ஞாயிறு, 2 பிப்ரவரி, 2020

தமிழில் வழிபாடு செய்தால் கடவுள் தீட்டாகுமாம்!



25.12.1980 அன்று சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களது சீரிய தலைமையில் நடைபெற்ற தமிழ் வழிபாட்டு உரிமை மாநாட்டில் நான் கலந்துகொண்டு வரவேற்புரை ஆற்றினேன். திராவிடர் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழ் வழிபாட்டு மாநாடு மக்கள் கடல்போல் காட்சியளித்தது.
இந்த மாநாடு புதுமையாகவும் புரட்சியாகவும் இருக்கிறது. இந்த மேடையிலே உருவத்திலே பலர் வேறுபட்டிருந்தாலும் உள்ளத்தால் ஒன்றுபட்டவர்கள்.

கடவுள் மறுப்பாளர்களாகிய திராவிடர் கழகத்தினர் தமிழ் வழிபாட்டு உரிமை மாநாட்டை நடத்தலாமா என்ற கேள்வியை எழுப்புகிறார்கள். திராவிடர் கழகம் ஒரு மனிதாபிமான இயக்கம். அந்த அடிப்படையிலே தந்தை பெரியார் அவர்கள் இதே மேடையிலே  நடைபெற்ற திராவிடர் கழக மாநில மாநாட்டில் 06.12.1962லே அவர்களே எழுதி ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார்கள். தமிழர்களை முன்னிட்டு கருவறைக்குள் செல்லும் உரிமையும் பூசாரிகளாகும் உரிமையும் தமிழ், அர்ச்சனை உரிமையும் வேண்டும் என்று வலியுறுத்தித் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார்கள். அதற்கான கிளர்ச்சிகளை நடத்த வேண்டும் என்று தீர்மானத்தில் வலியுறுத்தினார்கள்.

தென்காசியிலே உள்ள சிவன்கோயிலிலே, தேவார வழிபாட்டை முடித்த பிறகுதான் விபூதி பிரசாதம் வழங்க வேண்டும் என்று அப்போது அறநிலையத்துறை பிறப்பித்த உத்தரவை எதிர்த்த பார்ப்பனர்கள் கிளர்ச்சிச் செய்தி 21.11.1926 ‘குடிஅரசு’லே வெளியிடப்பட்டுள்ளது. அதே இதழிலே ‘இதுகூட வகுப்பு துவேஷமா?’ என்று தந்தை பெரியார் அவர்கள் ஒரு துணைத் தலையங்கம் எழுதியுள்ளார்கள். அதைத் தொடர்ந்து அந்தப் பகுதிக்கு சுற்றுப் பயணமும் மேற்கொண்டார்கள்.

1926ஆம் ஆண்டிலே கோயிலுக்குள் தமிழை எதிர்த்தவர்கள் இந்த 1980லும் எதிர்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இங்கே தமிழர், அறிஞர் பெருமக்கள் எல்லாம் வந்திருப்பதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். திராவிடர் கழகத்தின் சார்பில் மனமாற வரவேற்கிறோம் என்று கூறி என்னுரையை நிறைவு செய்தேன்.

வழிபாட்டு உரிமை மாநாட்டில் குன்றக்குடி அடிகளார் பேசுகையில் தமிழர் சமுதாயம் இன்னும் சொரனையற்று இருப்பதால்தான் உரிமைகளை இழக்க நேரிட்டது என்றார். ஏற்கனவே கோயில்களில் நடைமுறைக்கு வந்துவிட்ட, தமிழ் வழிபாட்டு உரிமையை தமிழர்கள் காப்பாற்றிக் கொள்ளாததால் இப்போது

“வேதாளம் மீண்டும் முருங்கை மரம்’’ ஏறிவிட்டது என்று குறிப்பிட்டார். அவர் மனித உரிமைகள் மதிக்கப்படுகிற நிலைக்கு உலகம் முன்னேறிக் கொண்டிருக்கும் காலத்தில் தமிழ்நாட்டில் தமிழன் கோயிலிலே தமிழ் மறுக்கப்படுவது கேவலமான நிலையாகும் என்றார்.

வழிபாடு என்பது கடவுளுக்காக அல்ல; மனிதன் தன்னையே உயர்த்திக் கொள்வதற்காக செழுமைப்படுத்திக் கொள்வதற்காக என்று குறிப்பிட்டார். அவர் தனக்காக மனிதன் செய்யும் வழிபாட்டை தனது மொழியிலே செய்வதுதான் சரியாகும் என்றார்.

மாநாட்டில் பங்கேற்ற முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் பேசுகையில், தமிழில் வழிபாடு இல்லாத கோயிலைப் புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இன உணர்ச்சிப் பிழம்பாக முத்தமிழ்க் காவலர் ஆற்றிய உரை மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது.

இனிப் பேசிக் கொண்டிருப்பதில் பயன் இல்லை என்றும் செயல்திட்டத்தில் இறங்கியாக வேண்டும் என்றும் தாய்மொழி உரிமைக்காக தனது உயிரையே அர்ப்பணிக்கத் தயராக இருப்பதாகவும் கி.ஆ.பெ. கூறினார்.

பெரியார் இல்லை என்ற துணிவில் பார்ப்பனர்கள் ஊர்வலம் நடத்த வந்திருப்பது, ‘சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்று மிரட்டுவதும் பார்ப்பன சமுதாயத்துக்குத்தான் கேட்டை உண்டாக்கும் என அவர் எச்சரித்தார்!

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்றால் படுத்திருக்கும் பாம்பு படமெடுத்-தாடினால் என்னவாகும் என்பதைத் சிந்திக்க வேண்டாமா என்று அவர் கேட்டார்.

தமிழ்நாட்டுச் சாமிகளுக்கு தமிழ் தெரியவில்லை என்றால், தமினுக்கும் அந்த சாமிக்கும் என்ன சம்பந்தமிருக்கிறது என்று  கேட்டார். தமிழ்நாட்டிலே 13,200 கோயில்கள்  இருந்தும், இங்குள்ள தமிழன் இந்தச் சாமிக்குச் சக்தி இல்லை என்று திருப்பதிக்கும், கேரளாவிற்கும் ஓடுவது ஏன் என்று அவர் கேட்டார்.

பெரியார் தொண்டர்கள் வன்முறையில் நம்பிக்கை இல்லாத அகிம்சைவாதிகள். இதில் காந்தியின் தொண்டர்களைவிட பெரியார் தொண்டர்கள் சிறந்தவர்கள் என்று குறிப்பிட்டு அத்தகைய தொண்டர்களை வன்முறைக்கு அழைக்கிறார்களா என்று கேட்டார்.

தமிழில் வழிபாடு இல்லாத கோயில்களைப் புறக்கணியுங்கள். வழிபாடு செய்ய வேண்டும் என்று விரும்பினால் நீங்களே நேராகச் சென்று தமிழ் பக்திப் பாடல்களைப் பாடிவிட்டுத் திரும்புங்கள். கோவில் உண்டியலில் காசு போடாதீங்க என்று கேட்டுக்கொண்டார்.

மேலவைத் துணைத் தலைவர் புலமைப்பித்தன் பேசுகையில், தந்தை பெரியார் இல்லையே என்ற கவலையைவிட நன்றியுணர்வும் சிந்தனையும் இல்லாத இந்தக் கேடுகெட்ட சமுதாயத்தில் வந்து பிறந்தாரே என்பதுதான் என் கவலை.

‘இந்து’ப் பத்திரிகையில் எவனோ ஒரு ‘மாட்டுக்குப் பிறந்த மகன்’, ‘தமிழ், வழிபாட்டு மொழியானால் கோவில் தீட்டுப்பட்டுவிடும்’ என்று எழுதியிருக்கிறான்.
‘பார்ப்பான்’ என்று சொல்லக் கூடாது என்கிறான். இவன் பாட்டன் பாரதிகூட பேராசைக்காரனடா பார்ப்பான்’ என்று ‘பார்ப்பான்’ என்றுதானே பாடியுள்ளான்.

‘பார்ப்பானின் கையை எதிர் பார்ப்பானையே
பார்ப்பான் தின்னப் பார்ப்பான்’

என்று எச்சரித்துள்ளார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.

“திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் என்ற ஊரில்’’ ஆலயங்களில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று நாத்திகர்கள் கோருவது எவ்வாறு பொருந்தும் என்று முதல்வர் கேட்டார்’’ (‘தினமணி’ _ 26.12.1980, பக்கம் 3இல்) என்று ‘தினமணி’ச் செய்தி கூறுகிறது.

“கோயில் வேண்டாம் என்பது கொள்கை’’ கோயில்கள் இருக்கும்வரை, அதில் கருவறைவரை சென்று பூசை செய்திடும் உரிமை ஒரு ஜாதிக்கு மட்டும் இருக்கக் கூடாது. “அனைத்து ஜாதியினருக்கும் ஜாதி வேறுபாடு இன்றி, கிடைக்க வேண்டிய உரிமை’’ என்பதை பல்வேறு உதாரணங்களுடன் விளக்கினோம்.
- 'அய்யாவின் அடிச்சுவட்டில் 'கட்டுரையின் ஒரு பகுதி
-ஆசிரியர் கி.வீரமணி

- உண்மை இதழ் 16-30.6.2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக