வியாழன், 2 செப்டம்பர், 2021

அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் உரிமை கடந்து வந்த பாதை-7


இன இழிவை நீக்க இறுதிக்கட்ட முயற்சிகள்

தந்தை பெரியாரின் அறிவிப்பைத் தொடர்ந்து 28.05.1972 அன்றே சென்னையில் சமூக இழிவு ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டது. இம்மாநாட்டில் மீண்டும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் வாய்ப்பை ஏற்படுத்த கீழ்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோயில் பகிஷ்கார பிரச்சாரம்

நாம் அருகில் சென்று, நாமாய் பூசை செய்து வணங்குவதற்கு உரிமை இல்லாத இடமும் கடவுளு(சிலையு)ம் நம்மை சமுதாய பிறவி இழிவு செய்வதற்கென்றே உண்டாக்கப்பட்டிருப்பதால் கடவுள், மததன்மை எப்படி இருந்தாலும் நமது சமுதாய பிறவி இழிவு ஒழிக்கப்பட வேண்டும் என்பதை முன்னிட்டு அப்படிப்பட்ட கோயில் (இடங்) களையும் சிலை உருவ கடவுள்களையும் பகிஷ்கரித்து ஆகவேண்டும் என்பதோடு பகிஷ்கரிப்பு பிரச்சாரத்தையும் செய்தாக வேண்டும் என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது. இதற்காக தடுப்பு பிரச்சாரம் என்பதாக முக்கியமான கோயில்களுக்குச் சென்று அங்கு வழிபடவரும் மக்களிடம் கடவுள்  தன்மையையும் நாம் இழிவு படுத்தப்படும் தன்மையையும் சமாதான முறையில் விண்ணப்பித்துக் கூறி மக்களை இழிவுக்கும் அறியாமைக்கும் ஆளாகாமல் இருக்க முயற்சிக்க வேண்டும் என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.

இப் பகிஷ்கார கிளர்ச்சியினை உடனடியாகத் துவக்க தலைவர் தந்தைபெரியார் அவர்களுக்கு இம்மாநாடு முழு உரிமை கொடுக்கிறது.

மாநாடு முடிந்த நிலையில்

சென்னை மாவட்ட திராவிடர் கழகக் கமிட்டிக் கூட்டம்  10.06.1972 சனிக்கிழமை 7-30 மணி அளவில் சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. சென்னை மாவட்டத்திலுள்ள பல கிளைக் கழகங்களிலிருந்தும் ஏராளமான கழக தோழர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர். வந்திருந்தவர்களை சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தலைவர் திரு டி.எம்.சண்முகம் அவர்கள் வரவேற்றுப் பேசி,  நமது மாநில மாநாட்டின் தீர்மானங்களை விளக்கி பொதுச் செயலாளர் 'விடுதலை' ஆசிரியர் திரு கி. வீரமணி அவர்களைத் தலைமை தாங்குமாறு முன்மொழிய மயிலைத் தோழர் ப.ஜானகிராமன் அவர்கள் வழிமொழிந்தார்.  தலைவர் முன்னுரையில் அம்மாநாட்டில் தீர்மானங்களை விளக்கியதுடன் நமது தலைவர் தந்தை பெரியார் அவர்களது கட்டளைப்படி நமது பிறவி  இழிவை ஒழிக்க கோயில் பகிஷ்கார கிளர்ச்சி அமைதியான முறையில், கோயிலுக்குச் செல்ல வேண்டாமென மிகவும் பணிவுடன் விண்ணப்பித்துக் கொள்ளவேண்டும். நாம் மிகவும் கட்டுப்பாட்டுடன் எவ்வித வன்முறையோ கலவரமோ எதிரிகள் தூண்டிவிட்டாலும், ஏற்படாத வகையில் நாள் தோறும் நடத்தவேண்டிய அவசியத்தை விளக்கிக் கூறியபின். உதவித் தலைவர் திரு. பி.இ. பக்தவத்சலம், மற்றும் பல கிளைக்கழகத் தோழர்களும் கருத்துகள் கூறியபின் கீழ்க்காணும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

செயல் திட்டத் தீர்மானம் 1.

28.05.1971 அன்று சென்னையில் நடைபெற்ற நமது கழக மாநில மாநாடான சமூக இழிவு ஒழிப்பு மாநாட்டில் ஒருமனதாக  நிறைவேற்றப்பட்ட 1)அரசியல் சட்டமாற்றத் தீர்மானம் (2) தமிழ் நாட்டுக்கு முழுச் சுதந்திரம் கோரும் உரிமைத் தீர்மானம் (3) கோயில் பகிஷ்கார வேண்டுகோள் கிளர்ச்சித் தீர்மானம் (4) தீவிர மத எதிர்ப்புப் பிரச்சாரத் தீர்மானம் (5) நெற்றிக்குறியில் மதக்குறி இடவேண்டாம் என்று வேண்டும் தீர்மானம் ஆகியவைகளை இக்கூட்டம் வரவேற்பதுடன் அவைகளைச் செயலாக்குவதென உறுதியை மேற்கொள்ளுகிறது.

தீர்மானம் 2

(அ) நாம் அருகில் சென்று  நாமாகப் பூசை செய்யவும் வணங்குவதற்கும் உரிமை இல்லாத இடமும் கடவுளும் (சிலை) நம்மை சமுதாய பிறவி இழிவு செய்வதற்கென்றே உண்டாக்கப்பட்டிருப்பதால் கடவுள், மதத்தன்மை எப்படி இருந்தாலும், நமது சமுதாய பிறவி இழிவு ஒழிக்கப்படவேண்டும் என்பதை முன்னிட்டு, அப்படிப்பட்ட கோயில் (இடம்) களையும் சிலை உருவக் கடவுள்களையும் பகிஷ்கரித்து ஆகவேண்டும் என்பதோடு,  பகிஷ்கரிப்புப் பிரச்சாரத்தையும் செய்தாகவேண்டும் என்று நமது கழக மாநில மாநாடான சமூக இழிவு ஒழிப்பு மாநாட்டின் தீர்மானம் வலியறுத்தியதற்கு இணங்க சென்னை மயிலாப்பூர். கபாலிசுவரர் கோயில் முன்னால் சென்று அங்கு வழிபட வரும் மக்களிடம் கடவுள் தன்மையையும், நாம் இழிவு படுத்தப்படும் தன்மையையும் பற்றி சமாதான முறையில் விண்ணப்பிக்கக்கூறி. நம் மக்களை இழிவுக்கும் அறியாமைக்கும் ஆளாகாமல் இருக்க வேண்டிக்கொள்ளும் கோயில் பகிஷ்காரக் கிளர்ச்சியினை வரும் ஜூன் 18 வெள்ளிக்கிழமை மாலை 5-30 மணி முதல் தொடங்கி நடத்துவதென நமது தலைவர் தந்தை பெரியார் அவர்களது கட்டளைப்படி தினசரி நடத்து வதென இக்கமிட்டி ஒருமனதாக முடிவு செய்கிறது.

கண்காணிப்புக் குழு

நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கண்காணிக் கவும் நமது கழகப் பொதுச் செயலாளர் திரு கி.வீரமணி சென்னை மாவட்ட தி.க.தலைவர் திரு.டி.எம் சண்முகம் ஆகியோருக்கு இக்கூட்டம் உரிமை அளிக்கிறது. என்று தீர்மானிக்கப்படுகிறது.

ஒத்திவைப்பு

கிளர்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில் சென்னை கபாலீஸ்வரர் கோயில் முன்பாக நடைபெறவிருந்த அறப்போருக்கு தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்தது அதை ஒட்டி தந்தை பெரியார் சில நாட்களுக்கு கிளர்ச்சியை ஒத்திவைப்பதாக 15.06.1972 அறிவிப்பு தந்தார்.

சென்னையில் நடைபெற்ற நமது மாநில மாநாட்டின் கோயில் பகிஷ்கார வேண்டுகோள் கிளர்ச்சித் தீர்மானத் தின்படி சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தினர் நாளை 18.06.1972 அன்று முதல் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் முன்னால் தினசரி மாலை 5-30 மணி முதல் 7 மணி வரை கோயிலுக்கு வரும் நம் மக்களிடம் சமாதான முறையில் விண்ணப்பித்துக்கூறி, கோயில்களை பகிஷ்கரிக்க வேண்டிக்கொள்ளும் கிளர்ச்சிக்கு - அரசு தடை விதித்திருப்பதை இன்று அறிந்தேன்.

ஜாதி இழிவு ஒழிக்கப்பட வேண்டுமென்ற நமது முயற்சிக்கு எதிராக ஜாதி இருந்துதான் ஆக வேண்டும், ஜாதிப்படிதான் நடக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் மூலம் பார்ப்பனர்கள் தீர்ப்பு பெற்று விட்ட படியால். அந்தத் தீர்ப்பை நாம் மதிக்கும் வரை ஜாதி இருந்து தான் தீரும். ஆகையால் எதாவது செய்து அந்தத் தீர்ப்பை செல்லுபடியற்றதாக ஆக்கவேண்டும் என்பது என்னுடைய முடிவான கருத்து அதற்காக இப்போது தொடங்கி இருக்கும் கிளர்ச்சி என்பது எந்தவிதமான பலாத்காரமும் - இல்லாத வேண்டுகோள் கிளர்ச்சியாகும். - நமது அரசாங்கத்தார் இதைக்கூட - நடத்தக்கூடாதென்று தடை விதிப்பார்கள். ஆனதினால் இனி தன்மானத்தோடு வாழவாய்ப்பில்லை என்று தான் தெரிகிறது. இந்தத் தடையை மதிப்பதும் - தடைக்கு ஆளாவதும் மானக்கேடு என்று தான் கருதுகிறேன் என்றாலும் நம்மால் ஆனவரை இந்த ஆட்சிக்கு எந்த விதமான மனச் சங்கடமும் அதிருப்தியும் ஏற்படாமல் நடந்துகொள்வது என்று நான் கருதியிருப்பதாலும் இந்த அரசாங்கம் இந்த விஷயத்தில் நீதியாய் நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதினாலும் கிளர்ச்சியை ஒரு சிறிது நாட்களுக்கு ஒத்திவைக்கும்படி எனது தோழர்களை வேண்டிக் கொள்ளுகிறேன்

தனிப் பெரும் சரித்திரச் சான்றுகள்

தொடர்ந்து இதற்கான ஒரு முடிவை ஏற்படுத்த 1973-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சமுதாய இன இழிவு ஒழிப்பு மாநாடு என்ற பெயரில் சென்னையில் ஒரு மாநாட்டை கூட்டினார் தந்தை பெரியார். இம்மாநாடு அவர் வாழ்நாளில் நடத்திய பங்கேற்ற இறுதி மாநாடாக மாறும் என்று யாரும் எதிர்பார்க்காத நிலையில் இம்மாநாடு மிக எழுச்சியுடன் நடைபெற்றது. அது ஒரு போராட்ட அறிவிப்பு மாநாடாக நடைபெற்றது.

வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தமிழர் சமுதாய இன இழிவு ஒழிப்பு மாநாடு 08.12.1973 காலை 10 மணி அளவில் சென்னையில் பெரியார் திடலில் ஒரு புதிய எழுச்சிப் பேரார்வத்திற்கிடையே தொடங்கியது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும் பெரும் திரளாக தோழர்களும், தாய்மார்களும் தனித்தனி பேருந்துகளில் வந்து மாநாட்டில் கலந்து கொண்டு புதிய வரலாறு படைத்தனர்.

எதிர்ப்பு பிசுபிசுத்தது

மாநாடு தொடங்குவதற்கு முன்பு இந்து சமயப் பேரவையினர் என்ற பெயரில் நம் இன எதிரிகளான பார்ப்பனர்கள் சிலர் மாநாட்டை எதிர்ப்பதாகக் கூறிக் கொண்டு பெரியார் திடல் அருகில் பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் வந்து கறுப்புக் கொடியுடன் கூச்சல் போட்டனர். இதை அறிந்த கருஞ்சட்டைப் படைவீரர்கள் துள்ளி எழுந்தனர். உணர்ச்சி வெள்ளம் பீறிட்டுக் கிளம்ப ஆரம்பித்தது. ஒவ்வொரு கருஞ்சட்டை வீரரும் ஆயிரம் வீரர்களின் பலம் பெற்றவர்களாக பார்ப்பனர்கள் நின்று கொண்டிருந்த இடத்தை நோக்கிப் பாய்ந்து கொண்டிருந்தனர். காவல் துறையே செய்வதறியாது திகைக்கும் நிலை ஏற்படவே நமது பொதுச் செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், நமது தோழர்களை அமைதிப்படுத்தும் முயற்சியில் தோழர்களை மேலும் செல்லவிடாமல் வழிமறித்தவாறு ஒரு காரின் மீது நின்று அமைதி காக்கும்படி வேண்டிக் கொண்டார். என்றாலும் தோழர்களின் எழுச்சி தணியாததால் கடவுள் மறுப்பு முழக்கங்களை முழங்கச் செய்து அமைதிப்படுத்தினார். கறுப்புக் கொடி காட்டியவர்களோ மிரண்டு ஓடினர்.

இம் மாநாட்டில், தந்தை பெரியார் பேசுகையில், சட்டத்தைக் காட்டி அச்சுறுத்தி எங்களைப் பணிய வைத்து விடலாம் என்று எண்ண வேண்டாம் என்று டில்லி அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்கள்.

09.12.1973 - நிகழ்ச்சி

தமிழர் சமுதாய இன இழிவு ஒழிப்பு மாநாட்டின் இரண்டாம் நாளான ஞாயிறு அன்று கழகத் தோழர்கள் மட்டுமன்றி தமிழகமே, ஏன் இந்தியத் துணைக் கண்டமே நமது தந்தை அறிவிக்கப்போகும் போராட்டத் திட்டத்தை எதிர் நோக்கியவாறு மாநாடு தொடங்க, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களை பொதுச் செயலாளர் கி.வீரமணி முன்மொழிந்தார். ஒன்றன்பின் ஒன்றாக முக்கிய தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு ஒவ்வொரு முறையும் ஏகோபித்த ஆதரவு முழக்கத்துடனும், கரவொலியுடனும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களை செயல்படுத்தும் பொறுப்பு தந்தை பெரியாரிடம் விடப்பட்டது.

மாநாட்டின் நோக்கம்

பின்னர் தந்தை பெரியார் தீர்மானங்களை விளக்கிப் பேசுகையில்,

இந்த மாநாடு கூட்டப்பட்டதன் நோக்கம் போராட்டம் நடத்த அல்ல என்றும், நாம் நமது இழிவை ஒழித்துக் கொள்ள வேண்டும் என்ற நியாயமான, இயற்கையான மனித உணர்ச்சிதான் என்றும், இந்த உணர்ச்சிக்கு மதிப்பளிக்காவிட்டால் நாம் போராடுவதைத் தவிர வேறு வழி இல்லை என்றும் மாநாட்டுத் தீர்மானங்கள் பிரதமருக்கும், மற்ற சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு குடியரசு நாளாகிய ஜனவரி 26ஆம் தேதிக்குள் அவர்கள் தக்க பதில் அளிக்காவிட்டால் நாம் இழிவு ஒழிப்புக் கிளர்ச்சியைத் துவக்கலாம் என்றும் அறிவித்தார்கள்.

தந்தையின் மரண சாசனம்

மறுநாள் அப்புறம் என்ன? என்ற தலைப்பில் விடுதலையில் தலையங்கம் எழுதி இழிவு ஒழிப்பு மாநாட் டின் சிறப்பைப் பற்றி விளக்கிவிட்டு 26.01.1974க்குள் (டில்லிக்கு கெடு கொடுத்த நாள்) நமது கிளர்ச்சியின் நோக்கம் பற்றி ஆங்காங்கே தோழர்கள் பொதுமக்களுக்கு விளக்க வேண்டியதன் அவசியம் குறித்து தந்தை பெரியார் அறிவுறுத்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக