வியாழன், 2 செப்டம்பர், 2021

அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் உரிமை கடந்து வந்த பாதை-6


சட்டத்தை அனுமதித்து செயல்பாடுகளை தடுத்த உச்சநீதிமன்ற தீர்ப்பு

1971ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டுக் கோயில்களில் அர்ச்சகர்  நியமனம் பற்றிய சட்டம் - ஒன்றை இயற்றியது. (அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வழி வகுக்கும் சட்டம் இது)  தமிழ்நாடு இந்து மதம் மற்றும்  அறக்கட்டளைகள் திருத்தச் சட்டம் - 1970 என்பது இதன் பெயர்.

இந்தச் சட்டத்தை எதிர்த்து சேஷம்மாள் மற்றும் சிறீபெரும்புதூர் எத்திராஜ் ஜீயர், தஞ்சை பங்காரு காமாட்சியம்மன் கோவில், திருச்சி அல்லூர் கோவில் உள்ளிட்ட  11பேர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அரசியல் சட்டத்தின்படி மதவழிபாட்டுக்காக தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும்  உரிமைக்கு இந்தச் சட்டம் முரணாக இருப்பதால் இது செல்லாது என்று இந்த வழக்குகளில் இவர்கள் கோரினார்கள். அரசியல் சட்டத்தின் 82ஆவது பிரிவுப்படி இவ்வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் பிரபல வழக்குரைஞர்களான என்.ஏ. பல்கிவாலா, கே.பராசரன், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி நடேசன்  போன்றவர்களை வைத்து வாதாடினார்கள்.

தமிழ்நாடு அரசு அனைத்து ஜாதியினருக்கும் அர்ச் சகர் உரிமை பெற்றுத்தர முனைப்புடன் செயலாற்றியது.

தமிழ்நாடு அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் கோவிந்த சாமிநாதன் அரசு வழக்குரைஞர் எஸ்.மோகன் (பின்னாட்களில் நீதிபதியாக வந்தவர்) ஆகியோர் வாதாடினர்.

அன்றைய தலைமை நீதிபதி எம்.எஸ்.சிக்ரி ,நீதிபதி ஏ.என்.குரோவர், நீதிபதி டிஜி பாலேகர், எம்.எச்.பெய்க் ஆகிய அய்ந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு சட்ட பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து 14.03.1972 அன்று தீர்ப்பளித்தது. பெஞ்சின் சார்பில் தீர்ப்பை நீதிபதி பாலேகர் படித்தார்.

தமிழ்நாட்டில் உள்ள இந்துக் கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் நியமனத்தில் பரம்பரை பாத்தியதை கடைப்பிடிக்கப்படவேண்டுமா - அப்படிக் கடைப்பிடிக்கப்பட வேண்டாமா என்பதே இவ்வழக்கின் சட்ட நுணுக்கமான கேள்வி.

பரம்பரை உரிமை இல்லை என்று ரத்துச்செய்திருந்தது தமிழ்நாடு அரசின் சட்டத் திருத்தம். இதையே உச்சநீதிமன்றம் ஏற்று சட்டத்தைச் செல்லும் என்று தீர்ப்பில் கூறியிருக்கிறது. கோயில் வழிபாடு விடயத்தில் அடங்கியிருக்கும் மிக இன்றியமையாத மதப்பழக்கத்தில் இந்தத்திருத்தச் சட்டம் தலையிடுகிறது; எனவே, இச்சட்டம் அரசமைப்புச் சட்டத்தின் 25ஆவது பிரிவுக்கும் 26ஆவது பிரிவுக்கும் முரணானது, ஆகையால் இச்சட்டம் செல்லாது என்று மனுதாரர்கள் தங்கள் மனுவில் கோரியிருந்தார்கள்,

அரசமைப்புச் சட்டத்தின் 25ஆவது பிரிவின்படி ஒரு மதத்தை ஒருவர் கடைப் பிடிக்கவும் அம்மதத்தின் வழிபாடுகளை அவர் செய்யவும் அடிப்படை உரிமை வழங்கப்படுகிறது, அரசமைப்பு சட்டத்தின் 26ஆவது பிரிவின்படி எந்த மதமும் அல்லது எந்த மதப்பிரிவும், மத சம்பந்தப்பட்ட தனது விவகாரங்களை தானே நிர்வகிக்க உரிமை வழங்கப்படுகிறது.

இந்தச் சட்டத்திருத்தம் அர்ச்சகர் நியமனம் பற்றியது. அர்ச்சகர் நியமனம் என்பது டிரஸ்டிகளினால் செய்யப்படும் மதச்சார்பற்ற ஒரு காரியம். எனவே இந்த காரியத்தில் தலையிட அரசுக்கு எல்லா  உரிமைகளும் உள்ளன.

இந்தத் திருத்தச்சட்டம் மதவழிபாடு விஷயத்திலே அல்லது மதம் சம்பந்தப்பட்ட பிறவிடயங்களிலே தலையிடவில்லை. எனவே இச்சட்டத்திருத்தம் செல்லுபடியாகும்.

அர்ச்சகர் நியமனத்தை தொடர்ந்து அர்ச்சகர் என்ற முறையில் பணிபுரிவது என்பதுதான் மதம் சம்பந்தப்பட்டது. அது முழுக்க அந்தக் கோயில்களின் ஆகம விதிகளின்படியே செய்யப்பட வேண்டும். அதை மாற்றுவது மத விடயங்களில் தலையிடுவதாகும், அதற்கும் இச்சட்டத்துக்கும் சம்பந்தமில்லை. இச்சட்டம் கோயில் நிர்வாகப் பற்றிய மதச்சார்பற்ற ஒரு நடவடிக்கையே. எனவே, அரசியல் சட்டம் 25[1] பிரிவுப்படி இது அனுமதிக்க படக்கூடியதே என்று தீர்ப்பில் கூறப்பட்டது.

இது வெளிப்பார்வைக்கு நமக்கு வெற்றி போலத் தோற்றமளித்தாலும் உண்மையில் இத்தீர்ப்பு நமக்கு எவ்வளவு பாதகமானது என்பதை விளக்கி விடுதலையில் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் "உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஆபரேசன் வெற்றி நோயாளி செத்தார்" என்ற தலைப்பிட்டு இரண்டு நாட்கள் தலையங்கம் எழுதினார். அதன் ஒரு பகுதி...

"ஆப்ரேஷன் வெற்றி நோயாளி மரணம்"

“இத்தீர்ப்பின்படி, தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய சட்டம் செல்லுபடியாகும் என்றும், அர்ச்சகர்களை டிரஸ்டிகள் நியமிக்கும் செயல், மதக் காரியம் (Religious act) அல்ல வென்றும், அது மதச்சார்பற்ற காரிய மே (Secular act) என்றும் தீர்ப்பளித்துள்ளது.

எனவே தமிழ்நாட்டிலுள்ள இந்து கோயில்களில் அர்ச்சகர்களின் பரம்பரை உரிமையை ஒழிக்கும் 1970ஆம் ஆண்டைய தமிழ்நாடு இந்து அறநிலைய திருத்த சட்டம் செல்லும் என்றுக்கூறி, ரிட் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன!

தோற்றத்தில் சட்ட ரீதியாக தமிழ்நாடு அரசுக்கும், சமுதாய சீர்திருத்த வேட்கையுடன் உணர்ச்சியுடன் காரியம் செய்தோருக்கும் இது வெற்றிதான் என்றாலும், இது ஒரு சட்ட வெற்றியே தவிர கொள்கை வெற்றி என்று கருதமுடியாத அளவுக்கு அத்தீர்ப்பில் சுட்டிக்காட் டப்பட்ட பல முக்கிய செய்திகள், எந்த நோக்கத்திற்காக சட்டத் திருத்தம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதோ அதைத் தோற்கடிக்கும் தன்மையில் அமைந்திருக்கிறது.

இன்று ‘இந்து’ ஏட்டில் வெளியாகியுள்ள சட்டம் நீதிமன்ற தீர்ப்பு வாசகங்களில் பல, எந்த ஜாதி ஆதிக்கத்தைக் கட்டிக் காக்கப் பார்ப்பனர்களான மனுதாரர்கள் உச்சநீதிமன்றத்தில் முயற்சித்தார்களோ, அதை அவர்கள் பெற்றதுடன் அதற்கு நீதிமன்றம் மூலம் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டிருப்பது போன்றதொரு நிலை ஏற்பட்டிருக்கிறது என்று காட்டுகின்றன.

சட்டத் திருத்தம் செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், கோயிலில் அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவதும், பூஜை புனஸ்காரங்கள் நடைபெறுவதும், பழைய “வழக்கப்படி” ஆகமங்கள் என்னென்ன விதிமுறைகளை வகுத்துக்காட்டியுள்ளனவோ அவைகளின் - படிதான் எள்ளளவும் அவை - பிறழாத வண்ணம், இனி - தமிழ்நாடு அரசால் விதிகள் - செய்யப்பட்டு (Rules to be a framed accordingly) அமல் நடத்தப்பட வேண்டும் - என்று பச்சையாகத் தெரிவிக்கப்பட்டுவிட்டது!

நாம் எதை எதிர்பார்த்தோமோ அதுவே நடந்து - விட்டது; “ஆப்ரேஷன் வெற்றி; ஆனால் நோயாளி செத்துவிட்டார்'' என்பது போன்றதொரு நிலை உண்டாகிவிட்டது! ஆப்ரேஷன் செய்வது நோயாளியைப் பிழைக்க வைக்கத்தானே; அந்தப்படிக்கில்லாமல், நோயாளி செத்தால் ஆப்ரேஷன் வெற்றியைப் பற்றி யார் தான் பெருமைப்பட முடியும் ? மகிழ்ச்சி அடையமுடியும்? 

 'விடுதலை' 16.3.1972

மனுதாரர்கள் தமது வாதங்களில் சுட்டிக் காட்டி யவைகள் பின்வருமாறு:

“ஜாதி, வேறுபாடின்றி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டுமென்ற ஒரு நோக்கத்துடன் இச்சட்டத்திருத்தம் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டிருப்பதால், மாநில அரசு அர்ச்சகர்கள் ஆக விதிக்கும் சில தகுதிகள், ஆகமவிதிகட்கு முரணாக இருக்கும்.” இதுகுறித்து தந்தை பெரியார் 14.04.1972 தேதியிட்ட உண்மை இதழில் தலையங்கம் எழுதினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக