வியாழன், 2 செப்டம்பர், 2021

திராவிடப் பாரம்பரிய முதலமைச்சர் எப்படி செயலாற்றுவார் என்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துக்காட்டு!


திராவிடம் வென்றது - வரலாறு அதை பதிவு செய்கின்றது!

நூறு நாள்கள் என்பது ஒரு தொடக்கம் - ஓர் அறிமுகம்!

‘கலைஞர் செய்திகள்' தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி

திருச்சி, ஆக.17 திராவிடப் பாரம்பரிய முதலமைச்சர் எப்படி செயலாற்றுவார் என்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எடுத்துக்காட்டு! திராவிடம் வென்றது - வரலாறு அதை பதிவு செய்கின்றது! நூறு நாள்கள் என்பது ஒரு தொடக்கம் - ஓர் அறிமுகம்தான் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் .

‘கலைஞர் செய்திகள்' தொலைக்காட்சிக்குப் பேட்டி

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி பொறுப்பேற்று நூறு நாள்கள் (14.8.2021) ஆனதையொட்டி -  11.8.2021 அன்று திருச்சியில் ‘கலைஞர் செய்திகள்' தொலைக் காட்சிக்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சியாக தன்னுடைய ஆட்சி அமையாமல், எல்லா மக்களுக்கும் உரிய ஆட்சி - தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியபொழுது, ‘‘அனைவருக்கும் அனைத்தும் - எல்லாருக்கும் எல்லாமும்'' என்ற சமூகநீதி அடிப்படையில், இந்த இயக்கமும், திட்டங்களும் அமையும் என்று சொன்னதற்கேற்ப, நீதிக்கட்சியினுடைய தொடர்ச்சியே தன்னுடைய ஆட்சி என்று சொன்னார் நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். இது நீதிக்கட்சியினுடைய ஆட்சிதான் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.

ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுடைய

உரிமைகளை மீட்கின்ற ஆட்சி!

அந்த ஆட்சி மட்டுமல்ல, அந்த தத்துவங்களுடைய மாட்சி - அதே நேரத்தில், ஒடுக்கப்பட்ட சமுதாய மக்க ளுடைய உரிமைகளை மீட்கின்ற மீட்சி என்கின்ற அளவில், அவருடைய ஆட்சி அமைந்த நூறு நாள் களில், எண்ணற்ற சாதனைகளை அவர் புரிந்திருக்கிறார்.

ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முதல் கையெழுத்துப் போடுகையில், பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம் என்று சொன்னபொழுது, இன்றுவரையில், அந்த மகளிர் அடைகின்ற மகிழ்ச்சி எல்லையற்ற மகிழ்ச் சியாக இருக்கிறது. காரணம், அன்றாடம் கூலித் தொழி லுக்குச் செல்லுகின்ற நேரத்தில், அன்றாடம் சம்பாதிக் கின்ற எங்களுடைய பணம், பெரும்பகுதி போக்கு வரத்திற்கே செலவாகிறது. அந்தப் பணம் இப்பொழுது மிச்சப்படுகின்றது என்று அவர்கள் மகிழ்கின்றனர். வாழ்வாதாரத்திற்கு அது ஒரு சிறப்பான வாய்ப்பாக இருக்கிறது என்று நன்றி செலுத்துகிறார்கள்.

கரோனா நிவாரண நிதி -

14 மளிகைப் பொருள்கள் வழங்கினார்

அதுபோலவே, தொடர்ச்சியாக சொல்லவேண்டு மானால், அரசு கஜானா - கருவூலம் காலியாக இருப் பதைப்பற்றிக் கூட கவலைப்படாமல், திராவிட முன் னேற்றக் கழக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, கரோனா நிதி ரூ.4000 வழங்கப்படும் என்பதை - ஒவ்வொரு குடும்பத்திற்கும், 2000 ரூபாய் - 2000 ரூபாய் என்று தனித்தனியாகப் பிரித்துக் கொடுத்து - பணப் புழக்கம் இருந்தால்தான் அவர்களுக்கு மற்ற வாய்ப்புகள் ஏற்படும் என்று சொல்லி வழங்கியதோடு மட்டுமல்லாமல், குடும்பத்திற்குத் தேவையான 14 மளிகைப் பொருள்களை வழங்கி, பசியற்ற வாழ்க்கைக்கு வாய்ப்பேற்படுத்தினார்.

அதேநேரத்தில், சமூகநீதிக்கு ஆபத்து ஏற்படும் பொழுதெல்லாம், கலைஞரைப் போல, பேரறிஞர் அண்ணாவைப் போல, பெரியார் பாதையில் நின்று, மிகப்பெரிய அளவிற்கு, நீதிமன்றம்வரை சென்று, அதிலே வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார்கள்.

நீதிபதி ஏ.கே.இராஜன்  தலைமையில் குழு!

அதுபோலவே, நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று சொல்வது - உடனடியாக ஒரு மாநில அரசின் முடிவில் மட்டுமில்லை. அது ஒன்றிய அரசின் ஒத்துழைப்போடு தான் நடைபெறவேண்டும். நீட் தேர்விலிருந்து விதி விலக்கு வேண்டும் என்றால், அதற்குரிய காரண, காரி யங்களை இதற்கு முன் இருந்த மாநில அரசு தெளிவாக எடுத்து வைக்கவில்லை. அந்த குறை இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் ஒரு சிறந்த குழுவை - நீதிபதி ஏ.கே.இராஜன்  அவர்களுடைய தலைமையில் அமைத்து, ஒரே மாதத்தில் அக்குழுவின் அறிக்கையை வாங்கி, மேல்நடவடிக்கைகளை வேகமாக எடுத்து வருகிறார்.

இதுவரை எப்பொழுதும் இல்லாத அளவிற்கு, நீட் தேர்விற்கு வெறும் 6 ஆயிரம் பேர்தான் விண்ணப்பித் திருக்கிறார்கள் என்று சொல்வதிலிருந்தே, அது எத்தகைய கொடுமையானது என்ற நிலை இருக்கின்ற பொழுது - அவர்கள் நம்புவது இந்த அரசைத்தான்.

அதுபோலவே, முழுக்க முழுக்க பண்பாட்டுத் துறையில் மிகப்பெரிய ஒரு வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பதற்காக, ஒரு சிறப்பான சூழலை இன்றைக்கு உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

திராவிடம் என்ன செய்யும் என்பதற்கு அடையாளமாகச் செய்திருக்கிறார்கள்!

தமிழ்ப் படைப்பாளிகளுக்கு - சிறப்பான இலக்கிய வித்தகர்களுக்கு - இதுவரை எந்த ஆட்சியும் செய்யாத அளவிற்கு - தமிழ் இலக்கிய படைப்பாளிகளான கி.இரா. போன்றவர்களுக்கு அரசு மரியாதை கொடுத்து அவரு டைய இறுதி நிகழ்ச்சியை சிறப்பாக செய்தார். தமிழ்ப் பண்பாட்டுக் களத்திலே, திராவிடம் என்ன செய்யும் என்பதற்கு அடையாளமாக அதை செய்திருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, வேளாண்மைக்கு தனி பட்ஜெட் - மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டக் கூடிய அளவிற்கு - இதுவரை யாரும் செய்யாத அளவிற்கு - இது விவசாய நாடு - விவசாயிகளுடைய கடன்கள் தள்ளுபடி செய்வ தோடு மட்டுமல்லாமல்  - அவர்களுக்கென்றே தனி வரவு - செலவுத் திட்டத்தைக் கொடுத்து, அதன்மூலமாக இன்னும் விரிவாக அவர்களுடைய உரிமைகளையும், வாய்ப்புகளையும் அதிகப்படுத்தவேண்டும் என்பதற் கான இத்திட்டம் - இது ஒரு சிறப்பான திட்டமாகும்.

நிதியமைச்சரின் வெளிப்படையான

வெள்ளை அறிக்கை!

கடந்த 10 ஆண்டுகளில் எப்படிப்பட்ட சூழல் இருந்தது என்பதை ஒளிவு மறைவில்லாமல், நம்முடைய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களுடைய தலைமையில், இரண்டு நாள்களுக்கு முன்பு வெள்ளை அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.

ஒவ்வொருவருடைய குடும்பத்திற்கும் 2.63 லட்சம் ரூபாய் கடன் இருக்கிறது. தமிழ்நாட்டின் மொத்த கடன் 5.30 கோடி ரூபாய் உள்ளது. இதுவரை என்றுமில்லாத அளவிற்கு, பிறக்கின்ற குழந்தையின் தலையில்கூட லட்சக்கணக்கான ரூபாய் கடன் உள்ளது.

இதுதான் இன்றைய நிலைமை, ஆனால், இதிலிருந்து மீளுவோம், தைரியமாக இருங்கள், சிறந்த பொருளாதார நிபுணர்களைக் கொண்டு 5 ஆண்டுகால ஆட்சியில் இதிலிருந்து மீண்டு வருவோம் என்று சொல்லிவிட்டு, இப்படி சொல்வதின்மூலமாக நாங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளிலிருந்து பின்வாங்கமாட்டோம்; தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று சொல்லியிருக்கிறார்.

தந்தை பெரியார் அவர்களுக்கு அரசு மரியாதை யைத்தான் என்னால் கொடுக்க முடிந்ததே தவிர, அவரு டைய நெஞ்சில் தைத்த முள்ளை அகற்ற முடிய வில்லையே என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வருந்தினார்களே, அந்த முள்ளை அகற்றக் கூடிய அளவிற்கு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்ற முறையில், ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பிற்கு மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்துவோம் என்று ஏற்படுத் தியிருக்கிறார்கள் - அதில் அக்கறை காட்டுகிறார்கள்.

எல்லா துறைகளிலும் சிறப்பான முதலமைச்சர்

அன்னை தமிழில் அர்ச்சனை எல்லா இடங்களிலும் என்று சொல்லி, இதுவரை தமிழ் மொழிக்கு இல்லாத ஏற்றத்தை, கோவில்களில் உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் பிரச்சினை வெறும் மொழிப் பிரச்சினை மட்டுமல்ல - உரிமைப் பிரச்சினை. ஆகவே, அதிலேகூட எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கக் கூடிய அளவிற்கு, பண்பாட்டுத் துறையாக இருந்தாலும், பக்தித் துறையாக இருந்தாலும், பாதுகாப்பாக மக்கள் வாழவேண்டும் என்கிற துறையாக இருந்தாலும், எல்லா துறைகளிலும் சிறப்பான முத்திரை பதித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

நாட்டு மக்களைப்பற்றியே கவலைப்பட்டார்!

அதுமட்டுல்ல, கரோனா தொற்றை தடுக்கவேண்டும் என்பதற்காக அல்லும் பகலுமாக முதலமைச்சர் உழைத்த உழைப்பு - ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதி பற்றாக்குறைகளையெல்லாம் எதிர்கொண்டு, எல்லா இடங்களுக்கும் சென்று, கரோனா நோயாளிகளின் மருத்துவப் பிரிவுக்கே சென்று, அவர்களுக்கு நம்பிக் கையை ஏற்படுத்தி, தன்னைப்பற்றி கவலைப்படாமல், நாட்டு மக்களைப்பற்றியே கவலைப்பட்டு - எடுத்துக் காட்டாக செயல்பட்டார்.

சாதனை சரித்திர வீரர் -

தளபதி ஸ்டாலின் அவர்கள்

ஆட்சி அமைத்து நூறு நாள்கள் நிறைவடைவதற்கு முன்பாகவே, இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சர் என்று பெயர் பெற்ற சாதனை சரித்திர வீரர் - தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்தான். திராவிடம் வெல்லும் - திராவிடம் வென்றது! எல்லோ ருடைய நம்பிக்கையையும் நியாயப்படுத்தும் - பலமாகக் கட்டமைக்கும்.

திராவிடப் பாரம்பரிய முதலமைச்சர் எப்படி செயலாற்றுவார் என்பதற்கு இவர் எடுத்துக்காட்டு!

அரசு கஜானா காலியாக இருக்கும்பொழுது ஆட்சிப் பொறுப்பேற்று, துணிச்சலாக செயல்பட்டு, மக்களோடு மக்களாக இருந்து - சிறப்பாக செயல்பட்டு - அடக்க மாகவும், ஆழமாகவும் - அதிகாரம் என்பதையும், ஆட்சி சிம்மாசனம் என்பதையும் பெரிதாக நினைக் காமல், மக்களுடைய உணர்வைப்பற்றியே சிந்தித்து செயலாற்றிய - இணையற்ற தோழராக அவர்கள் தன்னை ஆக்கிக் கொண்டது - அதுதான் எடுத்துக் காட்டான முதலமைச்சர் என்பதற்கான நிலை.

திராவிடப் பாரம்பரியத்தைச் சேர்ந்தவன் நான் என்று சொன்னார் - அந்தத் திராவிடப் பாரம்பரிய முதலமைச்சர் எப்படி செயலாற்றுவார் என்பதற்கு இவர் எடுத்துக்காட்டு.

இதன்மூலமாக, எல்லோரிடத்தையும் அவர் தாண்டி நிற்கிறார்கள் - எல்லோரையும்விட உயர்ந்து நிற்கி றார்கள்.

நூறு நாள்கள் என்பது ஒரு தொடக்கம் -

ஓர் அறிமுகம்!

கலைஞருடைய செயல்திறன் உலகறிந்த ஒன்று. ‘‘தம்மின் தம்மக்கள் அறிவுடைமை'' என்பதைப்போல, அதையும் தாண்டி நிற்கக்கூடிய அளவிற்கு, சிறப்பான சாதனை செய்கின்றவருடைய ஆட்சி - நூறு நாள்கள் என்பது ஒரு தொடக்கம் - ஓர் அறிமுகம்.

இதற்குப் பின்னால்தான், ஏராளமான செயல்கள் சிறப்பாக நடைபெறவிருக்கின்றன. எனவே, நூறு நாள்கள் ஆட்சி தொடரட்டும் - அதேநேரத்தில், பல ஆண்டுகளாக இருக்கின்ற அநீதிகள் மாளட்டும் -

அதை செய்வதற்குரிய ஒரு போர் வீரராகவும், கடமையில் கண்ணும் கருத்துமாகவும் இருக்கின்ற அவருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!

மக்களின் வாழ்த்துகள்! உலகின் வாழ்த்துகள்!!

திராவிடம் வென்றது -

வரலாறு பதிவு செய்கின்றது!

எல்லாப் பகுதிகளில் உள்ள எல்லா மக்களும், கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, பொதுக் கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு, அவரைப் பாராட்டுவது, எங்களுக் கெல்லாம் பெருமிதமாக  இருக்கிறது.

திராவிடம் வெல்லும் என்று சொல்லும் - அந்த சொல் இப்போது உண்மை என்கிற அளவிற்கு, திராவிடம் வென்றது - வரலாறு பதிவு செய்கின்றது!

வாழ்க முதலமைச்சர் -

வளர்க அவரது ஆட்சியின் சாதனை!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேட்டியில் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக