வியாழன், 2 செப்டம்பர், 2021

அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் உரிமை கடந்து வந்த பாதை-5


முதலமைச்சர் கலைஞர் அறிக்கையும் போராட்டம் ஒத்தி வைப்பும்

தந்தை பெரியார் கிளர்ச்சி தேதி அறிவித்தபின் தமிழர்களிடம் உணர்வு பற்றி எரியத் தொடங்கியது ஆயிரக் கணக்கான போராட்ட வீரர்கள் கையொப்பம் இட்ட பட்டியல் குவிந்தது.

இதுகுறித்து முதலமைச்சர் கலைஞர் அவர்கள் 17.01.1970 அன்று கீழ்கண்ட ஓர் அறிக்கையை

வெளியிட்டார் அந்த அறிக்கை.

"ஆலயங்களில் கர்ப்பக்கிரகம் வரையில் ஜாதி பாகுபாடின்றி அனைவரும் சென்று ஆண்டவனைத் தொழுதிட வேண்டுமென்றும், அனைவர்க்கும் உயர்வு தாழ்வின்றி அர்ச்சகராகும் உரிமை வேண்டும் என்றும் வலியுறுத்துகிற அடிப்படையில் பெரியார் அவர்கள் ஒரு கிளர்ச்சி தொடங்குவதாக அறிவித்ததையொட்டி, அதற்கு ஆதரவான கருத்துகளும், எதிர்ப்பான கருத்துகளும், நடவடிக்கைகளும் ஏடுகளில் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பிட்ட வகுப்பினர்தான் அர்ச்சகராக இருக்க வேண்டுமென்று யாரும் இந்த நூற்றாண்டில் வாதாடுவார்கள் என நான் எதிர்ப்பார்க்கவில்லை. காலம் வேகமாகச் சுழன்று மனிதனுக்கு மனிதன் பிறப்பால் உயர்வு - தாழ்வு கிடையாது என்ற கொள்கை வலுப்பெற்று வரும் இந்நாளில், அப்படிப்பட்ட ஒரு பிற்போக்கு எண்ணத்தை யாரும் முரண்டுப்பிடியாக பிடித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். வள்ளுவர், புத்தர், காந்தியடிகள் போன்றோரைப் போற்றுகின்றவர்கள், ஆண்டவனுக்கு அர்ச்சகர்களாக குறிப்பிட்ட  ஜாதியினர்தான் இருந்திட வேண்டுமெனில் அநியாயமாகும்.

அர்ச்சகர்களுக்கென சில தகுதிகள் இருக்க வேண்டும். புனிதத் தன்மைகளை அவர்கள் கடைப்பிடித்தாக வேண்டும். அதற்குரிய பயிற்சிகளை அவர்கள் பெற்றாக வேண்டும். அதில் எனக்குக் கருத்து வேறுபாடு இல்லை. அப்படிப் பயிற்சி பெறுகிறவர்கள் எந்த வகுப்பினராயிருந்தாலும் அவர்கள் அதில் தேர்வு பெற்று அர்ச்சகராக இருக்கலாம். அதற்கு விதிமுறைகள் வகுக்க அரசு யோசித்துக் கொண்டிருக்கிறது. அதேசமயம் பரம்பரை அர்ச்சகர் வீட்டுப் பிள்ளைகள் அர்ச்ககராக விரும்பினால், அவர்களுக்கு முதல் சலுகை அளிப்பது பற்றியும் அரசு யோசித்துக் கொண்டிருக்கிறது.

இந்த விதிமுறைகள் உருவாக்கப்பட்டு, அதன்படி அர்ச்சகர் பதவிகளை பிறப்பினால் கணக்கிடாமல், தகுதியொன்றினால் கணக்கிடப்படக் கூடிய நாள் வந்துவிடுமானால் ஆண்டவனைத் தொழ ஆலயம் செல்வோர், ஜாதி வேறுபாடின்றி கர்ப்பக்கிரகம் வரையில் செல்வதற்கு தடையில்லையென்பதும் கொள்கை ரீதியாக ஒப்புக் கொண்டதாக ஆகிவிடும்.

கர்ப்பக்கிரகத்தில் இருக்கின்ற பொருள்களின் பாதுகாப்புக்காக மட்டுமே அந்த இடம் ஒருவர் பாதுகாப்பில் விடப்பட வேண்டுமே தவிர, அதற்கு ஜாதி வர்ணம் பூசப்படக் கூடாது என்பதை இந்த அரசு மட்டுமல்ல; ஆண்டவன் எதிரே அனைவரும் சமம் என்ற கருத்தினை ஒப்புக் கொள்கிற அனைவரும் ஏற்றுக் கொண்டே தீருவர். ஆகவே, இந்த நன்னிலை ஏற்பட ஆலயங்களில் ஆண்டவன் திருமுன்னே ஜாதியின் பெயரால் மற்றவர்களுக்கு இழைக்கப்படும் இழிவான அநீதி அகன்றிட, விதிமுறைகள் செய்திட அரசு முன்வருகிறது என்ற உறுதிமொழியினை ஏற்று, பெரியார் அவர்கள், தான் திட்டமிட்டிருக்கிற கிளர்ச்சியினை நிறுத்தி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இந்த என் வேண்டுகோளை பெரியார் அவர்கள் ஏற்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.

- மு.கருணாநிதி

தமிழ்நாடு முதலமைச்சர்

போரின் வெற்றி

தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அவர்கள், ஜாதி அடிப்படையில் கோயில் அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்படாமல் அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்கும் வகையில் சட்ட விதிமுறைகள் ஏற்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளதால், கிளர்ச்சியின் தத்துவத்தை நல்லவண்ணம் புரிந்து செயல்பட முனைந்துள்ள அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன், 19.1.1910 அன்று கீழ்கண்ட அறிவிப்பை தந்தை பெரியார் அவர்கள் கழகத் தோழர்களுக்கு அறிவித்தார்கள்.

கர்ப்பக்கிரக நுழைவுக் கிளர்ச்சி ஒத்தி வைப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் திரு. கருணாநிதி அவர்கள் சில நாட்களுக்கு முன் விடுத்துள்ள ஒரு அறிக்கையில், ஜாதி அடிப்படையில் கோயில் அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்படாமல் அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கும் தன்மையில் சமூக நீதிதத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு நியமனம் செய்யும் வகை யில் அரசால் விதிமுறைகள் ஏற்படுத்தப்படும் என்று தந்துள்ள உறுதி மொழியை ஏற்று, இம்மாதம் (ஜனவரி) 26ஆம் தேதி மன்னார்குடி, மற்றும் சில ஊர்களிலும் நடக்க விருந்த கோயில் கர்ப்பக்கிரக நுழைவு கிளச்சி ஒத்திவைக்கப்படுகிறது என்பதை இயக்கத் தோழர்களுக்கும் தமிழ்ப்பெரு மக்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

கிளர்ச்சியின் தத்துவத்தை நல்ல வண்ணம் புரிந்து, அதற்குரியவகையில் பரிகார நடவடிக்கைகளை மேற்கொள்ள முனையும் தமிழ்நாடு அரசினருக்கும் - முதலமைச்சருக்கும் அவரது அமைச்சரவையினருக்கும் நன்றி செலுத்துவதோடு கிளர்ச்சியில் கலந்து கொள்ள உற்சாகத்துடன் முன்வந்துள்ள ஆயிரக்கணக்கான தோழர்களுக்கும், தாய்மார்களுக்கும் கிளர்ச்சிக்காக ஆதரவு காட்ட முன்வந்த அனைவருக்கும் நன்றி செலுத்துகிறேன்.

தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ளும் என்றும் நம்புகிறேன்.

- ஈ.வெ. ராமசாமி

கர்ப்பக்கிரகக் கிளர்ச்சி வெற்றி

தந்தை பெரியார் அவர்கள் கர்ப்பக்கிரக நுழைவுப் போராட்டத்தை ஒத்தி வைத்திருப்பதாக அறிவித்த நிலையில் குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் அல்லாத பிற எல்லா இனத்தவரும் கோவில் கர்ப்பக்கிரகத்தினுள் போகவும் அனுமதிக்கும் வண்ணம் சட்டத்திருத்தம் ஒன்றை அரசு கொண்டு வரும் என்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் 12.3.1970 அன்று முதல்வர் கலைஞர் அறிவித்தார்.

பார்ப்பனர்களுக்குள்ள ஏகபோக அர்ச்சகர் உரிமை ஒழிந்தது

அர்ச்சகர் தொழிலுரிமையைப் பார்ப்பனர் மட்டுமே பரம்பரை பரம்பரையாக அனுபவித்து வருவதை ஒழிக்க வேண்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் வலியுறுத்தி வந்த கொள்கையைப் பின்பற்றி, அர்ச்சகர் தொழிலுக்கு பார்ப்பனரல்லாத பிற வகுப்பினரும் பயிற்சி பெற்று நியமனம் பெறலாம் என்பதற்கு வழி செய்யும் மசோதா ஒன்றை தமிழ்நாடு சட்டமன்றத்தில் 30.11.1970 அன்று அறநிலைய அமைச்சர் தாக்கல் செய்தார்.

தந்தை பெரியார் அவர்கள் அறிவித்த கர்ப்பக்கிரக நுழைவுக் கிளர்ச்சியின் மாபெரும் வெற்றியாக அர்ச்சகர் நியமன மசோதா தமிழ்நாடு சட்டமன்றத்தில் எந்தவித எதிர்ப்புமின்றி 02.12.1970 அன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. எல்லாக் கட்சி உறுப்பினர்களும் ஒருமனதாக ஆதரித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக