வியாழன், 21 மார்ச், 2019

அரசியல் மணி என்னும் அணையா விளக்கு!

சுகுணா திவாகர்


 Follow

மிழக அரசியல் வரலாற்றை எழுதும் யாராலும் தவிர்க்க முடியாத பெயர் மணியம்மை. தி.மு.க என்னும் அரசியல் கட்சி உருவாகக் காரணமாக இருந்தவர், தமிழகத்தில் முதன்முதலாக ஓர் இயக்கத்துக்குத் தலைமை தாங்கிய பெண், உலகளவில் ஒரு நாத்திக இயக்கத்துக்குத் தலைமை தாங்கிய பெண் என்னும் சிறப்புகள் மணியம்மைக்கு உண்டு. இத்தகைய வரலாற்றுச்சிறப்புமிக்க மணியம்மையின் நூற்றாண்டுவிழா இந்த ஆண்டு தொடங்குகிறது.

1920, மார்ச் 10-ல் வேலூரில் கனகசபை - பத்மாவதி தம்பதிக்குப் பிறந்தவர் காந்திமதி. கனகசபையும் பத்மாவதியும் பெரியாரின் கொள்கைகளில் பற்றுகொண்டவர்கள். கனகசபையின் நண்பர், தனித்தமிழ் ஆர்வலர் கு.மு.அண்ணல்தங்கோ காந்திமதிக்கு ‘அரசியல் மணி’ என்னும் பெயரைச் சூட்டினார். 

கே.அரசியல்மணி என்பது கே.ஏ.மணி என்றாகி, ‘மணியம்மையார்’ என்று காலத்தில் நிலைத்தது. 1943-ல் அரசியல்மணியின் தந்தை இறந்தார். ஒருமாதத்திலேயே இயக்கப்பணிகளில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொண்டார் மணியம்மை.

பேச்சாளராக, கட்டுரையாளராக, போராட்டங்களில் பங்கெடுப்பவராக மணியம்மையின் இயக்க வாழ்க்கை அமைந்தது. திராவிடர் கழகக் கொடியின் தத்துவம், பெண்ணுரிமை, அண்ணல் அம்பேத்கர் என்று பலவிஷயங்கள் குறித்துப் பேசியிருக்கிறார் மணியம்மை. சமஸ்தானங்கள் தொடங்கி சித்தர் பாடல்கள் வரையிலான பல விஷயங்கள் குறித்துக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ‘கந்தபுராணமும் இராமாயணமும் ஒன்றே’ என்னும் அவரது கட்டுரையின் முதல் பாகம் 1944-லிலும் இரண்டாம் பாகம் 1947-லிலும் ‘குடியரசு’ இதழில் வெளியாகி, பிறகு சிறுவெளியீடாகவும் வெளியானது. கந்தபுராணம், இராமாயணம் என்னும் இரு புராணங்களுக்கு இடையிலான ஒற்றுமைகளைப் பட்டியலிட்டு, கந்தபுராணத்தைப் பார்த்து எழுதப்பட்டதே கம்பராமாயணம் என்ற கருத்தை முன்வைத்தார் மணியம்மை. 1946-ல் ‘விடுதலை’ இதழின் அச்சிடுபவர் மற்றும் வெளியிடுபவராக மணியம்மை, பெரியாரால் நியமிக்கப்பட்டார். ‘விடுதலை’ இதழில் வெளியான தலையங்கம் மற்றும் கட்டுரைகளுக்காகப் பலமுறை நீதிமன்ற நடவடிக்கைகளுக்கும் உள்ளானார்.



1948-ல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தபோது கும்பகோணத்தில் கைதானார். ‘உங்கள் மதம் என்ன?’ என்ற நீதிபதியின் கேள்விக்கு ‘`எனக்கு மதம் கிடையாது” என்றும் “உங்கள் சாதி என்ன?” என்ற கேள்விக்கு “திராவிடச் சாதி” என்றும் பதிலளித்து, சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். பிராமணாள் கபேவுக்கு எதிரான போராட்டத்திலும் கைதானார். இப்படித் தொடர்ச்சியாக இயங்கிவந்த மணியம்மையாரின் முக்கியமான பணிகள் பெரியார் உடல்நலத்தைப் பேணுவதும் அவர் பேச்சுகளைக் குறிப்பெடுத்து ‘விடுதலை’யில் வெளியிடுவதும். பெரியாரின் பெரும்பாலான புத்தகங்கள் அவர் மேடைப்பேச்சுகளைத் தொகுத்து வெளியிடப்பட்டவையே. அந்தவகையில் மணியம்மையாரின் இந்தப் பணி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

பெரியாரைப் பொறுத்தவரை சாதி, மதம், கடவுள், மொழிப்பற்று, நாட்டுப்பற்று என்று எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் வாழ்ந்ததைப் போலவே, உணவுக்கட்டுப்பாடும் இல்லாமல் வாழ்ந்தார். வாழ்நாளின் இறுதிவரை மாமிச உணவை அவர் கைவிடவில்லை. தொண்டர்கள் கொடுக்கும் உணவை ஆசையாகச் சாப்பிட்டுவிட்டு, பிறகு அவதிப்படுவார். அவர் மனம் இளைஞனுக்குரிய வேகத்துடனும் சுதந்திர உணர்வுடனும் இருந்ததே தவிர, அவரது உடல், மூப்பையும் இயலாமையையும் நினைவுபடுத்திக்கொண்டேயிருந்தது. அப்படிப்பட்ட பெரியாரைக் கண்டிப்புடனும் கரிசனத்துடனும் பேணி வந்தார் மணியம்மை.

பெரியாரின் பழைய காங்கிரஸ் நண்பர் கோவை அய்யாமுத்து ஒருமுறை ரயிலில் கண்டு அவருக்கு பிரியாணி, மட்டன் சாப்ஸ், ஆம்லேட் எல்லாம் வாங்கித்தந்துவிடுகிறார். பிறகு அதை அறிந்த மணியம்மை பெரியாரைக் கண்டிக்கிறார். இரவு ரயில் பயணத்தில் பெரியாரும் மணியம்மையும் வெவ்வேறு ரயில் பெட்டிகளில் பயணித்தாலும் ஒவ்வொரு ஸ்டேஷனிலும் ரயில் நிற்கும்போதெல்லாம் ‘பெரியார் எந்தப் பிரச்னையுமின்றித் தூங்கிக்கொண்டிருக்கிறாரா?’ என்பதை மணியம்மை வந்து வந்து பார்த்ததைக் கோவை அய்யாமுத்து, தன் ‘நான் கண்ட பெரியார்’ நூலில் பதிவுசெய்கிறார்.

பெரியாரைப் பொறுத்தவரை, அவருடைய பணிகள், அவரே சொன்னதைப்போல ‘செங்குத்தான மலையில் தலைகீழாக ஏறுவதைப்போன்றது.’ பொதுமக்கள் ஆதரவு இருக்காது; பொதுப்புத்திக்கு எதிரான கருத்துகளைச் சொல்லவேண்டியிருக்கும்; அரசு நெருக்கடி இருக்கும்; அடிப்படைக் கொள்கைகளுக்காக நிலைப்பாடுகளை மாற்றி, பொதுவெளியில் விமர்சனத்துக்குள்ளாக நேரிடும். இவற்றையெல்லாம் புரிந்துவைத்திருந்த பெரியார், தன் காலத்துக்குப் பின், தன் சாதி ஒழிப்பு, சுயமரியாதை, பகுத்தறிவுப்பணிகள் தொடர வலிமையான பொருளியல் அடித்தளம் அவசியம் என்று கருதினார். பிறப்பிலேயே பணக்காரராக இருந்தாலும் மாலை அணிவிக்க, புகைப்படம் எடுக்க பொதுமக்களிடம் பணம் வசூலித்து, சிறுகச் சிறுகச் செல்வம் சேர்த்தார். தனக்குப்பிறகு இயக்கப்பணிகளுக்காகச் சேர்த்த சொத்தைக் காப்பாற்றுவதற்கு நம்பிக்கையான ஒருவர் வேண்டும் என்று நினைத்தார்.

அந்தக்காலகட்டத்தில் பெண்குழந்தைகளுக்குச் சொத்துரிமை கிடையாது என்பதால் மணியம்மையைத் தத்து எடுத்து சொத்துகளுக்கு வாரிசு ஆக்க முடியாது. எனவே சட்ட நிர்பந்தத்தின் அடிப்படையில் பெரியார் மணியம்மையைத் திருமணம் செய்துகொண்டார். ‘இது சட்ட ஏற்பாடுதானே தவிர, வழக்கமான நடைமுறையில் உள்ள பொருளின்படியான திருமணம் அல்ல. மணியம்மை வாழ்நாள் அடிமையும் அல்ல’ என்றார் பெரியார். ஆனால் ‘இது பொருந்தாத் திருமணம்’ என்று திராவிடர் கழகத்திலேயே எதிர்ப்புக்குரல்கள் எழுந்தன. ஏற்கெனவே கறுப்புச்சட்டை அணிவது, சுதந்திர நாள் துக்க நாளா, இன்பநாளா என்னும் முரண்பாடு, தேர்தல் அரசியலில் ஆர்வம் ஆகியவற்றால் பெரியாருடன் முரண்பட்ட அண்ணா, மணியம்மை திருமணத்தை முன்னிட்டு திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறி தி.மு.க-வை உருவாக்கினார். உண்மையில் பெரியார் திருமணம் செய்யாமல் இருந்திருந்தால் மணியம்மை திருமணம் செய்திருப்பாரா என்பதே கேள்விக்குறிதான். 18 வயதுக்குள்ளாகவே பெண்களுக்குத் திருமணம் நடக்கும் அக்காலகட்டத்தில் 30 வயது வரை திருமணம் செய்யாமல் இயக்கப்பணிகளில் ஈடுபட்டுவந்தார் மணியம்மை. பெரியார், மணியம்மையைத் திருமணம் செய்தது சரியா, தவறா என்பதைவிட, பெரியார் மணியம்மைமீது அளவுகடந்த நம்பிக்கை வைத்திருந்தார் என்பது உண்மை.



தலைவரின் மனைவி என்பதற்காக அவருக்குத் தனிச்சலுகைகள் ஏதும் தரப்படவில்லை. பெரியார் மேடையில் பேசிக்கொண்டிருப்பார். மணியம்மை மேடைக்கு எதிரில் தரையில் கோணிப்பை விரித்து, புத்தகங்கள் விற்றுக்கொண்டிருப்பார். ‘பெரியாருக்கு மாலைகள் குவியல் குவியலாய் வரும். ஒரு மாலையையும் அவர் மணியம்மைக்கு அணிவிக்கச் சொல்லவுமில்லை. மணியம்மையும் அதை எதிர்பார்த்ததில்லை. ஏதுமற்ற வேலைக்காரிபோல் சுவடி விற்றுக்கொண்டிருந்தார்’ என்று உணர்வுபூர்வமாகப் பதிவுசெய்கிறார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.

1957-ல் பெரியார் அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை அறிவித்தார். ஆயிரக்கணக்கான தோழர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். பெரியாரும் சிறையில்.  மணல்மேடு வெள்ளைச்சாமி, பட்டுக்கோட்டை ராமசாமி  என்னும் இரு தோழர்கள் சிறையிலேயே மரணமடைந்து அங்கேயே புதைக்கப்பட்டனர். வெளியிலிருந்த மணியம்மை அப்போதைய முதல்வர் காமராசர், உள்துறை அமைச்சர் பக்தவச்சலத்திடம் பேசி புதைக்கப்பட்ட சடலங்களைத் தோண்டியெடுத்து, ஊர்வலமாகக் கொண்டுசென்று அந்தப் போராளிகளின் தியாகத்துக்கு உரிய மரியாதை செய்தார். 1967-ல் பம்பாயில் சிவசேனாவால் தமிழர்கள் தாக்கப்பட்டபோது, பெரியார் சிவசேனை எதிர்ப்புக்குழுவை உருவாக்கினார். அதில் மணியம்மையும் ஓர் உறுப்பினர்.

வரலாறு மாறியது. 1967-ல் ஆட்சியைப் பிடித்தபிறகு தி.மு.க-வுக்கும் பெரியாருக்குமிடையில் நெருக்கம் ஏற்பட்டது. எந்த அண்ணா மணியம்மை திருமணத்தை விமர்சித்தாரோ, அதே அண்ணாவே, “அய்யாவை முப்பது ஆண்டுகள் பேணிப் பராமரித்துக் காப்பாற்றியவர் மணியம்மை” என்று புகழாரம் சூட்டினார். அண்ணாவின் தளபதியான கருணாநிதிக்கு சென்னையில் சிலைவைத்தவரும் மணியம்மைதான். கருணாநிதி முதல்வரானபோது ஈரோட்டில் இருந்த பெரியாரின் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற விரும்பினார். அரசு எடுத்துக்கொள்ள அந்த இல்லத்தைக் கொடுத்த மணியம்மை, அதற்கு ‘தந்தை பெரியார் - அண்ணா நினைவகம்’ என்றே பெயர் சூட்டினார். அந்த இல்லத்தில்தான் அண்ணா ‘விடுதலை’யின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றினார்.

1973-ல் பெரியார் மறைவுக்குப் பின் திராவிடர் கழகத்தின் தலைவரான மணியம்மைதான், தமிழகத்தின் முதல் பெண் தலைமை என்று சொல்லலாம். ‘ராமாயணம் ஆரிய - திராவிடப் போராட்டம்’ என்பது திராவிடர் இயக்கத்தின் கருத்து. ‘`வடநாட்டில் ராமலீலா நடத்தி நம்மை இழிவுபடுத்துகிறார்கள். நாம் ராவணலீலா நடத்தவேண்டும்” என்று 50களின் இறுதியிலேயே பேசினார். 1974-ல் ராவணலீலா நடத்தி பெரியாரின் எண்ணத்தை நிறைவேற்றினார் மணியம்மை. 

இந்திராகாந்தி அரசு நெருக்கடிநிலையைக் கொண்டுவந்தபோது இந்தியா முழுவதும் சமூக, ஜனநாயக இயக்கங்கள் நெருக்கடிக்கு உள்ளானதைப்போல திராவிடர் கழகமும் பல சோதனைகளுக்குள்ளானது. நடிகவேள் எம்.ஆர்.ராதா, கி.வீரமணி உள்ளிட்ட இயக்கத்தவர்கள்  சிறைப்படுத்தப்பட்டனர். பெரியார் திடலில் இருந்த எம்.ஆர்.ராதா மன்றம், வெளிநிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விடுவதற்குத் தடை விதிக்கப்பட்டது. ‘விடுதலை’யில் தந்தை பெரியார் என்று குறிப்பிடக்கூடாது என்று  நிபந்தனை விதிக்கப்பட்டது. ‘`நாங்கள் அரசியல் கட்சியல்ல, சமுதாய இயக்கம்” என்று அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் பிரம்மானந்த ரெட்டியைச் சந்தித்துப் பேசினார் மணியம்மை. ஆனால் ‘`தி.மு.க-வை ஆதரிக்கமாட்டேன் என்று தெரிவிக்க வேண்டும்” என்று விதிக்கப்பட்ட நிபந்தனையை ஏற்க மறுத்தார் மணியம்மை. நெருக்கடி நிலையை அறிவித்த இந்திராகாந்தி தமிழகம் வந்தபோது கறுப்புக்கொடிப் போராட்டத்தை அறிவித்துக் கைதானார்.

பெரியாரை 95 ஆண்டுகள் வரை வாழ்வதற்குப் பேணிப் பராமரித்துவந்த மணியம்மை 60 ஆண்டுகளைக்கூட முழுமை செய்யவில்லை. 1978, மார்ச் 16 அன்று மரணமடைந்தார். அதே ஆண்டு செப்டம்பர் 17-ம் நாள் பெரியாரின் நூற்றாண்டு விழா தொடங்கியது. ஆனால் அதைக் காண்பதற்குள் மணியம்மையார் மறைந்துவிட்டார்.

இன்றும்கூடப் பொதுவாழ்க்கையில், அரசியல் கட்சிகளில் பெண்கள் தலைமைப்பொறுப்புக்கு வருவதற்கு எத்தனையோ நெருக்கடிகளை, அவதூறுகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. ஆனால் எதிர்ப்புகளை மட்டுமே தொடர்ச்சியாகச் சந்திக்கும் ஒரு சமுதாய இயக்கத்துக்குத் தலைமைப் பொறுப்பில் இருந்து போராளியாய் விளங்கிய மணியம்மை, உண்மையிலேயே மாற்று அரசியல் மணிதான்.

- சுகுணா திவாகர்

- விகடன்.காம், 21.3.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக