திங்கள், 18 மார்ச், 2019

தந்தை பெரியார் தோற்றுவித்த திராவிட இயக்கத்தை கட்டுப்பாடோடு முன்னெடுத்துச் சென்றவர் - அன்னை மணியம்மையார்

விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் புகழாரம்




அன்னை மணியம்மையாரின் நூற்றாண்டு விழாவை  மார்ச் 10 ஆம் தேதி முதல் நாடு முழுவதிலும் கொண்டாட ஏற்பாடு செய்து தொடக்க விழாவை வேலூரில் நடத்த முடிவு செய்திருப்பதற்கு திராவிடர் கழகத் தலைவர் வீரமணிக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார். நாட்டின் பகுத்தறிவு இயக்கத்தின் முதல் பெண் தலைவராக மணியம்மையார் ஆற்றிய பங்கு ஈடு இணையற்றது, வரலாற்று சிறப்பு மிக்கது என்று அவர் கூறியுள்ளார். பெரியாரின் மறைவுக்குப் பிறகு திராவிடர் கழகத் தலைவராக அவர் பல்வேறு பணிகளை  மேற்கொண்டார். ஆதரவற்றோர் இல்லம் ஒன்றை துவக்கியது, பெரியார் நூலகம் அமைத்தது, பெண் கல்வி முன்னேற்றத்துக்காக அறக்கட்டளையைத் துவக்கியது ஆகியவை இவற்றில் அடங்கும். பகுத்தறிவு மற்றும் சமூக நீதி கோட்பாடுகளின் மதிப்பீட்டைப் பற்றி மக்களிடையே பெரும் அளவுக்குக் கொண்டு செல்வதற்கான விழிப்புணர்வுப் பணிகளை அவர் தனது காலத்தில் மேற்கொண்டார் என்று  அன்னை மணியம்மைர் நூற்றாண்டு மாநாட்டை ஒட்டி தனது வாழ்த்துச் செய்தியில் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.




மார்ச் 10 ஆம் தேதியன்று வேலூரில் தொடங்கப்பட இருக்கும் அன்னை மணியம்மையார் அவர்களின் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் மிகச் சிறப்பாகக் கொண்டாட திராவிடர் கழகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வரும் நிலையில்,  தந்தை பெரியார் அவர்களின் மறைவுக்குப் பிறகு திராவிடம் இயக்கத்தை  கட்டிக் காத்து, முன்னெடுத்துச் செல்வதில் அன்னை அவர்கள் ஆற்றிய அளப்பரிய பங்கினை அனைத்துக் கட்சித் தலைவர்களும் நினைவு கூர்ந்தனர்.

1973 ஆம் ஆண்டு தந்தை பெரியார் அவர்கள் மறைந்தபோது,  அவரால் தோற்றுவிக்கப்பட்டு, உர மூட்டப்பட்ட பகுத்தறிவு இயக்கம் அதற்குப் பிறகும் தொடர்ந்து செயல்பட இயலாமல் போய்விடுமோ என்று பலராலும் கருதப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளராகவும், மாநிலத் தலைவராகவும் பணியாற்றிய தந்தை பெரியார் அவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரசை விட்டு விலகி 1925 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தார். அதன் பிறகு மேனாள் நீதிக் கட்சியின் தலைவராக தேர்ந் தெடுக்கப்பட்ட அவர், தனது சுயமரியாதை இயக்கத் தையும், நீதிக் கட்சியையும் ஒன்றாக இணைத்து 'திராவிடர் கழகம்' என்ற அரசியல் சாரா மக்கள் சேவை அமைப்பை உருவாக்கினார்.

நீதிக் கட்சிக்குப் பிறகு, பகுத்தறிவுக் கொள்கைகளை மட்டுமல்லாமல், சமூக நீதிக் கோட்பாட்டையும்,   தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் கோட்பாட்டு வாரிசு என்ற நிலையிலேயே திராவிடர் கழகத்தின் அனைத்து  செயல்பாடுகளும் விளங்கின. தந்தை பெரியார் அவர்களின் மறைவு திராவிடர் கழகத்திற்கு ஒரு சோதனைக் காலமாக விளங்கியது. தன்னை விட வயதில் இளையவரான மணியம்மையாரை சில ஆண்டுகளுக்கு முன்னர் பெரியார் திருமணம் செய்து கொண்டார்.

அப்போது இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த  தனது நீண்ட கால நண்பரான  ராஜாஜி 1949 ஆம் ஆண்டு பெரியாருக்கு ஒரு கடிதம் எழுதியதைப் பற்றி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நினைவு கூர்ந்தார். மணியம்மையுடனான தனது திருமணத்திற்கு சாட்சியாக இருக்கும்படி பெரியார் ராஜாஜி அவர்களைக் கேட்டுக் கொண் டிருந்தார். அவ்வாறு செய்வதற்கு தான் வகிக்கும் அரசியல் பதவி இடம் தரவில்லை என்பதால், பெரியார் அவர்களின் கோரிக்கையை ராஜாஜி ஏற்காத நிலை.

அப்போது மணியம்மை  பெரியாரின் எதிர் பார்ப்புகளுக்கு ஏற்ற அளவில் தன்னை உயர்த்திக் கொள்ள அவரால் முடியுமா என்ற தனது அச்சத்தை, சந்தேகத்தை ராஜாஜி வெளிப்படுத்தியதுடன்,  பெரியாருக்கு எழுதிய அந் தரங்கக் கடிதம் ஒன்றில்,  தனது திருமண உத்தேசத்தை மாற்றிக் கொள்ளுமாறு அவர் ஆலோசனை கூறினார். ஆனால், மணியம்மையுடனான தனது திருமணத்தை திட்டமிட்டிருந்தபடி  பெரியார் பதிவு செய்தார். மணியம்மையுடனான தனது திருமணம் ஒரு திருமண வாழ்க்கை நடத்துவதற்கானது அல்ல என்றும்,  இயக்கத்தின் எதிர்காலத்துக்கான ஓர் ஏற்பாடு என்றும் தந்தை பெரியார் அறிவித்தார்.

உண்மையில் இக்கடிதங்களை பல ஆண்டுகள் கழித்து, மூன்று தலைவர்களும் மறைந்த பிறகுதான் வீரமணி அவர்கள், அந்நிகழ்ச்சியை ஒரு வரலாற்றுச் சான்று என்ற முறையில், உலகிற்கு வெளிப்படுத்தினார். "ஆனால் தன் மீது தந்தை பெரியார் வைத்த நம்பிக்கையை அன்னை மணியம்மையார்  பொய்த்துப் போகவிடாமல் காப்பாற்றினார். அந்த கால கட்டத்தில் நிலவிய சூழ்நிலைக்கு ஏற்ப தன்னைத் தானே அன்னை மணியம்மையார் உயர்த்திக் கொண்டு, தந்தை பெரியாரின் மறைவுக்குப் பிறகு 1973 முதல் 1978 இல் தான் இறந்து போகும் வரை, திராவிடர் கழகத்துக்குத் தலைமை தாங்கி வழிநடத்திச் செல்வதற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்" என்று வீரமணி சுட்டிக் காட்டினார்.

மிகமிக முக்கியமான சமூக, அரசியல், கோட்பாட்டுப் பணிகளை மணியம்மையார் மேற்கொண்ட முக்கியமான ஒரு காலகட்டமது. பிறப்பின் அடிப்படையில் மக்களி டையே ஜாதிப் பிரிவினையை ஏற்படுத்தும் எந்த விதமான வேற்றுமை பாராட்டப்படுவதற்கு எதிராக பெரியார் மேற்கொண்ட போராட்டத்தை திராவிடர் கழகத் தலைவராக,  மணியம்மையார் தொடர்ந்து மேற் கொண்டார். இராவணனின் உருவப் பொம்மை எரிக்கப் படுவது  தென்னிந்திய மக்களின் உணர்வுகளைப் புண்படுத்து வதும்  அவமானம் மிகுந்த செயல் என்பதால்,  நாட்டின் பிரதமும், குடியரசுத் தலைவரும் பங்கெடுத்துக் கொள் ளும்  விழாவாக வடஇந்தியாவில் நடைபெறும் ராம் லீலா என்ற கொண்டாட்டத்தைத் தடை செய்யும்படி அப்போது பிரதமராக இருந்த இந்தியா காந்திக்கு மணியம்மையார் கடிதம் எழுதினார். அதற்கு மத்திய அரசு இணங்காத நிலையில், ராமன் உருவப் பொம்மையை எரிக்கும் இராவண லீலா என்ற ஒரு எதிர் போராட்டத்தை ஏற்பாடு செய்து மணியம்மையார் டில்லியில் நடத்திக் காட்டியதை வீரமணி நினைவு கூர்ந்தார். நாட்டில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட போது மணியம்மையார் ஆற்றிய பங்கு குறிப்பிடத் தக்கதாகும். நெருக்கடி நிலையின்போது ஆசிரியர் வீரமணி உள்ளிட்ட திராவிடர் கழகத் தொண்டர்கள் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர்.   பல பள்ளிகளையும் கல்லூரி களையும் உருவாக்குவது, குறிப்பாக பெண் கல்வி மேம்பாடு உள்ளிட்ட  சமூக சீர்திருத்தத் துறையிலான  பல்வேறுபட்ட பணிகளை, தான் திராவிடர் கழகத்த வர்கள் தலைவராக இருந்தபோது மணியம்மையார் மேற்கொண்டார். தான் இறப்பதற்கு முன், தனது அனைத்து சொத்துகளையும் அறக்கட்டளைக்கு வழங்கி விட்டார்.

இவ்வாறான தந்தை பெரியார் வழியில் தான் ஆற்றிய தனது பணிகள் மூலமாக, திராவிடர் கழக தொண்டர்களின் உணர்வுகளை போற்றிப் பாதுகாத்து வைத்திருந்ததுடன், திராவிடர் கழக இயக்கத் தொண்டர்களின் ஆற்றலைத் தொகுத்து, வழி நடத்தி, மேம்படுத்தவும் செய்தார் அவர். பெரியாரின் மறைவுக்குப் பிறகு திராவிட இயக்கத்தின் நலன்களைப் பாதுகாக்க மணியம்மையார் மேற்கொண்ட பணிகளால் கவரப்பட்ட மேனாள் முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரன், 1978-79 ஆண்டில் தந்தை பெரியார் அவர்களின் நூற்றாண்டு விழாவை அரசின் சார்பாகக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை மேற் கொண்ட துடன், தந்தை பெரியார் அறிமுகப்படுத்திய தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை பின்பற்றவும் ஆணையிட்டார்.

அந்த கால கட்டத்தில் திராவிடர் கழகம் தளர்ந்து போகாமல் அதனைக் கட்டிக் காத்து மணியம்மையார் முன்னெடுத்துச் சென்றார் என்பதை இவை எல்லாம் மெய்ப்பிக்கின்றன.

நன்றி: டெக்கான் கிரானிகிள் 10-03-2019

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

- விடுதலை நாளேடு, 12.3.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக