளை படிக்க முடியாமல், ராஜகோபாலாச்சாரியார் ஆட்சி காலத்தில் ஆக்கிற்றோ, அந்தக் குலக்கல்வியினுடைய மறு வடிவமாக இருக்கிறது - மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை என்பது. அது முழுக்க முழுக்க சமஸ்கிருதத்தைத் திணிப்பதற்காகத்தான் வருகிறது.

மீண்டும் நம்முடைய பிள்ளைகள் ஒரு இருண்ட காலத்திற்குப் போகக்கூடிய அளவிற்கு வாய்ப்புகளை உருவாக்கி இருக்கிறது.

நீட் தேர்வை எதிர்த்து

தொடர் பிச்சாரப் பெரும் பயணம்!

எனவேதான், இவற்றை எதிர்த்தும், நீட் தேர்வை எதிர்த்தும் கன்னியாகுமரியில் கடந்த 20 ஆம் தேதி தொடங்கிய பயணம், ஒவ்வொரு இடங்களாகத் தொடர்ந்து, நாகர்கோவில், திருநெல்வேலி, கோவில் பட்டி, சாத்தூர், மதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, கரூர், ஈரோடு, இன்று சேலம் - ஆத்தூர், கள்ளக்குறிச்சி என்று வரிசையாகத் தொடர்ந்து 30 ஆம் தேதி இந்தப் பயணம் திருத்தணி - சென்னையில் முடிவடைகிறது.

‘நீட்' தேர்வு, புதிய கல்விக் கொள்கை என்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட விஷயம். ஜாதி, மத, கட்சிகளைக் கடந்தது. நம்முடைய பிள்ளைகளுடைய எதிர்காலம், இருண்ட காலமாக மாறிக் கொண்டிருக்கிறது.

அதனைத் தடுப்பதற்கு, பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எல்லோருக்கும் விழிப்புணர்வு வரவேண்டும் என்பதுதான் இந்தப் பயணப் பிரச்சாரத் திட்டம். இதற்கு மக்களிடையே நல்ல ஆதரவு இருக்கிறது.

‘நீட்' தேர்வு மூன்றாண்டுகளுக்கு முன்பு கொண்டு வரப்பட்டபொழுது, படித்த சில பேர் என்ன நினைத் தார்கள் என்றால், ‘‘ஊழலை ஒழித்து ஒரு நல்ல திட்டம்'' என்று மேலெழுந்தவாரியாக நினைத்தார்கள். ஆனால், இன்றைக்கு அது எந்த அளவிற்கு, யாருக்கு, எந்த உள்நோக்கத்தோடு கொண்டுவரப்பட்டது என்பதை நன்றாகப் புரிந்துகொண்டார்கள்.

ஆகவேதான், இந்தப் பிரச்சாரத்தை திராவிடர் கழகம் செய்கிறது. அதற்காக சேலம் வழியாக செல்லக் கூடிய நிலையில், ஏற்கெனவே சேலம் சுயமரியாதை சங்க வழக்கில், இயக்கம் பெற்ற வெற்றியையும் உங்களுக்குச் சொல்லி, அதே நேரத்தில், இந்தப் பயணத் தைப்பற்றியும் உங்களோடு பகிர்ந்து கொள்வதற்காகத் தான் இந்த சந்திப்பு.

மாநில அரசின் அதிகாரத்தைத் தொடர்ந்து பறித்துக் கொண்டு வருகிறது மத்திய அரசு

செய்தியாளர்: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தமாட்டோம் என்று தமிழக அரசு சொல்லியிருக்கிறது; ஆனால், அந்தத் திட்டத்தை செயல் படுத்துவதற்காக மத்திய அரசு முனைகிறதே?

தமிழர் தலைவர்: மத்திய அரசின் பிடிவாதம் மாநில அரசுகளுடைய உரிமைகளைப் பறிப்பது என்பது மட்டுமல்ல, ஒரு பக்கத்தில் விவசாயிகளுக்குப் புது வாழ்வை கொடுப்போம் என்று சொல்லிக்கொண்டு, எல்லா வகையிலும் மத்திய அரசு கார்ப்பரேட்டுகளுக்கு உதவியாக இருந்துகொண்டிருக்கிற கார்ப்பரேட் அரசு. ஒரு பக்கத்தில் உயர்ஜாதி அரசு, இன்னொரு பக்கத்தில் கார்ப்பரேட் அரசு.

இதுவரையில் பல மாநில அரசுகள் அதனை ஆட் சேபிக்கின்றன. அந்த வகையிலேதான், மாநில அரசு, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி கொடுக்க மாட்டோம் என்று சொல்கிறது. மாநில அரசினுடைய அனுமதி தேவையில்லை என்று மத்திய அரசு, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த முனை கிறது.

யார் வேண்டுமானால் உள்ளே நுழையலாம் என்று சொல்லக்கூடிய வகையில், மாநில அரசின் அதிகாரத் தைத் தொடர்ந்து பறித்துக் கொண்டு வருகிறது மத்திய அரசு.

தமிழக முதலமைச்சர், மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கிறோம் என்று சொல்லுகிறார். கடிதம் எழுதினால் பயன்படாது; அதற்குப் பதிலாக என்ன செய்யவேண்டும்?

தமிழக அரசு ஓர் அவசர சட்டத்தைக் கொண்டுவரவேண்டும்!

நம்முடைய கைகளில் அதிகாரம் இருக்கும்பொழுது ஏன் பயப்படவேண்டும்? மாநில அரசிற்கு உரிமை இருக்கிறது; அதனை நிலைநாட்டவேண்டும். மாநில அரசின் சுற்றுச்சூழல் துறை - அத்துறை அமைச்சரும் இருக்கிறார்.

எங்களுடைய சுற்றுச்சூழல் துறையில் அனுமதி வாங்காமல் உள்ளே நுழையக்கூடாது என்று அவசர சட்டத்தைக் கொண்டு வரவேண்டாமா? அப்படி செய்தால், அதுதான் சரியானது.

ஆகவேதான், தமிழக ஆளுங்கட்சியினர் இரட்டை வேடம் போடுகிறார்கள்; எட்டுவழிச் சாலை திட்டத்தைக் கொண்டுவருகிறோம் என்று அறிவித்து, அதனால் விவசாயிகள் பட்டபாடு உங்களுக்குத் தெளிவாகத் தெரியும். எட்டு வழிச்சாலை விவசாயிகளுக்கு நல்லது என்று இவர்கள் சொன்னதை, உச்சநீதிமன்றம் ஓங்கி அவர்களுடைய தலையில் குட்டிய பிறகுதானே நிறுத் தினார்கள். இன்னமும் அந்த முயற்சியை கொல்லைப்புற வழியாகக் கொண்டுவரலாம் என்று நினைக்கிறார்கள்.

எனவே, விவசாய விரோதமான, தமிழகத்தையே பாலைவனமாக்கக் கூடிய அந்த முயற்சிகளை வன்மை யாகக் கண்டிப்பது என்பது விவசாயிகளின் நலனைப் பொருத்தது.

தமிழக அரசு, மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கிறோம், அதோடு தங்களுடைய கடமை முடிந்துவிட்டது என்று கருதக்கூடாது. அதற்காக மாநில அரசே அதனைத் தடுக்கக் கூடிய அளவிற்கு ஒரு தனி சட்டத்தை - அவசர சட்டத்தைக் கொண்டு வரவேண்டும்.

காவல்துறை அதிகாரிகளுக்கே பாதுகாப்பில்லை!

செய்தியாளர்: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினையே இல்லை, தமிழகம் சிறப்பாக செயல் படுகிறது என்று முதலமைச்சர் சொல்கிறாரே?

தமிழர் தலைவர்: தமிழகத்தில் காவல்துறை அதி காரிக்கே பாதுகாப்பில்லை. நேற்று உயர்நீதிமன்றம்கூட என்ன சொல்லியிருக்கிறது? காவல்துறையில் இருப்பவர் களுக்குத் துப்பாக்கிக் கொடுங்கள் என்று அறிவுறுத்தி யிருக்கிறது.

ஆனால், பா.ஜ.க.வில் ஒருவர் சேர்ந்தவுடன், அவ ருக்குப் பக்கத்தில் துப்பாக்கி ஏந்திய காவலர் நிற்கிறார். அவருக்கு என்னவோ மிரட்டல் இருக்கிறது, தேசப் பிதாவிற்கு அடுத்தபடியாக அவர்தான் என்று சொல்கிற அளவிற்கு.

ஆகவே, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பது மக்களுக்கே தெளிவாகத் தெரியும். அவர் சொல்வது ஒரு கேலிக்கூத்து. எத்தனையோ நகைச்சுவைகள் இருக்கிறது, அதில் இதுவும் ஒன்று.

நீதிமன்றத்தில் சந்திப்போம்!

செய்தியாளர்: ரஜினிகாந்த் மன்னிப்புக் கேட்க மாட்டேன் என்று சொல்லியிருப்பதுபற்றி....?

தமிழர் தலைவர்: அதுபற்றி எவ்வளவோ சொல்லியாயிற்று. ஒரே வரியில் சொல்லவேண்டுமானால், நீதிமன் றத்தில் சந்திப்போம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர் களிடம் கூறினார்.

- விடுதலை நாளேடு 25 1 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக