செவ்வாய், 26 மார்ச், 2019

அண்ணாவின் மறைவு தமிழ்நாட்டுக்கு மாபெரும் நஷ்டம் - பெரியார்



அண்ணாவை அறிஞர் அண்ணா என்று சொல்லக் காரணம், அவரது அறிவின் திறம்தான். அவரது ஆட்சிக்காலத்தில் எந்தத் தமிழனின் உரிமையையும் அவர் புறக்கணிக்கவில்லை. அதனாலேயே தமிழர் சமுதாயத்தினருடைய அன்பை இதுவரை யாரும் பெற்றிராத அளவுக்கு அண்ணா பெற்றிருக்கிறார் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமாக இருக்கிறது. நாட்டில் எல்லா கட்சியாருடனும் எல்லா மக்களுடனும் மிக்க அன்புக்கு உரியவராகவும் நேசமாகவும் இருந்துவந்தார்.

அண்ணாவின் மறைவு தமிழ்நாட்டுக்கு மாபெரும் நஷ்டம் என்றே சொல்ல வேண்டும். தமிழ்நாடும் தமிழர் சமுதாயமும் அண்ணா ஆட்சியில் எவ்வளவோ அதிசயமான முன்னேற்றங்கள் அடையக் காத்திருந்தன. அவரும் பகுத்தறிவுக் கொள்கைகளைப் பரப்பி, அதை உருவாக்குவதே தனது கடமை என்றே கருதியிருந்தார். அதற்கேற்ப, அவர் செய்த அரும் பெரும் காரியங்களில் முக்கியமானது, சுயமரியாதைத் திருமண செல்லுபடிச் சட்டம் ஆகும். இதில் கடவுளுக்கோ மதத்துக்கோ சாத்திர சம்பிரதாயத்துக்கோ இடமில்லை. மற்றும் பொதுப் பணியிடங்களிலுள்ள கடவுள் படங்களை அப்புறப்படுத்த வேண்டியது என்ற கட்டளை மிக மிகத் துணிச்சலான சீர்திருத்தமாகும்.

யானறிந்தவரையில், சரித்திரம் கண்டவரை அண்ணா முடிவுக்குப் பொதுமக்கள் காட்டிய துக்கத்தில் நான்கில், எட்டில் ஒரு பங்குகூட வேறு எவருக்கும் காட்டியதாக நிகழ்ச்சி கிடையாது. அந்த அளவுக்கு அண்ணா தமிழ் மக்கள் உள்ளத்தில் இடம்பெற்றுவிட்டார்!

(அண்ணா மறைவின்போது பெரியார் எழுதிய குறிப்பிலிருந்து ஒரு பகுதி.)


நன்றி: 'இந்து தமிழ் திசை', 21-3-2019

-  விடுதலை நாளேடு, 21.3.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக