வியாழன், 2 செப்டம்பர், 2021

அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் உரிமை கடந்து வந்த பாதை-3


கிளர்ச்சிக் கமிட்டி அமைக்கப்பட்டது

இழிவு நீக்கக் கிளர்ச்சி அறிவிக்கப்பட்டு, கிளர்ச்சியில் பங்கேற்கும் தோழர்கள் பட்டியல் குவியத்தொடங்கிய நிலையில் கிளர்ச்சியின் தத்துவத்தை விளக்கி விடுதலை ஏட்டில் தொடர்ந்து எழுதினார்.

14.10.1969 தேதியிட்ட விடுதலையில் கிளர்ச்சியின் தத்துவம் என்னும் தலைப்பில் எழுதிய தலையங்கத்தின் ஒரு பகுதி:

இழிவு நீக்கக் கிளர்ச்சித் துவக்குவது என்பது அனேகமாய் உறுதி செய்து விட்டேன்.

இதைப் பலாத்காரம், - துவேஷம் இல்லாமல் நடத்துவது என்று உறுதி கொண்டிருக்கிறேன். வெற்றியா- தோல்வியா என்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை.

இந்தக் கிளர்ச்சியின் தத்துவம், கோயில் மண்டபத்திற்குள், சில கோயில்களில் நாடார் முதலிய பல வகுப்பார்களும், மற்ற எல்லாக் கோயில்களுக்குள்ளும் பஞ்சமர் என்றும்; தாழ்த்தப்பட்ட மக்கள் அதாவது சக்கிலி, பறையர், பள்ளர் என்று அழைக்கப்பட்டிருந்தவர்கள் நுழைந்தால், சட்டப்படி அது என்ன குற்றம் என்று கோயில் பிரவேசத்திற்கு முன்பு இருந்ததோ, அந்தத் தவறு, அந்தக் குற்றம் என்பது தான் இதற்கும் (மூலஸ்தானப் பிரவேசத்திற்கும்) ஏற்படலாம்.

கோயில் பிரவேசம் என்பதை முதன் முதல் நான் தான்  ஈரோட்டில் ஆரம்பித்தேன். அப்போது மாயவரம் நடராஜன்; பொன்னம்பலம், குருசாமி, ஈஸ்வரன் ஆகியவர்களுடன் கருப்பண்ணன், பெயர் ஞாபகமில்லாத மற்றொருவர்- ஆகிய இரு பறையர் என்னும் தோழர்களோடு, ஈரோடு கோயிலுக்குள் பிரவேசித்து, அதற்கு ஆக சர்க்காரே வழக்குப் போட்டு,  ஒவ்வொருவருக்கும் ரூ. 250 அபராதம் விதிக்கப்பட்டு, அது அப்பீலில் ரூ. 25 அபராதம் என்று குறைக்கப்பட்டு வழக்கு முடிந்தது ( இது என் ஞாபகம்).

அதன் பிறகு தான், அதுவும் திருவனந்தபுரத்தில் மகாராஜா கோயில் பிரவேச உரிமை செய்த பிறகு, நம் அரசாங்கம் எல்லா இந்துக்களுக்கும் கோயில் பிரவேச உரிமை உத்தரவு (சட்டம்) செய்தார்கள்.

அதையும் சூத்திரர்கள் போகும் இடம் வரையில் தான் பஞ்சமர் செல்லலாமே ஒழிய, பிராமணர் செல்லும் இடத்திற்குப் பஞ்சமர் போகக்கூடாது என்று காந்தி வியாக்கியானம் செய்து தடை விதித்தார்; அதையும் எதிர்த்து நான் கிளர்ச்சி செய்ததன் பயனாய், காந்தி பிராமணர் உட்பட எல்லோருமே சூத்திரர் போகும் இடம் வரையில் தான் போகலாம் என்று வியாக்கியானம் செய்து ஓர் உத்தரவுப் போடச் செய்தார். அதுதான் இன்று அமலில் இருப்பதாக அர்த்தம். ஆனால் அது சில கோயில்களில் நடை பெறுகிறது. சில கோயில்களில் நடை பெறுவதில்லை,

இப்போது நாம் தொடங்கப்போகும் கிளர்ச்சி யிலும், மூலஸ்தானத்திற்குள் சென்ற தவறு ஒன்றுடன்- பிராமணனுக்கு என்று ஒதுக்கி வைத்த அர்த்த மண்டபம் என்னும் இடத்தில் பிரவேசித்ததுமான ஒரு தவறும் சேர்ந்து, இரண்டு குற்றமாகக் கருதப்பட்டாலும் கருதப்படலாம். ஏனெனில் கோயில்களில் பிராமணர்களுக்கு மாத்திரம் என்கின்ற இடம் பல கோயில்களில் இருக்கிறது.

ஆகவே, நம் கிளர்ச்சியின் தத்துவம் ஜாதி அடிப்படைக் கிளர்ச்சிதானே தவிர, புனிதத் தன்மை பற்றிய கிளர்ச்சி அல்ல என்பதோடு, சாஸ்திரம், ஆகமம், சட்டம் என்பவை மேல் ஜாதிக்காரர்கள்- பார்ப்பனர்கள் இஷ்டத்தைப் பொறுத்ததே தவிர, மாற்றக் கூடாத அதாவது சுத்தம்- அசுத்தம்- புனிதம் என்பதான காரியம் என்பதல்ல.

நாமும் நம் முயற்சியினால்தான் மான உரிமையைப் பாதுகாத்துப் பெற வேண்டியவர்களாக இருக்கிறோமே ஒழிய, யாராலும் கொடுக்கப்படும் என்று எதிர்ப்பார்க்க முடியாத நிலையில் இருக்கிறோம். நம் நாட்டில், நம் சமுதாயத்தில், சமுதாய இழிவு நீக்கிக் கொள்ளும் உரிமை பெறுவதற்குத் திராவிடர் கழகம் ஒன்று தானிருக்கிறது. நம் சமுதாய இழிவு மதத்தின்படி என்றிருந்தாலும், அது பார்ப்பனர் இஷ்டப்படி,- தயவுப்படி சட்டத்தினால் ஆக்கப்பட்டு, அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அரசாங்கம் பார்ப்பன ஆதிக்க அரசாங்கமானதால், இழிவைப் பாதுகாக்கத்தக்கபடி பார்ப்பனர் சட்டம் செய்யவும், அதைப் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகவும் இருந்து வருகிறது. உலகில் நம் நாடு உள்பட சமுதாய இழிவு போக்கப்பட வேண்டுமானாலும், காப்பாற்றப்பட வேண்டுமானாலும், பலாத்காரம்- நாசவேலை- கொலை இல்லாமல் எங்கும் நடந்த தில்லை. ஆனால் நாம் தான் - திராவிடர் கழகம் தான் பலாத்காரம், கொலை, நாசவேலை இல்லாமல் (மானம் பெற) பாடுபடுகிறோம்.

பணம் தாராளமாய்க் கிடைக்கும். ஆட்கள் தான் வேண்டும். அதிலும் இந்தத் தொண்டுக்குக் கல்யாணம் ஆகாத ஆண் -பெண், பெண்டு பிள்ளைகள் இல்லாத தனி நபர் போன்றவர்களால் தான் முடியும். எனவே தோழர்களே உடனே முன்வாருங்கள். வேறு தொல்லைகளை உதறித் தள்ளிவிட்டுத் துறவிகளாக வாருங்கள். நமக்குச் சங்கராச்சாரி இல்லை,- மடாதிபதிகள் இல்லை,- திராவிடர் கழகம் ஒன்றுதான் இருக்கிறது. அதனால் உத்தியோகம் - பதவி- ஆட்சி உரிமை பெற்றது மாத்திரம் போதாது-. மானம் பெற வேண்டும்.

- 14-10-1969, விடுதலையில்

பெரியார் ஈ.வெ.ரா. தலையங்கம்

10.06.1969 தேதியிட்ட விடுதலையில் கிளர்ச்சி துவங்கும் இடம் குறித்து கீழ்க்கண்ட அறிக்கையை வெளியிட்டார்.

சூத்திரன் என்னும் இழிவு நீக்கக் கிளர்ச்சிக்கு இதுவரை இந்த மூன்று நான்கு நாட்களாக, கிளர்ச்சியில் கலந்து கொள்வதாக வந்த கையொப்பங்க்கள் சுமார் நூறு பேர்கள் அனுப்பி இருக்கிறார்கள்.

அவற்றில் குறிப்பிடத் தகுந்தவர்கள் பாண்டிச்சேரி திரு. ப.கனகலிங்கம் (தெ.ஆ. மாவட்ட தி.க. துணைத் தலைவர்) அவர்களும், சிதம்பரம் திரு. கு.கிருட்டினசாமி (தெ.ஆ. மாவட்ட தி.க. தலைவர்) அவர்களும், மனைவி உட்பட அவர்கள் குடும்பத்தினர்களும் ஆவார்கள். மற்றும் பலரும் இருந்தாலும் அவர்கள் பெயரைப் பின்னால் வெளியிடலாம் என்றிருக்கிறேன்.

கிளர்ச்சிக்கு இடம் தேர்ந்தெடுப்பதில் திருச்சியிலும், சீரங்கத்திலும்  உள்ள தோழர்கள் பலர், சீரங்கம் ரெங்கநாதர் கோயிலிலேயே நடத்தவேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்கள். இதற்குக் காரணம் அவ்வூர் கோயில் பிரபலமடைந்த கோயிலாக இருப்பதே யாகும்.

அடுத்து மன்னார்குடி கோயில் தஞ்சை மாவட்டத்தவர்கள் குறிப்பிட்டு விருப்பம் தெரிவித் தார்கள்.

சீரங்கத்தில் நடத்துவதானால் ஒரு தோழர் இடம் வசதி முதலியவை செய்து தருவதாகவும், மற்றொரு தோழர் ஓர் ஆயிரம் ரூபாய் நன்கொடை அளிப்பதாகவும் தெரிவிக்கிறார்.

என்னைப் பொறுத்தவரையில் எனக்கு மன்னார்குடி மிக்க வசதியான இடம் என்றே தோன்றுகிறது. ஆகவே இரண்டில் ஒன்றோ அல்லது இரண்டு இடத்திலுமோ துவக்குவதாக இருக்கலாம். இதற்காக நன்கொடை பணமும் தேவை இருக்கிறது. நல்ல அளவுக்கு நன்கொடை கிடைக்குமானால் மற்றும் இரண்டொரு இடங்களிலும் துவக்க முடியும்.

எப்படியும் ஓர் இடத்திலாவது துவக்குவது என்பது உறுதி என்றே கருதுகிறேன். கிளர்ச்சியில் ஈடுபடும் தோழர்கள் மிக்கப் பொறுப்பும், அடக்கமும், கட்டுப்பாட்டுக்கு அடங்கி, இராணுவ கேப்டன் போல் நடப்பவர்களாகவும், எந்த விதத்திலும் பலாத்கார உணர்ச்சி இல்லாமல் கிளர்ச்சியினால் ஏற்படும் எல்லா பலன்களையும் பொறுமையோடும், வீரத்தோடும் ஏற்றுக்கொள்ளும் தன்மை உடையவர்களாகவும் இருக்கவேண்டும்.

கிளர்ச்சியை விரும்புகிறவர்கள்- கிளர்ச்சியில் கலந்துகொள்ள வசதியில்லாதவர்களாக இருந்தால்- தக்க நன்கொடை அல்லது உணவுப் பண்டங்கள், தொண்டர்கள் வசதிக்குத் தேவையான சாதனங்கள், படுக்கை,- உணவுப் பண்டங்கள் அளிப்பதன் மூலம் தங்கள் ஆதரவைக் காட்டிக் கொள்ளலாம். 50 தொண்டர்களுக்குக் குறையாமல் கிளர்ச்சிக் காரியாலயத்தில் இருக்க வேண்டியிருக்கும்.

இந்தக் கிளர்ச்சி ஒரு மாபெரும் சமுதாயத்தின் மானத்தைப் பொறுத்த விஷயமானதால், எல்லாத் தமிழ் மக்களும் இதில் பங்கு கொள்ளவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். இந்தக் கிளர்ச்சி யாருக்கும் எந்த மதத் தத்துவத்திற்கும் எவ்விதக் குறையோ அசவுகரியமோ ஏற்படுத்தக் கூடியதல்ல.

மற்றும் (14.10.1969) இன்றைய (மதுரையிலிருந்து வெளிவரும்) தினமணி பத்திரிகையின் இரண்டாம் பக்கத்தில், இந்துக்கள் அல்லாதோர் கர்ப்பக்ரஹத்துக்குள் அனுமதி என்ற தலைப்பில்-

இந்துக்கள் அல்லாதோர் விபூதியும், குங்குமமும் அணியும் பட்சத்திலும், சட்டையைக் கழற்றும் பட்சத்திலும், அவர்களைக் கோவில்களின் கர்ப்பக்ரஹத்துக்குள் அனுமதிப்பதன் சாத்தியத்தை பரிசீலிக்கும்படிக் கோவில் டிரஸ்ட் போர்டுகளுக்கு ஆலோசனை கூறப்போவதாக இந்து அறநிலையக் கமிஷனர்  கே. நரசிம்மன் இங்கு செய்தியாளர்களிடம் கூறினார்.

என்கின்ற செய்தி வெளியாகியிருக்கிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது நமக்கு விளக்கவில்லை. இது பற்றி அமைச்சர்கள் என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் என்பது நமக்குத் தெரியவில்லை என்றாலும், நம் கடமையை நாம் செய்ய வேண்டி இருக்கும்.

(16-10-1969, விடுதலையில்

பெரியார்ஈ.வெ.ரா. தலையங்கம்)

20-10-1969லிலே திங்கட்கிழமை மாலை 5 மணி அளவில் தஞ்சை மாவட்டம் மன்னார்குடி கழகக்கட்டிடத்தில் மன்னார்குடி வட்ட தஞ்சை மாவட்ட திராவிடர் கழக கமிட்டிக் கூட்டம் தந்தை பெரியார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

(அ) மன்னார்குடி வட்ட தஞ்சை மாவட்ட கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் வருகை தந்த தோழர்களின் ஏகமனதான விருப்பத்திற்கிணங்க சூத்திரன் என்னும் இழிவு நீக்கக் கிளர்ச்சியான கர்ப்பக் கிரக நுழைவுக் கிளர்ச்சியினை மன்னார்குடியில் இராஜகோபால்சாமி கோயில் என்பதில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

(ஆ) இந்நிகழ்ச்சி நவம்பர் மாதத்தில் கழகத் தலைவர் அவர்களால் - குறிப்பிடப்படும் ஒரு நாளில் துவக்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது

(இ) கிளர்ச்சி நடத்துவதில் கிளர்ச்சி முறை கிளர்ச்சிக்குத் திட்டம் கழகப் பொதுத்தலைவர் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது

கிளர்ச்சியை மன்னார்குடியில் நடத்துவதற்கு கிளர்ச்சிக் கமிட்டி என்பதாக அடியில் கண்டவர்களைத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

ஆர்.பி.சாரங்கன் அவர்களை தலைவராகவும், கே.நல்லதம்பி அவர்களை செயலாளராகவும், வி.எம்.ஆர்.பதி அவர் களைச் கூட்டுச் செயலாளராகவும், தோல்.ஆர்.சுப்பிரமணியம் அவர்கள் பொருளாளராகவும் தேர்ந் தெடுக்கப்பட்டனர்.

திருவாரூர் சுந்தரலீலா,

கே.ஆர்.ஜி.பால்,

உள்ளிக்கோட்டை சு.பக்கிரிசாமி,

குடந்தை டி.மாரிமுத்து,

தஞ்சை நாகராஜன்,

விக்கிரபாண்டியம் கணேசன்,

நன்னிலம் வே.வாசுதேவன்,

நாகை எஸ்.கணேசன்,

மாயூரம் என்.வடிவேலு,

ஒரத்தநாடு து.ஆறுமுகம்,

திருவாரூர் சிவசங்கரன் ஆகியோர் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மேலும் தேவையான உறுப்பினர் களைத் தலைவர்களுடன் கலந்து கமிட்டியார் தேர்ந்தெடுத்துக் கொள்வ தென்றும் தீர்மானிக்கப்பட்டது.

16.11.1969 - கர்ப்பக்கிருக நுழைவுக் கிளர்ச்சி: போர்க்கொடி உயர்ந்தது

1970 ஜனவரி 26ஆம் நாள் கர்ப்பக்கிருக நுழைவுக் கிளர்ச்சி தமிழகமெங்கும் தொடங்கப் பெறும் என்று அன்று மாலை 3.30 மணியளவில் திருச்சி பெரியார் மாளிகையில் தந்தை பெரியார் தலைமையில் திராவிடர் கழக மத்திய நிர்வாகக் கமிட்டி கூறியது.

தொடரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக