வியாழன், 2 செப்டம்பர், 2021

அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் உரிமை கடந்து வந்த பாதை-9

கோயில் கர்ப்பக்கிரக நுழைவுக்கிளர்ச்சி அறிவிப்பு (04.05.1975)

தஞ்சை பெரியார் இல்லத்தில் கழகத் தலைவர் அம்மா தலைமையில் மாவட்டக் கமிட்டிக் கூட்டம் 04.05.1975 அன்று மிகவும் சிறப்புடன் நடைபெற்றது.

இழிவு ஒழிப்புக் கிளர்ச்சியின் மூன்றாம் கட்டப் போராக ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் மத்திய அரசின் நிருவாகத்தில் உள்ள தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் கர்ப்பக் கிரகத்திற்குள் நுழையும் கிளர்ச்சி நடத்தப்படும் என்று கழகத் தோழர்களின் எழுச்சி முழக்கங்களிடையே கழகத் தலைவர் அம்மா அவர்கள் அறிவித்தார்கள். அம்மா அவர்களின் அறிவுரையை வரவேற்று மாவட்டக் கமிட்டி தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றி, போராட்டத்தின் ஆக்கவேலைகளைத் தொடங்கக் கேட்டுக்கொண்டது.

பின்னர் தஞ்சை நகரையே குலுக்கி எடுத்த மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் ஒன்றும் நடத்தப்பட்டு தஞ்சை நகர மக்களுக்கு எழுச்சியூட்டப்பட்டது.

போராட்ட வீரர் பட்டியல் குவிந்தது (25.05.1975)

கழகத் தலைவர் அம்மா அவர்களால் தஞ்சைக் கோயில் கர்ப்பக் கிரக நுழைவுப் போராட்டம் அறிவிக்கப்பட்டதையொட்டி, போராட்டவீரர்கள் பட்டியல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தலைமைக் கழகத்தில் அன்றாடம் வந்து குவிந்த வண்ணமாகவே இருந்தது.

கோயில் நுழைவுப் போராட்டம் பற்றி

அம்மா அறிக்கை 02.08.1975

கோயில் கருவறைக் கிளர்ச்சி: நமது முடிவு என்ற தலைப்பில் கழகத் தலைவர் அம்மா அவர்கள் நீண்டதொரு அறிக்கை விடுத்து, தற்பொழுது நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டிருப்பதாலும், செய்திகள் வெளியிடுவதற்குத் தணிக்கை விதிகள் அமல்படுத்தப்பட்டிருப்பதாலும், நமது கோயில் நுழைவுப் போராட்டத்தின் தன் மையையும் நோக்கத்தையும் மற்றவர்கள் அறிந்துகொள்ள வாய்ப்பில்லாமல் போய்விடும் என்பதலால் ஆகஸ்ட் 15 கிளர்ச்சியைத் தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக அறிவித்தார்கள்.

தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டு 1977இல் மீண்டும் தேர்தல் நடந்தபோது அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தது, எம்.ஜி.ஆர் முதலமைச்சரானார்.

சென்னையில் உள்ள அண்ணா மேம்பாலம் அருகே அ.இ.அண்ணா தி.மு.கழக சார்பில் நிறுவப்பட்ட தந்தை பெரியார் சிலையை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் பாபு ஜெகஜீவன்ராம் திறந்து வைத்தார்.

முதல்வர் எம்.ஜி.ஆர் தலைமை யேற்ற இவ்விழாவில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர்.

கழகத் தலைவர் அம்மா அவர்கள் இவ்விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்தார்கள்.

தந்தை பெரியார் இறுதியாக அறிவித்த அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக உரிமை பெற்றாக வேண்டும் என்ற தந்தையார் விருப்பத்தை, சட்டரீதியாக நிறைவேற்றுவதில், தமிழ்நாடு அரசு தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கழகத் தலைவர் அம்மா அவர்கள் இவ்விழாவில் வேண்டுகோள் விடுத்தார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக